சுமார் 475 நாட்களாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கூடங்குளம் பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என தொடங்கி தமிழகம் தழுவிய ஆதரவைப் பெற்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். பல முற்போக்குச்சக்திகளும் சனநாயக சக்திகளும் இந்த போராட்டத்திற்கு நேரடியான பங்களிப்பும் தார்மீக ஆதரவும் அளித்து வருகின்றன.

கூடங்குளம் அணு உலையும், அணு உலை எதிர்ப்புப் போராட்டமும் பல்வேறு விவாதங்களை வெளிகொணர்ந்துள்ளன. குறிப்பாக, 1. வர்க்கப் போராட்டமும் சுற்றுச் சூழல் பிரச்சனையும், 2. அரசுசாரா அமைப்புகளை எதிர்கொள்வதற்கான பிரச்சனை, 3. மக்களின் போராட்ட உணர்வும், போராட்டத்திற்கான‌ தலைமையும், 4.அறிவியல் தொழில்நுட்பமும் சமூக வளர்ச்சியும், 5. அடையாள அரசியலுக்கும் வர்க்க அரசியலுக்குமான உறவு, 6. இந்திய அரசின் சுயசார்புத் தன்மையும் புதிய காலனியமயமாக்க நிகழ்முறையும், 7. ஒற்றை துருவ ஏகாதிபத்தியமும் பன்மை ஏகாதிபத்தியமும், 8. தனியார்மயமும், அரசுடைமைக் கோரிக்கையும் 9. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, 10. உற்பத்திச் சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான உறவு, 11. உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதில் சமூக மேற்கட்டுமானத்தின் பாத்திரம் போன்ற பல்வேறு கேள்விகளையும், பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளன.

இந்திய அரசும் தமிழக அரசும் இப்போராட்டத்தை ஒடுக்கவும் அணு உலையை திறக்கவும் பலவழிகளில் முயற்சித்து வருகின்றனர். இதை இடது வலது கம்யூனிஸ்டுகள் முழுமையாக ஆதரிக்கின்றனர். ஆனால் சில முற்போக்கு அமைப்புகளும் அணு உலைக்கு எதிராகவும் போராட்டத் தலைமைக்கு எதிராகவும், போராட்டத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. குறிப்பாக, ம.ஜ.இ.க. போன்ற சில அமைப்புகள் இத்தகைய நிலைபாட்டை எடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

ம‌.ஜ.இ.க.வின் “அணுசக்தி காலாவதியாகிவிட்டது என்று கூறி, அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்! அனல், புனல், காற்று, சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம்” என்ற‌ கட்டுரையில் பாதுகாப்பான அணு உலையை திறக்கவேண்டும் என்ற தமது கோரிக்கையை முன்வைத்து, அரசுசாரா நிறுவங்களின் சமூக மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு குறித்தும் விளக்குகின்றது.

அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஒரு அமெரிக்கக் கைக்கூலி என்றும், கூடங்குள அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் இருக்கின்றன என்றும், இந்திய நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட ஆற்றல் துறைகள் அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்றும் கூறுகின்றது. அணு சக்தி அரசியலில் இந்திய ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும், ஏகாதிபத்தியங்களும் இதர ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஈடுபட்டுள்ளன. ஆனால் அதன் இறுதி பயனாளியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் குறிப்பிடுகின்றது. ம.ஜ.இ.க.வின் பிரசுரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டும் பிரதான இலக்காக முன்வைக்கின்றது. புதிய காலனிய எச்சரிக்கையும் விடுகின்றது. அணு சக்தி அரசியலின் பன்முகத் தன்மைவாய்ந்த தன்மைகளை ஒற்றையாக்கி விடுகின்றது. இதன் மூலம், வர்க்கப் போராட்டத்தையே அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றை துருவமாக்கி இருக்கின்றது.

அரசு சாரா அமைப்பின் தலைமையில் போராட்டம் நடக்கின்றது காரணத்தைக் காட்டி போராட்டத்தை நசுக்க அரசு எடுக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் ம.ஜ.இ.க. ஆதரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் அணு உலையைத் தகர்க்க இவர்கள் சதி செய்கின்றார்கள் என்ற பீதியை கிளப்புவதோடு மட்டுமல்லாமல் அவர்களை "உதயகுமார் கும்பல் அணு உலைக்குச் சேதாரம் விளைவித்தால் அதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்துவார்களா? அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்களா? அல்லது அணு உலையை இடிக்க விட்டுவிட்டு வழக்குப் போட்டுவிட்டோம் என்று நாடகமாடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது" என்று கூறுகின்றது. இதன்மூலம் இவர்களது வர்க்கக் கண்ணோட்டத்த்தின் பலவீனத்தைப் புரிந்துக் கொள்ள முடிகின்றது.

சமீபத்தில் ‘இனியொரு’ இணைய இதழில் நடைபெற்ற ‘அணு உலை குறித்த விவாதம்’ குறிப்பிடத்தக்கது. இவ்விவாதத்தில் தோழர்கள் தேவன், முருகன் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் முன்வைத்த பல கருத்துக்களில் உற்பத்திச் சக்திகள், உறவுகள் குறித்த கருத்துக்கள் தத்துவார்த்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றேன். இவர்களில் முருகன், உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளின் மாற்றம், சமூக மாற்றத்தில் இவை இரண்டின் பாத்திரம் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். இதை இப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். காரணம், உற்பத்திச்சக்திகள் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளின் மாற்றம், உற்பத்திச் சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான உறவு போன்றவை குறித்த இவரது கருத்துக்கள், சில அடிப்படையான கேள்விகளையும் பிரச்சனைகளையும் எழுப்புகின்றன.

"உற்பத்தி உறவுகள் குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அதாவது முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகள் மாற்றியமைப்பதற்கான சாத்தியக் கூறே அந்த சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான்." என்பதுதான் முருகன் அவர்களின் வாதமாகும். சுருக்கமாகக் கூறினால், உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கான அடிப்படை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கின்றது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதுதான் இதன் சாரமாகும். இதை உற்பத்திச் சக்திகள் கோட்பாடு (Theory of Productive Forces) என்று அழைக்கப்படுகின்றது. அதாவது 'அந்த உற்பத்தி சக்திகள் வளர்ந்தால்தான் உற்பத்தி உறவுகளை தூக்கியெறிய அந்த சமூகம் இடம் கொடுக்கும்' என்பதுதான் அந்தக் கருத்து. உற்பத்தி உறவுகளை தூக்கியெறிய முன்னிபந்தனை உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதுதான் என்ற ஒரு கருத்தை இங்கு ஆணித்தரமாக வைக்கப்படுகின்றது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது உற்பத்தி உறவுகளை தீர்மானிக்கின்றது என்பதுதான் அதன் பொருள்.

உற்பத்தி சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல வேண்டும். அப்போதுதான் சமூகம் இடைவின்றி முன்னேறிக் கொண்டிருக்கும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு ஒத்த அளவில்தான் உற்பத்தி உறவுகள் அமைந்திருக்கும். உற்பத்தி உறவானது, ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்போது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதைவிட உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதுதான் முதன்மையானதாக அமைந்துவிடுகின்றது என்பது எனது கருத்தாகும்.

“உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்ச்சியடைந்தால் -உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளோடு பொருந்திவரா. மேற்கட்டுமானம் உற்பத்தி உறவுகளுடன் பொருந்தி வராது. இந்தச் சந்தர்ப்பத்தில் உற்பத்தி சக்திகளுடன் பொருந்திவரும் வகையில் மேல் கட்டுமானமும் உற்பத்தி உறவுகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்”என்றும், “முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்படவேண்டும். அதன் பிறகு மட்டுமே உற்பத்தி சக்திகள் பரந்த அளவில் வளர்ச்சியடைய முடியும். இது ஒரு உலகுதழுவிய விதி” என்ற மாவோவின் மேற்கோளை அவரே சுட்டிக் காட்டியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு உற்பத்தி உறவுகள் தடையாக இருக்கும்பட்சத்தில், உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதாகும். இதுவே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமையாகும்.

ஆக நமது திட்டம் உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதாகவும் அதற்கு துணைபுரிவதாகவும் இருக்க வேண்டும். ஆனால் ‘இப்போது கம்யூனிஸ்டுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது’ என்றும் ‘உற்பத்தி சக்திகளை வளர்ப்பதே நமது முக்கிய கடமையாகும்’ என்றும் இவர் கூறுகின்றார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மட்டுமே முதன்மைபடுத்தும் இவர் உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் போராடுவதைப் பற்றி கவலைப் படுவதாய் இல்லை.

ஆனால், "தொழில் வளர்ச்சிக்கும் விவசாய வளர்ச்சிக்கும் மின்சாரம்தான் அடிப்படையாகும். ஒரு புறம் நிலக்கறி பற்றாக்குறை, தரமின்மை, எண்ணெய் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறிவிட்டது, இன்னொரு பக்கம் காற்று வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாதம் மட்டுமே சீசன், அடுத்து மிகக் குறைந்தளவான குப்பை போன்ற மாற்று மின்சரம் தயாரிப்பது இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான மின்சாரத்திட்டம் அணு சக்தியுடன் திட்டமிடும்போதுதான் நம் போன்ற பெரிய நாடுகளுக்கு மின்சக்திப் பிரச்சினை தீரும். அந்த வகையிலேயே அணு உலையைத் திறக்கக் கோரவேண்டும். அதில் மக்களின் தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும், வாழ்வாதத்திற்கும் உத்தரவாதத்திற்காகப் போராடவேண்டும்." என்பதுதான் முருகன் வைக்கும் திட்டம். ஆக ஓர் ஒருங்கிணைந்த மின்சக்தித் திட்டத்தை உருவாக்குவதும் அதற்காக போராடுவதும்தான் தமது திட்டம் என்கின்றார்.

"இங்கு உற்பத்தி உறவுகளே அந்த உற்பத்தி சக்திக்கு தடையாகி போனதால், அந்த உற்பத்தி உறவுகளை தகர்ந்தெரிந்து அந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்திற்கு அதை ஒழுங்குபடுத்தவும் ஒரு புதிய உற்பத்தி உறவுகளை கொண்டுவர வேண்டியிருக்கிறது. இந்தியாவில் அது புதிய ஜனநாயகப் புரட்சியைத் தவிர, மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தைத் தவிர வேறு மாற்றமில்லை" என்று கூறினாலும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மட்டும் முதன்மை படுத்துகின்றார். உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்கு அவர் பின்னுக்குத் தள்ளுகின்றார்.

"இப்படி வளரும் உற்பத்தி சக்தியால்தான் உற்பத்தி உறவை தூக்கியெறியவேண்டிய நிலையை இன்னும் கூர்மையாக்கும். இதுதான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை உண்மையிலேயே கொண்டுவரும்' என்பது முருகனின் கருத்தாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் என்ற வாதத்தை இன்னும் விரிவுபடுத்தியிருக்கின்றார். அதாவது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில்தான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை கொண்டுவரும் என்று கூறுகின்றார். உண்மையில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில்தான் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையை கொண்டுவரும் என்று முருகன் கூறுகின்றார்.

ஆனால், ரசிய சீன புரட்சிகளின் அனுபவங்கள் நமக்கு என்ன உணர்த்துகின்றன என்பதை கவனிக்க தவறுகின்றார். ஜார் ரசியாவில் முதலாளித்துவம் அவ்வளவாக வளர்ச்சிப் பெற்றிருக்கவில்லை. முன்னேறிய உற்பத்திச்சக்திகள் வளர்ந்திருக்கவில்லை. விவசாய உற்பத்தியும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்தது. ஆனால் லெனின் ஏகாதிபத்தியத்திற்கும் ரசிய ஆளும்வர்க்கத்திற்கும் இருந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு மிகச்சிறிய அளவில் இருந்தாலும் பாட்டாளிவர்க்கத்தையும் வறிய சிறு விவசாயிகளையும் அணிதிரட்டி புரட்சிக்கு தயார்படுத்தினார். இவரது முழுகவனமும் புரட்சிகரத் தத்துவத்தை உருவாக்குவதிலும் புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சியை கட்டமைப்பதிலும்தான் இருந்தது. உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி பெறாத நிலையில், பின் தங்கிய சமூகமாக இருந்தாலும், வர்க்கப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நிகழ்த்தி வெற்றியும் பெற்றார். சீன புரட்சியின் அனுபவம் இன்னும் தெளிவானது. மிகவும் பின் தங்கிய சமூகத்தில் விவசாய வர்த்தினரையே பிரதானமாக சார்ந்திருந்து புரட்சி நடந்தேறியது. இங்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்தால் புரட்சி நடந்திருக்காது.

அணு உலையை ஆதரிப்பது என்பது உற்பத்தி சக்திகளை வளர்க்கவா அல்லது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கவா என்றால் சந்தேகமேயில்லாமல் அது உற்பத்திச் சக்திகளை வளர்ப்பதற்கு மட்டுமே. இது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க உதவி செய்யாது. ‘அணு உலையை ஆதரிப்பதால் உற்பத்திச் சக்திகளை வளர்க்கச் செய்யும் என்பதால் நாம் அதை ஆதரிக்கவேண்டும்’ என்று கூறுகின்றார். ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை பிற்போக்கான‌ உற்பத்தி உறவுகள் தடைசெய்து கொண்டிருக்கின்றது. ஆகவே அணு உலையை ஆதரிப்பதால் உற்பத்திச் சக்திகள் வளர்க்க முடியும் என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.

'அணு உலையை திறக்க வேண்டும் என்பது நாட்டின் உற்பத்தி சக்திகான வளர்ச்சிப் பிரச்சினை. அதை சுதேசியமாக சரியாக மாற்றியமைக்கப் போராடுவது என்பது உற்பத்தி உறவுகளுக்கிடையிலான பிரச்சினை. உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்து ஒரு சுதந்திர ஜனநாயக குடியரசை அமைப்பதின் மூலமாக மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம், மக்கள் உரிமையை உத்திரவாதப் படுத்த முடியும்' என்றும், 'உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை சுதேசியமாக மாற்றுவது என்பதே மக்க‌ளுக்கானதாக மாற்றுவது என்பதே தீர்வு' என்றும் முருகன் கூறுவதைப் பாருங்கள். உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும், உற்பத்தி உறவுகளை மாற்றியமைத்து சுதந்திர சனநாயக குடியரசை அமைக்கப்படும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். சமூக வளர்ச்சிப் போக்கின் பொருள்முதல்வாதப் பார்வையாக இது தோன்றினாலும், இந்தப் படிநிலை வரிசை எந்திரத்தனமான சிந்தனைமுறையின் விளைவாகும்.

இனி, உற்பத்தி உறவை மாற்றியமைக்கப் போராடுவது குறித்து ஆராய்வோம். ‘அணு உலையை எதிர்ப்பது என்றால் அது உற்பத்தி சக்திகளை வளர்ப்பதற்கு எதிராகும்’ என்று முருகன் கூறுகின்றார். அணு உலையை எதிர்த்து போராடுவதன் மூலம் உற்பத்தி உறவை அது பாதிக்கச் செய்யும். உற்பத்தி உறவுகளை மாற்றிமைக்க உதவும். குறைந்த பட்சம் உற்பத்தி உறவுகளின் பூசல்களையாவது உண்டுபண்ணும் என்பது உறுதி. ஆகவே உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை காணவேண்டும்.

உற்பத்திச் சக்திகளை வளர்க்க இன்று நிலவும் உற்பத்தி உறவுகளே தடையாக இருக்கின்றது என்பதை முருகன் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அவ்வாறிருக்கும்போது அணு உலை எவ்வாறு உற்பத்திச் சக்திகளை வளர்க்கும் என்று தெரியவில்லை. அணுசக்தி மட்டும் அல்ல அனைத்து உற்பத்திகளையும் வளரவிடாமல் பிற்போக்கான உற்பத்தி உறவுகள் தடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது இன்றைய யதார்த்த உண்மையல்லவா! இந்த பிற்போக்கான உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது நமது முக்கிய பணியாகின்றது. ஆகவே அணு உலையை எதிர்ப்பது என்ற கோரிக்கையானது நிலவும் உற்பத்தி உறவுகளில் சிக்கல்களை உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது.

பொருளாதார அடித்தளமானது உற்பத்தி சக்திகளுக்கும், உறவுகளுக்குமான முரண்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. உற்பத்தி சக்திகள் வளர்வதும் உற்பத்தி உறவுகள் மாற்றம் அடைவதும் புறநிலையானவை. தன்னிச்சையானவை. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்களின் வழியாக சமூகம் மாற்றம் அடைகின்றது என்பது உண்மை. ஆனால் பொருளாதார அடித்தளமும் மேற்கட்டுமானமும் இணைந்து செயலாற்றும்போது மட்டுமே சமூகமாகின்றது. இந்த இரண்டு முரண்பாடுகளில் ஒன்றை மட்டுமே பிரித்து தனித்துச் செயல்படுவதாக புரிந்துக் கொள்ளக் கூடாது.

உடைமை வர்க்கத்திற்கும் உடைமையற்ற வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தின் வழி சமூகம் அடுத்தக் கட்டத்தை அடைகின்றது. ஆனால் இங்கு அரசியல், கருத்தியல், தத்துவம் போன்றவைகள் அடங்கிய‌ மேற்கட்டுமானத்தின் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணரவேண்டும். உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க மேற்கட்டுமானத்தின் கூறுகள் முதன்மையான செல்வாக்கை கொண்டிருக்கின்றன என்பதையும், தீர்மானகரமான பங்களிப்பை ஆற்றுகின்றன‌ என்பதையும் வசதியாக மறந்துவிடக் கூடாது.

"அணை கட்டுவது, நதிநீர்களை இணைப்பது, பல்வேறு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் எதிர்ப்பது அல்லது ஒழிப்பது என்ற நிலை எடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் இந்த அணு உலையே கூடாது என்பது...." என்ற குற்றச்சாட்டை முருகன் வைக்கின்றார். இவை சமூகத்தின் உற்பத்திச் சக்திகள் இவற்றை எதிர்க்கக் கூடாது என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு கூறுகின்றார் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இன்றைய‌ சமூகத்தில் கம்யூனிஸ்டுகளின் பிரதான கடமை என்ன? உற்பத்திச் சக்திகளை ஊக்குவிப்பதா அல்லது உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதா அல்லது வர்க்க உணர்வூட்டி மக்களை ஆளும்வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்டி போராடுவதா? முதலாளித்துவமானது, இவற்றையெல்லாம் உற்பத்திச் சக்திகள் என்ற பெயரால் சமூகத்தில் திணிக்கின்றது. முதலாளித்துவத்தின் நலன்களுக்காக மட்டுமே இவற்றை செயல்படுத்துகின்றது. இத்தகைய 'சமூக நலம்பயக்கும் நடவடிக்கைகளில்' முதலாளித்துவ நலனும் சுரண்டலும் ஏகாதிபத்திய சுரண்டலும் மட்டுமே பிரதானமாக இருக்கும். இதனால் உற்பத்திச் சக்திகள் தங்குதடையின்றி வளர்க்க முடியுமா அல்லது இவற்றின் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க இயலுமா என்பது கேள்விக்குறியே. இன்றைய நிலைமைகளில் உற்பத்திச் சக்திகளை வளர்ப்பதற்கு முன்நிபந்தனை உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க வேண்டும். உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றால், உழைக்கும் வர்க்கங்களை அணிதிரட்டி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடவேண்டும் என்பது மட்டுமே நமது திட்டமாக இருக்க வேண்டும்.

ஆக உழைக்கின்ற மக்களை அணிதிரட்டவும் அரசதிகாரத்திற்கு எதிராகவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் போராட தயாராக வேண்டும் என்பதையும், இதன் மூலம் மட்டுமே நிலவிவரும் பிற்போக்கான உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்க முடியும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.‌

Comments

7 comments

7
natarajan
சரியான அடிப்படை விசயத்தை விளக்கி உள்ளீர்கள்..நன்றி தோழர் நாகரத்தினம்.. ம.ஜ.இ.க கும்பலுக்கு ( மன்னிக்கனும்... கம்யுனிஸ்டுகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்பவர்களிடம் குறைந்த பட்சமாக சனநாயகம் -(உட்கட்சி சனநாயகம், சுயவிமர்சனம்:விமர்சனம் - )கூடஇல்லையென்றால் எரிச்சல் மண்டையை பிய்த்து கொண்டு வருகிறது) நல்ல பதிலை விளக்கதை கொடுத்துள்ளீர்கள்... இந்த உற்பத்தி சக்திகள் பற்றிய விமர்சனம் CPI, CPM கட்சிகளுக்கும் பொருந்தும்!
P ILANGO SUBRAMANIAN
பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
என்று வள்ளுவரின் கண்டனத்தைப் பெறுகிறார் கட்டுரையாளர். செய்யும் எனும் வாய்பாட்டு வினை முற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறார். மயில் ஆடும், குயில் பாடும் என்பதுதான்
சரி. மயில் ஆடச்செய்யும், குயில் பாடச்செய்யும் என்று எழுதுவது பிழை;அது வேறு பொருளைத் தரும்.அது போல் ஆதரிக்கச் செய்யும் என்பது பிழை; ஆதரிக்கும் என்பதே சரி. நிற்க.
வழா வழா வைக்கோல் படப்பு என்று அமைந்து விட்ட வார்த்தைக் கூளங்களில் இருந்து கட்டுரையின் மையக் கருத்தைப் பற்றிக் கொண்டு விட்டேன். கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது என்பது, உற்பத்தி உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வரும் வழி என்கிறார். உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க இவ்வளவு சுலபமான வழி இருக்கும் போது, மக்கள் ஜனனாயகப் புரட்சி தேவையற்றுப் போய் விடுகிறது! உற்பத்தி உறவுகளை மாற்றி அமைப்பது என்பது , இவர் எழுதுகிற கட்டுரையில் வார்த்தைகளை மாற்றி அமைப்பது போன்றது என்று கருதுகிறார் போலும்.

இவரது வாதம் சரி என்று கொண்டால், சாதிக் கலவரங்களை ஆதரிக்க வேண்டியது வரும். ஏனெனில் சாதிக் கலவரங்கள் உற்பத்தி உறவுகளில் மாற்றத்தைக் கோருகின்றன. முற்றிலும் பிறழ் புரிதல் அடிப்படையில் அமைந்த இக் கட்டுரை மார்க்சியத்துக்கு எதிரானது. கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது; மார்க்சியத்துக்கும் எதிரானது.
இறுதியாக, புரட்சி என்பது மாலை நேரத்து விருந்து அல்ல என்பதை கட்டுரையாளர் உணரட்டும்.
BAGATHSINGH BARATHI
ம ஜ இ க அமைப்பின் மீதான விமர்சனகளுக்கு மறுப்பு மற்றும் விளக்கம் பின்வருமாறு.
1 ) அணு சக்தி அரசியலின் பன்முகத்தன்மையை ஒற்றையாக்கி விடுவதாகவும்,அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டுமே இறுதி பயனாளியாக்கி விடுவாதகவும் வைக்கப்படும் விமர்சனம் தவறானது.
நம் நாடு ஒரு அரைக்காலனிய ,அரை நிலபிரபுத்துவ நாடு என்பதே எங்கள் வரையறை. .இதன் அர்த்தம், நாடு பல ஏகாதிப்பத்திய நாடுகளின் வேட்டைக்காடாக உள்ளதும்,அது புதிய காலனிய வடிவில் அடிமைத்தனம் நிகழ்கிறதும் ஆகும்.அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமே இல்லை.இன்னும் முழுவதுமாக அமெரிக்க கட்டுப்பாட்டில் போகவில்லை.நீங்கள் சொல்வது அதீத ஏகாதிபத்திய கோட்பாட்டை முன்னிறுத்தி பிரசண்டா பாதையில் செல்ல கோருகிறது.இது மார்க்சியத்திற்கு எதிரானது .இந்திய அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் மற்றும் அணு சக்தி ஒப்பந்தம் மூலம்,அணுசக்தி சந்தையில் அமெரிக்க எஜமானன் அமெரிக்காவுக்கு சாதகமாக முடிவெடுக்க - கூடன்குள அணு உலை விசயத்தில் ,உதயகுமாரன் கும்பல் தலைமை தாங்கி நிற்பதும் கண்கூடு. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள முதாளித்துவ நெருக்கடியே,ஏகாதிபத்தியங்களின் இந்த நாடு பிடிக்கும் கொள்கை தீவிரமடைந்து வருகிறது..நாட்டின் அனைத்து துறைகளையும் தன கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெறியோடு ,தனது அடிவருடி மத்திய ,மாநில அரசுகள் மூலம் செயல் படுத்தி வருகிறது.இந்த எடுபிடி அரசுகளுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கவே..தனது நேரடி கைக்கூலி படை யான தொண்டு நிறுவங்களை எல்லா நாடுகளிலும் அமைத்து ..இவர்களின் மூலம் அரசுகளுக்கு தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நெருக்கடி தந்து வருகிறது.இதன் ஒரு பகுதியே அணு சக்தி துறையில் உதயகுமாரன் கும்பல் மூலமாக தனது ஆதிக்கத்தை,நிறுவ துடிக்கிறது.கடுமையான உற்பத்தி தேக்க நெருக்கடியில் சிக்கயுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் 1.5 % வளர்ச்சியில் வீழ்ச்சி அடைந்துள்ளன.இதன் விளைவாக எரி சக்தி தேவையும் குறைந்து வருவதால் ,அணு உலை உள்ளிட்ட எல்லா துறைகளையும் ,நடத்த முடியாமல் மூடிவருகின்றன.மேலும்,அவர்களின் லாப வெறி மற்றும் நெருக்கடி இரண்டும்..மூன்றாம் உலக நாடுகளில் ..அணுசக்தி துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கீழ் கொணர முயற்ச்சிக்கும் ஒரு பகுதியாகவே,இந்திய அமெரிக்க ராணுவ மற்றும் அணு சக்தி ஒப்பந்தம் போடப்பட்டது.இன்று வரை இந்த ஒப்பந்தம் பற்றி வாயே திறக்காத இந்த கும்பல் ..உதயகுமாரன் காலச்சுவட்டில்,தனது அறக்கட்டளைக்கு ஏகாதிபத்திய நாடுகளிலுருந்து பணம் வருவதை ஒப்புகொண்டார் என்பதையும் செவி மடுக்கவில்லை.
2 )மத்திய ,மாநில அரசுகள்,ஏகாதிபத்திய மற்றும் அதன் தொண்டு நிறுவனங்கள் ,தரகு முதலாளிகள் ,நிலவுடமை ,ஆளும் வர்க்கங்கள் ஆகியவற்றுக்கு இடையே தான் கள்ள கூட்டணி உள்ளது.நாங்கள் நக்சல்பாரிகள்.உங்களைபோன்ற தேச துரோகிகளோ ,ஏகாதிபத்திய கைகூலிகளோ,திருச்சபையின் பாது காவலர்களோ நாங்கள் அல்ல..உங்களைபோல.உங்கள் கூட்டணியை உடைத்து நொறுக்கு வதே எங்களைபோன்ற புரட்சியாளர்களின் பணி.
3 ) உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டுமே பேசபடுகிறது.உற்பத்தி உறவுகள் பற்றி பேச வில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.இது முற்றிலும் ,(இவர்கள் போராட்டத்தை போலவே )அறிவியல் அற்ற வாதமாகும். இவரது புத்தியில் விளைந்த கோளாறை ,பொது புத்தியாக்க பார்க்கிறார்.
மாவோ வின் கூற்றை தலை கீழாய் திருப்புகிறார். இன்று ஏகபோக நிதி மூலதன கும்பல்கள் ,தீவிரமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண சக்தி அற்றவையாக மாறிவிட்டன.இவ்வாறு உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் ,உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கு இந்த நிதி மூலதன கும்பல்களே மாறிவிட்டன.இந்த நெருக்கடிக்கு ,அணு உலையை மூடுவது தீர்வாகாது.அது நெருக்கடியை தீவிரபடுத்தும்.மாவோ கூறுவது " உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி வேகமாக அடைந்தால் -உற்பத்தி உறவுகளோடு பொருந்தி வாரா.மேல் கட்டுமானம் உற்பத்தி உறவுகளுடன் பொருந்தி வராது.இந்த சந்தர்ப்பத்தில், உற்பத்தி சக்த்திகளுடன் பொருந்தி வரும் வகையில் ,மேல் கட்டுமானமும் உற்பத்தி உறவுகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்" என்றும் முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும்.அதன் பிறகே உற்பத்தி சக்த்திகள் பரந்த அளவில் வளர்ச்சி அடைய முடியும்.இது ஒரு உலகு தழுவிய விதி."எனவும் கூறுகிறார்.உற்பத்தி சக்த்திகளுக்கு பொருந்தி வரும் வகையில் என்பதை கள்ளத்தனமாக மறைக்கிறார்.இவர் உற்பத்தி சக்த்தியை முடக்க வேண்டும் என்ற மார்க்சியமற்ற வாதத்தை வைக்கும் அதே வேளையில் ,வெறும் உற்பத்தி உறவுகளை மாற்றி அமைத்தால் போதும் என்று சொல்கிறார்.
BAGATHSINGH BARATHI
இவர் உற்பத்தி சக்த்தியை முடக்க வேண்டும் என்ற மார்க்சியமற்ற வாதத்தை வைக்கும் அதே வேளையில் ,வெறும் உற்பத்தி உறவுகளை மாற்றி அமைத்தால் போதும் என்று சொல்கிறார்.ஆனால் இந்த உற்பத்திம்சத்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது .ஏகபோக நிதி மூலதன கும்பல்தான்..அதாவது ஏகாதிபத்திய நாடுகள் ,அதன் அடிவருடி மத்திய மாநில அரசுகள் ,அதன் நேரடி கைகூலிகளான தொண்டு நிறுவனங்கள் ,தரகு முதாலாளிகள் மற்றும் நிலவுடமையாளர்கள்.எனவே இந்த ,புதிய காலனிய உற்பத்தி உறவுகளுக்கு முடிவு கட்டி ,சோசலிசம் மற்றும் நாடுகளின் விடுதலை ,ஜனநாயகத்தை உருவாக்குவது என்ற திசையில் தான் உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியை முழுமையாக கட்டவிழ்த்து விடவும் முடியும்.
எனவே முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அதற்காக,அதுவரையில் வளர்ந்து வரும் (அணுசக்தி மாதிரியான ) உற்பத்தி சக்த்திகளை முடக்க வேண்டும் என்பது மார்க்சிய அறிவியலுக்கு எதிரான வாதம்.உற்பத்தி உறவுகளை மாற்றுவதே ,புதிய ஜனநாயக புரட்சி.அத்தகைய புரட்சியை எங்கள் உயிரையே ஈன்று படைப்போம்.உற்பத்தி உறவுகளை மாற்றவல்லது உதயகுமாரன் ,அன்ன ஹசாரே,கேஜ்ரிவால்,அருந்ததிராய்,மேதா பட்கர்,தொண்டு நிறுவனங்களின் எதிர் புரட்சி அல்ல..திருச்சபைகள் அல்ல..உங்களைபோன்ற ஏகபோக நிதி மூலதன கும்பலின் கால் நக்கி பிழக்கும் ஈன பிறவிகளால் அல்ல.புரட்சி பொது மக்களின் திருவிழா.ஒருவர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் நடவடிக்கை.அப்போது உங்களையும் சேர்த்தே தூக்கி எறிவோம்.அப்பகுதி மக்களின் அறியாமை பயன் படுத்தி ,அணு உலை பற்றிய பீதி பரப்பி ,மதம் எனும் அபினை அப்பத்தின் வழியாக ஊட்டி ,அவர்களை மயக்கத்தில் வைத்திருக்கும் இந்த கைக்கூலி கும்பலை கைது செய்ய கோருவதும் ,மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மாநில அரசாங்கம் தீர்க்க போராடுவதும் ,அணு உலையை திறக்க போராடுவதும் தேச பக்தர்களின் கடமையாகும்.பாசிசத்தோடு உறவு கொண்டிருந்த வாடிகன் (போப்),தலைமை தாங்கி ,பாசிசத்தை வீழ்த்திய சக்திகளை நோக்கி சாபம் விட தொடங்கினர்.அணு ஆற்றலுக்கு எதிராக கடும் போரிட்டனர்.நெருப்பு,நிலக்கரி போன்ற ஆற்றல்களை மனிதன் கண்டறிந்த போது அதை பிற்போக்குவாதிகள் எதிர்த்தே வந்தனர்.அதைப்போலவே ,வாடிகன்(போப்பின்) தொடர்ச்சியாக,கலிலியோ மீது கல்லெறிந்த பாதிரியார்களின் தொடர்ச்சியாக ,டார்வினை சாத்தானாக சித்தரித்த திருச்சபைகளின் தொடர்ச்சியாக...இப்போது இவர்கள்.ஆனால் அறிவியலே இறுதியில் வெல்லும்,மார்க்சியமே வெல்லும்.
BAGATHSINGH BARATHI
நீங்கள் பேசுவது அறிவியலுக்கு எதிரானது.அறியவொண்ணா வாதம்.உலகின் எல்லா பொருளும் அறிய கூடியதே.அறிய முடியாத பொருள் என ஏதும் இல்லை.அறியவேண்டிய பொருள்தான் உள்ளன.பொருளை அறியமுடியாது என்பது ..மத,கடவுள் நம்பிக்கைக்கு இட்டு செல்லும்.அல்லது மத ,கடவுள் நம்பிக்கை கொள்வோர் இவ்வாறு பேசுவர்.நெருப்பை கண்டு பயந்த மனிதன்,பின்னால் நெருப்பையே தனது கைக்குள் கையாள கற்றான்.மின்சாரம் கூட ஆபத்தானதுதான்.அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என சிந்திப்பதே அறிவியல்.அணு உலை வேண்டாம் என கூறிக்கொண்டு அதை ஆராய்ச்சி செய்ய முடியாது.தோரிய பயன்பாடு,அணுக்கரு இணைவு என அறிவியல் வளரும்போது,,மதவாதிகளைபோல,ஏகாதிபத்திய நிறுவனங்களின் அடிவருடிகளைபோல ..பேசாதீர்கள்.அறிவியலே இல்லாத உலகு எது? கிரீன் பார்ட்டி NGO வின் மூளையான உதயகுமரனை இன்னுமும் நம்புவர்கள் எந்த வகை என்று நான் சொல்ல வேண்டியதில்லை.மக்களின் அறியாமை இருள் ,உதயகுமார் கும்பல் அவர்களை சூழ்ந்துள்ள வரை அகலாது.
BAGATHSINGH BARATHI
யாருக்காக களமாடுகிறார்கள் இந்தப் போராட்டகாரர்கள். அறிவியலை காலங்காலமாய் எதிர்க்கும் சர்சு பிசப்புகளும், கத்தோலிக்க பாதிரிகளும், அமெரிக்க NGOகளின் பின்னணியில் நடக்கும் போராட்டம். இப்போராட்டத்தின் நியாயத்தை இதுவே உணர்த்துகிறது. யாரு போட்டாலும் குண்டு வெடிக்கும் என்று கூறும் இவர்கள்... அமெரிக்க உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் இந்தியாவை சுறையாடும்போது எங்கே சென்றனர், இந்த சூறப்புலிகள்!! அடக்குமுறையாளர்கள் (ஏகாதிபத்தியங்கள்)ஆயுதங்கள் வைத்திருக்கும் வரை, போராடுபவர்களிடம் ஆயுதம் இருந்தே தீர வேண்டும் என்பது புரட்சியின் நீயதி. இந்திய அரசுக்கு எதற்கு அணு குண்டு.. தன் மக்களை அடக்கவா? தன் மீதே அந்த வர்க்கம் குண்டு போட்டுக்கொன்றுவிடுமா? அப்படியென்றால் யாரை எதிர்த்து அதற்கு குண்டு தேவைப்படுகிறது? மற்ற ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்கு குண்டு தேவைப்படுகிறது என்பதே உண்மை. ஆண்டானின் ஆயுதம் தறித்திருக்கும்போது அடிமையிடம் ஆயுதம் பறிக்கக் கோருவது உங்களைப் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு வேண்டுமானால் நியாயமாய் இருக்கலாம், போராடும் மக்களுக்கு கவைக்கு உதவாது!!
cheran
மத்திய ,மாநில அரசுகள்,ஏகாதிபத்திய மற்றும் அதன் தொண்டு நிறுவனங்கள் ,தரகு முதலாளிகள் ,நிலவுடமை ,ஆளும் வர்க்கங்கள் ஆகியவற்றுக்கு இடையே தான் கள்ள கூட்டணி உள்ளது.நாங்கள் நக்சல்பாரிகள்.உங்களைபோன்ற தேச துரோகிகளோ ,ஏகாதிபத்திய கைகூலிகளோ,திருச்சபையின் பாது காவலர்களோ நாங்கள் அல்ல..உங்களைபோல.உங்கள் கூட்டணியை உடைத்து நொறுக்கு வதே எங்களைபோன்ற புரட்சியாளர்களின் பணி.
3 ) உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டுமே
பேசபடுகிறது.உற்பத்தி உறவுகள் பற்றி பேச வில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.இது முற்றிலும் ,(இவர்கள் போராட்டத்தை போலவே )அறிவியல் அற்ற வாதமாகும். இவரது புத்தியில் விளைந்த கோளாறை ,பொது புத்தியாக்க பார்க்கிறார்.
மாவோ வின் கூற்றை தலை கீழாய் திருப்புகிறார். இன்று ஏகபோக நிதி மூலதன கும்பல்கள் ,தீவிரமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண சக்தி அற்றவையாக மாறிவிட்டன.இவ்வாறு உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் ,உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கு இந்த நிதி மூலதன கும்பல்களே தடையாக மாறிவிட்டன.இந்த நெருக்கடிக்கு ,அணு உலையை மூடுவது தீர்வாகாது.அது நெருக்கடியை தீவிரபடுத்தும்.மாவோ கூறுவது " உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி வேகமாக அடைந்தால் -உற்பத்தி உறவுகளோடு பொருந்தி வாரா.மேல் கட்டுமானம் உற்பத்தி உறவுகளுடன் பொருந்தி வராது.இந்த சந்தர்ப்பத்தில், உற்பத்தி சக்த்திகளுடன் பொருந்தி வரும் வகையில் ,மேல் கட்டுமானமும் உற்பத்தி உறவுகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்" என்றும் முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும்.அதன் பிறகே உற்பத்தி சக்த்திகள் பரந்த அளவில் வளர்ச்சி அடைய முடியும்.இது ஒரு உலகு தழுவிய விதி."எனவும் கூறுகிறார்.உற்பத்தி சக்த்திகளுக்கு பொருந்தி வரும் வகையில் என்பதை கள்ளத்தனமாக மறைக்கிறார்.இவர் உற்பத்தி சக்த்தியை முடக்க வேண்டும் என்ற மார்க்சியமற்ற வாதத்தை வைக்கும் அதே வேளையில் ,வெறும் உற்பத்தி உறவுகளை மாற்றி அமைத்தால் போதும் என்று சொல்கிறார்.ஆனால் இந்த உற்பத்திம்சத்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது .ஏகபோக நிதி மூலதன கும்பல்தான்..அதாவது ஏகாதிபத்திய நாடுகள் ,அதன் அடிவருடி மத்திய மாநில அரசுகள் ,அதன் நேரடி கைகூலிகளான தொண்டு நிறுவனங்கள் ,தரகு முதாலாளிகள் மற்றும் நிலவுடமையாளர்கள்.எனவே இந்த ,புதிய காலனிய உற்பத்தி உறவுகளுக்கு முடிவு கட்டி ,சோசலிசம் மற்றும் நாடுகளின் விடுதலை ,ஜனநாயகத்தை உருவாக்குவது என்ற திசையில் தான் உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியை முழுமையாக கட்டவிழ்த்து விடவும் முடியும்.
எனவே முதலில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.அதற்காக,அதுவரையில் வளர்ந்து வரும் (அணுசக்தி மாதிரியான ) உற்பத்தி சக்த்திகளை முடக்க வேண்டும் என்பது மார்க்சிய அறிவியலுக்கு எதிரான வாதம்.உற்பத்தி உறவுகளை மாற்றுவதே ,புதிய ஜனநாயக புரட்சி.அத்தகைய புரட்சியை எங்கள் உயிரையே ஈன்று படைப்போம்.உற்பத்தி உறவுகளை மாற்றவல்லது உதயகுமாரன் ,அன்ன ஹசாரே,கேஜ்ரிவால்,அருந்ததிராய்,மேதா பட்கர்,தொண்டு நிறுவனங்களின் எதிர் புரட்சி அல்ல..திருச்சபைகள் அல்ல..உங்களைபோன்ற ஏகபோக நிதி மூலதன கும்பலின் கால் நக்கி பிழக்கும் ஈன பிறவிகளால் அல்ல.புரட்சி பொது மக்களின் திருவிழா.ஒருவர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் நடவடிக்கை.அப்போது உங்களையும் சேர்த்தே தூக்கி எறிவோம்.அப்பகுதி மக்களின் அறியாமை பயன் படுத்தி ,அணு உலை பற்றிய பீதி பரப்பி ,மதம் எனும் அபினை அப்பத்தின் வழியாக ஊட்டி ,அவர்களை மயக்கத்தில் வைத்திருக்கும் இந்த கைக்கூலி கும்பலை கைது செய்ய கோருவதும் ,மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மாநில அரசாங்கம் தீர்க்க போராடுவதும் ,அணு உலையை திறக்க போராடுவதும் தேச பக்தர்களின் கடமையாகும்.அணு உலையை மூடு என்பது ,பாசிசத்தோடு உறவு கொண்டிருந்த வாடிகன் (போப்),தலைமை தாங்கி ,பாசிசத்தை வீழ்த்திய சக்திகளை நோக்கி சாபம் விட தொடங்கினர்.அணு ஆற்றலுக்கு எதிராக கடும் போரிட்டனர்.நெருப்பு,நிலக்கரி போன்ற ஆற்றல்களை மனிதன் கண்டறிந்த போது அதை பிற்போக்குவாதிகள் எதிர்த்தே வந்தனர்.அதைப்போலவே ,வாடிகன்(போப்பின்) தொடர்ச்சியாக,கலிலியோ மீது கல்லெறிந்த பாதிரியார்களின் தொடர்ச்சியாக ,டார்வினை சாத்தானாக சித்தரித்த திருச்சபைகளின் தொடர்ச்சியாக...இப்போது இவர்கள்.ஆனால் அறிவியலே இறுதியில் வெல்லும்,மார்க்சியமே வெல்லும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.