I

ஸல்மான் ருஸ்டியின் இந்திய சுதந்திரத்தை மையமாகக் கொண்ட மிட்நைட் சில்ட்ரன் 1981 ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்றதின் பதின்மூன்று ஆண்டுகளின் பின், 1993 ஆம் ஆண்டு மறுபடியும் அது புக்கர் ஆப் புக்கர் பரிசையும் பெற்றது. கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து வாசிக்கப்பெறும், இந்தியா குறித்த முக்கியமான நாவலாக அது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே ருஸ்டி 1995 ஆம் ஆண்டு மும்பையையும் கொச்சினையும் கதைக் களனாகக் கொண்டு மூர்ஸ் லாஸ்ட் ஷை நாவலையும் எழுதுகிறார். அருந்ததி ராயின் காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் 1997 ஆம் ஆண்டு வெளியாகி புக்கர் பரிசைப் பெறுகிறது. நமது இந்திய ஒருமைப்பாட்டு இலக்கிய மேதை ஜெயமோகன் எழுதுகிறார்: 

 arundhati_roy_400மேல்நாட்டு வாசகர்கள் முன் இத்தனை தீவிரமான பிரச்சாரத்துடன் எந்த இந்திய நாவலும் முன்வைக்கப்பட்டதில்லை. அவர்கள் கவனத்துக்கு வந்த முதல் இந்திய நாவல். அவர்கள் அறியாத இந்திய அன்றாட வாழ்க்கையின் சித்திரம் அதில் இருந்தது. ஆகவே நாவல் அங்கே ஒரு பெரிய வணிக வெற்றியாக அமைந்தது. 

இதைவிடவும் முட்டாள்தனமாக கூற்றை எவரும் எழுதமுடியாது. அருந்ததிராயின் நாவல் மேற்கில் வெற்றி பெற்றதற்கான கலாச்சாரம் - அரசியல் - வணிகம் - கல்விப் புலம் சார்ந்தது என நிறையக் காரணங்கள் இருக்கின்றன. இதுவன்றி அந்த நாவல் கொண்டாடப்பட்டதற்கான இலக்கிய மற்றும் கருத்தியல் காரணங்களும் இருக்கின்றன. 

அருந்ததிராயின் நாவல் மேற்கில் வெளியாவதற்கு முன்பாகவெ ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக எழுதுகிற ஆசிய வம்சாவழி எழுத்தாளர்களான நைபால், ருஸ்டி, மைக்கேல் ஒன்டாஜி, அனிதா தேசாய், அமிதவ் கோஷ், ராஜாராவ், குஷ்வந்த சிங் போன்றவர்கள் மேற்கத்திய வாசகர்களிடம் கொடிகட்டிப் பறந்தவர்களாக இருந்தார்கள். காலனியாதிக்க நினைவுகளின் தொடர்ச்சியாக இ.எம்.போஸ்ட்டர், ருட்யார்ட் கிளிப்பிங் போன்றோரின் தி பாசேஜ் டு இன்டியா மற்றும் ஜங்கிள் புக் என ஆங்கில மொழிக்கும் இந்திய நிலத்துக்கும் இடையறாத தொடர்ச்சி ஒன்றும் இருந்து வருகிறது. 

இலக்கியத்தில் ஆங்கில மொழி சார்ந்து வந்த இந்தத் தொடர்ச்சி எண்பதுகளில் பின்காலனிய இலக்கிய விமர்சனம், தென் ஆசிய இலக்கிய ஆய்வுகள் என்பதாக மேற்கின் - அமெரிக்காவின் கல்விப்புலத்தில் முக்கியமான படிப்பாகப் பரிமாணம் பெற்றது. பொது வாசகனது இலக்கிய வாசிப்பு, கல்விப்புலம் சார்ந்த ஆய்வு வாசிப்பு என தெற்காசிய இலக்கியப் பதிப்புகள் இலாபம் மிக்க வணிகசாத்தியமாக ஆகின காலமும் இதுதான். 

எண்பதுகளில் தென் ஆசியாவில் பின்காலனிய ஆய்வுக்குரிய விடயங்களாக, இந்து முஸ்லீம் மதமுரண், இனமுரன், சாதிய ஆதிக்கம், அரசியல் வன்முறை, பெண்ணொடுக்குமுறை போன்றன அமைந்தன. ருஸ்டி, ஒன்டாஜி, அனிதா தேசாய், ஷியாம் செல்வதுரை, பங்கஜ் மிஸ்ரா, அருந்ததி ராய், அரவிந்த அடிகா போன்றவர்களின் படைப்புக்கள் இந்தியாவையும் இலங்கையையும் மையம் கொண்டு இந்தப் பிரச்சினைகளைத்தான் பேசின. 

இவர்களது நாவல்களின் வெளிப்பாட்டு முறையிலும் சார்புநிலைகளிலும் இருக்கும் வித்தியாசங்களையும் கவனம் கொண்டே நாம் இந்த வரையறையைச் செய்ய முடியும். 

இந்தப் பின்னணியில் இருந்தே அருந்ததி ராயின் த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் பெற்ற வாசக வரவேற்பையும் வணிக வெற்றியையும் நாம் புரிந்து கொள்ள முடியும். ஸல்மன் ருஸ்டியை விடவும், வி.எஸ்.நைபாலை விடவும், ஒன்டாஜியை விடவும், மேற்கிலும் அமெரிக்காவிலும் அருந்ததி ராய் புகழ் பெற என்ன காரணம்? இலக்கியக் காரணங்கள் தவிர, கடந்த பதினைந்து ஆண்டுகளின் அரசியல் காரணங்களும் இதற்கான அடிப்படைகளாக அமைகின்றன. ஸல்மன் ருஸ்டி ஒரு நடவடிக்கையாளர் அல்ல. மேலாக அவர் மேற்கிலும் அமெரிக்காவிலும் இருந்து கொண்டு இஸ்லாமை விமர்சிக்கிறவராக இருக்கிறாரேயல்லாது, மேற்கினதும் அமெரிக்காவினதும் உலகத் தலையீடுகளையும் அவர்கள் உலகெங்கிலும் புரியம் காட்டுமிராண்டித்தனங்களையும் விமர்சிக்கிற எழுத்தாளர் இல்லை. 

வி.எஸ்.நைபாலினது வலதுசாரி அரசியல். ஓன்டாஜி அரசியல் சார்பற்ற எழுத்தாளர். மாறாக அருந்ததிராய் கடந்த பதினைந்து ஆண்டுகளின் மிகப்பெரும் உலக நிகழ்வுகளில் உலகின் பகாசுர அதிகாரங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நிற்கிற தெளிவான அரசியல் கடப்பாடு கொண்ட எழுத்தாளராகவும் நடிவடிக்கையாளராகவும் இருக்கிறார். அவரது ஒரேயொரு நாவலான த காட் ஆப் ஸ்மால் திங்க்சிலும் சரி, அவரது புனைவல்லாத அரசியல் விமர்சனங்களிலும் சரி அவர் ஒரு கடப்பாடு கொண்ட எழுத்தாளராக இருக்கிறார். 

அருந்ததி ராயின் நாவல் பெற்ற இலக்கிய வரவேற்புக்கு முன்னால் அவரது அரசியல் மேற்கிலும் அமெரிக்காவிலும் பேசப்பட என்ன காரணம்? ஈராக் மீதான, ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் இலட்சணத்தைத் தோலுரிக்கிறார். பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாக இஸ்ரேலைக் கடுமையாகச் சாடுகிறார். முதலாளித்துவ எதிர்ப்பு இயங்கங்களின் தோழமையாக அவர் இருக்கிறார். அந்தோனியோ நெக்ரியின் எம்பயர் நூலினது முக்கியத்துவம் அறிந்தவர்க்கு, அதே எம்பயர் குறித்த ராயின் எழுத்துக்கள் மேற்கில் பெறும் வரவேற்பினைப் புரிந்து கொள்ள முடியும். 

நோம் சாம்ஸ்க்கி, ஜான் பில்ஜர், சார்த்தர் போன்ற மேற்கின் வெகுமக்கள் அறிவுஜீகள் மரபில் வைத்துப் பேசப்படுகிற ஆளுமை கொண்டவராக இருப்பதால்தான் அருந்ததிராய் மேற்கின் இடதுசாரிகளாலும் நவதாராளவாதிகளாலும் கொண்டாடப்படுகிறவராக இருக்கிறார். அவரது ஒரேயொரு நாவல் தவிரவும் அவரது புனைவல்லாத இருபது நூல்கள் மேற்கில் வெளிவரவும், அவர் மிகப்பெரும் வாசகர் பரப்பை எட்டவும் இதுவே காரணம். அவர் எவற்றுக்காகவெல்லாம் போராடுகிறாரோ அவையெல்லாம் எய்தப்பட வேண்டும் என்பதனால்தான் சிட்னி அமைதிப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அரசுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராகப் போராடும் சமூகச் செயல்பாட்டுக்காகவே அமெரிக்காவின் லென்னான் பவுண்டேஷன் விருது ராய்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ராய்க்கு முன்னதாகப் பெற்ற இருவர், பாலஸ்தீனக் கவிஞன் மஹ்முத் தர்வீஷ் மற்றும் ஈராக்கியக் கவி ஷா அதி யூசுப் என்பவர்கள் என்பதனையும் இங்கு நாம் ஞாபகம் கொள்வோம். 

அருந்ததியின் காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் நாவல் மேற்கிலும் அமெரிக்காவிலும் அந்தச் சமூகத்தவர்களால் சுவீகரித்துக் கொள்ளப்பட, கொண்டாடப்பட என்ன காரணம்? மேற்கத்திய சமூகம் நிறவெறிச் சமூகம். கணவனைப் பிரிந்து தனித்து வாழும் பெண்களை உதாசீனப்படுத்தும் சமூகம். தனித்து வாழும் பெண்களதும் அவர்தம் குழந்தைகளின் உளவியல் குறித்த அக்கறை இங்கு ஒரு முக்கியமான பிரச்சினை. குழந்தைகளின் மீதான பாலுறவுச் சுரண்டல் முக்கியமான பிரச்சினை. நிறவெறி என்பது தீண்டாமையோடு மிகுந்த ஒப்புமை கொண்ட ஒரு பிரச்சினை. நாவல் பின்சோவியத் அனுபவங்களையும், நடைமுறைக் கம்யூனிசம் குறித்த அமைப்புசார் விமர்சனங்களையும் கொண்டிருந்தது. அனைத்துக்கும் மேலாக இந்த நாவல் இரட்டைக் குழந்தைகளின் பார்வையில், அவர்களது மொழி விளையாட்டின் பகுதியாகவே விரிவுபட்டிருந்தது. இந்த இருபெரும் கருத்தியல் மற்றும் மொழிவெளிப்பாட்டுக் காரணங்களால்தான், பெண்ணிலைவாதம் ஒரு வாழ்முறையாக ஆகிவிட்டிருந்த மேற்கிலும் அமெரிக்காவிலும், அதனைத் தாண்டி கிழக்கு ஐரோப்பாவிலும், பழைய சோவியத் யூனியன் நாடுகளிலும், அதனையும் தாண்டி ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா என மூன்றாம் உலக நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது நாவல். 

இந்தியாவின் குறிப்பான யதார்த்தத்தையும் மீறிய பிரபஞ்ச யதார்த்தத்தை அது கதைகூறுமுறையிலும், கருத்தியல் மட்டத்திலும் கொண்டிருந்ததால்தான் அது உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்றது. 

அருந்ததியின் நாவல் மேற்கில் வெற்றி பெற்றதற்கான காரணங்களாக ஜெயமோகன் கற்பித்துக் கொள்ளும் காரணங்கள் மேற்கத்திய ஊடகங்கள், சமூகம், அதனது முரண்கள், அதில் பொதிந்திருக்கும் வித்தியாசங்கள் என எதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத பேத்தல்களாக இருக்கின்றன : 

 நியூயார்க் டைம்ஸ், கார்டியன் முதலிய அமெரிக்க ஊடகங்கள் அந்நாவலை ஒரு இந்திய கிளாசிக் என்று சொல்லிப் பிரச்சாரம் செய்தன. அதை இந்தியாவின் இலக்கிய அடையாளமாக முன்வைத்தன. அந்நாவல் எந்த அலையையும் இங்கே உருவாக்காத நிலையில் அந்நாவலுக்கு 1996 ஆம் வருடத்துக்கான புக்கர் விருது வழங்கப்பட்டது. அச்செய்தி மூலம் உடனடியாக அந்நாவல் மீண்டும் இந்திய ஊடகங்களில் தூக்கிப் பிடிக்கப்பட்டது.

 அவரது நிலைப்பாடுகள், வாதங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அவர் ஒரு கலகக்காரர், புரட்சிக்காரர் என்ற சித்திரமே உருவாகிறது. இதை நம்பும் இடதுசாரிகள் அவர் முதலாளித்துவ ஊடகங்களின் சிருஷ்டி என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அவரை இன்று வரை தூக்கி நிறுத்தி இருப்பது அவருக்கு இருக்கும்உலகப்புகழ்என்ற மாயை. அந்த மாயையை உருவாக்கியவை மேலை ஊடகங்கள்.

அமெரிக்க மேற்கத்திய ஊடகங்களைப் பொத்தாம் பொதுவாக முதலாளித்துவ ஊடகங்கள் என்கிறார் உலக இலக்கிய மேதை ஜெயமோகன். அதற்கான ஆதாரமாக கார்டியன், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளை முன்நிறுத்துகிறார். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. முதலாவதாக கார்டியன் அமெரிக்கப் பத்திரிக்கை இல்லை என்பதை ஜெயமோகன் அறியட்டும். மேலாக இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், டைம்ஸ், இன்டிபென்டன்ட் போன்ற பத்திரிக்கைகளுக்கும், கார்டியன் பத்திரிக்கையின் நிலைபாட்டுக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது. முதலிரண்டும் முழுக்கவும் வலுதுசாரிப் பத்திரிக்கைகள், இன்டிபென்டன்ட் நடுவாந்தர இதழ், கார்டியன் தாராளவாத இடதுசாரி நிலைபாடுகளை வைக்கும் இதழ். அமெரிக்காவில் நியூயார்க் டைம்சையும், பிரான்சில் லமேன்டாவையும் நாம் இவ்வாறு வகைப்படுத்தலாம். இந்த இதழ்களுக்குத்தான் ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்சின் ஆவணங்களை வெளியிடுகிற அதிகாரபூர்வ உரிமையைக் கொடுத்திருக்கிறார். மேலாக கார்டியன் பத்திரிக்கை எந்த ஊடகப் பெருமுதலாளியாலும் நடத்தப்படாத, அதனது ஊழியர்களின் கூட்டுறவு அமைப்பாக இயங்கும் இதழ். அருந்ததிராயின் இந்திய மாவோயிஸ்ட்டுகள் பற்றிய கட்டுரையையும் கார்டியன் பத்திரிக்கைதான் வெளியிட்டது. 

ஜெயமோகனது பார்வையில் மேற்கத்திய பத்திரிக்கைககள் அனைத்தும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள், மேற்கிலும் அமெரிக்காவிலும் வாழ்வோர் அனைவரும் முதலாளித்துவவாதிகள். இதுதான் ஆர்.எஸ்.எஸ். மார்க்சிசம் என்று ஜெயமோகன் சொல்லாமலேயே நமக்குப் புரிகிறது. 

காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் வெளியானதையொட்டி ஈ.எம்.எஸ். போன்றோர் பங்கெடுத்துக் கொண்ட விவாதம் இந்தியாவெங்கிலும் நடந்தது. தலித் அரசியலும் நிலவிய மார்க்சிய அரசியலும் குறித்ததாகவும் அந்த விவாதம் ஆனது. என்றாலும் அந்த நாவல் இந்தியாவில் எந்த அலையையும் உருவாக்கத் தவறிய நிலையில் அதற்கு புக்கர் விருது வழங்கப்பட்டது என அங்கலாய்க்கும் ஜெயமோகன், பொய்களாலும் புனைசுருட்டுக்களாலும் நிரம்பி வழிகிற ஒரு கருத்துக் குப்பைத்தொட்டி என்பதற்கான ஆதாரம் பின்வருகிற அவரது கூற்று : 

 அத்தனை பேசப்பட்டும்கூட அருந்ததி ராயின் நாவல் முக்கியத்துவம் பெறவில்லை. அதன் இந்திய மொழி மொழியாக்கங்கள் கடுமையான ஏளனத்தை பெற்றுத்தந்தன. ஆகவே அருந்ததி மேற்கொண்டு இந்திய மொழிகளில் இந்நாவல் மொழியாக்கம் செய்யப்பட வேண்டியதில்லை என்றே முடிவெடுத்தார். தமிழில் குப்புசாமி மொழியாக்கம் செய்த முழுமையான கைப்பிரதி அருந்ததி ராய் அனுமதியளிக்காததனால் அப்படியே இன்னும் இருக்கிறது. 

கொடுமையே! இது குறித்த அறிந்தவர்கள் தமிழில் அந்த நாவலின் மொழிபெயர்ப்போடு சம்பந்தப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்களே என்கிற அச்சம் சிறிதுமின்றி இந்தப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன்! மொழிபெயர்ப்பு இந்தியாவில் ஏளனத்தைப் பெற்றுத் தந்ததனால் தமிழில் இந்த நாவல் வெளியாக வேண்டியதில்லை என அருந்ததி கருதியதால் தமிழில் மொழியாக்கம் வெளியாகவில்லை என்கிறார் ஜெயமோகன். இது பற்றி தமிழ்ச்சூழலில் வெளியாகியிருக்கும் தரவுகளையே வைத்து ஜெயமோகனுக்கு நாம் திருப்பிக் கொடுத்துவிட முடியும். 

உயிர்மை பதிப்பகம் தான் தமிழில் த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் நாவலை வெளியிடும் உரிமையைப் பெற்றது. அமெரிக்காவில் வாழும் நாவலாசிரியரான காஞ்சனா தாமோதரன் மூலம் இலண்டனிலுள்ள ராயின் இலக்கியப் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டு ஐம்பதனாயிரம் முன்பணம் செலுத்தி தமிழ் உரிமை பெறப்பட்டது. பி.குப்புசாமி அதனை மொழிபெயர்த்து ராய்க்கு ஒரு பிரதியும், அவரது பிரதிநிதிக்கு பிறிதொரு பிரதியும் அனுப்பப்பட்டது. தமிழகத்திலுள்ள ராயின் நண்பரொருவர் உயிர்மைப் பதிப்பகம் குறித்துச் சொன்ன எதிர்மறையிலான அபிப்பிராயத்தினால், ராயினால் அப்புத்தகம் தாமதிக்கப்பட்டது. மொழிபெயர்ப்பு தபாலில் சரியான அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தினுள் வரவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டு, கொடுக்கப்பட்ட முன்பணம் அப்படியே இருக்க, மொழிபெயர்ப்புப் பிரதியும் இருக்க, அந்தரத்தில் பிரச்சினை அப்படியே நின்று கொண்டிருக்கிறது. புத்தகம் திட்டமிட்டபடி உயிர்மையினால் கொண்டு வர முடியவில்லை. 

இந்தச் சூழலில் அருந்ததிராயைச் சந்தித்த இரண்டு தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நமக்குக் கூடுதலாகச் சில உண்மைகளைத் தந்திருக்கிறது. 

அருந்ததிராய் குறித்து வெளியான காலச்சுவடு சிறப்பிதழில் (காலச்சவடு: டிசம்பர் 2010), 2006 ஆம் ஆண்டு பிப்ரவரியில் புதுதில்லியில் தானும் பிரேமும் ராயைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததைக் குறிப்பிட்டு மாலதி மைத்ரி இவ்வாறு எழுதுகிறார் : 

 தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்என்றார். அருந்ததியின் காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ் நாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். 

அருந்ததியிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய, அவருக்கு நெருங்கிய தமிழக நண்பர், உயிர்மை பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொல்லியிருக்கக் கூடியவர் யார் எனக் எமக்குள் கேட்டுக் கொண்டபோது, தவிர்க்கவியலாமல் அவரது மிக நெருங்கிய தமிழக நண்பரான ரவிக்குமார் அருந்ததிராயுடனான தனது ஆழமான நட்பு குறித்து அதே உயிர்மையில் எழுதியிருக்கிறார் என்பது ஞாபகம் வருகிறது. 

பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும், நடவடிக்கையாளராகவும், தலித்திய மாற்று அரசியல் செயல்பாட்டாளராகவும் அறிப்பட்டிருக்கும் ரவிக்குமார், அதனோடு மாலதி மைத்ரி வாழும் புதுச்சேரியை உறைவிடமாக் கொண்ட ரவிக்குமார், நிச்சயமாக இது குறித்துத் திட்டவட்டமாகச் சொல்ல முடியும் எனக் கருதுகிறேன். எவ்வாறாயினும் அருந்ததியின் நாவல் தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவராததற்கான காரணம் ஜெயமோகன் சொல்வது போல இந்திய மொழிகளில் அந்நாவல் ஏளனப்படுத்தபட்டதால் அல்ல, மாறாக வேறு உள்வேலைகள்தான் என்பது மட்டும் நமக்குத் துலக்கமாகத் தெரிகிறது. இந்த இலட்சணத்தில் இருக்கிறது ஜெயமோகனது இலக்கிய மதிப்பீடுகள். 

II

 ஜெயமோகனது அடுத்த அடி, அகண்ட பாரதத்தின் பூர்வீக மொழிகளில் எழுதப்படும் இலக்கியத்துக்கும், அதற்கு வெளியில் இந்தியா குறித்து ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கியத்துக்கும் இடையிலான தேசபக்த முரண் குறித்ததாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையிலும் இந்தியா குறித்து ஆங்கிலத்தில் வெளியாகும் அல்லது எழுதப்படும் அனைத்தையம் ஒன்றாகக் கடாசி ஒற்றை மதிப்பீட்டை ஜெயமோகன் முன்வைக்கிறார். அவரைப் பொறுத்து அரவிந்த அடிகாவும் அருந்ததிராயும் ஓரே மாதிரியானவர்கள். ஸல்மான் ருஸ்டியும் நைபாலும் ஒரே மாதிரியானவர்கள், ஒன்டாஜியும் அ.சிவானந்தனும் ஒரே மாதிரியானவர்கள். இவர்கள் எல்லோரும் முதலாளித்துவத்தினால் உருவாக்கப்படும் மாயைகள். ஜெயமோகன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவதைப் பாருங்கள்: 

 நம்முடைய இலக்கிய ரசனையை நாமே தீர்மானித்துக்கொள்ளக்கூடாதா என்ன? ஐந்தாயிரம் வருட இலக்கிய மரபுள்ள ஒரு தேசத்தின் இலக்கியக்குரல் எது என தீர்மானிக்க அதற்கு உரிமை இல்லையா என்ன? அதை மேலைநாட்டு ஊடகங்களும், இலக்கிய வணிகர்களும் தீர்மானித்து நம் மீது சுமத்த வேண்டுமா என்ன? நம்முடைய இலக்கியப் படைப்பை நாம் வாசித்து விவாதித்து ரசித்து முடிவெடுத்த பின்னர் அதை அல்லவா நம் இலக்கியமாக அன்னியர் வாசிக்க வேண்டும்? 

அருந்ததிராயின் நாவலை யார் இந்திய இலக்கியம் என்று சொன்னார்கள்? அல்லது ருஸ்டியினதையோ அல்லது நைபாலுடையதையோ எவராவது இந்திய இலக்கியம் எனச் சொல்கிறார்களா? அல்லது ஒன்டாஜியினுடையதையோ அல்லது ஷியாம் செல்வதுரையினுடையதையோ எவராவது இலங்கை இலக்கியம் என்கிறார்களா? இவை எவையும் தென் ஆசிய பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட புனைவுகள் இல்லை. ஆங்கிலம் அறிந்த உலக வாசகர்களையும், சமவேளையில் ஆங்கிலம் அறிந்த இந்திய வாசகர்களையும் கவனம் கொண்டு எழுதப்பட்டவை இந்த நாவல்கள். 

jeyamohan_300ஆங்கில மொழியின் இலக்கிய மரபின் பகுதியாகவே இது மதிப்பிடப்பட வேண்டும். இதனை ஆங்கிலமொழி தென்னாசிய இலக்கியம் என வகைப்படுத்த வேண்டும். இந்தப் புனைவுகள் உலகப்பார்வையையும் இந்தியப் பார்வையையும் ஊடுறுவி வெளியான புதியதொரு வகை இலக்கியம். பிரச்சினை எங்கு வருகிறது எனில், இந்த வகை இலக்கியம்தான் பூர்வீக மொழி இலக்கியத்தை விடவும் மேன்மையானது என்றோ, அவைகளை விடவும் இவை இந்திய சமூகத்தை நுட்பமாக முன்வைக்கிறது என்றோ சொல்லும்போதுதான் பிரச்சினை உருவாகிறது. ருஸ்டி அப்படிச் சொன்னார். அது பெரும் விவாதமாகவும் மூண்டது. இந்த விவாதத்தைக் கூட இந்திய இடதுசாரிகளும் இந்துத்துவவாதிகளும் வேறு வேறு விதமாகத்தான் அணுகுவார்கள். மொட்டையாக இந்தியப் பண்பாட்டைக் கொச்சையாக விமர்சித்துவிட்டார்கள், காட்டிவிட்டார்கள் என இடதுசாரிகள் கூச்சலிடமாட்டார்கள். 

இந்த விவாதத்தில் ஜெயமோகனது பார்வை ஒரு காலனியாதிக்க எதிர்ப்பு சாவர்க்கரியப் பார்வையாகவே இருக்கிறது : 

 யார் அதைச் செய்தார்கள்? எதற்காக? இந்தியாவின் இலக்கியங்களாக மேலைநாடுகள் எந்தெந்த நூல்களை அங்கீகரித்துள்ளன என்று பார்த்தாலே ஒரு பொதுவான சித்திரம் எளிதில் கிடைக்கும். அருந்ததிராய் முதல் அரவிந்த் அடிகா வரை அந்த பொதுத்தன்மையைப் பார்க்கலாம். அவை இந்தியப் பண்பாட்டின் மீது அழுத்தமான கறை ஒன்றை பூசக்கூடியவை. இந்தியாவின் இன்றைய நிலையை விமர்சிப்பதைச் சொல்லவில்லை. இந்திய அமைப்பை எதிர்ப்பதையும் சொல்லவில்லை.. இந்தியாவை மனிதப்பண்பில்லாத காட்டுமிராண்டிகளின் தேசமாக நெடுங்காலம் முன்வைத்து ஐரோப்பாவில் பிரச்சாரம் செய்தன கிறித்தவ அமைப்புகள். மதமாற்றத்துக்கான நிதியை பெறுவதே நோக்கம். இன்று அந்தப் பிரச்சாரம் செல்லுபடியாகாது. ஆகவேதான் சுவைட்சரின் நிலைபாட்டை எடுக்கின்றன.

 அருந்ததி ராய் மட்டுமல்ல அனேகமாக மேல்நாட்டில் வணிகவெற்றிபெறும் நாவல்கள் அனைத்துமே இந்த சாராம்சம் கொண்டவை. பல நாவல்களில் இந்த விஷயம் பூடகமாக இருக்கும். இந்தியப் பண்பாடு சார்ந்த பற்றுள்ள, வேருள்ள ஒரு கதாபாத்திரம் பலவிதமான அறச்சிக்கல்களை அடையும். தன்னை அவற்றில் இருந்து விடுவித்துக்கொள்வதற்காக இந்தியப்பண்பாடு சார்ந்த கட்டுகளை கைவிட்டு சுதந்திரமானமனிதனாக பரிணாமம் கொள்ளும். இதை மேற்குக்கும் கிழக்குக்குமான போராட்டம் என்பது போன்ற பல பாவலாக்கள் வழியாக அந்நாவல்கள் சொல்லும். அருந்ததி ராய் இந்தவகையான பூடகப்படுத்தல் கூட செய்யவில்லை. அந்நாவல் நேரடியாகவே இந்தியப் பண்பாடு மீதான நுண் தாக்குதல்களினால் ஆனது. இந்தியப்பண்பாடு ஒட்டுமொத்தமாகவே மனித சமத்துவம் அற்றது, ஆகவே அறமற்றது என அந்நாவல் மீண்டும் மீண்டும் பேசுகிறது. மேலைநாட்டு பண்பாட்டுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் மையக் கதாபாத்திரம் இந்தியப் பண்பாட்டின் அழுக்கில் இருந்து மீறி மானுட சமத்துவம் நோக்கிச் செல்கிறது. 

ஜெயமோகனின் இந்த அபத்தக் குற்றச்சாட்டை நாம் அருந்ததியின் நாவலினது கதைக் களத்தை வைத்து ஸ்தூலமாகவே அணுக வேண்டும். பார்ப்பனர்கள் போலவே தூய்மையை வலியுறுத்தும் கேரளத்தின் சிரியன் கிறித்தவ சமூகத்தினுள் புரையோடிப் போயிருக்கும் சாதிய வெறியை அருந்தியின் நாவல் சித்தரிக்கிறது. தலித் ஒருவரோடு உறவு கொண்டிருக்கும் சிறியன் கிறித்தவப் பெண்ணைச் சித்தரிக்கிறது. கேரள கம்யூனிஸ்ட்டுக்களிடம் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பில் - புரையோடியிருக்கும் சாதியத்தை அது விமர்சிக்கிறது. சாதிய வெறுப்பு எவ்வாறு நக்சலிச முரணாக ஆக்கப்பட்டு, தலித் மனிதன் வேட்டையாடப்படுகிறான் என்பதனை நாவல் விவரிக்கிறது. 

அருந்ததியின் நாவல் தலித் துயரையும் அவர்கள் பாலான சார்பு நிலையையும் மேற்கொள்கிறது. புலீர்ப்பனரான அரவிந்த் அடிகாவின் நாவல் தலித் மனிதன் குறித்த நக்கலை மேற்கொள்கிறது. இங்கே அருந்ததிராய் மேற்கொள்ளும் தாக்குதல் இந்தியப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என ஜெயமோகன் சொல்வரானால் இது நடந்தே தீரவேண்டிய தாக்குதல் என்பதும், இந்தப் பண்பாடு தகர்க்கப்பட வேண்டும் என்பதும்தான் அருந்ததியின் நிலைபாடாக இருக்கிறது. இதுதான் இந்தியப் பண்பாடு என்றால் இந்தக் கட்டுக்களைத் தகர்க்க வேண்டியது மனசாட்சியுள்ள ஒரு இந்தியப் படைப்பாளியின் கடமை எனவே நாம் சொல்கிறோம். 

என்ன கொடுமை பாருங்கள், தான் சார்ந்த சிறியன் கிறித்தவத்தைத் தனது படைப்பில் தகர்த்து நொறுக்கியிருக்கிறார் ராய். ஜெயமோகன் கயமைத்தனமாக ராயை முதலாளித்துவத்திற்கும் கிறித்தவ அடிப்படைவாதத்திற்கும் முடிச்சுப்போட்டு எழுதுகிறார். அருந்ததிராயின் இலக்கியத் தகுதியைத் தகர்த்துவிட வேண்டும் என இத்தனை மூர்க்கமாக ஜெயமோகனை உந்துகிற, அவரது ஆக்ரோஷத்திற்கு அல்லது வக்கிரத்திற்குப் பின்னிருக்கும் முகாந்திரம் என்ன? அவரது அரசியல் நிலைபாடுகள்தான் காரணம். அவரது நோக்கம் அப்பட்டமாக முத்தாய்ப்பாக அவர் கட்டுரையை முடிக்கிறபோது இளித்துக் கொண்ட வந்து நிற்கிறது : 

 அருந்ததி ராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு. ஏன்? இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். அருந்ததி எந்நிலையிலும் சீனாவுக்கோ மிஷனரிகளுக்கோ எதிரான எதையும் சொல்வதில்லை. இவ்விரு க்திகளும் வடகிழக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பரவி இடதுசாரி தீவிரவாதமாக மாறியிருக்கிறது. அருந்ததி இந்த இரு சக்திகளின் ஊடகமுகம். 

 ஆம், அருந்ததியை முதலில் உலகப்புகழ்பெறச்செய்து, பின் நம் மீது சுமத்தி, நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச்சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும். அருந்ததி போராளி அல்ல. வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெறக் காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர். 

திராவிட மரபும், இந்திய மார்க்சிய மரபும் கண்டடைந்திருக்கிற எல்லா விமோசன மரபுகளுக்கும் எதிராக நிற்கிற, தனது இந்துத்துவ அடிப்படை உளவியலாக்கத்தை விட்டுவிட மறுக்கிற - வேண்டுமானால் அவரை நாம் ஆர்.எஸ்.எஸ். மார்க்சிஸ்ட் எனவோ அல்லது நவதாராளவாத இந்துத்துவவாதி எனவோ அடையாளப்படுத்திக் கொள்ளலாம் - ஒரு கலாச்சார அரசியல்வாதி ஜெயமோகன். 

உலக அளவிலான கடப்பாடுடைய இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளராக இருக்கிற அருந்ததிராய் இந்தியாவில் செயல்படுகிற வெளிகள் என்ன? பூலான்தேவிக்குச் சார்பாக அவர் பேசினார். நாவல் எழுதுவதற்கு முன்பாகவே அவர் திரைக்கதையாசிரியராக இருந்தவர். நர்மதா நதிப்பள்ளத்தாக்கு வெகுமக்கள் பிரச்சினை, பழங்குடியின மக்கள் தொடர்பான மாவோயிஸ்ட்டுகளின் எழுச்சி போன்றவற்றை ஆதரிக்கிறவர் அவர். குஜராத் படுகொலைகளுக்கு எதிரானவர். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் வன்முறைகளுக்கு எதிரானவர். இலங்கையின் மகிந்த ராஜபக்சேவின் தமிழின அழிப்புக்கு எதிரானவர், பார்ப்பனீயத்திற்கு எதிரானவர். இந்த அரசியல் அனைத்துமே ஜெயமோகனின் இந்துத்துவப் பண்பாட்டு வெறி அரசியலுக்கு எதிரான நிலைபாடுகள். இதனைத் தகர்ப்பதற்காகவே அருந்ததிராயை ஒரு இலக்கிய ஆளுமையாகவும், அறிவு ஆளுமையாகவும் அருவறுப்பான முறையில் அவமானப்படுத்த முனைகிறார். அந்த வகையிலேயே அருந்ததிராய் பற்றிய கட்டுரையை அவர் ஐஸ்வர்யா ராயுடன் அருந்ததி ராயினை ஒப்பிடுவதுடன் துவங்குகிறார்.

 அந்தக் கட்டுரைக்கு அவர் போட்டிருக்கும் படங்கள் அவரது பொறுக்கி மனத்தின் உச்சம். ஐஸ்வர்யா ராய்க்கு தோள் சருமம் தெரிய மார்புக் கச்சையுடனான படம். அருந்ததிராய்க்கு தோள் தெரிய, அதற்குக் கீழும் சருமம் தெரிய, அதற்குக் கீழ் ஆடையேதுமற்றது போலத் தோன்றும் படம். இவையிரண்டுக்கும் மாறாக மரியாதை தோற்றுவிக்கும் மஹாஸ்வேதா தேவியின் முதுமைத் தோற்றம் தரும் படம். ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு அருந்ததியைக் கொச்சைப்படுத்தும் ஜெயமோகன், மஹாஸ்வேதா தேவியை மேன்மைப்படுத்தி மீளவும் அருந்ததியைக் கொச்சைப்படுத்துகிறார். மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினையிலும் இந்து முஸ்லீம் பிரச்சினையிலும் அருந்ததியும் மஹாஸ்வேதாதேவியும் ஒரே நிலைபாடு கொண்டவர்கள் மட்டுல்ல, அதற்காகக் குரல் தரும் ஒத்த கருத்துடைய நடவடிக்கையாளர்கள் அவர்கள் என்பதையும், அந்த மாவோயிஸ்ட்டுகளை படுகேவலமாக விமர்சிக்கிற வக்கிரன் தான் என்பதையும் ஜெயமோகன் கபடத்தனமாகக் கடந்து போகும் இடங்கள் இந்த விமர்சனத் தருணங்கள்.

ஜெயமோகன் எழுதியிருக்கிற ‘ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்’ என்கிற கட்டுரை அறுதியாக என்ன சொல்கிறது? மேற்கத்திய சந்தை மதிப்பீடுகளும் முதலாளித்தவ மதிப்பீடுகளும் ஐஸ்வர்யராய் எனும் ‘அழகு’ பிம்பத்தையும், அருந்ததிராய் எனும் ‘இலக்கிய’ பிம்பத்தையும் திட்டமிட்டு முதலில் உருவாக்குகிறது. பிற்பாடு அதனை எம்மீது சுமத்துகிறது. ஐஸ்வர்யா ராய் எப்படி ‘அழகின் குறியீடாக’ எம்மீது சுமத்தப்படுகிறாரோ அவ்வாறாகவே அருந்ததிராயும் ‘இலக்கிய மற்றும் அறிவுஜீவிதக் குறியீடாக’ எம்மீது சுமத்தப்படுகிறார். உண்மையில் அதற்கான தகுதிகள் ஐஸ்வர்யா ராய்க்கும் அருந்ததிராய்க்கும் இல்லை என்கிறார் ஜெயமோகன். 

அழகு சாதனப்பொருள் சந்தை, மேற்கத்திய பகாசுரக் கம்பெனிகளின் நோய் குறித்த கட்டமைக்கப்படும் மதிப்பீடுகள், அதனைத் தொடரும் அவர்களது அழகு சாதன மற்றும் மருந்துகள் பெயரிலான இலாபவேட்டை போன்றவற்றைத் தெரிந்த சாதாரண பொதுமகன் சொல்கிற உண்மைகள்தான் ஐஸ்வர்யா ராய் பற்றிய ஜெயமோகனின் உண்மைகள். இதற்கு பெரிய ஆய்வுமூளை எல்லாம் தேவையே இல்லை. அருந்ததிராயும் அப்படித்தான் என சல்மான் ருஸ்டி முதல் நைபால் ஈராக சரமாகோ வரையிலான, கடந்த அரை நூற்றாண்டு உலக இலக்கிய நாவலாசியர்கள் குறித்து எந்த வாசிப்பும் இல்லாத ஒரு நபரான ஜெயமோகன் சொல்கிறார். 

III 

மார்க்சியம் மதங்கள் போன்று புனித நூல்களின் பனுவல் ஆதாரத்தை முதன்மையாக வைத்துக் கட்டப்பட்டது இல்லை. நடைமுறைச் சிக்கல்களுக்கு கோட்பாட்டு அடிப்படைகளை வழங்குவதோடு, அந்தக் கோட்பாடுகளை குறிப்பிட்ட அரசியல் நிலைமைகளில் பொருத்திப் பார்ப்பதற்கான பார்வையையும் மாரக்சியம் வழங்குகிறது. இலக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும் சமூக வாழ்வுக்கும், பிற அறிவுத்துறைகளுக்கும் இருக்கும் உறவு நேரடியிலானது இல்லை என்பது ஒரு பாலபாடம். இதனது அர்த்தம் குறிப்பிட்ட துறைகள் சுயாதீனமான பண்பைக் கொண்டிருக்கின்றன என்பது ஒன்று, அதனோடு அறுதிப் பகுப்பாய்வில் அவை சமூக உறவுகளின் பகுதியாகவும் இருக்கிறது என்பது பிறிதொன்று. 

இலக்கியம், நேரடியிலான மனிதர்கள், இயற்கை, மனித சமூக உறவுகள் என்பதனோடு உடனடியானதும் அன்றாடத்திற்கு உரியதுமான உறவு கொண்டிருப்பதால், பிற அறிவுத்துறைகளின் அதிகாரப் படிநிலைகளிலிருந்து (hierarchies) வேறுபட்டதான அதிகாரப்படி நிலையையும் சுயாதீனமான பண்பையும், மனிதர்களது வாழ்வோடு மிக நெருங்கிய உறவையும் கொண்டிருக்கிறது. மனிதர்களின் அந்தரங்கத்தோடு உறவு கொணடதால், அவர்களைப் பாதிக்கும் அரசியல் பொருளியல் போன்றவற்றை விடவும் அவர்களது உளவியலில் பாரிய அளவில் தாக்கம் தாக்கும் செலுத்தும் சுயாதீன அதிகாரமாக இலக்கியம் இருக்கிறது. இவ்வகையில் அரசியல், பொருளியல், மதம், விஞ்ஞானம் போன்ற அதிகாரப் படிநிலைகளுக்குச் சவாலாகவும், தன்னளவில் தனித்த அதிகாரம் கொண்டதாகவும் இலக்கியம் இருக்கிறது. 

அரசியலுக்கு அப்பாலும் இலக்கியம் முக்கியத்துவம் பெறவும், அரசியலின் பிடியிலிருந்து இலக்கியம் நழுவிச்செல்லவும் இதுவே காரணம். இக்காரணத்தினாலேயே வலது-இடது, பாசிசம்-சோசலிசம் என்பதற்கு அப்பாலும் அடிப்படையில் ஒரு படைப்பு கலைத்தன்மை கொண்டிருக்கிறதா எனும் அடிப்படையில் ஒரு படைப்பை அணுகுகிறோம். நாசிசத்தைப் போற்றிய எஸ்ரா பவுண்ட், பாலஸ்தீன நிலத்தை தனதாகக் கொண்டாடும் எகுதி அமிச்சாய், பிஜேபியை ஆதரிக்கும் வி.எச்.நைபால் போன்றவர்களையும் இந்த அடிப்படையில்தான் நாம் அணுகுகிறோம். ரிச்சர்ட் வாக்னரையும், நீட்ஷேவையும் இவ்வாறுதான் பாசிஸ்ட்டுகளின் பிடியிலிருந்து விடுவிக்கத் தொடர்ந்து கலைஞர்கள் யத்தனம் மேற்கொள்கிறார்கள். 

வெங்கட் சாமிநாதனின் விமர்சனக் கோட்பாடுகளையும், ஜெயமோகனின் புனைவுசார் எழுத்துக்களையும் நாம் இத்தகைய புரிதலுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது. அவர்களது எழுத்துக்களில் பொதிந்திருக்கும் இந்துத்துவத்தையும், பார்ப்பனீயத்தையும் நாம் சுட்டிக்காட்டுவதன் வழி அவர்களது கலையையும் நாம் அதனது மனித விரோதத்திலிருந்து விடுவிக்க முயல்கிறோம். இந்த நிலைபாட்டையும் கூட நேரடியிலாக அரசியல் செயல்பாடுகளையும் விமர்சனங்களையும் தமது அன்றாட நடவடிக்கைகளில் மேற்கொள்ளாத வெங்கட் சாமிநாதனிடமும் ஜெயமோகனிடமும் மட்டுமே நாம் கைக்கொள்ள முடியும். துருதிருஷ்டவசமாக வெங்கட்சாமிநாதனும் சரி, ஜெயமோகனும் சரி தமக்குச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் தமது இந்துத்துவச் சார்பையும் பார்ப்பனீய சார்புகளையும் தமது புனைவல்லா எழுத்துக்களில், விமர்சனங்களில் உரையிடையிட்ட கருத்துக்களாக முன்வைக்கிறார்கள். 

வெங்கட் சாமிநாதன் ஒரு போதும் ஒரு அரசியல்வாதியின் புண்புகளுடன் செயல்களை மேற்கொண்டவரில்லை. அவரது இயக்கம் ஒரு தனிநபர் இலட்சியவாதியினுடையது. அவரது கலைத்தேடல் குறித்த மரியாதையுடனேயே அவரது சார்புகளை நாம் கருத்தளவில் எதிர்கொள்ள முடியும். ஜெயமோகனது செயல்பாடுகள் ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் திட்டமிட்ட பண்புகள் கொண்டது. ஜெயமோகன் தனது சமூக அரசியல் தத்துவக் கருத்துக்களின் தொடர்ச்சியாகவே தனது படைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். 

ஜெயமோகனுக்கென இலட்சிய சமூகம் இருக்கிறது. ஒரு வகையில் இலக்கியச் செயல்பாட்டின் வழி தமது உருவக சமூகத்தை அவர் தமது படைப்புக்களில் முன்வைக்கிறார். அவருடைய படைப்புக்களில் பிரக்ஞைபூர்வமாக அவரது உருவக சமூகத்திற்கும் அவரது படைப்புக்களுக்கும் உறவு இருக்கிறது. பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் போன்றன இந்த உருவக சமூகம் நோக்கிய செயல்பாடுகள்தான். 

இலக்கியத்தின் படைப்புசார்ந்த, அழகியல் சார்ந்த பிரச்சினைகளை எந்த அளவு தீவிரமாகத் தான் முன்வைப்பதாகக் கருதுகிறாரோ, அதே அளவிலான தீவிரத்துடன்தான் அவர் மார்க்ஸ், கிராம்ஸி, அம்பேத்கர், பெரியார் குறித்து அணுகுவதாக அவர் கோரிக்கொள்கிறார். அதாவது கருத்து ரீதியிலான, அதனைத் தொடரும் அரசியல்ரீதியிலான அவரது இடையீடுகளுக்கும் அவரது உருவக சமூகத்தின் வடிவமாக அவர் படைக்கும் இலக்கியத்திற்குமான நேரடியிலான உறவை அவர் மறுப்பதில்லை. இதன்படி இலக்கியத்தை சமூகப்படிநிலைகளில் செயல்படும் ஒரு நுண்மையான அதிகாரமாக நாம் கொள்வோமானால், இந்த இலக்கிய நுண் அதிகாரத்தின் வழியில் அவர் உருவாக்க விரும்புவது ஒரு கருத்தியல் அதிகாரம் மற்றும் அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாடுதான். 

அருந்ததி ராயின் பழங்குடியின மக்கள் ஆதரவு எனும் அரசியலை மறுக்கவும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரது பங்களிப்பை மறுக்கவும் எவ்வாறு வக்கிரமாக அவர் வாதிடுகிறார் என்பது அவரது அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாட்டுக்கான சான்றுகள் என நாம் கருத வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பிற அதிகாரப் படிநிலைகளுக்குச் சவாலாகவும் சுயாதீனமாகவும், நேரடியிலான உறவு காணப்பட முடியாமல் நழுவிச் செல்லும் பண்புகொண்ட இலக்கியம், ஜெயமோகனிடம் அதனது அனைத்து பாசாங்குகளையும் உதறிவிட்டு பிரச்சாரமாக ஆகிவிடுவதை அவரது அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த கட்டுரைகளில் பார்க்கிறோம். 

ஜெயமோகன் இன்றைய நிலையில் ஒரு தனிநபராக இயங்கவில்லை என்பதுவும், அவர் தனது இலக்கிய அரசியல் கருத்துருவ உருவக உலகை ஒரு இயக்கமாகவும் முன்னெடுத்துச் செல்கிறார் என்பதுவும் வெளிப்படையாக இருக்கிறது. அதனது நடைமுறை வடிவமாகவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள் பார்க்கப்படவேண்டும். விஷ்ணுபுரம் என்பது ஒரு இலக்கியக் குறியீடு மட்டும் இல்லை. இன்று அது ஒரு சமூக இயக்கச் செயல்பாடு. இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் நேரடியிலான உறவு இல்லை எனும் மார்க்சியத்தின் செழுமையான பார்வையை முன்வைத்து, இலக்கியம்-கருத்தியல்-அரசியல் என்பதற்கு இடையில் இடையறாத தொடர்பை வலியுறுத்தும் ஒருவரது சமூகச் செயல்பாட்டை விமர்சனமின்றிக் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. 

இளையராஜா இலக்கிய விருது மாதிரியானதோ அல்லது விளக்கு அல்லது இயல் விருது மாதிரியிலானதோ அல்ல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள். அதற்குப் பின்னால் ஜெயமோகனின் ஒரு உருவக சமூகம் இருக்கிறது. அந்த உருவக சமூகம் தமிழகத்தின் திராவிட மற்றும் இடதுசாரி மரபின் எல்லாவிதமான ஆக்கக்கூறுகளையும் கேவலமாக மதிப்பிடுபவை, அவமானப்படுத்துபவை, விகாரமாக வக்கிரத்துடன் எள்ளி நகையாடுபவை. இந்தக் காரணங்களாலேயே ஜெயமோகனது அரசியல்-கருத்தியல் செயல்பாடென்பது நுட்பமாக எதிர்கொள்ளப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். 

-------------------------------------------------------------------

நன்றி : உயிர்மை - பிப்ரவரி 2011