'பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்' கட்டுரைக்கான எதிர்வினை

                தருமபுரி - நாய்க்கன்கொட்டாய் சாதி வெறியாட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிக்கலாக முடியப் போவதில்லை. சாதிய வன்முறை இனியும் நிகழா வண்ணம் தடுக்கும் பணி இது வரை முடிந்து விடவில்லை. இந்நிலையில் சாதி வெறியாட்டத்தின் மூலம் அதிகாரத்தை நிறுவத் துடிப்பவர்களின் அணி சேர்க்கை சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ramadoss_castehindus_640

                அதே நேரத்தில் ஆதிக்க சாதிகளின் தாக்குதலை முறியடிக்க வேண்டிய தலித் இயக்கங்களின் போக்கு விசித்திரமாக உள்ளது. முதலில் தலித் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் தலித் இயக்கங்கள் தங்களுக்குள்ளாகவே கூட ஒரு கூட்டணியை ஏற்படுத்தவில்லை. தலித் மக்களுக்கு துணை நிற்கும் சிறுபான்மை சமூகங்களை அரவணைக்கும் வகையில் ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தலித் மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடும் புரட்சிகர இயக்கங்களோடு கரம் கோர்க்கவில்லை. தேர்தல் பாதையானாலும் சாதிய வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் கம்யூனிஸ்டுகளை கூட அணி சேர்க்க முயலவில்லை. மாறாக கம்யூனிஸ்டுகளை குறிப்பாக புரட்சிகர இயக்கங்களைத் தாக்கவும், அவர்களை தலித் மக்களிடமிருந்து பிரிக்கவுமான அணுகுமுறைகளை திருமா முதல் ரஜினி வரையிலானவர்கள் மேற்கொள்கின்றனர். தலித் மக்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தி பலவீனமாக்கும் பணிகளையே செய்து வருகின்றனர்.

                சாதிவெறியர்களின் பரம எதிரிகளான நக்சல் புரட்சியாளர்களையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் இப்போக்கு புதிதான ஒன்றல்ல. இந்த மார்க்சிய விரோத தலித்திய அரசியலுக்கு நீண்ட வேர்களும், வரலாறும் உண்டு.

                ஏகாதிபத்தியங்களும், ஃபோர்டு பவுண்டேஷன்களும், கிருத்துவ திருச்சபைகளும், பின்நவீனத்துவ பின்புலமும் கொண்ட தலித் இயக்கங்களின் இவ்வரலாறு ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்கு ஒப்பானதாகும்.

ஃபோர்டு பவுண்டேசனும் - தலித்தியமும்:

                அமெரிக்காவின் மாபெரும் கார்ப்பரேட் நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் ‘சமூக சேவைக்கென' தொடங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் ஃபோர்டு பவுண்டேசன். இது முதன் முதலாக கால்பதித்த வெளிநாடு இந்தியாதான். 1950களின் தொடக்கத்தில் இவ்வாறு இந்தியாவுக்கு வந்தபோது பவுண்டேசனின் தலைவர் பால்ஹர்ப்மேன் ‘சீனாவை இழந்து விட்டோம். இந்தியாவை இழக்க மாட்டோம்' என வெளிப்படையாக அறிவித்தார்.

                அப்போது சீனா கம்யூனிச நாடாக மாறியிருந்தது. இந்தியாவில் வீரம் செரிந்த தெலுங்கானப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்தாலும் கம்யூனிசம் வளருவதற்கான கூறுகள் நிறைந்திருந்தது. இந்தியாவின் சமூகச் சூழல்களை ஆய்வு செய்த பவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகிய பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும் வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாறாக, இவர்களிடையே ஆளும் வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.

                இதற்காக ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அறிவுஜீவிகளை உருவாக்கும் பணி முதன்மையாக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகழகங்கள் அமெரிக்கப் பல்கலைகழகங்களோடு இணைக்கப்பட்டன. ஃபோர்டு பவுண்டேசனின் தயவில் ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் தலித் மாணவர்களாவர். வேறு வழியில்லாத இவர்கள் இந்த உதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்று அருந்ததிராய் எழுதுகிறார். இம்மாணவர்களில் பலரும் பின்பு எவாஞ்சலிக்கல் திருச்சபை உதவியால் முன்னிறுத்தப்பட்ட தலித் அரசியலின், பின் நவீனத்துவ அரசியலின் மையமாக மாறினர்.

dalit_resource_centre_380                1980-களில் பவுண்டேசன் தனது பணியை மாற்றியமைத்துக் கொண்டது. நேரடியாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களை நிறுவி அவைகளுக்கு ஏராளமாக நிதியுதவிகள் செய்தது. தொண்டு நிறுவனங்கள் தங்களை தனி அமைப்புகளாக, அரசு சாரா நிறுவனங்களாக காட்டிக் கொண்டன. இது குறித்து இஜாஸ் அகமது தனது 'ஆன் போஸ்ட்மார்டனிசம்' என்ற நூலில் ‘இந்தியாவில் பின்நவீனத்துவம் சமூக இயக்கங்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள், பணம் பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய வடிவங்களில் இயங்கியது. அரசியல் என்ற சொல்லுக்குப் பதிலாக சமூகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் இவை அனைத்தும் தங்களை அரசு சாரா நிறுவனங்கள் என அழைத்துக் கொண்டன. ஃபோர்டு பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இவை நிதி உதவிகள் பெற்றன' எனத் தெளிவாக கூறுகிறார்.

                அடுத்து ஃபோர்டு பவுண்டேசனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஓர் அமைப்பு தமிழ்நாடு தியாலாஜிகல் செமினரி (Tamilnadu Theological Seminary TTS) ஆகும். இந்த எவாஞ்சலிக்கல் கிருத்துவ நிறுவனம், தலித் ஆதார மையங்களை உருவாக்கியது. 1989-ல் மதுரையில் அரசரடியில் ஒரு தலித் ஆதார மையம் உருவாக்கப்பட்டது

                தலித் ஆதார மையத்திற்கு பவுண்டேசன் வாரி வழங்கும் நிதியினை அறிந்து கொள்ள Ford Foundation என இணையத்தில் தொடர்பு கொண்டால் போதும். முடிவில்லா நீண்ட பட்டியல் படையெடுத்து நம்மை மிரட்டும்.

                 இப்படி கிருத்துவ திருச்சபையால் உருவாக்கப்பட்ட ஒரு போலி புரட்சிகர இயக்கம்தான் பாதர் சேவியர் அருள்ராஜ் நடத்திய உழைக்கும் மக்கள் இயக்கமாகும். என்.ஜி.ஒவான இந்த அமைப்பு தன்னை ஒரு அரசியல் கட்சி போலக் காட்டிக் கொண்டது.

                தலித் ஆதார மையத்தைப் போலவே World Vision என்ற N.G.O. அமைப்பும் தலித் மக்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்க உளவுத்துறை C.I.A-வுக்காக வியத்நாமில் செயல்பட்டதை தாமே ஒத்துக் கொண்டுள்ளது. C.I.A-வுக்கும் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் உள்ள நெருங்கிய உறவை ஜேம்ஸ் பெட்ராஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆதாரத்துடன் ஏராளமாக எழுதியுள்ளார்.

                தலித் ஆதார மையம் அம்பேத்கரையும், இரட்டைமலை சீனிவாசனையும், அயோத்திதாசரையும் முன்னிலைப்படுத்தியது; தலித் தலைமை, தலித் அரசியல் என பிரகடனப்படுத்தியது; தலித் கலைவிழாக்கள் பிரமாதப்படுத்தப்பட்டன; தலித் இலக்கியங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. இது போன்ற செயல்பாடுகளுக்கு ஃபோர்டு பவுண்டேஷன் ஏராளமாக நிதி உதவி வழங்கியது. அதே நேரம் 'கலை கலைக்காக' என்று பேசும் அறிவுஜீவிகளுக்கும் நிதி வழங்கியது. இவர்கள் அதே தலித் மக்களின் போராட்டங்களைப் பேசும் புரட்சிகர கலை இலக்கியங்களுக்கு 'பிரச்சார இலக்கியங்கள்' என்று பட்டம் சூட்டினர்.

dalit_kalai_vizha_500

                இவ்வாறு ஃபோர்டு பவுண்டேசன் நேரடியாகவும், தென்னிந்திய திருச்சபையின் மூலமாகவும், தலித் ஆதார மையத்தின் வாயிலாகவும் கட்டியமைக்கப்பட்ட தலித்தியம் தொடக்கத்திலேயே தன்னை கம்யூனிசத்துக்கு மாற்று என்றே பிரகடனப்படுத்தியது. 'வர்க்கப் போராட்டம் என்பது வேறு, தலித்துகளின் பிரச்சினை என்பது வேறு; ஏகாதிபத்திய எதிர்ப்பு தலித்துகளுக்கு அவசியமில்லை; வெள்ளையர்கள் தலித்துகளுக்கு மனித மாண்பை கற்றுத் தந்தவர்கள்' என்று கூறியது. தலித் தலைமை, தலித் அரசியல் என முழங்கியது. உழுபவனுக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதற்கு மாற்றாக, பஞ்சமி நிலமீட்பு - இட ஒதுக்கீடு ஆகிய முழக்கங்கள் முன்னுக்கு வந்தன. சமூக மாற்றம் தேவையில்லை, மற்ற போராடும் அமைப்புகளோடு இணைந்து நிற்க வேண்டியதில்லை, தேர்தல் மூலம் அதிகாரத்தில் பங்கு என இலக்கு தீர்மானிக்கப்பட்டது. ஆக ஆளும் வர்க்க சித்தாந்தமாகவும், அதற்கு சேவகம் செய்யும் அமைப்பு வடிவமாகவும் ஃபோர்டு பவுண்டேஷன் தலித்தியம் தோன்றியது.

தலித்தியமும் - பின் நவீனத்துவமும்

 பின் நவீனத்துவம் வருவதற்கு முன் ஸ்டாலினிச எதிர்ப்பு, சோவியத் யூனியன் எதிர்ப்பு ஆகியவையே கம்யூனிச எதிர்ப்பு வடிவங்களாக இருந்தன. பின் நவீனத்துவம் மார்க்சியத்தின் அனைத்து அம்சங்களையும் கேள்விக்குள்ளாக்கியது. பொருள்முதல்வாதத்திற்கு எதிராக கருத்துமுதல்வாதம்; ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஒன்று சேர்ப்பதற்குப் பதிலாக சிதறடிப்பது; ஒடுக்குமுறையின் மொத்த உருவமான அரசைப் பற்றி எதுவும் சொல்லாமல் அதை எதிர்த்துப் போராடும் இயக்கங்களையும் தத்துவங்களையும் பெருங்கதையாடல் என்று முத்திரை குத்துவது என்று ஏராளமான சித்து விளையாட்டுக்கள் நிகழ்த்தியது. எனவே ஃபோர்டு பவுண்டேஷன் - திருச்சபை - பின் நவீனத்துவவாதிகள் என்று ஒரு கூட்டணி உருவாகியது.

 கம்யூனிசத்துக்கு மாற்றாக 'ஃபோர்டு பவுண்டேசன் தலித்தியம்' முன்னிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை கம்யூனிசத்திடம் இழக்க மாட்டோம் என்ற பவுண்டேசனின் நோக்கத்துக்கு இந்த போலி தலித்தியம் சேவகம் புரிகிறது. பவுண்டேசனின் கம்யூனிச எதிர்ப்பைப் புரிந்து கொண்டால் தலித்தியத்தின் தத்துவார்த்த அடித்தளமான பின்நவீனத்துவத்தின் வேரினையும், அதன் கேடினையும் புரிந்து கொள்ளலாம்.

                நமக்கு இரண்டு உலகப் போர்கள் குறித்து தெரியும். இவ்விரண்டு உலகப் போர்களும் உலக நிலைமைகளில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தன. அதில் முக்கியமானது அமெரிக்காவின் வளர்ச்சி. இரண்டு போர்களிலும் நேரடியாக பாதிக்கப்படாமல் அதே நேரத்தில் ஆயுத விற்பனையின் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி, தனிப்பெரும் சக்தியாக வளர்ந்தது அமெரிக்கா. இதன் மூலம் பெருந்தொழில்களைப் பெருக்கிக் கொண்டது அமெரிக்கா.

                இதே நேரத்தில் இன்னொரு புறம் இரசியாவைத் தொடர்ந்து சீனாவும் கம்யூனிச நாடாகியது. வியத்நாம், கியூபா என பல நாடுகள் புரட்சிகரப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் பாசிசத்தை முறியடித்த இரசியாவின் உதவியோடு கிழக்கு அய்ரோப்பாவில் பல கம்யூனிச நாடுகள் உருவாகின.

                இந்நிலைமைகள் உலக மக்கள் முன் இரண்டு பாதைகளை முன்னிறுத்தின. மக்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏற்றது கம்யூனிசப் பாதையா? முதலாளித்துவப் பாதையா? என்பது விவாதமானது. இக்கேள்வி அமெரிக்காவில் கூட எழுந்தது. அமெரிக்காவின் பெரும் நிறுவனங்களில் சக்கையாகப் பிழியப்பட்ட கருப்பின மக்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களிடமும் முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருந்தது.

                இவ்வாறு உலக நிலைமைகளும், உள்நாட்டு நிலைமைகளும் அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கியது. முதலாளித்துவமே சமூகத்துக்கான தீர்வு என அமெரிக்கா நிறுவ வேண்டியிருந்தது. இதன் ஓர் அம்சமாக அமெரிக்கா, இரசியாவுக்கு எதிராக பனிப்போரை நடத்தியதை உலகே அறியும். ஆனால் கம்யூனிசத்துக்கு மாற்றாக முதலாளித்துவத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட தத்துவப் பணிகள் குறித்து உலகம் பெரிதாக கவலைப்படவில்லை.

                அமெரிக்க ஆளும்வர்க்கங்கள் தங்களது பல்கலைக் கழகங்கள் மூலம் கம்யூனிசத்துக்கு மாற்றான தத்துவத்தை உருவாக்க முனைந்தன. வர்க்கம், வர்க்கப் போராட்டம், வர்க்க ஒற்றுமை, அதிகார மாற்றம் ஆகியவைகளை பல்கலைக் கழகங்கள் தவறென போதிக்கத் தொடங்கின. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமலேயே முதலாளித்துவ அரசமைப்புக்குள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அமெரிக்கப் பின்நவீனத்துவவாதிகள் கூறினர். பெரிய அமைப்புகளுக்குப் பதிலாக சிறிய அமைப்புகள், உள்ளூர் அமைப்புகள் ஆகியவையே இப்போதைய தேவை என்று இந்த புதிய அரசியல் கூறியது.

                 இதற்கு முன்பே தொழில் நிறவனங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு வேலைப் பிரிவினைகளைக் கொண்ட ஒரே தொழிற்சாலை என்பதற்கு மாற்றாக பாகங்கள் தயாரிப்பது தனி நிறுவனமாகவும், அதை இணைப்பது இன்னொரு நிறுவனமாகவும், அதை வடிவமைப்பது வேறு ஒரு நிறுவனமாகவும் பல சிறிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாற்றமும் அரசியல் களத்தில் எதிரொலித்தது.

amarx_330                ஆக ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒற்றுமைக்கு மாற்றாக வர்க்கப் பிளவுவாதத்தையும், சமூக ஒருங்கிணைப்புக்கு மாறாக நுண் அடையாள அரசியலையும் அமெரிக்காதான் உருவாக்கியது. அதுவும் கம்யூனிசத்துக்கு எதிராகவே உருவாக்கியது. இதுதான் பின் நவீனத்துவத்தின் தோற்றம். பிறகு பிரான்சுக்குச் சென்று 'தெரிதா, பூக்கோ' என்ற பெயர்களோடும், 'விளிம்புநிலை' போன்ற கம்யூனிஸ்டுகளிடம் களவாடிய சொற்களோடும் இந்தியாவுக்கு வந்தது தனிக்கதை.

                இந்த பின் நவீனத்துவம்தான் இந்தியாவில் கம்யூனிசத்துக்கு மாற்றாக ஃபோர்டு பவுண்டேசனின் முன்னணிப்படையாக மாறியது. தலித்துகளின் மீதான சாதிய வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு ஆதிக்க சாதி உழைக்கும் மக்களையும் திரட்டுகிற - சாதி ஒழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அணி திரட்டுகிற - வர்க்கப் போராட்டத்தின்மூலம் அதிகாரத்தை அடைகிற - ஆளும் வர்க்கத்துக்கு முடிவு கட்டுகிற கம்யூனிசத்துக்கு மாற்றாக, நுண் அரசியலை, அடையாள அரசியலை, தலித்தியம் எனும் பின் நவீனத்துவத்தை பவுண்டேசன் நிறுவியது.

பவுண்டேசன் தலித்தியத்தை பரப்பிய ஆளும் வர்க்க அறிவாளி அடியாட்கள்

                கம்யூனிச எதிர்ப்புடன் தலித் அரசியலை முன்னகர்த்திய கதாநாயகியாக கெய்ல்ஓம்வெட் அறியப்படுகிறார். அமெரிக்கரான இவர் பெர்க்லே பல்கலைக் கழகத்தில் படித்தவர். ஆய்வுக்காக இந்தியா வந்தார். இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டார்.

                'கம்யூனிஸ்டுகளால் தலித்துகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அனைத்து கம்யூனிஸ்டு கட்சிகளும் சாதிக் கட்சிகளே' என இவர் அவதூறுகளை அள்ளி வீசிய நூல்கள் தொண்டு நிறுவனங்களால் பரப்பப்பட்டன. கம்யூனிச எதிர்ப்பை யார் செய்தாலும் ஓடிச் சென்று ஆதரிப்பார். அருந்ததிராய் சி.பி.எம் கட்சியை விமர்சித்து எழுதிய 'God of Small things' என்ற நூலை கெய்ல் வானளாவப் புகழ்ந்தார். அதே நேரத்தில் அருந்ததிராய் உலகமயமாக்கலையும், நர்மதா அணைத்திட்டத்தையும் எதிர்த்தபோது அவரை கெய்ல் கடுமையாக வசைபாடினார். இவர் உலக வங்கி IMF-ன் வெளிப்படையான ஆதரவாளர்.

                இந்த வரிசையில் இன்னொரு முக்கியமான நபர் ரணஜித் குகா. இவர் இந்தியாவில் மக்கள் வரலாறே எழுதப்படவில்லை என்றும், எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்துமே - பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை உட்பட - ஆதிக்க சாதிக் கண்ணோட்டத்தில்தான் எழுதப்பட்டவை என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். மக்கள் வரலாறு என்பது விளிம்புநிலை மக்களின் வரலாறாகும் என்றும், அது இனிமேல்தான் எழுதப்பட வேண்டும் என்றும் கூறினார்.

                இவரின் வரிசையில் திபேஷ் சக்கரவர்த்தி, பார்த்தா சட்டர்ஜி, ஞான்பாண்டே, ஸ்வெப்பன்தாஸ் குப்தா என பெரும் பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் வங்காளிகள்; அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். பின் நவீனத்துவம் இவர்கள் மூலமாகவே இந்தியாவில் பரப்பப்பட்டது.

                தமிழ்நாட்டில் இவர்களின் வாரிசாகத் தோன்றியவர்கள் அ.மார்க்ஸ், ராஜ்கவுதமன், ரவிக்குமார் போன்றவர்களாவர். இவர்கள் ரணஜித் குகாவின் வார்த்தைகளை அப்படியே வாந்தி எடுத்தார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்றுப் பார்வை கிடையாது; மக்கள் வரலாறு தெரியாது; கம்யூனிஸ்டுகள் ஆணாதிக்கவாதிகள்; ஆதிக்க சாதி கருத்தியல் கொண்டவர்கள்; பொதுவுடமை இயக்கங்கள் தலித்துகளுக்காக எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டதை தமிழில் வாந்தி எடுத்தார்கள். ஆனால் சொந்தமாகக் கூறுவது போல கூறிக் கொண்டார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை பற்றி தாங்கள்தான் முதல் முதலில் பேசுவதாகக் கூறிக் கொண்டார்கள். துணையாக தலித் ஆதார மையமும் இதே போன்ற கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்பி வந்தது.

                உண்மை என்று ஒன்றும் இல்லை என்று கூறிக் கொண்டே மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, அதற்கான ஒரே இயக்க வடிவத்துக்கு எதிராக, அ.மார்க்ஸ் தீவிரமாகப் பேசினார். 'பெரிய இயக்கங்கள் எல்லாம் அதிகாரத்துவ தன்மை உடையவை, ஆகவே சிறிய இயக்கங்கள், துண்டு துண்டான இயக்க வடிவங்கள் வேண்டும்' என்றார். இது அப்பட்டமான என்.ஜி.ஓ. கருத்தியல் ஆகும். ஃபோர்டு பவுண்டேஷன் போன்ற ஏகாதிபத்திய ஆதரவு நிறுவனங்கள் முன்வைத்த அரசியல் இதேதான்.

                மக்களிடம் செல்வாக்கு செலுத்திய தமிழ்த் தேசிய உணர்வு, ஈழ ஆதரவு, கம்யூனிச ஆதரவு என அனைத்துக்கும் எதிராக அ.மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டனர்.

                இவர்களின் மக்கள் விரோத கருத்துகள் அடங்கிய வெளியீடுகளை விடியல் சிவா பதிப்பித்து வெளியிட்டு வந்தார். புரட்சிகரமான பதிப்பகம் என்று காட்ட 'ஜெகனாபாத் சிறையுடைப்பு' போன்ற சில நூல்களை வெளியிட்டுவிட்டு, டிராட்ஸ்கி, நீட்ஷே, ஈரான் போன்ற நூல்களையும், மாவோ, சே பொன்ற மார்க்சீயவாதிகளை மோசமான ஒளியில் காட்டும் காஸ்நாடா, பிலிப் ஷட் போன்றோரின் நூல்களையும் சிவா வெளியிட்டார். கூடவே லிம்பாலே போன்றோரின் அபத்தமான நூல்களையும் வெளியிட்டார். தனது இறுதிக்காலம் வரை பிரான்ஸ் அரசு நிறுவனமான பாண்டிச்சேரி பிரஞ்சு இன்ஸ்டிடியூட் என்ற அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இப்போது விடியல் டிரஸ்டில் மேற்படி நிறுவனத்தின் முக்கிய ஊழியரான எம்.கண்ணன் முதன்மை வகிக்கிறார்.

                ஈழ விடுதலைப் போர் காலத்தில் அ.மார்க்ஸ் போன்றவர்கள் இழைத்த துரோகம் மோசமானது. ஆயிரக்கணக்கான ஈழ மக்கள் கொல்லப்படும்போது இவர், இசுலாமியர் மீது புலிகள் தாக்குதல் நடத்திய பழைய கதைகளை மேடைதோறும் பேசினார். இதன் மூலம் இசுலாமியர்களை ஈழப் போராட்டத்தின்மீது வெறுப்படையச் செய்ய முயன்றார். பெரும்பாலும் இந்துத்துவ விரோதிகளான தமிழக தமிழுணர்வாளர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரிவினை ஏற்படுத்த முயன்றார். இங்கு தலித்துகள் மீது கரிசனம் காட்டும் இவர், ஈழத்தில் கொல்லப்பட்ட தலித்துகள் குறித்து கவலையே படவில்லை. ஈழ இனப்படுகொலையை கண்டுகொள்ளாத இவர்தான் இன்றளவும் மனித உரிமை ஆர்வலராக அறியப்படுகிறார்.

                அ.மார்க்சின் பின் நவீனத்துவ அரசியலாக்கத்தின் பின்புலத்தில்தான் தமிழகம் முழுவதும் பல நல்ல புரட்சிகர இயக்கத்தில் பணியாற்றிய இளைஞர்கள் குடிகாரர்களாக, பாலியல் மோகிகளாக, ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றப்பட்டனர்.

சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவில் செயல்படும்  சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் (SLDF), லிட்டில் எய்ட் போன்ற தன்னார்வக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தி உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள். இவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பரப்பும் கருத்துக்களை தமிழகச் சூழலில் பரப்பும் வேலையைத்தான் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றோர் செய்கிறார்கள். தன்னார்வக் குழு வேலையைச் செய்யும் புலி எதிர்ப்பாளர்கள் தமிழகத்திற்கு வரும்போது, அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பது, நேர்காணல்களை வெளியிடுவது, அவர்களுடன் கூட்டங்களில் பங்கேற்பது அல்லது அவர்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்வது என அ.மார்க்ஸோ அல்லது அவர்களது அடிப்பொடிகளோ செயல்படுகின்றனர்.

சுசீந்திரன் ஐ.என்.எஸ்.டி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பின்  திருவனந்தபுரத்தில் நடத்திய புலிஎதிர்ப்பு கூட்டத்தில் எஸ்.வி.ராஜதுரை கலந்துகொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த ஐ.என்.எஸ்.டி. அமைப்பு ஜெர்மனியின் எவாஞ்சலிகா அகாதமியா என்ற புராட்டஸ்டண்ட் கிருத்துவ நிறுவனத்துடன் தொடர்புடையது என்று ஈழ புலம்பெயர் எழுத்தாளர் அசோக் யோகன் ‘எஸ்.வி.ராஜதுரை - பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்’ என்ற கட்டுரையில் கூறியுள்ளார். லால்கர் ஆக இருந்தாலும் சரி, ஈழம் ஆக இருந்தாலும் சரி, நாயக்கன் கொட்டாயாக இருந்தாலும் சரி, வேறெந்த மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி ஓடி வந்து குழிபறிக்கும் வேலைகளில் இந்த பின் நவீனத்துவவாதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் கண்டங்கள், நாடுகளைக் கடந்து இணைந்து கொள்கிறார்கள்.

                தமிழ்த் தேசிய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு ஆகிய அனைத்து குணாம்சங்களையும் கொண்ட பின்நவீனத்துவவாதிகளின் தலைவர்களில் ஒருவராக உள்ள இரவிக்குமார்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாளராகவும் இருக்கும்போது, அவர்கள் கம்யூனிஸ்டுகள் மீது பாய்வதில் ஆச்சரியமேதுமில்லை. பின்நவீனத்துவத்தின், ஃபோர்டு பவுண்டேசனின் கம்யூனிச எதிர்ப்புதான் இது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பவுண்டேசனின் தலித் இயக்கங்களால் சாதி வெறியாட்டத்தை தடுக்க முடியாது

ravikumar_370                சாதி வெறியாட்டத்தை தடுப்பது என்பதும், சாதியை ஒழிப்பது என்பதும் இரண்டு மட்டத்திலான பணிகளாகும். ஒன்று சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தலித் மக்களையும் ஒன்றுபடுத்தவேண்டும். இது நுண் அரசியல், அடையாள அரசியல் என்ற பின்நவீனத்துவத்தை கடைப்பிடிக்கும் தலித் அமைப்புகளுக்கு சாத்தியமேயில்லை. அவர்களின் அடையாள அரசியல்தான் தலித் இயக்கங்களையே சாதிவாரி அமைப்புகளாக சிதறடித்துள்ளன. உள் இட ஒதுக்கீடு போன்றவற்றில் கூட மோதலை உருவாக்குகின்றன.

                இதனை தலித் அரசியல் பேசுகிற எந்த தத்துவார்த்தவாதியும் எதிர்க்கவில்லை; தலித் ஆதார மையங்களும் தடுக்கவில்லை. மாறாக தனித் தனி அமைப்புகளுக்கு தனித்தனியாகப் பணம் கொடுத்து பிளவுகளை ஊக்குவிக்கின்றன.

                அடுத்து சாதியாதிக்கத்தையும், சாதிய வெறியாட்டத்தையும் முறியடிக்க வேண்டுமானால் மேல் சாதியில் உள்ள உழைக்கும் மக்களை சாதியாதிக்கத்துக்குப் பலியாகாமல் அணிதிரட்ட வேண்டும். அவர்களின் மீதான ஒடுக்குமுறைக்கும், வறுமைக்கும், துன்பத்துக்கும் காரணமான இவ்வுற்பத்தி முறையை ஒழிக்கப் போராட வைக்க வேண்டும். இவ்வுற்பத்தி முறையால் லாபமடையும் சாதி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும். இதை சாதிய அரசியலால் சாதிக்க முடியாது. எனவே, சாதியவாதம் பேசும் தலித் அமைப்புகளுக்கு இது சாத்தியமில்லை.

                கூடுதலாக சாதியை ஒழிப்பதற்கு புரட்சிகர அதிகாரம் நிறுவப்படுவது அவசியமாகும். பிற்போக்கு சக்திகள் தலை தூக்க முடியாத சர்வாதிகாரம் அடிப்படையானதாகும். ஆனால் தேர்தல் மூலம் அதிகாரத்தில் பங்கு என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேவை இல்லை என்றும், உலகமயமாக்கலை எதிர்ப்பது இல்லையென்றும், ஆகவே அதிகார மாற்றம் தேவையில்லை என்றும் கொள்கை வகுத்துக் கொண்ட தலித் இயக்கங்களுக்கு இது சாத்தியமேயில்லை.

                ஆகவே பவுண்டேசன்களின் தலித் இயக்கங்களால் சாதி வெறியாட்டத்தையும் தடுக்க முடியாது; சாதியையும் ஒழிக்க முடியாது.

கம்யூனிச இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்கள்

                                சாதியை ஒழிப்பதற்கு புரட்சிகர அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்றும், சாதிய வன்முறை வெறியாட்டத்தை தடுப்பதற்கு மேல்சாதி உழைக்கும் மக்களையும் திரட்ட வேண்டும் என்றும், களமாடுகிற புரட்சிகர கம்யூனிஸ்டு இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்களாகும். சாதிய வெறியாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் தேவைப்பட்டால் சாதி வெறியர்களை அழித்தொழிக்கவும், அதனால் தங்களது உயிரைக் கூட விடவும் துணியும் புரட்சிகர இயக்கங்களே மக்களுக்கான தலித் இயக்கங்களாகும்.

                இதனை தோழர் சீனிவாசராவ் முதல் வாட்டாக்குடி இரணியன், தமிழரசன், அப்பு, பாலன் என எண்ணற்ற தோழர்களின் வீர வரலாற்றில் இருந்து உணர முடியும். தேர்தல் பாதையானாலும் சி.பி.எம். கட்சியின் திருப்பூர் இரத்தினசாமி போன்றோரின் தியாக வரலாறை யாரும் மறுக்க முடியாது.

கம்யூனிச இயக்கங்களின் சந்தர்ப்பவாதமும் - பின்நவீனத்துவமும்

                பின் நவீனத்துவத்தின் அபாயத்தை நாம் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே பல்வேறு இயக்கங்கள் தோலுரித்துள்ளன. ஆனால் எந்த இயக்கமும் உறுதியாக தத்துவார்த்தப் போராட்டம் நடத்தி அதனை முறியடிக்கவில்லை. மாறாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்நவீனத்துவவாதிகளோடு கூடிக் குலவுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

                சி.பி.எம்.கட்சியின் தற்போதைய பொதுச்செயலர் - பிரகாஷ்கரத் என்.ஜி.ஓக்களின் கேடு குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்சியின் ஆதரவாளரான இஜாஸ் அகமது, ‘ஆன் போஸ்ட்மார்டனிசம்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

                இவ்வாறு பின் நவீனத்துவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.பி.எம். கட்சிதான் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக்காக அ.மார்க்ஸ் முதலான பின்நவீனத்துவவாதிகளுக்கு நாடெங்கும் மேடை அமைத்துக் கொடுத்தது. பதிலுக்கு லீனா மணிமேகலையின் கவிதைகளை பின் நவீனத்துவவாதிகள் தோழர்களுக்கு வழங்கினர்.

                இந்திய மாவோயிஸ்ட் கட்சித் தோழர் அரவிந்தன், ‘தலித்துகளுக்கு எதிராக பெருகும் தாக்குதலை முறியடிப்போம்' எனற கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். சி.பி.எம்.-மின் பின்நவீனத்துவ எதிர்ப்பும், பின் நவீனத்துவவாதிகளோடு அதன் சந்தர்ப்பவாதக் கூட்டையும் கண்டித்து மாவோயிஸ்ட் கட்சி விரிவான விமர்சன அறிக்கை வைத்துள்ளது.

                ஆனால் இதே மாவோயிஸ்ட் கட்சிதான் தமிழகத்தில் மனித உரிமை நடவடிக்கைகளுக்காக அ.மார்க்ஸ் போன்றோரைப் பயன்படுத்துகிறது. பின்நவீனத்துவ படைப்புகளைக் கொண்டு வந்த விடியல் சிவாவை தமது தீவிர ஆதரவாளராக காட்டிக் கொண்டது. பின் நவீனத்துவப் பின்புலம் கொண்ட ஆனந்த் டெல்டும்டே போன்றவர்களை தலித் அறிவுஜீவிகளாக தனது கட்சியினரிடையே விளம்பரப்படுத்துகிறது.

                இதன் விளைவாக மாவோயிஸ்ட் கட்சியின் தலித் ஆதரவாளர்கள் கம்யூனிச எதிர்ப்பாளராக மாறும் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

                இதே போல் ரெட் ப்ளாக் கட்சியின் பொதுச் செயலர் K.N.இராமச்சந்திரன் பின்நவீனத்துவ அரசியலை திரை கிழித்துள்ளார். அவ்வமைப்பைச் சார்ந்த P.J.ஜேம்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து விரிவான ஆய்வுடன் நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் இவர்கள் இப்போது சாதி ஒழிப்பு அரங்கம் என்ற பெயரில் எல்லா பிற்போக்குவாதிகளோடும் இணைந்து விரிந்த தளத்தை உருவாக்குகின்றனர்.

             derrida_340   இயக்கங்கள் தவிர சமூக சிந்தனையாளர்களும் பின் நவீனத்துவத்தின் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திரு.யமுனா ராஜேந்திரன் ‘நான் பின் நவீனத்துவ நாடோடி அல்ல' என்ற நூலிலும், திரு.பீர்முகமது ‘கீழைத் தேய சிந்தனையாளர்கள்' என்ற நூலிலும் இதனை வெளிக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் இத்தகைய நூல்களை முன்னின்று வரவேற்கும் கடமையை இயக்கங்கள் செய்யத் தவறியதால் அவை உரிய கவனத்தைப் பெறவில்லை.

                இதுபோல இவ்வமைப்புகளின் சந்தர்ப்பவாதத்தால் பின் நவீனத்துவ பிற்போக்காளர்கள் பாதிக்கப்படவில்லை. மாறாக மனித உரிமை, தலித் சிக்கல், சிறுபான்மையினர் அரங்கு போன்ற எந்த ஒரு தளத்திலும், புரட்சிகர பதாகையின் கீழ் பின்நவீனத்துவவாதிகள் பிரகாசிக்கிறார்கள். இதனால் புரட்சிகர இயக்கங்களின் அணிகள் இச்சக்திகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதன் சமீபத்திய உதாரணம் தோழர்.ரஜினி புரட்சிகர இயக்கங்களை அவதூறு செய்து கொண்டிருப்பது.

                ம.க.இ.க போன்ற அமைப்புகள் இப்படி சகதியில் சிக்கிக் கொள்வதில்லை. தங்கள் அணிகளுக்குள் இத்தகைய சக்திகள் ஊடுருவுவதை அவர்கள் குறிப்பிடத்தக்க உறுதியுடன் தடுத்து நிற்கின்றனர். (இதன் காரணமாகவே ம.க.இ.க இத்தகைய கும்பல்களால் அதிகமாகத் தாக்கப்படுகிறது போலும்) ஆனால் இவர்களும் பின்நவீனத்துவத்தை ஆதாரத்தோடு முறியடித்து புரட்சிகர பாதையை நிறுவுவதற்கான பணியை முழுமைப்படுத்தவில்லை. வழக்கம்போலவே இது குறித்து ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதுவதோடு தமது வரலாற்றுக் கடமை நிறைவேறி விட்டதாக அகமகிழ்ந்து கிடக்கிறார்கள்.

                இவ்வாறான அமைப்புகளின் சந்தர்ப்பவாதத்தால் பின்நவீனத்துவமும் - தலித்தியமும் இன்று சமூகத்தை வேரோடு அரித்துக் கொண்டிருக்கிறது. நாய்க்கன்கொட்டாய் கலவரத்தை நக்சல்பாரி இயக்கத்தின் மீதான தாக்குதல் எனக் கூறி திருமாவளவன் தனது கடமையை கைகழுவுகிறார். இனி சாதிவெறியாட்டங்கள் நடந்தால் என்ன செய்வதென மக்கள் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.

பாபாசாகிப் அம்பேத்கர் ஒருநாளும் உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை என்று மறுத்தவரோ, தலித்துகள் தங்களுக்கென்று ஒரு பேரமைப்பைக் கட்டி எழுப்புவதை மறுத்தவரோ, தலித்துகள் மற்ற சமூகங்களில் ஏன் மற்ற நாடுகளில் கூட நண்பர்களைத் தேடிக் கொள்வதை எதிர்த்தவரோ கிடையாது. சாதி ஒழிப்பதற்கு முதன்மையான வழி இந்து மதத்தை ஒழிப்பதே என்று அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வரையறுத்துச் சொன்னார்கள். இன்றும் அம்பேத்கர், பெரியார் வழியில் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி செயல்படுகின்ற அமைப்புகள் இருக்கின்றன. இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களும் மக்களைப் பிடித்துள்ள அபின்தான் என்று உணர்ந்துள்ள புரட்சிகர சக்திகள், இந்திய சூழலில் அம்பேத்கர், பெரியார் வெளியிட்ட கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, உண்மையான அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களோடு கைகோர்ப்பது காலத்தின் தேவை.

                புரட்சிகர இயக்கங்கள் இனியும் நட்பு சக்தி, தோழமை அணுகுமுறையென பவுண்டேசன் தலித் அமைப்புகளை தோளில் சுமக்காமல், போலி மனித உரிமை பேசும் பின்நவீனத்துவவாதிகளை மேடையேற்றாமல், தாமே முன்னின்று தலித் மக்களையும், சமூகத்தையும் காக்க வேண்டும். அதற்காக புரட்சிகர சக்திகள் முதலில் ஓரணியில் திரள வேண்டும்.

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

31 comments

31
mani
ரொம்ப நாளா நீடித்த பிரச்சினைதான்.. பூனைக்கு யார் மணி கட்டுவதுன்னு... கடைசியிலே குணா கட்டியிருக்கிறாரு... பின்நவீனத்துவவாதிகளின் ரஷ்ய எதிர்ப்பு (மறைமுக கம்யூனிச எதிர்ப்பு) பற்றி தொடர்ந்து பேச வேண்டும்.. எல்லாவற்றையும் கட்டுடைக்கும் இவர்களை கட்டுடைக்கும் காலம் வந்துவிட்ட்து..
தங்கம், மதுரை
கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து குணா ஓர் இடதுசாரி என்பதை உணர முடிகிறது. பெரிய கட்டுரையாக இருந்தாலும், பல விஷயங்களை அப்படியே கோடி காட்டிவிட்டு, கடந்து விடுகிறார். ஒரு புத்தகம் எழுதுமளவிற்கான செய்திகள் இதில் உள்ளது. தோழர் குணா இதை ஒரு தொடராக விரித்து எழுத வேண்டும். அதே நேரத்தில் ஒன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெயமோகன் இதை சொன்னப்போ, 20 லட்ச ரூபாய் மான நஷ்டம் கேட்டார் எஸ்.வி.ஆர். விரிவாக எழுதினால் உங்களிடம் 40 லட்சம் கேட்பார். இப்போதே வழக்கு செலவுக்கு நிதி சேகரிக்க ஆரம்பித்துவிடுங்கள். என்னுடைய பங்காக 500 ரூபாய் நிச்சயம். அ.மார்க்ஸ் மானநஷ்ட வழக்கு போடமாட்டார். அவருக்கு மான நஷ்டமாவது இது முதல் முறையல்ல..
vincent
நல்ல கட்டுரை... மக்கள் இயக்கங்கள் அனைத்தையும் குறை சொல்லும் பின்நவீனத்துவாதிகளின் உண்மை நோக்கம்தான் என்ன? குறிப்பாக அ.மார்க்ஸ் திட்டாத தமிழக மாற்று இயக்கங்கள் ஏதேனும் உண்டா? எல்லா அமைப்புகளையும், போராளிகளையும் நொட்டை சொல்லிக் கொண்டு இருப்பவரை, தொடர்ந்து எல்லா அமைப்புகளும் மேடையேற்றுவது ஏன்? எஸ்.வி.ஆர்., அ.மார்க்ஸ், ரவிக்குமார் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளின் நதிமூலத்தை தேடவேண்டும். அம்பேத்கருக்கு எதிராக பெரியாரை நிறுத்துவது, தலித்துகளுக்கு எதிராக கம்யூனிசத்தை நிறுத்துவது, புலிகளுக்கு எதிராக முஸ்லிம்களை நிறுத்துவது என இவர்களது உள்ளடி வேலைகள் மிக தந்திரமானவை.. பொருளாதார அடியாள் ஜான் பெர்கின்ஸ் எழுதியது போல், கலாச்சார அடியாட்கள் குறித்து யாரேனும் எழுதினால்தான் இந்த உண்மைகள் வெளிவரும்..
விமலாதித்தன்
அனோனிமா என்று ஒரு புத்தகம், சோவியத் ராணுவத்தை மிக மோசமாக சித்தரிக்கும் நூல். இது அமெரிக்காவில் முதன்முறையாக வெளியிடப்பட்டது. பின்பு உலகின் பல மொழிகளுக்கு வெகுவேகமாக கம்யூனிச எதிர்ப்பாளர்களால் கொண்டு செல்லப்பட்டது. தமிழுக்கு இதைக் கொண்டுவந்தவர் யார் தெரியுமா? எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், ஷோபா சக்தி போன்ற பின்நவீனத்துவ புலிக்காய்ச்சல் பிடித்தவர்களின் நெருங்கிய தோழர் ஆதவன் தீட்சண்யா... இதை மொழிபெயர்த்தவர் தேவா என்ற புலி எதிர்ப்பாளர். இவங்களுக்குள்ளே என்னமோ இருக்குய்யா...
Manalan
i wonder why tamilnadu CPM cadres have close association with A.marx and SVR after their party high command has written against all these post modernists. Party is not having strong hold on their cadres? it is very bad that this process exists in left party
tamil
It is very pathetic analysis and well defined attack on dalit subcategorization or inner reservation. This is indirect way of promoting single caste (parayer ) hegemony in dalitism, rather than proportionate voice of all the SCs/STs. Guna is a such a man, where he will try to wear some type of skin over him over a time. Now to wear leftist skin, he found a new way of attacking the leftist who try to address the ground reality. He is very expert in linking the unlinkable and unrelatable things in one piece.
Anyway all the best guna for all you high jumbs and long jumbs.
tamil.
kamalakannan
என்.ஜி.ஓ. நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் என்பது மட்டுமே ஒருவரை குற்றம் சாட்ட போதுமானதில்லை.. ஆனால் இவர்கள் விஷயமே வேறு.. என்.ஜீ.ஓ. கருத்தியலை தமிழக கருத்தியல் தளத்தில் தொடர்ச்சியாக கொண்டு செல்பவர்களாக இருப்பதாலேயே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.. இவர்கள் வெளியிட்ட பல நூல்களுக்கும், மேலைநாட்டு கம்யூனிச எதிர்ப்பு நூல்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. அல்லது இவர்களது கருத்துக்கள் எல்லாம் அங்கிருந்து டவுன்லோட் செய்யப்பட்டவை... இவர்கள் இதுகாரும் பேசிய, எழுதிய கருத்துக்கள்தான், குணாவின் கருத்துகளுக்கு வலு சேர்க்கின்றன. ஆங்காங்கே தனித்தனியாக இருந்த புள்ளிகளை இணைத்து கோலமாக்கியதுதான் குணாவின் வேலை.. ஆனால் சிறப்பான வேலை..
ஸ்டாலின்
இக்கட்டுரையிலுள்ள செய்திகள் ஒன்றும் புதிதில்லை... ஏற்கனவே ம.க.இ.க. பலமுறை இவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. சுவர்ப்புரட்சி செய்பவர்களாக இருந்தாலும் ம.க.இ.க.வின் பார்வை தெளிவானது..
Guest
//இயக்கங்கள் தவிர சமூக சிந்தனையாளர்களும் பின் நவீனத்துவத்தின் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திரு.யமுனா ராஜேந்திரன் ‘நான் பின் நவீனத்துவ நாடோடி அல்ல' என்ற நூலிலும்//
//இத்தகைய நூல்களை முன்னின்று வரவேற்கும் கடமையை இயக்கங்கள் செய்யத் தவறியதால் அவை உரிய கவனத்தைப் பெறவில்லை//
அப்படி போடு.இவர் ஸ்டாலினை கொலைகாரன் என்ற அளவிலும்,இவர் புத்தகத்தை போடும் உயிர்மை பதிப்பகத்தின் அரசியலும் யாரும் அறிந்ததே. பிரான்சில் முதல் தலித் மாநாடு நடத்தியவரே இவர் நண்பர் ஈழ புலம் பெயர் எழுத்தாளர் அசோக் யோகன் தான்.
காரல் மார்க்ஸ் ஐ கட்டுடைத்து யமுனா எழுதியதை யாரும் மறந்துவிடவில்லை.
குணா இந்திய அரசின் உளவு துறை பற்றியே வாய் திரவாமல் கட்டுரையை முடித்து விட்டிரே.
Guest
நந்தன் முதல் நத்தம் வரை
தொடரும் ஆதிக்க சாதியின் தீ நாக்குகள், அரங்கக் கூட்டம், நாள் 08-டெச்௨012

தலைமை:
தோழர் அருண்சோரி,
மாவட்ட செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி.

வரவேற்புரை:
தோழர் தமிழ் குமரன்,
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர், த.ம.க.

சிறப்புரை:

பேரா. அ. மார்க்ஸ்

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ்நாடு மக்கள் கட்சி
இது குறித்து குணா, தேசிய முன்னணி இதழ் குழு, கருத்து?
chandru
இந்த மாதிரி கட்டுரைகள் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்
chandru
இந்த மாதிரி கட்டுரகள் சமுகத்திர்கு மிக மிக தேவை
அம்பேத் சித்தார்த்
தலித்தியம் என்றாலே பிழைப்புவாதம் தான் ஏகாதிபத்திய தத்துவம் தான். அதில் என்ன மக்கள் தலித் இயக்கம் ? எல்லாம் பிழைப்புவாத ஏகாதிபத்திய நிதியை பெறுபவை தான்.

*** *** **** ***** ***** ***** ***** ***

எனவே மக்கள் தலித்தியம் என்றெல்லாம் ஒன்று இல்லை.
thangapandian
நன்று..இப்போது பெரியாரை தலித் விரோதி என்று சொல்லும் ஒரு திருப்பணி தொடங்கபப் பட்டுள்ளது. தோழர் குணா சொன்னது போல நண்பர்களை அல்லையில் குத்துவதும் எதிரிகளுக்கு புறமுதுகு காட்டுவதும் தான் இவர்களுக்கு தெரிந்த அரசியல்..
viyasan
அருமையான‌ க‌ட்டுரை, ப‌ல‌ரும் சொல்ல‌த் த‌ய‌ங்கும் உண்மைக‌ளை வெளிப்ப‌டையாக‌ இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ர் குறிப்பிடுகிறார் அதைப் பாராட்டாமலிருக்க‌ முடியாது. ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்தத்திலும், க‌ண்ணீரிலும் பிழைப்பு ந‌ட‌த்தி பெய‌ரும் புக‌ழும் பெற்ற‌ ப‌ல‌ குள்ளநரிக‌ளின் பெயர்க‌ளையும் எந்த‌வித‌ ப‌ய‌முமின்றி வெளிப்ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி. த‌னிப்ப‌ட்ட‌ உள்நோக்கங்க‌ள் இல்லாத‌,ப‌க்க‌ச்சார்ப‌ற்ற, சுய‌ந‌ல‌ம‌ற்ற‌, சுய‌விள‌ம்ப‌ர‌த்தில் ஆசையில்லாத‌ த‌மிழ‌ர்க‌ள் ஒன்றுப‌ட்டால் ம‌ட்டும் தான் இந்த‌ சாதிப்பேயை விர‌ட்ட‌ முடியும்.
Natarajan
தலித் அமைப்புகளின் பின்னால் உள்ள வலைப்பின்னல் ஒரு கிரைம்ஸ்டோரிக்கு கொஞ்சமும் குறைவாக இருக்காது போலிருக்கிறது.ஆனால் தலித்துகளுக்கு இருக்கிற பிரச்சனைகளை இன்னும் ஆழமாக அலசவேண்டிய கட்டாயமிருக்கிறது அது புரட்சிகர இயக்கங்கள் 80 களில் அலசியது போன்றதாக இருக்கவேண்டும் அது 80,90 களில் செயல்பட்டதை போன்றதாக இருக்கவேண்டும்.

பொதுவுடமையை நேசிக்கிறவர்கள் இங்கே எல்லா இயக்கங்களுக்குள்ளும் இருக்கிறார்கள்.
அந்த தத்துவத்தை நோக்கி திரும்புபவர்களை அதற்கான நம்பிக்கையில் செயல்படுபவர்களை, செயல்படமுடியாத நிலையில்.. செயல்படுபவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை, ஆதரவாகவும் இருக்கமுடியாமல் அமைதியாக இருப்பவர்களை…., இப்படியான பெரும் பட்டியலை சிதறடிக்க போஸ்ட்மார்டனிஸ்டுகள் கண தூரத்தை கடந்துதான் வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் ஏற்படுத்திய அழிவுதான், ஒரு ஆரோக்கியமான அரசியல் தளமும், சமரசமற்ற களமும், உருவாகும் வாய்ப்பை இங்கே சிதறடித்திருக்கிறது

வருகிற வழிதோறும் அவர்களால் சூறையாடிய தோழர்களும், சின்னா பின்னமாக்கப்பட்ட அமைப்புகளும் எண்ணிலடங்காதவை. அதுதான் அவர்களின் நோக்கமாகவும் இருந்திருக்கிறது

நிதிபெறும் இயக்கங்களுக்கும் நிஜமான சமூக அக்கறையோடு இயங்கும் இயக்கங்களுக்கும் இடையே காணப்படுகிற வேறுபாடுகளை களத்தில் செயல்படுகிற ஒரு அரசியல் நோக்கனால்கூட எளிதில் இனங்கண்டுகொள்ள முடியாதபோது, வாய்ப்பு மறுக்கப்படுகிற இந்த படிநிலைச்சமூகத்தின் மேலுல்ல கோபத்தால் களத்தை நோக்கி வருகிற தலித் இளைஞர்களுக்கு…..எப்படி சாத்தியமாகும்

இதற்காக, புரட்சிகர அரசியலை தனக்குள் கொண்டிருக்கும் இயக்கங்கள் கடினமான உரையாடல்களை மாற்றி,எளிமையான வழிகாட்டலை உருவாக்கவேண்டிய நேரம் இதுவாகத்தனிருக்க முடியும்

பள்ளன்கட்சி , பறையன் கட்சி என்றுதான் இங்கே பொதுவுடமை இயக்கங்களுக்கு பெயர் இருந்திருக்கிறது. இப்போது அக் கட்சிகளுக்கு அப்படியான பேர் இல்லை, ஆனால் அப்படியான கட்சி ஒன்று இப்போது தலித்துகளால் தலித்துகளுக்காக உருவாக்கப்படவுமில்லை
பொதுவாகவே இங்கே பொதுவுடமை கட்சிகளின் மேலுள்ள அரசியல் விமர்சனங்கள், மெல்ல மெல்ல திட்டமிட்டே பொதுவுடமை காழ்ப்புணர்சியாக மாற்றப்பட்டிக்கிறது. இயக்கங்களில் செயல்படுகிறவர்களை ’பல்வேறு ’ அடைமொழியோடு அழைக்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை செய்வதற்கென்றே அமைக்கப்பட்டதுபோல் கும்பலாக இயங்குபவர்களை எல்லா நகரத்திலும் காணமுடிகிறது. அவர்கள் இயங்குவதற்கென்றே நிறைய பேனர்கள்கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் தலைமுறைக்கு அந்த தத்துவத்தின் மேல் வெறுப்பை ஏற்றிவைக்க இது போதுமானதாக இருந்திருக்கிறது

ஆனால் அவர்கள் பிண்னனி குறித்து எளிதில் இணங்காண முடியாதவாறு..

அவர்களின் சொற்பதங்களில் ’கூட்டு’ இருக்கிறது அவர்களின் கூட்டங்களில் புரட்சி இருக்கிறது. மது பொங்குவதற்காக கூடுகைகள் நிகழ்கிறது. அவர்களின் சட்டையில் எக்ஸ் ரெவல்யூசனிஸ்ட் என்ற பேட்ஜும் தொங்கவிடப்பட்டுள்ளது. கூடுதலாக அவர்களின் தலையை சுற்றி மனித உரிமை என்ற ஒளிவட்டம் வேறு தொன்னூரு கிலோமீற்றர் வேகத்தில் சுழல்கிறது, அதேசமயத்தில் இந்த சமூகத்தின் அத்தனை கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களையும் செய்துகொள்ள முடிகிறது, இப்படி செளகரியமான ஒரு பிம்பத்தைதான் பெரும்பாலானவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பிம்பத்தை போஸ்ட்மார்டனிஸ்டுகள் அற்புதமாக அக்மார்க்கோடு தயாரித்து தரும்போது யாருக்கு கசக்கப் போகிறது?.

கட்டுடைத்தல் என்னும் பெயரில் இவர்கள் நடத்திய பாலியல் புரட்சிகூட ஆண்களுக்கு சாதகமாகத்தான் இருந்திருக்கிறது பெண்களை பொறுத்தவரை சுரண்டலாகத்தான் முடிந்திருக்கிறது
இப்படி இவர்கள் கைவைத்த எந்த பிரிவானாலும், அது எதிர்மறையான விளைவுகளையே இங்கே விதைத்து வைத்திருப்பதை நிறைய காணமுடியும்
தலித்துகளுக்கும் இதை பொருத்திப் பார்க்க முடியும்

தலித் அரசியல், தலித்துகளுக்கு நிறைய ’பிளாட்பாரங்களை’ உருவாக்கியது ஆனால் தலித்துகளை அந்த பிளாட்பாரங்களிலேயே விட்டுவிட்டு தன் நோக்கத்தின்படியே ’கண்காணாத’இடத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது
Veeramani
தங்களுடைய கட்டுரை மிகவும் உண்மையாக தெளிவாக இருந்தது. சிலவிசயங்கள் மட்டும் முரண்பாடாக உள்ளது. எல்லா உழைக்கும் வர்க்த்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள். ஆனால் அனைவரும் தங்களுக்காக போராடும் கம்னுஸ்டு கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுவது இல்லை. முஸ்லிம் மக்கள் தங்கள் பிரதி நிதிக்கு தான் ஓட்டு போடுகிறார்கள். தலித்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் தலித் மக்களுக்கான போராட்டத்தை அதிகம் முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்ட கட்சி. நீங்கள் இன்னும் இறங்கி எல்லா மக்களிடமும் எளிய முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்துறைக்க வேண்டும் சில்லைறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது சாமானிய மக்களுக்கு என்ன வென்றே தெரியவில்லை. அமெரிக்கா முதலாளித்துவத்தை இழந்து வெகு நாட்களாகிவிட்டது. அங்கே வேலை இல்லை திண்டாடம் வர்க்க போராக வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதிகம் அமெரிக்காவை பற்றி நம் மக்களிடம் பேசுவதை விட்டுவிடுங்கள். நன்றி
Ravichandran
இதை படிக்கும் பொழுது, என்னமோ ஒரு ஹிந்துத்துவ எழுத்தாளர் எழுதியது போலவே எனது மனதுக்கு படுகிறது.
Bagath singh Barathi
இந்திய சூழலில் அம்பேத்கர், பெரியார் வெளியிட்ட கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு, உண்மையான அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களோடு கைகோர்ப்பது காலத்தின் தேவை. ...............
எல்லாவற்றையும் சரியாக விமர்சனம் செய்து வந்து விட்டு இறுதியில் நம்மை ஏமாற்றுகிறார் கட்டுரையாளர்.மார்க்சியம் என்பது பொருள் முதல் வாதம். பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியம் என்பது கருத்து முதல் வாதம்.சாதிக்கு அடித்தளம் நிலவுடமை மற்றும் மதத்தின் அடித்தளம் வர்க்க சுரண்டல் என்பதே மார்க்சிய அறிவியல்.ஆனால் சாதியின் அடித்தளம் இந்து மதம் மற்றும் சாதி ஒழிக்க மத மாற்றம் எனும் அறிவியல் அற்ற வாதத்தை பெரியாரும் அம்பேத்காரும் வரையறை செய்தது ..வெறும் பண்பாட்டு மாற்றம் சமூக மாற்றத்தை கொணரும் என தவறான நிலைக்கு இட்டு சென்றது.இது மார்க்சியத்திற்கு நேர் எதிரானது.நிலவுடமை பற்றி வாய் திறக்காமல் சாதி ஒழிப்பு பற்றி பேசுவது ..ஒடுக்கபட்ட மக்களை ஏமாற்றும் செயல்-சமரன் குழு
ஸ்ரீரசா
குணாவின் கட்டுரை நல்ல திசையிலான பயணத்தின் துவக்கம் மட்டுமே. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பின் நவீனத்துவத் தத்துவப் புரட்டாளர்களுக்கு ஏதுவாக இடதுசாரிக் களத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிபிஎம் போன்ற ஒப்பீட்டளவில் வெகுமக்கள் அதிகம் திரண்டுள்ள இடதுசாரி அமைப்புகளின் மீது வெகு விமரிசையான தாக்குதல்களைத் தொடுத்துவந்த அதி தீவிரமாய்த் தங்களைக் காட்டிக் கொள்ளும் வினவு, மகைக வகையறாக்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள்? புரட்சிகர வாய்ச்சொல்லின் மூலம் அவர்களும் இதே வேலையைத்தானே செய்து வந்தார்கள். செய்கிறார்கள். மார்க்சியம் என்பதைப் பேசு பொருளிலிலிருந்து அந்நியப்படுத்துவதை இந்தக் காலகட்டம் நிரம்பவே சாதித்துள்ளது. மார்க்சியம் குறித்த படிப்புக்கள், மார்க்சியம குறித்த சொல்லாடல்கள், மார்க்சியம குறித்த ஆய்வுகள் இவற்றை மார்க்சிய வாதிகள் இன்றைக்குப் பெருமளவில் கைவிட்டுவிட்டார்கள். தத்துவத்தின் வறுமை இயக்கக் களங்களில் வறுமைக்கு இட்டுச் செல்கின்றது. அந்த இடங்களை இட்டு நிரப்ப இத்தகைய மக்கள் விரோதப் போலிகள் இயங்குகின்றன. பட்டுக் கோட்டை பாடியது போலப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாட வேண்டுமில்லையா? இடது சாரிப் போலிகளையும் போர்டு பவுண்டேசன் வகையறாக்கள் நிறையவே உற்பத்தி செய்துள்ளன. மேலும் கல்வியிய்ல களத்தில் நடைபெறும் நாட்டுப்புறவியல ஆய்வுத் துறைகள் பலவும் போர்டு பவுண்டேசனின் வளர்ப்புப் பிள்ளைகளே. அவையும் இந்தப் பணிகளைக் குறைவறச் செய்கின்றன. அவையும் தமக்கெனத் தனித்த நாட்டுப்புறமில்லாத நகர்ப்புற அரசியலைத் தெளிவாகக் கொண்டுள்ளன. பேரா. நா.வானமாமலை போன்ற இடது சாரி நாட்டுப்புறவியல் மற்றும் அரசியல சமூகவியல் ஆய்வாளர்களின் பாதை பேசுபொருளாக்கப்படாமல் போர்டு பவுண்டேசனி வளர்ப்புப்பிள்ளைகள் பேசும் நாட்டுப்புற ஆய்வுகளே மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கப்படுகின்றன. நாம் நினைப்பது போல அவர்களின் செயலபாடுகள் ஒன்றும் அத்தனை எளிதில பேசிவிடக் கூடிய ஒன்றல்ல. அதே நேரம் நாம் பேச்சுக்களைத் துவக்க வேண்டியதும், வளர்க்க வேண்டியதும் அவசியம். அதைவிட அவசியம் மார்க்சியத் தத்துவத்தை ஆழக் கற்பதும், மார்க்சிய அரசியல் குறித்த ஆழமான விவாதங்களை முன்னெடுப்பதுமாகும். மாமேதை மார்க்ஸ் சொன்னது போல தேவை உலகைப்பற்றிய வியாக்யானங்களல்ல, மாறாக அதை மாற்றுவதே. அமார்க்சியர்களின் திருகுதாளங்களை மார்க்சியம மட்டுமே முறியடிக்க முடியும். மார்க்சிய அறிவு ஜீவிகள் போலக் காட்டிக் கொள்வதும், மனித உரிமையாளர் போலக் கர்ட்டிக் கொள்வதும், சமூக ஆர்வலர் மற்றும் இயங்குவாதியாகக் காட்டிக் கொள்வதும் இந்த நாட்களில் எல்லோருக்கும் எளிதாக இருக்கின்றன. ஆனால் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றுவது எள்ளி நகையாடக்கூடிய செயலாக இத்தகைய உளவியல் யுத்தக்காரர்களால் மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பலியானோர் ஏராளம் ஏராளம். இன்னமும அத்தகைய இடது உளவியல் சிதைந்தவர்கள் பலர், இடதுசாரி அமைப்புக்கள் பலவற்றில் தலைமைப் பொறுப்பில் பழைய பெருங்காய டப்பாக்கள் போல நிறைய இருக்கிறார்கள். இதுவும், பின் நவீனத்துவ வாதிகளின் வெற்றியே. மீண்டும் மாமேதை மார்க்சையே நினைவு கொள்ள வேண்டியுள்ளது. ஒளிவீசும் சிகரங்களை வெற்றி கொள்ள வேண்டுமென்றால் கரடு முரடான செங்குத்தான மலைப்பாதைகளில் பயணம் மேற்கொண்டே ஆகவேண்டும்.
Guest
அசோக். தன்னை ஒரு தூய்மைவாத மார்க்சியராக காட்டிக் கொள்ளும் அசோக், முற்றுமுழுதாக தன்னார்வ நிறுவன தொடர்பேதும் இல்லாதவரா? அசோக் என்ற தனி நபரை விட, அவரது கருத்துகளே எமக்கு முக்கியமானவை. முன்பொரு தடவை டிராஸ்கியை படித்து விட்டு, ஸ்டாலினை பற்றி அவதூறான கட்டுரைகள் எழுதினார். மார்க்ஸை படித்து விட்டு, கார்ல் மார்க்ஸ் தனது மனைவி ஜென்னியை பட்டினி போட்டதாக எழுதினார். பெரியாரை படித்து விட்டு பெரியார் ஒரு தலித் விரோதி என்று தொடர் கட்டுரைகள் வரைந்தார்.

இனியொருவில் அசோக் எழுதிய எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!: கட்டுரைக்கு வந்த பின்னூட்டமொன்றில் ராஜேஸ்வரன் என்பவர் நான் ஐ.என்.எஸ்.டி.யின் முக்கிய உறுப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தக் அநாமதேயம் சுமத்திய குற்றச்சாட்டை இனியொரு அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இனியொருவில் மட்டுமல்ல, வினவு தளத்திலும் ஓடிப்போய் பின்னூட்டமிட்ட ராஜேஸ்வரனுக்கு கலையகம் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை.

http://kalaiy.blogspot.co.uk/2009/11/blog-post_18.html
தி.ஸ்டாலின்
தலித் மக்களுக்கு தலைமை கொடுக்க துடிப்பதும்கூட ஒருவகையான ஆண்டைத்தனம்தான்.தலித்களுக்கு அறிவே இல்லாததைப் போல ஆளுக்காள் புத்திச்சொல்ல ஓடி வருகின்றனர்.கம்யூனிஸ்ட்டுகளை தோழர்களாக ஏற்றுக்கொள்ளலாமே தவிர ஆண்டைகளாக அல்ல.

dalithkudiyarasu.blogspot.com
சிரிதரன் துரை சுந்தரம்
கட்டுரை ..பின் நவீனத்துவத்ததை புரிந்து கொள்ள உதவியது ..தொடர்ந்து இது போன்ற கட்டுரையே எழதுங்கள் ...
[email protected]
யார் கண்டா? தமிழ்நாடு மக்கள் கட்சியும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல புதிதாக முளைத்துள்ள ஒரு கம்யூனிச எதிர்ப்பு அரசியல் கட்சியோ என்னவோ? இன்னும் சில நாட்களில் அவர்களின் உண்மை முகம் வெளிபட்டுவிடும், இவர்கள் என்.ஜி.ஓ பின்புலத்துடன் கூடிய கம்யூனிச எதிர்ப்பு ஆட்களா அல்லது உண்மையாக தமிழ்நாடு மக்களுக்கான கட்சியா என்பது.
rajkumar
கட்டுரை சிறப்பு, ஆனால் ம.க.இ.க... புரட்ச்சிகர அமைப்பு போல குறிப்பிடப்பட்டுல்லது. இது தவறானது. இரண்டு மாததிற்கு முன்பு ம.க.இ.க வில் இருந்து வெளியில் வந்து விட்டேன். கூடன்குளம் போராட்டதில் என்.ஜி.ஓ களுடன் கூட்டு சேர்ந்து கும்மாளம் போடுகின்ரனர். உதயகுமாரை முதலில் என்.ஜி.ஓ இல்லை என்றார்கள் நான் இதை தவறு என்று விமர்சனம் வைத்து உதயகுமார் என்.ஜி.ஓ என்பதர்கும் கூடன்குளம் போரட்டத்தில் என்.ஜி.ஓ க்கல் கலந்துல்ளதை ஆதரத்துடன் கொடுத்த பொது அதை மறுத்தனர். ம.க.இ.க அமைப்பு கூடன்குளம் போராட்டதில் சந்தர்பவாதமாக நடந்து கொண்டதை விமர்சனம் செய்தபோது மறுத்தனர். அதற்கு பின் ம.ஜ.இ.க ஒரு புத்தகம் கொண்டுவந்தனர். அதில் கூடன்குளம் போராட்டம் தவறு என்றும் அதில் ம.க.இ.க சந்தர்பவாதமாக நடந்துகொள்கிரது என்றும் விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கும் ம.க.இ.க பதில் சொல்லவில்லை. இதன் பிறகு ம.க.இ.க. மையகூட்டம் போட்டு அதில், உதயகுமார் என்.ஜி.ஓ என்று அமைப்பு ஏற்றுக்கோள்கிரது என்று முடித்து விட்டனர். தற்போதும் கூடன்குளம் போராட்டத்தில் என்.ஜி.ஓ உடன் கூட்டு சேர்த்திருக்கின்ரனர். ம.க.இ.க. புரட்சிகர அமைப்பு என்று யாரும் நினைக்க வேன்டாம். சந்தேகம் என்றால் தொடர்பு கொள்ளவும். ராஜ்குமார்(8148887165)
rajkumar
ம.க.இ.க வின் சந்தர்பவாத (என்.ஜி.ஓ) அரசியலுக்கு சான்றாக இதே கீற்று இணையத்திள் கூடன்குளம் போராட்டம்: ம.க.இ.க வின் அருள்வாக்கு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளார் அதில் ம.க.இ.க வின் சந்தர்பவாதத்தை சரவணராஜ் என்ற தோழர் அம்பலபடுத்தியுள்ளார். தோழர்கள் படிக்கவும்.
mohan kumar
நல்லது
மகிழ்நன்
//ஆதிக்க சாதி உழைக்கும் மக்களையும் திரட்டுகிற - சாதி ஒழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அணி திரட்டுகிற - வர்க்கப் போராட்டத்தின்மூலம் அதிகாரத்தை அடைகிற - ஆளும் வர்க்கத்துக்கு முடிவு கட்டுகிற கம்யூனிசத்துக்கு மாற்றாக, நுண் அரசியலை, அடையாள அரசியலை, தலித்தியம் எனும் பின் நவீனத்துவத்தை பவுண்டேசன் நிறுவியது.//

பவுண்டேசன் இந்தியா வரும்வரை இங்கே என்ன ஆணி பிடுங்கப்பட்டுக் கொண்டிருந்தது...
மகிழ்நன்
//பெரும்பாலும் இந்துத்துவ விரோதிகளான தமிழக தமிழுணர்வாளர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரிவினை ஏற்படுத்த முயன்றார்.//

தமிழ் உணர்வாளர்கள் இந்துத்வ விரோதிகளா? யாரிவர்கள்...
ecramachandran
பின் நவினத்துவவாதிகளைப்பற்றி தோழர் குணா சரியாக மதிப்பீடு செய்துள்ளார். குறிப்பாக அதை மட்டுமே கவனப்படுத்தி ஆய்வு செய்வாரானால் ஒரு நல்ல விமர்ச்சனத்தை அவரால் கொடுக்க முடியும்.
anbu
பின் நவீனத்துவம், தலித்தியம், விடுதலை, கட்டுடைத்தல், அடையாள அரசியல்,,......அட எல்லாமே சும்மா.. போங்கு ஆட்டமா!
ஆமா..இத்தனை இசங்கள, ரசங்கள சர் ருன்னுனு உறிஞ்சி குடிக்கிற உங்களுக்கே இது புரிய இம்புட்டு நாளாவதுன்னா என்ன மாதிரி கைப்புள்ள களுக்கு புரியறதுக்குள்ள ஆயுசு முடிஞ்சுடுமே!

ஒரு சினிமாவுல காமடி வருமே, கூல் டிரிங் மாதிரி ஆனா கூல் டிரிங் இல்ல ...அது மாதிரி தானா இதுவும்..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.