நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. இது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகழகத்தின் நல்லாட்சிக்குக் கிடைத்த உள்ளாட்சி.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கழகம் பெற்ற வெற்றியும் மக்கள் செல்வாக்கும் இந்தத் தேர்தலில் மேலும் அதிகரித்திருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் கோவைப் பகுதியில் பெரும் அளவில் திமுக வெற்றி பெற முடியாத நிலையும் கூட, ஒரே ஆண்டில், இந்தத் தேர்தலில் தலைகீழாக மாறியிருக்கிறது.
கோவை மாநகராட்சியில் 99 வார்டுகளில் 97 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 84 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
99 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 3 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்று 17 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
அதேபோல் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 99 இடங்களில் போட்டியிட்டு பா.ஜ.க ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று, 88 வார்டுகளில் டெபாசிட்டை இழந்தள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை விட 75 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று ஒரு இடத்தில் மட்டும் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சியில் அதிமுக 32 வார்டுகளிலும், பாஜக 56 வார்டுகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளன.
கோவையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் எனத் தொடர்ந்து மத அரசியலை முன்னெடுத்துவரும் பாஜக தற்போது அந்தப் பகுதியில் படுதோல்வியடைந்திருப்பது, திராவிட இயக்க மண்ணில் அவ்வளவு எளிதாக மத அரசியல் எடுபடாது என்பதை வெளிப்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில் போலியாக பாஜகவினர் “வந்துட்டேன்னு சொல்லு” என்பதுபோன்ற ட்ரெண்டிங் செய்தாலும், சமூக ஊடகம் வேறு சமூகம் வேறு என்பதை இந்தத் தேர்தல் மேலும் தெளிவுபடுத்தியிருக்கிறது. சமூக ஊடகங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் ட்ரெண்ட் செய்யலாம். ஆனால் சமூகத்தில், களத்தில், மக்களிடம் கொள்கைகளை, கருத்தியலைக் கொண்டு செல்ல இது போன்ற போலியான ட்ரெண்டிங் என்றும் பயன்படாது.
அதேபோல் அதிமுக கருத்தியல் ரீதியாகக் கட்சியை வலுப்படுத்தாமல், இரட்டைத் தலைமையாக இயங்கிக் கொண்டு, உட்கட்சி மோதல்களுடன், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு அடிமையாக அடிபணிந்து செயல்பட்டுத் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டதன் மோசமான விளைவை இன்று இந்தத் தேர்தலில் சந்தித்திருக்கிறது.
எண்ணிக்கை அளவில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும், கொள்கை - கருத்தியல் ரீதியாக எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவும் படுதோல்வியை இத்தேர்தலில் சந்தித்திருக்கின்றன.
திமுகழகத்தின் செயல்பாடுகள் திட்டங்கள் இவற்றைத் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் செய்த போதிலும், களங்கம் கற்பித்த போதிலும் எதிர்க்கட்சிகளின் பரப்புரைகள் அனைத்தையும் மக்கள் துளியளவு கூட ஏற்கவில்லை என்பதையும், திராவிட மாடலே வென்றிருக்கிறது என்பதையம் இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
- உதயகுமார்