இலங்கை ஒரு அழகான தீவு தேசம். பாதத்தை பின்பற்றும் சிங்களர்கள், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என மூன்று தேசிய இனங்கள் அங்கே வாழ்கிறார்கள்.

எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தரக்கூடாது என்ற புத்த மதமே பெரும்பான்மையினரின் மதமாகும். அஹிம்சையைப் போதித்த புத்தரை வழிகாட்டியாகக் கொண்ட சிங்களர்கள், உலகின் மிகப்பெரிய மதவெறி சக்தியாக அறியப்படும் அளவுக்கு தங்களின் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒரு விந்தைதான். அங்குள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் நல்லவர்களே. ஆனால் அவர்களின் மத குருக்களான புத்த பிட்சுகள் அம்மக்களை இனவெறி-மதவெறியோடு வழி நடத்துவதுதான் இலங்கை இன சிக்கலுக்கு மிகப்பெரிய காரணியாகும். அறிவுத் திறன் கொண்ட தமிழர்களையும், வணிகத் திறனும் உழைப்பும் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களையும் திறமையால் சமாளிக்க முடியாத சிங்களர்களை, தவறாகத் தூண்டுவது புத்த பிட்சுக்களின் தலைமைதான் என்பது கசப்பான உண்மை.

1980களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பாதைக்கு சென்றது இலங்கை சிங்களப் பேரினவாதத்தின் பயங்கர நடவடிக்கைகளால்தான் என்பதை வரலாறு மறக்காது.

நீண்ட நெடிய தியாகங்களோடு நடைபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மே 17, 2009 அன்று முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஈழத்தமிழர்களின் தலைமை திறன் வலிமை குன்றிய நிலையில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது சிங்கள அரசு!

சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சமாதானக் குழுவாக செயல்படும் வாய்ப்பு இருந்தும் அதை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு புலிகளின் சில தவறுதான் காரணம் என்று கூறப்படுகிறது. புலிகளுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையே நிலவிய கடந்த கால கசப்புகளால், ஈழத்தமிழர்களின் மீதான கொடுமைகள் குறித்து இலங்கை முஸ்லிம்கள் தரப்பில் வெளிப்படையான கண்டனங்கள் எழவில்லை. ஆனால், இது ஆரோக்கியமற்ற போக்கு மட்டுமல்ல; ஒருவர் மீதான கோபம், அச்சமூகத்தின் மீதான நியாயங்களை மறுத்து விடுவதாக இருக்கக் கூடாது என்பது திருக்குரானின் (5:8) அறிவுரையாகும்.

பாலஸ்தீனம், கொசவோ, செசன்யா, ஈராக், ஆப்கான் போன்ற நாடுகளில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களையும், சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறைகளையும் கண்டித்த இலங்கை முஸ்லிம் அறிவுஜீவிகள், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மோசமான இனப்படுகொலை குறித்து தங்களுக்குள் கவலையுடன் விவாதித்துக் கொண்டாலும் வெளிப்படையாக ஏன் கண்டிக்கவில்லை? இது நியாயமா? என பலரும் கேட்டார்கள்.

ஈழத்தமிழர்களை ஒடுக்கிய சிங்களப் பேரினவாதம் அடுத்து தமிழ் பேசும் முஸ்லிம்களைத்தான் ஒடுக்கும் என பலரும் கவலைப்பட்டார்கள். அதுதான் இப்போது நடந்திருக்கிறது! ஏப்ரல் 20ம் தேதி கொழும்புவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புல்லா என்ற இடத்தில உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஜும்மா சிறப்பு தொலுகையிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த மத குருமார்கள் சிங்கள காவலர்களின் துணையுடன் பள்ளிவாசலை சுற்றி வளைத்து, முஸ்லிம்களை வெளியேற்றியுள்ளனர். கடப்பாறைகளால் தாக்கியதில் பள்ளிவாசலின் சில பகுதிகள் சேதமடைந்தன. கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் பள்ளிவாசலை முழுமையாக சேதப்படுத்த முடியவில்லை.

dambulla_500

இச்சம்பவம் இலங்கையில் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 26.4.12 அன்று முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கடையடைப்பை நடத்தியுள்ளனர். கொழும்புவிலும் 27.4.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் இலங்கை அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிவாசல் இருக்கும் அப்பகுதியை பௌத்தர்களின் புனித பூமி என இலங்கை அரசு அறிவித்து, அங்குள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் என கொக்கரித்ததுதான் பிரச்சனைக்கு மூலக் காரணம்.

ஆளும் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் அங்கம் பெற்றிருக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க முடியாது என முஸ்லிம் சமூகத்தின் குரலாக எச்சரித்திருக்கிறார். பல முஸ்லிம் தலைவர்களின் கருத்தும் அதுதான்.

முக்கிய திருப்பமாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதம தலைவர் திரு, ருத்ரகுமாரன் தன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் உலகமெங்கும் தேசத்தை தாண்டிய நதிகளாய் வாழும் ஈழத்தமிழர்களின் ஆதரவை இலங்கை முஸ்லிம்களின் பக்கம் திருப்பியிருக்கிறார். கடந்தகால கசப்பான நிகழ்வுகளை சரி செய்யும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.

காத்தான்குடி படுகொலைகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதுதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் வலி புரியும். ஆனால் பாதிப்பை ஏற்படுத்திய புலிகள் அமைப்பு இப்போது இல்லை. அவர்கள் செய்த தவறுக்காக முழு ஈழத் தமிழர்களையும் குற்றவாளிகளாகக் கருதுவது இஸ்லாத்தின் மனிதநேய கொள்கைகளுக்கு எதிரானதாகும்.

முற்றிலுமாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களும், மூன்றாவது தேசிய இனமான இலங்கை முஸ்லிம்களும் தங்களின் எதிர்கால வாழ்வுரிமைகளுக்காகவும், வழிபாட்டுரிமைக்காகவும் கசப்புகளை மறந்து கை கோர்க்க வேண்டிய முக்கிய கட்டம் வந்திருக்கின்றது. இரு சமூக தலைமைகளும் பொறுப்புணர்வோடு சிந்திப்பதும், தங்களின் பொது பிரச்சனைகளை விவாதிப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

காரணம், பொருளாதாரத் தேடலும், கூர்மையான வணிக அறிவும் கொண்ட இலங்கை முஸ்லிம்களின் உழைப்பையும், முன்னேற்றத்தையும் ஆரோக்கியமாக எதிர்கொள்ள சிங்களர்களால் முடியவில்லை. அந்தப் பொறாமையும், நீண்டகால எரிச்சலும் இப்போது வெடித்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு முயற்சி என்பது ஒரு தொடக்கம்தான்.

முன்பு ஈழத்தமிழர்களின் மீதான இனவெறியில் கவனம் செலுத்தியதால், முஸ்லிம்களை பகைக்காமல் விட்டு வைத்திருந்தனர். ஒரே நேரத்தில் இரு பெரும் தேசிய இனங்களை பகைப்பது நல்லதல்ல என்ற தந்திரமே அவர்களின் காத்திருப்பிற்குக் காரணமாக இருந்தது.

ஐ.நா. மனித உரிமை அவையில் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோது, பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக முடிவை எடுத்தன. இப்போது அந்த நாடுகள் இலங்கையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது தெற்காசிய சர்வதேச அரசியலில் கூர்ந்து கவனிக்கப்படும்.

இனி இலங்கை அரசு புதிய நாடகத்தை அரங்கேற்றக் கூடும். உலகமெங்கும் எழுந்திருக்கும் கடும் எதிர்ப்பு காரணமாக, பள்ளிவாசல் இடிப்பை ஒருவேளை சிங்கள அரசை தற்காலிகமாக கைவிடக் கூடும். ஆனாலும் நிச்சயம் தங்கள் மனதில் உள்ள வன்மங்களை கைவிட மாட்டார்கள். இலங்கை முஸ்லிம்களை சாந்தப்படுத்தும் நோக்கிலும், உலக நாடுகளிடம் நற்பெயரை ஈட்டும் விதமாகவும் சில சலுகைகளை கூட அறிவிக்கக் கூடும். இதில் இலங்கை முஸ்லிம்களும், அரசியல் தலைமைகளும் ஏமாறாமல் கவனமாக சிந்திக்க வேண்டும். தங்களின் எதிர்கால அரசியல், பொருளாதார, சமய உரிமைகளை எத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பாதுகாக்க முடியும் என்பது குறித்தான ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

தமிழ் ஈழத் தலைவர்களோடும், தமிழ் மக்களோடும் 1980-களுக்கு முந்தய சகோதரத்துவ உறவை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டும். அதுபோல் ஈழத்தமிழர் தரப்பிலும் புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லெண்ண நடவடிக்கையாக, புலிகளால் முன்பு விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் வடக்குப் பகுதிகளில் அவர்களுக்குரிய வாழிடங்களில் வாழவும், அவர்களது அனைத்து வாழ்வுரிமைகளையும் பின்பற்றவும் ஈழத் தமிழர்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தம்புள்ள பள்ளிவாசல் சம்பவம் தமிழகத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதுகுறித்து புதிய புரிதல்கள் மலர வேண்டும்.

திரு. வைகோ அவர்களிடம் நான் பேசிய உடன், இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் அறிக்கை விட்டதோடு, தமுமுக, இலங்கை தூதரகத்திற்கு எதிராக நடத்திய முற்றுகை போராட்டத்தில் தங்கள் கட்சியின் சார்பில் பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்தார். வைகோவைத் தொடர்ந்து, கலைஞர் அவர்களும் 'இலங்கையில் பள்ளிவாசலை இடித்து நாசப்படுத்துவதை நாகரீக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 29 அன்று கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டதின்போது திரு. தொல் திருமாவளவனிடமும் இதுகுறித்து பேசினேன். அவரும் கவனமாக கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பான 'டெஸோ' வை தி.க. தலைவர் கீ. வீரமணியின் வேண்டுகோளின்படி கலைஞர் மீண்டும் தொடங்கியிருக்கிறார். அது அரசியலுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். 'டெஸோ' குழுவினரும் நமது கருத்தை பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து 'டெஸோ'வில் அங்கம் வகிக்கும் திரு. சுப. வீரபாண்டியனிடமும் பேசியுள்ளேன்.

மே 17 இயக்கம், SAVE TAMIL இயக்கம், நாம் தமிழர், அய்யா பழ. நெடுமாறனின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற சக்திகள் எமது கருத்தை பரிசீலிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எனது எண்ணம் என்னவெனில், இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சூழலை கருத்தில் கொண்டு, இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகள், இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஈழப் போராட்ட ஆதரவு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை முதல் கட்டமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.

இதன் மூலம் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள புதிய ஆதரவு அலையை உருவாக்க முடியும். இதற்கு திரு. தமிழருவி மணியன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் போன்றோர் ஏற்பாடு செய்யலாம். தமுமுகவும் இதற்கு துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நமது கருத்தை இலங்கை தமிழர் தலைமையும், இலங்கை முஸ்லிம் தலைமையும் பரிசீலிக்க வேண்டும். எதிர்கால பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக, கடந்தகால கசப்புகளை மறந்து, புதிய திசையில் பயணிப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

- தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

Comments

7 comments

7
தமிழ் இந்து
2007ல் மலேசியாவில் வழிபாட்டு உரிமைகள் பற்றி ஹிந்துக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து ஹிண்ட்ரப் அமைப்பின் மூலம் அமைதியாக அகிம்சைப் போராட்டம் நடத்திய போது அங்கு எல்லாமே சரியாக இருக்கிறது என்று பேசியது,எழுதியது யார்- தமிழக முஸ்லீம் முன்னேறக் கழகம்.போராடியவர்களும் தமிழர்கள்தானே.அப்போது ந் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவைதானா என்று ஆராயுங்கள் என்று கூட கூறாமல் செயல்பட்டது ஏன்.இப்போது இலங்கையில் ஒரு பிரச்சினை அதுவும் தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு என்றால் அனைவரும் அதில் அக்கறை காட்டி ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.இது என்ன நியாயம்.அரசில் பங்கேற்றுள முஸ்லீம் காங்கிரஸே இந்த விவகாரத்தை பெரிது படுத்த விரும்பவில்லை என்பதுதானே உண்மை.அப்படியிருக்க மநேம கட்சி இங்கு எதற்காக அனைவரது ஆதரவையும் கோருகிறது.இது வேடிக்கையாக இல்லையா.இவர்கள் தமிழர்களுக்கு பிரச்சினை என்று வரும் போது முஸ்லீம் தமிழர்களுக்கு ஒரு நீதி, முஸ்லீம்கள் அல்லாத தமிழருக்கு இன்னொரு நீதி என்று நிலைப்பாடு எடுப்பார்கள். அதை எல்லோரும் ஆதரிக்க வேண்டுமாம்.இதுதான் இவர்களின் மனித நேயம்.

தலிபான்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த பாமியன் புத்தர் சிலைகளை உலக நாடுகள் பல இடிக்க வேண்டாம் என்று கோரிய போதும் இடித்தார்களே அப்போது இஸ்லாமிய அமைப்புகள் என்னனென்ன நிலைப்பாடுகள் எடுத்தன.
தலிபான்களை ஒருமித்த குரலில் அவை எதிர்த்தனவா.
தமிழர்களே சிந்தியுங்கள், அனைத்து பேரினவாதங்களும்,மத வெறி சிந்தனைகளையும் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பதை உணருங்கள்.
உமர்கயான்.சே
அன்பு சகோதரர் தமீமுன் அன்சாரியின் இப்பதிவு காலத்தின் தேவை. அனைத்து தரப்பு மக்களும் இனைந்து சுமுகமாகவே வாழவேண்டும் என்று விரும்பினாலும் தமிழகத்தில் இசுலாமிய சமுகத்தை இரு கூறாக்கியவர்கள் இலங்கையிலும் அதே வேலையைதான் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஈழ இன படுகொலையை பற்றி மனிதநேய மார்க்கத்தை கொண்டிருக்கும் நாம் பேசினாலே ஏதோ துரோகியை பார்ப்பது போல் பார்த்த காலம் போய் இன்று இசுலாமிய சனநாயக வாதிகள் இன படுகொலையை பேசும் வல்லமையை பெற்று இருப்பது சிறப்பானதே அதுவும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் இயக்கங்கள் செயல்படுவது சிறப்பிலும் சிறப்பு. வாழ்த்துக்கள்
தமிழ்குடிமகன்
இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், மலேசிய தமிழர்களின் பிரச்சனையும் வேறானவை. இலங்கை தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் , மலேசிய தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குடியேறியவர்கள். மலேசியாவில் அந்த மண்ணின் பூர்வக்குடி மக்களான மலாய் சமுகத்திற்கு நிகராக அறிவிலும், பொருளாதாரத்திலும் தமிழர்கள் வளமாகவே உள்ளனர். அங்குள்ள தமிழ் முஸ்லிம்களை விட அரசியலில் மலேசிய தமிழர்கள் செல்வாக்கோடு திகழ்கின்றனர். ஹின்ட் ராஃப் என்பது மலேசிய தமிழர்களில் ஒருகுறிப்பிட்ட சாதிப் பிரிவினர் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அமைப்பாகும். இந்தியாவில் இந்துத்துவத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மலேசிய பிரிவாகும். இந்நிலையில் அங்குள்ள தமிழ் முஸ்லிம், கிறித்தவர்களை முற்றிலுமாக புறக்கணித்து திட்டமிட்டே தமிழர்களுடைய சமகால நலன்களைப் பற்றி கவலைப் படாமல் செயல்பட்ட காரணத்தினால் தான் ஹின்ட்ராஃப் அமைப்பை பல தமிழ் அமைப்புகளும் எதிர்க்கின்றன. மலேசிய தமிழர்கள் இலங்கை தமிழர்களை போல் மூன்றாம் தர குடிமக்கள் போல்நடத்தப்படவில்லை. அவர்கள் இனப்படுகொலைக்கும் ஆளாகவில்லை எனவே இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம். ஈழத்தமிழர்களுக்காக கடந்த நான்காண்டுகளாக பல்வேறு தமிழமைப்புகளோடு இணைந்து தமுமுகவினர் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். வேண்டும் என்றால் பழநெடுமாறன், வைகோ, திருமா,சீமான் போன்றவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
தோழர் தமிழ் இந்து அவர்கள் மலேசிய தமிழர்களின் ஹிண்ட்ராப் போராட்டம்
குறித்து எழுதியுள்ளதால் நான் சில விளக்கங்களை தருகிறேன்...

மலேசிய ஒரு அதிகாரபூர்வமான இஸ்லாமிய நாடு இன்னும் சொல்லபோனால்
உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையே மலேசியாதான்
இருப்பினும் இங்கு வாழும் சீன மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் மலேசிய அரசு
அமைச்சரவை உள்ளிட்ட அனைத்திலும் பங்களிப்பை தந்திருக்கிறது... சீனர்கள் தங்களுக்கு
அரசு வழங்கியுள்ள அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி இன்றைக்கு எல்லா துறைகளிலும்
முன்னேறி இருக்கிறார்கள்... ஆனால் தமிழர்கள் சினிமா மோகத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு
வன்முறை குண்டர் கும்பல் போன்ற சமூக விரோத செயல்களில் தங்களை ஈடுபட்டு தங்களின் எதிர்காலத்தை வீணாக்கி வருகிறார்கள்...

ஹிண்ட்ராப் என்கிற அமைப்பின் போராட்டம் என்பது வலிமையற்றது அதன் தலைமை நிர்வாகிகளான உதயகுமார் வேதமூர்த்தி போன்றவர்களுக்கு தாய்மொழியான தமிழே இன்னும் சரிவர பேசதெரியாது எந்த அரசை எதிர்த்து இவர்கள் பேரணி ஆர்பாட்டங்கள் நடத்தினார்களோ
அந்த அரசுக்கு ஆதரவாகவே பெரும்பாளான ஹிண்ட்ராப் நிர்வாகிகள் இப்போது செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அறியாத தோழர் தமிழ் இந்துவிற்க்காக அனுதாபபடுகிறேன்...

குறிப்பாக ஹிண்ட்ராப் நிர்வாகிகள் மலேசிய அரசால் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அவ்வியக்கத்தை வழிநடத்தியவர் பேராசிரியர் சத்தியேந்திரன்
இப்போது அவர் மலேசிய மக்கள் சக்தி என்கிற அரசாங்க ஆதரவு கட்சியின் தலைவர் அரசாங்கத்தின்
உயரிய விருதான :டத்தோ" என்கிற விருதையும் அவர் பெற்றுள்ளார்... இந்னொரு வேடிக்கை என்னவென்றால் இவர்கள் பேரணி நடத்தியபோது எந்த தமிழர் தலைவரின் படத்தையும் ஏந்தி செல்லவில்லை மாறாக மகாத்மா காந்தியடிகளின் படத்தை ஏந்தி சென்றார்கள் இதில் இருந்தே இவர்களின் அறியாமையை அறியலாம்...

மலேசிய இந்தியர்கள் அதாவது தமிழர்கள் மலேசியாவில் வளமோடும் நலமோடும் வாழுகிறார்கள்...
ஒரு இஸ்லாமிய அரசாக இருந்தாலும் இங்குள்ள கோயில் களின் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளுக்கும் புதிய கோயில்களின் கட்டுமானத்திற்கும் அரசு நிதி வழங்கி வருகிறது... ஆகவே விபரம் இல்லாமல் சகோதரர் அன்சாரி அவர்களின் காலத்தின் தேவைக்கேற்ற பதிவை விமர்சிப்பது தவறு என்பதை தோழர் தமிழ் இந்து போன்றவர்களுக்கு சுட்டுக்காட்ட விரும்புகிறேன்... நன்றி
சுகுமார்
உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தான் உள்ளது. அங்கு வருடம்தோறும் மலேசியா அரசு உதவியுடன் கோவில் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிலை வழிபாட்டையும், பல கடவுள் கொள்கைகளையும் நிராகரிக்கும் இஸ்லாம் இங்கே ஆட்சி மதமாகும். அப்படி இருந்தும் அங்கே தமிழர்களின் சமய உரிமை மதிக்கப்படுகிறது. அங்கே அனுமதி இல்லாமல் பொது இடங்களில் கட்டப்பட்ட பல்மத வழிபாட்டு தளங்கள் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படுகின்றன. அதில் கோவில்களும், பள்ளிவாசல்களும், புத்த விகாரங்களும், தேவாலயங்களும் உண்டு. உலகிலேயே மலேசியாவில்தான் தமிழர்கள் நிம்மதியாக உள்ளனர். இதை மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தமிழ், இந்திய அமைப்புகளும் உணர்ந்துள்ளன. நாங்கள் அரசியல், கல்வி, வணிகம், வேலைவாய்ப்புகளில் இந்திய முஸ்லிம்களை விட நல்ல நிலையில் உள்ளோம். எனவே மலேசியாவில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் ஓரிரு பிரச்சனைகள் உள்நாட்டு அரசியல் தொடர்பானவை. அதையும் இலங்கை தமிழர் பிரச்சனையும் தொடர்பு படுத்த வேண்டாம். குடியேறிய நம் மீது மலேசியாவில் மண்ணின் மைந்தர்களான மலாய் முஸ்லிம் மக்கள் மிகுந்த அன்பு பாராட்டுகிறார்கள். நமது தமிழ் இளைஞர்கள் தமிழ் சினிமாவை பார்த்து கேங் லீடர்கள் போல குண்டாரிசம் செய்யாமல் நமது தமிழ் பண்பாட்டோடு வாழ்ந்தால் அது நமது இனத்துக்கு பெருமை சேர்க்கும். நமக்குள் உள்ள சாதி, வர்க்க முரண்பாடுகளை கலைவதுதான் மலேசிய தமிழர்களின் முக்கிய பிரச்சனையாகும்.
mojo
அன்று அன்று தமிழர் பகுதியான கிழக்கு மாகாண காத்தான்குடி மசுதில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு இஸ்லாமிய மக்களுக்கு அதரவாக குரல் கொடுக்கவில்லை அண்ணா
இன்று வடகிழக்கு தமிழர் மாகாணத்தை தவிர்த்து மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள
தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பிற்கு குரல் கொடுப்பது ஏன்
காத்தான்குடி. புலிகளால் இஸ்லாமியர் மக்கள் படுகொலை செய்யப்பட்போழ்து ஏன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வாய் திரகவிலை http://www.youtube.com/watch?v=VyRISK5PChk
mojo
எப்படி வருவார்கள் சகோ புலிகள் செய்த இந்த செயயலால் எப்படி தமிழர்கள் மிது நம்பிக்கை வரும் காத்தான்குடி. புலிகளால் இஸ்லாமியர் மக்கள் படுகொலை http://www.youtube.com/watch?v=VyRISK5PChk

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.