Periyar 235ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாகரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று போலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாக தெரிய வருகிறது.

அன்றியும் 3 மணி நேரம் அத் தீர்மானத்தின் மீது பல பெண்கள் கூடி பலமான வாதப் பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும் கூட இந்த சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது.

ஏனெனில் கல்யாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளை காதினால் கேள்க்கவே நடுங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்களுக்கு அடங்கி அடிமையாய் கிடந்து வந்து பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிரருக்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் “கடவுள்” போலவே பாவிக்க வேண்டு மென்றும், கணவன் குஷ்ட்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய், அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லக்ஷணமென்றும்.

பெண்களுக்கு கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில், கல்யாண ரத்து என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்கு சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும், அதுவும் பெண்களாலேயே அதைப் பற்றி பலர் பேசி வாதப் பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படு வதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல.

அது மாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்படி அதற்கு ஓட்டு கிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்து கூடிய சீக்கிரம் பெண்ணுலகு விடுதலை பெற்று விடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.12.1930)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.