உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக.
 
நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை.
 
kamal_335உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை.
 
நினைவிருக்கிறதா கமல் அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில் ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து, 'முஸ்லிம்' எனக் கருதி உங்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்து விட்டீர்களா? உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது.
 
முஸ்லிம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப் படுகிறான், தனிமைப்படுத்தப் படுகிறான் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரங்கள்.
 
இந்நிலையில் இன்று காலை (30-01-2013) நீங்கள் அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப் பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள் மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தன.
 
உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது? உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார்? பின்னணி என்ன? அது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.
 
தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும் பாதிக்கப்பட்டால், நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம். கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே!
 
நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை? பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம்  ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை?
 
இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  அதையெல்லாம் படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன்? இது தேவையா?
 
நேதாஜியையும், பகத்சிங்கையும் ஆதிக்க எதிர்ப்புப் போராளிகளாக நீங்கள் பாராட்டும்போது, அமெரிக்காவை எதிர்த்து தங்களின் விடுதலைக்காகப் போராடும் ஆப்கானியர்களை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஏன்? அனுதாபத்தைப் பெறுவதற்கு முன்பு எங்களின் நியாயத்தை உணருங்கள்.
 
இன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்; பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
இப்படி தமிழ்நாடு முழுக்க உங்களுக்கு எதிராக, வேறு ஏதோ காரணங்களுக்காக யார் யாரோ செய்யும் எதிர்ப்புகளுக்கு எங்கள் சமூகத்தை காரணமாக்கக் கூடாது. எங்களுக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உங்களை சரிப்படுத்துவது தான் எங்களுக்கு நோக்கம்; எதிர்ப்பது அல்ல.
 
தமிழ்நாடு எங்கும் விஸ்வரூபத்தை முன் வைத்து ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
 
உங்களுக்கும், அந்த பெரிய இடத்து தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த வணிக மோதல்கள் மற்றும் ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று நீங்கள் பேசியது போன்றவையெல்லாம் இப்பொழுது உங்களுக்கு எதிராக அரசியல் வடிவம் பெறுகிறது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.
 
நல்லவேலையாக இன்று (30-01-2013) மறுபடியும் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு உங்களை ஹாருண் எம்.பி., தேசிய லீக் பசீர், முஸ்லிம் லீக் ஜைனுல் ஆபுதீன் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில காட்சிகளையும், வசனங்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப் போவதாகவும், முஸ்லிம்களுக்கும், எனக்கும் உள்ள பிரச்சனை இதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவும் நீங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். இதை கூட்டமைப்பு எப்படி அணுகப் போகிறது என்று தெரியவில்லை. எது எப்படி ஆயினும் இப்பிரச்சனை சுமூகமான முறையில் முடிக்கப்பட வேண்டும்.
 
எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னால் கூட நாங்கள் அமைதி வழியிலேயே அனைத்தையும் சந்திக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதை உங்கள் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
 
தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டுகின்றன. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இப்பிரச்சனையைக் காரணம் காட்டி பதற்றம் உருவாவதை யாரும் விரும்பவில்லை. அதே சமயம் உங்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் எங்களையும் புரிந்து கொண்டு எங்களோடு சகோதரனாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களுக்கு இறைவன் நேர்வழி (ஹிதாயத்) காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உங்கள் கடன் தீரவும், நீங்கள் அமைதியைப் பெறவும், இம்மண்ணிலேயே வாழவும் ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பானாக.
 
நாம் எல்லோரும் இந்தியர்கள்; தமிழர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து அன்பையும், நேசத்தையும் கட்டிக் காப்போம்.
 
இப்படிக்கு,
உங்கள் முஸ்லிம் சகோதரன்

- தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

Comments

7 comments

7
arul
முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுத்தால் விஸ்வரூபம் சரியா ... கசாப்பை திவிரவாதியாக தான் தமிழன் பார்த்தான் .,சிறுமியின் கழுத்தை அறுத்தவனை , மலாலா வை தாக்கியவனை அடிப்படைவாதியாக மட்டுமே தமிழன் பார்ப்பான் .
வேங்கை சு.செ.இப்ராஹிம்
சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களூக்கு பாராட்டுக்கள். ஆம் சுமுகத்தையே விரும்புகிறோம்... தமிழக முஸ்லிம்களின் எண்ணங்களை நிதர்சணமாக பதிவுசெய்தமைக்கு வாழ்த்துக்கள்...
jaafar sadiq
இந்த கடிதம் சரியானது பாராட்டுக்கள்,மற்றபடி பஷீரையும்,ஜே எம் ஹாரூனையும் கமல் தன்கூட நிப்பாட்டிக்கிட்டு பிரச்சனைக்குறிய காட்சிகளை நான் நீக்கிவிடுகிறேன் இனி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை சமரசமாகி விட்டோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனென்றால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் அல்ல இவர்கள்,இவர்களோடு இன்னும் 23 அமைப்புகள் உள்ளன இவர்களின் அனுமதி இல்லாமல் எந்த சமரசத்திற்க்கும் இடமில்லை,வெரும் பஷீரையும்,ஜேஎம் ஹாரூனையும் தன்கூட நிப்பாட்டிக்கொண்டு பேட்டி கொடுப்பது ஏமாற்று வேலை,ஆகவே ஆகவேண்டிய 23 அமைப்புகளையும் கூட சேர்த்து பேட்டி கொடுத்தால்தான் பிரச்சனை தீரும்..
சகோதரன்
ஒரு திரைப்படம் மத நல்லிணக்கத்தை சீரழித்து விடும் என்பது தங்கள் நம்பிக்கையா? அப்படி அது உங்கள் நம்பிக்கை எனில் சில கேள்விகளுக்கு பதில் தேடுகிறேன் உங்களிடம். தமிழில் நட்கருத்துக்களை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை கண்டு எவரேனும் மாறியவர் உளரோ? ஒரு திரைப்படம் ஒரு இனத்தை இழிவுபடுத்துகிறது என்ற எண்ணம் மேலோங்கினால், நமக்கு ஆண்டவன் அளித்த அறிவுகள் எத்தனை? இன்று ஒரு திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று போராடும் உங்கள் பார்வையில் ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் நடந்தவை,நடப்பவை அனைத்தும் மத நல்லிணக்க போராட்டங்களா? தீவிரவாதம் உங்கள் மதத்தை இழிவுசெய்யவில்லையா? இறுதியாக ஒரு கேள்வி... உங்கள் இந்த (பிடி)வாதத்திற்கு பின் அரசியல் ஆதாயம் தேடல் எண்ணம் இல்லை என்று உங்கள் மனசாட்சி பதில் சொல்லுமா? இவைகளுக்கு உங்கள் பதில் இல்லையெனில் நீங்கள் கொண்டுள்ளது மூடநம்பிக்கையேயன்றி நம்பிக்கை அல்ல.
viyasan
க‌ம‌லஹாச‌ன், ஷாருக்கான், க‌லாம் போன்ற‌வ‌ர்க‌ளை முஸ்லீம்க‌ளாக‌ நினைத்ததால் அமெரிக்காவில் அவ‌மான‌ம் ம‌ட்டும் தான் ப‌ட்டார்க‌ள். ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஒவ்வொருவ‌ரையும் புலிக‌ளாக‌ இந்தியா பார்த்ததால் எத்த‌னையோ பேர் த‌ம‌துயிரையும், இளமைப்ப‌ருவ‌த்தையும் இழ‌ந்திருக்கிறார்க‌ள். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரையும் புலிக‌ளாக‌ப் பார்த்து இந்தியா விசா வ‌ழ‌ங்க‌ ம‌றுத்ததால், எத்த‌னையோ ஈழ‌த்த‌மிழ் முதியோர்க‌ள் ஒருமுறையாவ‌து த‌ம‌து முன்னோர்க‌ளின் தமிழ்நாட்டு ஆல‌யங்க‌ளைத் த‌ரிசிக்க‌ வேண்டுமென்ற‌ க‌னவு நிறைவேறாம‌லே க‌ண்க‌ளை மூடியிருக்கிறார்க‌ள். அதும‌ட்டும‌ல்ல‌ விடுத‌லைப்புலிக‌ளைப் ப‌ற்றி ப‌ல‌ர் இல்லாத‌, பொல்லாதவ‌ற்றையெல்லாம் இட்டுக்க‌ட்டியும் க‌தைக‌ள் க‌ட்டுரைக‌ள் எழுதிய‌து ம‌ட்டும‌ல்ல‌, ஜெய்னுலாப்தீன் போன்ற‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் ஈழ‌விடுத‌லைப்போரை, அத‌ன் போராளிக‌ளைக் கொச்சைப்ப‌டுத்தியும் கூட‌ப் பேசியிருக்கின்ற‌ன‌ர். அப்ப‌டியிருந்தும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் எவ‌ரும் புலிக‌ள் ஆயுத‌மெடுத்துப் போராட‌வில்லை அல்ல‌து அவ‌ர்க‌ள் யாரையும் கொல்ல‌வில்லை, அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிப் ப‌ட‌மெடுத்தால் அது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரையும் தீவிர‌வாதிக‌ளாக‌க் காட்டும் செய‌ல் என்றெல்லாம் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌வில்லை. ஆனால் ஆப்கானிய‌ முஸ்லீம் தீவிர‌வாதிக‌ளை, அந்த‌ த‌லிபான்க‌ள் செய்த‌ கொடுமைக‌ளைப் ப‌டமெடுத்துக் காட்டினால் அது தமிழ்நாட்டு முஸ்லீம்க‌ளின் ம‌ன‌தைப் புண்ப‌டுத்துகிற‌தாம். விஸ்வ‌ரூப‌ம் ப‌ட‌த்தில் காட்சிக‌ளை வெட்டினால், மாற்றினால் அல்ல‌து ப‌ட‌த்தை வெளிவராம‌ல் செய்தால் ம‌ட்டும் த‌லிபான்க‌ள் எல்லாம் மனித‌நேய‌ம் நிறைந்த‌ விடுத‌லை வீர‌ர்க‌ளாகி விடுவார்க‌ளா அல்ல‌து அவ‌ர்க‌ள் குற்ற‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என்று உல‌க‌ம் ஏற்றுக் கொண்டு விடுமா?. ஆப்கானில் த‌லிபான்க‌ள் த‌ம‌து சொந்த‌ ம‌க்க‌ளுக்கு, அதிலும் பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் கூட‌ எவ்வ‌ள‌வு கொடுமைக‌ளைச் செய்தார்க‌ள்,அப்பாவிப் ப‌ணயக்கைதிக‌ளின் க‌ழுத்துக‌ளை எப்ப‌டி ஈவிர‌க்க‌மின்றிக் காட்டுமிராண்டித்த‌ன‌மாக‌ அறுத்தார்க‌ள் என்ப‌து த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளுக்குத் தெரியுமோ என்ன‌மோ ஆனால் உல‌க‌ம் முழுவ‌த‌ற்கும் தெரியும். விஸ்வ‌ரூப‌ம் வெறும் திறில்ல‌ரே த‌விர‌, அதைப்பார்த்து யாரும் வ‌ர‌லாற்றைக் க‌ற்றுக் கொள்ள‌ப் போவ‌தில்லை. சும்மா கிட‌ந்த‌ ச‌ங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ப‌து போல், வெறும் பொழுதுபோக்கு Thriller திரைப்ப‌ட‌த்துக்கு தேவையில்லாத‌ விள‌ம்ப‌ர‌த்தைக் கொடுத்து த‌மிழ்நாட்டில் அர‌பும‌யமாக்க‌லும், தீவிர‌வாத‌ இஸ்லாமிய‌ வ‌ஹாபியிச‌மும், த‌லிபானிச‌மும் வெகுவேக‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌தென்ப‌தை முழு இந்தியாவுக்கு ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌ம் முழுவ‌த‌ற்கும் காட்டியிருக்கிறார்க‌ள் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள்.
http://viyaasan.blogspot.com
ganeshanr
- தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
ஒரு மிகப்பெரிய மனிதர் என்று நினைத்தேன்
நீங்களுமா
agniputhiran
ஜெயாவின் விஸ்வரூபம்…

தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசியல் விளையாடிவிட்டதாகவே தெரிகிறது. முஸ்லீம் தோழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு படம் ஓடியதும் பின் தாய்நாட்டு முஸ்லீம் தோழர்களின் அறிவுத்தலால் அங்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் முஸ்லீம் சகோதரர்கள் இருந்தும் படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் மக்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி உருட்டி விளையாடுகிறார்கள். அரசு நினைத்திருந்தால் எவ்விதமான தடங்கல்களும் இல்லாமல் படத்தைத் திரையிட்டு இருக்க முடியும். துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிரச்சினை வந்தபோது எவ்வளவு விரைவாகப் பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது. ஏன் அந்தச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் விஸ்வரூபத்தில் இல்லை. காரணம் துப்பாக்கி திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை ஜெயா டிவி வசம்!
இந்து மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் நம்பிக்கை சடங்குகளைக் கேலி செய்யும் எண்ணற்ற படங்கள் வெளிவந்துவிட்டன. அப்போது எல்லாம் இல்லாத அளவு இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய சலசலப்பு? என்ன காரணம்? சிந்திக்க வேண்டிய விஷயம்.

இந்து முஸ்லீம் சகோரர்களின் ஒற்றுமையை ஒரு திரைப்படமா பிரித்துவிடும்? அவ்வளவு பலவீனமாகவா உள்ளது இந்து முஸ்லீம் ஒற்றுமை? இல்லவே இல்லை. வலுவான நல்ல ஒற்றுமை இருப்பதால்தான் மொழி, இனம், மதம் என்று பல வேறுபாடுகள் இருப்பினும் ‘இந்தியன்’ என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். அண்டை மாநிலங்களில் இதே திரைப்படம் ஓடும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திரையிட்டிருக்க முடியாது? சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாகவா உள்ளது தமிழகத்தில்? கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மட்டும் ஏன் தடைக்கு மேல் தடை?

பரவலாக பலரும் வெளிப்படுத்தும் கருத்துகள் இவை.

1. ஜெயா டிவிக்கு சேட்டிலைட் உரிமை தருவதாக முதலில் கூறிய கமல், ஜெயா டிவி நிர்வாகம் அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசியதும் அதன் காரணமாக விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு அத்திரைப்படத்தை விற்பனை செய்துவிட்டதை அறிந்த மேலிடத்தின் கடுங்கோபமே முக்கியக் காரணம்!

2. வேட்டி கட்டிய தமிழரைப் பிரதமராகப் பார்க்க விரும்புகிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் புகழ்ந்து ஒரு விழாவில் கமல் பேசியது, பிரதமர் கனவில் மிதக்கும் சக்திக்கு ஏற்படுத்திய ஆத்திரத்தின் வெளிப்பாடே இது.

3. இஸ்லாம் மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் பல காட்சிகள் உள்ளன என்று கூறி, சில இஸ்லாம் அமைப்புகளின் எதிர்ப்பே தடைக்குக் காரணம்.

4. இப்படத்தை திரையிட்டால் மத ஒற்றுமை குலைந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இந்தத் தடைக்குக் காரணம்!

இந்த நான்கு காரணங்கள் தாம் பிரதானமாக ஊடக வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.

சர்ச்சைக்குரிய எந்தப் படங்கள் வந்தாலும் நாலு பேர் எதிர்ப்பது என்பது இந்தியத் திரைப்படத்துறையினர் காலங்காலமாகச் சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். அதை வளரவிடாமல் சம்பந்தபட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாகப் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அண்மைய துப்பாக்கித் திரைப்படமும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

ஆனால், தணிக்கை முடிந்து திரையிடப்பட்ட விஸ்வரூபம் திரைபடத்திற்கு மட்டும் தமிழக அரசாங்கமே முன் வந்து தடை விதித்தும் அத்தடையை நீதிமன்றம் நீக்கிய பின்பும் ஆக்ரோஷத்துடன் இரவோடு இரவாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் தடை வாங்கியதோடு மட்டுமில்லாமல் ஆங்கங்கே படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களையும் கமல் ரசிகர்கள் மற்றும் படத்தைக் காண வந்த பொது மக்களையும் காவல்துறையினரைக் கொண்டு மிகுந்த கெடுபிடிக்கு ஆளாக்கியதோடு அராஜகத்திலும் ஈடுபட்டது ஏன்?

ஜெயா டிவிக்குக் கிடைக்காத சினிமாவை ஒருசில முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்க...சறுக்கியவனுக்கு இதுவே சாக்கு என்பது போல தமிழக முதல்வர் ஜெயா இதைக் கையில் எடுத்துக்கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு பழிவாங்கி, பிரச்சனையைப் பெரிதுபடுத்திப் பெரிய அளவில் பேச வைத்துவிட்டார் என்றே படுகிறது. அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக முதல்வர் ஜெயாவின் இந்த விஸ்வரூபத்தால், ஒரு நல்ல கலைஞரை அநியாயமாகக் கண்கலங்க வைத்த நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும்.
யாரை எங்கே எப்படி வைக்கனும் என்று யாருக்கும் புரியலை. அட அண்டங்காக்காவுக்கும் குயிலுக்கும் பேதம் தெரியலை!
- அக்னிப்புத்திரன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.