எதிர்பார்த்தது போலவே அணு உலை பாதுகாப்பானது என்று ஜெ அறிவித்துவிட்டார். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவிற்குப் பின் வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்க ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளே ஜெவின் நயவஞ்சகம் அம்பலமானது.

அடுத்த கணம் பத்து பேர் கைது.. 144 தடையுத்தரவு… கடலோரக் காவல் படை கண்காணிப்பு.. கூடங்குளம் நோக்கி மக்கள் அணி திரளல் என்று செய்திகள் வருகின்றன. காலவரையற்ற உண்ணாநிலையை போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தக் கட்டுரை எழுதி முடிக்கப்படுமுன், அல்லது இதனை நீங்கள் படிக்கும் நேரத்தில் நிறைய மாறுதல்கள் வந்துவிடலாம். ஆனால், எதுவும் நமக்கு நல்ல செய்தியாக இருக்காது.

இன்று மாலை மதுரையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அணு உலை எதிர்ப்பு மக்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அணு உலையைத் திறக்க அனுமதிக்காதே என்று கோரவிருந்த ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டமாக மாறியது. (அதில் நானும், நான் சார்ந்த எம்எல் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினேன்.)

கூடங்குளம் போராட்டம் இரண்டு (ஒன்றிணைந்த) காரணங்களால் சிறப்பு மிக்கது என்பது என்னுடைய கருத்து. இவ்வளவு நீண்ட நாட்கள் நடைபெற்ற, ஆனால், பிரதானமான எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் பெறாத போராட்டம் என்பது அனைவ்ரும் அறிந்த சிறப்பம்சம்.

மற்றொரு சிறப்பம்சம்தான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இந்தப் போராட்டம் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்று நாராயணசாமி வகையறாக்கள் சொல்கிறார்கள். அது உண்மையில்லை. கூடங்குளம் போராட்டம் உண்மையில் வளர்ச்சிக்கான போராட்டம். மக்கள் கோரும் வளர்ச்சிக்கான போராட்டம்.

யாருடைய சதியினாலோ அல்ல, மாறாக, மக்கள் எவ்வகை வளர்ச்சி கோருகிறார்களோ அதனை அளிக்கவில்லை என்பதால் இப்போராட்டம் துவங்கியது. இதுதான் மிகவும் கவனத்திற்குரிய செய்தி.

இந்திய அரசு மக்களுக்கான வளர்ச்சியை மறுக்கிறது. மாறாக, முதலாளிகளின்- அதிலும் குறிப்பாக பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுடன் கைகோர்த்துக்கொண்ட உள்நாட்டு முதலாளிகளின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. இதில் எந்தவித விதிவிலக்கும் இல்லை.

உதாரணமாக, இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள நீர்க்கொள்கையை எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கை சுற்றுச்சூழல் தேவைக்குப் போக எஞ்சியுள்ள நீர் அனைத்தையும் வணிகப் பண்டமாகப் பார்க்க வேண்டும் என்றும் நீரிலிருந்து கூடுதல் பலன் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும் என்று சொல்லி இறுதியில் முதலாளிகளின் லாபவேட்டைக்கான பொருளாக நீரை மாற்றுகிறது நீர்க்கொள்கை 2012. குடிக்கக் கூட நீர் கொடுக்காத அரசாங்கம் இந்திய நீர்வளத்தை பன்னாட்டு இன்னாட்டு முதலாளிகளுக்குத் தானம் செய்கிறது.

மக்களுக்கு இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையில்லை. உண்மையில் மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் மக்களின் பணம் லேப்டாப் உற்பத்தி செய்யும் அல்லது மிக்சியை உற்பத்தி செய்யும் முதலாளிக்குப் போய் சேர்கிறது… அதாவது மூலதனத்தின் வளர்ச்சிக்குப் போய் சேர்கிறது. அதில் உப விளைவாக, அரசியல் கட்சிகளுக்கு ஓட்டும், ஓட்டு வாங்கப் பணமும் கிடைக்கிறது.

விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறதே, அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் என்ன செய்துள்ளது அரசு? ஒன்றுமில்லை. மாறாக, விவசாய எந்திரங்களை உற்பத்தி செய்யும் முதலாளிகளுக்கு அரசுப் பணம்- அதாவது மக்கள் பணம்- போய் சேரும் வகையில் விவசாயத்தை யந்திரமயமாக்க ஜெ. அரசும் காங்கிரஸ் அரசும் திட்டம் போட்டு செயல்படுகின்றன.

இப்படி நிறைய சொல்லலாம். அதில் ஒன்றுதான் அணு உலை. அணு உலை தொழிலில் உள்ளவர்களின் அதாவது அணு முதலாளிகள் மற்றும் கலாம் போன்ற தொழில்நுட்ப சேவகர்களின், லாப வேட்டைக்கு இந்தியாவைத் திறந்துவிட்டுள்ளார், IMF அளித்த பிரதமமந்திரி.

அன்று இராஜாக்கள் இந்திய மண்ணை கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றார்கள். இன்று பிரதமமந்திரிகள், முதலமைச்சர்கள் விற்கிறார்கள்.

ஆக, கூடங்குளம் பிரச்சனை வெறும் அணு உலை பிரச்சனையில்லை. மாறாக, அது வளர்ச்சி யாருக்கு என்ற பிரச்சனை. வளர்ச்சி எந்த திசையில் என்ற கேள்வியே அது.

முதலாளித்துவத்தின் நலனுக்காக இந்தியாவின் மண்ணும் நீரும் வானும் உயிர்களும் பலியாக வேண்டுமா? அல்லது மக்களின் நலனுக்காக, வளமான, தரமான, நிம்மதியான வாழ்க்கையை இந்தியர்கள் பெற வேண்டுமா என்ற இரண்டு கேள்விகள் மோதிக்கொள்கின்றன.

முதலாளித்துவப் பாதையில்தான் வளர்ச்சி என்பதில் அனைத்து முதலாளியக் கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன.

கருணாநிதி அணு உலையை எதிர்த்துவிட்டார் அதனால் ஜெ. ஆதரித்துவிடுவார் என்று சிறுபிள்ளைத்தனமாக நம்பியவர்கள் ஏமாந்துபோனார்கள். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை என்பதில் க.வும் ஜெ.வும் கூட்டாளிகள்.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் நிறத்தில், குணத்தில் மணத்தில் வேறுபட்டாலும் அதே ரத்தினம் பட்டணம் பொடிதான். இந்திய மக்களின் வளர்ச்சிக்கு இரண்டு கட்சிகளுமே வெடிதான்.

இந்த நான்கு கட்சிகளையும் அவற்றின் இடத்தைப் பிடிக்கப்போட்டியிடும் மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளையும் மறுத்தொதிக்கினால் மட்டுமே இந்திய மக்களுக்கான வளர்ச்சி உத்திரவாதம் ஆகும்.

கூடங்குளம் போராட்டம் மக்களின் வளர்ச்சியை முன்னிறுத்திய போராட்டம் என்பதால், அது தமிழக மக்களின், இந்திய மக்களின் போராட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. ஆனால், பல்வேறு அரசியல் சமூக வளர்ச்சி நிலைமைகளில் அது போராட்டக் குழுவினால் வழி நடத்தப்படும் போராட்டமாக இன்று இருக்கிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் கூடங்குளம் இரத்தக் களம் ஆகலாம். ஆனால், போராட்டம் தோற்காது. மாறாக அன்றுதான் மற்றொரு புதிய வடிவம் எடுக்கும்.

முதலாளித்துவ பாதையை மறுத்து மக்களின் வளர்ச்சியைக் கோரும் இந்திய மக்களின் போராட்டத்தின் அங்கமாக மாறும்..

இந்திய மக்களின் வளர்ச்சிக்கான இடதுசாரி ஜனநாயக அரசியலின் முன்னோடியாகவும், அங்கமாகவும், மக்கள் பெறப்போகும் இறுதி வெற்றியில் தனது வெற்றியையும் காண்பதாகவும் கூடங்குளம் போராட்டத்தின் வரலாறு நீளும்.

Comments

6 comments

6
ram
வந்துட்டாருய்யா மதிவாணன். வார்த்தைக்கு வார்த்தை புரட்சித்தலைவி அம்மா, அம்மாண்ணு ஜெயலலிதாவுக்கு வால் பிடிச்ச உதயகுமார் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியின் போலீஸ் அராஜகத்தை உணரவேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லது.

அணுமின்சாரத்தில் உங்களுக்கு நேர் எதிர் தரப்பானாலும், உங்களின் பொதுநலன் சார்ந்த கரிசனைகளை பகிர்ந்து கொள்பவன் என்பதால் சொல்கிறேன், இந்த பிரச்சினையில
ஜயலலிதாவின் அரசியலுக்கு நீங்கள் பகடைக்காயாக பயன் பட்டீர்கள் என்பது தான் என் கோபத்துக்கும் உங்களின் இன்றைய சோகத்துக்கும் காரணம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
Nuke Em
கூடங்குளம் போராட்டம் - நாம் கற்க வேண்டிய பாடம்

//…முன்னால் நாலைந்து போராட்டக்குழுவினர் (பெரும்பாலோனோர்க்கு 50 வயது) கைலி கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ரவுசு விட்டுக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று போலிசுக்காரங்களை இந்த இடத்திலே விட்டிருக்கிறோம் என்பதுபோல் இருந்தது அவர்களது தோரணை. அசந்துவிட்டோம். கூடங்குளம் அணுமின் நிலைய வாயிலில் இரண்டு செக்போஸ்ட்கள். ஒன்று போலீஸ் செக்போஸ்ட். மற்றொன்று கூடங்குளம் மக்களின் செக்போஸ்ட். மக்களின் செக்போஸ்ட்டைத் தாண்டி, அணுமின் நிலையத்திற்குள் வேலை பார்க்க யாரும் போய்விட முடியாது. முன்பு பத்தாயிரம் வேலை பார்த்த இடத்தில், இப்போது பராமரிப்பு பணிகளுக்காக 90 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள் மக்கள்.
இத்தனை போலிசு இருக்காங்களே பயமில்லையா என்று கேட்டபோது ஒரு பெருசு பதில் சொன்னார்: "இவங்க எத்தனை பேரைச் சுடுவாங்க... அதுவுமில்லாம அணு உலை திறந்தா எப்படியும் கொஞ்சம் கொஞ்சமா சாகப்போகிறோம். அதுக்கு துப்பாக்கி குண்டுலே ஒரே தடவையா நிம்மதியா போயிருலாம்"
//

மேலே இருப்பது, மார்ச் 9 ம் தேதி திரு. மதிவாணன் கூடங்குளத்திற்கு விசிட் அடித்து எழுதியது. சரியாக பத்தே நாளில் நிலைமை தலை கீழ். இப்போ போய் போலீஸை அனுமதிப்பது பெருசுகளா, இல்லை பெருசுகளை அனுமதிப்பது போலீஸா ? என்று தெளிவாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சி.மதிவாணன்
ராம்.. மறுபடியும் வந்தேனையா மதிவாணன்..
உங்கள் கோபம் புரிகிறது ராம். ஆனால், அதற்கு இலக்கு நானோ அல்லது என்னைப் போன்றவர்களோ அல்ல. ஜெவின் உள்நோக்கை நன்கு புரிந்தவன் நான். தனது அரசியல் கோணத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டிக்கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது காங்கிரஸ் எதிப்பை மக்களின் காங்கிரஸ் எதிர்ப்போடு இனங்காட்டி எதிர்வரும் மத்திய அரசில் செல்வாக்கு செலுத்துவதே அவர் நோக்கம். அதனை அவர் அவர் கட்சியின் பொதுக்குழுவில் தெளிவாகச் சொல்லியுள்ளார். ஏறக்குறைய காங்கிரஸ் தலைமை அரசில் க பங்கெடுத்தது போன்றதுதான் அவருடைய வருங்கால பங்கெடுப்பாகவும் இருக்கும். அதனால்தான் “முதலாளித்துவப் பாதையில்தான் வளர்ச்சி என்பதில் அனைத்து முதலாளியக் கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. கருணாநிதி அணு உலையை எதிர்த்துவிட்டார் அதனால் ஜெ. ஆதரித்துவிடுவார் என்று சிறுபிள்ளைத்தனமாக நம்பியவர்கள் ஏமாந்துபோனார்கள். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை என்பதில் க.வும் ஜெ.வும் கூட்டாளிகள்”, என்று நான் எழுதினேன்.
ஆனால், என்னைப் போன்றோர்களை விடுத்துப் பார்த்தால் கூடங்குளம் களத்தில் நிற்கும் போராட்டக்காரர்களின் நிலைமை வேறு. அவர்கள் இப்போது சுதந்திரமான முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் சக்தியின் ஆதரவு எதனையும் காணவில்லை. அதனால், ஜெவை நம்புகிறார்கள். அல்லது நம்புவது போல நடிக்கிறார்கள். எப்படியிருந்தாலும் அவர்களின் போராட்டத்திற்கு அது பாதிப்பையே ஏற்படுத்தும்.
கூடங்குளம் மக்களின் எதிர்ப்பை, முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கான எதிர்ப்பை எப்படி முதலாளித்துவ வளர்ச்சிப்பாதைக்கான இந்திய மக்களின் எதிர்ப்போடு இணைப்பது?
இது போராட்டக்குழுவுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எனக்கும், நமக்கும் முன்னே உள்ள சவால். அதனால்தான் கூடங்குளம் போராட்டம் நீளும் என்று நான் எழுதினேன்.
Paa . UTHIRAPATHI
Dear Comrade
what about so called CPI & CPI(M)
they also changed to Capitalists
suppose to indicate & expose them also

Please continue & follow up this issues how so called all commusists
doing in this issues Expect Mls

thanks
Pathi
ram
சென்ற முறை போலல்லாமல் என்னை மதித்து எனது கேள்விகளுக்கு பதிலளித்த மதிவாணன் அவர்களுக்கு நன்றி. ஆனால் உங்கள் பதில் எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காரணம் என்னுடைய கேள்வி இவ்வளவு சிக்கலான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் உதயகுமார், ஆரம்பம் முதலே, பேட்டிக்கு பேட்டி புரட்சித்தலைவி அம்மா என்று தான் முதல்வரை விளித்தார். ஜெயலலிதா அவர்கள் என்று கூட சொல்லத்தயாரில்லை. இதை மறுப்பீர்களானால் அவர் பேட்டியின் ஒலி ஒளிநாடாக்களை இணையத்தில் நீங்கள் தேடுங்கள். கிடைக்கும். கூடங்குளம் அணு உலையை திமுக தலைவர்
மு கருணாநிதி ஆதரித்ததும் அந்த பகுதியில் இருந்த திமுக கொடிகள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. திமுக கரை வேட்டிகள் பகிரங்கமாக எரிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், கீற்று நந்தனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் படி "அந்த எளிய மனிதர்களின் சொல்லாடல்களில் நாராயணசாமி, மன்மோகன் சிங், அப்துல் கலாம், கருணாநிதி, சு.சுவாமி எல்லாம் அடிக்கடி வந்துபோகிறார்கள். அற்பப் புழுக்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை". அணு மின்சாரத்தை அதரிப்பவர்கள் அனைவரும் அற்பப்புழுக்கள் என்கிற மனோ நிலையை அந்த மக்கள் தாமாகவே அடைந்தார்களா அல்லது உதயகுமார் உள்ளிட்ட "திடீர் தலைவர்கள்" உருவாக்கினார்களா? அப்துல் கலாமிலிருந்து கருணாநிதி வரையானவர்களை அணு உலை ஆதரவு, எதிர்ப்பு என்கிற ஒற்றை அளவுகோலை வைத்து அற்பப்புழுக்களாக வடிவமைத்து நிலைநாட்டிய பெருமை உதயகுமார் வகையறாக்களுக்கே உண்டு என்பதே எனது குற்றச்சாட்டு. இவர்களையெல்லாம் இப்படி வெறுக்கச்செய்தவர், ஜெயலலிதாவை எப்படியெல்லாம் புகழ்ந்தார், இன்றும் புகழ்கிறார் என்பதற்கு அவரது கடந்த கால பேட்டிகள், அவர் அப்போது பயன்படுத்திய ஜெயலலிதா போற்றிகள் எல்லாம் இன்றும் இணைய சான்றுகளாக இருக்கின்றன, இத்தனைக்குப்பிறகும் கூடங்குளத்தை ஆதரிப்பதாக ஜெயலலிதா அறிவித்த பின்னர் உதயகுமார் அளித்த முதல் செவ்வியில் என்னகூறுகிறார், "தமிழக மக்களின் நல்வழ்வுக்காக பல்வேறு நல்லாட்சி சாதனைகளை செய்துவரும் அம்மா அவர்கள்" என்று தான் உதயகுமார் தனது எதிர்வினையை துவங்குகிறார். சமச்சீர்கல்வியில் துவங்கி, அண்ணா நூலக் மாற்றமாக தொடர்ந்து, 12000 மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி, ஆறு ஆதிதிராவிடர்களை போலீஸ் துப்பாக்கு முனையில் சொர்கத்துக்கு அனுப்பி "அம்மா செய்துவரும்" நல்லாட்சிக்கு உதயகுமார் வாசிக்கும் பாராட்டுப்பத்திரம் எனக்கு தலையை சுற்றவைக்கிறது. இதை சுட்டிக்காட்டினால் எனக்கு கீழ்கண்ட பதிலை நீங்கள் அளிக்கிறீர்கள். "கூடங்குளம் களத்தில் நிற்கும் போராட்டக்காரர்களின் நிலைமை வேறு. அவர்கள் இப்போது சுதந்திரமான முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் சக்தியின் ஆதரவு எதனையும் காணவில்லை. அதனால், ஜெவை நம்புகிறார்கள். அல்லது நம்புவது போல நடிக்கிறார்கள்". உங்களின் இந்த வரிகளை தயவு செய்து நீங்களே மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். நடிப்பை தொழிலாகவும் தனது அரசியல் மூலதனமாகவும் கொண்ட ஜெயலலிதாவிடம் கற்றுக்குட்டி உதயகுமார் வகையறாக்கள் நடித்து காரியம் சாதிக்க நினைக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வதை கேட்க எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது. உதயகுமார் உள்ளீட்ட உங்களைப்போன்றவர்கள் (கீற்று நந்தன் உட்பட) செய்யும் போராட்டங்கள் கடைபிடிக்கும் அரசியல் உத்திகள் அனைத்தும் அரைவேக்காட்டுத்தன்மையானவை மட்டுமல்ல, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற யாரை நீங்கள் கடுமையாக எதிர்த்து மாற்ற நினைக்கிறீர்களோ, அவர்களை வலுவடையவே செய்யும் என்பது தான் எனது கருத்து. திராவிட இயக்கத்தை எதிர்க்கும் இடதுசாரிகளும், தூய்மைவாத தமிழ்தேசியர்களும் (இவர்களை இந்துத்துவ ஜாதிவெறியர்கள் என்றே நான் கருதுகிறேன்) மிகப்பெரிய தவறு, திராவிட இயக்கம் மற்றும் கருணாநிதிக்கு மாற்று என்கிற கோணத்தில் அரசியல் கழிசடைகளையும் ஆதரிப்பது தான் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நிரூபணமாகிவரும் நிதர்சனம். கருணாநிதிக்கு மாற்றாக இடதுசாரி கல்யாணசுந்தரம் அவர்களால் வலுப்படுத்தப்பட்ட எம் ஜி ராமச்சந்திரனில் துவங்கி, இன்றைய தமிழக அரசியல் அதிசய கோமாளி விஜயகாந்த் வரை இதைத்தான் என்னைப்போன்றவர்கள் பார்க்கிறோம். விளைவு உங்களைப்போன்ற மதிக்கத்தக்க, ஆனால் ஆதரிக்க முடியாதவர்கலைப்பார்த்து ஆயாசப்படுகிறோம். ஜாதிக்கவ்ண்டன் பட்டியில் லக்னோக்காரன் என்கிற கட்டுரையில் வெளிப்பட்ட உங்களின் ஆழ்ந்த அரசியல் மற்றும் சமூக புரிதல் கூடன்குளம் உதயகுமார் விடயத்தில் காணாமல் போனது ஏன் தோழரே?
சி.மதிவாணன்
மதிப்பிற்குரிய ராம் அவர்களுக்கு,
உங்களின் கருத்துரை உங்களின் ஆழ்ந்த கவலையைக் காட்டுகிறது. எனது வேலை பளு, மின்வெட்டு போன்றவையால் மிகக் குறைவான நேரமே வலைமனையில் செலவு செய்ய நேர்கிறது. மிகவும் அத்யாவசியமான நேரத்தில் மட்டுமே பின்னூட்டு செய்கிறேன்.
"கூடங்குளம் களத்தில் நிற்கும் போராட்டக்காரர்களின் நிலைமை வேறு. அவர்கள் இப்போது சுதந்திரமான முதலாளித்துவ எதிர்ப்பு அரசியல் சக்தியின் ஆதரவு எதனையும் காணவில்லை. அதனால், ஜெவை நம்புகிறார்கள். அல்லது நம்புவது போல நடிக்கிறார்கள்" என்பதற்கான உங்கள் கருத்துரையைப் படித்தபின்பு பின்வருமாறு எழுதத் தோன்றுகிறது. “உண்மை மிக எளிமையானது… நம்ப முடியாத அளவுக்கு எளிமையானது”.
உங்களின் ஆயாசங்கள் நீங்கி நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்று உதிக்கும் என்று மட்டும் நான் குறிப்பிடமுடியும். என்ன நடந்திருக்கிறது என்பதை எதிர்காலம் காட்டும் என்ற நம்பிக்கையில்..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.