தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 86 அகவையைக் கடந்த நிலையிலும் பல வழிகளில் தனித்தன்மையோடு செயல்படுகிறார். நிறைய சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறார். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களைச் சந்திக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் திரளும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த ஊக்கமும், உழைப்பும் பொதுவாழ்வில் ஈடுபடும் யாரும் கைக்கொள்ளத்தக்கன ஆகும்.
அண்மையில் தமிழக முதல்வர் பங்கேற்ற பல பொது நிகழ்ச்சிகளில் இரண்டைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். கடந்த 20.09.02010 அன்று நாகர்கோவிலில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் தம் நிறைவுரையைப் பின்வருமாறு முடிக்கிறார்.
‘நான் என்றும் உங்கள் வீட்டுப்பிள்ளை 86 வயதுக்குப்பின் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்பீர்கள். 90 வயதானாலும், ஏன் 100 வயது வரை நான் இருக்க முடியும் என்றாலும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளைதான். எனக்கு நீங்கள் காட்ட வேண்டிய உதவி, நன்றிக்கடன் என்பது ‘திராவிடன்’ என்ற உணர்வை எல்லோரும் பெற்றோம் என்ற ஒலி என் காதில் கேட்க வேண்டும். அந்தப் பரிசை நீங்கள் அளிக்க வேண்டும் என்று உங்கள் கால்களைத் தொட்டுக் கேட்கிறேன். (தினமணி 21.09.2010)
அடுத்து 10.10.2010 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாபெரும் தி.மு.கழகப் பொதுக் கூட்டத்தில், ‘தி.மு.க. என்பது அரசு தளத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இது ஒரு சமுதாய இயக்கம். தமிழர்கள் வாழ, திராவிட இன வளர்ச்சிக்காகத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் வழியில் நின்று பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப் பட்டதுதான் இந்தக் கழகம். (தினமணி : 11.10.2010)
இந்த இரணடு உரைகளிலும் ‘திராவிடன்’ ‘திராவிட இனம்’ என்கிற சொல்லாடல்களைக் கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார். தம் இயக்கத்தின் கொள்கை மூலவராகக் கலைஞர் குறிப்பிடும் தந்தை பெரியார், தமது வாழ்வின் இறுதிக் காலம் வரை தனித்தமிழ் நாட்டுக் கொள்கையைப் பற்றி நின்றவர். 1930களிலேயே ‘இந்தியா ஒரு நேஷனா? இந்தியா பல்வேறு நேஷன்களைக் கொண்ட ஒரு நேஷன்’ என்ற எண்ண அதிர்வுகளை இம்மண்ணில் பாயவிட்டவர். இது ஒரு சாதிகள் காட்சி சாலையாக, மதக்கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சிச் சாலையாக, சாமிகள் காட்சிச் சாலையாக உள்ளதாக பகுத்தறிவுக் கண்கொண்டு ஊடுருவிப் பார்த்தவர்.
1938இல் மூண்டெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் இங்கே மிகப்பெரிய தமிழ்த் தேசிய மக்கள் எழுச்சியாகப் கருக்கொண்டது. சென்னைக் கடற்கரையில் வங்கக் கடலைபோல் ஆர்ப்பரித்த மக்கள் முன். தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழங்கினார். இந்த முழக்கம் வெறும் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த முழக்கம் மட்டுமன்று. தமிழ்மக்கள் தம்மை உண்மைத் தமிழரென்றும், கலப்படமற்ற தனித்ததமிழ்ச் சாதி, சுயஉந என்றும் கருதித் தம்மீது சுமத்தப்பட்டுள்ள சூத்திரன், சண்டாளன் என்று கூறும்படியான அவ்வகை அழுக்கையும் புறந்தள்ள வேண்டும் என்கிற சமூகப் பண்பாட்டு அடித்தளத்திலும் பெரியார் இம்முழக்கத்தை முன்வைத்தார்.
மேலும் தமிழ்நாட்டு விடுதலைத் தமிழனுக்குச் செல்வப்பெருக்கம் தொழில் மேம்பாடும்பெற்றுத்தரும் என்கிற பொருளாதாரக் கண்ணோட்டமும் அந்த முழக்கத்தில் கருக்கொண்டிருந்தது.
“தமிழ்நாட்டுத் தொழில் முறைகளை எடுத்துக் கொண்டோமானால் அதுவும் தமிழனுக்குப் பயன்படுவதில்லை என்பது விளங்கும். இரும்புத் தொழிலில் பம்பாய்க்காரர், பாரசீகக் காரர் உரிமை பெற்றுப் பயனடைகின்றனர். உலோகத் தொழிலையும், பம்பாய்க்காரர், ஷோலாப்பூர்க்காரர் உரிமையாக்கிப் பயனடைகிறார்கள். துணித் தொழிலைப் பம்பாய் ஆமதாபாத்காரர்கள் கைப்பற்றிப் பயனடைகிறார்கள். இந்தத் தொழில்கள் இயந்திர உதவியினால் செய்யப்படுவதையே இங்குக் குறிப்பிடுகின்றோம். அதனால் தமிழ்த் தொழிலாளிக்கு வேலையில்லை. தமிழ் முதலாளிக்கு இலாபம் இல்லை. லேவாதேவித் தொழிலை எடுத்துக் கொண்டால் அவை பெரிதும் மார்வாரி நாட்டானும், குஜராத்தி மூல்தான் நாட்டானுமே ஏகபோக உரிமையாக அவர்கள் கொண்டுபோகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால் தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத்திருகிப் பிடுங்கிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள்”. (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு : பக் 1242)
தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையைத் தெளிவாக முன்வைத்த பெரியார் பின்னர்ச் சில காலம் ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற முழக்கத்தை எழுப்பினார். கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் இவர்களுடன் இசுலாமியர்க்கும் தனியாக அழைப்பு விடுக்கும் பெரியார் இறுதியில் திராவிட நாட்டுப் பிரிவினையில் பார்ப்பனர்களையும் இணைத்துக் கொள்கிறார்.
‘திராவிடம் விழித்தெழுந்துவிட்டது. இனி உரிமைப் போராட்டம் விரைவில் துவக்கப்படுவது நிச்சயம். ஆகவே விரைவில் பார்ப்பனத் தோழர்கள் - ஒன்று திராவிடர்களோடு சேர்ந்துவிட வேண்டும்; அல்லது, அவர்கள் குடியேற வடநாட்டில் வசதிகள் செய்துகொள்ள வேண்டும். நாங்கள் குடியேறும்படிக் கூறவில்லை. அவர்களும் எங்களோடு என்றென்றும் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும். ஆனால் மனிதர்களாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய உள்ளக்கிடக்கை. இதில் எந்தப் பார்ப்பனத் தோழரும் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திராவிடன் என்றுமே விருந்தோம்பல் செய்யத் தவறியதில்லை என்பதை இவர்களுடைய ஏடே இவர்களுக்கு எடுத்துக்காட்டும்” (ஆழியூரில் 10.01.1948இல் சொற்பொழிவு விடுதலை 19.01.1948)
1944ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என்ற பெயர்த் தோற்றம் உருவான போது ‘திராவிடர் கழகம்’ என்ற பெயருக்கு மாற்றாகத் ‘தமிழர் கழகம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டதாயும், ஆனால் பெரியார் உள்ளிட்ட பலராலும் அது ஏற்கச் செய்யப்படவில்லை என்பதுமான கடுமையான குற்றச்சாற்றுகள் நேற்றும் இருந்தன. இன்றும் தொடர்கின்றன.
“தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்துகிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிடநாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்றும் தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமேயொழிய இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.” என்பதே அன்றையப் பெரியாரின் கருத்தாக இருந்தது. (விடுதலை 27.01.1950)
கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோரையும் இணைத்துக்கொண்டு திராவிடநாட்டு வெகுமக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டுப் பிரிவினை கேட்ட பெரியாருக்கு பின்னாளில் கசப்பான அனுபவங்கள் தோன்றத் தொடங்கின.
தனது 76ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை ஏட்டில் 17.09.1954 அன்று பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அவருடைய உள்ளக் குமுறலைத் தெளிவாக உணர முடிகிறது.
“இதில் குறிப்பாகக் கூறவேண்டுமேயானால், மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வருணாசிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளைப் பார்ப்பனரல்லாத ‘இந்துக்கள்’ என்கிற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக் கொண்டு, பார்ப்பனரல்லாதவருக்கு என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்குக் கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனர் இல்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் சில உதாரணங்கள் கூறுகிறேன்.
சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப் செக்ரட்டரி : திரு. கே. இராமுண்ணி மேனன், சீப் எஞ்சினியர் : திரு. கே. கே. நம்பியார்
இப்படியான ஒரு நீண்ட மலையாள அதிகாரிகளின் பட்டியலாகச் செல்கிறது. அந்த அறிக்கை (விடுதலை 17.09.1954) (பெரியார் சிந்தனைகள் பக் 1467)
இவ்வாறு அறிக்கை விட்ட பெரியார், சரியாக ஓராண்டு கழித்து அதாவது 11.10.1955 அன்று விடுதலை ஏட்டில் விட்ட அறிக்கையில் பின்வருமாறு எழுதுகிறார் :
‘பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமற் போய்விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகாவும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று, கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்புக்கிடையாது; சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. அவர்கள் மத மூட நம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு, அவர்கள் இருவர்க்குமே - மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள். எதிரிகள் என்றே சொல்லலாம். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பக் 1354)
55 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் உரைத்த கருத்துகள் நூற்றுக்கு நூறு அளவில் இன்றும் பொருந்தி வருகின்றன. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று அந்நாளில் எழுப்பப்பட்ட அரசியல் முழக்கம் இன்று வேறு வடிவந்தாங்கியுள்ளது. கன்னடன், தெலுங்கன், கேரளன், தமிழன் ஆகிய நான்குபேருமே திராவிடன் என்றால், இன்று மற்ற மூன்று திராவிடனும் சேர்ந்துகொண்டு தில்லியின் துணையோடு தமிழ் திராவிடனை நசுக்குகிறான். தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரமறுக்கும் செய்தியில் இன்று கன்னடன், கேரளன், ஆந்திரன் என்கிற மூன்று திராவிடனும் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுத் திராவிடனை வஞ்சிக்கிறான்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை யிட்டபிறகுகூட கர்நாடகம் அந்த ஆணையை மலம் துடைக்கும் காகிதமாக மதிக்கிறது. இதே உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லியும் கூட கேரளம் அந்த ஆணையைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிகிறது. ஆந்திரா முதல்வர் இராசசேகர ரெட்டி மறைவுக்குத் தமிழ்நாட்டு அரசு ஆற்றாது அழுகிறது. அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கிறது. கிருஷ்ணா நதி நீர்த்திட்டத்திற்குத் தமிழக மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுக்கிறது. ஆனால், ஆந்திர அரசோ பாலாற்றின் குறுக்கே அணைகட்டத் தொடங்கித் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வைப் பாழாக்குகிறது. தட்டிக்கேட்க வேண்டிய தரங்கெட்ட தில்லி அரசோ, ஆந்திரத்து ஆற்று நீர்த் திட்டங்களுக்குக் கோடிகளை அள்ளிக் கொடுக்கிறது. இவற்றையெல்லாம் நினைக்க நினைக்கத் தமிழர்களின் நெஞ்சம் தீப்பற்றிய பஞ்சுப் பொதியாய்ப் பற்றி எரிகிறது.
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ‘திராவிடர்கள்’ இப்படியெல்லாம் ‘தமிழ்த்திராவிடனுக்கு’ இரண்டகம் இழைப்பார்கள் என்பதை 1957ஆம் ஆண்டிலேயே பெரியார் நுண்ணறிவோடு எடுத்துச் சொல்லியுள்ளார்.
“தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமானன் அல்லன். மலையாளியும் எஜமானன்; அதிகாரி வட நாட்டின் முதலாளி, சர்வாதிகாரி இது தமிழ்நாட்டுக் குச்சு தந்தரமா? சுதந்தரத்தை நினைத்துக் கொண்டு எழுத எழுத ஆத்திரம் வருகிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்” என்று நெஞ்சு பொறுக்காமல் 15.08.1957அன்று விடுதலை ஏட்டில் பெரியார் அறிக்கை விட்டுள்ளார். (பெரியார் சிந்தனைகள் பக் 1285)
எனவே, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்றைக்கும் தமிழர்களெல்லாம் ‘திராவிடர்’ என்ற உயர்வைப்பெற வேண்டுமென்று தமிழர்களின் கால்களைத் தொட்டுக் கேட்டுக்கொள்வதில் எந்தப் பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்டோபர் 10ஆம் நாள் நடைபெற்ற அதே நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கலைஞர் வேறொரு கருத்தையும் கூறியுள்ளார். "மிழகம் மற்றும் இந்தியாவில் மதவாதத்தைப் பரப்பி அரசியல் செய்ய பா.ஜ.க. போன்ற பிற்போக்கு இயக்கங்களுக்கு யாரும் இடமளித்துவிடக்கூடாது; ஆதரவு அளிக்கக் கூடாது என்பதற்காகவே சோனியாவுக்குத் திமுக நேசக்கரம் நீட்டிப் பக்கத் துணையாக இருக்கிறது” (தினமணி 11.10.2010)
இன்று மதவாதக் கட்சியாகக் கலைஞர் கண்ணுக்குத் தெரியும் பா.ஜ.கட்சியுடன், அன்று தில்லியில் கூட்டணி ஆட்சி அமைத்துப் பதவி சுகம் அனுபவித்த அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு தலைவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் மீண்டும் காமராசர் ஆட்சியைக் கொண்டு வரப்போவதாகக் கலைஞர் கண் முன்னாலேயே கள்குடித்த குரங்காகக் குட்டிகாரணம் போடுகிறார்கள்.
பரந்து பட்ட வெகுமக்களுக்கு பஞ்சமா பாதகம் புரியும் கட்சி, காங்கிரசுக் கட்சி என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால்தான் தந்தை பெரியார் ‘காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை’ என்று 1925ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். தம்முடைய கொள்கைகளுக்கு இணக்கமாகச் சில செயல்களைச் செய்ய முன் வந்த காமராசருக்கு இறுதிவரை தோள்கொடுத்து உதவினார்.
காசுமீரத்துப் பார்ப்பனக் குடும்பத்தின் வழி வந்த கயமைக் குணம்மிக்க இந்திராகாந்தி தனது பதவிக்கு நெருக்கடி வந்த காலத்தில் கலைஞரின் உதவியை நாடினார். அப்போது பெரியார் அறிவுரையையும் புறந்தள்ளிக் கலைஞர் இந்திராகாந்தியை ஆதரித்தார். காமராசரைத் தலைக்குனிய வைத்தார். அதே இந்திராகாந்தி நெருக்கடிநிலை ஆட்சிக் காலத்தில் கலைஞருக்கும், அவரது கட்சிக்கும் விளைத்த சொல்லொணாக் கொடுமைகளை வரலாறு நன்கறியும்.
உலக வல்லாதிக்கங்களுக்கும், பன்னாட்டு முற்றாளுமை நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் நாட்டையே அடகு வைத்து விட்டன; இன்றைக்கு ஆளும் காங்கிரசும் நேற்றைக்கு நாடாண்ட பாரதிய சனதா கட்சியும். இவை இரண்டுமே அடியோடு ஒழித்துத் தரை மட்டமாக்கப்பட வேண்டிய பேரழிவுச் சக்திகளாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில், எல்லாத் தேசிய இன மக்களும் இவ்விரு கட்சிகளாலும் தொலையாத இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்தியத் தேசிய இனங்களுக்கான விடுதலை என்பதை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெரியார் அண்ணா வழிவந்தவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவில் தற்போதுள்ள மூத்த அரசியல் தலைவர்கள் யாவர்க்குள்ளும் இதில் அதிகக் கடமையும் தகுதியும் இருக்கின்றன.
தந்தை பெரியார் கோரியது தனிச் சுதந்திரத் தமிழ்நாடு
‘உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்; மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந் தோம், ஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம்; மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்ட தோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் - நமக்கு இதைவிட மானமற்ற தன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்! புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே! - குடிஅரசு 23.10.1938; விடுதலை 03.12.1957
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைக்கட்சி தமிழ்த் தேசத் தன்னுரிமை கோரும் கட்சி! உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் காக உரமான நெஞ்சோடு போராடுகின்ற கட்சி! உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு, ஒற்றை யாட்சியாய்க் கெட்டிப் பட்டுக் கிடக்கும் தில்லியின் ஆதிக்கத்தை உடைத்து நொறுக்க வேண்டு மென்று முனைப்புக் காட்டுகின்ற கட்சி! ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்புகளே! களப் போராளிகளே! வாருங்கள்! செயலில் இறங்குவோம்.!