2015 ஏப்ரல் மாதத்தில் ஃபோர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பு பட்டியலில் சேர்த்தது. ஃபோர்டு அறக்கட்டளை Foreign Contribution Regulation Act சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஏப்ரல் 15, 2015 அன்று சமூக அரசியல் செயல்பாட்டாளர் டிஸ்டா செடல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தை மத்திய புலனாய்வுத் துறை சோதனையிட்டு பல ஆவணங்களைக் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. டிஸ்டா செடல்வத் தனது இரு அரசு சாரா நிறுவனங்களுக்கு (sabarang Trust மற்றும் citizen for justice and peace) ஃபோர்டு அறக்கட்டளையிடமிருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்று அரசியல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த டிஸ்டா செடல்வத் அன்றைய குஜராத் மோடி அரசு மதக்கலவரத்தை தூண்டி இஸ்லாமியர்களைக் கொலை செய்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இதனைத் தொடர்ந்து 2016 மார்ச் மாதத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்தது. இதில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் compassion International, caritas International India, mercy group, National Endowment for Democracy, Georgr soros open society foundation ஆகியவையாகும். இன்னும் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு நேரடியாக கண்காணிக்கத் துவங்கியுள்ளது. இதில் Green Peace நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ngo cartoonமோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய அரசு மற்றும் பெருவணிக குழுமங்களிடமிருந்து நிதியுதவி பெற்று இந்தியாவில் செயல்படும் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முடக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் தேச நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி நிதிகளையும் கட்டுப்படுத்தத் துவங்கியது. இதன் எதிரொலியாக 2016 செப்டம்பர் முதல்வாரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஜான் கெர்ரி இந்தியா வந்து உள்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து, அரசு சாரா நிறுவனங்களின் மீது கொண்டுவந்துள்ள கட்டுப்பாடு வருத்தம் தருவதாகத் தெரிவித்தார். இவற்றை உடனே தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று நேரடியாகவே கேட்டுக்கொண்டார், இவற்றை கருத்தில் கொண்டு இந்திய உள்துறை அமைச்சகம் சில நிபந்தனைகளுடன் தளர்வு நடவடிக்கையில் ஈடுபட்டது, இங்கு நிபந்தனைகள் என்பது மோடி அரசுக்கு குந்தகம் விளைவிக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே எதார்த்தம்.

இங்கு மிகவும் கவனிக்க வேண்டிய விடயம் ஒரு அரசு சாரா நிறுவனம் முடக்கப்படும்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஏதோ மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. அமெரிக்காவின் அதிமுக்கிய அமைச்சர் இந்தியாவிற்கு ஓடி வருகிறார். இதன் உள்நோக்கம் என்ன? ஆங்கிலத்தில் NON GOVERNAMENTAL ORGANISATION - NGO எனப்படும் இந்த நிறுவனங்கள் ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வலைப் பின்னலாக என்ன தான் செய்கின்றன என்று தேடினால், ஆங்கிலத்தில் ஒரு சில முக்கியமான ஆய்வுகள் கிடைக்கின்றன, ஆனால் தமிழில் மிகக்குறைவாண தகவல்களே இருக்கிறது. ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சூழ்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் தத்துவமும் வேலைத்திட்டங்களும் யூகிக்க முடியாத அளவு முக்கியமானது, இதை புரிந்து கொள்ள புதுமைப் பதிப்பகம் மொழிபெயர்த்துள்ள பி.ஜே. ஜேம்ஸ்சின் “அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்” எனும் நூல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 2009 ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ் அரசியல் களத்தில் தேர்தல் சாரா அரசியல் இயக்கங்களின் முன்னெடுப்பு புது அதிர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கட்சிகளுக்கு மிகப்பெரிய நிர்பந்தங்களை ஏற்படுத்தி கோரிக்கைகளை முன்னிறுத்தும் மக்கள் திரள் போராட்ட களம் அமைந்துள்ளது. இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ள இந்த நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும்.

நிரந்தரமான ஒரு பொருளாரா சுரண்டலுக்கு ஏகாதிபத்திய சக்திகள் இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நிலப்பரப்பை கைப்பற்றி 200 ஆண்டுகளாக சுரண்டியது. இச்சுரண்டலை நிரந்தரப்படுத்த காலனியாதிக்க நீக்கத்திற்குப் பிறகும் நவகாலனியத்துவத்திலும் மிக ரகசியமாக பயன்படுத்தவது தான் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். உலகமயமாக்கலின் உச்சத்தில் பல்வேறுபட்ட அரசாங்கத்துடன் ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்களின் அங்கீகாரம் பெற்று ரகசியத் திட்டங்களை பகிரங்கமாக செய்யும் அளவுக்கு உயர்ந்தது.

ஆரம்ப காலங்களில் சேவை மனப்பான்மையோடு கிருத்தவ மிசினரிகள் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்ரிக்கா, ஆசியா நாடுகளில் சமூக பொருளாதாரத்தில் பலவீனமான மக்களுக்கு செய்தது. முதல் உலகப்போருக்குப் பின்னர் கிருத்தவ மிசினரிகளை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்ய சக்திகள் சோசியலிச சித்தாந்த எதிர்ப்பு சக்திகளாக பயன்படுத்தியது. சமூகப் பொருளாதாரத்தில் ஒருவன் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு அவனுடைய தனிப்பட்ட வாழ்வின் பாவச்செயலே காரணம், அதிலிருந்து மீண்டுவர இறையருளே இறுதியானது என்ற அடிப்படிடையில் மக்களிடம் ஒரு குற்றணர்வான மனநிலையை உருவாக்கி நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதார சுரண்டலைப் பாதுகாத்தனர். வறுமை, நோய், சமச்சீரற்ற சமூகநிலை, பொருளாதார பாதுகாப்பின்மை, அரசியல் ஒடுக்குமுறை போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள் எழுச்சி பெற்று ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலை அசைத்துப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணம், உதவி, மறுவாழ்வு, சேவை போன்ற தளர்வான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.

முதல் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பொதுவுடைமை சிந்தனை பாட்டாளி வர்க்கத்திடம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டே பல மதச்சார்பற்ற அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டது, ஆரம்பத்தில் உள்நாட்டு விவகாரத்தில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தது பின்பு சர்வேதேச மட்டத்தில் தனது களப்பணியை விரித்துக்கொண்டது. இராணுவம் மற்றும் சட்டத்தின் கரம்கொண்டு சமூகத்தில் எழக்கூடிய எழுச்சியை அடக்கிவிட முடியாது என்பதை முதலாளித்துவ அதிகார வர்க்கங்கள் யூகித்துவிட்டன. அடக்குமுறையினூடாக தற்காலிகத் தீர்வு மட்டுமே ஏற்படும். நிரந்தரமாக முரண்பாடுகளைக் களைய அறக்கட்டளை போன்ற மாற்று அமைப்புகளை உருவாக்கி நேரடியாக மக்களிடம் களப்பணியாற்ற தூண்டப்பட்டது. இதில் முன்னோடியான இரு அறக்கட்டளைகள் ராக்ஃபெல்லர் மற்றும் போர்டு பவுண்டேசன்ஸ். இவை மக்களிடம் உள்ள சிறு சிறு வேறுபாடுகளை அடையாளப்படுத்தி பிளவுகளை உருவாக்கி போராட்டங்களை சிதறடித்து, கோரிக்கைகளை திசைதிருப்பும் வேலைகளை செய்வதில் முன்னோடியாக செயல்பட்டன.

1960-களுக்குப் பிறகு தன்னார்வ தொண்டுத் நிறுவனங்கள் மறைமுகமாக சி.ஐ.ஏ வின் வலைப்பின்னலுக்குள் விழுந்தது. ஏகாதிபத்திய அரசுகளின் ஆசீர்வாதத்தோடு பல திட்டங்களை மூன்றாம் உலக நாடுகள் மீது சி.ஐ.ஏ செயல்படுத்தியது. இதற்கு ஃபோர்டு, ராக்பெல்லர் அறக்கட்டளைகள் நிதியுதவி செய்தன. உலகில் ஏற்படும் அழிவுகளின் போது பேரிடர் மீட்பு குழு நிவாரணப் பணிகள் என்று மூன்றாம் உலகநாடுகளுக்கு செல்லும் தொண்டு நிறுவன ஊழியர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே அதிகாரமற்ற ஒற்றர்களாக செயல்படுகின்றனர். எப்படி ராணுவ சேவையில் இருப்பவர்கள் ஏதோ மனிதகுலத்தின் மீட்பர்கள் போல தேசபக்தியை ஊட்டி அதிகார வர்க்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறதோ அதேபோல் இந்த தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் இறைபணி, மேம்பாடு, சேவை மனப்பான்மை என்ற மயக்கத்தில் மறைமுகமாக உளவுவேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்,

1970-களில் ஏகாதிபத்திய சக்திகள் தாங்கள் சந்தித்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு புதிய பொருளாதார மறுகட்டமைப்பு செய்ய மூன்றாம் உலக நாடுகளை நிர்பந்தித்தது, மறுகட்டமைப்பின் நோக்கமே உலகமயமாக்கல் கொள்கைக்கான அடிப்படை பொருளாதார கட்டுமானத்தை உருவாக்குவதே. இதனால் அமெரிக்க ஐரோப்பிய மூலதனங்கள் தங்குதடையில்லாமல் பல நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்டு பெரும் லாபம் ஈட்டும், இந்த மறுகட்டமைப்பு மூன்றாம் உலகநாடுகளின் அரசு நலச்சேவைகளை வலுக்கட்டாயமாக தளர்த்த செய்து மானியங்கள், பொது விநியோகம், மருத்துவம், கல்வி போன்ற சேவைகளில் அரசு தலையிடுவதை குறைத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. அரசின் இடத்தை தொண்டு நிறுவனங்களினுடாக ஏகாதிபத்தியம் தன்னை மற்றொரு வடிவில் நிலைநிறுத்திக்கொண்டது. இந்த காலகட்டத்தில்தான் தொண்டுநிறுவனங்கள் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது, பொருளாதார மறுகட்டமைப்புக்கு துணைநிற்கும் உலகவங்கி, நாணயநிதியமே அவற்றை எதிர்ப்பதுபோன்று நாடகமாடி பல கூட்டங்களைப் போட்டு விவாதித்து தனது அயோக்கியத்தனத்தை மூடிமறைக்க எதிர்ப்புக் கூட்டத்தை கூட்டி அதிருப்தியானவர்களின் செயல்பாடுகளை திசைதிருப்பியது. மக்களின் அதிருப்தி, மூல அரசியலை கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக, நீர்த்துப்போக செய்யவதற்கு பல கூட்டங்கள், விவாதங்கள், மாற்றுத் திட்டங்கள் என்று சிதைக்க தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியது. இத்தொண்டு நிறுவனங்கள் மூலம் பல கவர்ச்சிகரமான சொற்களையும் கருத்துகளையும் காலத்திற்கு ஏற்ப உருவாக்கியது. people participation. Decentralization, gross root planning, sustainable development, micro financing, inclusive growth, social Justice, good governance, corporate social responsibility இதுபோன்ற நூற்றுக்கணக்கான சமூக மாற்றத்தை உருவாக்குவதாக கூறப்படும் கவர்ச்சி சொற்களைப் பயன்படுத்தியது.

அமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் உள்ளன. இந்த அறக்கட்டளைகள் பல லட்சம் பில்லியன் டாலர்கள் சொத்தும், நிதியும் வைத்துக்கொண்டு, சி.ஐ.ஏவின் வழிகாட்டுதலில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஜொன் ரோலஃபஸ் தனது ஆய்வில் வெளிப்படுத்துயுள்ளார். (Foundations and policy: The mask of pluralism by Joan Roelofs). 1970 – 80 களுக்கு இடைபட்ட காலத்தில் ராக்ஃபெல்லர் மற்றும் போர்டு பவுண்டேசன்ஸ் அறக்கட்டளைகள் தென்அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பியா, இந்தோனேசியா, இலத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏற்றாற்போல் எப்படி அரசியல் பொருளாதார மறுகட்டமைப்பு செய்தார்கள் என்பதை ஜோன் ரோலஃப்ஸ் தனது ஆய்வில் விவரிக்கிறார். இந்த அறக்கட்டளைகளின் நேரடி நிதியுதவியில் ஹார்வர்ட், கொலம்பியா, மசஸூட்ஸ் பல்கலைக்கழகங்களில் சர்வதேச உறவுகள் கவுன்சில் போன்றவற்றை எப்படி இயக்குகிறது மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுகளில் சி.ஐ.ஏ வின் தலையீடு எப்படியெல்லாம் ஊடுருவுகிறது என்பதையும் விளக்குகிறார். கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளை தன் வயப்படுத்திக்கொண்டு பல பண்பாட்டு அமைப்புக்களை உருவாக்குகிறது. இந்த அமைப்பின் வழியாக சி.ஐ.ஏ எப்படியெல்லாம் ஊடுருவியது என்பதைப் பற்றி தெளிவான ஓர் ஆய்வை ஃபிராங்கள் ஸ்டோனர் சாண்டர்ஸ் செய்துள்ளார், இதற்கும் ஒரு படி மேலே சென்று அரசியல் கட்சிகளுக்குள் எப்படி தவிர்க்கமுடியாத சக்தியாக அறக்கட்டளைகள் விளங்குகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். (The cultural cold war: CIA and the world of arts and lettrs by francis s tonor saunders.)

அமெரிக்க ஐக்கிய அரசுகளின் முகமை (USAID) பெண்ணியம், சூழலியல், மனித உரிமை போன்றவற்றின் மீது கவனத்தை ஈர்த்து பல ஆய்வு மையங்களை உருவாக்கியது, சர்வதேச மட்டத்தில் வரலாறு, சமூகவியல், வெளியுறவு, விவசாயம் சார்ந்து ஆய்வுகளை செய்வதற்கு பல பல்கலைக்கழகங்களுக்கு ஃபோர்டு, ராக்பெல்லர் அறக்கட்டளைகள் நேரடியாக நிதியுதவி செய்கிறது. சமகாலத்தில் நிலைத்த நீடித்த வளர்ச்சி என்ற போர்வையில் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சுழல் பாதுகாப்பு போன்ற திரைமறைவில் ஏகாதிபத்தியம் மூலவளங்களை சாதுர்யமாகப் பயன்படுத்தி வருகிறது.

ஃபோர்டு பவுண்டேசன் 1950களில் இந்தியாவிற்குள் தனது காலடியை வைத்தது. இந்தியாவிற்குள் ஏன் நுழைந்தோம் என்பதற்கான காரணத்தை அதன் தலைவர் பால்ஹர்ப்மேன் கூறியதாவது - “சீனாவை இழந்துவிட்டோம் இந்தியாவை இழக்க மாட்டோம்”. 1950களில் சீனா கம்யூனிச நாடாக எழுந்து நின்றது. அதன் தாக்கம் இந்தியாவில் இருந்ததால் சி.ஐ.ஏ ஃபோர்டு பவுண்டேசனைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் அரசியல் வேலைகளை மறைமுகமாகத் துவங்கியது. ஃபோர்டு பவுண்டேசனுக்கும் சி.ஐ.ஏவுக்கும் உள்ள உறவை ஜேம்ஸ் பெடராஸ் தனது ஆய்வு நூலில் விரிவாக கூறி இருக்கிறார். “the ford foundation and the CIA : Adocumental case of philanthropic collaboration with the secret police”.

1960களில் இந்தியாவின் திட்டக்குழுவில் நேரடியாக ஃபோர்டு பவுண்டேசன் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அரசு ஆவணங்களை உடனுக்குடன் ஏகாதிபத்திய சக்திகளின் பார்வைக்கு எடுத்துச்செல்லும் அளவிற்கு ஃபோர்டு பவுண்டேசன் அதிகாரம் படைத்ததாக இருந்தது. இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தை வேளாண் விரிவாக்கம் என்ற பெயரில் அடியோடு ஒழித்தது ஃபோர்டு பவுண்டேசன் என்பது உலகறிந்த விடயம். ஊரக வளர்ச்சி மேம்பாடு என்ற பெயரில் இந்தியாவின் சுயசார்புப் பொருளாதாரத்தை சிதைத்தது ராக்பெல்லர் பவுண்டேசன். பின்நாட்களில் வினோபாவாவின் பூதான் இயக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணின் காந்தி அமைப்பு அறக்கட்டளையின் நாகலாந்தில் அமைதி முனைப்பு, பிரம்மபுத்திர திட்டம் போன்றவற்றில் ஃபோர்டு பவுண்டேசன் ஆதிக்கம் செலுத்தியது.

 

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அடிப்படையில் ஏழைகள், பழங்குடியினர், பெண்கள், சேரிவாழ் மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோரை மையமாக வைத்து செயல்படத் துவங்கியது. பின் நாட்களில் சுற்றுச்சூழல், பேரிடர், யுத்தம், அரசு திட்டங்கள், இராணுவச் செயல்பாடுகள், சர்வதேச உறவுகள் போன்ற உயர் முடிவெடுக்கும் இடம்வரை தனது செயல்திட்டத்தை புகுத்தி விட்டது. மூன்றாம் உலகநாடுகளை தனது பொருளாதாரப் பசிக்கு அடிபணியச்செய்யும். அவற்றில் அடிபணியாத தேசங்களின் மீது நேரடியான யுத்தத்தையே அல்லது அதிருப்தியாளர்களை உருவாக்கி பயிற்சி கொடுத்து மக்கள் புரட்சி, ஜனநாயக மீட்பு போன்ற பல போலி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு போராட்டங்களை தன்வயப்படுத்தி ஏகாதிபத்திய அடிவருடிகளை ஆட்சியாளர்களாக கொண்டுவருவதற்கு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும், இச்செயல்களை முழு முற்றாக செயல்படுத்துவதற்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் உரிமைக்காக நடக்கும் ஆயுதப் போராட்டங்களை சிதறடிக்க அமைதி முயற்சி, நிவாரணம் உதவி, அறிக்கை தயாரித்தல், நல்லிணக்கம் போன்ற பல வழிகளில் தொண்டு நிறுவனங்களை களத்தில் இறக்கிவிட்டு தகவல் சேகரித்து ஏகாதிபத்திய சக்திகள் போராட்டத்தை தனது கட்டுக்குள் கொண்டு வரும். அதுமட்டுமில்லாது மக்களிடம் குழப்பமான சூழலை ஏற்படுத்தி போராட்டத்தை திசைதிருப்பும் வேலைகளையும் செய்து வருகிறது.

சமகாலத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஐ.நா.வின் துணை அமைப்புகள்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.நா.விற்கு பரிந்துரைகள் செய்ய பல களப்பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ராணுவ செயல்பாடு, மனித உரிமை, வெளியுறவுக் கொள்கை போன்ற உயர்மட்ட முடிவுகளை எடுக்க அறிக்கை தயார்செய்தல், தீர்மானங்களை முடிவு செய்தல், ஆவணப்படுத்துதல் போன்ற அனைத்து நிலைகளிலும் அரசு சாரா நிறுவனங்கள் தன்வயப்படுத்திக் கொண்டது. பல நாடுகளில் அரசுத் திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல் போன்ற வேலைகளை பெரும்பான்மையாக செய்து வருகிறது. பல அரசு ஆணையங்கள், தீர்ப்பாயங்கள், மன்றங்கள், வாரியங்களைத் தன்வயப்படுத்தி ஏகாதிபத்ய நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சிலந்திவலைபோல் பரவிக் கிடக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய அரசுகளிடமும் பெருவணிக நிறுவனங்களிடமும் நேரடியாக நிதியுதவி பெற்று பல கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிலையங்கள், கலாச்சார அமைப்புகள், சிந்தனையாளர் வட்டங்கள் உருவாக்கப்பட்டு பல அரசியல் சமூகப் பேராட்டங்களை கட்டமைக்கிறது. எனவே மக்கள் ஒன்றுதிரண்டு போராடும் போது மிகவும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. நேர்மையாகத் துவங்கும் பல போராட்டங்கள் என்ன திசையில் பயணிக்கிறது என்பதை அதன் செயல்பாடுகளையும் அரசியல் நிலைபாடுகளையும் கூர்ந்து கவனித்து போராட்டக்களங்களை இது போன்ற வலது மனிதாபிகளின் கையில் சிக்கி சிதறாமல் காப்பாற்ற வேண்டும்.

- சத்தியராஜ் குப்புசாமி

Pin It