தொடர்புடைய படைப்புகள்

கடந்த 17.11.2012 அன்று செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியிருந்தீர்கள், தலித் மக்களுக்கு எங்களைப் போல் நன்மை செய்தவர்கள் யாரும் இல்லை என்று. மிக்க சந்தோசம் அய்யா! உங்களின் கடந்த கால செயல்பாடுகளை எண்ணி மிக்க மகிழ்வடைகிறோம். தமிழ்நாட்டிலே இன்று நாங்கள் மாலை அணிவிக்கும் அம்பேத்கரின் சிலைகளில் அதிகமான  சிலைகளை நிறுவியவ‌ரும் தாங்கள் தான். அதை எங்களால் மறக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையே எத்தனையோ மோதல்கள் இருந்தபோதும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் எனக்குக் குறைந்ததில்லை.

தங்களின் மாமல்லபுரம் மாநாட்டிலே தங்களின் முன்னிலையில் தோழர் காடுவெட்டி குரு பேசிய வன்முறைப் பேச்சைக் கேட்டு வருத்தப்படுவதை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. அதை விடக் கொடுமையானது அதை நீங்கள் கண்டிக்காமல் கன்னத்தில் கையை வைத்து ரசித்தது.

உங்கள் சமூகத்தால் நாங்கள் எத்தனையோ இழப்புகளை சந்தித்திருந்தாலும் தமிழ்ப் பாதுகாப்புக்காகவும் சமூக நல்லிணக்க‌த்துக்காகவும் உங்களோடு சேர்ந்து களமாடினோம். எல்லா மனக்கசப்புகளையெல்லாம் புதைத்துவிட்டு உங்களோடு கை கோர்த்தோம். எதற்காக? ஈழ விடுதலைக்காகவும், 3 தமிழர் உயிரைக் காக்கவும், மேலும் தமிழ்த் தேசியத்தை மீட்டெடுக்கவும் தான்.

தருமபுரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை நீங்கள் கண்டும் காணாததுமாக இருந்தது ஏன்? பாமகவிற்கும் இந்த வன்முறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று 10 நாட்கள் கழித்து அறிக்கை விடுகிறீர்கள். வன்னியர் சங்கத்துக்கும் இந்த வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்குமாயின் 10 நாட்கள் கழித்து அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன? அல்லது வன்முறையை நிகழ்த்திய வெறியாளர்களுக்கு நீங்கள் எந்தக் கண்டனமும் எழுப்பாதது ஏன்???

இன்று ஏதேதோ சொல்கிறீர்கள்.. காதல் திருமண‌ம் செய்வது சரியல்ல; அதனால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்; ஒருவேளை இந்தத் திருமணம் நடக்காமல் இருந்திருந்தால் இந்த வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று. இது எந்த விதத்தில் நியாயம் அய்யா? ஒரு சாதிமறுப்புத் திருமண‌த்திற்காக ஒரு சமூகத்தை அழிக்கலாமா? இது உங்களுக்கு எப்படி நியாயமாய்த் தெரிந்தது? உங்களிடம் எதை எதிர்பார்த்தோம்? ஒரே ஒரு கண்டனக்குரலும் தவிக்கும் என் சொந்தங்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தையும்தானே!

ஏன் ஒருவேளை உங்கள் சமூகத்தினரை திருப்திபடுத்துவதற்காக அமைதி காத்தீர்களா? இவற்றையெல்லாம் மறந்து விட்டு இன்று திருமா மீது பழி சுமத்துகிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? சாதி ஒழிப்புக்காக போராடும் ஒரே தலைவன் தம்பி திருமாவளவன் தான். இதை நான் சொல்லவில்லை; நீங்கள் தான் சொன்னது. திருமா சாதி வெறியைத் தூண்டுவதாக சொல்கிறீர்கள். என்ன சான்று இருக்கிறது, திருமா சாதி வெறியைத் தூண்டியதற்கு? உங்கள் தலைமையில் காடுவெட்டி குரு சொன்னதைப் போல சொன்னாரா அல்லது தருமபுரி குடிசைகளை எரித்தது போல் வன்னிய வீடுகளை எரித்தாரா?

சாதி ஒழிப்பையும் தமிழ்த்தேசியத்தையும் தன் மூச்சுக்காற்றாய் சுவாசிப்பவர் திருமா. இதை தாங்கள் அறிந்ததே.

தயவு செய்து இந்த வன்முறையை சாதியப் பார்வையோடும் அரசியல் பார்வையோடும் பார்க்காதீர்கள். சமூக நல்லிண‌க்கத்தோடு பாருங்கள் அய்யா!

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அண்ணன் பிரபாகரனையும் ஆதரிக்கும் நீங்கள் அவர்களின் கட்டாய விதியான சாதிமறுப்புத் திருமண‌த்தை எதிர்ப்பதன் மர்மம் தான் என்ன?

உங்ளுக்கு சாதிமறுப்புத் திருமனத்தில் உடன்பாடு இல்லையா அல்லது காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது அய்யா!

உங்களின் இயக்கத் தோழர்கள் எல்லாம் இணையத்திலே சொல்கிறார்கள், 'நாங்கள் பெற்றோரின் சம்மதத்தோடு கூடிய சாதிமறுப்புத் திருமணத்தை ஆதரிப்போம்' என்று. இது உண்மையா என்பதை அறிக்கையிடுங்களேன் பார்ப்போம்!

இந்த இரு சமூகமும் எனக்கு இரு கண்கள்; எனக்கு சாதியப் பார்வை இல்லை என்றீர்களே, அப்படியிருக்க ஏன் இந்த இரு சமூகமும் ஏன் பெண் கொடுத்து பெண் எடுக்கக்கூடாது! இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் ஏன் தலைமை ஏற்கக் கூடாது?

இதோ இத்தனை இழப்புகளையும் மறந்து  சமூக நல்லிண‌க்கத்துக்காக உங்களோடு கை கோர்க்கிறோம், வாருங்களேன்.

அய்யா பாதிக்கப்பட்ட எம் சொந்தங்களுக்குத் தேவை நீதியும் ஆறுதல் வார்த்தைகளும் தான். மேலும் மேலும் உங்கள் வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்!

வாருங்களேன்... தலித்துகளும் வன்னியர்களும் உறவுகளாய் மாறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நீங்கள் சாதியவாதியா அல்லது சமூகவாதியா என்பதை நிரூபிக்க இதோ ஒரு வாய்ப்பு நீங்களே சொல்லுங்கள் உங்களின் நிலைபாட்டினை!

சாதி ஒழிப்பையும் தமிழ்த் தேசியத்தையும் மீட்டெடுக்க நாங்கள் தயார்!! நீங்கள் தயாரா? 

- கீழ்.கா.அன்புச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

8 comments

8
kalai
மொன்ன தனமான விமர்சனம் வைக்காதீர்கள்.
pudhiya dravidan
எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடும் ராமதாசு, இந்த விடயத்தில் அமைதிகாத்ததன் மர்மம்தான் எனன்? அந்த அமைதியே, அப்பன் குதிருக்குள் இல்லை கதையா, அவரை போட்டு கொடுத்துவிட்டது. அடுத்து ஆட்சி கட்டிலில் அமர்வேன் என 'கன' காணும் ராமதாசு, எந்த நோக்கத்தில் இப்படி உளறுகிறார்? சாதி மறுப்பு திருமணத்தைக்கூட ஏற்றுக்கொள்ள மனமில்லாத ராமதாசு, தனது சாதி ஓட்டை விட்டுவிட மனமில்லாமல், பயத்தில், எப்படி திருமாவை குறை கூற முயற்சிக்கிறார் என்பது மட்டும் உண்மை. கனவு காண்பது ஆழ் உறக்கதின் அறிகுறி, ராமதாசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். அவரை யாரும் எழுப்பதீர்!!!
kasimedumannaru
சாதியை வெறுத்த காதல் திருமணங்களாலேயே சாதியை ஒழிக்க முடியும். அய்ந்து ஆண்டுகள் அறிவியலைப் படித்து அடித்தட்டு மக்களுக்கு மருத்துவத் தொழிலைச் செய்து நற்பெயரைச் சம்பாதித்த மருத்துவர் அய்யா அவர்கள் இப்படி பொறுப்பற்று பேசுவது முற்போக்காளர்களுக்கு ஏமாற்றமே! இந்த கேடுகெட்ட சாதியை, மனிதர்களை தினமும் கொல்லும் சாக்கடையான மதங்களை குழி தோண்டிப் புதைக்க தந்தை பெரியார் போன்ற ஒரு உன்னத தலைவன் தமிழகத்துக்குக் கிடைப்பாரா என்பதே மனிதர்களை நேசிப்பவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும்! சாதியால் செத்து மடியும் தமிழனை, தமிழர்களாக இவராவது ஒன்று சேர்க்க மாட்டாரா என்று இவரை ஏக்கத்துடன் பார்த்தால், இவரும் சாதிச்சாக்கடையை மனதில் சுமக்கும் ஒரு பிறவிதானா? தமிழனை யார்தான் மீட்டெடுப்பது?
tksureshkumar
அற்ப்புதமான... அதே சமயத்தில் யாருக்கும்... எந்த இயக்கத்துக்கும்...எந்த சமயத்திலும் வருத்தம் ஏற்படாது வரைமுறை தவறாது பேசிய உங்கள் வார்த்தைகளை நானும் கேட்டேன். உள்ளது உள்ளபடி பேசியதற்கு நன்றி. இன்னும் எத்தனை கேள்விகளால் மருத்துவர் அவர்களை நியாய தராசின் முன் தூக்கி நிறுத்தினாலும் அதற்க்கு சரியான பதில் இல்லாமல் தவிப்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு சமுதாய மக்களின் நலனுக்காக நானும் திருமாவும் இணைகிறோம் என்று சொன்ன மருத்துவர் தருமபுரி விவகாரத்தில் மௌனம் காத்தது எதனால்? அப்படியென்றால் இந்த இரண்டு சமுதாய மக்களும் ஒன்றிணைவதில் அவருக்கு உடன்பாடு இல்லையா என்பதை அவர் இனி தெரிவித்தே ஆகவேண்டும். காதல் ஒன்றுதான் சாதியை ஒழித்து கலப்பு திருமணத்தை முன்னெடுத்து செல்லுமொரு ஆயுதம். சாதி மறுப்பு திருமணத்தை (பெரியார்கள்) ஆதரித்தார்கள் என்பது மருத்துவர் அவர்களுக்கு தெரியாதோ...ஒவ்வொரு தேர்தலின் போதும் பொய்யான வாக்குறுதிகளை நிலை நாட்டும் அரசியல் வாதிகளின் பேச்சோடு இதை ஒப்பிட வேண்டியது ஒன்றுதான் நம் கதியா? மனம் திறந்து பேசட்டும் மருத்துவர் அவர்கள்.
chaplinfriend
சாதி பெயரை சொல்லி ஒட்டுபொரிக்கி வந்த ரமதாசு கடந்த காலன்கலில் எந்த பொழப்பும் இல்லாத காரனத்தால் மீன்டும் சாதி அரசியல் தேவை அப்போதுதான் பொழப்பு நடத்த முடியும்.இது போல சாதி வெரிபிடித்தvar சமுக நல்லினக்கம் கான முயர்சிப்பது கேவலமானது.
selvarasu
சாதி என்பாது இன்ரால உருவானெது அது காலம் காலமாக இருந்து வரும் மரபு இதய் யாராலௌம் மாத்தா முடியாது அராசங்காத்தய் கெலுகங்ல் சாதியெய் ஒழிக்கவென்டூம் என்ரால் அனய்து எடுகலிலும் இருக்கும் சாதீ என்ரா வார்த்தாயெ எடுக்கா சொல்லுங்கல் நான்ரி
Guest
சாதிய ஒழிக்கனும்னா முதலில் அரசாங்கம் சாதி சான்றிதழ் கேட்பது,கொடுப்பத ஒழிக்கனும்,அனைத்து சாதியுலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளார்கள் எனவே முதலில் சலுகைகல கொடுக்க ஜாதி அடிப்படையா கொள்ளாமல் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வழங்கினால் தன்னால் ஜாதி மெல்ல மறையம்.அதைவிடுத்து அரசாங்கமே சாதி சான்று கொடுக்குமாம் அப்புறம் சாதி இல்லனு சொல்லுமாம் இது எப்படி நியாயம் சொல்லுங்க
deepak
இங்கே யாரும் சாதியை ஒழிக்க சொல்லவில்லை மற்ற சாதிகளை அழிக்காதீற்கள் என்றுதான் சொல்லுகின்றோம், சாதி சான்றிதழ் வழங்குவது கேட்பது எல்லாம், இட ஒதுக்கீட்டிற்காக, ஒரு 300 வருஷத்துக்கு முன்பு சாதி சான்றிதழ் இருந்துச்சா ஆனா அப்போவும் சாதிவெறி இருக்கத்தானே செய்தது சாதிவெறி எதிர்ப்பும் இருந்தது, எனவே மேலோட்டமாக சாதிவெறியை ஒழிக்க சாதி சான்றிதழ்களையும் அரசாங்கத்தையும் சொல்லாதீற்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.