சில நாட்களுக்கு முன்னால் சென்னை கலைவாணர் அரங்கில் 'ஏற்றுமதியில் ஏற்றம், முன்னணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஸ்டாலின் அவர்கள், "'மேட் இன் இந்தியா’ போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும்கூட. அந்த லட்சியத்தை நோக்கியே எங்கள் பயணம் அமைந்திடும். 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு அடைந்திட வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
'மேட் இன் தமிழ்நாடு' சாமானிய மக்களுக்கு எதைக் கொண்டு வந்து தரும் என்பதைப் பற்றிய அக்கறையற்ற ஒரு பொருளாதார அறிவற்ற கூட்டம் உடனே விசில் அடிக்க ஆரம்பித்து விட்டது, “பாத்திய எங்க தலைவரு மோடிக்கே டஃப்பு கொடுக்கறாரு” என்று.
ஏற்கெனவே தமிழ்நாடு இந்தியாவில் அதிகமாக ஏற்றுமதி செய்யும் மாநிலமாகத்தான் இருந்து வருகின்றது. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக உள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களில் 10-இல் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 சதவீதமாக இருக்கின்றது. Fortune 500 நிறுவனங்களில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கள் அலுவலகங்களையோ, தொழிற்சாலைகளையோ, பிபிஓக்களையோ நிறுவியிருக்கின்றன. 2000வது ஆண்டிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீட்டில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பகுதி தமிழ்நாட்டில்தான் செய்யப்படுகிறது.
ஒன்றியத்திலேயே 57 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான பணிகளை இங்கிருந்தே மேற்கொள்கின்றன. ஃபோர்ட், ஷெல் போன்ற பெரிய நிறுவனங்களின் பிபிஓக்கள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 45%, தொழில் துறையின் பங்கு 34%, விவசாயத்தின் பங்கு 21% ஆகும்.
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வைத்து அந்த மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை நம்மால் மதிப்பிட முடியாது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு உயர்கின்றதோ அந்த அளவிற்கு மக்களின் வாங்கும் திறன் மேம்பட வேண்டும். வங்கும் திறன் மேம்பட வேண்டும் என்றால் தனிநபர் வருவாய் அதிகரிக்க வேண்டும். அது அதிகரிக்கவில்லை என்றால் பொருளாதார வளர்ச்சி பெருமுதலாளிகளின் வளர்ச்சியை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடும்.
இந்தியாவில் பொருளாதாரத்தில் முன்னேறிய முன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. ஆனால் தனிநபர் வருவாயில்?
ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 2018-2019 ஆம் ஆண்டு தனிநபர் வருமானம் 142921 ரூபாயாக இருந்தது. இது இந்தியாவில் 12 இடம். 2019 -2020 ஆம் ஆண்டு இது 153853 ரூபாயாக ஆக உயர்ந்தது. இந்திய அளவில் இது 6 வது இடம். மாதம் 12821 ரூபாயும், ஒரு நாளுக்கு 427 ரூபாயும் ஆகும். இத்தனை ஆண்டுகால ஆட்சியில் இவர்களால் சாதிக்க முடிந்தது இதைத்தான்.
இந்த வருமானத்தைக் கொண்டு ஒரு தொழிலாளி தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரும்பாடு. அப்படி இருக்கையில் இதில் பெருமை அடைய என்ன இருகின்றது?
தமிழ்நாட்டைவிட குறைவான பொருளாதார பங்களிப்பு செய்யும் கோவா, டெல்லி, சிக்கிம், சண்டிகர், புதுச்சேரி கூட தனி நபர் வருமானத்தில் முன்னிலையில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் இன்றும் பல பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகளில் தரப்படும் சம்பளம் ஒரு தொழிலாளி உயிர் பிழைத்திருப்பதற்கான சம்பளம் மட்டுமே. பல தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலைக்கு வெறும் 250 முதல் 300 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. தொழிற்சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. இதனால் கேட்பார் இன்றி தொழிலாளர்கள் ஒட்ட சுரண்டப்படுகின்றார்கள்.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத கார்ப்ரேட் கட்சிகள் 'மேட் இன் தமிழ்நாடு' எனப் பேசுவதன் அர்த்தம் “தமிழ்நாட்டைத் திறந்து விடுகின்றோம், வந்து கொள்ளையடுத்துக் கொண்டு போ" என்பதுதான்.
உள்நாட்டு சந்தையைப் பற்றி கவலைப்படாமல் வெளிநாட்டு சந்தையை மையப்படுத்தி ஏற்றுமதிக்கு முன்னுரிமை கொடுப்பது பெரும்முதலாளிகள் நாட்டைக் கொள்ளையடிக்கவே உதவும். பன்னாட்டு தொழிற்நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் தொடங்க மலிவு விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், பல்வேறு வரிச் சலுகைகள், தொழிலாளர் சட்டத்தை தளர்த்துதல் போன்றவை செய்து தரப்படுகின்றன.
ஆனால் இப்படி ஏற்றுமதியை மையப்படுத்தி தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு தரப்படும் சலுகையில் துளி அளவு கூட அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தரப்படுவதில்லை. மலிவான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். குறைந்தபட்ச சம்பளம் பற்றிய எந்த சட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் ஒரு மணி நேர வேலைக்கு 100 ரூபாய் கூட இல்லை என்றால் நிச்சயம் அதை வைத்து தொழிலாளர்களால் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது.
ஆனால் அப்படியான சட்டங்கள் முதலாளிகளுக்கு கோபத்தை வர வைக்கும் என்பதால் முதலாளிகளின் அடியாளாக செயல்படும் கார்ப்ரேட் கட்சிகள் அதைச் செய்வதில்லை.
தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் அவர்கள் கூலி அடிமைகளாக இருந்தால் போதும் என்ற நோக்கில்தான் பொருளாதார வளர்ச்சிகள் ஏற்படுத்தப்படுகின்றன. பல பன்னாட்டு தொழிற்நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் அரசு தரும் சலுகைகளும், மலிவான உழைப்புச் சக்தியுமே உள்ளது.
மலிவான சம்பளம் பெறும் ஒரு தொழிலாளியால் இங்கு உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளையும் வாங்க முடியாது. ஹுண்டாய், போர்டு, ரெனால்ட், பிஎம்டபிள்யு போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடம்பர கார்களுக்காக இங்கே மலிவான உழைப்புக்கு தொழிலாளர்களும், வளங்களும் சுரண்டப்படும். ஆனால் ஒரு போதும் அந்தத் தொழிலாளியால் காராக இருக்கட்டும், பைக்காக இருக்கட்டும் இல்லை வேறு நுகர்பொருளாக இருக்கட்டும் அதை ஒரு போதும் வாங்க முடியாது. வாங்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் தயாரித்தல் என்பதற்கு மாறாக தமிழ்நாட்டுக்காக தயாரித்தல் என்பதாக அரசின் பொருளாதாரக் கண்ணோட்டம் மாற வேண்டும். அதற்கு தொழிலாளர்களின் ஊதியம் கணிசமாக உயர வேண்டும் என்பது அடிப்படை.
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் என சர்வதேச அளவில் அறியப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை ஸ்டாலின் அமைத்தார்.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ரகுராம் ராஜன், மோடி அரசு 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்த போது “சீனாவின் வழியில் ஏற்றுமதியை மனதில் வைத்து இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை விடுத்து உள்நாட்டு சந்தையை மனதில் வைத்து ‘இந்தியாவுக்காக தயாரிப்போம்’ என்ற திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி துறையை மட்டும் ஊக்குவித்தது சீனாவுக்கு பலன் கொடுத்திருக்கலாம். ஆனால் நம் நாட்டின் சூழல் அதிலிருந்து மாறுபட்டது. எனவே அந்தத் திட்டம் இங்கு பொருந்தாது” என எச்சரித்திருந்தார்.
ஆனால் பொருளாதார ஆலோசனைக் குழுவில் அவரை வைத்துக் கொண்டு ஸ்டாலின் அவர்கள் 'தமிழ்நாட்டில் தயாரிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைப்பது முரண்பாடாக இருக்கின்றது.
நமக்குத் தெரியும் நோக்கியா என்ன செய்துவிட்டு ஓடியது என்று. சுமார் 6,600 தொழிலாளர்கள் நோக்கியாவில் பணிபுரிந்தனர். நோக்கியாவிற்காக உதிரி பாகங்களை வெளியில் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கையையும் சேர்ந்து 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்தனர். அவர்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்த நோக்கியா பெண் தொழிலாளர்கள் மற்றும் அதிகப்படியான ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி மிகக் குறைந்த கூலி கொடுத்து சுரண்டியது.
ஐரோப்பிய நாடுகளில் தனது தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆண்டொன்றுக்கு சராசரி ஊதியமாக 29 லட்சத்தை வழங்கிய நோக்கியா, திருப்பெரும்புதூர் ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு 45 மடங்கு குறைவான சம்பளத்தையே கொடுத்தது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பரப்பளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானவை என்றும், தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடியைக் கையாளுகின்றோம் என்றும் பெருமையாகப் பேசுகின்றோம். ஆனால் தனி நபர் வருவாயை அந்த நாடுகளோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
ஸ்டாலின் அவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 4 லட்சத்துக்கு மேலாக உயரும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுவே ஒரு மோசடியான தொழிலாளர் விரோத வாக்குறுதிதான். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து சம்பளம் ஆண்டுக்கு 4 லட்சமாக உயரும் போது இப்போது தொழிலாளியின் வாங்கும் திறன் எப்படி இருந்ததோ, அதைவிட பத்தாண்டுகள் கழித்து இன்னும் மோசமாகவே இருக்கும். உண்மையிலேயே இவர்களுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து அதை உடனே செயல்படுத்த உத்திரவிடலாம். ஆனால் கார்ப்ரேட் கட்சிகள் அதைச் செய்யுமா என்பதுதான் பெரிய கேள்வி.
வெளிநாட்டு முதலீட்டையும், உள்நாட்டு கார்பரேட் முதலீட்டையும் ஈர்க்க வரிச்சலுகையை எல்லா கார்ப்ரேட் கட்சிகளும் தருகின்றன. இதனால் முதலீடு வந்தது, ஆனால் சொன்னது போல மக்களுக்கு வேலைவாய்ப்புதான் உருவாகவில்லை.
மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரித்தால் மட்டுமே இங்கு பொருட்களை உற்பத்தி செய்து விற்க முடியும். ஆனால் அரசின் கொள்கைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வேலையின்மை தான் அதிகரித்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தியை உயர்த்தாத வரை அரசின் திட்டங்கள் நாட்டின் வளங்களை பன்னாட்டு பெருமுதலாளிகளும், தரகு முதலாளிகளும் சுரண்டிக் கொழுக்க மட்டுமே உதவும். ஸ்டாலின் அவர்களின் பாதை தமிழ்நாட்டின் வளங்களை மொட்டை அடிப்பதை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றது.
- செ.கார்கி