உலகமயமாதல் மூலம் உலகப் பொருட்கள் அனைத்தும் உள்ளூரில் கிடைத்து வரும் நேரத்தில், அதற்கு நேர் எதிராக உள்ளூர்ப் பொருட்களும் உள்ளூர் வணிகமுமே சிறந்தது என்னும் கருத்து பல நாடுகளில் வளர்ந்து வருகிறது.
சிறு தானியங்கள், நாட்டு மருந்துகள் உள்ளிட்ட நம்முடைய பாரம்பரிய உணவுமுறைக்கு நம்மூரில் எப்படி மவுசு மீண்டும் உருவாகி வருகிறதோ, இதே போல், உள்ளூர் சந்தை, உள்ளூர் பார்வை, உள்ளூர் வணிகம் என்னும் கருத்தாக்கம் உலகம் முழுவதும் வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறது. பெரு நிறுவனங்கள், பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் ஆகியன உலகமயமாதலை வெகு வேகமாக முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அதையும் மீறி, உள்ளூர் வணிகத்திலும் உள்ளூர்ப் பொருட்களை நாடுவதிலும் மக்கள் காட்டும் ஆர்வம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
உள்ளூர் வணிகம் பெருகக் காரணங்கள் என்ன?
சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்குப் போய் ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நாளொன்றுக்குப் பன்னிரண்டு மணி நேரம் நாயாய் உழைப்பதைக் காட்டிலும் அதே உழைப்பை நம்முடைய தொழிலில் காட்டினால் நன்றாக வளரலாமே என்னும் இன்றைய இளைஞர்களின் மனநிலை முக்கியமான ஒரு காரணி. கூழோ கஞ்சியோ வெளியூர், வெளிநாடெல்லாம் வேண்டாம் உள்ளூரில் உழைப்போம் என்று நினைக்கும் இளைஞர்களின் சதவீதம் அதிகமாகியிருப்பதே இதற்கு முக்கியமான காரணமாகும்.
வெளியூரில் பேர் தெரியாத ஏதோ ஒருவரிடம் வெறுமனே கம்பெனி பேரை மட்டும் நம்பி ஆர்டர் கொடுத்து ஏமாந்து போவதைக் காட்டிலும் உள்ளூர்க்காரர்களிடம் வாங்கினால் பிடிப்பு நம்மிடம் இருக்கும் – ஏதாவது குறை இருந்தால் சொல்லி மாற்றிக் கொள்ளலாம், உள்ளூர்க்காரரே உற்பத்தியாளராக இருக்கும் போது வாடிக்கையாளரின் இயல்பு, தேவை, மனநிலை ஆகியவற்றை யோசித்து பொருட்களின் உற்பத்தி அமையும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
முன்பெல்லாம் வெளிநாட்டுப் பொருட்கள் என்றாலே அதற்கென்று தனி மரியாதை, தனி விலை என்று தனிச் சந்தையும் மதிப்பும் இருந்தன. இப்போது அப்படியில்லை. உள்ளூர்ப் பொருளாக இருந்தால் என்ன? வெளிநாட்டுச் சரக்காக இருந்தால் என்ன? தரமாக இருக்கிறதா – தரம் இருந்தால் விலை கொடுப்போம், இல்லாவிட்டால் நிராகரிப்போம் என்னும் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.
இப்படி நாம் பேசிக் கொண்டிருப்பது நம் மக்களிடம் நடந்திருக்கும் மன நிலை மாற்றம் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. எந்த அமெரிக்கா உலகமயமாதலை உலகம் முழுக்கக் கொண்டு செல்லத் துடித்துக் கொண்டிருக்கிறதோ அந்த அமெரிக்காவிலேயே சில மாகாண அரசுகள் உள்ளூர் வணிகத்தைக் கையில் எடுத்து விளம்பரப்படுத்தத் தொடங்கி விட்டன. ‘உள்ளூரில் வாங்கு, உயர்வானதை வாங்கு’ என்னும் பெயரில் பெரிய பிரச்சாரத்தை அமெரிக்காவின் ஹவாய் மாகாண அரசே, தங்கள் மாகாண விவசாயிகளுக்காக முன்னெடுத்து வருகிறது. ஹவாய் வேளாண் பல்கலைக்கழகம், ஹவாய் மாகாண விவசாயிகள் கூட்டமைப்பு, ஹவாய் மாகாண அரசின் வேளாண்மைத் துறை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இந்தப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் பிரச்சாரம் வெகுவாக மக்களிடம் எடுபடுவதற்கு இவர்கள் சொல்லும் காரணங்களில் முக்கியமானது சுவையையும் ‘ஃபிரெஷையும்’ வெளியூர், வெளிநாட்டுக் காய்கறிகளும் பழங்களும் தராது என்பது தான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நேற்று மாலை நம் வீட்டுக்கு அருகில் பறிக்கப்பட்டு இன்று காலை நம் தட்டுக்கு வரும் கீரையில் இருக்கும் சத்தை விடவா, ஊட்டியில் இருந்து நான்கு நாட்களுக்கு முன்னரே பறிக்கப்பட்டு, பல நூறு மைல் தூரம் வண்டியில் கொண்டுவரப்படும் கேரட்டில் சத்து அதிகமாகக் கிடைத்து விடப் போகிறது?
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் உள்ளே, விரட்டும் மருத்துவரை வெளியே – என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. அந்தப் பழமொழி உண்மை தான் – ஆனால் நம் நாட்டுக்கு அல்ல. நேற்றோ அதற்கு முந்தைய நாளோ பறிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் உள்ளூர்ப் பழங்களை விடவா, ஆஸ்திரேலியாவில் ஒரு மாதத்திற்கு முன்னரே பழுத்து, விமானத்தில் பறந்து வரும் ஆப்பிள்கள் அதிகச் சத்தை அள்ளித் தந்து விடப் போகின்றன? இப்படி ஒரு மாதம் கெடாமல் இருக்க என்னென்ன கெமிக்கல்கள் சேர்த்தார்களோ, எத்தனை முறை மெழுகு தடவப்பட்டதோ யாருக்குத் தெரியும்? சரி, கெமிக்கலும் இல்லை, மெழுகும் இல்லை என்பதை ஒரு கருத்துக்கு ஒப்புக் கொண்டாலும் கூட, அந்த விமானப் பயணச் செலவையும் சேர்த்துத் தானே ஆப்பிளுக்கு நாம் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
விமானப் பயணச் செலவு மட்டுமல்லாமல் பல்லாயிரம் மைல் பயணம் செய்தால் நம் உடலே சூடாகும். இதே நிலை தானே – ஆப்பிள் முதலிய வெளிநாட்டுப் பழங்களுக்கும்! அதற்கு உள்ளூரில் விளையும் வாழைப்பழத்தையும் கொய்யாப்பழத்தையும் குறைந்த விலையில் ‘ஃபிரெஷாக’ வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் போகலாமே!
நாட்டு வளர்ச்சிக்கும் நல்லது!
பத்து ரூபாய்க்கு அமெரிக்க கோக் குளிர்பானம் ஒன்றைக் கடையில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் கொடுக்கும் பத்து ரூபாயில் கடைக்காரருக்கு இரண்டு ரூபாய், டீலருக்கு இரண்டு ரூபாய் என நான்கு ரூபாய் போக மீதியுள்ள ஆறு ரூபாய் வெளிநாட்டு நிறுவனத்திற்குப் போய்ச் சேரும். அதாவது, உங்கள் பத்து ரூபாயில் நம் நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படப் போவது நான்கு ரூபாய், அமெரிக்காவிற்குப் பயன்படப் போவது ஆறு ரூபாய்! இதே பத்து ரூபாய்க்கு உள்ளூரில் விளைந்த எலுமிச்சையைக் கொண்டு சாறு ஒன்று குடித்திருந்தால்? மொத்தப் பத்து ரூபாயும் உள்ளூரிலேயே சுற்றி வரும்! உடலுக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது!
நல்ல சர்வீஸ்
உள்ளூர் வியாபாரிகளைத் தேடி வியாபாரத்தைக் கொடுக்கும் பெரும்பாலான சூழல்களில் அவர்கள் உற்பத்தியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். எனவே, பொருளின் தரத்தில் குறைபாடு என்பதோ, மிக அதிக விலை என்பதோ பெரும்பாலும் இருக்காது. பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்க உலக வியாபாரியால் முடியும். உள்ளூர் வியாபாரிக்கு விளம்பர எண்ணத்தை விட, உள்ளூரில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்னும் நெருக்கடி அதிகமாக இருக்கும். அந்த உளவியல் நெருக்கடியே அவர்களைத் தவறு செய்வதில் இருந்து விலக வைக்கும். வாடிக்கையாளராக நம்மைப் பொருத்த வரை தரமான பொருளும் நல்ல சர்வீசும் கியாரண்டியாகக் கிடைக்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
உள்ளூர் வணிகம் எப்போதுமே சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஒரு பொருளைப் பக்கத்தில் உள்ள கடையில் வாங்கும் போது நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர் முதலிய சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பொருட்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதே பொருளை மின் வணிக முறையில் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இணையத்தளங்களில் வாங்கும் போது அவர்கள் உங்கள் பொருளுக்குச் சேர்க்கும் உறையில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு? கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம் – வெளியூரில் பொருள் வாங்கும் போது சுற்றுச்சூழலுக்கு அதிகக் கேடு என்று! இதே போல் உள்ளூரில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் உள்ளூரிலேயே சந்தைப்படுத்தும் போது லாரி, லோடு ஆட்டோ ஆகியவற்றுக்குத் தேவையான எரிபொருள் எவ்வளவு? ஆஸ்திரேலியாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் முதலிய பழங்களை இறக்குமதி செய்ய – விமான எரிபொருள், அதை உள்ளூருக்குக் கொண்டுவரத் தேவைப்படும் எரிபொருள் ஆகியன எவ்வளவு? இப்படி யோசித்துப் பார்த்தால், உள்ளூர்ப் பொருளைப் பயன்படுத்தும் போது உலகச் சுற்றுச்சூழலுக்கும் நாம் நம்மை அறியாமல் பங்களிக்கிறோம் என்பது விளங்கும்.
அதிக வேலைவாய்ப்பு
காய்ச்சல், தலை வலிக்கு உள்ளூர்க் கடையில் பாரசிட்டமால் மாத்திரை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வாங்கிய 2 ரூபாய் பொருளில் ஒரு மருந்து கடைக்காரர், ஒரு விற்பனைப் பிரதிநிதி, அவரின் டீலர் என மூன்று பேர் தான் வேலை பெறுகிறார்கள். அதே தலை வலிக்குப் பக்கத்தில் உள்ள நாட்டு மருந்துக் கடையில் தைலம் ஒன்று வாங்குகிறீர்கள் என்றால் கடைக்காரர், விற்பனைப் பிரதிநிதி, அவரின் டீலர் மட்டுமல்லாமல் – அந்தத் தைலத்தை உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பாளர், அதற்கு உறை அச்சடித்துக் கொடுத்த உள்ளூர் அச்சகத்துக்காரர், என்று பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளூரில் வேலை வாய்ப்புப் பெறுவார்கள். இப்படியாகத் தற்சார்புப் பொருளாதாரம் வளரும்.
உள்ளூர் வளம் பெறும்
இப்படி உள்ளூரிலேயே அதிக உற்பத்தியாளர்களும் தேர்ந்த வியாபாரிகளும் உருவாகும் போது ஆரோக்கியமான போட்டி அவர்களுக்கிடையே இருக்கும். அந்தப் போட்டி, தலை சிறந்தவர்களை வெளிக் கொண்டு வரும். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்பதும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்பதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்பதும் இப்படி உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்ததன் மூலம் நமக்குக் கிடைத்த உலக வாய்ப்புகள் தாம்! உள்ளூர் வணிகத்தை ஊக்குவித்தோம் – இப்போது உலகமே அல்வாவிற்கும் கடலை மிட்டாய்க்கும், பால்கோவாவிற்கும் எவ்வளவு அதிக விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. இப்படி உள்ளூர் வணிக வளர்ச்சி என்பது நம்மூரில் இருக்கும் திறமையானவர்களை வெளிக்காட்ட உதவியாக இருக்கும்.
அரசுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானம்
உற்பத்தி, பேக்கிங் கட்டுமானம், வியாபாரப் பகிர்வு ஆகியன உள்ளூர் அளவிலேயே நடக்கும் போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி முதலிய வழிகளில் அதிக வருமானம் கிடைக்கும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வரும் வருமானத்தை அதே ஊரில் தான் செலவழித்து ஆக வேண்டும் என்பதால் தன்னிறைவுப் பொருளாதாரம் என்பது தன்னிறைவு அரசியலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்பதும் உண்மை தான்!
வாடிக்கையாளரே முதன்மை
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டளவில் வியாபாரம் என்பது விற்பனையையும் லாபத்தையும் மையமாகக் கொண்டே அமைவதாக இருக்கும். தொடர்ச்சியான விளம்பரங்கள், தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியான கருத்துத் திணிப்புகள் ஆகியன மூலம் என்னவென்றே தெரியாத ஒரு பொருளைக் கூட நல்ல பொருளாக மாற்றி விற்றி வாடிக்கையாளரை ஏமாற்ற வெளியூர் வணிகத்தால் முடியும். உள்ளூர் வியாபாரத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை. மாம்பழ ஜூசை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ‘அசல் மாம்பழத்தின் சுவை’ என்று ஆண்டு முழுவதும் வெளிநாட்டு நிறுவனங்களால் வியாபாரத் தந்திரம், விளம்பர உத்திகள் மூலம் விற்பனை செய்ய முடியும்.
ஆனால் உள்ளுர் வியாபாரத்தில் அப்படி முடியாது. வருடத்திற்கு மூன்று மாதமோ நான்கு மாதமோ மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தை எப்படி ஆண்டு முழுக்க ஜூஸ் என்ற பெயரில் விற்கிறீர்கள் என்று உள்ளூர் வியாபாரியிடம் உள்ளூர் வாடிக்கையாளர் உரிமையோடு கேள்வி கேட்பார். எனவே, வெற்று விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளரை முட்டாளாக்கும் உத்தியெல்லாம் உள்ளூர் வணிகத்தில் செல்லுபடியாகாது. பழைய, காலாவதியான பொருட்களை விற்பது, காலநிலைக்கு ஒவ்வாத பொருட்களை விற்பது, தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளரை வசியப்படுத்துவது ஆகியன வழக்கொழிந்து போகும். வாடிக்கையாளரே வல்லவர், அவர் நலனே வியாபாரியின் நலன் என்னும் நிலை தன்னைப் போல் உருவாகும்.
நிலையான பொருளாதாரம்
உற்பத்தியாளர், விற்பனையாளர், வாடிக்கையாளர் ஆகிய முக்கோணப் புள்ளிகளும் ஒரே ஊரில் இருப்பதால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதித்தால் இங்குள்ளவர்கள் வேலை இழக்கும் அபாயமோ அரபு நாடுகளில் கச்சா விலை கூடினால் நம்மூரில் பெட்ரோல், டீசல் விலை கூடுவதோ போன்ற எங்கோ அடித்தால் இங்கே வலிக்கும் அபாயங்கள் எல்லாம் இங்கே கிடையாது.
இப்படி, உள்ளூர் வணிகம் என்பது உற்பத்தியாளருக்கும் சிறந்ததாக, வியாபாரிக்கும் உகந்ததாக, வாடிக்கையாளரை மையமாகக் கொண்டதாக அமைவதாலேயே மக்களும் அதை உயர்ந்ததாக நினைக்கும் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கலையோ அரசியலோ வியாபாரமோ மக்களின் கைகளில் சேர்ந்து விட்டால் போதும் – அதை உடைத்துப் பிரித்து வகுத்துப் போட எந்த அரசியல் அமைப்பாலும் முடியாது; எந்தச் சாதியும் மதமும் குறுக்கே வர முடியாது. கார்ப்பரேட்டுகளும் அங்கே வெல்ல முடியாது. அது மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்த ஒரு முறையாக இருக்கும். அதன் வளர்ச்சியையும் வெற்றியையும் அவர்களே தீர்மானிப்பார்கள் – அனுபவிப்பார்கள். இந்த நியதி மாறாதது.
(கட்டுரை: புதிய வாழ்வியல் மலர் செப். 15-30 2016 இதழில் வெளியானது)
- முத்துக்குட்டி