சேலம் தீவட்டிபட்டி மாரியம்மன் கோவில் ஆலய நுழைவு மறுப்பும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்து முற்போக்கு, சனநாயக இயக்கங்களின் கள ஆய்வு அறிக்கை.

உண்மை அறியும் குழுவில் பங்கேற்றோர் ­

தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், தோழர் கண. குறிஞ்சி ஒருங்கிணைப்பாளர், சமூகநீதிக் கூட்டமைப்பு, தோழர் மருதுபாண்டியன் சோசலிச மையம், தோழர் தமயந்தி தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம், தோழர் வளர்மதி SUMS, தோழர் மாரியப்பன் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தோழர் கோ.சீ.மணி, தோழர் மூர்த்தி தலைவர், நல்வழிக்கழகம், தோழர் அருண்சோரி க.க. மா-லெ-மா, தோழர் கண்ணன்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2 / 2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer - I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்ததன் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை முன் வைக்கப்படுகிறது.

தீவட்டிப்பட்டி சிற்றூர் அமைப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் தீவட்டிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வன்னியர், சோழிய வேளாளர், நாயக்கர், போயர், உடையார் உள்ளிட்ட சுமார் 1000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அருந்ததியர் சமூக மக்களும் வன்னியர் பகுதிக்கு அருகிலேயே வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 15 முதல் 20 குடும்பங்கள் வரை இருக்கின்றனர். இஸ்லாமிய சமூகத்தினரும் வாழ்கின்றனர். தீவட்டிபட்டிக் கிராமத்திற்கு மிக அருகில் நாச்சினம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200 ஆதி திராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலிகளாகவும் வேலை செய்து வருகின்றனர்.

கோயில் திருவிழா

தீவட்டிப்பட்டியில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை நடைபெற்ற திருவிழாக்களில் பட்டியலின மக்களும் பங்கேற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. திருவிழா ஏழு நாள்கள் நடைபெறும். இவ்வாண்டு அதன்படியே ஏப்ரல் 29ஆம் நாள் தொடங்கி மே 5 ஆம் நாள் நிறைவுறுவதாக இருந்தது. முதல் நாள் திருவிழா கங்கணம் கட்டுவது. அன்று தலித்துகளுக்குத்தான் முதலில் கங்கணம் கட்டுவது வழக்கம். பிறகு கொடிக்கம்பம் ஏற்றுதல், தீர்த்தக்குடம், கூழ் ஊற்றுதல், அலகு குத்துதல், தேர்த்திருவிழா, வாணவேடிக்கை, மஞ்சள் நீராட்டம், பாட்டுக் கச்சேரி என நிகழ்வுகள் நடைபெறும். இறுதி நிகழ்வாகக் கணக்குப் பார்த்தல் மற்றும் ஊர்ப் பெரியவர்களை மேளதாளங்களுடன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தல், விருந்து வைத்தல் ஆகியவற்றுடன் திருவிழா முடிவடைகிறது. இந்த விழாவிற்கான செலவினங்களுக்குத் தீவட்டிப்பட்டி பிற்படுத்தப்பட்ட சாதி மக்களிடையே மட்டும்தான் வரி வசூலிக்கின்றனர். நாச்சினம்பட்டி தலித் மக்கள் காலங்காலமாகவே வரி கொடுப்பதில்லை. கோவில் நிர்வாகக் குழுவினரும் கேட்பதில்லை. இது நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை மரபு.

மாரியம்மன் கோவிலில் முக்கியமான சடங்கு சக்தி அழைத்தல். இந்நிகழ்வின் போது பறையர் சமூக மக்கள் குடியிருப்பில் உள்ள கோவிலில் இருந்து பூவை எடுத்துச் சென்று தீவட்டிபட்டி மாரியம்மன் கோவிலில் வைத்துப் பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டும் அப்படியேதான் விழா தொடங்கியிருக்கிறது.

தலித் மக்களுக்குத்தான் முதலில் கங்கணம் கட்டுவது முறை. ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு அந்த மரியாதையைச் செய்ய மறுத்த பூசாரி, “உங்களுக்கெல்லாம் கங்கணம் கட்ட முடியாது” என்று கூறிக் கங்கணத்தைத் தூக்கி வீசி உள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்பே தலித் மக்களுக்கு இத்திருவிழாவில் பங்கேற்க அனுமதி கிடையாது என்ற ஒரு தகவல் வந்ததாக அய்யம்மாள், ( வயது 30 ) கூறினார். எனவே இது தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை, முன்கூட்டியே ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தலித்துகளைத் திருவிழாவில் பங்கேற்க விடக்கூடாது என முடிவெடுத்துள்ளனர் என்றே தெரிகிறது.

கோயில் திருவிழாப் பிரச்சனையின் விவரம்

மே 1, 2024 - அலகு குத்தும் நிகழ்ச்சி : திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல். மாலை 5 மணி தொடங்கி 7.30 மணிக்குள் மற்றவர்கள் சடங்கு முடிந்த பிறகு தலித் மக்களுக்கு அலகு குத்துவது நடைமுறையாக உள்ளது. இதன்படி இந்தாண்டு தலித் பெண்கள் ஐந்து பேர் அலகு குத்த ஆறு மணிக்குக் கோவிலுக்குச் சென்றுள்ளனர். இம்முறை திட்டமிட்டபடி இவர்களுக்கு அலகு குத்துவதைத் தாமதப்படுத்தி உள்ளனர். இரவு 10 மணி வரை காக்க வைக்கப்பட்ட பின்பு பெண்கள் முறையிட்டதன் பேரில் வேறு வழி இல்லாமல் அலகு குத்தியுள்ளனர். வழக்கமாக அலகு குத்துபவர் குத்தாமல் வேறு ஒருவர் குத்தியுள்ளார். இது முடிந்த பிறகு தலித் மக்கள் கோவிலைச் சுற்றி வரும்பொழுது, வன்னிய சமுகத்தினர் தங்களின் சாதிப் பாடலை ரேடியோவில் போட்டும், மின் விளக்கை அணைத்தும் உள்ளனர். சுற்று முடிந்து கோவில் வாசலுக்கு வந்த பொழுது பூசாரி வம்படியாகத் திரைச்சீலையை இழுத்துக் கருவறையை மூடி உள்ளார். இதன் தொடர்ச்சியாகச் சேலம் அரசுக் கல்லூரியில் படித்து வரும் சூர்யா என்ற தலித் இளைஞர் அம்மனை வழிபட ஆலயத்தில் சென்ற பொழுது அவரைக் கோவில் பூசாரி வெளியே தள்ளி விட்டுள்ளார். இச்சம்பவத்தினைக் கண்ட சூர்யாவின் உறவினர் கேள்வி கேட்ட பொழுது, “நீங்கள் கோவிலின் உள்ளே வரக் கூடாது” என்று பூசாரி கூறியுள்ளார். மேலும் அர்ச்சனை செய்வதற்காகக் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கோவில் வாசல் கதவை மூடியும், வன்னியர் சாதி உட்பட மற்ற மேல் சாதிப் பெண்கள் சுமார் 40 முதல் 50 பேர் கோவில் வாசலில் உட்கார்ந்தும் வழி மறித்துள்ளனர். அங்கிருந்த மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், குறிப்பாக பா.ம.க வைச் சேர்ந்த வெங்கடேசன், சின்னாக்கவுண்டர் ஆகியோரும்,

சாதியாதிக்கவாதிகளும் இதைச் செய்துள்ளதாக அனைவரும் குறிப்பிட்டனர். இந்த அநீதிக்கெதிராக பட்டியலின மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 150க்கும் மேற்பட்ட தலித் மக்களும் 200க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் கூடியுள்ளனர். ஆனால் அதற்கு முதல் நாள் பால்குடம் எடுத்து வழிபடும் நிகழ்ச்சியில் தலித் மக்கள் உட்பட அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்துதான் வழிபாடு செய்துள்ளனர். அதற்கு மறுநாள் அலகு குத்தி எடுக்கும் நிகழ்ச்சியின் போது மட்டும் கோயிலுக்குள் விடாமல் தகராறு செய்துள்ளனர்.

உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்

• தீவட்டிப்பட்டிக் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

• ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

• காவல் துறை தாக்குதலால் காயம் பட்டு இருப்பவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அரசு பொறுப்பில் வழங்கப்பட வேண்டும்.

• காவல்துறைக் கண்காணிப்பை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இரவு நேரத்தில் வந்து இளைஞர்களைக் கைது செய்யும் நடைமுறை உடனடியாக நிறுத்த வேண்டும்.

• தீவட்டிப்பட்டியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

• சக்தி மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அறநிலைத்துறையின் கீழ் இருந்தாலும் வன்னியர்கள் தங்களது ஆதிக்கத்தில் அதைக் கையகப்படுத்திக் கொண்டிருப்பது ஏற்கத் தக்கதல்ல. எனவே அறநிலையத் துறை கோயிலைத் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். மேலும் கோயில் நிர்வாகக் குழுவில் ஆதி திராவிட மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் தரப்பட வேண்டும்.

• சக்தி மாரியம்மன் கோயில் அறநிலையத் துறையின் கீழ்தான் உள்ளது என்பது பற்றிய அறிவிப்புப் பலகை, கோயிலில் வைக்கப்பட வேண்டும்.

• சக்தி மாரியம்மன் கோயில் பூசாரி பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதை மாற்றிச் சுழற்சி முறையில் அமைக்க வேண்டும்.

• தீவட்டிப் பட்டி அரசுயர் பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிக அளவு இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதை முற்றிலும் ஒழித்துக்கட்டத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

• இந்தக் கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த ஆட்டையாம்பட்டி ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் என்பவருக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிய வருகிறது. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

• ஆதிதிராவிட சமுதாயத்திலுள்ள பெண்கள் பலருக்கு 100 நாள் வேலைதான் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் அவர்கள் வேலைக்குச் செல்வதற்கும் அஞ்சி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களிடைய நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

• காவல் துறை பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பெண்களையும், சிறுவர்களையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தி உள்ளனர். இத்தகைய அராஜகச் செயலில் ஈடுபட்ட காவலரைக் கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, தீக்கிரையாக்கப்பட்ட கடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

• கோயில் விழாவினை எதிர்வரும் காலத்தில் அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும்.

• ஆதிதிராவிடர் பகுதியில் இவ்வளவு கடுமையான பாதிப்பு இருந்தும், காவல்துறை அதன் அடிப்படையில் வழக்கு எதுவும் பதிவு செய்யாதது ஏற்கத் தக்கதல்ல.

• கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் கோவில்களில் பட்டியலின மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தும் போதெல்லாம், அந்தக் கோயில்கள் பூட்டப்படுவதும், சீல் இடுவதும்தான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆதிக்க சாதிகளைச் சார்ந்தவர்களும் தாங்கள் வழிபாடு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் சரி, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் இருந்தால் போதும் என்ற அவர்களின் கருத்துக்கு அது ஏற்பளிப்பதாக ஆகிவிடுகிறது. எனவே இனி எந்த ஓர் அறநிலையத் துறை சார்ந்த கோயிலிலும், பொதுக் கோவில்களிலும் இதுபோன்ற பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்படும் போது அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குகள் பதிவதோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.