அண்மையில் நடந்த முடிந்துள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை(2G) மறு ஏலத்தில் வெறும் 22 உரிமம் மட்டுமே (முன்பு விற்ற 122 உரிமத்திற்கான மறு ஏலம்) விற்பனையாகி அரசுக்கு ரூபாய்- 9,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது(1). இதனால் இன்று பலரும் பல குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். முதலில் 2G ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க-வும், கழக உடன்பிறப்புகளும் “1,74,000 கோடி ஊழல் என்பது பொய், கட்டுக்கதை. அன்று எங்கள் மேல் குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் இன்று எங்கே தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள், நாங்கள்(திமுக) அன்றே கூறியது போல 2G ஏலத்தில் (2008ல் நடந்த முதல் ஏலம்) ஊழலே நடைபெற வில்லை” என்கிறார்கள். அடுத்ததாக மத்திய அரசை (காங்கிரசு) சார்ந்த அமைச்சர்கள் எல்லாம் “நாங்கள் முன்னரே கூறியது போல மத்திய தலைமை த‌ணிக்கை அலுவலகம் செய்த கணக்கீடு தவறானது. அவர்கள் இன்று மன்னிப்பு கேட்க வேண்டும், பொன் முட்டையிடும் வாத்தை அவர்கள் கொன்றுவிட்டார்கள்” என்கிறார்கள். அடுத்த‌தாக ஊட‌க‌ங்க‌ள், தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையமும் (TROI), ம‌த்திய த‌ணிக்கை அலுவ‌ல‌க‌மும், உச்ச நீதிம‌ன்றமும் சேர்ந்து இந்திய மண்ணிற்கு வ‌ர‌விருந்த மூல‌த‌ன‌த்தை த‌டுத்து விட்டார்க‌ள் என குற்ற‌ம் சாட்டுகின்றார்க‌ள். 

 ச‌ரி, இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையைப் பற்றி நாம் இனி பார்ப்போம். 

 2008ல் 2G ஏல‌ம் ந‌ட‌ந்த பொழுதே மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள் மட்டுமே விற்க‌ப்ப‌ட்டன(2). அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடைத்த வ‌ருவாய் ரூ.9280 கோடி(3). ஆனால் இன்று வெறும் 22 ம‌ண்ட‌ல‌ங்க‌ளுக்குள்ள உரிம‌மே விற்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அத‌ன் மூல‌ம் அர‌சுக்கு கிடை‌த்திருக்கும் வருவாய் ரூ.9,500 கோடி. 22 ப‌குதிக‌ளுக்கு ரூ9,500 கோடி வ‌ருவாய் கிடைத்திருக்கின்ற‌து என்றால், 122 ப‌குதிக‌ளுக்கு எவ்வ‌ள‌வு கிடை‌த்திருக்க வேண்டும்? இன்று கிடைத்துள்ள ஒரு உரிமத்திற்கான வ‌ருவாய் ரூ.431.81 கோடி (9,500/22). இதே விலையினை அடிப்படையாக கொண்டாலே அன்று விற்ற 122 உரிமங்களுக்கான வருவாயாக ரூ.52681 (431x122 = 52681) கோடி அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். 

 இதில் அன்று 2G-க்கு இருந்த சந்தை தேவை (Demand) (அன்றே 43 விழுக்காடு உரிமங்கள் மட்டுமே விற்கப்பட்டன என்பதை நினைவுகூறவும்), இன்று 3G-யே மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின் 2Gக்கு உள்ள சந்தையின் தேவை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் அன்று ஏன் தலைமை தணிக்கை அலுவலகம் 1,76,500 கோடி இழப்பீடு என்ற சொன்னதன் காரணம் புரியும். ஆனால் திமுகவினரும், காங்கிரசும் கூறுவது போல இழப்பீடே இல்லை, ஊழலே நடக்கவில்லை என்பது "வெள்ளை காக்கா" வானத்தில் பறப்பது போன்றதே. ஏனென்றால் நாம் முன்பே பார்த்தது போல 2008 ஏலத்தில் உரிமங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதை உறுதி செய்யும் இன்னொரு சான்றையும் நாம் பார்க்கலாம். சுவான் நிறுவனம் அன்று ரூ1,531 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை (45%) ரூ4,200 கோடிக்கு விற்றது! இதே போல யுனிடெக் ரூ.1661 கோடிக்கு வாங்கிய 2G உரிமங்களின் ஒரு பகுதியை (60%) ரூ6,000 கோடிக்கு விற்றது! (4,5,6). 

இதிலிருந்து ந‌ம‌க்கு தெரிய‌ வ‌ருவ‌து 2G ஏல‌த்தில் ஊழ‌லே ந‌ட‌க்கவில்லை, ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கை அலுவ‌ல‌க‌த்தின் க‌ண‌க்கீடு த‌வ‌று என திமுகவும், காங்கிரசும் கூறிவருவது முழு பொய், தாங்க‌ள் செய்த‌ குற்ற‌ங்க‌ளை ம‌றைக்க‌ செய்யும் முய‌ற்சியே. 

இப்பொழுது ஊடகங்களின் குற்றச்சாட்டைப் பார்ப்போம். 2008ல் 122 உரிமம் விற்றது, இப்பொழுது வெறும் 22 பகுதிகளுக்கான உரிமம் மட்டும் விற்றுள்ளது, இதற்கு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தவறான விலைநிர்ணயமே காரணம், என்பதே அக்குற்றச்சாட்டு. நாம் முன்னரே பார்த்தபடி 2008ல் நடந்த முதல் ஏலத்திலே வெறும் 43 விழுக்காடு உரிமங்களே விற்றன. அதாவது மொத்தம் உள்ள 281 உரிமங்களில் 122 உரிமங்கள். இன்று மறு ஏலம் நடைபெற்றது முன்னர் விற்ற 122 உரிமங்களுக்கு மட்டுமே. 2008ல் 481 கோடி மதிப்புள்ள உரிமத்தை (மறு ஏலத்தில் ஒரு உரிமம் விற்பனையான தொகை. தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் இதை விட அதிகமான தொகையை நிர்ணயிக்க கோரியிருந்தது) வெறும் 76 கோடிக்கு (9281/122 = 76) விற்ற பொழுதே 43 விழுக்காடு உரிமங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. 2008ற்கு பிறகு 2G-யின் சந்தை தேவை குறைந்து விட்ட இன்றைய நிலையில், உரிமத்தின் உண்மையான விலையில் விற்கும் பொழுது இந்த அள‌விற்கு விற்றது, ஒப்புமை அடிப்படையில் சரியான ஒன்றே. 

அன்று (2008ல்) ஊழல், ஊழல் என்று சொன்ன ஊடகங்கள், இன்று அப்ப‌டியே நேர்மாறாக‌ ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கைய‌க‌த்தையும், தொலைபேசி ஒழுங்குமுறை ஆணைய‌த்தையும் எந்த‌ வித‌ அடிப்ப‌டையுமே இல்லாமல் குற்ற‌ம் சாட்டுவ‌து, அவ‌ர்க‌ளின் முத‌லாளித்துவ‌ சார்பை அப்ப‌ட்ட‌மாக‌ வெளிப்ப‌டுத்துகின்ற‌து. இந்த ஊழ‌ல் செய்த திமுக‌வை அப்ப‌ழுக்க‌ற்ற‌வ‌ர்க‌ளாக காட்டும் உடன்பிறப்புகளின் த‌ன்முனைப்பு அவ‌ர்க‌ளின் நேர்மையின்மையை ப‌றைசாற்றுகின்றது. இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்குண்டு என்பது தனிக்கதை. அதே போல அன்றிலிருந்து இன்று வரை மத்திய தலைமை த‌ணிக்கைய‌க‌த்தின் கணக்கீடு எல்லாம் தவறு என பாயும் காங்கிர‌சு (ம‌த்திய அர‌சு) அரசின் ப‌ரிசுத்த‌த்தை ப‌றைசாற்றுகின்ற‌து. அதுமட்டுமின்றி காங்கிரசில் உள்ளவர்கள் இந்த மறு ஏலத்திற்கு பின்னர் கூறும் கருத்தான "பொன் முட்டையிடும் வாத்தை" கொன்றுவிட்டீர்களே என்ற ஆதங்கத்தின் உண்மையான பொருள் இதோ, 

"ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும்(MOU - Memorundom of Understanding) கட்சியில்(அரசில்) உள்ளவர்களின் சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பின்னரே இங்கு கையெழுத்தாகின்றது" - முன்னாள் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர். இராம் மோகன். 

இக்க‌ட்டுரையில் பெரும்பாலும் திமுக‌, காங்கிர‌சு க‌ட்சிக‌ளை ம‌ட்டுமே கூறியுள்ள‌தால் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளான‌ பா.ஜ‌.க‌, அ.தி.மு.க..... போன்ற‌வையெல்லாம் உத்த‌ம‌ர்க‌ள் என்ப‌தான‌ பொருள‌ல்ல‌. இந்த‌ கட்சிக‌ளும் ப‌ல‌ ஊழல்களை செய்த‌வையே. 1990-க‌ளுக்குப் பிற‌கு இந்தியாவில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ தாராள‌ம‌ய‌மாக்க‌ல் கொள்கையை இன்று தேர்த‌ல் க‌ள‌த்தில் உள்ள பெரும்பான்மையான‌(இடதுசாரிகளாக அறியப்படுபவர்களை தவிர்த்து) க‌ட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ள‌ன. இந்த தாராளமயமாக்கல் கொள்கை என்பது இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு பந்தி வைப்பதேயாகும். பார்வையில் நேரெதிராகத் தோன்றும் எல்லா கட்சிகளுமே (அதிமுக, திமுக, காங்கிரசு, பா.ஜ.க) இதில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. இதில் யார் விரைவாக இந்திய வளங்களை விற்கின்றார்கள் என்பதில் தான் இவர்களுக்குள்ளான போட்டியே உள்ளது. 

சில்லறை வ‌ர்த்த‌க‌த்தில் அன்னிய‌ நேர‌டி முத‌லீடு, மின்சார‌த்துறையை த‌னியாருக்கு தாரை வார்த்த‌ல், அணு உலைக‌ளை இந்தியா முழுவ‌தும் நிறுவுவ‌து, த‌ண்ணீர், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை வ‌ணிக‌ பொருளாக‌ மாற்றி தனியாருக்கு கையளித்தல்… என நீண்டு கொண்டே செல்கின்ற‌ன மக்களுக்கு எதிராக இவ‌ர்க‌ள் இந்தியாவில் இதுவ‌ரை கொண்டுவ‌ந்துள்ள‌ திட்ட‌ங்க‌ள். இந்த திட்டங்கள் எல்லாவ‌ற்றையும் குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு விற்கும்போது ம‌த்திய‌ த‌லைமை த‌ணிக்கைய‌க‌ம் போன்ற சில அமைப்புகள் சில‌ உண்மைக‌ளை‌க் க‌ண்டுபிடித்து ம‌க்க‌ளுக்கு தெரிவிக்கின்ற‌ன. இவையே ந‌ம் முன்னால் கூற‌ப்ப‌டும் ஊழ‌ல்க‌ள். ந‌ம் க‌ண்ணுக்கு தெரியாம‌ல் திரைம‌றைவில் ஒவ்வொரு நாளும் ப‌ல‌ ஊழ‌ல்க‌ள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற‌ன‌. ஊட‌க‌ங்க‌ளும் அர‌சுக்கு சார்பான‌ (முத‌லாளித்துவ‌) நிலையையே பெரும்பாலும் எடுத்து வ‌ருகின்ற‌ன‌. இந்நிலையில் இந்த‌ ஊழ‌ல்க‌ளை க‌ளைய முய‌ற்சிக்கும் எவ‌ரும் செய்ய‌ வேண்டிய‌ முத‌ற்ப‌ணி இத‌ன் ஊற்றுக்க‌ண்ணான‌ 1990க‌ளில் இந்தியாவில் திணிக்க‌ப்ப‌ட்ட‌ தாராள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்துப் போராடுவ‌தேயாகும். அதை விடுத்து விட்டு ஊழ‌ல்க‌ளை களைய‌ முய‌ற்சிப்ப‌து வேரை விட்டுவிட்டு இலைக‌ளையும், கிளைக‌ளையும் வெட்டுவ‌தில் தான் சென்று முடியும். 

- ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌ 

தரவுகள்:

1) http://www.thehindu.com/news/national/blame-game-begins-as-2g-auctions-end-in-disaster/article4095259.ece

2) http://www.reuters.com/article/2012/02/02/us-india-telecoms-factbox-idUSTRE8110QI20120202

3) http://cag.gov.in/html/reports/civil/2010-11_19PA/Telecommunication%20Report.pdf

4) http://articles.economictimes.indiatimes.com/2009-05-06/news/28394897_1_s-tel-bahrain-telecommunications-telecom-licences

5) http://news.in.msn.com/national/what-is-2g-what-is-2g-scam

6) http://www.ndtv.com/article/india/what-is-2g-spectrum-scam-66418

Pin It