தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

            மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும்.  தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். 

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?

இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.

இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?

            இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது.  ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன.  எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.  அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.  ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 

            நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார்.  இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும். 

அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?

            அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.  நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.  ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். 

சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா?  தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார்.  அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். 

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்? 

            இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது  பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம். 

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.  சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும்.  கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன? 

சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள்.  நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா? 

அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?

நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள்.  அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது.  உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை?  ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.  இது தாழ்வு மனப்பான்மை தானே! 

‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா? 

அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்? 

            உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும். 

பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள்.  ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா?  சிரிப்பு வருகிறது அல்லவா?  அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது!  அவருடைய பெயர் ‘Tiger Woods’.  அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!  பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்!  எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும். 

‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம்.  அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா?  ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா?  ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா?  ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா! 

சரி!  என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்!  ஆனால் எங்கு தேடுவது?

          ஏன் கவலைப்படுகிறீர்கள்?  முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை),  புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம்.  இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன.  பல இணையத் தளங்கள் இருக்கின்றன.  http://www.tamilkalanjiyam.com, http://www.peyar.in, http://wapedia.mobi/ta, http://thamizppeyarkal.blogspot.com, http://tamilsaral.com/news%3Fid%3D3857.do, http://www.sillampum.com/, http://pagalavan.in/archives/328 எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம். 

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?

            இல்லை.  குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம். 

வணிக நிறுவனங்களுக்குமா? 

ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா? 

வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?

            ஒன்றும் கவலையில்லை.  தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா?  ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா?  ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா?  ‘நாயர்’ கடைகள் இல்லையா? 

திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்?  இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?

          தமிழில் படம் எடுக்கிறார்கள்.  கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது.  படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள்.  ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும்.  நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை. 

தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?

            அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை.  எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள்.  அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள்.  ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது.  அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள்.  பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன? 

அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா?  தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா? 

அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும்.  நாம் தமிழர் அல்லவா!  எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும். 

Comments

28 comments

28
Nakkeeran
The following site also gives pure Thamil names:

http://nakkeran.com/Purethamilnamesweb2004.htm
bharathidasan.su
enathu kulanthaikku thamilil peyar vaithapothu palarum intha kulanthai periavangi unnai thittuvan endru pakadi seithargal. ada arivu velichangala endru avarkalai thittatthan enekku thondriyathu. nan kulanthaigal maruthuvamanikku sendral angu sikichai pera vanthirukkum kulanthaigalin peiyargalai vangi pparppen. vayil nulaiyatha peyearkalagatthan irukkum.
சந்தேகம்
## நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார். ##

?? அப்போ கலைஞர் கருணாநிதி தமிழர் இல்லையா !!!
Dhanapal. V
Saying ‘ஒருவனுக்கு ஒருத்தி is Tamil culture' is Non-sense. It exists everywhere and nowhere.
dhanapal
இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்

This is not just statement. In this era of global connectivity, both physical and virtual, the languages are common heritage of humanity. No language has evolved in total isolation. Languages have always interacted with each other, evolved into many or merged into few. We need not feel alien to other languages or proud of our 'mother' tongue. After all, the language is a common human faculty to communicate with the person who we encounter in our journey.
Guest
ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது.

A feature does not become special just because it is not found in other languages. It can be special only if it is really something functional & enabling. ல,ள,ழ do not fall in this category. They can not be pronounced properly even by Tamils. ன,ண,ந are redundancies of a single sound. What is special about them? Can they be easily learnt by new comers?

If I am wrong kindly correct me.
dhanapal
பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது.

If the language does not evolve and accomodate new sounds and features, what is the use of it being 'Semmoli'?. 'Semmoli' speakers need to have a system to upgrade their language constantly. If they don't have such system in place, 'Semmoli' will soon become 'Pesaamoli' in few decades.
சந்திரன்
லெனின், ஸ்டாலின்னு பெயர் வைக்கிறதை பத்தி என்ன நினைக்கிறிங்க. வடமொழியில் பெயர் வைப்பதை தவிர்க்க சொல்லும் நாம், ஐரோப்பிய மற்றும் அரபு மொழியில் பெயர் சூட்டுவதை பற்றி மட்டும் பேச ஏன் தயங்கணும். தமிழ் மொழியில் பெயர் வைப்பது என்பது ஒரு சாராருக்கே உரிய ஒன்றா.
dhanapal
Above comment in the name of 'Anonymous' is actually mine. When i had 'sent', it there was a technical error.
புரவி
அய்யா தனபால்,
இரண்டு வரி கூட தங்களால் தமிழில் பதிய முடியாதா?

தமிழில் பதிவதற்கே யோசித்தால் என்ன செய்வது.
dhanapal
Nandri Puravi avargalae, Naan padhivukku pudhiyavan. Tamillil eluthathan ninaithen. Aanaal eppadi endru theriyavillai. Ammaa endru eluthi paarthen. Tamilil varavillai. Eninum en karuthai pathiavendi irundhadhu. Aankilathil eluthivitten. Ippoluthu Tamilil muyarchikiren. Enna varum endru paarpom.
dhanapal
En mundhiya padhivai Tamilil eluthinen. Aanaal, Tamilil varavillaiyae? Tamilil eluthuvathu eppadi? Yaarenum solveergalaa? Nandri.
dhanapal
அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்? அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை.

(Let me write in English.) Here this author implicitly lowers the dignity of நரிக்குறவர் by using them for comparision. Not only that. He gives contemptible name to their language. They won't call their language as வக்கிரபோலி. It is others conceited about themselves (author may be one of them) have named the language of நரிக்குறவர் as வக்கிரபோலி (meaning crude speech). For நரிக்குறவர் their language must be சக்கரபோலி (meaning sweet speech).
dhanapal
‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே!

NO. It does not mean ‘புலிக்கட்டை’ . Woods is his family name. Woods means 'Thoppugal'. This family name may mean the family living in Woods. His given name is Tiger. The full meaning of this name is a person named Tiger from 'Thoppugal' family. The author has to more sensitive in dealing with foreign ideas which might be foreign to him
புரவி
இந்த இணையதளத்திற்கு சென்று தமிழில் தட்டச்சு செய்யலாம். http://www.google.com/transliterate/
dhanapal
நன்றி புரவி அவர்களே. இப்பொழுது என்னால் தமிழில் பதிய முடிகிறது. மீண்டும் நன்றி.

கீற்று அவர்களே

தமிழில் பதியும் இந்த வழியை கீற்று தளத்தில் எங்கேனும் காட்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
deki
பெயர் ஒருவரின் அடையாளம். அவரை அழைக்கவும் விளிக்கவும் பயன்படும் கருவி. பெயரைக் கூறியவுடன் அவருடைய குடும்பம், ஊர், நாடு. இனம், மொழி, பண்பாடு தெரிந்துவிடும். ஒரு நாட்டின் பண்பாட்டு அடையாளமாக பெயர்கள் விளங்குகின்றன.

அந்தப் பெயர் இனத்தின் மொழி மரபையும் பண்பாட்டையும் ஒட்டி இருத்தல் வேண்டும். இவ்விதம் மொழி மரபையும் பண்பாட்டையும் பேணுவதற்காகவே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, போர்ச்சுகல், நார்வே, சுவீடன், டச்சு, சீனா, ஜப்பான், டென்மார்க், ஸ்பெயின், அர்ஜன்டினா போன்ற நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்த
நாடுகளின் அரசுகள் தயாரித்து வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டியலில் இருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தே சூட்ட வேண்டும். இந்தப் பட்டியலில் இல்லாத பெயர் குழந்தைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படமாட்டாது.
‍‍==( பெயரில் என்ன இருக்கிறது? என்ற நூலில் இருந்து )

‍‍‍‍‍‍==> ( இப்படி ஒரு தமிழன் சொன்னால் அவனைப் பார்த்து நகைக்க ஒரு தமிழ் கூட்டமே வருகிறது. ஆனால் இதையே ஒரு ஆங்கிலேயேனோ, சஸ்கிருத மேதையோ சொன்னால் ஆர்ப்பரித்து வரவேற்பார்கள். அதனால் எந்த நல்ல விஷயத்தைச் சொன்னாலும் முதலில் இதைச் சொன்னது அமெரிக்கன் என்று சொல்லிவிட்டு சொல்லுங்கள். அப்பத்தான் நம் மக்களுக்கு புத்தியில் ஏறும் போல் இருக்கிறது. )1
dhanapal
deki அவர்களே,
//பட்டியலில் இல்லாத பெயர் குழந்தைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்படமாட்டாது//

இது நூறு சதம் உண்மை இல்லை. முடியவும் முடியாது. நீங்கள் கூறிய பல நாடுகள் மேற்க்கத்திய நாடுகள். அவைகளில் உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் குடியேறி இருக்கிறார்கள். இன்னமும் குடியேறி வருகிறார்கள். நீங்கள் கூறிய பட்டியல் எந்த அளவிற்கு சாத்தியம் ? அந்த பட்டியல் எந்த தேதியை முடிவாக கொண்டு தயாரிக்கப்பட்டது?
மேலும் ஐரோப்பா அமெரிக்க நாடுகளின் கிருத்துவ பெயர்கள் மையகிழக்கு நிலப்பகுதிகளில் இருந்து சென்றவைகள் தான். (இந்த மையகிழக்கு நிலப்பகுதிகளின் பெயர்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்றும் யோசித்து பாருங்கள். )
dhanapal
deki அவர்களே,
//அந்த நாடுகளின் அரசுகள் தயாரித்து வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டியலில் இருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தே சூட்ட வேண்டும்.//

இதுவும் நூறு சதம் உண்மை இல்லை. நீங்கள் கூறிய பட்டியல் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர சுதந்திர குடிமக்களை நிர்பந்திக்க முடியாது. முழு உலகமே ஒரே நிலப்பரப்பாகிவிட்ட காலம் இது. மக்கள் தங்கள் மக்களுக்கு புதியதும் அழகியதுமான பெயர்களை உலகம் முழுவதிலிருந்தும் தேடும் காலம் வந்து நெடுநாள் ஆகிவிட்டது.
புரவி
//முழு உலகமே ஒரே நிலப்பரப்பாகிவிட்ட காலம் இது//. உலகம் முழுவது ஒரே நிலபரப்பு ஆகி விட்டாலும் அவரவர் அவரது மொழி பற்றையும் இன பற்றோடும் தான் வாழுகின்றனர் தமிழர்களை தவிர. ஆங்கிலேயர்கள் யாரும் தமிழில் பெயர் வைப்பது இல்லை.

தமிழர்கள் தாய் மொழியை விட ஆங்கிலமே சிறந்தது என்ற நினைப்பே இதற்கு காரணம்.
மெக்காலே பிரிட்டன் பாராளுமன்றத்திலே இதை தான் கூறினார். இந்திய தீபகற்ப மக்களை நாம் அடிமை ஆக்க வேண்டும் என்றால் அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்பது போன்ற தோற்றத்தையும் நமது மொழி அவர்களது மொழியை விட சிறந்தது என்ற தோற்றத்தையும் காண்பிக்க வேண்டும். அதில் அவர்கள் வெற்றி பெற்றனர். பெற்று கொண்டிருகின்றனர்.
dhanapal
புரவி அவர்களே. //அவரவர் அவரது மொழி பற்றையும் இன பற்றோடும் தான் வாழுகின்றனர் தமிழர்களை தவிர.//

நான் ஒத்துக் கொள்கிறேன். எனினும், இன்றைய (அல்லது நாளைய) ஒன்றிணைந்த மனித இனத்திற்கு மொழி பற்று, இன பற்று போன்றவைகள் தேவை அற்ற சுமைகளாக ஆகப்போகின்றன. நாம் இச்சுமைகளை சிறிது சிறிதாக இறக்கி வைப்பது நலம். இனிவரும் தலைமுறைகள் இவைகளை சுமக்கப்போவதில்லை என்பது உறுதி.
dhanapal
புரவி அவர்களே, //ஆங்கிலேயர்கள் யாரும் தமிழில் பெயர் வைப்பது இல்லை.//

பெயர் வைப்பது தனி மனித விருப்பு. பெயர்களின் புதுமை (exotic) நன்றி உணர்வு (gratitude) போன்ற பல காரணங்கள் ஒருவரின் பெயர் தேர்வுக்கு காரணிகளாக இருக்கின்றன. ஆண்டவர்கள் என்ற விதத்தில் ஆங்கிலயர்களுக்கு தங்கள் ஆண்ட நிலபகுதிகளின் மொழிகளை கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆளப்பட்டவர்கள் என்ற விதத்தில் உலகின் பல மக்களுக்கு ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், ஆங்கிலயர்களின் ஆட்சியினால் நம்மிடையே பயனடைந்தவர்கள் பலர். (நமக்கு மக்களின் புரட்சி இல்லாமலயே மக்களாட்சி கிடைத்ததும் அவர்களால்தான்.)நன்றி உள்ள சிலர் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது இயற்கையே. தமிழினால் / தமிழர்களால் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பயன் தான் என்ன? பெயர்களை எடுத்துக்கொள்ள வில்லை என்றாலும் ஆங்கிலம் உலகின் எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளை எடுத்து கொண்டிருக்கிறது. (இதில் கூட தமிழின் பங்கு என்ன என்று யோசித்து பாருங்கள். தன்னகத்தே உள்ள ஒரு எளிய மக்களை கேவலப்படுத்தும் ஒரு வார்த்தையை தான் ஆங்கிலத்திற்கு அளித்து உலகத்திற்கே அன்பளிப்பு ஆக்கியிருக்கிறது.) சுருங்கக் கூறினால் நம் சமூகத்தை விட மெக்காலேயின் சமூகம் சிறந்தது என்றும் அதன் விளைவாக நம் மொழியை விட மெக்காலேயின் மொழி சிறந்தது என்றும் நிறுவப்பட்டிருக்கிறது.
சொக்கலிங்கம்
ஐயா வணக்கம். நல்ல சிந்தனை. மிகச்சிறந்த ஆய்வு.ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
Ilavarasan
அடப் பாவிகளா.. தமிழ்ல பேரு வைங்கனு சொன்னதுக்கு எவ்வளவு சண்டை போடுறீங்க! இந்திக்காரன் எவனாச்சும் வேறு மொழில பேரு வைக்கிறானா? நம்ம மட்டும் 'ராகுல், அஜித், ஸ்ருதி, வர்ஷிதா'னு வச்சுட்டு அலையிறோமேனு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? நம்ம இன்ன இனத்தை சேர்ந்தவன்னு அடையாளப்படுத்துவது பெயர்கள் தான். ராகுல்னு பேரு வச்சிட்டு ஒரு தமிழன் நாலு இந்திக்காரன் முன்னாடி நின்னான்னா அதைவிட ஒரு அசிங்கம் நமக்கு இருக்கா? அந்த இந்திக்காரன் நம்மளைப் பத்தி என்ன நினைப்பான்? அதைவிட கொடுமை என்னன்னா நம்ம ஆளுங்ககிட்ட சம்ஸ்கிருத பெயர்கள் எல்லாம் மாட்ர்ன் பெயர்கள்னும், தமிழ் பெயர்கள் எல்லாம் மாடர்ன் பெயர்கள்னும் ஒரு மாயை இருக்கு. எவ்வளவு முட்டாள்த்தனமான, அடிமைப் புத்தி இது? தமிழுக்கு இணையான பழமை வாய்ந்தது சம்ஸ்கிருதம். அது மாடர்னாம், தமிழ் மொழி பழமையாம்! அட போங்கடா...
கார்த்திகேயன்
என் மகள் பெயர் மீனாட்சி நாச்சியார்.
நியுமராலஜி , ஜோதிடம், லொட்டு, லொசுக்கு எதுவும் பார்க்கவில்லை. நான் பிறந்தமண் மதுரை ராணியின் பெயர் தான் மீனாட்சி நாச்சியார் .

இந்த பெயரை கேட்டவர்கள் எல்லோரும் அருமையான பெயர் , அழகான பெயர் என்று ஆச்சர்யத்துடன் புகழ்கிறார்களே ஒழிய, ஏன் இந்த பெயர் என்று கேட்டவரில்லை.
கொற்றவன்
If the language does not evolve and accomodate new sounds and features, what is the use of it being 'Semmoli'?. 'Semmoli' speakers need to have a system to upgrade their language constantly. If they don't have such system in place, 'Semmoli' will soon become 'Pesaamoli' in few decades.
கொற்றவன்
NO. It does not mean ‘புலிக்கட்டை’ . Woods is his family name. Woods means 'Thoppugal'. This family name may mean the family living in Woods. His given name is Tiger. The full meaning of this name is a person named Tiger from 'Thoppugal' family. The author has to more sensitive in dealing with foreign ideas which might be foreign to him
முத்துக்குட்டி
கொற்றவன், ஒரு மொழி உருவான பின்னர், பின்னாட்களில் எழும் ஒலிகளை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை உலகில் எம்மொழியிலும் கிடையாது. சான்று: 'டச்சு' மொழியில் 'ஜ' ஒலி கிடையாது. 'Java' என்று எழுதிவிட்டு 'யாவா' என்றுதான் ஒலிக்கிறார்கள்; 'Japan' என்று எழுதிவிட்டு 'யப்பான்' என்று வாசிக்கிறார்கள். இந்தி மொழியில் 'ஏ' கிடையாது. 'எ', 'ஏ' ஆகிய இரண்டிடங்களிலும் (எ.கா. எப்படி, ஏன் ஆகிய இரண்டிற்கும் இந்தியில் முதல் எழுத்து ஒரே எழுத்துதான்!) . 'Woods' என்பதற்குத் தோப்புகள் என்று எடுத்துக்கொண்டாலும் சரி! குடும்பப் பெயர் என்னும் அளவில் அப்பெயரையும் சேர்த்துத் தானே சொல்கிறோம். இங்குக் கருத்து நிற்பது அப்பெயர் தாங்கி நிற்கும் பொருளில் நாம் நம்முடைய தாய்மொழியில் பெயர் வைக்கத் தயங்குகிறோம் என்பது தான்! 'Woods' என்பதையே ஒரு பேச்சுக்கு விட்டுவிட்டு, 'Tiger' என்பதை எடுத்துக்கொள்வோமே! 'புலி' என்று தங்கள் குழந்தைகளுக்கோ தங்களுக்கோ பெயர் வைக்கப் பெரும்பான்மைத் தமிழர்கள் தயங்குகிறார்களே! ஏன்? என்பது தான் அவ்வினாவின் மையக்கருத்தாகும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.