விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்குமுறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை. 

prabakaran_234தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை. 

அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது. 

நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள். 

தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலிஎதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

"... ... இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.

இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று என்னிடமே வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள்.

அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார்.

பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன. சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர். அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது..."

ஆனால் அதற்குப் பின் - ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றோர் உண்மையைத் திரித்து பொய்களைக் கட்டவிழ்த்தபோது -  தமிழ்த் தேசியவாதிகள் போதுமான அளவு எதிர்வினையோ, உண்மையைக் கவனப்படுத்தும் கருத்துக்களையோ வெளிப்படுத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் அண்மையில் மீனவர்கள் மாநாடு ஒன்றில் திருமாவளவன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக - பிற்போக்குத் தன்மை கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சிலர் ‘எப்படி பிரபாகரன் மீது சாதி அடையாளம் பூசலாம்’ என்று முண்டாசு கட்டி கிளம்பிவிட்டார்கள். அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார். 

"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார்.  புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.

.....

.....

இந்தத் தகவலைத்தான் கடந்த டிசம்பர் 11ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை மாநாட்டில் பேசினேன். உங்களில் ஒருவர்தான் அண்ணன் பிரபாகரன். அவர் மீனவ சமூகத்தின் கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே, உங்கள் தாழ்வு மனப்பான்மையை உதறி எறிந்துவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நடை போடுங்கள்' என்று அந்த மேடையில் பேசினேன். அதை இப்போது ஒரு மாதம் கழித்து பிரச்சினை ஆக்குகிறார்கள். ... ... "

புலிகள் மீது சுமத்தப்படும் வெள்ளாளக் கறையை போக்க விரும்புவர்கள், இந்த சந்தர்ப்பத்தில் திருமாவளவனை ஆதரிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த ‘இலக்கிய தருமி’கள் விடாமல் புலிகள் மீது சேறு அடித்துக் கொண்டிருப்பார்கள்.

- மினர்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

41 comments

41
Thura Nanda
உங்கள் பதிவின் கருப்பொருளோடு நான் முரண் படவில்லை. ஆனால் திருமா இணைப்பு நெருடல் ஆகத்தான் உள்ளது. தனது அரசியலுக்காகவே தலித்துக்கள் என்றும், விடுதலைப் புலிகள் என்றும், இனி காஷ்மீர் என்று... அவருடைய கடைசி உண்ணாவிரதத்தில முடிக்கும் போது சொன்னாரே முதல் வேலை காங்கிரசை அழிக்கிறது தான் என்று. அம்மையாரோட உரசிட்டு நின்னு படம் புடிக்கலைய. முத்துக்குமாரினுடைய ஈகத்தையே தன் அரசியலுக்கு சாதகமா ஆக்கிக்க நினைச்சவரு (வீடியோ.. you tube இல இருக்கு). நல்ல விலை வந்தால் இனத்தையே வித்து புழைக்கிறவங்க.

புலிகளைப் பற்றி கதைக்கிறதுக்கு திருமாவிற்கு அருகதை இருப்பதாய் நினைக்கல....
அ.வெற்றிவேல்
மிக முக்கியமான புதிதான தகவலடங்கிய கட்டுரை. ஆராயப்பட வேண்டிய விசயங்கள்
Nandha Andalmagan
பிரபாகரனுக்கே தெரியாத விஷங்களை உம்மைப்போன்றவர்கள்தான் கக்குகிறார்கள் இதில் திருமாவும் கூடவா???
arul ezhilan
மிகவும் நல்ல கட்டுரை. தலித் அரசியல் பேசும் வெள்ளாளர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்
arul ezhilan
அந்தோனியின் கதை என்றொரு கட்டுரை படித்தேன். அதில் // “அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!”
என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான். // என்று வருகிறது ரிதமிக்காக பள்ளர்கள் மீது வெள்ளாளர்கள்... வன்கொடுமை செய்வதாக ஷோபா சொல்கிறார். நான் இதைப் படித்து முடித்தபின் சே...ஒரு தலித் எவளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறார் என்றுதான் நினைத்தேன். விசாரித்த பிறகுதான் தெரிந்தது ஈழத்தில் புலிகளுக்கு எதிராக தலித்தியம் பேசிய அனைவருமே வெள்ளாளர்கள் என்று..... தன் கதை சொல்லும் ஒரு பதிவில் தான் இன்ன சாதியைச் சார்ந்தவன் என்று சொல்கிற அடிப்படை நேர்மை கூட இதில் இல்லை.... அடையாளங்களை மறைத்தல் என்பது இந்த இடத்தில் எவளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்வதற்காக இதைச் சொல்கிறேன். இந்த இடத்தில் சாதியைக் கேட்பது சரியா என்றால் இந்த விவாதத்தில் அதுவும் ஷோபா மாதிரியான அந்தோனிகளிடம் கேட்பது சரிதான்...... அந்தோனி என்னும் பெயரை எங்கு பயன்படுத்தினால் என்ன ஒளிவட்டம் கிடைக்கும் என்பதைத் தெரிந்தே பயன்படுத்துகிறார்கள். வி.சி யைச் சார்ந்த ஒருவரும் என்னைப் போலவே அந்தோனியை தலித் (அந்தோனியின் கதையைப் படித்து விட்டு) என்று நினைத்திருந்தார். பின்னர்தான் அவருக்கும் உண்மை தெரிந்தது. அந்தக் கட்டுரை மொழி நடையில் சாதாரணமானதுதான். ஆனால் அது ஷோபாவை ஒரு தலித்தாகவே பிம்பப்படுத்துகிறது...
அ. வெற்றிவேல்
‎////அடையாளங்களை மறைத்தல் என்பது இந்த இடத்தில் எவளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்வதற்காக இதைச் சொல்கிறேன்//// உண்மை அருள் எழிலன்..அடையாளங்களை மறைப்பவர்களிடம் என்ன் நேர்மையை எதிர்பார்க்க முடியும் எனத் தெரியவில்லை..ஈழத்தில் வெள்ளாள சக்திகள்... ஆதிக்க சகதிகள் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்..சோ புலிகளை எதிர்த்து ஏன் எனப் புரிந்து கொள்ள முடிகிறது..///அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல் என்று வளர்மதி (கீற்று கட்டுரைகள்) கூறுவது ஆராயப்பட வேண்டியது/// மிகமிக முக்கியமாக ஆராயப்பட வேண்டிய விசயங்கள்..
arul ezhilan
தலித் விடுதலை பேசிய பலரும் தலித்துக்களே அல்ல தலித் அல்லாதவர்கள் தலித் விடுதலை பேச முடியாது என்றும் அல்ல, பெண்ணியத்திற்கு இதில் என்ன அளவு கோலோ அதுதான் தலித் விடுதலைக்கும்.... நீங்கள் என்னதான் பேசினாலும் ஒரு தலித்தாக நீங்கள் உங்களை உணரமுடியாது. ஆனால் ஷோபாவின் எழுதுக்களில் தன்னை ஒரு தலித்தாக உணர்வது போல நடக்கிறார். ஈழ மக்களும் புலிகளும் முதலில் தோற்றது சிங்களனிடம் அல்ல இவர்களிடம்தான்....
arul ezhilan
பிரபாகரன் ஒரு வெள்ளாளாராகப் பிறந்திருந்தால் ஈழத்தில் தலித் அரசியல் உருவாகியிருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். அதிகாரம் கை விட்டுப் போன ஆதங்கத்தில் இவர்கள் கையிலெடுத்ததுதான் தலித்தியம்
Thamizh Selvan
அருமையான பதிவு அணைத்து தளங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய ஒன்று. புலிகள் எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழ் ஈழ எதிர்ப்பை காட்டி வந்த கயவர்களை கண்டிக்கவும்,வாய்ப்பு கிடைத்தால் தண்டிக்கவும்(மக்கள்) இந்த பதிவு உதவட்டும்
Valar Mathi
ஷோபா சக்தி தன் கதைகளில் தன்னை தலித்தாக சித்தரித்துக் கொண்டார் என்பதல்ல விமர்சனம். தலித் அரசியலை பிரதிநிதித்துவ அரசியல் நோக்கில் இருந்து முன்னெடுத்ததும், தலித்துகளின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக் கொண்டு தலித் அரசியலில் ஈடுபட்டதும் மோசமான த...வறு என்பதுவே விமர்சனம்.

இதனால் பலர் ஷோபா சக்தியை தலித்தாகவே அடையாளம் கண்ட வேடிக்கை நிகழ்ந்திருக்கிறது.

தலித் அரசியலுக்காக பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆதிக்க சாதிகளில் பிறக்க நேர்ந்தோர், முதலில் தமது எல்லைகளை ஒப்புக்கொண்டு ஈடுபடவேண்டும். அவர்களது செயல்பாடுகள் தலித் அரசியலுக்கு அணுக்கமாகவும் அவ்வரசியலுக்கு நேரும் தடைகளைக் களைவதில் முன்னின்று உதவுவதாகவுமே இருக்க வேண்டும்.

ஏற்கனவே நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எடுத்துக்காட்டு, மேலே அருள் எழிலனே குறிப்பிட்டிருப்பது போன்று பெண்ணிய அரசியலில் ஈடுபடும் ஆண்களுக்கும் இதே விடயம் பொருந்தும்
Valar mathi
ப்ரியாவின் இக்குறிப்பு பல எண்ணத் தெறிப்புகளை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.

மீனவ சமூகத்தினரை தலித் (அரசியல்) சமூகத்தினருள் இதுநாள் வரையில் ஏன் எவரும் இணைத்துப் பார்க்கவில்லை, கற்பனைகூட செய்து பார்க்கவில்லை என்ற எண்ணத் தெறிப்பு.

மீனவர் சமூகம் ஒட்டுமொத்த சமூக அமைப்பாலுமே ஒதுக்கி வைக்கப்பட்டு கடற்கரையோரக் குப்பங்களில் தனித்து வாழ்பவர்கள். அவர்களுக்கு ஊரின் - சென்னை போன்ற மாநகரின் பிற இடங்களில் குடியிருப்பதற்கு இடம் கிடைக்கவே கிடைக்காது. அவர்களது உழைப்பின் விளைபொருளான மீன்களை வாங்குவோர்கள் எவருமே அவர்களைத் தொட்டுப் பேசவே கூசுவார்கள். எந்தவிதமான சமூக உறவுகளும் அவர்களோடு பிறர் பேணுவதில்லை.

கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத தீண்டாமை அவர்கள் மீது நிலவுவது நிதர்சணம்.

ஆனால், அரசியல் - சமூக சொல்லாடல்களில் (political - social discourse) இத்தீண்டாமை குறித்த சிறு அளவிலான பேச்சுமே எழவில்லை. ஏனிந்த நிலை?

இப்போதைக்கு அசைபோட்டுக் கொண்டிருக்கும் காரணங்கள்:

1) மீனவச் சமூகம் சமூகத்தின் மையமான உற்பத்தி நடவடிக்கைளில் இருந்து வெகுதூரம் விலகி நிற்பது. முன்பு விவசாய உற்பத்தி இப்போது பண்ட உற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட முதலாளியம். விவசாய உற்பத்தியை மையமாகக் கொண்டு எழுந்த சாதியப் படிநிலை வரிசையில் இருந்து அது உருவாக்கிய தீண்டாமையில் இருந்தும் மட்டுமே சாதி குறித்த அரசியல் - சமூகக் கதையாடல்கள் உருவானதால் அதில் இருந்து விலகி நின்ற மீனவச் சமூகத்தை இக்கதையாடல்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை.

2) காலனிய அரசியல் - சமூகச் சொல்லாடல் இந்தியச் சமூகத்தை ஒரு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சாதியச் சமூகம் என்று மிகத்தீவிரமாகக் கட்டமைத்தது. அந்த அரசியல் - சமூகச் சொல்லாடலிற்கு பழக்கப்பட்டு அதை அந்த நோக்கில் மட்டுமே நின்று எதிர்ப்பதாக எதிர்ப்பு அரசியல் (oppositional politics) உருவானது. இதனாலும் விவசாயத்திற்குள் வராத மீனவச் சமூகம் குறித்த அக்கறையின்றி போனது.

அந்த வகையில் காலனிய அரசியல் - சமூகச் சொல்லாடலில் இருந்து இந்த விஷயத்தில் நானும் சிக்கியிருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.
Bharanee Tharan
இந்தப் பதிவில் முக்கியமான ஒன்றை சேர்த்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லோரும் மேல் சாதியினரும் இல்லை. புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் தாழ்த்தப் பட்டவர்களும் இல்லை. ஒட்டுமொத்த மேல்சாதியினரும் புலிகளை எதிர்க்கவில்லை. அதுபோல் ஒட்டுமொத்த தாழ்த்தப் பட்டவர்களும் புலிகளை ஆதரிக்கவும் இல்லை. எதிர்ப்பும் ஆதரவும் இரண்டு தரப்பிலும் உள்ளது.

ஒருவர் இருவர் செய்யும் (ஈழ) தலித் அரசியலை மட்டும் வைத்து ஈழத்தின் சாதியத்தை யாரும் எடை போடவேண்டாம். 1990 களில் நாட்டிலிருந்து கிளம்பியவர்கள் இன்றுவரை அங்கு என்ன நடக்கிறது என்று நேரில் காணாமல், பேச்சளவில் கேட்டுவிட்டு கட்டுரை எழுதுவதால் வரும் வினைகள் இவை.

30 வருடங்களுக்கு முதல் இருந்த அளவுக்கு சாதிப் பாகுபாடு இன்று ஈழத்தில் இல்லை. அதற்கு முக்கிய காரணம் புலிகள் மட்டுமே. புலிகளால் எந்தளவுக்கு சாதியத்தை ஒழிக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திருக்கிறார்கள். சாதி ஒழிப்பில் புலிகளின் பங்களிப்பு காணாது என்று பிதற்றுபவர்கள் களத்தில் நின்று அந்தப் பொறுப்பை தாங்கள் ஏற்றிருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்துகொண்டு ஈழத்தில் சாதி ஒழிப்பு செய்பவர்களை நினைத்து பரிதாபப்படத்தான் முடியும்.

கடந்த 10 , 15 வருடங்களில் ஈழத்தில் மிக அதிகளவு கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கிறது. அவையெல்லாம் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இயல்பாக நடந்தவை. இதை சும்மா பேச்சுக்காக சொல்லவில்லை. 2007 வரை அங்கிருந்து நேரில் கண்ட சாட்சியாக சொல்கிறேன். இயல்பாகவே சாதிய எண்ணங்கள் அங்கே மக்களின் மனங்களில் இருந்து படிப்படியாக குறைந்து விட்டது.

புலம்பெயர் தலித் விடுதலையாளர்களின் கூற்றுப்படி புலிகளுக்குப் பயந்துதான் மக்கள் சாதியத்தைப் பேசாமல் அடங்கி இருந்தார்கள் என்றே வைத்துக் கொண்டால்,1995 இக்குப் பின்னர் யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்து விடுபட்டபின்னர் யாழ்ப்பாண மக்கள் திரும்பவும் சாதியத்துக்குள் அல்லவா புரண்டிருக்க வேண்டும்?

புலம்பெயர் நாடுகளின் இன்னும் முனேற்றம் காணப்படுகிறது. அதற்கு ஒரு மிக முக்கிய காரணம், புலம்பெயர் தமிழர்கள் செய்யும் தொழில். வெளிநாடுகளில் இந்தவேலையைத் தான் செய்வேன் என்று யாரும் அடம்பிடிக்க மாட்டார்கள். தொழிலும் , வெளிநாட்டு வாழ்க்கை முறையும் சேர்ந்து இங்கும் இயல்பாகவே சாதியம் மக்களிடம் இருந்து தூரப் போகிறது. இதையும் நேரில் பார்ப்பதால் தான் சொல்கிறேன்.

இன்றைய இளைய தலைமுறைக்கு சாதியம் பற்றி தெரியாது என்பதுதான் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் ஈழ தலித்தியம் பேசும் பிரகிருதிகள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே சாதியம் அதுவாக இல்லாமல் போய்விடும். இவர்கள் ஏதாவது கிளறக் கிளறத்தான் ''நீ என்ன சாதி ?....அவன் என்ன சாதி ?'' என்று கேட்கவேண்டும் என்ற மனநிலை மக்களுக்கு எழும். உண்மையில் இவர்கள் சாதியத்தை ஒழிக்க விரும்பவில்லை. மாறாக சாதியத்தை மறக்க விரும்பும் மக்களுக்கு அதை மறுபடியும் நினைவு படுத்துகிறார்கள்.

(பின்னூட்டம் நீண்டு போனதுக்கு வருந்துகிறேன்.)
Arul Ezhilan
வளர் நீங்கள் மீனவச் சமூகம் பற்றி எழுதியிருக்கிறீர்கள் இது பல ஆண்டுகால காயம். தலித் மக்களுக்குக் கூட இட ஒதுக்க்கீடு இருக்கிறது. ஆனால் புவியியல் ரீதியாகவும் அரசு நிர்வாக ரீதியாகவும் இந்த அரசியல் பரப்புக்குள்ளேயே ஏற்றுக் கொள்ளப்படாத மக்கள் மீனவர்கள் உண்மையில் மாற்று ,கலகம் ,விளிம்பு என்றெல்லாம் பேசியவர்கள் கூட மீனவ மக்களை பதிவு செய்யவே இல்லை. இதைப் பேச பிரபாகரன் தேவை இல்லை.
Kutty Revathi
எவ்வளவு தான் நுணுகிப்பார்த்தாலும், இரண்டு வகையான மனங்கள் தாம் ஈழ அரசியலைப் பீடித்திருக்கின்றன. ஆதிக்க மனமும் ஒடுக்கப்பட்ட மனமும். பெருநிலமான இந்தியாவின் இணைப்பு நிலம் போன்று பார்க்கப்படும் இலங்கையிலும் இந்த சாதிய மனோ நிலை பல வரலாறுகளாக ஆராதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இந்திய மற்றும் தமிழக அரசியல் சூழலில், இன்றைய நிலையில் ஈழத்தை வென்றெடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம் ஆதிக்க மனங்களின் கூட்டுச்சதி! வேறு வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவ அவர்கள் அந்தத்துறை வழியாக தங்களின் ஆதிக்கக் கருத்தை முன் வைத்து படைப்பாக்கவும் செயல்பாடாக்கவும் ஆக்கிக்கொண்டனர் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. குறிப்பாக, நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் தங்கள் வன்மங்களைப் பாராட்டப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

இந்நிலையில், ‘புலிகள் மக்களைச் சுடுகிறார்கள்!’ என்ற கொச்சையான வாசகம் பேசும் மனம், ‘போலி முகங்களுக்குள் மறைந்து கொண்டு மக்களைக் கொல்கிறது!’ என்று சொல்லலாம் இல்லையா?

இனியேனும், இத்தகைய ஆதிக்க மனங்களின் தந்திர நடவடிக்கைகளை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம். தமிழக்த்தில் பெரியாருக்குப் பின்பாக, சாதி மறுப்பு பற்றிய நுண்ணரசியல் நம்மிடம் விரிந்தது. அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின்பாக அந்த நுண்ணரசியல் கூர்மைப்பட்டது. இது, பார்ப்பனிய மற்றும் ஆதிக்க மனங்களை தம் இரண்டாம் சுற்று தந்திர நடவடிக்கைகளுக்கும் தங்களை நிலைநிறுத்தலுக்கும் உந்தித்தள்ளியுள்ளது. இது இலக்கியம் வழியாக இன்னும் தீவிரப்பட்டுள்ளது என்பதைத்தான் மேற்கண்ட பிரியாவின் இடுகையும் அம்பலப்படுத்தியுள்ளது.

வளர்மதி பேசும், காலனிய அரசியல்- சமூகச்சொல்லாடல், எனும் முக்கிய விவாதமும் தொடங்கிவைக்கப்படவேண்டிய காலக்கட்டம் இது. இல்லையென்றால், வேறு வேறு வரிசைகளில் படிநிலை பெறும் சாதி அரசியலை நாம் பேசவே முடியாமல் போய் விடும். நில உடைமைத் தொடர்பான சாதிய அடுக்குமுறையை மட்டுமே நாம் இது வரை பேச முடிந்திருக்கிறது. அதன் எல்லைக்கு வெளியே நின்று இயங்கிய ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இன்னும் பேசுபொருளாக இல்லை என்பதால், இந்தத்தருணத்தை நாம் அதற்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

வேறென்ன..? நீலச்சாயம் வெளுத்துப் போகும் தானே!
Kutty Revathi
மேற்கண்ட விவாதத்தை வாசித்ததன் முடிவில், இம்மாதிரியானதொரு சூழலில் எப்பொழுது நாம் சுய சாதி மறுப்பை முன்வைத்துப் போராடப்போகிறோமோ என்ற சாதியத்திற்கு எதிரான அடுத்தக்கட்ட நிலைப்போராட்டம் குறித்த ஆயாசம் தான் மேலிடுகிறது.

ஆகவே, தமிழகத்தில் சாதி மறுப்பு அரசியலை முன்வைத்து சிறு குழுவினரே தொடர்ந்தும் தீவிரமாகவும் இயங்கும் பட்சத்தில், இது போன்ற விவாதங்களை நம் கூட்டியக்கத்தைக் கூர்மைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்வோம்! இது உண்மையில் மிக அருமையானதொரு திருப்பம்!
Priya thambi
குட்டி ரேவதி, ஆமோதிக்கிறேன். பார்ப்பனர்களைத் தவிர ஏனைய சாதியினர் எவருக்கும் சாதி அடையாளம் என்பது இழிவுதான். அதை இடைநிலை சாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களும் முழுக்க உணர்ந்ததாகத் தெரியவில்லை. இலக்கியவாதிகள்கூட சில நேரங்களில் சாதியை ஒரு ஆயுதமாகவும், சில நேரங்களில் சாதியை ஒரு கேடயமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். சாதி - அரசியல்வாதிகளுக்கு எப்படி லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறதோ, அதேபோல் சில எழுத்தாளர்களுக்கும் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த சூழலில்தான் சுயசாதி மறுப்பு குறித்தும், சாதி கடந்த வாழ்க்கை குறித்தும் நாம் தொடர்ந்து உரையாட வேண்டியிருக்கிறது.
இராச ராச சோழன் செ
இவர்களுக்கு (புலி எதிர்ப்பாளர்கள்) இரண்டு விதமான ஆசைகள் இருக்கின்றது. ஒன்று தன்னுடைய இருப்பு என்று ஒன்று இருப்பதாக நினைத்து கொண்டு அதை காப்பாற்றிக் கொள்ள துடிப்பது. வளமான வாழ்வுக்கு அடிநாதமாக விளங்கும் பெருமை தேட விளம்பரம் தேடி அலைவது... அதனூடாக பெரியவர்களின் (புறம்போக்குகள் - கொள்ளையை வெளிநாடுகளில் பத்துக்கும்) தொடர்பை பேணி தனது வளத்தை பெருக்கிக் கொள்வது...
தன்னலத்தை சுடாமல் தமிழினம் உருப்படாது...
இன்னும் வரும் காலங்களில் உண்மை வெளிவரும் என நம்பலாம்...
கருணா துரோகியாக மாறியது முதற்கொண்டு,,,
அ. வெற்றிவேல்
‎////தமிழகத்தில் சாதி மறுப...்பு அரசியலை முன்வைத்து சிறு குழுவினரே தொடர்ந்தும் தீவிரமாகவும் இயங்கும் பட்சத்தில், இது போன்ற விவாதங்களை நம் கூட்டியக்கத்தைக் கூர்மைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்வோம்! இது உண்மையில் மிக அருமையானதொரு திருப்பம்!////குட்டி ரேவதியின் இந்தக் கருத்து மிக முக்கியமானது..உண்மையான திருப்பமாகப் பாவித்து மேலேடுத்துச் செல்லவேண்டியது இது குறித்து இயங்கும் சிறு குழுவினரின் முக்கியமான பணி..
அ. வெற்றிவேல்
‎@வளர்மதி..////மீனவ சமூகத்தினரை தலித் (அரசியல்) சமூகத்தினருள் இதுநாள் வரையில் ஏன் எவரும் இணைத்துப் பார்க்கவில்லை// இன்று வரை நேர்ப்பேச்சில் பலரிடம் இதைக் கேட்டுள்ளேன்.இதற்கான பதில் யாரிடமும் இல்லை.. ஏனெனத் தெரியவில்லை.நீங்கள் சொலுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்களின் இநதக் குறிப்பு உரிய கவனம் பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்
கீற்று நந்தன்
பேஸ்புக் தளத்தில் ப்ரியா தம்பி எழுதிய கட்டுரையையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அவசியம் கருதி சற்று விரிவாக கீற்றில் பிரசுரிக்கிறோம். செறிவான பின்னூட்டங்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றியைப் பகிர்ந்து கொள்கிறோம்.
nallavan sivam
ilankayil meenavarkal theendappadaathavarkal alla.avarkal idainilaiyilullavarkal. kurippaaka 'karaiyaar' samookathinarukku uyarvaana nilai irukkirathu. paarkka - sivathampi eluthiyulla "yaar intha yaalppaanaththaan?" kaddurai. meenavarkal ilankayil 'suthanthiramaana'
saathip pirivanaraaka ullanar: aththodu porulaathaaraththilum nalla nilaiyil ullanar. thamizhaka chulalilirunthu iizha nilaimai veerupaddiruppathaik kavanam kollavum. saathi maruppu karuththunilai iizhap poraaddaththil
pinparrappaddathu unmaiye.
- n.sivam
arunmozhivarman
பிரியா தம்பியின் கட்டுரை பார்த்தேன். அதில் சில விடயங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதென நினக்கிறேன்
1- ஈழத்தில் சாதி அடுக்கில் கரையார் சமூகம் வெள்ளாளருக்கு கீழானதாக வைக்கப்பட்டபோதும், அவர்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்கவில்லை. வெள்ளாளரின் அடுத்த நிலை சாதிகளாக இருந்த கோபியர், சாண்டார் (பஞ்சம் ஏற்பட்டபோது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வெள்ளாளரை வெள்ளாள சமூகத்தினர் சாண்டார் என்று ஒதுக்கி வைத்ததாக கூறுவர். இவர்கள் நல்லெண்ணெய் திரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்), முக்கியர் போன்றோருக்கு அடுத்து கரையார் சமூகமே இருந்ததென நினைக்கின்றேன். அதே நேரம் ஈழத்தில் பொதுவாக அனைத்துக் கிராமங்களிலும் எல்லா சாதியினரும் கலந்திருக்க, கரையார் சமூகங்கள் இருந்த கிராமங்களில் அவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருந்தனர். மற்றது கரையார் சமூகத்தில் பெரும்பான்மையானோர் கிறீஸ்தவர்களாகவே இருந்தனர். அதே நேரம் வெள்ளாள சமூகத்தினர் அனேகம் சைவர்களாக இருந்தனர். வெள்ளாளர் - கரையார் கலப்புத் திருமணம் குறைவாக நடக்க ஒரு காரணம் மதமும் சாதியும் வெவ்வெறாக இருந்தமை

2- ஈழத்தில் புளொட், டெலோ இயக்கத்தினர் வெள்ளாள இயக்கங்களாக கருதப்பட, ஈபிஆர்எல்ஃப் இயக்கம் தாழ்த்தப்பட்ட சாதிகளின் இயக்கமாகவே கருதப்பட்டது. அதே நேரம் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் க்ரையார் சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் அவர்கள் கரையார் சாதியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர்கள். அறிவிக்கப்படாத ஒரு ஊர்த்தலைவராகவே பிரபாகரனின் தந்தை மதிக்கப்பட்டார், ஊரின் முக்கிய முடிவுகளை அவர் முன்னின்று எடுத்தார். புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த பலர் முக்கிய தலைவர்களாக இருந்தபோதும் (ராதா, திலீபன், பொன்னம்மான், யோகி) பின்னர் மெல்ல மெல்ல கரையார் சாதியைச் சேர்ந்தவர்களே முக்கிய தலைவர்களானார்கள்

3- அடுத்தது புலிகள் இயக்கத்தில் திருமணம் செய்வதற்கு சாதி மறுப்புத் திருமணம், விதவைத் திருமணம் என்கிற நிபந்தனைகள் இருக்கவில்லை. இயக்கத்தில் இணைந்து 5 ஆண்டுகளாகி இருக்கவேண்டும் என்பதே நிபந்தனையாக இருந்தது. அதே நேரம் வரதட்சணை கேட்பது சட்டப்படி குற்றமாக இருந்தது. அதனால் திருமணம் பேடும்போது வரதட்சணை என்று கேளாமல் நன்கொடை இவ்வளவு என்று கேட்கும் வழக்கம் இருந்தது

4 - அதே நேரம் வெவ்வேறு சாதியினர் காதலித்து திருமணம் செய்ய முற்படும்போது புலிகளிடம் முறையிட்டால் அவர்கள் இரு தரப்புக் குடும்பத்தையும் அழைத்து அவர்களுக்கு வயது வந்திருந்தால் திருமணம் செய்து வைத்தும், திருமண வயது வராத இடத்து திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதாக ஒப்பந்தமும் செய்து வைத்தனர்

5 - 95ல் ஒருவர் (அவருக்கு 18 வயது) தான் காதலித்த பெண்ணை ஒரு குண்டு விழுந்து உடைந்திருந்த வீட்டடிக்கு வரச்சொல்லி உடலுறவு கொண்டு அந்தப் பெண்ணை வெருட்டியோ அல்லது மயக்க மருந்து கொடுத்தோ தன் நண்பர்களையும் அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளவைத்தார், தற்செயலாக ஒரு சைக்கிள் திருடனை துரத்தி வந்த புலிகளின் காவல்துறையினரால் இது கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப் பெண் அப்போது மயங்கி இருந்தார், புலிகள் அந்த இளைஞரையும் அவர் நண்பர்களையும் பங்கரில் போட்டதுடன் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கவேண்டும் என்று அந்தப் பெண்ணிடமே தீர்ப்புச் சொல்லும் உரிமையை விட்டனர்
எம்பெருமாள்
இந்தக் ****கள் இத்தனை நாளும் பிரபாகரன் வெள்ளாள சாதி, தலித்களை ஒடுக்கிறார் என்றல்லவா கதைச்சிட்டு திரிந்தார்கள். அந்தப் பொய் போதாது என்று ஷோபா சக்தியையும் தலித் போல் சித்தரித்தார்கள்... அந்தப் பித்தலாட்டக்காரனும் ஒரு இடத்திலும் 'நான் ஒரு வெள்ளாளப் பய' என்று சொல்லாமல் கள்ள மௌனம் காத்திருந்தது எல்லாம் எந்த ஆதாயத்திற்காக என்பது இப்போது புரிகிறது. அ.மார்க்ஸ், ஷோபா, சுகன், ஆதவனை இந்த தலித் அரசியல் நாடகத்தில் நடிக்க வைத்தவர்கள் யார் என்பதும், நாடகத்திற்கான ஸ்பான்ஸர் யார் என்பதும் கண்டறிந்து பகிரங்கப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. போர்ச் சூழல் முடிந்த நிலையில் இதையெல்லாம் சந்திக்கு கொண்டுவர அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. இலங்கை அரசு டக்ளசை கழட்டி விட்டதுபோல், இவர்களையும் கழட்டி விடும். அப்போது இவர்களுக்கு இடையே இருந்த பேரங்களும் வெளிச்சத்திற்கு வரும்... நல்லாருக்குப்பா உங்க தலித் அரசியல்..
புரவி
சில மாதங்களுக்கு முன்பாக நடந்த ஷோபா சக்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் போது கூட மரியாதைக்குரிய ஆதவன் அவர்கள் கொஞ்சம் கூட வாய் கூசாமல் ஈழத்தில் நடந்த போர் என்பது வெள்ளாளர்கள் ஈழத்தை அதிகாரம் செய்வதற்குத்தான் என்றல்லவா பேசினார்.
Suryanarayanan
Valarmathi's one of the important point from his blog:

//இனரீதியிலான ஒற்றுமையில் கவனம் குவித்த விடுதலைப் புலிகள் அந்தக் காரணத்தினாலேயே சாதியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வந்ததை யமுனா ராஜேந்திரன் சுட்டிக் காட்டினார். பொதுவெளியில் சாதியைப் பற்றிய உரையாடல்களை அந்தக் காரணத்தை முன்னிட்டே அவர்கள் தடை செய்தனர் என்பதையும் குறிப்பிட்டார்.

இவை தமிழ்த் தேசியர்கள் வழமையாக வைக்கும் வாதங்கள் என்று சொல்லிப் புறக்கணித்து விட இயலாது. காரணம், இதையெல்லாம் மீறி, ஈழத்தில் தலித் சமூகத்தினராக இருக்கும், வண்ணார்கள் மற்றும் சவரத் தொழிலாளர்கள் ஆகிய இரு சாதியினருக்கு மட்டும் தம் மீதான தீண்டாமையில் இருந்து விடுபடும் முகமாக சங்கம் அமைத்துச் செயல்பட அனுமதித்திருந்தனர் விடுதலைப் புலிகள் என்ற முக்கிய செய்தியை “சாதியின்மையா சாதி மறைப்பா?” என்ற நூலில் இருந்து எடுத்துக்காட்டி குறிப்பிட்டும் இருந்தார். (டச்சு ஆட்சிக் காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் சைவ வெள்ளாளர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய “தேச வழமைச் சட்டம்” என்ற சட்டத் தொகுப்பு, அரசியல் சட்ட ரீதியாக இனி செல்லுபடியாகாது என்று தீர்மானகரமாக அறிவித்து நடைமுறைப்படுத்த முனைந்தவர்கள் விடுதலைப் புலிகள் என்ற இன்னொரு முக்கிய புள்ளியும் இருக்கிறது).//
Hussain
அருள் எழிலன் குறிப்பிட்டிருந்த 'அந்தோணியின் கதையை' கூகுளில் தேடி ஒருவழியாக படித்துவிட்டேன்... http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html நண்பர்களுக்காக அதிலிருந்து கொஞ்சம்...

//அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில்.

அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது.அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில்

“அல்லா அல்லா
அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!”

என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.

ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான். //

இலக்கியவாதிகள் வாசகர்களுக்காக பல இடங்களை சொல்லாமல் விடுவார்கள்.. அப்படி சொல்லாமல் சோபா சக்தி விட்ட இடங்களை நிரப்பினால், அவர் ஒரு தலித் என்று பொருள்படும்படி மிகவும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் அந்தோணி, மைக்கேல் முதலான பெயர்கள் தலித் கிறித்துவர்களையே குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்பதால் மிகத் தந்திரமாக அந்தோணி பெயர் இங்கு உள்ளது.

'அல்லைப்பிட்டி பள்ளா' வரிகளுக்குப் பின் 'அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்ற வரிகள், அல்லைப்பிட்டி பள்ளரான சோபாசக்தி இந்த சாதி ஒடுக்குமுறையிலிருந்து தப்பி, படிச்சு முன்னேற வேண்டும் என்று நினைத்திருக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு வலுசேர்க்கும்விதமாக அவர் வறிய குடும்படுத்தைச் சேர்ந்தவர் என்ற சொல்லாடலும் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

//அந்தோணியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்//

இந்த வரியின் நோக்கம் பிரபாகரன் ஒரு பிள்ளைமார் என்று வாசகர்கள் தப்பர்த்தம் கொள்ள வேண்டும். பேட்டியில் இடம்பெறும் ஒரு நபரின் அப்பா பையரை எழுதியவர், பேட்டி கொடுப்பவரின் அப்பா பெயரைக் குறிப்பிட்டு அதற்குப் பின் 'பிள்ளை' சேர்க்காமல் விட்டிருக்கிறார்.

இவர்கள் யோக்கியவான்கள் என்றால் சோபாவின் குடும்பம் கிறித்துவ பிள்ளைமார்கள் குடும்பம் என்பது பதிவாகியிருக்க வேண்டும்.

இந்த மாய்மாலங்களை ஷோபா சக்தி செய்தாரா பேட்டி எடுத்த கவின்மலர் செய்தாரா என்பது தெரியவில்லை. யாராக இருந்தாலும் அயோக்கியத்தனமானது.
Bharanee Tharan
இங்கு நடக்கும் சாதி அரசியல் விவாதத்துக்கும் இப்போது சொல்லப் போகும் விசயத்துக்கும் தொடர்பில்லை என்றாலும் சோபாசக்தி , டக்ளஸ் தேவானந்தா பெயர்கள் இங்கு அடிபடுவதால் இதையும் ஒரு தகவலுக்காக சொல்லிவைக்கிறேன்.

டக்ளஸ் தேவானாந்தாவின் ஈ.பி.டீ.பி. கட்சிய...ினால் நடாத்தப் படுகின்ற உத்தியோகபூர்வ பத்திரிகையான தினமுரசு பத்திரிகையில் சோபாசக்தியின் கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும். நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு விவாதத்தின்போது சோபாசக்தியிடம் ஒரு நண்பர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியின் சாராம்சம், ''இலங்கை அரசுக்கு சார்பான ஒரு அச்சு ஊடகத்தில் உங்கள் கட்டுரைகள் வெளிவருகிறதே....அப்படியானால் இலங்கை அரசாங்கத்தை எதிர்க்கிறேன் என்ற உங்கள் வாதத்தை எப்படி எடுத்துக்கொள்வது?'' என்றிருந்தது. (அந்த கேள்வி பதில்களின் ஒரிஜினலை அப்படியே எடுத்துத் தர முடியாமைக்கு மன்னிக்கவும் )

அதற்கு சோபாசக்தி சொன்ன பதிலின் சாராம்சம் ''தினமுரசில் வெளிவரும் எனது கட்டுரைகள் என்னிடம் கேட்காமல் பிரசுரிக்கப்படுகிறது. நான் அவற்றை அனுப்பவில்லை. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை'' என்றிருந்தது.
(அத்தோடு கேள்விகேட்ட அந்த நண்பரை தனது Facebook நண்பர்கள் பட்டியலில் இருந்து சோபாசக்தி உடனடியாக நீக்கிவிட்ட என்பது மேலதிக தகவல்.)

அப்படியானால் தினமுரசு, சோபாசக்தியின் கட்டுரைகளை சுட்டுப் போடுகிறதா?

பிஸ்கோத்து மேட்டருக்கே கூவிக் கூச்சலிடும் சோபாசக்தி, அவரது எழுத்துக்களையே அவரது அனுமதியில்லாமல் பிரசுரிக்கும் பத்திரிகைக்கு ஒரு எதிர்ப்புக்கூடவா காட்டாமல் இருக்கிறார்? தன் எழுத்துக்களுக்கே copyrights இல்லாத ஒரு எழுத்தாளனா?

இதே திருட்டுத்தனமும், திருட்டு மௌனமும்தான் அண்மையில் நடந்த கொழும்பு எழுத்தாளர் மாநாடு வரை தொடர்ந்தது. இனியும் தொடரும்.

உமா ஷநிகவின் பெயரை அவரது அனுமதியில்லாமலேயே எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவான அறிக்கையில் சேர்த்திருக்கிறார் சோபாசக்தி. உமா ஷநிக வெளிப்படையாக இதைப் போட்டுடைக்க, '' ராகவன் தான் உமாவின் பெயரை பட்டியலில் சேர்க்கச் சொன்னார். அதுதான் நான் உங்கள் பெயரை சேர்த்தேன். ஒருவேளை அவர் வேறு உமாவை சொனாரோ தெரியாது'' என்று மழுப்பியிருக்கிறார்.

மாநாட்டுக்கு ஆதரவானவர்களின் அறிக்கையில், இவர்கள் எல்லாம் கையொப்பம் வைத்திருக்கிறார்கள் என்றுதான் முதலில் அறிவிக்கப் பட்டது. பின்னர்தான் தெரிந்தது பலரது கையொப்பம் வேறு யாராலோ வைக்கப்பட்டது என்று.

''கேக்கிறவன் கேனையனா இருந்தா....'' என்ற பழமொழி அடிக்கடி கேட்டும் பார்த்தும் புளிச்சுப்போச்சு.....வேறு பழமொழிகள் தேடிக்கொண்டிருக்கிறேன்....யாராவது உங்களுக்குத் தெரிந்தால் நல்ல பழமொழி சொல்லுங்கள் நண்பர்களே....
Peterson
இரண்டு விஷயங்கள் இந்தக் கட்டுரையிலும், கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களிலும் உடைந்திருக்கின்றன. ஒன்று, தலித் வேஷம் கட்டிய சோபா சக்தி உண்மையில் தலித் கிடையாது, ஆதிக்க சாதி வெள்ளாளன். தங்களது சாதி ஆதிக்கம் போகும் ஆத்திரத்திலேயே புலிகளை விமர்சித்திருக்கிறார். இரண்டாவது, புலிகள் சாதி ஒழிப்பிற்காக முனைப்புடன் செயலாற்றியிருக்கின்றனர். Hats off to keetru.. ஷோபா சக்தி கூட்டம் தொடர்ச்சியாக அம்பலமாகி வருகிறது. தமிழ் மக்கள் முன் இப்போது புழுக்களாக உள்ளனர். அவர்களைப் பற்றி கவலிப்பட வேண்டியதில்லை. செய்ய வேண்டியது என்னவென்றால், புலிகளின் சாதியொழிப்பு தொடர்பான செயல்பாடுகளை உலக மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது தொடர்பான கட்டுரைகளையும், புத்தகங்களையும் நாம் வெளிக் கொண்டுவர வேண்டும்.
நக்கீரன்
பரணீதரன் கருத்தோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். ஷோபாசக்தி போன்றவர்கள் தங்கள் புலி எதிர்ப்புக்கு சாதீயத்தை கையில் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாதியத்தின் ஆதிக்கத்தை புலிகள் முடிந்த மட்டும் தகர்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு போலல்லாது தமிழீழத்திலும் புலப்பெயர் நாடுகளிலும் யாரும் சாதி பற்றி பகிரங்கமாகப் பேசமுடியாது. தமி்ழர்கள் மத்தியில் காணப்படும் சாதியத்துக்கு முக்கிய காரணம் இந்து மதந்தான். இந்து வருணாச்சிர அடிப்படையே நாட்டில் தொழில் அடிப்படையிலான பல சாதிகளை உற்பத்தி செய்தது. சாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றால் இந்து - சைவ சமயத்தை ஒழிக்க வேண்டும். கரையார் தீண்டப்படாதவர்கள் என்பது உண்மையல்ல. தீண்டப்படாதவர்கள் என்போர் கோயிலுக்குள் நுழைய தடைசெய்யப்பட்டவர்கள். அந்தத் தடை கரையாருக்கு இல்லை. அவர்கள் வேளாளருக்கு அடுத்த தட்டில் வைத்துப் பார்க்கப்படுகிறார்கள். யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்தில் அரச படையில் இருந்தவர்கள் பெரும்பாலும் கரையார்களே.
தமிழ் சமூகத்தில் தொழில் அடிப்படையில்தான் சாதிவேறுபாடு காணப்படுகிறது. கரையாருக்குள்ளும் மீன்பிடிப்போர் கீழாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் சாதியத்தை ஒரு தலைமுறைக்குள் ஒழித்துவிட முடியாது. புலம் பெயர்நாடுகளில் கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. புதிய தலைமுறைகள் சாதியைப் பார்க்கப் போவதில்லை. ஷோபாசக்தி போன்றவர்கள்தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற போர்வையில் சாதியை வளர்க்க நினைக்கிறார்கள். முடிவாக தேவானந்தா வெள்ளாள சாதி இல்லை.
அம்பலம்
அரசர் இப்போது அம்மணமாகத்தான் வருகிறார். அந்தோனி வெள்ளாளரின் தலித் அரசியல் மே-2009தோடு முடிந்து விட்டது. இனி அதைப் பேச வேண்டிய அவசியல் இல்லை ஆகவே செங்கடலில் கலந்து அடுத்து மீனவ மக்களின் விடுதலைக்காகப் பேசப் போகிறாராம். மீனவ மக்களுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை. அது கிடக்கட்டும்.... மன்மோகன், சோனியா, கருணாநிதி, சீமான், நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லா தலைவர்களையுமே ****, ***** என்று மீனவ மக்கள் மொழியில் திட்ட வைத்திருக்கிறார் லீனா. மேலும் நான் மட்டுமே யோக்கியமானவள் என்றும் டில்லிக்குப் போய் போராடியது தான் தான் என்றும் பரை சாற்றி விட்டு. அவரது அம்மாவுடன் அவர் தெலுங்கில் பேசுவதாக காட்சி........... இதற்கு என்ன பொருள்.. தமிழனெல்லாம் சொம்பு தூக்குறவன் நான் தெலுங்குப் பெண் நான் தான் டில்லி வரைப் போய் போராடினேன் என்பதுதானே? இது ஒரு இனவாதத்தை இழிவான முறையில் தூண்டுகிற செயலா? இல்லையா? என்னிடம் இனவாதம் எதுவும் இல்லை, தெலுங்கு, தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழும் பூமியில் லீனா அதற்கு உலை வைக்கிறார். என்ன வஞ்சகமான ஒரு வன்மம்.
Vellalar
அது எல்லாம் இருக்கட்டும் கருணாவும் திருமா-வின் பிரிவை சேர்ந்தவரா....

http://en.wikipedia.org/wiki/Vinayagamoorthy_Muralitharan#Biography
ajeevan
இந்தக் கட்டுரை எழுதியவருக்கு ஈழத் தமிழர் குறித்தோ அல்லது இலங்கை தமிழர் குறித்தோ அறிவு போதாது. இதை நன்கு உணர முடிகிறது. யாரோ சொல்வதைக் கேட்டு கட்டுரை எழுதுவதை விட்டு ஆகக் குறைந்தது தமிழர் அகதிகளாக வாழும் தமிழ் நாட்டு முகாம்களுக்கு சென்றாவது விபரங்களை கேட்டு எழுதுங்கள். ஈபீஆர்எல்எப் இயக்கத்தில் இருந்தவர்கள் வெள்ளாளர் என யார் சொன்னது? இலங்கையில் யாராவது சோசலிசம் பேசினார்கள் என்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்தியக்கத்தவர்களே?

புலிகள் சாதியை அழித்தார்கள் என்றால் ???? பிரபாகரனது மனைவி உயர் சாதியைச் சேர்ந்தவர். தமிழ்ச் செல்வனின் மனைவி உயர் சாதியைச் சேர்ந்தவர். இப்படித்தான் சாதி ஒழிப்பா? உயர் சாதியினரோடு தன்னை ஒப்பிட்டு பேசவே உயர் சாதி பெண்களை இவர்கள் மணந்தார்கள். இதை வைத்து அவர்களோடு சமத்துவமாக இருக்க எண்ணினார்கள். ???
Ramalingam
வெள்ளாள **** ஷோபா சக்தி தலித் வேஷம் போட்டது அசிங்கமானது. இவர் இந்தியாவில் இருந்திருந்தால் இடஒதுக்கீடு கூட வாங்கியிருப்பார் போல... இதை தலித் அறிவுஜீவிகள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
BHUPATHI
Tamils die because of Caste. Throw away caste and unite.
What is Unity? Freedom to study,work and marry without any hindrance and or suppression.
Once such a state is achieved, Tamils will regain the glory of the past.
pakai
ஈழத்தில் கரையார் ஒரு தீண்டத்தகாதவர்கள் அல்ல, இவர்கள் கோவியர், முக்கியர், நட்டுவர் போன்றவர்களுட்ன் கூட கலப்பதற்கு பின் நிற்பவர்கள்
Chembiyan Valavan
முல்லை பெரியாறு விசயத்தில் கேரளா தேனீர் விடுதி தாக்கிய தமிழர் பற்றி எழுதிய கேரளா பெண் ப்ரிய தம்பி

ஊங்களுக்கு வேண்டிய போது திராவிட முகமுடி போட்டு கொண்டு தேசியம் பேசும் எழும்பில்லா நரம்புடைய நாவும், மூளையும் சிறிதாவது கேரளா ஆதிக்க ஜாதி, மதவாத ஆண்களாள் நுற்று கணக்கில் தாக்கப்பட்ட பாலியல் கொடுமை படுத்த பட்ட தழித் தமிழ் பெண்களுக்கு ஆதறவாக சிறு பதிவு ஊடகத்தில் வெளியிடுவார் என எதிர்பார்த்து பல் மாதம் பேஸ்புக்கில் உங்களிடம் கோரிக்கை வைத்ததற்க்கு என்னை தங்கள் நட்பு பட்டியலில் இருத்தே நீக்கி விட்டிற்கள் இன்று ..
முல்லை பெரியாறு விசத்தில் தான் தங்கள் மழையாளி என்பதால் தமிழரை பிறித்து தழித் மக்களை நிர்கதி ஆக்கி கேரள அரசுவிற்க்கும் கேரள மண்ணிற்க்கும் உங்கள் நன்றி தெரிவிகின்றீர் என நினைத்தால் புலிகளுக்கே சாதி சாயம் பூசும் உங்கள் எழுத்துக்கள் என்னை அதிர வைக்கின்றது....

யார் நீங்கள் ராஜபக்சே வீட்டு கைதடியா?
Chembiyan Valavan
எனது கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்குதான் முதுகெளும்பு இல்லை என்னை தடை செய்து விட்டிர்கள் பேஸ்புக்கில். கீற்றுகாவது தைரியம் இருக்கிறதா என பார்கிறேன் உங்கள் தாழ்மையான பதில் வரும் வரை.
chembiyn Valavan
ப்ரியா தம்பி முக நூலில் எனது பின் வரும் கோரிக்கைகாக தடை செய்யப்பட்டன்....

தமிழ்தேசிய வெண்ணை வெட்டி சிப்பாய்கள் முல்லை பெரியாறு அணை பிரச்சனையின் போது கேரளா தேநீர் கடைகளை தாக்கினார்கள் என்பது வருந்த தக்கது.

கேரளா ஆதிக்க ஜாதி ஆண்கள் , மதவாதிகள் ஒரே நேரம் 100 கணக்கான தாழ்த்தபட்ட பெண்களை புடவை தூக்க சொல்லி சிறு நீர் களித்து பாலியல் கொடுமை செய்தனர்.
கூலி வேலைக்கு சென்ற் பல பெண்களை மார்பகம் திறந்த்து கை பேசியில்தவறான படம் எடுத்தனர். தமிழர் குழந்தைகள் , பெண்கள் , ஆண்கள் என்று தீ யால் மர்ம உடல் பகுதியில் சுட்டன்ர்.

இத்தனை பாதிப்புஅடைந்தும் தேனி மாவட்ட ஆண்கள் கேரளா பெண்களிடம் சிறு தவறு கூட செய்ய துணிய வீரர்கள்.... தமிழ்தேசிய வெண்ணை வெட்டி சிப்பாய்கள். இவர்கள் எப்படி இரட்டை குவளைகள் பயன்படுத்தும் முறை தடுப்பனர்.
சரி இரட்டை குவளைகள் பயன்படுத்தும் முறைக்கும் முல்லை பெரியாறு பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?
தமிழர்களை திசை திருப்பும் முறையா?
கேரளா ஆதிக்க ஜாதியினனர் தமிழ் தழித் பெண்களை பாலியல் கொடுமைகள் செய்துவிட்டு தமிழகத்தில் ஜாதி பேசி தமிழ் மக்களை பிரிக்க உங்களை அனுபினாரா?

அல்லா அவர்கள் தவறு மறைக்க மற்றவரிடம் பணம் வாங்கிகொண்டு தமிழர்க்குள் சண்டை இழுத்துவிடும் புத்திசாலிதனம்மா? முல்லை பெரியாறு பிரச்சனையில் பாதிக்கபட்ட பெண்கள் எந்த திராவிட கட்ச்சியை சேர்ந்தவர்கள்?
முல்லை பெரியாறு தேனி மாவட்டத்தில் எந்த மதம், ஜாதி,கட்சி யும் சாரா ஒரு மக்கள் எழுச்சி!!!!!!!!!!!!!!!!!!
என் கருத்துக்களுக்கு தங்கள் பதில்லை தாழ்மைய்யுடன் எதிர்பார்க்கிறேன்
Praba
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய உறவினர் கர்னல் கிட்டு,பத்து பிரபாகரனுக்கு சமம் என்று இலங்கை ராணுவத்தால். பாராட்ட பட்ட பொட்டு அம்மான், மற்றும் பல முன்னணி வீர தளபதிகள் நமது அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள்! இவர்கள் அனைவரும் இன்ன தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தால் இவர்களுக்கு மேலும் ஆதரவு, அனுதாபம் கூடும் என்பதால் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு இதை மறைத்து வந்திருக்கின்றனர்! சமீபத்தில் மீனவர் பிரச்சனை பற்றிய கருத்தரங்கில் பேசிய ஒரு தலித் தலைவர்!வேலுப்பிள்ளை பிரபாகரனை சிலர் பிள்ளைமார் என்று தவறாக கருதுகின்றனர்! நன்2002ல் ஈழத்தில் அவரை சந்தித்த போது இது குறித்து கேட்டேன்!அப்போது அவர் தான் கரையாளர் என்னும் சாதியை சேர்ந்தவர் என்றும் தான் மட்டுமன்றி கர்ணல் கிட்டு,பொட்டு அம்மான், போன்ற முன்னணி வீர தளபதிகள் பலர் அந்த சாதியை சேர்ந்தவர்கள் என்றும்,மீன் பிடிப்பது தான் தங்கள் தொழில் என்று கூறியதாகவும், ஆகவே அவரும் உங்கள் மீனவ சாதியை சேர்ந்தவர் தான் என்று தலித் தலைவர் சொல்லி இருக்கிறார்! தலையை மறைத்து வாலை பேசுவது வாலை மறைத்து தலையை பேசி உண்மையை திரிப்பதில் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஈடு இணை கிடையாது! உண்மை நிலை என்ன தெரியுமா? கரைய வெள்ளாளர் என்று இலங்கையில்அழைக்கப்படும் இனத்தவர் இன்றுவரை மீன்பிடிக்கும் தொழிலை அதிகமாக செய்து வருகிறார்கள்! ஆனால் பரத்தவர்களை போல அவர்களின் குல தொழில் அது அல்ல! அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வீர அரசபரம்பரை இனமான முக்குலத்தோரின் ஒரு பெரும் பிரிவினரான பர்வத ராஜ குல அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள்!சங்க கால சோழ, பாண்டியர் கால கட்டத்திலேயே ஈழத்தில் குடியேறியவர்கள்! போர்குடி தமிழ் மரபினர்! தமிழ்மன்னர்களும், போரும் ஓய்ந்த போது தமிழக அகமுடையார் வேளாளர் போல உழவு தொழில் செய்ய துவங்கிய போது ஈழத்தில் இவர்கள் கடல் உழவாகிய மீன்பிடி, கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட தொடங்கினர்!இன்று வரை ஈடுபட்டு வருகிறார்கள்! ராமேஸ்வரத்தில் நமது இனத்தாரஇப்போது எப்படி கடலசார் தொழிலில் ஈடுபடுகிறார்களோ அது போலத்தான்! அகமுடையார் கள் தாங்கள் குடியேறிய பகுதிக்கு, செய்யும் தொழிலுக்கு தகுந்தாற் போல பல்வேறு பட்டங்களை பயன்படுத்துவது போல அவர்களும் கரையாளர், வெள்ளாளர், பிள்ளை போன்ற பட்டங்களை பயன்படுத்த துவங்கினார்கள்! ஆனால் இனத்தில், குணத்தில், ஜாதியில் அவர்கள் ராஜ குல அகமுடையார்கள் தான்! மேதகு பிரபாகரன் போன்ற முன்னணி தலைவர்கள் அகமுடையார் களாக இருப்பதால் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு சாதி முத்திரை குத்தபட்டு விமர்ச்சிக்கப்பட்டது! அப்போது மிக சிறந்த வீரனும், அறிவாளியுமான கர்னல் கிட்டு இயக்கம் துவக்க காலத்தில் வல்வெட்டி துறையில் பிரபாகரனின், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை கொண்டு தான் முதலில் துவக்கப்பட்டது ! அதன் பிறகு தான் மற்ற பகுதிகளில் இருந்தும் கூட படைக்கு ஆள் எடுப்பு நடந்தது! ஆகவே சீனியரிட்டி, தியாகத்தின் அடிப்படையில் தான் கரையவெள்ளாளருக்கு(அகமுடையார்) உயர்பதவி வழங்கபடுகிறதே தவிர சாதி அடிப்படையில் அல்ல என்று தெரிவித்தார்! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நமது அகமுடைய தேவர் சமுதாயம் ஒரு மருது பாண்டியர், பிரபாகரனை மட்டுமின்றி கோடிக்கணக்கான வீர மறவர்களை இந்த தமிழ் சமுகத்திற்கு தந்தது, தந்துகொண்டிருக்கிறது!இனியும் தரும்! இனி வரும் காலங்களிலும் நமது தேவர் சமுகம் ஒட்டுமொத்த தமிழ்சமூகத்திற்கான அனைத்து விதமான பிரச்சனைகளையும் அடித்து நொறுக்கி நமது இனப்பெருமையை நிலை நாட்டும் என்பது நிச்சயம்! மேலும் தகவலுக்கு கரையாளர் விக்கிப்பீடியா பார்த்து உறுதி செய்து கொள்ளவும்
Praba
He is spreading fake news here
AKM with 7mm
மடையர்களே ஈழத்தில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர்கள் கரையார்களே... முடிந்தால் உன் ஆண்மையை எங்கேனும் கடற்கரையோர பிரதேசங்களில் சென்று காட்டு பார்ப்போம்... வெட்டிப் புதைத்து விடுவார்கள்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.