எல்லா நாட்களையும் போலவேதான் இந்த நாளும் விடியும் என்ற நம்பிகையில் உறங்கச் சென்ற போதிலும் இன்றைய நாள் எனது பல நம்பிக்கைகளைத் தகர்த்த நாள்.

காலையிலேயே தமிழகத்தின் முக்கிய அமைப்பின் தலைவர் ஒருவர் போன் செய்து, 'தம்பி! கசாப் தூக்கிலிடப்பட்டார் என்று செய்திகள் வருகிறது. நான் வெளியில் இருக்கிறேன். உறுதிபடுத்திச் சொல்' என்றார். அதிர்ச்சிகரமான செய்தி. சனியன் கரண்டு வேற‌ இல்லை. தோழர் சதீஸ்க்குப் போன் செய்து செய்தியைக் கூற, 'இருங்கள் அண்ணா! இணையத்தில் பார்த்து சொல்கிறேன்' என்று கூறிவிட்டு செய்தியை உறுதிப்படுத்தினார்.

எரவாட சிறையில் அஜ்மல் கசாப் காலையில் தூக்கிலிடப்பட்டார்.

அவசர கோலத்தில் நடை பெற்ற இந்த சட்டப்பூர்வமான கொலை, அதற்குப் பின் இருக்கும் அரசியல், தமிழக உணர்வாளர்களை அச்சுறுத்தும் அரசியல் இப்படி பல வெங்காயங்களை யோசித்துக்கொண்டு அலுவலகம் சென்றேன்.

காலை முதல் ஊடகங்கள் இந்தியாவுக்கு விடுதலை கெடச்சிருச்சு என்ற ரேஞ்சில் அலறிக்கொண்டிருந்தன. தேசபக்தியின் அளவுகோலே அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை வரவேற்பதில்தான் இருக்கிறது என்ற ரீதியில் அரசின் திரைக்கதைக்கு கனகச்சிதமாக நடித்துக் கொண்டிருந்தார்கள் ஊடக பயங்கரவாதிகள்.

ஒரு திரைப்படம் என்றால் காமெடியன்களும் பபூன்களும் இல்லாமலா?

தமிழகத்தின் முன்னாள், இன்னாள் அரசியல் காமெடியன்கள், காவி காமெடி, காங்கிரசு காமெடி, பச்சை காமெடி, மஞ்ச காமெடி என விதவிதமாக ப‌ர்பாமன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்க…

தன் கட்சிக்காரன் கொலை வழக்கில் குண்டாசில் உள்ளிருக்க, அம்மாவின் மனம் நோகாமல் நோம்பி கும்பிடும் தப்புத் தாளம் தா.பாண்டியன், மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிக்க பழக்கப்படுத்திகொண்ட ஜி.ராமகிருஷ்ண‌ன்கள் என வரிசை கட்டி நிற்க ஒரே அதிர்ச்சிதான் போங்க... 'நல்லவியங்களுக்கு இங்கே என்னடா வேலை' என மனித உரிமை பேசியே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை அதிர்ச்சியாய்ப் பார்க்க வைச்சாங்க பாருங்க...

அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை வரவேத்தாங்க.. சரி அது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட கதை வசனம்.. அத உட்டுருவோம்.

அதுக்கு மேலதான் தா.பாண்டியன் பேசிக் கொண்டிருக்கும்போது நான் உத்து உத்து டிவியின் கீழ் வரும் எழுத்தைப் பார்த்தேன். ஆர்.எஸ்.எஸ்.ல் தா.பாண்டியன் சேர்ந்து விட்டாரோ என்று.. ஆனால் மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின்னுதான் வந்தது.

முஸ்லீம்கள் வழிபாட்டுத் தளங்களில் குண்டுவைத்தவர்கள்; தீவிரவாதிகள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பேசிக்கொண்டே போனார். அப்படியே அவர் உருவில் நரேந்திர மோடிகளும், எச்சி ராஜாக்களும், ராமகோபாலன்களும் வந்து போனார்கள்.

தா.பாண்டியன் அவர்களே!

இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு காரண‌ம் யார் என்று தெரிந்தும் முஸ்லீம்கள் மேல் பலி போடும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?

அஜ்மீர் குண்டுவெடிப்பு, ஜம்தாவி ரயில் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு என இன்னும் பல குண்டுவெடிப்புகள் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வேளையில் அந்த நிகழ்வுகளுக்கு முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் உங்களை இந்துத்துவத்தின் மறுஉருவமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இந்த நாட்டில் எங்கு எது நடந்தாலும் உடனடியாக முஸ்லீம்களின் மீது பலி சுமத்துவதும், இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்களுக்கு சேவகம் செய்பவர்களாக சித்திரிப்பதும், ஒரு சமுகத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும் இந்திய உளவுத் துறை மற்றும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளின் செயல்திட்டங்களில் ஒன்று. அவர்களின் செயல்திட்டங்களுக்கு அவர்களின் திரைக்கதைக்கு நடிக்கும் புதிய காமெடியனாக இப்போது நீங்கள்.

சிறுபான்மை மக்களை முரண் சக்திகளாக முன்னிலைப்படுத்துவதில் அனைவரும் ஓர் அணியில். இதில் காவி என்ன... போலிகம்யூனிஸ்ட் என்ன..? எல்லா அப்பன்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.... என்று இன்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமுகம் பல விடயங்களில் மார்க்க ரீதியாக கம்யூனிஸ்டுகளிடம் முரண்பட்டாலும் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகள் போற்றுவதில் தங்களின் அரசியல் பாதுகாவலர்களாக கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் வேளையில் உங்கள் அரசியல், இந்துத்துவ அரசியலை நோக்கி போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் இன்றைய தினம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா சனநாயக நாடு என்று உலக அரங்கில் போலியாக நம்ப வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் கோர முகம் இன்றைக்கு அம்மண‌மாக இளித்துக் கொண்டிருக்கிறது. சனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சவால்விடுவதாக அதன் செயல்கள் இன்றைக்கு அமைந்திருக்கின்றன. உலக நாடுகள் சபையில் நேற்றைய தினம் மரண தண்டனைகளுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை மூர்க்கமாக எதிர்த்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியபின்னர், அது மனித உரிமைப் போராளிகளை, மரண தண்டனைக்கு எதிராக போராடுபவர்களை நோக்கி சவால்களும், எச்சரிக்கையும் விடும் நோக்கில் இன்றைக்கு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக நிற்கும் நாடுகளின் முன் திமிராக 'நேற்று அந்த வரைவுத் தீர்மான‌ம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மரணத்தையும், மரண தண்டனைகளையும் நாங்கள் முடிவு செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற இந்தியாவின் கொக்கரிப்பைப் பார்க்க முடிந்தது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் ஒரு பிரிவாக இருந்த வரலாறும், அதிலும் நீங்கள் மஞ்சள் கம்யூனிஸ்டாக காங்கிரசின் சிறுபான்மைப் பிரிவு கம்யூனிஸ்டாக இருந்ததை நாங்கள் மறக்கவில்லை. உங்கள் நிறம்தான் தற்போது சிவப்பு என்றாலும் அதில் ஊடுறுவிப் பார்த்தால் அது காவியாக வெளுத்துள்ளதையும் இனிவரும் காலங்களில் நாங்கள் உணர்ந்திருப்போம்.

உங்கள் காவி சிந்தனையை இனியும் தொடர்ந்து காட்டினால் வரலாற்றில் மிகக் கேவலமான பக்கங்களில் உங்கள் பெயர் எழுதப்படும்.

- உமர்கயான், முதன்மை ஒருங்கினைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், தமிழ்நாடு

Comments

4 comments

4
முத்துப்பேட்டை முகைதீன்
தா.பாண்டியன் ஒரு முதிர்ந்த கம்யூனிஸ்ட்வாதி என நம்பிருந்தோம். இல்லை நான் ஒரு காவியவாதி என அவரே அவரது வாயால் போட்டு உடைத்துள்ளார். இனி எங்களின் பார்வைக்கு கம்யூனிஸ பாண்டியனாக தெரியமாட்டார் ஒரு காவிய பாண்டியனாகத்தான் தெரிவார் அவர் பொது மன்னிப்பு கோராத வரை. தா.பாண்டியனுக்கு சில நிணைவூட்டல்கள்: மாலேகானின் முக்கிய இடங்களில் குண்டுவைத்து மாவீரன் கர்க்கரேயால் உலகுக்கு தீவிரவாதியாக அடையாளம் காட்டப்பட்ட அபிநவ் பாரத்தின் பெண் சாமியார் பயங்கரவாதி பிரக்த்யா சிங், இவரோடு ஓர் ராணுவ வீர்ரும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டப்பட்டனர். ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்தில் ஜூம்மா தொழுகைக்குப்பின் குண்டு வெடித்து அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அங்கே இருந்து முஸ்லிம்களை போல வேடமிட்ட ஒட்டுத்தாடிகள் கண்டெடுக்கப்பட்டு ஹிந்துத்துவ பயங்கரவாதம் அங்கே நிரூபிக்கபட்டது. அஜ்மீர் தர்ஹாவிலே குண்டுவெடிக்கப்பட்டது அங்கேயும் ஹிந்துத்துவ பயங்கராவதம் வெளிப்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சம்ஜவ்தா ரயிலில் குண்டுவெடித்து இதிலும் உண்மை அம்பலமாகி ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். அசிமானந்தா சாமி என்ற ஆர்.எஸ்.எஸ் வாதி நீதிமன்றத்திலே போட்டு உடைத்தார் ஹிந்துத்துவ பயங்கரவாதத்தை. மும்பையில் ஆயிரக்கணக்காக இந்தியர்களை கொன்று குவித்ததோடு நமது இனமான தமிழினத்தை எதிர்த்தவர்கள் ஹிந்துத்துவவாதிகள். அங்கே அடிபட்டது முஸ்லிம்கள். குஜராத்திலே ஆயிரக்கணக்கானோர் ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் கொடூர கொலை செய்யப்பட்டார்களே, அங்கே பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் இப்படி இந்தியாவின் முக்கிய குண்டுவெடிப்புகளுக்கும், முக்கிய கலவரங்களுக்கும் காரணமான ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் கோர முகம் உலகுக்கே தெரிந்திருந்தும் தா.பாண்டியன் அவர்களே உங்கள் பார்வைக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக தென்பட்டதின் மறுநோக்கம் என்ன? - முத்துப்பேட்டை முகைதீன்
பரிமளா
//உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக நிற்கும் நாடுகளின் முன் திமிராக 'நேற்று அந்த வரைவுத் தீர்மான‌ம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மரணத்தையும், மரண தண்டனைகளையும் நாங்கள் முடிவு செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற இந்தியாவின் கொக்கரிப்பைப் பார்க்க முடிந்தது.// நல்ல பதிவு தோழர்.
இடிஅமீன்
வலது,இடதுக்கு அர்த்தம் தெரியாத கட்டுரையாளர் தா.பாண்டியன் பேசியதற்கு. எதற்கும் இருக்கட்டுமே என்று ஜி.ராமகிருஷ்ணனையும் சேர்த்துக்கொண்டார் போலத் தெரிகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட இனமாக உள்ள இஸ்லாமியர்கள் குறித்து வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிய போது அதை பெரிதாக விளம்பரம் செய்த இஸ்லாமிய அமைப்புகள், கருத்து ரீதியாக கம்யூனிஸ்டுகள் விமர்சனம் செய்தால் அவர்களை போலி கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரவாத இயக்கங்கள் பின்னால் யார் இருந்தாலும் அது இந்து மதமாக இருந்தாலும்,இஸ்லாமிய மதமாக இருந்தாலும் அதை கம்யூனிஸ்டுகள் வலுவாக எதிர்ப்பார்கள் என்பதை உமர்கயான் புரிந்து கொள்ள வேண்டும்.
S.RAJKUMAR
கட்டுரையாளர் தோழரே.. மற்றவர்களை கேலியாக நீங்கள் பேசும்போது பலர் கைத்தட்டியிருப்பார்கள் போல் இருக்கிறது.. இந்த கட்டுரையிலும் நல்ல முயற்சிதான்.. ஆனால் பலனில்லை.. தமிழக முதல்வர், முஸ்லீம் இயக்கத்தினர் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடக்கூடாது என்று போராடிய போது, அத்திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்தார். அப்போது முதல்வர் அவர்களை வாழ்த்தி அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் வாழ்த்தி பேட்டி கொடுத்தார்கள், அறிக்கை விட்டார்கள் நன்றி தெரிவித்தார்கள். அந்த தலைவர்கள் முதல்வர் அவர்களுக்கு போட்டது தப்பு தாளம் என்றால , தோழர்.தா.பா போட்டதும் தப்பு தாளமாகவே இருக்கட்டும்.. இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வரை பாராட்டிய , விவசாய நிலங்களில் எண்ணை குழாய்கள் பதிப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வரை பாராட்டிய, NLC பங்குகளை தமிழக அரசே வாங்க முடிவெடுத்ததை ஆதரித்த, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட கோரி மாநில அரசு தொடுத்த வழக்கை ஆதரித்த தோழர்.தா.பா்ண்டியன் தான் பஸ் விலை உயர்வை எதிர்த்தார், பால் விலை உயர்வை எதிர்த்தார், சேது சமுத்திர திட்டத்தில் முதல்வர் கருத்திற்கு மாற்று கருத்திற்கு போராடுகிறார்..மற்றவர்கள் போல மதத்தை, சாதியை, இனத்தை, மொழியை அடையாளப்படுத்துபவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்.. இங்கு சிறுபான்மையும் அல்ல பெரும்பான்மையும் அல்ல , மதமும் அல்ல சாதியும் அல்ல, இனமும் அல்ல மொழியும் அல்ல அனைத்தையும் கடந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.. எல்லா மதத்தவரையும், நேசிக்க தெரிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.. எங்கள் துண்டு வெளுத்து போகலாம், அது வெறும் சாயம் தானே.. கம்யூனிஸ்டுகள் மனமும், மூளையும், உதிரமும் வெளுக்காது..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.