ஜனநாயகம் என்றால் என்ன? கவுரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. அது எதுவும் தொலைக்காட்சிகளில் பேசப்படுவதில்லை, எதுவும் நின்று விவாதிக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவையற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்கு தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது. உழைக்கும் மிருகங்கள் என்று சொல்லும்போது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்தே தான் சொல்கிறேன். மூளை உழைப்பிலும் தனக்குத் தேவையான பணியை செய்ய முடிந்த இயந்திரத்தின் உப உறுப்புகள் மட்டும் தான் தேவை, அவன் உட்கார்ந்து கருத்தியல் ரீதியாக சிந்திக்கத் துவங்கினால் அது பிரச்சினை.
- கீழைக்காற்று நூல் வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆறிய உரையிலிருந்து.
அற்பவாத இலக்கிய உலகின் பிதாமகன் ஜெயமோகனுக்கு சமீபகாலமாக சரியான தூக்கமே வருவதில்லை போலிருக்கிறது. பின்னே, பாரதத்திரு நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருந்தால் தேச பக்தர்களுக்கு எப்படி தூக்கம் வரும்? நேற்று வரை உழைக்கும் மக்களுக்கு மட்டுமே இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இன்று நடுத்தர வர்க்கத்தையும் வீதிக்கு இழுத்துவிட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் புலம்பல்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து விக்கிலீக்ஸ் வரை அனைத்தும் இன்று நடுத்தர வர்க்கத்தின் பல்வரிசைகளுக்கு இடையில் நுழைந்து வருகின்றன. அரசின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைக்கான தீர்வுகளை மக்களிடம் யார் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்களோ, யார் களமிறங்கி போராடுகிறார்களோ, அவர்களின் பக்கம் மக்கள் செவிசாய்க்கிறார்கள். தங்களது விவாதங்களை அங்கே நேர் நிறுத்துகிறார்கள்.
இங்கே தான் நம்ம அற்பவாத குமாஸ்தா ஜெயமோகனுக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. நாமும் பலவருசமா காந்தியை நம்பு, கீதையை நம்பு, ஜனநாயகத்தை நம்பு என்று எழுதிக்கொண்டிருந்தோம், இவர்களும் ஆட்டுமந்தையைப் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். இன்னைக்கு யாரு இவனுங்க நம்ம மந்தையிலிருந்து பாதி ஆட்டை சிங்கமா மாத்திட்ருக்கானுங்களேன்னு யோசிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி யாரெல்லாம் ஆடுகளை சிங்கமாக மாற்றும்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரிய வேண்டும் என்றால் நமது எழுத்தாளரின் தளத்தைப் பாத்தாலே போதுமானது. கடந்த சில மாதங்களாக ஆத்திரம் தாளாமலும், தேச உணர்வு பொங்கப் பொங்கவும் பல பதிவுகளை எழுதி வருகிறார். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றும் குப்பை என்ற கணக்கில் சேரும் பலவகை குப்பைகளையும் சுமந்து கொண்டிருக்கும் குப்பைத்தொட்டியைப் போல ஜெயமோகன் ஆத்திரத்திலும், வன்மத்திலும், வெறிகொண்டும் கக்கி வரும் கணக்கற்ற வார்த்தைகளும் அதே தரத்தில் தான் இருக்கின்றன. உண்மை என்று அவர் கூறும் எதற்கும் ஆதாரமும் அடிப்படையும் இருக்காது. ஆனால் தரம்கெட்ட முறையில் ஏச்சுகளும் இழிவுபடுத்தலும் மட்டும் இருக்கும்.
உதாரணத்திற்கு டிசம்பர் மாசம் 8ம் தேதி ஒரு பதிவை எழுதிருந்தார். அதை படிச்சிட்டு சிரிக்கவா, விழுந்து விழுந்து சிரிக்கவான்னு தெரியல.
அது தான் ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்.
சரி என்னதான் எழுதிருக்கார்ன்னு பார்த்தா. இவரு ஐஸ்வர்யாராயப் பார்த்து அரைமணிநேரம் பேசுனாராம். ஆனா பாருங்க அவரைப் பார்த்த அரைமணிநேரத்திலேயே இவருக்கு “உலகம் என்பதுதான் என்ன?” அப்படின்னு சிந்திக்கிற அளவுக்கு தத்துவ ஞானக்கண்ணோட்டம் வந்திருக்குது. சரி அதை விடுங்க அந்தக் கட்டுரையில என்ன தான் சொல்லவராருனா. ஐஸ்வர்யாராய் உலக அழகி என்பதால் அவர் மட்டும் அழகி இல்லை. உலகில் அழகிகள் ஏராளம். “உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட” ஒரே நாள் கொண்டாட்டத்தில் அனைவராலும் அவர் மிகையாக உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அவரைப் போன்றோ அல்லது அவரை விடவோ லட்சோபலட்சம் அழகிகள் இந்த உலகில் இருக்கின்றனர். அதுபோல (இவரு உவமை எல்லாம் வச்சி எழுதத் தெரிஞ்சவராம்.. பின்ன பெரிய்ய எலக்கியவாதி இல்லயா..) அருந்ததிராய் என்றொரு எழுத்தாளர் எப்படி மிகைப்படுத்தப்பட்டார்? ஒரு வெளிநாட்டு பதிப்பு நிறுவனம் அவரது முதல் நாவலை 5 லட்சம் பவுண்டுக்கு வாங்கி இருக்கிறது என்ற செய்தி வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பேசப்பட்ட பிறகு தான் பிரபலமானார். மத்தபடி அந்த அம்மா எதையும் உருப்படியா சாதிச்சது இல்லை. எந்தப் பிரச்சனையையும் தனியா நின்னு சாதிச்சது இல்லை. ஏதாவது பிரச்சனை நடக்கும்போது போய் ஒட்டிக்குவாங்க, நக்சலைட்டுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க, காசுமீர் மக்களுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க, அவக ஒரு அஞ்சாம் படை.
மேற்கூறியவை தான் சமீபத்தில் நமது எழுத்தாளர் தேசபக்தியோடு கர்ஜித்த கட்டுரை. அதில் அருந்ததிராயினுடைய புகைப்படத்தையும் வீம்புக்கென்றே தரக் குறைவாக மார்ஃப் செய்து வெளியிட்டுள்ளார்.
சுயநலப் புழுக்களைப்போல தன் வீடு, தன் குடும்பம், தன் உறவு என்று பார்ப்பனியத்திற்குள்ளும், பிழைப்புவாதத்திற்குள்ளும் சுருங்கிக் கொண்டு பிற்போக்குவாதிகளையும், பிற்போக்குத்தனத்தையும் உயர்த்திப் பிடித்து தலையணை சைசுக்கு புத்தகங்களாக அடுக்கிக்கொண்டிருக்கும் ஒரு குமாஸ்தா எழுத்தாளனுக்கு தனது நாவலின் அருகதை என்ன என்று தெரிந்திருந்தும் மற்றவர்கள் மீது பாய்ந்து பிடுங்க எங்ஙனம் மனம் ஒப்புகிறதோ தெரியவில்லை.
அருந்ததிராய் இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்குகிறார், மக்களோடு மக்களாக போராட்டங்களில் நிற்கிறார். இவர்களைப் போல ஆளும் வர்க்கத்திடம் இருந்து எதை வாங்கித் திங்கலாம் என்று கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு பல்லிளிக்காமல் அரசின் அனைத்து மக்கள் விரோத கொள்கைகளையும் துணிவுடன் அம்பலப்படுத்துகிறார். ஜெமோ-வைப் போல காலமெல்லாம் சாகித்ய அகாடமிக்காகவே ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லை, தனக்கு கிடைத்த சாகித்ய அகாடமி விருதை கொலைகார இந்திய அரசின் முகத்திலேயே திருப்பியடித்தவர் அருந்த்திராய். ஜெமோ-வோ எப்பதாண்டா குடுப்பீங்க என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார். பின்னே சும்மாவா எத்தனை நாட்கள் கனவுகளில் கை நழுவி விழுந்ததை பிடிப்பதாக எண்ணி கண் விழித்திருக்கிறார். அப்பேர்ப்பட்ட காரியவாதிக்கு அருந்ததிராயைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?. எனினும் வன்மம் கொப்பளிக்க எழுதி வருகிறார்.
அடுத்து மருதையப்பாட்டா. என்கிற பெயரில் அவ்வளவு கேடுகெட்ட தரத்தில் ஒரு பதிவை சமீபத்தில் எழுதியுள்ளார். அதை மிகவும் தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது. இந்த குமாஸ்தாவுக்கு நக்கலும் எள்ளலும் சுத்தமாக கை வரவில்லை எனினும் முக்கி முக்கி கொடுமைப்படுத்தி சிரிக்கச் சொல்கிறார்.
அந்த கேடுகெட்ட பதிவில் ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையனை தரங்கெட்ட வார்த்தைகளால் வசைபாடுவதன் மூலம் தனது மன வக்கிரங்களை அசிங்கமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இது வெறுமனே ஜெயமோகனுடைய மனநோய் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டும் அல்ல, இது அரசியல் தொடர்பானது, அந்த வசவு வர்க்கச்சார்பானது. அது எங்கிருந்து வருகிறது, எந்த வர்க்கத்திற்காக வருகிறது, யாருக்காக ஜெமோ இவ்வளவு ஆத்திரம் கொண்டு தரங்கெட்ட முறையில் இறங்கி ஊளையிடுகிறார் என்பதை இப்போது பார்ப்போம்.
சமீபத்தில் நடைபெற்ற கீழைக்காற்று நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய தோழர் மருதையன், படிப்பது என்பது வெறுமனே பொருளீட்ட என்கிற இன்றைய நிலையை கேள்விக்குட்படுத்தி, மனித சமூகத்தை நாகரீகத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல கற்பது மிகவும் அவசியம் என்றும் எதை, எதற்காக, ஏன் கற்கவேண்டும் என்றும் விரிவாக விளக்கிச் சென்றார். வாசிப்பு குறித்த மிக நீளமான ஒரு உரையை - இலக்கிய அக்கப்போர் கோஷ்டிகள் கடைசிக் காலங்களில் புலம்பும் ஏக்கப்புலம்பல்களின் வரிசையில் வைத்து புரிந்து கொள்ள முடிகிறது எனில் அதற்கு மாபெரும் தத்துவஞான அறிவு வேண்டும்.
ஜெமோ ஆத்திரம் அடைவதற்கான அடிப்படை எதைப் படிக்கவேண்டும், ஏன் படிக்க வேண்டும், எதற்காகப் படிக்க வேண்டும் என்று தோழர் கூறியதிலிருக்கிறது அவருடைய பிரச்சனை. அதாவது எதார்த்த உலகில் இருந்து துண்டித்துக் கொண்டு, மக்களுக்கோ, சமூகத்திற்கோ சிறிதும் பயனளிக்காத குப்பைகளை, தனிமனித அற்ப விசயங்களை இலக்கியம் என்கிற பெயரில் எழுதிக் குவிப்பதை நாம் விமர்சிப்பதும், மற்றவர்களுக்கும் அவ்வாறு விமர்சிக்க கற்றுக்கொடுப்பதும், அதற்காக வாசிக்க வலியுறுத்துவதிலும் தான் இந்த ஆத்திரமும் காழ்ப்பும் அடங்கியிருக்கிறது. மொத்தத்தில் இப்படிப்பட்ட தத்துவ-இலக்கிய மேட்டிமைத்தனத்திலிருந்து உதயமாகும் காழ்ப்புணர்சி அறிவிழக்கச் செய்துவிடும் என்பதற்கு அவரது தரங்கெட்ட வசவுகளே சான்று.
ஜெமோ வகையராக்களை குறித்து தனது உரையில் போகிறபோக்கில் தோழர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார். “சங்கீத சீசனில் மியூசிக அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்களில்லையா, அது போல ஜெயமோகன் புத்தகம் போட்டால் ஒரு கோஷ்டி வரும். கூட்டம் கூட்டி அவர் இலக்கியத்தைப் பற்றி விதந்து பேசுவார், அதை தத்தரினனா-விற்கு தலையாட்டுவது போல தலையாட்டி ரசிப்பதில் ஒரு சுவை. அப்புறம் 'படிக்கும் பழக்கமே குறைந்து போய்விட்டது. நம் கலச்சாரம் என்னவாகும் என்று தெரியவில்லை. புத்தகங்கள் கேரளாவில் நிறைய விற்கிறது, இங்கே விற்கமாட்டேன் என்கிறது. இலக்கியம் அங்கே வளர்கிறது இங்கே வளரவில்லை' இந்தமாதிரி கவலைகளைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போய்விடுவார்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனையில் கிழடுதட்டிப்போனவர்கள்" என்று கூறினார்.
தோழர் இங்கு குறிப்பாக ஜெயமோகனுடைய கிழட்டுத்தனத்தைப்பற்றி மட்டும் சொல்லவில்லை, வெறும் இரசனைக்கு மட்டுமே படிக்கும் கூட்டத்தைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார். ஜெமோ-வை குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் அந்த கூட்டத்தின் ‘தலை’ என்கிற வகையில் ஜெமோ தாத்தாவுக்கு இது ஆயிரம் மடங்கு பொருந்தும்.
குறைந்து வரும் வாசிப்புப் பழக்கம், கம்யூனிச, பெரியாரிய முற்போக்கு அமைப்புகளுக்கு மட்டுமே உரிய பிரச்சனை அல்ல, பொதுவிலேயே அது சமூகத்தில் சிந்தனை வறட்சியை, மூளை ஊனத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடும்போது.
”அவர்கள் முற்போக்காக புரட்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச்செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்கள் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறித்து எழுதிக்கொடுக்க முடியுமா என்று கேட்டுப்பாருங்கள். இல்லை நம்மாலேயே விருப்பமான ஒரு விசயம் குறித்து ஆழமாக சிந்திக்க முடிகிறதா என்று யோசித்துப்பாருங்கள், முடியவில்லை என்றால் ஏன் முடியவில்லை? படித்திருக்கிறோம், எழுத்தறிவு இருக்கிறது ஏன் முடியவில்லை.
நான் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தை சொல்லவில்லை மூளை என்கிற பருப்பொருளே காலப்போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக இந்த கையைப் பயன்படுத்தி நான் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இந்த கைகள் வலிமையாக இருக்கும். நான் குமாஸ்தாவாக எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். உழைப்பில் ஈடுபடவில்லை என்றால் இந்த கை இப்படி தான் இருக்கும். உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்த தொலைக்காட்சி பிரேம் மாறுவதை பார்க்கும்போது என்ன செய்கிறீர்கள்? இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பதல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது.”
மேலே தோழர் பேசியதில் ஜெமோ என்ன புலம்பலைக் கண்டார்? ஒரு தலைமுறையே பாப்கார்ன் தலைமுறையாக, மூளை ஊனமுற்ற தலைமுறையாக உருவாகி வருவதை எச்சரிக்கை செய்வதனூடாக நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பதைத்தான் தோழர் வலியுறுத்தினார். ஜெயமோகனுக்கு இதில் எது புலம்பலாக இருக்கிறது?
வாசிப்பு என்றால் எவ்வாறான வாசிப்பு? விஷ்ணுபுரம் போன்ற தலையணைகளையும் அம்பானி உருவான கதையையுமா வாசிக்கச்சொன்னார். இல்லை, வாசிப்பு குறித்து தோழர் பேசியது கீழே:
’’படிப்பது என்றால் சும்மா படிப்பது அல்ல, ஒரு இரசனை வேண்டுமென்பதோடு அதற்குப் பின்புலத்திலே அறிவு வேண்டும். மார்க்ஸ் ஓர் இடத்தில் அழகாக எழுதுவார் மிகச்சிறந்த இசையாகவே இருந்தாலும் இசைக்காதுகள் இல்லையென்றால் அவர்களுக்கு அது வெறும் ஒலி தான்.
புத்தகக் காட்சியில் பலர் பேசக்கூடும். தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு ‘நாம் பழையவற்றைப் படிக்க வேண்டும், பாரதியார் படிக்க வேண்டும், கம்ப இராமாயணம் படிக்க வேண்டும், நம்முடைய இலக்கியச் செல்வங்களை படிக்க வேண்டும், மரபைப் படிக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய உபதேசங்கள் கொடுக்கப்படும். அது அல்ல நான் சொல்வது. பொதுவாக படிப்பது இதற்குத் தீர்வு அல்ல. அல்லது இது வெறும் தொழில் நுட்பத்தின் தாக்குதல் அல்ல. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். படிக்காதவரையிலே இதிலிருந்து விடுபட முடியாது.
இது முதலாளித்துவத்தின் தாக்குதல். அதைப் புரிந்துகொள்வதற்கு அதனை முறியடிப்பதற்கு அதிலிருந்து விலகி நின்று தற்காத்துக்கொள்வதற்கு ஆற்றல் தருபவற்றைப் படிக்க வேண்டும்
ஆற்றல் மிக்க வழக்குரைஞர்கள், கணக்குத்தணிக்கையாளர்கள் எல்லாம் டாடா, பிர்லா, அம்பானி, மிட்டல்களுக்காக வேலை செய்கிறார்கள். இப்போது இந்த ஸ்பெக்ட்ரம் விவாதங்களைப் பாருங்களேன். வாதிடுபவர்களெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் தான். பிரச்சினை பெரிதாக ஆக பெரிய கைகள் வந்து ஆஜராகின்றனர். டாடாவிற்கு ஹரீஷ் சால்வே வருகிறார். இன்னொருத்தருக்கு அதே போல் இன்னொருவர். இந்த வக்கீல்கள் எப்படிப்பட்டவர்கள்? ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் எழுந்து விட்டு உட்கார்ந்தால் 10 லட்சம் ரூபாயைக் கட்டணமாகப் பெறுபவர்கள். வழக்கு நடக்கிறதா இல்லையா பேசுகிறாரா இல்லையா என்பதல்ல விசயம் ரஜினிகாந்த் கால்ஷீட் போல படப்பிடிப்பு நடக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை.
அந்த வழக்கறிஞர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்? மிக நேர்த்தியான மொழியில் ஊழலை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். மோசடியை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். அல்லது இங்கே இருக்கும் சோ போன்ற ஆட்கள் மிகத் திறமையாக வாதாடுகிறார்கள். அவனை பார்ப்பனத் திமிர் பிடித்தவன் பார்ப்பன பாசிசத்தின் கைக்கூலி என்றெல்லாம் மட்டும் சொன்னால் போதாது அவனை அறிவு ரீதியாக ஏளனம் செய்து தூக்கி எறிகின்ற ஆற்றல், அவனைப் பற்றிய பிரமைகளை வைத்திருக்கின்ற நம் மக்களுக்கு அவனொரு அற்பப்பதர் என்று காட்டக்கூடிய ஆற்றல் வேண்டும்.”
முதலாளித்துவத்தையும், பார்ப்பனியத்தையும் வீழ்த்துவதற்காக நாம் கற்க வேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினால் ஜெயமோகனுக்கு ஏன் சூத்தாம்பட்டையில் சூடு பறக்கிறது? ஏனென்றால் புரட்சி வந்தால் தன்னுடைய சூத்தாம்பட்டை பழுத்துவிடும் என்று ஜெமோ தவறாக எண்ணியிருக்கலாம். (சூத்தம்பட்டை. உபயம்-ஜெ)
”எனக்குத் தெரிந்து இந்த திருவண்ணாமலை தீபம் கொஞ்ச நாள் முன்பு இல்லாமல் இருந்தது. இப்ப எந்த டீக்கடையில நின்னாலும் திருவண்ணாமலை தீபத்திற்குப் போகிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். எந்த கோவில் என்ன திருவிழா என்றாலும் கூட்டம் கூடுகிறது. இது பெரியார் பிறந்த மண்ணா? அவர் அவ்வளவு எழுதி இருக்கிறாரே, அவ்வளவு பேசி இருக்கிறாரே அதில் ஒரு சதவீதம் ஒவ்வொருத்தரும் செய்தால் எவ்வளவு பயனடையலாம்? அதை ஏன் செய்ய முடியவில்லை என்று முற்போக்கு எண்னம் கொண்ட நாம் சிந்திக்க வேண்டும். நான் கம்யூனிஸ்டுகளை மட்டும் சொல்லவில்லை, பெரியார் இயக்கத்தில் இருக்கிறார்கள், அம்பேத்கர் மீது பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் வேலை இருக்கிறது.
பார்ப்பனப் பாசிசம் என்பது இன்னும் ஓய்ந்து விடவில்லை அது மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் தலை எடுக்க்க்கூடியது. அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஆற்றல் உள்ளவர்கள் இன்னும் தேவை. நூல்கள் படிப்பதை நம்முடைய விருப்பம், விருப்பமின்மை என்ற வரையரையைத் தாண்டி அதை நம்முடைய கடமையாகக் கொள்ள வேண்டும்.
முதலாளித்துவம் தொடுத்துள்ள தாக்குதல் மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாக, உண்ணும் இயந்திரங்களாக, நுகரும் இயந்திரங்களாக மாற்றுவதற்கான தாக்குதல். நம் அறிவை செயலிழக்கச்செய்வதற்கான தாக்குதல். அந்த தாக்குதலில் நம்முடைய சிந்தனையும் மூளையும் ஊனமுற்றுப் போவதற்கு தெரிந்தே அனுமதிக்கக்கூடாது.
நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்குப் படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், பல் துறை அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். அப்படி படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறை, அந்த நடைமுறைக்காக கற்க வேண்டும்.”
என்று தோழர் தனது உரையை மேற்கண்ட பாராவோடு முடிக்கிறார். தோழர் பேசியவற்றுள் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் கருத்துக்கள் ஏதேனும் இருக்கிறதா? அனைத்தும் மக்களுக்காக, எதிர்காலத் தலைமுறைக்காக தானே பேசப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டதும் ஜெமோ-வுக்கு ஏன் அவ்வளவு ஆத்திரம் வருகிறது? மேலே எடுத்துக்காட்டப்பட்டிருப்பவை தோழர் பேசியவற்றுள் ஒரு சில துளிகள் மட்டுமே. மொத்தமாக அவர் உரையாற்றியது சரியாக ஒன்றரை மணி நேரமாகும். அந்த உரை முழுவதுமே நூல் வாசிப்பு குறித்தும், வாசிப்பின் மூலம் பெறப்படும் அறிவு எப்படி தக்க வைக்கப்பட முடியும் என்பது குறித்தும், இன்றைய இளைய தலைமுறையின் வாசிப்பு முறை பாரிய பின்னடைவுக்குள்ளாகியிருப்பது குறித்தும், அந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அடையாளம் காட்டுவதாகவும், இந்த பண்பாட்டுத்தாக்குதலை எப்படி முறியடித்து வெளியேறுவது என்பதற்கு வழிகாட்டுவதாகவுமே இருந்தது.
தோழருடைய இந்த உரையை ஒலி வடிவில் கேட்கும் யாரும் அல்லது படிக்கும் யாரும் நிச்சயமாக வாசிப்பின் அவசியத்தை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் இந்த உரை நூல்களை வாசிக்கும் விருப்பத்தையும், ஆர்வத்தையும் தூண்டிவிடும் உந்து சக்தியாக மட்டுமே இருக்க முடியும். ஜெமோ-வுக்கு மட்டும் இது புலம்பலாக இருப்பது ஏன்?
இந்த உரையைக் கண்டு டாடா அம்பானி போன்ற மக்கள் விரோதிகள் வேண்டுமானால் அச்சப்படலாம். ஜெயமோகனுக்கு என்ன அச்சம்? ஏன் இந்த உரையைப் படித்ததும் அநாகரீகமாகப் பேசும் அளவிற்கு ஆத்திரம் வருகிறது. காரணம் அவருடைய கண்ணோட்டம் தான்.
தமிழ்ப் பதிவுலகில் கே.ஆர். அதியமான் என்கிற நபரை நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவரை அறிந்திருக்கவில்லை என்றால் உடனடியாக வினவு தளத்திற்கு சென்று விவாதங்களைக் கவனியுங்கள். ஒரு முக்கிய குறிப்பு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இந்த அதியமான் அவர்கள் வினவு தளத்திலேயே குடியிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் எந்த நேரத்திற்கு சென்றிருந்தாலும் அவர் அம்பானிக்காகவோ, டாட்டாவுக்காகவோ அல்லது நரமாமிச வெறியன் மோடிக்கு ஆதரவாகவோ சாமியாடிக்கொண்டிருந்திருப்பார். அதாவது இந்திய மக்களுக்கு எதிராகவும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் வழக்காடி கொண்டிருந்திருப்பார். தற்போதும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் வேறு வேறு பெயர்களில். காரணம், தோழர்களுடனான விவாதங்களில் பழைய மூஞ்சி கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டதால் புதிய முகமூடிகளுடன் வினவில் வழக்காடுகிறார்.
சரி அதியமானுக்கு என்ன இப்போது என்கிறீர்களா? தத்துவம், அரசியல், பொருளாதரம் அனைத்திலும் அதியமானுடைய கருத்து என்னவோ கண்ணோட்டம் என்னவோ அது தான் ஜெயமோகனுடையதும். காஷ்மீர் முதல் ஆர்.எஸ்.எஸ் வரை பெரியார் முதல் அப்சல்குரு வரை அனைத்திலும் இலக்கிய அதியமான் தான் ஜெயமோகன், இணையதள ஜெயமோகன் தான் அதியமான். இதை அனைவரும் தெளிவாக அறிய முடியாமல் இதுவரை தடுத்துக்கொண்டிருந்தது என்னவெனில், அதியமான் அனைத்திலும் தனது கருத்து என்ன என்பதை அப்பட்டமாக (நேர்மையாக) சொல்லிவிடுவார் ஜெயமோகன் அவ்வாறு கருத்துக்களை கசியவிடுவதில்லை. இந்த நிலைமையும் நேற்றுவரை தான் தற்போதோ ஜெயமோகனையும் மீறிக்கொண்டு அவை வெளியேறிவிடுகின்றன. கடந்த ஓராண்டாக ஜெமோ-வின் வர்க்கச் சார்பு-கண்ணோட்டம் அப்பட்டமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது (நேர்மையாக அல்ல)
குறிப்பாக ஜனநாயக முகமூடி தரித்திருக்கும் இந்திய அரசின் பயங்கரவாதத்தை அம்பலமாக்குபவர்களை (குறிப்பாக அருந்த்திராயை) அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளை, அவர்களுடைய தத்துவத்தை, ஒட்டுமொத்தமாக முற்போக்குக் கருத்துக்கள் அனைத்தையும் கடும் வெறுப்புடனும், ஒடுக்குமுறை மனோபாவத்துடனும் மூர்க்கமாக எதிர்ப்பது; ஆத்திரத்தில் அறிவிழந்து கேவலமான முறையில் இழிவுபடுத்துவது; எனது இந்தியா என்கிற கட்டுரையில் அருந்ததிராயை வக்கிரமாக குருவி மண்டை என்று குறிப்பிட்டது முதல் மருதையனை பெருசு என்றது வரை ஜெமோ-வின் வர்க்கக்கண்ணோட்டம் ஆத்திரத்தோடும், மூர்க்கத்தோடும் வெளிப்பட்டிருக்கிறது.
அதன் இன்னொரு பக்கமான சார்பு நிலையிலிருந்து - வரலாற்றில் காந்தியின் துரோகங்களை மறைத்தும் திரித்தும் காந்தி புராணம் பாடுவது மட்டுமின்றி காந்தியின் மிச்ச மீதி கோவணத்தையும் கழட்டி காற்றில் பறக்க விட்ட அம்பேத்கரையே காந்தியின் மீது மரியாதை கொண்டிருந்தார் என்றும் இருவருக்கும் பெரிதாகப் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் பச்சையாக பொய்களை எழுதுவது; இந்தப் பொய்களின் தொடர்சியை தக்க வைக்க அம்பேத்கர் திரைப்படம் வெளியானபோது அதில் கூறப்பட்ட உண்மைகளை பொய் என்று சாடியது;
சாதி அடுக்குகளை புனிதப்படுத்தி பாதுகாக்கும் பார்ப்பனிய கீதையை விதந்தோதுவது; அய்யா வைகுண்டரின் பார்ப்பன எதிர்ப்பை மூடி மறைப்பது; மரியாதைக்குக் கூட தந்தை பெரியாரை ‘பெரியார்’ என்று அழைக்க மறுத்து முட்டைக்கண்ணன் சோவைப் போல ஈ.வெ.ரா என்று அழைப்பது; அம்பானியின் சுரண்டலுக்கு தத்துவ விளக்கம் கொடுத்து நியாயப்படுத்துவது; இசுலாமியர்களையும்-கிருத்தவர்களையும் இந்து மனோபாவத்துடன் வெறுப்பது; மார்க்சியத்தையும், மாவோயிஸ்டுகளையும் மன்மோகன்சிங்கை விட கடுமையான காழ்ப்புடன் எதிர்ப்பது ஆகியவற்றை இவருடைய எழுத்தில் காணலாம். இந்த எதிர்நிலை மற்றும் சார்பு நிலையிலிருந்து தான் ஜெயமோகனுடைய மக்கள் விரோதக் கருத்துக்களும் ஆளும் வர்க்கக் கருத்துக்களும் முற்போக்காளர்கள் மீது மூர்க்கமாகப் பாய்கின்றன.
தோழர் மருதையனுடைய உரை தமிழக மக்களிடம் வீச்சாக சென்றடைந்தால் என்ன ஆகும் என்பது ஜெமோ-வுக்கு நன்றாகத் தெரியும் எனவே தான் அந்த வெறித்தனமான வசவு. அருந்ததிராயின் கருத்துக்கள் இந்தியா முழுவதும் சென்றடைந்தால் என்ன ஆகும் என்று தெரிந்த ஆத்திரத்தில் தான் வக்கிரமாக அவரை குருவி மண்டை என்றும், ஐந்தாம்படை என்றும் ஊளையிடுகிறார். இது தான் ஜெயமோகன். கோவணமோ, குடுமியோ, பூணூலோ இருந்தால் தான் பார்ப்பான் என்றில்லை. இதோ இந்த ஜெயமோகன் போன்றவர்கள் தான் உண்மையான பார்ப்பனர்கள். மன்மோகன், ப.சி, போன்ற ஓட்டுப்பொறுக்கிகளாக இருந்தால் தான் டாடா, அம்பானிக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் காவடி தூக்க வேண்டும் என்றில்லை இதோ பாருங்கள் இந்த இலக்கிய ஆளுமையும் கூட மறுகாலனியாக்க தாசன் தான். அதாவது தரகு எழுத்தாளன்.
யாருக்கும் எவ்விதத்திலும் பயனளிக்காத, அற்ப விசயங்களை சிலாகிப்பதையே வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டுள்ள ஜெமோ சமூகத்தின் வளர்சிதை மாற்றம் பற்றிய மார்க்ஸிய இயங்கியல் பற்றியெல்லாம் பேசுகிறார் என்றால் வியப்புறாதீர்கள். இதுதான் மேட்டிமைத் தனத்தின் நையாண்டியாம். தனது தளத்தில் மாற்று கருத்துகளைக்கூட பதியவிடாமல் மறுமொழி பகுதியையே அனுமதிக்காத ஒரு கருத்து பாசிஸ்ட், வினவு போன்ற சமூக பிரச்சனைகளை விவாதிக்க உற்சாகமளிக்கும் தளத்தை ஒற்றை வார்த்தையில் புறந்தள்ளுவதும் அதே அடிப்படையில் தான்.
பிழைப்புக்காக தற்போது இந்த இலக்கிய ஆளுமை சரணடைந்துள்ள இடம் தமிழ் மக்களை கலாச்சார ரீதியாக சுரண்டி முட்டாளாக்கும் கோடம்பாக்கம் சினிமா. முன்பு தானே 'கேவலமானது' என்று குறிப்பிட்ட தமிழ் திரை உலகில், இன்று காசுக்காக சமரசம் செய்து கொண்டு இயங்கிவரும் ஒரு பிழைப்புவாதிக்கு, சுயமாகவும், மாறி மாறியும் சொறிந்து விட்டுக்கொள்ளும் இலக்கிய கூட்டங்களோ, அல்லது தனக்கு விருது கிடைக்கவில்லை என்ற கழிவிரக்கப் புலம்பல்களோ கொஞ்சம் கூட அருவருப்பாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இழிநிலையிலிருக்கும் ஒரு வசனகர்த்தா மக்களுக்காகவே வாழும் அருந்த்திராயைப் பற்றியும், மருதையனைப் பற்றியும் பேசுவதற்கு துளியாவது அருகதை உண்டா?
கடைசியாக ஒன்றை நம் காலத்து நாயகனான ஜெயமோகனுக்கு சொல்லிவிடுவது நம் கடமை. ஜெயகாந்தனால் இன்றைக்கும் ஏன் எழுத முடியவில்லை? அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஏன் தனது எழுத்துக்கு ‘முற்றும்’ போட்டுவிட்டார் என்கிற தத்துவஞான கேள்விக்கு தத்துவ மாணவன் ஜெமோ பதிலளிக்க முடியுமா?
சில சிறப்பான காரணங்களால் தான் ஜெயகாந்தன் கொஞ்சம் அதிக நாட்கள் வண்டியை ஓட்ட முடிந்தது. நம் காலத்து நாயகனுக்கோ அது கூட சாத்தியம் இல்லை என்று தான் தோன்றுகிறது.
ஜெமோ ஒரு முறை ‘மீசைகளை’ப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ராஜமார்த்தாண்டன் மீசை எப்படி இருக்கும் அதன் சிறப்பு என்ன, விக்கிரமாதித்யனுடைய மீசையின் சிறப்பு, ந.முத்துச்சாமியின் மீசை என்று வரிசையாக தமிழ இலக்கிய உலகில் ஏறக்குறைய முகத்தில் மீசை வைத்திருந்த அனைவரைப்பற்றியும் எழுதியிருப்பார் என்று நினைவு. இப்படிப்பட்ட ஒரு கட்டுரையை எழுத அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கக்கூடும். ஒவ்வொருவருடைய மீசையையும் கவனித்து பதிவு செய்ய வேண்டுமெனில் எவ்வளவு கடினமான பணி. உண்மையிலேயே அது ஒரு மாபெரும் பணி தான்.
தோழர் மருதையன் தனது உரையில் சரியாகத்தான் சொன்னார். இவர்கள் சிந்தனையில் கிழடுதட்டிப்போனவர்கள் என்று. ஜெயமோகன் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்.
- சர்வதேசியவாதிகள் (