யார் பொய்யர்? அ.மார்க்ஸா? ச.பாலமுருகனா?: அ.ராஜரத்தினம்

(ச.பாலமுருகனின் கட்டுரைக்கு அ.ராஜரத்தினம் எழுதிய எதிர்வினை)

'கோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும்
, அ. மார்க்சின் பொய்யும்’ என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் மனித உரிமைப் போராளி ச. பாலமுருகன் அவர்கள் வசதியாக மறைத்த தலையாய உண்மைகளை நாம் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

“கோவை செஷன்ஸ் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் எங்களின் வாதம் ஒரு அரசியல் வாதமாக மட்டுமே இருந்தது. தமிழக சட்டமன்ற தீர்மானம், சர்வதேச மனித உரிமைச் சட்டம், ஜெனிவா மாநாட்டு வரைவு போன்றவைகளுக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடு அமைந்திருப்பதையும், இனப்படுகொலை, போர் குற்றம் போன்றவற்றிற்கு இந்தியாவில் யாரேனும் உதவினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்ட விளக்கத்தையே முன்வைத்தோம். மக்கள் சிவில் உரிமைக்கழகம் (பி.யு.சி.எல்) சார்பில் அதன் மாநில செயலாளர் என்ற முறையில் நான் உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தேன். இதில் நாங்கள் எங்களின் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப்பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நாங்களோ, மதிமுகவோ கொடுக்கவில்லை.” என பத்தி நெடுக தன் பக்க விளக்கத்தை முன் வைக்கும் பாலமுருகன் கவனமாக திட்டமிட்டு மறைத்த உயர்நீதிமன்ற உறுதிமொழிப் பத்திர வாசகங்கள் இதோ:

ஜுன் 26, வெள்ளிக்கிழமை, ஹிந்து நாளிதழ் செய்தி:

உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ரெகுபதி முன்னிலையில் ம.தி.மு.க., பி.யு.சி.எல் இன் வழக்கறிஞர் கூறியவை, “ராணுவத்தொடர் வண்டியானது சிறீலங்கா படையினருக்கு படைக்கலன்களை விநியோகிக்கத்தான் செல்கிறது என கும்பல் நம்பியது.”

ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், பி.யு.சி.எல். இன் தமிழ்நாடு, புதுச்சேரி அலகுகளின் பொதுச் செயலாளரும் அளித்திட்ட உறுதிமொழி பத்திரத்தில், தாங்கள் தொடர்ச்சியாக சிறீலங்கத் தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுவதாகவும் கூறியிருந்தனர்.

அத்துடன் நடந்துவிட்ட சம்பவங்களுக்காக வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது எனவும் கூறினர். சமூக சேவை செய்வதற்கு விரும்புவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் பணிந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

கோவை இராணுவத்தொடர் வண்டித் தாக்குதலில் பங்கெடுத்தவர்களின் தியாகம், அரசியல் மற்றும் உறுதித்தன்மை போன்றவற்றை அ.மார்க்ஸ் நையாண்டி செய்வதாக நொந்துக்கொள்ளும் ச. பாலமருகன் தான் நீதிமன்றத்தில் அளித்த சரணாகதி வாக்குமூலத்திற்கு ‘மாவீரர்’ பட்டயமா எதிர்பார்க்கிறார்?

இலங்கைப் பிரச்சினையில் பி.யூ.ஸி.எல். இன் பலமுகம்

தொடர்ச்சியாக சிறீலங்கத் தமிழர்களின் நலன்களுக்காக தாங்கள் போராடுவதாக உரிமையுடன் கூறிக்கொள்ளும் பி.யூ.ஸி.எல் இன் இரட்டை வேடங்களையும், இலங்கை இனப்போராட்டத்திற்கு எதிரான அதன் நுண்ணிய கீழறுப்பு வேலைகளையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக பெங்களூரில் பெரிய அளவில் மாநாட்டை பி.யூ.ஸி.எல் நடத்தியது. இதற்கான நிதிப்பின்புலம் எங்கிருந்து வந்தது? இம்மாநாட்டில் பேசிய முன்னாள் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் இலங்கைப்பிரச்னையில் ஈழத் தமிழர்களின் தலையாய எதிரியாக சீனாவை சித்தரித்துள்ளார். போகிற போக்கில் இந்தியாவின் குறைபாடுகளை லேசாகச் சொல்லியுள்ளார்.

இதே போன்றதொரு உரையையே கடந்த 06.09.2009 அன்று சென்னையில் நடந்த ஈழப்பிரச்னை தொடர்பான கருத்தரங்கில் பி.யூ.ஸி.எல் இன் சுரேஷ் ஆற்றினார். இலங்கை இனப்பிரச்னையில் தமிழக சட்டமன்றத் தீர்மானம், சர்வதேச மனித உரிமைச்சட்டம், ஜெனிவா மாநாட்டு வரைவு போன்றவைகளுக்கெதிராக இந்திய அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக குன்றேறி கூவும் பாலமுருகனும் அவர் சார்ந்த பி.யூ.ஸி.எல். உம் நைசாக இந்திய விரிவாதிக்க தேசிய வெறியின் கையாளாக எப்படித் தொழிற்படுகின்றனர் என்பதை அவதானியுங்கள்.

சீனாவை நியாயப்படுத்தவோ, இலங்கை அரசின் யுத்த வெறிக்கு அது செய்த உதவிகளை சரிகாணவோ முடியாது. ஆனால் ஈழ இனப்படுகொலையில் வட்டார விரிவாதிக்க வெறிப்போட்டியில் தலையாயக் குற்றவாளியான இந்தியாவின் பங்களிப்பை சிறியதாகக் காட்டும் முகமாக குற்றப்பட்டியலில் எங்கோ தொலைவில் உள்ள சீனாவை முதலிடத்திற்கு கொண்டுவரும் பி.யூ.ஸி.எல் இன் ஜகஜ்ஜால வித்தையையும், துரோகத்தையும் இந்திய விரிவாதிக்க வெறித்தனத்தின் முகவராக அது செயல்படுவதையும் நாம் தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும்.

தலைமைப்போக்கிரி அமெரிக்காவிற்கு சீனாவை எதிர்க்க வேண்டிய தேவையுள்ளது. அந்த திருப்பணிக் குழாமில் திருத்தொண்டர் இந்தியாவும் சீனாவைக்காட்டி தேசிய வெறியைக் கிளப்பி ஏகாதிபத்திய பாதஸேவை செய்து வருகிறது. இந்த அமெரிக்க இந்திய போக்கிரி அச்சின் ஊதுகுழலாக பி.யூ.சி.எல். செயல்படுவதை மனித இன விடுதலைப்போராளிகள் கணக்கிலெடுக்க வேண்டும்.

ஆயிரங்குறைகள் இருந்தாலும் சீனா தனது அண்டை அயலவர்களுடன் நல்லுறவையேப் பேணி வருகின்றது. ஆனால் இந்தியா தன்னைச் சுற்றிலும் உள்ள நாடுகளுடன் ஒரு பேட்டை போக்கிரித்தனமான வெளியுறவுக் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. போக்கிரித்தனத்திற்கு உயர்ந்த நட்புறவா பரிசாக கிடைக்கும்?

மாற்று ஊடகமாக தன்னை அறிமுகப்படுத்திய கீற்று இணையதளம் இன்று அவதூறுகள், அபத்தங்களின் புகலிடமாக மாறியுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. நாட்டின் தலையாய ஊடகங்கள் கடைப்பிடிக்கும் ஊடக அறங்கள் கூட கீற்றுவிற்கு இல்லையென்பதை என்னவென்று சொல்ல?

ஈழப்பிரச்னை, திபெத் பிரச்னையில் ஹிந்து நாளிதழ் ஓரவஞ்சனையாக நடந்தாலும் கூட வாசகர் கருத்துகளுக்கு மதிப்பளித்து (Reader’s Editor) என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி செய்திகளில் ஏற்படும் பிழைகள், விடுபடல் ஆகியவற்றை ஒப்புக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விளக்கம், சமாதானத்தை தருகின்றனர். தேவையென்றால் மன்னிப்பு கூடக் கேட்கின்றனர்.

ஆனால் கீற்றுவின் வழித்தடத்தைப் பாருங்கள் - அகிலன், கதிர்காமரை, காலஞ்சென்ற லட்சுமண் கதிர்காமரின் மகன் என சொல்லியது. தவறைச்சுட்டிக்காட்டியவுடன் அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்காமல் அதை நீக்கியது.

அதேபோல் வேறு யாரோ படத்தைப்போட்டு சுசீந்திரனை அவதூறு செய்தது தவறு என சுட்டிக்காட்டப்பட்டவுடன் அதை நீக்கிவிட்டு, செய்த அவதூறுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமலிருப்பது; கீற்று ஆசிரியர் குழுவைச் சார்ந்த பாஸ்கரிடம் ஆதவன் தீட்சண்யா இதைச்சுட்டிக் காட்டியபோது, “உங்களைப்போல் மூன்று மாத சஞ்சிகைக்கு வேண்டுமென்றால் சரிபார்க்க நேரமிருக்கும். மூன்று நாளைக்கொரு தடவை upload செய்யும் எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை” எனக் கூறியது; டாக்டர் வி. பாண்டியன் போன்ற ஹிந்துத்வ பாணி தூய தமிழ்த் தேசியவாதிகள், ச. பாலமுருகன் போன்ற இந்திய விரிவாதிக்க வெறிமுகவர்களின் நாலாந்தர நடையிலுள்ள கடிதங்களை வெளியிடுதல் என காலச்சுவடு பாணியிலான மாற்று ஊடக வலதுசாரி வழித்தடத்தை கீற்று தேர்ந்தெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. தீவிர இலக்கிய உலகில் காலச்சுவட்டின் வலது சாரி வடு அம்பலப்படுத்தப்பட்டதைப் போல் கீற்றுவிற்கு எதிராகவும் போராட வேண்டிய வரும் போலிருக்கின்றது.

- அ.ராஜரத்தினம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

*****

'ஹிண்டுல போட்டுருக்கான் ஸார்!'

- இரா.முருகவேள்

(அ.மார்க்ஸ் மற்றும் அ.ராஜரத்தினம் கட்டுரைகளுக்கு இரா.முருகவேள் மறுப்பு)

கோவை இராணுவ வாகனத் தாக்குதல் வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ச.பாலமுருகன் தாக்கல் செய்த வாக்குமூலத்தை அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன். இந்த ஆவணம் உண்மையானதுதானா என்பதில் சந்தேகமிருந்தால் உயர்நீதி மன்றத்தில் சான்றிட்ட நகல் பெற்று, சரி பார்த்துக் கொள்ளலாம்.

 

 

வரிக்கு வரி இந்து செய்தியை மொழிபெயர்த்தவர்களுக்கு இந்த வாக்குமூலத்தைப் புரிந்துகொள்வது சிரமமாக இராது. இதில் ஒரு சொல்லாவது கோவை இராணுவ வாகனத் தாக்குதல் சம்பவம் பற்றிக் குறிப்படப்பட்டுள்ளதா?

வாக்குமூலத்தின் எந்த இடத்திலாவது அ. மார்க்ஸும், ராஜ ரத்தினமும் கூறுவது போல,

“ராணுவத் தொடர் வண்டியானது சிறீலங்கா படையினருக்குப் படைக்கலன்களை விநியோகிக்கத்தான் செல்கிறது என்று கும்பல் நம்பியது.”

“நடந்துவிட்ட சம்பவங்களுக்காக வருந்துகிறோம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது,” என்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளனவா? இப்போது பொய் சொல்வது யார் என்பதில் குழப்பம் இருக்காது என்று நினைக்கிறேன்.

***

பத்திரிகைச் செய்திகளை முழுமையாக நம்பவிடக்கூடாது என்பது உண்மையறிதலின் அரிச்சுவடி. ஊடகங்கள் தரும் செய்தியை அப்படியே நம்புவதாக இருந்தால், ‘வீரப்பனை போலீஸ் பிடிச்சிருச்சி போல’ என்று டீக்கடைகளில் செய்தித்தாள் புரட்டியபடி பேசும் பொதுஜனத்தின் அறிவுமட்டத்திற்கும், எல்லோரையும் மிஞ்சிய அறிவுஜீவியாக தங்களைக் கருதிக்கொள்பவர்களின் அறிவுமட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஓய்வுபெற்ற பிறகு பல உண்மையறியும் குழுக்களை தலைமையேற்று நடத்திய அ. மார்க்ஸுக்கு இது தெரியாமலிராது. எனவே அவர் தெரிந்தே இப்படியொரு அப்பட்டமான பொய்யைக் கூறி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்க முயன்றிருக்கலாம் என்று நினைக்க இடமிருக்கிறது.

அ.மார்க்ஸ் எவ்வளவு அபத்தமாக எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஒப்புதல் வாக்குமூலம் பற்றிக் கொஞ்சம்...

தாங்கள் குற்றமற்றவர்கள் என்று போராடி நிரூபிக்க விரும்புபவர்களே விசாரணை காலம் முழுக்க வெளியில் இருப்பதற்காக பிணை கோருவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மனு தாக்கல் செய்தால் அது நேரடியாக தண்டனைக்கு இட்டுச் செல்லும். எனவே ‘குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து வாக்குமூலம் எழுதிக்கொடுத்துவிட்டுப் பிணையில் வந்தார்கள்’ என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக பாலமுருகன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று நீதிமன்றம் பிணை வழங்கியது என்பது இன்னும் பெரிய அபத்தம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குற்றங்களை உறுதிப்படுத்தி அரசு தரப்பு அந்தக் கட்டத்தில் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்திருக்கவில்லை. பின்பு எந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்வது?

அ.மார்க்ஸ் தமிழ் சினிமா கோர்ட் சீன்களைப் பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்கிறேன்.

***

எதையும் சரிபார்க்காமல் அ.மார்க்ஸ் ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லிவிட்டார். அது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டவுடன் திருத்திக்கொள்வதுதானே நேர்மை? புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவதையே தொழிலாகக் கொண்ட இந்துவின் பின் ஒளிந்து கொண்டு தப்பிக்கப் பார்ப்பது சரியா?

இந்துவின் மீது இன்னும் நம்பிக்கை இருந்தால் டாக்டர்.ரமேஷ் எழுதிய “வெந்த பன்றியின் கதை” கட்டுரையைப் படித்துக் கொள்ளலாம்.

ஒரு பொய்யை மறைக்கும் முயற்சியில் அ.மார்க்ஸும் அவர் நண்பர்களும் அரச பயங்கரவாதத்தின் முகவர்களோடு மேலும் மேலும் நெருக்கமாகத் தங்களைப் பிணைத்துக் கொள்கிறார்கள். இந்தப் பிணைப்புதான் சொந்த நாடாக இருந்தாலும், அண்டை நாடாக இருந்தாலும் அரச பயங்கரவாதத்தையும், இராணுவத்தையும் மட்டுமே கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கிறது.

***

நீதிமன்றம் விதித்த நிபந்தனையைப் பொருத்தவரை வழக்கமாக நீதிமன்றம் பிணை பெற்றவர்கள் காலையும் மாலையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும். இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டதால் காவல் நிலையம் போவதற்குப் பதில் அனாதை ஆசிரமத்திற்குச் சென்று சமூக சேவை செய் என்றது. ஏற்றுக்கொண்டார்கள். என்ன தவறு?

பி.யு.சி.எல் கணக்கு வழக்குகள், இந்திய விரிவாதிக்கத்தை ஆதரிப்பவர்கள் யார், ஆறு மாதத்திற்கு முன் தமிழ்நாட்டில் யார்யாரெல்லாம் அறிவுஜீவிகளாக இருந்தார்கள், தற்போது யாருடைய அறிவு மட்டம் குறைந்து போயிருக்கிறது, அப்புறம் காஷ்மீரில் அ.மார்க்ஸ் கைது செய்யப்பட்டதாகப் பரவிய குறுஞ்செய்தி, அதற்கு அவர் ஆற்றிய எதிர்வினை போன்றவை பற்றியெல்லாம் கட்டாயம் விரிவாக விவாதிக்கலாம். ஆனால் முதலில் இந்த யார் பொய்யர் பிரச்சினைக்கு விடை கண்டாக வேண்டும்.

அ.மார்க்ஸ் கூறியது அப்பட்டமான பொய் என்று நாங்கள் கூறுகிறோம். பாலமுருகன் கூறுவது பொய் என்றால் அ.மார்க்ஸ் அல்லது ராஜரத்தினம் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். ‘ஹிண்டுல போட்டுருக்கான் ஸார்’ வாதங்களெல்லாம் அறிவுப்பூர்வமானவையல்ல; ‘அம்மாஞ்சி’த்தனமானவை.

உயர்நீதிமன்றத்தில் சான்றிட்ட நகல் பெற அல்லது சரிபார்க்க இவர்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம். அதுவரை காத்திருக்க நாங்கள் தயார்.

- இரா. முருகவேள் 

Comments

22 comments

22
இளஞ்செழியன்
//ஈழப்பிரச்னை, திபெத் பிரச்னையில் ஹிந்து நாளிதழ் ஓரவஞ்சனையாக நடந்தாலும் கூட வாசகர் கருத்துகளுக்கு மதிப்பளித்து (Reader’s Editor) என்ற பக்கத்தை அறிமுகப்படுத்தி செய்திகளில் ஏற்படும் பிழைகள், விடுபடல் ஆகியவற்றை ஒப்புக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் அதற்கான விளக்கம், சமாதானத்தை தருகின்றனர். தேவையென்றால் மன்னிப்பு கூடக் கேட்கின்றனர்.

ஓ... இந்து-வா? ஈழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் சிறந்த தரத்திலானவை என்று உன்.இராம் எழுதினாரே. தற்போது மன்னிப்பு கேட்பாரா?
மாதவி
பேராசிரியர் அவர்களுக்கு,

தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதே நல்ல மனிதர்களுக்கு அழகு.

இலங்கை தொடர்பாக - வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும், கவர்னர் பர்னாலா அவர்களின் மகனான ஜஸ்ஜித் சிங்கும், இன்போசிஸ் நாராயனமூர்த்தியும் கூட உண்மையை எடுத்து உரைத்த பிறகு - தங்களின் நிலைப்பாடுகளை திருத்திக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.

ஆளும் வர்க்கத்தின் விஞ்ஞானிகளும், தொழிலதிபர்களுமே ஈகோ பார்க்காமல் திருந்தி இருக்கும் போது, ஆளப்படும் வர்க்கங்களுக்காக வாழ் நாள் முழுதும் குரல் கொடுத்து வரும் தாங்கள் ஏன் பகிரங்கமாகத் தங்களின் தவறை ஒப்புக்கொள்ளக் கூடாது?

அப்படிப்பட்ட ஒரு நடைமுறையே தமிழக அரசியல் விவாதச் சூழலை செழுமையான ஒன்றாக மாற்றி அமைக்கும்.

மனம் மாறுவீர்களா பேராசிரியர் அவர்களே?

- மாதவி
இளமாறன்
சிறைக்கு சென்ற நம் தோழர்களை சந்தித்த தமிழச்சி அவர்கள், தோழர்கள் குறித்தும் அ மார்க்சின் அரசியல் குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.

//"பெ.தி.க அமைப்பைச் சேர்ந்த நீங்கள் இராணுவ வாகன தாக்குதல் போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு காரணம் பெரியாரின் கொள்கைப்பிடிப்பா? அல்லது புலிகளின் அமைப்புக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?"

"ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க கோவையில் இருந்து 80-வாகனங்களில் இராணுவப்பாதுகாப்போடு ஆயுதங்கள் போகிறது என்று குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி எனக்கு செய்தி கிடைத்தபோது, கொள்கையோ, கோட்பாடோ, புலிகளின் அமைப்போ அல்லது பிரபாகரனோ என் நினைவுக்கு வரவில்லை. ஏற்கனவே இந்திய இராணுவ வீரர்களின் உதவியுடன் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் சதைப்பிண்டங்களும், இரத்தக்களறிகளும், அலறும் ஓலங்களுமே எனக்குள் காட்சிகளாக ஓடியது. எப்படியாவது வன்முறைகளால் கொல்லப்படும் ஈழத்தமிழர்களை என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆவேசத்துடனே சம்பவம் நடந்த இடத்திற்கு ஓடினேன்" என்று குறிப்பிடுகிறார்.

************************************

“தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்து விட்டது” என நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும்போது சிறைப்பட்டோர் வாக்குமூலம் அளிப்பது வேதனை காட்சி" என்று குறிப்பிட்டுள்ளார். (ஜூன்-செப்டம்பர்-2009 புதுவிசை இதழ்)

சிறைப்பட்டோரின் வாக்குமூலத்தைக் கண்டு வேதனை அடைவதாக நீலிக்கண்ணீர் விடுகிறார் புலியெதிர்ப்பு கூட்டத்திடம் **** ***** அ.மார்க்ஸ்.

ஒருவேளை பிணையில் வெளி வந்ததற்காக வயித்தெறிச்சல் அடையலாம் அ.மார்க்ஸிம் அவருடைய அல்லக்கைகளும்.

சந்தடி சாக்கில் இராணு வாகனங்களில் இருந்த ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டுச் செல்லப்படவில்லையென்றும், தவறான செய்திகளின் அடிப்படையில் தோழர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கலக வேலையை ஆரம்பித்திருக்கிறார் அ.மார்க்ஸ்.

எந்த அடிப்படையில் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகிறார் அ.மார்க்ஸ்?

அறிவு ஜீவிகளுக்கு பேசுவற்கு ஈழத்தில் நடக்கும் மனித உரிமை பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க எல்லாவற்றையும் மிக கவனமாக தவீர்த்து... உண்மையை அறியும் குழுவை வைத்துக் கொண்டு சொந்த காசில் (வெளிநாடுகள் தவீர்த்து) காஷ்மீர் வரை ஓடி ஓடி உண்மையை கண்டறிபவருக்கு தமிழ்நாட்டில் இருக்கும் கோவை இராணுவ வாகன தாக்குதல் போராட்டத்தைப் பற்றி ஆய்வு செய்யமல் வாய்க்கு வந்தபடி உளறறுவது ஏன்?

இந்திய இராணுவ மந்திரியும், உயர் அதிகாரிகளும் நாங்கள் ஆயுதம் கொடுப்பது உண்மைதான் என்கிறார்கள். ஈழத்தில் இறுதியுத்தம் முடிந்த பிறகு இந்திய இராணுவ வீரர்களின் உதவியோடும் இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களின் உதவியோடும் புலிகளை கொன்றொழித்தோம் என நன்றி கூறி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் ராஜபட்சே.

அ.மார்க்ஸ்சோ இந்தியாவிலிருந்து ஆயுதங்களே போகவில்லை என்கிறாரா? கோவை இராணுவ வாகத்தில் இருந்து ஈழத்திற்கு ஆயுதங்கள் போகவில்லை என்கிறாரா? அல்லது தவறான தகவல்கள் என்பதன் மூலம் இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டத்தை கேலிக்குட்படுத்தி திசை திருப்புகிறாரா?

சம்பவம் நடைப்பெற்ற அன்று பெ.தி.க அமைப்பு ஊடகத்துறைகளுக்கு செய்தி அனுப்புகிறது.

"ஈழத்திற்கு செல்ல இருக்கும் ஆயுத வாகனங்களை தடுத்து நிறுத்த நாங்கள் மறியலில் ஈடுபட போகிறோம்" என்று.

வன்முறையில் ஈடுபடுவர்கள் அப்படி செய்வார்களா? பெ.தி.க அமைப்பினர் வன்முறையை அங்கே கையாளவில்லை. மறியல் மூலமே வானங்களை செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். இதில் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்.

அப்பாவி மக்கள் மீது குண்டுகள் போட்டு ஒழிப்பது வன்முறை இல்லை என்று அரசாங்கம் கருதினால்; வாகனங்கள் மீது கற்களை வீசி ´ஈழத்தமிழர்களை கொல்லாதே!´ என வாகனங்களை தடுத்தது எப்படி வன்முறையாகும்?

3-லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலிகளுக்குள் முடங்கிக்கிடக்கும் பேரவலத்தைத் குறித்தோ, பாலீயல் பலாத்தாரங்கள், இளைஞர்களின் கொலைகள் என தொடர்ச்சியான சிங்களர்களின் வன்முறைகள் குறித்தோ சிறு கேள்விகளை கூட எழுப்பாமல்... ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் போராடுபவர்களை தேடிதேடிக் கண்டுபிடித்து கடுமையான விமர்சனங்களையும், அவதூறுகளையும், வெறுப்புக்களையும்... நீதியின் பெயரால், அறநெறியின் பேரால், நியாய தர்மங்களின் பேரால், மனித உரிமைகளின் போராளி என்னும் போரால் கொழுத்துப்போன வார்த்தைகளால் நையாண்டி செய்ய வேண்டிய அவசியம் அ.மார்க்ஸ்க்கு ஏன்?

பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக வெளியேறினால் மட்டுமே பாலஸ்தீனயர்களுக்கு அமைதி கிடைக்கும் என பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தும் அ.மார்க்ஸ் புலிகள் இயக்கத்தை மட்டும் தயவு தாட்சண்யம் இல்லாமல் தீவிரவாதிகள் என்கிறாரே எதின் அடிப்படையில் இந்த ஞானம் வந்தது?

இதையாவது விட்டுத் தொலைப்போம்.

மனித உரிமை குழுவில் இருக்கும் அ.மார்க்ஸிக்கு உலகம் முழுவதும் நடக்கும் உரிமை மீறல்கள் பற்றி கதை அளப்பாராம். சிங்களவனின் அத்துமீறல்கள் என்ன என்பதை மட்டும் பட்டியல் போடத் தெரியாதாம்.

நடுநிலைமையின் யோக்கியதை இப்படி இருக்க கோவை இராணுவ வாகன தாக்குதல் போராளிகளின் நேர்மையான உணர்வுகளை நக்கல் செய்ய அ. மார்க்ஸ்க்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

போர்க் குற்றங்கள் புரிந்த நாடுகளின் வரிசையில் அனைத்துலக குற்ற நீதிமன்றம் சமீபத்தில் இலங்கையையும் சேர்த்திருக்கிறது. அனைத்துல குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் மொறினோ-ஒக்காம்போ போர் குற்றங்கள் புரிந்த நாடுகளின் வரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் இலங்கையும் இருக்கிறது. இருப்பினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதுவரை இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை எதுவும் செய்யவில்லை.

இப்படி ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பல ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அ.மார்க்ஸிம் அவருடைய அடிவருடிகளும் பேசும் நீதி கோட்பாடுகளில் ஜனநாயகமும், வன்முறையற்ற மனித நேயமும் பல் இளித்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

கோவை இராணுவ வாகன தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் பற்றியும் நடந்த சம்பவங்களையும் நீதிமன்றத்தில் போராளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் பாலா அவர்களிடமாவது நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை கேட்டறிந்த பின் பரப்புரையில் அ.மார்க்ஸ் ஈடுபட்டிருக்கலாம்.

என்ன செய்ய?

ஆகாதவன் என்றால் நின்றாலும் குற்றம் படுத்தாலும் குற்றம்.

புலி ஆதரவாளர்கள் என்றாலோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலோ வரிந்துக் கொண்டுவருகிறார்கள். பிரபாகரன் என்ற தனிமனிதனின் விமர்சனத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழீனத்தின் வன்மைங்களையும் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.

இராணுவ வாகன தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட எந்த போராளிகளும் தாங்கள் தவறான செய்தியின் அடிப்படையில் வாகனங்களைத் தாக்கிவிட்டோம் என்று தவறுக்கு வருந்தவோ, பிணையில் வெளியே வருவதற்காக மன்னிப்போ கோரவில்லை என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.

இத்தனைக்கும் மேலாக போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத தோழர்களில் இருந்து கைது செய்யப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட்ட சம்பவங்களும், அடக்குமுறைகளும், இரவு நேரங்களில் வீடு புகுந்து பெண்களை மிரட்டியும் காவல்துறையின் வீரச்செயல்களால் தலைமறைவாக இருந்த சில தோழர்களும் சரணடைய வைக்கும் அளவுக்கு அட்டுழியங்கள் தான் அதிகமாக இருந்தது.

சட்டத்தின் பேரால் மனித உரிமைகளும், விதி முறைகளும் ஓரங்கட்டப்பட்டிருந்தது. இதையெல்லாம் அறியாதாவரா அ.மார்க்ஸ்?

போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத காலாப்பட்டு என்னும் இடத்தைச் சேர்ந்த தோழர் எம்மிடம் பேசும் போது சம்பவம் நடந்த அன்று வேலையில் இருந்த ஆதாரங்கள் அனைத்தும் இருந்தபோதும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்ததாக குறிப்பிட்டார். இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததால் வேலையையும் இழந்திருக்கிறார்.

இன்னொரு சம்பவமும் குறிப்பிட வேண்டும். ஒரே குடும்பத்தைச் அப்பாவும், மகனும் (சில காரணங்களுக்காக பேர்கள் குறிப்பிடுவது தவீர்க்கப்படுகிறது) போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த நிலையில் அவரின் மனைவியையும், மகளையும் காவல்துறையைச் சேர்ந்த ஆண் காவலர்கள் வீட்டுக்குள் புகுந்து மிரட்டிக் கொண்டிருந்ததும், வீட்டில் இருந்த பிரபாகன் புகைப்படத்தை வைத்து ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு மன உளைச்சலுக்கு உட்படுத்தியும், கண்ட கண்ட நேரங்களில் வீட்டுக்குள் பெண் காவலர்கள் இன்றி நுழைந்ததும், ஒரு கட்டத்தில் அப்பெண் தன் மகளுடன் சென்னையில் இருந்த உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்ததாகவும் எம்மிடம் குறிப்பிடுகிறார்.

இப்படி போராட்டத்தில் கலந்து கொண்ட போராளிகளையும், சந்கேத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தி மனஉளைச்சளை ஏற்படுத்தி பல குடும்பங்களின் நிம்மதியை கெடுத்த காவல்துறையினரையோ, தமிழக அரசையோ ஏன் கேள்வி கேட்கவில்லை?

இவ்வளவு அவதாறுகள் வந்த பிறகும் பெ.தி.க அமைப்பு தங்கள் பக்க நியாயங்களையோ அல்லது உண்மையில் நடந்தது என்ன என்பதையோ வெளி உலகத்திற்கு சொல்லாமல் மௌனமாக இருப்பதற்கு காரணம் வழக்கு இன்னும் முடியவில்லை.

போராளிகள் பிணையில் வந்திருக்கிறார்கள். வழக்கு முடிவடைந்தால் பல ஆதாரங்களுடன் உண்மைகள் உலகத்திற்கு தெரியலாம்.

கோவை இராணுவ வாகன தாக்குதலின் போது அரைமணி நேரத்திற்கும் மேலாக ஓடக்கூடிய வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அது சொல்லும் ஆயிரமாயிரம் செய்திகளை.

அதுவரை சட்டத்திற்கு விரோதமான செயல்பாடுகளுடையவர்களுடன் தொடர்புடைய அ.மார்க்ஸ் போன்ற இரட்டை நாக்கு ****கள் சீறிக்கொண்டிருக்கட்டும்.

தமிழச்சி //

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=06&article=1458
பிரபாகரன்
//தாங்கள் குற்றமற்றவர்கள் என்று போராடி நிரூபிக்க விரும்புபவர்களே விசாரணை காலம் முழுக்க வெளியில் இருப்பதற்காக பிணை கோருவார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மனு தாக்கல் செய்தால் அது நேரடியாக தண்டனைக்கு இட்டுச் செல்லும். எனவே ‘குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்து வாக்குமூலம் எழுதிக்கொடுத்துவிட்டுப் பிணையில் வந்தார்கள்’ என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? //

-- சாதாரண பொதுமக்களின் அறிவுக்கு எட்டக்கூடிய மிக எளிமையான அறிவு இது. இன்னுமா அமார்க்ஸ் தன்னை அறிவுஜீவி என்று நம்பிக்கொண்டிருக்கிறார்
பறை ஒலி
In every country the intellectual class is the most influential class. This is the class which can foresee, advise and lead. In no country does the mass of the people live the life for intelligent thought and action. It is largely imitative and follows the intellectual class. There is no exaggeration in saying that the entire destination of the country depends upon its intellectual class. If the intellectual class is honest and independent, it can be trusted to take the initiative and give a proper lead when a crisis arises. It is true that the intellect by itself is no virtue. It is only a means and the use of a means depends upon the ends which an intellectual person pursues. An intellectual man can be a good man but he may easily be a rogue. Similarly an intellectual class may be a band of high-souled persons, ready to help, ready to emancipate erring humanity or it may easily be a gang of crooks or a body of advocates of narrow clique from which it draws its support.
- Dr. B. R. Ambedkar
aayisha
கோவை ராணுவ வாகன எதிர்ப்பு தொடர்பாக கீற்றுவில் நடைபெற்று வரும் விவாதத்தால் புதுவிசையில் அ.மார்க்ஸின் கட்டுரையை வாசித்துப் பார்த்தேன். அடக் கொடுமையே! இதற்கா இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம் என்கிற வருத்தம் மட்டுமே மிஞ்சியது.

//’’தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்துவிட்டது’’எனப் பிறகு நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும் போது இவர்கள் வாக்குமூலம் அளிப்பது வேதனைக் காட்சி.// குறுஞ்செய்திகளாலும், ஆதாரமற்ற தகவல்களாலும் நேர்ந்து விடுகிற தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான் அ.மார்க்ஸ் இதைச் சொல்லி இருக்கிறார். இதில் நையாண்டியையும், ஏளனத்தையும் எங்கே கண்டீர்கள்?

ஹிந்து வின் ‘நேர்மை’ நாமறிந்தது தான் சரி விட்டுவிடுவோம். இதே செய்தி அவுட்லுக்கிலும், பிடிஐ[ பிரஸ் டிரஸ்ட் ஆ•ப் இந்தியாயிலும் பதிவாகியிருக்கிறது. ‘தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்துவிட்டது’ என பி.யு.சி.எல், பெரியார்தி.க, ம.தி.மு.க சொல்லாமல் இருந்திருக்கலாம். அங்கே வன்முறையில் ஈடுபட்ட மக்கள் இப்படி சொல்லவேயில்லையா? இரா.முருகவேள் இதற்கு அத்தாட்சி காட்டுவாரா?

பிணை விடுதலைக்காக விண்ணப்பித்தவர்கள், வாக்குமூலம் அளித்தவர்கள் என்று மார்க்ஸ் எந்த அமைப்பின் பெயரையும் குறிப்பிட்டு அந்த கட்டுரையில் சொல்லி இருக்கவில்லை. அவர்களாகவே ஓடிவந்து குறைபட்டுக் கொள்வது எந்த வகையில் நியாயம்? குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்க வேண்டும்!

தவறுகள் இருப்பதைப்போல இவர்களாகவே கட்டமைத்து விட்டு ‘இதற்காக மார்க்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’, ‘இவரெல்லாம் அறிவுஜீவியா’ என்பதெல்லாம் அநீதிகளின் உச்சம்.

பெரியாரின் மீது அவதூறுகள் அள்ளி வீசப்பட்ட நிலையில் தமிழ்ச் சூழலுக்கு பெரியாரை விளங்க வைத்த அறிவுஜீவி யார்? வாய் கிழிய பேசிவிட்டு பார்ப்பன பத்திரிக்கைகளில் சரண் புகுந்து லாபம் ஈட்டுகிறவர்களுக்கு நடுவில் நேர்மையைக் கடைபிடிக்கிற அறிவுஜீவி யார்? பார்ப்பன கைகுலுக்கல்களோடு இந்துத்துவத்தை விமர்சித்து ஊரை ஏமாற்றுபவர்களுக்கு மத்தியில் முஸ்லீம்களின் இன்னல்களுக்கெல்லாம் உடனிருந்து போராடுகிற அறிவுஜீவி யார்? இதையெல்லாம் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடுத்தவர் மீது பழியைச் சுமத்தி தங்களை தியாகிகளாக்கிக் கொள்வதில் என்ன இருக்கிறது?
Dr. V. Pandian
//
பார்ப்பன கைகுலுக்கல்களோடு இந்துத்துவத்தை விமர்சித்து ஊரை ஏமாற்றுபவர்களுக்கு மத்தியில் முஸ்லீம்களின் இன்னல்களுக்கெல்லாம் உடனிருந்து போராடுகிற அறிவுஜீவி யார்? இதையெல்லாம் தோழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
//

தோழர் "ஆயிஷா" அவர்களே! ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது பார்த்தீர்களா?

உண்மையானவர்களிடம் உண்மையாக நடந்து ஜெயிக்கலாம். அயோக்கியர்களிடம் அத்தகைய வழியே வெற்றி கொடுக்கும். இந்தியா ஒரு அயோக்கிய தேசம் என்பது வௌிப்படை. இது பார்ப்பானுக்கான தேசம் என்பது நீங்களும் அறிந்த ஒன்று தானே!

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

எனவே, இவர் இந்த விடயத்தைப் பற்றி எழுதியதே ஒரு இன துரோகம்! இவருக்கு வேண்டியது தன்னைத் துதிபாடும் ஒரு கூட்டமும், இவரின் வேதாந்தங்களை முழங்க மேடைகளும். இவர் முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார். அவர்கள் இவரை இனம் கண்டு கொண்டனர்.

ஒருவர் தமக்காக பேசுகிறாரா இல்லையா என்பதைவிட, நேர்மையாகப் பேசுகிறாரா என்பது தான் முக்கியம்.
இளங்கோவன்
இந்து நாளிதழின் ''உண்மை''த்தன்மைக்கும் தமிழர்களின் அடிமைப்புத்திக்கும் வரலாற்றுத்தொடர்புண்டு.
பார்ப்பனிய அடிமைப்புத்தியோடு பார்ப்பன அடிமைத்தனமும் தமிழர்களுக்கு சுகமானது.
அதனால்தான் ஆயிரம் பக்க ஆதாரங்களைவிட ஹிண்டுவில் போட்டிருக்கான் என்று சொல்வது எளிதாக நிரூபித்ததாகிவிடுகிறது.
கல்லூரியில் படிக்கையில் நிகழ்ச்சி, ஆர்ப்பாட்டம் ஏதாவது நடத்திவிட்டு பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்க செல்வோம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளிதழ் ஒதுக்கப்படும். (நான் தினத்தந்திக்கு கொடுப்பேன்) எங்களில் ''விவரமான''(!) ஆள்தான் ஹிண்டுக்கு கொடுப்பார்.
ஆங்கிலபயம் கடந்து ஹிண்டுவின் மேட்டிமைத்தனம் எங்களில் பலரை உள்ளே நுழைய அஞ்சும் அளவுக்கு ஆக்கியிருந்ததே காரணம். அ.மார்க்ஸ் பெயரை Professor A.Marx என இந்து எழுதுவதைப்பார்த்து புளங்காகிதம் அடையும் நண்பர்களை நான்றிவேன்.
நிற்க.
அ.மார்க்ஸ் உறுதியாகப் பொய் சொல்லியிருக்கிறார். அதை மெய்ப்பிக்க நீதிமன்றத்தில் போட்ட அபிடவிட்டை கீற்றில் போட்டிருக்கிறார்கள். கேடுகெட்ட தமிழகத்தின் அறிவர் உலகின் அவலமாகவே இதை நான் கருதுகிறேன்.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையா இல்லையா என நடந்த விவாத(!)த்தின் தொடர்ச்சியே இது.
இதுவரையிலான அ.மார்க்சின் செயற்பாடுகளை எல்லாம் மறுவாசிப்பு(!) செய்ய வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.
Niruban
அ.மார்க்ஸ் ஆதரவாளர்களின் (அல்லக்கை என்று குறிப்பிட்ட எனது பின்னூட்டம் கீற்றில் வரவில்லை) உங்கள் வாதம் புல்லரிக்க வைக்கிறது. குப்பன், சுப்பன் மட்டும்தான் மன்னிப்பு கேட்டார்கள் என்று ‘ஹிண்டு’விலோ அல்லது வேறு எந்த பத்திரிக்கைகளிலோ போட்டிருக்கிறார்கள். குறுஞ்செய்திகள், நாளேடுகளை நம்பி மேம்போக்காக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரை பொய் என்று சம்பந்தப்பட்டவர்கள் நிரூபித்தவுடன், ‘நான் உங்களை குறிப்பிட்டுச் சொல்லவில்லையே, பொதுமக்களைத்தான் சொன்னேன்’ என்ற தனது ஆதரவாளர்களை விட்டு பதில் எழுதவைக்கிறார். இதுவா அ.மார்க்சின் அறிவு நாணயம்? எனக்கு என்னமோ, பதில் எழுத தன்பக்கம் நியாயம் இல்லாததால்தான் இப்படி வேறுவேறு பெயர்களில் அவரே சப்பைக்கட்டு கட்டுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.
அ.ராஜரத்தினம்
விடை தேடும் வினாக்கள்

‘ஹின்டுல போட்டுருக்கான் ஸார்‘ என்ற முருகவேளின் மறுப்பு குறித்து சில கேள்விகளை முன்வைக்கிறேன்.
இரா.முருகவேள் அவர்களே! நீங்கள் வெளியிட்ட வாக்குமூல படி என்பது தலையாய பிணை மனு (MAIN BAIL PETITION) அல்ல. மாறாக, அது துணை மனுதான்.

(1) நீங்கள் தலையாய பிணை மனுவை அப்படியே வெளியிட முடியுமா?

(2) ச.பாலமுருகன் நீதிமன்றத்தில் எழுத்து வடிவத்தில் கொடுத்தது போக வாய் சொற்களில் நீதிபதியிடம் பேசியதும் தலையாயது. அதுதான் ‘ஹிந்து‘விலும், உள்ளுர் நாளிதழ்களிலும் பிடி.ஐ. செய்தி நிறுவனத்தினாலும், அவுட்லுக் இணையதளத்திலும் (ஜூன் 25) வெளிவந்துள்ளன. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

(3) நீங்கள் ஒரு பொய்யர். இல்லையெனில் பிணை உத்தரவை அப்படியே வெளியிட அணியமாக உள்ளீரா?

(4) ‘அம்மாஞ்சி ஹிந்து நாளிதழ்‘, ‘பி.டி.ஐ.‘, ‘அவுட்லுக்‘ வெளியிட்ட குறிப்பிட்ட செய்தி பொய் என்றால் ஏன் இதுவரை அவதூறு வழக்குத் தொடரவில்லை? இனிமேலாவது தொடருவீர்களா?
aayisha
நிரூபன் உங்கள் கருத்தை நீங்கள் எப்படி பதிவு செய்கிறீர்களோ அதைப் போலவே நானும் என்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அளவுக்கதிகமாய் கற்பனை செய்வது உங்கள் உரிமை ஆனால் அதெல்லாம் உண்மையாகி விடாது.
ameerkhan
This to reply to Mr.pandian. There were lot of people raised lot of issues in the feedback. Mr.pandian neither comment on this issue nor on the feedback. but he replied to Ms.Ayishas feedback even in that he responds to the muslim issue alone.

In Keetru's discussion lot of people established that Mr.pandian's Hindutuva attitude and his hatred against Muslims. Here without knowing himself again conforming that he is aganist muslims. He could not even tolarate that somebody is working for the muslims. However still he did not reply to Ms.Ayishas questions about the intellectuals working for Muslims in Tamilnadu.
Dr. V. Pandian
அமீர்கான் அவர்களே!

நாம் ஏற்கனவே கீற்றில் "சந்தித்து" விவாதித்திருக்கிறோம் என்று எண்ணுகின்றேன். அபோதே இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தீர்கள். அதற்கான முறையான எதிர்வினையை ஆற்றியுள்ளேன். மீண்டும் உங்களின் ஐயம் எனக்கு வியப்பைத் தருகிறது. அதுவும், ஆயிஷா அவர்களே எனது மடலுக்கு மறுப்பு எழுதாத நிலையில்!

ராணுவ வாகனம் தாக்கியது சம்பந்தமாக எவ்வளவோ எழுதியுள்ளேன். இதே மடலில் ஒரு திருக்குறளையும் மேற்கோள் காட்டி! என்மீது ஆத்திரப் படாமல் மீண்டும் படித்துப் பாருங்கள் தோழரே!

நீங்கள் எந்த மதமாயிருந்தாலும் எனக்கொன்றில்லை. ஆனால், நீங்கள் தமிழராயிருந்தால் அதன் அடையாளம் உங்கள் பெயரில் இருக்கவேண்டும் என்பது தான். அது இல்லாததாலும், உங்களின் வழிபாட்டு முறை தமிழில் இல்லாததாலும் இயல்பாகவே நீங்கள், தமிழினத்திலிருந்து விலகியே இருப்பது போன்ற நிலை உருவாகிறது. இது உளவியல் சார்ந்த விடயம். சிக்கல்களின் மூலமே இது தானே ஒழிய, உங்களின் மதமல்ல! மீண்டும் சொல்கிறேன், எனக்கு எம்மதமும் சம்மதமே!

நான் ஒரு தமிழன். நீங்கள் தமிழரென்றால், தமிழனாக இரு என்று கேட்பது, நாமிருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் என்ற முறையில், எனது உரிமை என்று நினைக்கிறேன். முஸ்லீம் கோட்பாடுகளுக்கு அப்பால் வாழும் ஒரு முஸ்லீமை இப்படிக் கேட்க மாட்டீர்களா நீங்கள்? அது போலவே தான் இதுவும்.

நான் பிறப்பால் ஒரு ஹிந்து. ஆனால், எனக்கு மதமுமில்லை, சாதியுமில்லை! அதற்காக, அனைவரையும் என்னைப்போலவே இருக்கவேண்டும் என்று அடாவடி செய்பவனல்ல நான். அதே நேரம், நான் கேட்பதெல்லாம் இது தான். ஒவ்வொருவரும், எந்த மதமாயிருந்தாலும் முடிந்தவரை பகுத்தறிவோடு இருங்களேன் என்பது தான். ஹிந்துவாயிருந்தால் மண் சோர் தின்னாதே, தலையிலே தேங்காய் உடைக்காதே, நெருப்பிலே நடக்காதே, சாமியாரிடம் குறி கேட்காதே என்பன போன்ற நிறைய கேள்விகளை வைக்கிறேன்.

Constantine Beschi 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து, தான் ஒரு Original Roman கிருத்துவராக இருந்தும், தமிழகத்தில் தனது பெயரையும் தமிழில் வீரமா முனிவர் என்று மாற்றிக்கொண்டு, கிருத்து புராணத்தையும் தமிழ்ப்பண்பாட்டோடு ஐக்கியப்படுத்தி எழுத்திக்கொண்டு, தனது வாழ்நாள் முழுக்கவும் தமிழுக்காகவும், கிருத்துவிற்காகவும் அற்பணித்து வாழ்ந்தவர். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிருத்துப் பிரிவும் அத்தகைய வழிமுறையைக் கடைபிடிக்கின்றன. அதனால், அம்மக்கள் தங்களைத் தமிழர்களாக உளவியல் ரீதியாக உணர்கின்றனர்.

மனவை முஸ்தபா அவர்கள் அற்புதமான தமிழ்ப்போராளி. தமிழர்கள் மதிக்கும், வியந்து பாராட்டும் பெருமகன். அவரது பெயரின் முன்புள்ள மனவை என்ற தமிழச்சொல் அவரைத் தமிழரென்று காட்டுகிறது. ஆனால், அமீர்கான்...................! அடடே! நான் எங்கே இருக்கிறேன்? பாரசீகத்திலா?

சுய விமர்சனம் செய்து பாருங்கள் தோழரே! எந்த மதமும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும், யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அம்மதத்தை நமது பண்பாட்டுக்கும், மொழிக்குமாக தகவமைத்துக் கொள்ளுங்கள். அது தான் அறிவுடைமை!

கிருத்து மதம் அவ்வாறே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. கீழ்த்திசை நாடெல்லாம் பரவிய பௌத்தமும் அதை அனுமதித்தது.

இஸ்லாத்துக்கு மட்டும் என்ன அப்படி ஒரு சிக்கல்? 21ம் நூற்றாண்டில், படித்த அறிஞர்களாகிய நீங்கள் சிந்திப்பது அவசியம் தோழரே! ஆத்திரம் என்மீது வேண்டாம். நான் மொழி வெறியன் அல்ல. ஆனால், நீங்கள் அப்படி அழைத்தாலும் பொறுக்கலாம். ஆனால், ஹிந்துத்துவ வாதி என்று பழி போடாதீர்கள். ஹிந்து என்ற சொல்லே எனக்குக் குமட்டும்!

இன்னொன்று தோழரே! தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை (ராமகோபாலன்கள் என்ற சில விஷக்கிருமிகளைத் தவிர) . இந்த மண் அப்படிப்பட்டது. அதனால், ஆமார்க்ஸியர்களிடம் பாடம் கேட்பது பலனளிக்காது. இப்போது அவர் ஒரு விரித்த புகையிலை. இனி அவர் சொல் அம்பலமேறாது!

தனது சமூகத்தை இழித்துப் பேசி, எதிரிகளிடம் கைத்தட்டு (கைமாற்று!) வாங்குபவர். முன்பு, தமிழன் பொக்கிஷமான தொல்காப்பியத்தை, அது ஒரு முதலாளித்துவ நூல் என்று விளித்து, அது அப்படி இல்லை என்று நிறுவிய தமிழறிஞர்களிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக்கொண்டவர். தத்துவங்களுக்காக மக்களைச் செதுக்குபவர்கள் செறுப்புக்காக காலைச் செதுக்கிய கதையாக! இவரின் சவுகரியத்துக்காக எதையும் திரிப்பார். ஏனென்றால் இவர் ஒரு மேதாவி பாருங்கள்!

என்னைச் சாடும் நீங்கள் ஆயிஷாவின் அடிப்படை ஞாயத்தை கேள்வி கேட்கவில்லையே! "அமார்க்ஸ் எங்களுக்காக பேசுகிறார். அப்படி இருக்கும் போது, அவர் சற்று தமிழர்களைத் திட்டினால் என்ன" என்ற தொனி அவரது மடலில் இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? இந்த ஒரு விடயத்தை மட்டும் வைத்துக் கொண்டா அமார்க்ஸைத் திட்டுகிறோம். அவரது தொடர்ந்த தமிழர் எதிரப்பு நிலையினால் தானே! ஆயிஷா, அதை உணராமல் குறுக்கிடலாமா?

அதனால் தான் அங்கேயே கேட்டேன், "ஒருவர் நமக்காக பேசுகிறாரா என்பதை விட நேர்மையாகப் பேசுகிறாரா என்பது தான் முக்கியம்." அப்படிப்பட்டவர் நம்மை ஆதரித்தால் பலன் தரும். இல்லையேல், ஜெயலலிதா தனி ஈழத்தை ஆதரித்த கதை தான்!
மாதவி
மதிப்பிற்குரிய "பேராசிரியர்" அவர்களுக்கு,

ஆயிசா தங்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். கடந்த காலத்தில் தமிழ் நாட்டில் தாங்கள் ஆற்றிய பணிகளைப் பட்டியல் இட்டுள்ளார்.

80 களின் இறுதியில் இருந்து தங்களை நான் அறிவேன். சோவியத் ஒன்றியம் சிதறுண்ட காலத்தில் சீன - இந்தியப் பொருளாதாரத்தை ஒப்பிட்டு நோக்கும் ஒரு ஆங்கிலப்புத்தகத்தை அநாயசமாகப் படித்துவிட்டு, "புறப்பாடு" சிற்றிதழுக்கு நோட்ஸ் போட்டுக் கொடுத்தீர்கள். அன்று விடலைகளாக இருந்த நாம் - உண்மையில் அசந்துதான் போனோம். எனினும்- தங்களின் "கோனார்" பொழிப்புரை எமக்கு மிகவும் உதவியாகத்தான் இருந்தது.

ஆனால், இது நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் நடுத்தரவர்க்க இளைஞர்களைக் கவர்ந்திழுத்த - எழுச்சிபெறச் செய்த - கூடங்குளம் இயக்கத்தில் தாங்கள் தலையைக் காண்பிக்கவே இல்லை. ஆங்கிலப் புத்தகங்களுக்கு நோட்ஸ் போடுவதில் தங்களின் காலத்தை உருக்கிய நீங்கள், தாங்கள் போட்ட நோட்ஸ் புத்தகங்களின் அடிப்படையில் கள ஆய்வு ஏதேனும் ஒன்றை செய்ய ஆர்வம் - இன்றுவரை - காட்டவில்லை. கள ஆய்வு என்று இங்கு நான் குறிப்பிடுவது - தமிழ்நாட்டின் (அல்லது பிற நிலப்பகுதிகளின்) பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரத் தளங்களில்- ஒன்றைக்கூட தாங்கள் மேற்கொள்ளவில்லை.

பாடப்புத்தகங்களில் உள்ள கணக்குகளை மட்டுமே போடத் தெரிந்த ஆசானாக - அன்றாட வாழ்வில் உள்ள கணக்குகளைப் போட முயற்சியே செய்யாத ஒரு "அம்மாஞ்சியாக", "பயந்தாங்கொள்ளியாக"- தாங்கள் தங்களின் பெருவாழ்வினை இன்றளவும் கழித்துள்ளீர்கள். கழித்தும் வருகிறீர்கள்.

தங்களின் "செழுமை மிக்க" காலகட்டமான 1970-1995 ஆண்டுகளில் இருந்து தமிழ்நாடு என்ற நிலப்பரப்பில் இருந்த சமூக அமைப்பானது பொருளாதார், அரசியல் மற்றும் கருதுகோள் தளங்களில் எவ்வாறு மாறியிருக்கிறது என்பதனைக் கள ஆய்வுகளின் மூலம் தாங்கள் ஆய்ந்தறிய முயற்சி செய்யவே இல்லை.

அணுசக்தி அரசியல், அறிவியல்-தொழில்நுட்பத்தின் அரசியல், மதத்தின் அரசியல், சாதிகளின் அரசியல், பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக மாறிப்போன - மாறிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு, பொது நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்குப் பிரித்தளிக்கப்பட்டுவரும் நிலை, இலங்கையின் - ஈழத்தின் சமூக-பொருளாதார-கருதுகோள் நிலை, 2004 ஆம் ஆண்டின் சுனாமி - இன்னும் நிறைய சொல்ல முடியும் -பருண்மையான இந்த நிகழ்வுகளைத் தாங்கள் பருண்மையாக அறிந்துகொள்ள முய்ற்சி செய்யவே இல்லை.

இந்த நிகழ்வுகளின் போது இவற்றில் சிலவற்றிற்கு - ஆங்கிலத்தில் வந்த புத்தகங்களுக்கு - நோட்ஸ் போட்டுக்கொண்டிருந்தீர்கள். நோட்ஸ் போடுவது தவ்று என்று நான் கூறுகிறேன் என்று தயை கூர்ந்து எண்ணிவிட வேண்டாம். நான் சொல்ல வந்ததெல்லாம்- நோட்ஸ் வாத்தியார் ஒருவரை "புரட்சிகர சக்திகள்" என்று தம்மைத் தாமே கூறிக்கொண்ட - தங்களின் சம கால சக்திகள் - தங்களை "எங்கெல்ஸ்", "அல்தூசர்" ரேஞ்சுக்குப் பார்த்தார்களே... அதைத்தான்.....

விளைவு?

தங்களுக்குப் பிறந்திருக்க வேண்டிய பிள்ளைகள் இன்று "வதவத" என்று பல நூறு பேத்தி-பேரன்களை ஈன்றெடுத்திருக்க வேண்டும் ! ஆனால் தங்களிடமிருந்தோ இன்றளவும் - அன்று உங்களிடம் எம் விடலைப் பருவத்தின்போது கேட்ட அதே சாரைப் பாம்பின் - செவிப்பறையைக் கிழித்திடும் - "புஸ்ஸ்ஸ்ஸ்.... புஸ்ஸ்ஸ்ஸ்...." பேரோசையே வந்த வண்ணம் இருக்கிறது!!

மூப்பின் துவக்கத்தில் உள்ள தங்களுக்கு இன்னும் தங்களின் இனிய வாழ்வின் மீது ஏன் இத்தனை வன்மம்?

சீறியது போதும் பேராசிரி.... சாரி! "நோட்ஸ் வாத்தி" அவர்களே.... "களத்தில் இறங்கி ஏதேனும் ஒரு துறையில் - பருண்மையான ஒரு ஆய்வினை நடாத்தி தங்களின் இந்த அந்திமக் காலத்திலாவது - இந்தப் பிறப்பின் பேறைப் பெற முயற்சி செய்யுங்கள்.

அவருக்கு வக்காலத்து வாங்கும் சாரை-யர்களே... நீங்களும்தான்...

ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்றால் தயை கூர்ந்து தங்களின் "சாரை" உறுப்புகளைப் பொது வெளியில் ****** கொண்டு - "நீருண்டு ... உம் தொழிலுண்டு" என்று தங்களின் தனி வெளியில் இருங்கள்!

தயை கூர்ந்து - தயை கூர்ந்து - இந்த சமூகத்தை இனி வரும் யுகங்களுக்கும் - புனர்ந்து காண்பிப்பேன் என்ற இறுமாப்பைக் கைவிடுங்கள்.
மாதவி
தங்கப் பதக்க வாத்தியாரின் நோட்ஸ் - இப்போதாவது - நம்மைக் கரை சேர்க்குமா?
---------------------------------------------------------------------

அரசியல் என்றால் என்ன? சமூக அதிகார வெளியில் வன்முறை என்ற உத்தியின் எல்லைகள் யாவை?

மானுடம் எதிர்கொண்டிருக்கும் சம கால சமூக சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?

தங்கப் பதக்க வாத்தியார் அ. மார்க்ஸ் அவர்களின் புதிய கையேடு - இப்போது பரபரப்பான விற்பனையில்!

----------------------------------------------------------------------

அன்டோனியோ நெக்ரி, மிஷேல் ஹார்ட், கார்ல் ஸ்மிட், ஜியார்ஜியோ அகம்பன், எரிக் ஹாப்ஸ்வாம், பெனடிக்ட் ஆன்டர்சன், தெரிதா, ஹன்னா ஆரென்ட், ஹெர்ஸன், இம்மானுவல் கான்ட், ஜார்ஜ் சோரெல், சார்த்தர், பிரான்ஸ் ஃபனான், அமில்கார் கப்ரால், ஹன்னா ஆரென்ட், ரைட் மில்ஸ், மேக்ஸ் வெபர், கோன்ராட் லோரென்ஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, பெனார்ட் கிரிக்

ஆகியோர் நடத்திய வகுப்புகளில் நமது தங்கப்பதக்க வாத்தியாரான அ.மார்க்ஸ் அவர்கள் பங்கேற்றார்கள். வகுப்பின் முன் பெஞ்சில் அமர்ந்து - தமிழ் இன மக்களான நமக்காக - மிகவும் சிரத்தையுடன் "தரமான" குறிப்புகளை அவர் கண்ணும் கருத்துமாக எடுத்தார். இந்த சிறப்புக் "குறிப்புகளின்" அடிப்படையில் - அவரது ராசியான கைகளால் - இந்தக் கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

வாத்தியாரின் கையேட்டை "திரு அண்ணாமலை"யின் அடவி சஞ்சிகையாளர்கள் ஏ-4 தாளில் 21 பக்கங்களில் மிகவும் சிறப்பாக அச்சிட்டுள்ளார்கள்.

நாமனைவரும் தேர்வில் நிச்சயம் வெற்றி பெற - "தங்க வாத்தியாரின் கையேடு" கொடுக்கும் சிறப்பு "பிட்" குறிப்புகள்:

1. ஒரு ஆட்சி அலகிற்கு வேறுபட்ட நலன்கள் அவரர்களின் அளவிற்கு ஏற்ப அதிகாரத்தில் பங்கு பெறச் செய்யும் சமூகச் செயற்பாடே அரசியல்.

2. ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து யாரும் யாரையும் அதிகாரம் செய்யாமல், சுரண்டாமல் வாழ்வதைச் சாத்தியமாக்கும் நிலையே அரசியல்.

3. அத்தகைய நிலை இன்று இல்லை.

4. அதற்கான காரணங்களை மார்க்சியம் முதலான சமூக விஞ்ஞானங்கள் ஆய்வு Polis- Politics-Polity-Poly எனச் சமூகத்தின் பன்மைத்தன்மையை அங்கீகரிப்பது இன்றைய பல் இனக்கூட்டு வாழ்வில் முதன்மைத் தேவையாகிறது.

5. சரியான சமூக அமைப்பு எது என்பது குறித்த வேறுபட்ட கருத்துகள் சுயேச்சையாக இயங்குவதை ஏற்றுக் கொண்டே நமது கருத்தை நாம் முன் னெடுத்துச் செல்ல வேண்டும்.

6. பல்வேறு சாத்தியங்களுக்கிடையேயான ஒரு Concilation அடிப்படையிலேயே அரசதிகாரத்திற்கு ஆதாரமான ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது.

7. வன்முறையையே அரசியலாகக் கொள்பவர்களால் இதைச் சாத்தியப்படுத்த இயலாது.
இது அரசியல் குறித்த அடிப்படைப் புரிதல் மட்டுமே.

8. நடைமுறை அரசியல் மேலும் சிக்கலானது.

9. உலக அளவில் படுவேகமாக நிகழும் அன்றாட மாற்றங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு மக்கள் பிரிவும், இயக்கமும் தம் அரசியலை முன்னெடுக்கும்போது அரசியலின் இந்த அடிப்படையைத் தவறவிட்டுவிடக் கூடாது.

10. இந்த நோக்கி லிருந்து பார்க்கும்போது நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள இயலும்.

11. வன்முறை எளிமையானது.

12. அரசியல் சிக்கலானது.

13. சிக்கலானது என்பதற்காகவே அரசியலைக் கைவிடுவோமாயின் அது பேரழிவிற்கே இட்டுச் செல்லும்.

14. இன்றைய உலகச் சூழலில் இந்தப் பேரழிவு மேலும் விரைவுபடுத்தப்படும்.

வாத்தியாரின் முழு நோட்ஸ் - இப்போது இணையத்திலும் கிடைக்கிறது:
http://www.nichamam.com/

தங்கப் பதக்க வாத்தியாரின் நோட்ஸ் - இப்போதாவது - நம்மைக் கரை சேர்க்குமா?
yogesh
a.marx-i thittuvathu irrukattum. avar kuriya niyayamana vimarisangaluku pathilaikamal ippadi thani napar thakuthalil edupaduvathu sariyilai nanbargale. oruvar a.marx-n allakai yendru vilithullar, athil onrum kuttramillai. ungalai pondru vaiko nedumaran pondravargaluku allakai aga irrupatharku, unmai-i kurum marx ku allakaiyaga irruppathu yevvalavo mel.
yogesh
a.marx-in methu yen ivvalavu vanmam.
Raaja
i came here first time... i understood one stuff. ... all these guys named, Mr.A.Marx, Mr.Rajarathinam are very active in commenting things that were happening spontanously. Did they ever participate in any active protest or activism and guided the whole activists ship into a nice idealist course.

It seems easy to talk& write abt revolution than actually being part of it.

Please guys come to street and join ur holy hands with us to get to question the terrorist state. This can do two things..
1. either we will get to the idealist path
or
2. you will understand coaching is lot easier than playing

Do something.
மாதவி
திரு.யோகேஷ் அவர்களுக்கு,

தமிழ் அறிவு வெளிக்கு பேராசிரியர் அவர்கள் நிறைய கொடை செய்துள்ளார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியிருந்தும் அவர்மீது ஏன் இவ்வளவு தனிப்பட்ட வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

முதலில் - பேராசிரியர் அவர்கள் தமிழ் அறிவு வெளிக்கு கொடை ஏதும் அளிக்கவில்லை என்று நாம் கூறவில்லை. அது எத்தகையது என்பதை விளங்கிக்கொள்ளவே இங்கு நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

இன்றுவரை - கடந்த 35 ஆண்டுகளாக அவர் மேற்கத்திய, வடக்கத்திய அரசியல் - பொருளாதார ஆய்வாளர்களுக்கு நோட்ஸ் போடும் பணியையே செய்துவந்துள்ளார் என்பதே நாம் வந்து சேர்ந்திருக்கும் முடிவு.

இன்று, நம் சமூகம் மேலதிகமான அவலங்களை சந்தித்து வருகிறது. அதற்கான காலகட்டத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. எனவே, இப்படிப்பட்டக் காலகட்டத்திலும் பேராசிரியர் அவர்கள் கையேடு தயாரிக்கும் தன் அனிச்சைப் பணியை விட்டுவிட்டு, இதுவரை அவர் தாயாரித்து வெளியிட்டுள்ள நூற்றுக்கணக்கான கையேடுகளில் கொட்டிக் கிடக்கும் அரசியல்- பொருளாதாரக் கருத்துக்களை கைகொண்டு, நம் சமூகம் எதிர்கொண்டுவரும் அவலங்களையும், பிரச்சினைகளையும் - கள ஆய்வு - செய்து நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையே அவரிடம் மிகுந்த எதிர்பார்ப்புடனும், பாசத்துடனும் நாம் முன் வைத்திருக்கிறோம்.

இது தவறா?

எம்மை வைகோ, நெடுமாறன் வகையறாக்களின் அல்லக்கை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த முடிவுக்கு உங்களால் எப்படி வர முடிந்தது?

உண்மையில், நாங்கள் யார்?

முத்துக்குமார் என்ற வீரனின் ஈகையால் "தன்முனைப்பு" சிதறடிக்கப்பட்டவர்கள். சமூக வெளியில் இனி செயலாற்றியாக வேண்டும் என்ற சத்தியக் கட்டளைக்குத் தள்ளப்பட்டவர்கள்.

பேராசிரியர் அவர்களாலும், அவரது நண்பர்களாலும் இதுவரை மேற்கொள்ள இயலாத கள ஆய்வுகளில் தற்சமயம் ஈடுபட்டு இருப்பவர்கள்.

இந்தக் கள ஆய்வுகளைத் தாங்கள் பின்வரும் வலைபூக்களில் வாசிக்கலாம்:

http://mayseventeen.wordpress.com/

http://tamilthavi.blogspot.com/

எமது "கருத்து-களப்" பணிகள் சிறப்பானவை என்று நாம் இங்கு கூறவரவில்லை. சுய தம்பட்டம் அடிப்பது அல்ல எமது நோக்கம்.

மாறாக, "பேராசிரியர்" போன்றவர்களுக்காகவும், "மாவீரன்"களுக்காகவும் நாங்கள் காத்திருந்த காலம் கொடியது. எமது காத்திருப்பால் அன்பு நண்பர்களை அன்று நாங்கள் தீயில் இழந்தோம். இனியும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இவர்களை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்க இயலாது என்ற பட்டறிவு வந்தது. இனிமேல் - எம்மால் இயன்ற - "கருத்து - களப்" பணிகளை - பாண்டிய நாட்டின் 12 வருடப் பஞ்சத்திற்கு உணவிட முயன்ற எங்கள் நண்பனும் பிச்சைக்காரனுமான "மணிமேகலை"க் காப்பியத்தில் வரும் ஆபுத்திரனைப் போன்று - இதய சுத்தியுடன் - நம்மை எதிர்கொண்டிருக்கும் இந்தப் பேரிடரை எதிர்கொள்ள நாம் நடக்க முடிவு செய்தோம்.

இருந்தும் பேராசிரியர் அவர்களின் மீது நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்றும், களத்தில் உங்களின் கொடையை அளியுங்கள் என்றுதான் அவரை இறைஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

அதை அவர் ஏனோ செவிமடுக்க மறுக்கிறார். அல்லது, அவரது அனிச்சை மனம் அவரத் தடுத்து வருகிறது. தங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் அவரது அனிச்சை மனதிற்கு உதவுகின்றன...மேலும் மேலும் நோட்சுகளைப் போட அதனைத் தூண்டி வருகின்றன.

இது தனிப்பட்ட ரீதியில் அவருக்கும், நம் சமூகத்திற்கும் பெருந்தீங்கை விளைவிப்பதாக உள்ளது.

எனவேதான், உங்களையும், உங்களைப் போன்ற பேராசிரியர் அவர்களின் நண்பர்களையும் காலைப் பிடித்துக் கேட்டுக்கொள்கிறோம்:

"அவரை அவரது அனிச்சை மனதிலிருந்து மீட்டு, "களக்கொடை"யாளராக மாற்ற முயலும் எங்களின் முயற்சிக்கு தயவு செய்து உதவுங்கள்."

"நண்பர்களே! எம்மைப் புரிந்து கொள்ளுங்கள்!"
ameer khan
Dear Dr.V.Pandian

Due to various reasons I could not visit this page. In our previous discussion you did not answer to my questions.so, the allegations are still exist. There are many more things to be discussed related to this topic and I think everything cannot be written and discussed. But I am very much open to have a healthy dialog with you. This is my open invitation to you. My mobile number is 9443282718.

However I need to ask my question again, You dont claim that you are Hindu but you are claiming that you are tamilan, without defining what is mean by Tamilan. You also COMPEL others to follow the "Tamil values" as you defined. If this is not an FASCISM, what else can be called as Fascism.

Since you have done your Phd, I hope you know the meaning of 'Fascism'. If not please refer the literatures or contact the people who know the meaning of FASCISM.

I am waiting for your response by phone.
Dr. V. Pandian
அமீர்கான் அவர்களே!

ஒன்று மிகத் தௌிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் ஒரு தமிழ் முஸ்லீம் என்ற அடிப்படையில் மட்டுமே நான் எழுதியிருந்தேன். நீங்கள் உருது முஸ்லீமாக இருக்கும் நிலையில், நான் எழுதியது உங்களுக்குப் பொருந்தாது. இந்த விளக்கத்தோடு மேல் செல்கிறேன்.

மொழி அடிப்படையில் தான் இனங்கள் பிரிந்தன. ஆக, ஒரு இனத்தின் முதன்மை அடையாளம் அதன் மொழி தான். ஒரு இனம் தனது மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க முயல்வது பாஸிசமாகாது. தனது மொழியையும், பண்பாட்டையும் அடுத்தவன் மீது திணிப்பது தான் பாஸிசம். அல்லது மற்ற இன மக்களையோ, அல்லது மற்றவர் மொழி மற்றும் பண்பாட்டையோ அழிக்க நினைப்பது தான் பாஸிசம். பாஸிசம் போன்ற கருத்தியல்கள் தோன்றியது முசோலினி மற்றம் ஹிட்லர் போன்றவர்களால் தான். ஆகவே, அவற்றைப் புரிந்து கொள்வது கடினமல்ல! நான் சமூகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவரல்ல! இருப்பினும் இவற்றைத் தெரிந்து கொள்வது நமது கடமை என்ற முறையில் இவற்றைப் பற்றி அறிந்தவர்.

அதே முறையில், ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்து, ஆயந்து, கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது தான் மனிதற்கு அழகு. அந்த முறையில் மதங்களைப் பற்றியும் சிந்தித்தேன்.

புலி பசித்தால் புல் திண்ணாது! பாம்பு, பழம் திண்ணாது!! எனவே, இவை உயிர்வாழ மற்ற உயிர்கள் சாக வேண்டும் என்பது தான் இயற்கையின் நியதி. இப்படிப் பட்ட நியதி சத்தியமாக இறைவனால் உருவாக்கப் பட்டிருக்க இயலாது! எனவே, இறை என்ற ஒன்று இல்லை என்ற உண்மையை அறிந்தேன். இது நாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமே அல்ல!

இது பெரும்பாலோர் அறிந்த ஒன்று தான். இருப்பினும், பெரும்பாலோருக்கு இறை என்ற ஒன்று தேவைப் படுகிறது. இன்னல்களால் சூழ்ந்துள்ள மனிதர்களுக்கு தங்களது மன அழுத்தங்களைக் களைய இறை நம்பிக்கை தேவைப்படுகிறது. இதனால் பலப்பல சமயங்கள், ஒவ்வொரு சமூகத்திலும் தோன்றின. இந்தச் சமயங்கள், நாளடைவில் "உலகெலாம்" வியாபித்துள்ள "கீழ் மக்களால்", நிறுவனங்கள் போலச் செயல்பட்டன. லாப, நட்டக் கணக்கில் இயங்கிய இந்த நிறுவனங்களுக்குள், பூசல்கள் தோன்றின.

நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு வித்தியாசமான "யூனிபார்ம்" கொடுப்பது போல, இம்மத நிறுவனங்களும், சாதாரண மக்ளுக்கும் "மத அடையாளங்ளைத்" தாங்க வேண்டும் என்று கட்டளை போட்டன. நாமம் போடுவது, குல்லா போடுவது, தாடி வளர்ப்பது, சிலுவை வௌியில் தெரிய அணிவது போன்று பலப்பல அடையாளங்கள். மக்களின் சுத்த விசுவாசத்தை இந்த மத நிறுவனங்கள் கட்டாயமாக்கின. இங்கே தனிமனித சுதந்திரம் பறி போனது!

இறை நம்பிக்கை என்ற உளவியல் ரீதியான, மனிதனின் தேவை, தவறானதல்ல. ஆனால், இறை நம்பிக்கையோடு சற்றும் தொடர்பில்லாதவற்றை இம்மத நிறுவனங்கள் கட்டளையிடுவது ஏற்புடையதா? ஒரு சமயக் கொள்கைக்கும் அச்சமயத்தைச் சார்ந்த ஒருவனது "பெயருக்கும்" என்ன தொடர்பு? ஒரு சமயக் கொள்கைக்கும், இறையை வழிபடப் பயன்படுத்தும் "மொழிக்கும்" என்ன தொடர்பு?

தமிழன் தான் உலகின் மூத்தக்குடி என்பது இன்று நிறுவப்பட்ட விடயம். தமிழ் ஒரு இயற்கையான மொழி. தமிழும், சீனமும் தவிர உலகில் இயற்கையான மொழிகள் எதுவும் இல்லை. தமிழைப் போன்ற ஒரு அறிவியல் மொழி உலகில் இல்லவே இல்லை! சன்றாக, "தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்" என்ற எனது "கீற்று" கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

தமிழல் உள்ளது போன்ற மாந்தநேய இலக்கியங்கள், பண்டைய உலகின் எந்த இலக்கியத்திலும் இல்லை. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற ஒப்பற்ற வாசகம் ஒரு சான்று. அன்று சீனர்களோடும், யவனர்களோடும் வாணிகம் செய்து உலகறிந்த தமிழனால் பாடப்பட்ட கவிதையின் (தத்துவத்தின்) ஒரு பகுதி தான் அது.

இன்று உலகிலுள்ள ஒவ்வொரு சமய மக்களின் ஆதி சமயம் "சைவம்" தான் என்ற உண்மை இப்போது உணரப்படுகிறது. வைணவமும் சைவத்திற்குப் பிந்தியது தான். மலைவாழ் ஆதி மனிதன் சிவலிங்கத்தைத் தொழுதான். அதன் பிறகு வந்த காடுவாழ் தொல் மாந்தனின் தெய்வம் தான் "மாயோன்" எனப்படும் கண்ணன் (வைணவம்). "சிவலிங்கத்தின் கதை (வரலாறு)" என்ற எனது "கீற்று" கட்டுரையைப் படிக்கவும்.

மெக்காவில் கருப்புக் கல்லைத் தொழும் வழக்கம் இன்றும் உள்ளதாக அறிகிறேன். இஸ்லாம் உருவாவதற்கு முந்தய மக்கள் தொழுத வடிவம் அது. உலக ஆய்வாளர்கள் அதை ஆண்குறி வழிபாடு (சிவலிங்க) என்றே கருதுகின்றனர்.

"பழைய ஏற்பாடு" பைபிளில் சிவலிங்க வழிபாடு பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சீனத்திலும் பிறப்புறுப்பு வழிபாடு இருந்துள்ளது.

சைவ சித்தர் திருமூலர் சொன்னார் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்".

எனவே, "உலகிலுள்ள அனைத்து சமயங்களுமே தமிழர் சமயங்களே" என்ற உண்மை உணரப்படுகிறது. சென்னையிலே அப்படி ஒரு சமய ஒருங்கிணைப்பு இயங்கிக் கொண்டுள்ளது.

நான் சைவனல்ல! மேற்குறிப்பிட்ட தெல்லாம் தொடர்புடைய வரலாற்றுச் செய்திகள்!

எல், அல் என்ற தமிழ் வேற்சொற்களிலிருந்து தான் "அல்லா" என்ற சொல் உருவானது. தற்போதய ஈராக் நகருக்கு அருகில் தான் மெசபட்டோனியா நாகரிகம் ஒரு காலத்தில் தழைத்திருந்தது. அந்த நாகரிகத்தின் முக்கியமான பட்டினத்தின் பெயர் தான் "ஊர்" என்பது. அப்பட்டமான தமிழப்பெயர்! அந்த மெசபட்டோனிய நாகரிகமும், சிந்து சமவௌி நாகரிகமும் தொடர்புடையன. சிந்துவௌி நாகரிகம் ஆதி திராவிட (தமிழ்) நாகரிகம், அங்கு சிவலிங்க வழிபாடு இருந்தது. தமிழ் மொழி, பேச்சு வழக்கில் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான சான்று, "மாந்த இனவரலாற்று" (Anthropological Studies) ஆய்வுகளின் படி நிறுவப்பட்டுள்ளது.

இவ்வளவுக்கும் பிறகு, ஒரு தமிழ் முஸ்லீம் தனது பெயரைத் தமிழில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்பதில் தவறுண்டா?

தமிழ் முஸ்லீம் "அல்லா"வை தமிழில் வழிபட வேண்டும் என்று நான் கேட்பதில் தவறுண்டா?

இக்கடிதத்தையும், நான் சொன்ன எனது கட்டுரைகளையும், தயவுசெய்து, படியுங்கள் தோழரே!

சில நாள் கழித்து நான் உங்களை அழைக்கிறேன்!

அன்படன்,

உங்களது உடன்பிறப்பு,

வே. பாண்டியன்.
Dr. V. Pandian
ஆதிமனிதனின் மலைவாழ் காலத்தில் தோன்றியது தான் சிவலிங்க வழிபாடு. அங்கு மக்கள் தொகை பெருகி, வாழ்வாதாரங்கள் போதாமையால், மனிதன் கீழீரங்கி காடுகளில் வாழத் தொடங்கினான். இடையர்கள் எனப்பட்ட காடுவாழ் மக்களின் தலைவன் தான் மாயோன் எனப்படும், கண்ணன் எனப்படும், பாரப்பனர்களால் கிருஷ்ணன் என்று சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வைணவக் கடவுள்.

Old Testament எனப்படும் பழைய ஏற்பாட்டு பைபிளில் சிவலிங்க வழிபாடு குறிப்படப் படுகிறது என்றும் பார்த்தோம். யூதர்களும், இஸ்லாமிய மக்களும் "சுன்னத்" எனப்படும் ஒரு சடங்கை, மதச் சடங்காக செய்வது, அவர்களது லிங்க வழிபாட்டின் நீட்சி தான் என்று கருதப்படுகிறது.

உலகின் முதல் சமயமான சைவத்திற்குப் பிறகு தோன்றிய இரண்டாவது சமயம் வைணவம் என்று பார்த்தோம். வைணவக் கடவுள் ஒரு "மேய்ப்பன்" என்பது நாமறிந்தது. ஆடு, மாடு மேய்ப்பது தான் காடுவாழ் மக்களின் பிரதானத் தொழில். அது போல, பழைய ஏற்பாட்டுக்குப் பிறகு வந்த கிருத்துவும் ஒரு "மேய்ப்பராக" அறியப்படுவது ஒரு விந்தையல்லவா?

காடுவாழ் காலத்திலும், பிற்காலத்திலும் கடற்கோள்களால் (சுனாமிகளால்) மக்கள் பிரிந்து பல்வேறு திசைகளில் சென்று, பல நாகரிகங்களாக வளர்ந்தனர். அந்த எல்லா சமயங்களும், தாம் கடற்கோளில் தப்பி வந்ததாகவே பதிவு செய்துள்ளனர். தமிழிலக்கியங்களில் பல கடற்கோள்கள் நிகழ்ந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு டைணாசரின் முட்டைகளும், எலும்புகளும் தமிழக மண்ணில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழகம் உலகின் தொன்மையான நிலப்பகுதிகளில் ஒன்று. இது வெப்ப நாடு என்பதால் குமரிக்கண்டத்தில் தான் ஆதி மனிதன் தோன்றி வளர்ந்தான் என்று எண்ணற்ற ஆதாரங்கள் சொல்கின்றன.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.