நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்த ஒரு பெருநகர மேயரைப் பற்றி மருத்துவர் கண்ணன் இப்படி என்னிடம் சொன்னார், ‘அவன் ஒரு பிம்ப். அவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’, என்று தொடங்கி நான் சார்ந்திருக்கும் கட்சி உட்பட அனைத்து இடதுசாரிக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். இடதுசாரிகளின் தவறான வேலைகள்தான் இதுபோன்ற நிலைமைக்குக் காரணம் என்று சொன்னவர், உங்களையெல்லாம் தாண்டி கம்யூனிசம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன், அவருக்கே உரிய முறையில் உரக்க நிறைய கருத்துக்களை முன்வைத்தார்.

அது சரி. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எப்படி புரிந்துகொள்வது? உள்ளாட்சி அமைப்பு மற்றும் நமது அரசியல் அமைப்பு பற்றி புரிந்துகொள்ளாமல் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடிவுகளையும் புரிந்துகொள்வது சிரமம்.

ஜெ ஜெயித்ததன் பொருள் அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதுதான் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அது உண்மையாக இருக்க முடியுமா? கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக ஜெ பேசினார் என்பது உண்மைதான். ஆனால், அணு உலை வேலைகள் நிறுத்தப்படும் என்று மம்தா போல நிலை எடுக்கவில்லை. மாறாக, மத்திய அரசுடன், மத்திய ஆளும் கட்சியுடன் அவருக்குள்ள சமன்பாட்டை, அதாவது கட்டுப்படுத்தப்பட்ட மோதல் என்ற சமன்பாட்டைத் தொடர்கிறார்.

எல்லோருக்கும் தெரிந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் தனியார் கல்வி முதலாளிகளுக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஊருக்கு ஊர் போராட்டம் நடந்தும் பொருள் தரும் எந்த நடவடிக்கையும் இல்லை.

தான் தலித் விரோதி என்பதை சட்டமன்ற பேச்சின் மூலம் நிரூபித்தார். மண்டலமாணிக்கம் கிராமத்தில் ஓர் திட்டமிட்ட கொலை நடந்த பின்னர், அந்தக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது அந்த சாதி வெறிச் செயலை சட்டப்பூர்வமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக்காமல் தடுப்பது என்பதற்கு மாறாக, ‘தேவரை இழிவுபடுத்தி எழுதியதால் பழனிக்குமார் கொல்லப்பட்டார் என்றும் சட்டம் ஒழுங்கைக் காக்கவும் பொதுச்சொத்துக்களைக் கலவரக்கார்களிடமிருந்து காக்கவும்..’ என்று பேசி தனது தலித் எதிர்ப்பு நிலையைத் தெளிவுபடுத்தினார்.

கருணாநிதி செய்த அனைத்தையும் மாற்றி செய்த/செய்யப்போகிற ஜெ, 100 நாள் வேலையில் கருணாநிதி கொண்டு வந்த அளவு முறையை மாற்றவில்லை. கருணாநிதி கூலியை உயர்த்தியபோது அத்துடன் சேர்த்து வேலையின் அளவையும் அதிகப்படுத்தினாரே, அதனையும் மாற்றியமைக்கவில்லை. கிராமப்புர வறியவர்கள் அவர்களின் வாழ்க்கை அவலம் ஜெவின் பார்வைப் பரப்பிற்குள் என்றும் வந்ததில்லை.

ரேஷன் அரிசையை இலவசமாக்கிவிட்டார் என்பது உண்மைதான், ஆனால், ஒரு குடும்பத்தின் தேவை குறைந்தபட்சம் அரிசி மட்டும் மாதத்திற்கு 50 கிலோ. (ஒரு ஆளுக்கு மாதம் ஒன்றுக்கு 12.5 கிலோ என்று கொண்டால் 4 பேர் உள்ள குடும்பத்திற்கு 50 கிலோ மாதம் என்பது கட்டாயம்) ரேஷனில் கிடைக்கும் அதிகபட்சம் 20 கிலோவுக்கு அப்புறம் தேவைப்படும் அரிசியை சந்தை விலைக்கு வாங்கும் ஓர் ஏழை, தமிழக அரசைப் போற்றிக்கொண்டே வாங்குவார் என்றா நம்புகிறீர்கள்?

400 ரூபாயாக இருந்த நல்வாழ்வுத் திட்ட உதவித் தொகையை மாதம் 1000 ரூபாய் என்று மாற்றிவிட்டார் என்பது உண்மைதான். ஆனால், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான நிபந்தனைகளை கடுமையாக்கிவிட்டார். ரூ.5000 மதிப்புக்கு மேற்பட்ட வீடு இருந்தால் நல்வாழ்வுத் திட்ட உதவி கிடைக்காது என்பது ஒரு நிபந்தனை. 5 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குடிசைக்கான கீற்று மரம் கூட வாங்க முடியாது என்பதுதான் இன்றைய நிலை. அதனால், நலத்திட்ட உதவி கிடைக்காதவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஜெ நல்லாட்சி செய்கிறார் என்று கருதுவார்களா என்ன?

ஆகவே, அனைத்து மக்களும் ஜெவின் ஆட்சியை ஆதரிக்கிறார்கள் அதனால்தான் வாக்களித்தார்கள் என்று மதிப்பிடுவது சரியில்லை. பல்வேறு மக்கள் பிரிவினரும் ஜெவின் அணுகுமுறை குறித்து அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும், ஜெ என்ன செய்வார் என்பதை இனிதானா தமிழக மக்கள் தெரிந்துகொள்ளப் போகிறார்கள்?

அப்புறம் அதிக வாக்குச் சதவிகிதம் பெற்றது திமுக. அப்படியானால், திமுகவின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மக்கள் மறந்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

உண்மையில் பார்த்தால், கனிமொழி திகாரில் இருக்கிறார். ஜெ பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். இவர்கள் இருவரும், அதாவது, திமுக – அதிமுக என்ற இருவரும் திருடர்கள், கொள்ளையர்கள் என்பது தமிழக மக்களுக்குத் தெரியாது என்றா நாம் மதிப்பிட முடியும்?

மற்றொரு பக்கம் பார்த்தால், அறியப்பட்ட இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ எம் ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஓட்டுகளைத் தாண்டவில்லை. தலித் கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் விசி மற்றும் பு.த. ஆயிரம் ஓட்டுகளைக் கூட எட்டவில்லை. விஜயகாந்த் கட்சி செல்வாக்கை இழந்துவருகிறது என்று பலரும் சொல்லும் அளவுக்கு வாக்குகள் எண்ணிக்கை இருக்கிறது. (ஆனால், எதிர்காலத்தில் மற்றுமொரு செல்வாக்கு மிக்க கட்சியாக அது வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.)

அப்படியானால், மக்கள் என்னதான் நினைக்கிறார்கள்? தங்களைத் துன்பத்தில் தள்ளும் கட்சிகளுக்கு தெரிந்தே, வேண்டுமென்றே வாக்களிக்கிறார்கள் என்று சொல்வதா? அப்படியானால் ஏன்?

இடதுசாரிகள், தலித் கட்சிகளுக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க மறுக்கிறார்கள்?

இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதிலை அடைய நாம் சற்று சிரமப்பட வேண்டும். நாம் எல்லோரும் பொதுவாக என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம்? மக்கள் அரசியல் கட்சிகளை புரிந்துகொண்டு அவர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொண்டு வாக்களிக்கிறார்கள் என்று நாம் பொதுவாக கருதிக்கொண்டுள்ளோம்.

அது உண்மைதான். ஆனால், மக்கள் தனித் தனி மனிதர்களாக அரசியலில் செயல்படுவதில்லை. அவர்கள் பல்வேறு சமூகக் குழுக்களாகச் செயல்படுகிறார்கள். உதாரணமாக சாதியைச் சொல்லலாம். வர்க்கமாகவும் செயல்படுகிறார்கள். சாதி, வர்க்கம் என்ற இரண்டின் கலப்பாகவும் செயல்படுகிறார்கள்.

எப்படியிருந்தாலும் இந்த செயல்பாடு அமைப்புகளின் மூலமாக செயல்படுகிறது. உதாரணமாக, முதலாளிகள் தங்களுக்கென்று சங்கங்களை வைத்துகொண்டுள்ளார்கள். நாடு தழுவிய இந்த சங்கங்கள் அரசு எப்படி செயல்பட வேண்டும் அரசியல் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதற்கான தயாரிப்பு வேலைகளை எந்த இடைவெளியும் இல்லாமல் செய்கிறது. இப்படி ஆளும் தரப்பு வர்க்கங்கள் ஒவ்வொன்றும் எப்படி செயல்படுகின்றன, பல அமைப்புகளும் எப்படி ஒத்திசைந்து செயல்படுகின்றன என்று விளக்கிக் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இந்த மேல்மட்ட வர்க்க அமைப்பின் நலனுக்கு ஒத்திசைந்து செயல்படும் நாடாளுமன்றங்கள் சட்டமன்றங்கள், நிர்வாக நீதி அமைப்புகள் உள்ளன. அவையும் தமக்குள் ஒத்திசைந்து செயல்படுகின்றன.

இவையெல்லாம் நாம் பலரும் அறிந்த செய்திதான். ஆனால், கவனிக்காத மற்றொன்று உள்ளது.

அவை கீழ்மட்ட அமைப்புகள். வசதிக்காக கிராமம் ஒன்றை எடுத்துக்கொள்வோம். மக்கள் சாதிகளாக, சாதி வாரியாகப் பிரிக்கப்பட்ட தெருக்களில் வாழ்கிறார்கள். தங்களின் பாதுகாப்புக்கான அமைப்பு சாதி என்று இன்னமும் நம்புகிறார்கள். பலவீனமான எண்ணிக்கையிலான சாதிப்பிரிவினர் பலமான சாதிப்பிரிவினரை அண்டி வாழ்கின்றனர். தங்களின் இருப்பு பிரச்சனையற்ற வாழ்க்கை என்பதற்காக பலவிதமான சரிக்கட்டுதல்களை மேற்கொள்கிறார்கள்.

இந்தக் கட்டமைப்பு எல்லாமே கிராமத்தின் வள ஆதாரத்தைக் கையில் வைத்துள்ள நபர்களை மையமாகக் கொண்டு இயங்குகிறது. கூலி, வேலை, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இந்த கிராம ஆதிக்க வர்க்கத்தினை மையப்படுத்தியே கிராமம் இயங்குகிறது. இந்த கிராம ஆதிக்கப்புள்ளிகள் எந்த சாதியாக இருந்தாலும், தமக்குள் ஓர் நல்லுறவை வைத்துக்கொள்வது அவர்களின் பொருளாதாரத்திற்கு, வள ஆதாரத்தின் மீது பிடியைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தேவையானதாக இருக்கிறது. சாதிகளையும் கடந்த ஒரு வர்க்க ஒற்றுமையை நாம் அவர்கள் மத்தியில் காண முடியும்.

இந்த ஆதிக்க சக்திகள் அரசியல் கட்சிகள் வழியாக மாவட்ட, மாநில மத்திய அரசுகளுடன் உறவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களின் நலனுக்குப் பொருத்தமான அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவர்களாக இருக்கிறார்கள்.

நகரங்களில் கூட இதில் ஒன்றும் பெரிய மாறுதல் இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் உதிரியாக, கருத்துக்களால் மட்டும் ஒன்று போல தெரியும் மத்திய மேல் மத்திய பிரிவினர் மத்தியில் இது தெரியாமல் இருக்கலாம். ஆனால், குடிசைப் பகுதிகளில் கிராமமாக இருந்து நகரத்தின் அங்கமான பகுதிகளில் இதன் கூறுகள் தெரியும். மேலும் கந்துவட்டி, நிலக்கொள்ளை, அரசியல் தரகு, அதிகாரத் தரகு, சமூக விரோத தொழில் செய்யும் நபர்கள் என்பதாக பெரு நகரங்களுக்குள் அரசியல் தலைவர்கள் சமூகத்தை அமைப்பாக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

இவ்வாறு கீழ் மட்டத்தில் உள்ள ஆதிக்க சுரண்டல் கொள்ளை நபர்களின் அமைப்பு ரீதியான இயக்கத்தில்தான் மக்கள் தங்களின் அரசியல் கருத்துக்களை வாக்காக வெளியிடுகிறார்கள்.

‘இன்னமும் சரியாகச் சொல்லப்போனால். இந்த அநீதியான, மக்கள் நலனுக்கு விரோதமான, சுரண்டல், ஒடுக்குமுறை அமைப்புக்கு மாற்றாக மக்களுக்கு வேறு அமைப்புகள் இல்லை. எனவே அவர்களின் கருத்துக்களும் கூட இந்த சமூக அமைப்புகளால்தான் உருவாக்கப்படுகின்றன/தீர்மானிக்கப்படுகின்றன, பின்னர் செயலாக்கப்படுகின்றன.

எனவே, ஆளும் வர்க்கங்களின் பிரதான கட்சிகளான திமுக அதிமுகவின் கருத்து மற்றும் அமைப்புச் செயல்பாடும், அதற்கு வேர்களாக அமைந்த உள்ளூர் ஆதிக்க சக்திகளின் செயல்பாடும் இணைந்து வாக்குகளாக மாற்றம் அடைகின்றன. இதற்கு மாற்றாக வி.சி. அல்லது பு.த. அல்லது தேமுதிக போன்ற கட்சிகள் இல்லை. மாறாக, திமுக அதிமுக கட்சிகளின் தொங்கு சதைகளாக மட்டுமே இருக்கின்றன.

கிராமங்களில், நகரங்களில் நிலவும் கீழ் மட்ட அரசியல் நிறுவனங்களை மாற்றி வர்க்க-ஜனநாயக அமைப்புகளாகக் கட்டுவதற்கு சிபிஐ, சிபிஎம் கட்சிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்கள், மேல்மட்ட அரசியலில் தாங்கள் கருதிக்கொள்ளும் மாற்று கருத்துக்களுக்காக மட்டுமே அரசியல் செய்கிறார்கள். இடதுசாரிக் கட்சிகளின் கிராமப்புர வேர்கள் செத்துப்போய் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. சில கிராமங்களில் ஆதிக்க சக்திகளே அறியப்பட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களாகவும் உள்ளனர்.

சாதி என்ற அமைப்புக்குள் வர்க்கங்கள் புதைந்து கிடக்கின்றன. அந்த வலுவான யதார்த்தத்தை வர்க்க அமைப்புகளாக உருவாக்குவதற்கு எந்த முயற்சியும் இல்லை.

எனவே, கீழ் மட்டத்தில் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு, கட்சிகளுக்கு ஆதரவான நிலை நாடாளுமன்ற/சட்டமன்ற/ உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக/அதிமுக கட்சிகளின் வாக்குகளாக மாறுகின்றன.

எனவே, அதிமுக-திமுக கட்சிகளின் வலுவான நிலை என்பதைக் காட்டிலும், ஆளும் வர்க்க நலனுக்குச் சாதகமான சமூக நிலமையை மாற்றியமைக்கும் கட்சிகள் இல்லை அல்லது இன்னமும் பலவீனமாக இருக்கின்றன என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இன்னும் சரியாக சொல்லப்போனால், மக்களின் எதிர்ப்பை ஸ்தூலமாக்கும் அரசியல் இயக்கப்போக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

சாதிகள் வர்க்கங்களாக மாறுவது சாத்தியம் இல்லை என்று திருமா போன்ற தலைவர்கள் பேசிக்கொண்டு அவர்களின் சாதிக்கட்டமைப்பு சார்ந்த பிழைப்பை நடத்திக்கொண்டுள்ளார்கள். ஆனால், தீர்மானகரமான பிரச்சனைகள் வரும்போது மக்கள் சாதிகளைக் கடந்து தாமே கூட வர்க்கமாக செயல்பட்டு காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு கூடங்குளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மீனவர்கள், விவசாயிகள், பல்வேறு மதம் சாதிகளைச் சேர்ந்தவர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் ஆளும் வர்க்கத்தின் அணுக்கொள்கைக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

சமீபத்திய வெளிநாட்டு உதாரணத்தை எடுத்துகொள்வோம். கம்யூனிஸ்டு கட்சிகள் வலுவாக இல்லை அல்லது இல்லை. ஆனாலும், பன்னாட்டுக் கம்பெனிகளின், முதலாளிகளின் உலகம் இதுவல்ல, இது எங்களின் உலகம் என்று அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள். கவனியுங்கள் கட்சிகள் என்ற அமைப்பு இல்லாமல் கூட. (அது வெற்றி பெறாமல் போகலாம், அல்லது தேக்கமடையலாம். ஆனால், உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கான சமூக அடித்தளம் நீடிக்கவே செய்கிறது என்பதால், நமது மாண்புமிகு அறிவையும் தாண்டி வர்க்கப் போராட்டம் பல்வித வடிவங்களில் முன் செல்லும்.)

நமது நாட்டிலும் அதற்கான புறநிநலை யதார்த்தம் இருந்துகொண்டேயிருக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் தமது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்துகொள்ளவில்லை என்ற காரணத்திற்காக வர்க்க முரண்பாடுகள் அதிகரிப்பதும், அதனால் மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து நிற்பதும் தடைபட்டு நின்றுவிடாது. உதாரணமாக, அரசின் அணுக்கொள்கைக்கு எதிராக எந்த அறியப்பட்ட கட்சியும் இல்லை என்பதால் கூடங்குளம் இயக்கம் பிறப்பெடுக்காமல் இல்லை.

எனவே, இப்போதைய தேவை கம்யூனிஸ்ட்டு கட்சி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கட்சி மேற்சொன்ன அதிகாரக் கட்டமைப்பை உடைப்பதற்காக கிராமம் துவங்கி டெல்லி வரை தீவிரமாகச் செயல்படுவது தேவையானதாக இருக்கிறது.

இல்லையென்று சொன்னால், டாக்டர் கண்ணன் சொன்னது போல, இந்த எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாம்பல் மேட்டிலிருந்து புதியதொரு கம்யூனிஸ்ட் கட்சி எழுந்துவரும். கம்யூனிசம் என்பது வறட்டுத் தத்துவமல்ல, அறிவியல்.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It