சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவு கண்டுள்ளது. ரூபாய் மதிப்பும் வீழ்ந்து தொடர் ஏற்ற இறக்கங்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய அரசு கடனுக்கு முழுக்க முழுக்க அந்நிய முதலீட்டாளர்களை நம்பியுள்ளது. அந்நிய நிதி முதலீடுகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை விற்கும் விதமாக அரசும் ரிசர்வ் வங்கியும் அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்காக உலக வர்த்தகச் சந்தையில் அரசுக் கடன் பத்திரங்கள் வெளியிடத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

modi and nirmala sitharamanஅமெரிக்காவுடன் கூட்டணியை வலுப்படுத்திய மோடி அரசின் ஆர்வமெல்லாம் ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்துவதில்தான் உள்ளது. இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை 5 பில்லியன் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்றும் உத்தரப் பிரதேசத்தை பெரிய ஆயுத உற்பத்திக் கேந்திரமாக உருவாக்க உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கண்டுள்ள படி சென்ற ஆண்டு 13.5% ஆக இருந்த வங்கிகள் அளிக்கும் கடன் சதவீதம் இந்த ஆண்டில் 8.5% ஆகக் குறைந்துள்ளது. விவசாயக் கடன் 7.6% லிருந்து 6.5%ஆகக் குறைந்துள்ளது. தொழில்துறைகளுக்கான கடன் வசதி 5.2% இலிருந்து 2.5% ஆகக் குறைந்துள்ளது. இதனால் கடன் உதவி கிடைக்காமல் உற்பத்தித் துறையே முடங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு அடுத்த நிதி ஆண்டுக்குள் ரூ.15 லட்சம் கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக வெற்று வாக்குறுதியை மட்டுமே தந்துள்ளார் நிதியமைச்சர்.

உத்தர பிரதேசத்தில் மோடி 10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்திற்கு 5 ஆண்டுகளில் 5,000 கோடி முதலீடு செய்யப் போவதாக வாக்குறுதி மட்டும் அளித்துள்ளார். தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலின் படி பிரதம மந்திரி கிஸான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இரண்டாம் தவணையாகச் செலுத்த வேண்டிய இரண்டாயிரம் ரூபாய் இன்னும் 50 மில்லியன் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படவில்லை, மூன்றாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் இன்னும் 51.6 மில்லியன் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படாமல் உள்ளது.

நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 7.59% உயர்ந்துள்ளது. 2020 ஜனவரியில் உணவுப் பொருட்களின் விலைவாசி 13.63 சதவீதமாக உள்ளது. காய்கறி விலைவாசி 50.19% உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 16.71% உயர்ந்துள்ளது. மீன், இறைச்சியின் விலை 10.5%, முட்டையின் விலை 10.41% உயர்ந்துள்ளது. மொத்தப் பணவீக்கம் டிசம்பரில் 2.59% ஆக இருந்தது ஜனவரியில் 3.1% ஆக உயர்ந்தது. கிராமப்புறங்களில் கூலிவீதம் 2.1% குறைந்துள்ளது.

பொருளாதாரச் சரிவால் விவசாயிகளின் வருவாயும் நுகர்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்கும் கமிட்டியின் தலைவர் அசோக் தால்வாய் இலக்கை அடைவதற்கான சரியான வழித்தடத்தில் உள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். 1991 பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன்பாடு விவசாயத் துறையை அடையவில்லை என்பதால் விவசாயிகளின் தற்சார்பை அழிக்கும் தாராளமயத்தின் மூலமாக ஒரு முன்னுதாரணமான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் (ஐஐபி) படி 2019 டிசம்பர் மாதத் தொழில்துறை உற்பத்தியானது சென்ற ஆண்டைக் காட்டிலும் 0.3% குறைந்துள்ளது. உற்பத்தித்துறையின் இருபத்தி மூன்று தொழில் வகைகளில் பதினாறு தொழிற்குழுக்களின் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது. ‘கணினி உற்பத்தித் தொழிற்குழுவில் மின்னணு மற்றும் ஒளியியல் தயாரிப்புகளின் உற்பத்தி எதிர்மறையாக ’(-) 24.9% குறைந்துள்ளது. இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி (-20.3%) அச்சிடுதல், பதிவு செய்யப்பட்ட ஊடகங்களின் மறு உற்பத்தி (-15.5%) குறைந்துள்ளது. முதன்மைப் பொருட்கள் (-2.2%) மூலதனப் பொருட்கள் (-18.2%) , நீடித்த நுகர்வுப் பொருட்கள் (-6.7%) மற்றும் உடனடி நுகர்வு பொருட்கள் (-3.7%) ஆகியவற்றின் உற்பத்தியும் குறைந்துள்ளது.

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி மாதத்திற்கான அறிக்கையின் படி ஆகஸ்ட் 2019 முதல் நவம்பர் 2019 வரை எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருந்த எட்டு முதன்மைத் துறைகளின் உற்பத்தி டிசம்பரில் 2.1% ஆக உயர்ந்து 2020 ஜனவரியில் 2.2% ஆக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சென்ற ஆண்டில் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் 4.4% ஆக இருந்த முதன்மைத் தொழில் துறைகளின் வளர்ச்சி இந்த ஆண்டில் 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் நிலக்கரி (8%), சுத்திகரிப்புப் பொருட்கள் (1.9%), சிமெண்ட் (5%), மின்சாரம் (2.8%) ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் (-5.3%), இயற்கை எரிவாயு (-9.1), உரம் (-0.1%) ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) 5.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) 4.7 சதவீதமாகக் குறைந்ததாக தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மொத்த மூலதன உருவாக்கத்தின் மதிப்பு சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 32.3% ஆக இருந்தது. நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 29.2% ஆகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி 21.4% ஆக இருந்தது 2019-20ல் 19.3% ஆகக் குறைந்துள்ளது. மொத்த மதிப்பாக்கம் (ஜிவிஏ) அடிப்படையில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 5.2% ஆக இருந்தது நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ஆண்டில் 0.2% ஆகக் குறைந்துள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து 6.6 சதவீதமாக உள்ளது. சுரங்கத் துறை வளர்ச்சி கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.2 %ஆகக் குறைந்துள்ளது.

வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சேவை, ஒளிபரப்பு ஆகியவற்றின் வளர்ச்சி கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 7.8 சதவீதமாக இருந்த நிலையில் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2017-18ல் 5 சதவீதமாக இருந்த வேளாண் துறை உற்பத்தி சென்ற நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 2 சதவீதமாகக் குறைந்து நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 3.5 சதவீதமாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி இந்த மாதம் 3.26% குறைந்துள்ளதாக உலக எஃகு அமைப்பு தெரிவித்துள்ளது இருப்பினும் எப்போதும் ஒரே பல்லவியைப் பாடுவதே நிதியமைச்சருக்கு வழக்கமாகி விட்டது: நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இல்லையாம். வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகின்றனவாம். செய்திகள் வாசிப்பது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணிப்பதாகவும் கூறுகிறார். அதற்கும் மேலாக இணை நிதியமைச்சர் அணுராக் தாக்கூர் 2025ல் இந்தியாவை உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்களுள் ஒன்றாக மாற்றப் போவதாகக் கொக்கரிக்கிறார். இது என்ன கண்கட்டி வித்தையா? மக்களை லத்தியால் அடக்குவது போல் பொருளாதாரத்தை நாம் நினைத்த படி கட்டுப்படுத்த முடியுமா? பொருளாதார விதிகளை நமக்கேற்றாற்போல் மாற்ற முடியுமா? அடிப்படைப் பொருளாதார அறிவு கூட இல்லாதவர்கள் ஆட்சி செய்வதால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வும் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தின் இக்கட்டான நிலையிலும் நுகர்வு / தேவை அதிகரிப்பதற்கான துறைகளில் நிதி ஒதுக்கீடுகளை அரசு அதிகரிக்கவில்லை, மாறாக நூறு நாள் வேலை திட்டம், பொது விநியோக முறை, குழந்தைகள் மேம்பாட்டுக்கான நிதி ஆகியவற்றைக் குறைத்துள்ளது, இவற்றில் அரசு ஆக்க முயற்சிகள் எடுக்கவில்லை, முதலீடுகளும் நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. அது வழங்கல் துறையில் கவனம் செலுத்துகிறது. அரசு பொருளாதாரத்தை சரிசெய்யும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. தனியார் துறையால் மட்டுமே, குறிப்பாகப் பெருமுதலாளிகளால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க முடியும் என்று நம்பும் பாஜக அரசு பெருமுதலாளிகளுக்குப் பெருஞ்சலுகைகள் அளித்தது, மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. நுகர்வுக்கான தேவை இல்லாத போது, பெருலாபத்திற்கு வாய்ப்புகள் இல்லாத போது பெருமுதலாளிகளான எங்களுக்கு சலுகை அளிப்பதால் பொருளாதார சரிவை சரி செய்ய இயலாது என்பதால் சலுகைகளை மக்களுக்கு கொடுங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல அவர்கள் என்ன ராபர்ட் ஓவன்களா! அவர்கள் அரசு தருவதையெல்லாம் வாங்கிக் கொண்டு முதலீடு செய்ய மாட்டோம் எனக் கையை விரித்து விட்டனர். மொத்தத்தில் மக்களை அல்லல் பட விட்டு விட்டனர்.

தமிழ் நாட்டில்:

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாயில் ரூ.4,073 கோடி இன்னும் செலுத்தப்படவில்லை. பட்டியலின மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித் தொகையையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

ஃபிப்ரவரி 14ஆம் தேதி தமிழ்நாட்டில் அதிமுக அரசு 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 992 கோடி. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என அதீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குடிமராமத்துத் திட்டத்துக்கு மிகக்குறைவாக ரூ.300 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. வேளாண் விளைபொருளுக்கு விலை நிர்ணயம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை சென்ற ஆண்டு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் அதைவிடக் குறைவாக ரூ.165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை.

உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.11,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகக் கண்கவர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாய் செலவில் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்றும், பிரதான் மந்திரி கிஷான் சம்பதா யோஜனா திட்டத்தின் மூலம் 218 கோடி ரூபாய் செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கான எந்தத் திட்டங்களும் இல்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தை பாஜகவைப் போல் அதிமுக அரசும் கைவிட்டுவிட்டது.

தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கான நிதி வருவாயை எங்கிருந்து பெறவுள்ளது என்பது தெரியவில்லை. இத்திட்டங்களெல்லாம் வெற்று வாக்குறுதிகளா இல்லை உண்மையில் எந்த அளவிற்கு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

- சமந்தா

Pin It