பாபரி மசூதி தகர்க்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு நினைவு நாள்

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி - மத்தியக் குழுவின் அறிக்கை, நவம்பர் 28, 2014

2014 டிசம்பர் 6, பாபரி மசூதி தகர்க்கப்பட்டதன் 22 ஆவது ஆண்டு நினைவு நாளாகும். அன்று மனித உரிமைகளுக்காகவும், மக்களுடைய அதிகாரத்திற்காகவும் போராடுவதில் உறுதியாக உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்த மக்கள் தில்லியிலும், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் சக்திவாய்ந்த எதிர்ப்புப் பேரணிகளை நடத்துவார்கள். இந்த வரலாற்றுச் சின்னத்தைத் தகர்ப்பதைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிப்பதற்கான நம்முடைய உறுதியை நாம் புதுப்பித்துக் கொள்ளுவோம். அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு புதிய அரசை நிறுவுவதன் மூலம், அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் படுகொலைகள் உட்பட அரசு பயங்கரவாதத்திற்கு முழுமையாக முடிவு கட்டும் நம்முடைய உறுதியை நாம் அறிவிப்போம்.

பாபரி மசூதி தகர்க்கப்பட வேண்டுமென்பது, இந்திய ஆளும் வர்க்கத்தால் மிகவும் கவனத்தோடு திட்டமிடப்பட்டு, அதனுடைய அரசால் நிறைவேற்றப்பட்டதாகும். செயலாக்கத்துறை, சட்ட மன்றம் மற்றும் நீதித்துறை என அரசின் எல்லா அங்கங்களும் இதில் முழுமையாகப் பங்கேற்றன. மசூதியை தகர்ப்பதற்கு ஏற்ற நிலைமையை உருவாக்குவதற்காக, மக்களிடையே வெறியைத் தூண்டிவிட்டு அவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அவர்களுடைய அமைப்புக்களுக்கும் வேலை கொடுக்கப்பட்டிருந்தது. “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை மக்கள் தகர்க்க விரும்பினார்கள்” என்ற பூதாகரமான பொய்யை ஆளும் வர்க்கமும், அதனுடைய அரசும் வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நமது நாட்டு மக்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளைக் கடந்த அளவில் இந்த கொடூரமான குற்றத்தால் அதிர்ச்சியடைந்து, அதை முழுவதுமாக எதிர்த்தனர்.

பாபரி மசூதி தகர்க்கப்பட்டது, இன்றைய இந்திய அரசும் அதனுடைய எல்லா நிறுவனங்களும் அரசு பயங்கரவாதத்தின் கருவிகள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. மக்களுடைய பாதுகாப்பையும், வளமையையும் உறுதி செய்ய வேண்டிய, தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசானது மிகப் பெரிய ஏகபோகங்களுடைய ஒரு கருவியாக இருக்கிறது. நாட்டையும், நமது மக்களுடைய உழைப்பையும், இயற்கை வளங்களையும் காட்டுமிராண்டித்தனமாகச் சுரண்டுவதன் மூலம் பெரும் ஏகபோகங்கள், தங்களை மேலும் வளப்படுத்திக் கொள்ள அது பயன்படுகிறது. மக்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்கு அதற்கு மிகவும் பிடித்த ஆயுதமாக அரசு பயங்கரவாதமும், படுகொலைகளுக்கு ஏதாவதொரு சமூகத்தை இலக்காக்குவதும் இருக்கின்றன.

1859-இல் துவங்கி பாபரி மசூதியைப் பயன்படுத்தி வெறியைத் தூண்டிவிட காலனியர்கள் ஆரம்பித்தனர். இன்றைய இந்திய அரசு, இதே போக்கைத் தொடர்ந்தது. 1949 இல் நள்ளிரவில், மசூதியின் உள்ளே ராமர் சிலையை வைத்து விட்டு, கடவுள் தலையீட்டால் அது நிகழ்ந்ததென வதந்தியைப் பரப்பினர். மசூதியின் கதவுகள் பூட்டப்பட்டன. 1984 சீக்கியர் படுகொலைக்குப் பின்னர், வெறியைத் தூண்டிவிடவும், மக்களைப் பிளவுபடுத்தவும், ஆளும் வர்க்கம் நன்கு திட்டமிட்ட பரப்புரையின் மூலம், பாபரி மசூதியைத் தகர்ப்பதை குவிமையமாக ஆக்கினர். அதிலிருந்து, முஸ்லீம் நம்பிக்கை கொண்ட மக்களை “பயங்கரவாதிகள்” என்றும், “தேச விரோதிகள்” என்றும், இந்து நம்பிக்கை கொண்டவர்களை “வகுப்புவாதிகள்” என்றும் ஒரு திட்டமிட்ட பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. நமது மக்கள், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் அல்லது வேறு எந்த மத நம்பிக்கையுடையவர்களாக இருந்தாலும் அவர்கள் வகுப்புவாதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அரசு தான் வகுப்புவாதியாகவும், பயங்கரவாதியாகவும் இருக்கிறது.

இன்றுள்ள அரசானது, காலனிய அரசின் ஒரு தொடர்ச்சியும், மேலும் அதன் பரிணாம வளர்ச்சியும் ஆகும். அது பிரித்தாளும் ஒரு கருவியாகும், ஒடுக்குமுறைக்கும் பயங்கரத்திற்குமான ஒரு அங்கமாகும். வாக்குகள் மூலமும் தோட்டாக்கள் மூலமும் சுரண்டும் சிறுபான்மை வர்க்க ஆட்சியின் ஒரு அங்கமாகும். மக்களில் ஏதாவதொரு பிரிவினரை அவ்வப்போது படுகொலைகள் செய்வதன் மூலமும், திசை திருப்பல்களைத் திட்டமிட்டு நடத்துவதன் மூலமாகவும், ஆட்சி செலுத்துவதற்கான ஒரு கருவியாகும்.

இன்றுள்ள அரசைப் பற்றிய இந்த உண்மையை மறைப்பதற்காக, ஆளும் வர்க்கத்தின் கருத்தியலாளர்கள்  பிரச்சனையின் மூலம் குறித்து பல்வேறு பொய்களைக் கூறி வருகின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் பரப்பிவரும் மிகப் பெரிய பொய்யானது, மக்கள் வகுப்புவாதிகள் என்பதாகும். இன்றுள்ள அரசும், அதன் அரசியல் சட்டமும் மக்களைப் பாதுகாப்பதற்கான கருவிகள் என்று அவர்கள் காட்டி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு “வகுப்புவாத நல்லிணக்கம்” குறித்து நீதி போதனைக் கொடுத்து வருகின்றனர். இது, “வகுப்புவாத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு” அரசு இல்லையென்றால், மத அடிப்படையில் நமது மக்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று விடுவார்கள் என்ற பொய்யைப் பரப்பும் நோக்கம் கொண்டதாகும்.

1857-இல் மாபெரும் கெதர் எழுச்சியை நசுக்கிய பின்னர், 1858-இல் காலனியர்களால் அரசு நிறுவப்பட்டதிலிருந்தே அது வகுப்புவாதியாகவும், பயங்கரவாதியாகவும் இருந்து வந்திருக்கிறது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 1857 எழுச்சியில், வெறுக்கத்தக்க காலனிய ஆட்சிக்கு எதிராக மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நமது மக்கள் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்தனர். துரோகிகளின் உதவியோடு, நம்முடைய  இலட்சக்கணக்கான நாட்டுப்பற்றாளர்களைப் படுகொலை செய்து, காலனியர்கள் இந்த எழுச்சியை நசுக்கினார்கள். அவர்கள் 1858-இல் அரசை நிறுவிய போது, நமது நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வைப்பதை உறுதி செய்யாவிடில் தங்களுடைய ஆட்சி நிலைக்காதென அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர். பல்வேறு சமூகங்களில் உள்ள துரோகிகளின் உதவியைக் கொண்டு, அவர்கள் தங்களுடைய திட்டங்களை முறைப்படி செயல்படுத்தினர்.

காலனியர்கள், “வெள்ளை மனிதனின் சுமை” என்ற கருத்தியலைப் பரப்பினர். அதன்படி, காலனியர்கள் நம்மீது ஆட்சி நடத்தவில்லையென்றால், காட்டுமிராண்டிகளாகவும், பிற்போக்காகவும் இருக்கும் இந்திய மக்கள் நாம், ஒருவரை ஒருவர் படுகொலை செய்துகொள்ளுவோம் என்பதாகும். இந்தக் கருத்தை நம்பி, அதைப் பரப்புகின்ற, காலனிய ஆட்சியை நியாயப்படுத்த அதைப் பயன்படுத்திய ஒரு பிரிவு சிந்தனையாளர்களை அவர்கள் பயிற்றுவித்தனர். காலனிய ஆட்சி முடிவடைந்துங்கூட, இந்த நிலைமை மாற்றவில்லை. நமது மக்கள் வகுப்புவாதிகளும், பிற்போக்கானவர்களும் ஆவர் என்றும் நாம் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்ய இன்றைய இந்திய அரசு அவசியமென்றும் கருத்தைப் பரப்பிவரும் ஒரு பிரிவு மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.

ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டுவரும் மற்றொரு பெரிய பொய்யானது, சில கட்சிகளும் அமைப்புகளும் மட்டுமே வகுப்புவாதிகள், எனவே அப்படிப்பட்ட கட்சிகளை மாற்றி மற்ற கட்சிகளை அதிகாரத்திற்கு கொண்டு வருவதே போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு மக்களுடைய போராட்டத்தைத் திசை திருப்பி, ஆளும் வர்க்கத்தின் ஒரு கட்சியை மாற்றி இன்னொரு கட்சியைக் கொண்டு வருவதற்கானப் போராட்டமாக அதை அவர்கள் ஆக்குகின்றனர்.

ஆளும் வர்க்கம் தன்னுடைய சர்வாதிகாரத்தைப் பெருந்திரளான மக்கள் மீது செலுத்துவதற்கு அரசும், அதனுடைய எல்லா நிறுவனங்களும் ஆளும் வர்க்கத்தின் கருவிகள் என்பதை அவர்களுடைய சித்தாந்தவாதிகள் மறைக்கின்றனர். காலனியர்கள் தங்களுடைய ஆட்சியைத் தொடர்வதற்கு ஆங்கிலேய காலனிய அரசு ஒரு கருவியாக இருந்தது. நமது நாட்டின் மிகப் பெரிய ஏகபோகங்கள், நமது மக்கள் மீது ஆட்சி நடத்துவதற்கு இன்றைய அரசு ஒரு கருவியாக இருக்கிறது. இந்த அமைப்பில் அதிகாரத்திற்கு வரும் அரசியல் கட்சிகள், ஆளும் வர்க்கத்தினுடைய மேலாளர்கள் ஆவர். ஆளும் வர்க்கம் இடும் கட்டளைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். பாபரி மசூதி தகர்ப்பு, ஆளும் வர்க்கத்தாலும் அதனுடைய அரசாலும் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தத் தகர்ப்பை நிறைவேற்றுவதற்கு, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு கட்சிகளுக்கும் தனித்தனி பொறுப்பு கொடுக்கப்பட்டது. இன்றைய அரசு தொடர்ந்து நீடிக்கும் வரை, அரசு திட்டமிட்டு நடத்தும் படுகொலைகளுக்கும், அரசு பயங்கரவாதத்திற்கும் இலக்காக மக்கள் தொடர்ந்து நீடிப்பார்கள். தேர்தல்கள் மூலமாக, அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சியை மாற்றி வேறொன்றைக் கொண்டுவருவது எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. இதுதான் மக்களுடைய அனுபவமாகும். டிசம்பர் 1992-இல் நடைபெற்ற பாபரி மசூதி தகர்ப்பைத் தொடர்ந்து, கடந்த 22 ஆண்டுகளில் நமது மக்களுடைய ஏதாவதொரு பிரிவினர் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு வந்துள்ளனர்.

பாபரி மசூதியின் தகர்ப்பு, நமது நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உண்மையில் உறுதி செய்யக்கூடிய ஒரு புதிய அரசை உருவாக்க வேண்டிய அவசியத்தை அது, நமது மக்கள் முன்னர் எழுப்பியது. மக்களுடைய கட்டளையைத் தாங்கள் பெற்றிருப்பதாகக் கூறிக்கொண்டு, விருப்பம்போல எந்தக் குற்றத்தையும் செய்யும் கட்சிகளை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் அரசியல் வழிமுறையின் குற்றவியலை, இது வெட்ட வெளிச்சமாக்கியது. ஒரு அரசியல் கட்சியினுடைய பங்கானது, மக்களை அதிகாரத்தில் வைத்திருப்பதாக இருக்க வேண்டிய ஒரு புதிய அமைப்பிற்கான தேவையை அது எழுப்பியது. தீர்மானிப்பவர்களாக மக்கள் இருப்பதை உறுதி செய்யும் ஒரு புதிய அடிப்படைச் சட்டத்தைக் கொண்டதாக, இந்தியக் குடியரசை புதிய அடித்தளங்களில் மீண்டும் கட்டியமைக்க வேண்டிய முழுமையான அவசியத்தை அது எழுப்பியது. அதிலிருந்து, கடந்த 22 ஆண்டுகளில், மக்கள் அதிகாரத்திற்கான இயக்கம் வலிமை பெற்றிருக்கிறது. மக்களை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக, இந்தியக் குடியரசை மீண்டும் திருத்தியமைக்க வேண்டிய அவசியத்தை மென்மேலும் அரசியல் செயல்வீரர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

குடிமக்களுடைய வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்யது, அரசனின் கடமை என்பதை இந்திய அரசியல் கருத்தியல் உயர்த்திப் பிடிக்கிறது. பாதுகாப்பின்றி, வளமை இருக்க முடியாது. அரசன் தன்னுடைய கடமையிலிருந்து தவறுவானேயானால், குடிமக்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதற்கு பதிலாக, அரசன் மக்களை ஒடுக்குவானேயானால், அப்படிப்பட்ட அரசனை அகற்றுவது குடிமக்களுடைய உரிமையும் கடமையும் ஆகுமென கருதப்படுகிறது.

எனவே இன்றைய அரசை அகற்ற வேண்டிய உரிமையும், கடமையும் நமக்கு இருக்கிறது. ஆங்கிலேயர்களால் ஊன்றப்பட்டு, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களால் பரப்பப்பட்டுவரும் காலனிய, ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்தும், கருத்தியல்களிலிருந்தும் நாம் முழுமையாக விடுபட்டு வர வேண்டும்.

இந்தியக் குடியரசால் பாபரி மசூதி தகர்க்கப்பட்டதன் 22-ஆவது ஆண்டு நிறைவடையும் இந்நாளில், அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் அளிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் ஒரு நவீன அரசை, புதிய அடித்தளங்களில் அமைப்பதற்காக நாம் உறுதியேற்போம்!

Pin It