கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆயுதப்படைகள் சிறப்பதிகாரச் சட்டத்தை ஒழிக்காமலும், இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவராமலும், காசுமீர் பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் இருக்க முடியாது

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை, நவ 22, 2014

டிசம்பர் 25, 2014-இல் துவங்கி ஜம்மு – காசுமீர் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் 5 கட்டங்களில் நடைபெற்று வருகிறது. இத் தேர்தல்கள் மத்திய இராணுவப் படைகளின் கொடூரமான அதிகாரத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

25 ஆண்டுகளுக்கு முன்னர், காசுமீரத்தை ஒரு “கலவரப் பகுதி”யென அறிவித்து, பாசிச ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போடப்பட்டது. இச் சட்டத்தின் கீழ், இராணுவப் படைகளுக்கு பொது மக்களைச் சுட்டுக் கொல்லவும், சித்திரவதை செய்யவும், கற்பழிக்கவும் வரையறையற்ற அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த பயங்கர ஆட்சியின் கீழ், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

இராணுவ அதிகாரிகள் மூலம் மத்திய அரசு ஜம்மு – காசுமீரில் ஆட்சி நடத்தி வருவதால்,  அங்கு மக்களுடைய அரசாங்கமென்பது வெறும் வெளி வேடமாகும். ஜ-கா-இன் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, காசுமீர் பள்ளத்தாக்கிலுள்ள சில இடங்களிலிருந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் பின்வாங்கப்பட வேண்டுமென கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு அதை அனுமதிக்கவில்லை. எதிர்காலத்தில், இராக், சிரியாவிலுள்ள பயங்கரவாத குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ்-லிருந்து அச்சுறுத்தல் வருவதாகக் கூறி, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும், கலவரப் பகுதிகள் சட்டமும் அங்கு நீடிப்பதை மத்திய அரசு நியாயப்படுத்துமென ஓமர் கூறியுள்ளார்.

இந்த மாநிலத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதாவது, 20 பேருக்கு ஒரு படை வீரர் இருக்கிறார். இராணுவ அனுமதியின்றி, காசுமீர மக்கள் எங்கும் போய் வர முடியாது. அப்போதுங் கூட அவர்களுடைய உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நவம்பர் 3, 2014 அன்று, பட்காம் மாவட்டத்திலுள்ள சாட்டர்காம் இடத்தில் இராணுவ செக்போஸ்டைக் கடந்து வண்டியில் சென்ற இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதும், மற்றும் இருவர் மோசமான காயத்திற்கு ஆளாகி இருப்பதும், காசுமீரத்தில் “இயல்பு வாழ்க்கை” என்றால் என்ன என்பதைக் காட்டுகின்றன. இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலுள்ள ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் கூடி, எதிர்ப்பு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதுவும் கூட அங்கு இயல்பு வாழ்க்கை-யின் ஒரு அங்கமாக ஆகியிருக்கிறது. அது, சாவை துச்சமென எண்ணும் வீரம் கொண்ட மக்களையும், நியாயத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுகின்ற அவர்களுடைய உறுதியையும் காட்டுகின்றது. தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினரும், இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதும், மேலும் பலர் காயமடைந்திருப்பதும் காசுமீரத்தில் வழக்கமான நிகழ்வுகளாக ஆகியிருக்கின்றன.

போலி எதிர்மோதல்களும், எதிர்க்கும் மக்கள் மீது இராணுவ துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அதை எடுத்துக் கூறுவது கடினம். காசுமீரத்தில் வாழ்வது, அங்குள்ள மக்களுக்குஒரு நரகமாக இருக்கிறது. இளைஞர்களும் “பயங்கரவாதிகளென சந்தேகிக்கப்படும்” பிறரும், அவர்களுடைய வீடுகளிலிருந்து அல்லது வீதிகளிலிருந்து பிடிக்கப்பட்டு இராணுவ சித்தரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாக நடைபெறுகிறது. அங்கு அவர்கள் காட்டுமிராண்டித் தனமாக சித்தரவதை செய்யப்பட்டு, பின்னர் கொல்லப்படுகின்றனர். அவர்களுடைய உடல்கள் கூட அவர்களுடைய குடும்பத்தினருக்குத் திருப்பிக் கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் இறந்துவிட்டார்களா, உயிரோடு உள்ளனரா என்று கூடத் தெரியாது. (பெட்டியைப் பார்க்கவும்.)

 “எல்லைக்கு வெளியிலிருந்து வரும் பயங்கரவாதத்தையும்”, பிரிவினைவாதத்தையும் நசுக்குவதற்காக என்ற பெயரில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும், இராணுவ ஆட்சியும் அவசியமென இந்திய அரசாங்கம் கூறுகிறது. இந்தப் பரப்புரையானது, கண்ணியத்தோடு வாழவும், தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கவும் வேண்டுமென்ற காசுமீர மக்களுடைய போராட்டத்தை, சட்ட விரோதமானதாகவும், பாகிஸ்தானுடைய ஆதரவில் நடப்பதாகவும் காட்டும் நோக்கம் கொண்டதாகும். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்திற்கானத் தேவையைக் கேள்வி கேட்பவர்களையும், இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென கோருபவர்களையும், இந்திய ஒன்றியத்திற்குள் ஜம்மு – காசுமீர் மாநிலத்தின் தற்போதைய ஏற்பாட்டைக் கேள்வி கேட்பவர்களையும், எதிரிகளாகவும், இந்திய தேசிய ஒற்றுமைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவும் கருதி ஒடுக்கப்படுகிறார்கள். காசுமீர மக்கள் தேச விரோதிகளெனவும், பாகிஸ்தானுடைய ஏஜன்டுகள் எனவும் இடைவிடாமல் நடத்தப்படும் பரப்புரையானது, இராணுவ ஆட்சி தொடர்வதையும், நாடெங்கிலும் காசுமீர மக்கள் ஒடுக்கப்படுவதையும் நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

காணாமல் போனவர்களுடைய பெற்றோர்கள் சங்கம்

 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 1994-இல், தங்களுக்கு அன்பிற்கும் நெருக்கத்திற்கும் உரிய, காணாமல் போனவர்களுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்களின் துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, விழிப்புணர்வு கொண்ட பெண்களும், ஆடவரும் துணிவோடு “காணாமல்” போனவர்களுடைய பெற்றோர்களின் சங்கத்தை (ஏபிடிபி) உருவாக்கினார்கள். மக்களைக் கடத்தி அவர்களை சித்தரவதை செய்வது, கொல்வது, பின்னர் அவர்களுடைய உடல்களை கால்வாய்களிலும், நதிகளிலும் தூக்கியெறிவது அல்லது குறியிடாத மயானங்களில் பெரும் எண்ணிக்கையில் புதைப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைகளை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர்கள் கோரினர். இராணுவம் கடத்தி, சித்தரவதை செய்த மக்களைக் கொன்று அவர்களுடைய உடல்களை அகற்றுவதற்காகவும், பொது மக்களிடையே பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்காகவும் இந்திய இராணுவம் உருவாக்கி வைத்திருக்கும் ஐக்வான்கள் என்றழைக்கப்படும் சாவுக் குழுக்களைப் பற்றி அவர்கள் விசாரணை செய்து உறுதிப்படுத்தினர்.

 

எல்லா வயதினரும், எல்லா வகையான வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களும் குறிப்பாக சிறுவர்கள் உட்பட இளைஞர்களும் 8000 இலிருந்து 10,000 மக்கள் ‘மாயமாக மறைந்திருக்கிறார்”களென ஏபிடிபி கணித்திருக்கிறது. ஏபிடிபி-யில் அப்படிப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். காட்டுமிராண்டித் தனமான பயங்கரத்திற்கு இடையிலும், அது மாதந்தோரும் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. மறைந்துவிட்டவர்களுக்காக 2004-இல் அது ஒரு நினைவிடத்தை எழுப்பியது. இராணுவம் அதை உடனடியாக இடித்துத் தள்ளியிருக்கிறது.

தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டுமென கூறும் அரசியல்வாதிகளும், அரசியல் சக்திகளும் சிறைப்படுத்தப்படுகின்றனர். தங்களுடைய கருத்துக்களைப் பரப்புரை செய்ய அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தேர்தல்கள் என்பது சனநாயகத்தின் கேலிக்கூத்தாகும். மக்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இருப்பதற்கு மாறாக, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்ற போர்வையில், இராணுவ ஆட்சி தொடர்வதை சட்டரீதியாக ஆக்கும் ஒரு வழிமுறையாக இருக்கிறது.

வரலாற்று அநீதி

பள்ளத்தாக்கின் காசுமீர மக்களும், ஜம்முவின் டோக்ராக்களும் பழமையான மக்கள் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பண்பாடும், மொழியும், வாழ்விடப் பகுதியும் கொண்டவர்கள் ஆவர். 1846 ஆங்கிலேய-சீக்கிய போருக்கு முன்னர் வரை அவர்கள் ரன்ஜித் சிங்கினுடைய பேரரசின் ஒர் அங்கமாக இருந்து வந்தனர். அதற்குப் பின்னர் அம்ரித்சர் ஒப்பந்தத்தின் கீழ் ஜம்மு காசுமீர மன்னராட்சி மாநிலத்தை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது. அதில் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய அடியாட்களில் ஒருவனான குலாப் சிங் என்றழைக்கப்பட்ட ஒரு டோக்ரா அரசனை ஆட்சியாளராக அமர்த்தியது.

1947-இல் பிரிட்டனால் திணிக்கப்பட்ட வகுப்புவாத இந்தியப் பிரிவினையின் நிபந்தனைகளில் ஒன்று, ஜம்மு – காசுமீர மன்னராட்சி மாநிலம் பாகிஸ்தான் அல்லது இந்தியாவுடன் இணைவதற்கோ அல்லது சுதந்திரமாக இருப்பதற்கோ தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்கும் என்பதாகும். நில சீர்திருத்தங்களுக்காகவும், அப்போதிருந்த அரி சிங் பேரரசனினுடைய ஒடுக்குமுறையான ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் பெரும் ஆர்பாட்டங்களில் திரண்டெழுந்தனர்.

ஜம்மு-காசுமீரத்தின் எதிர்காலம் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னால், புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் காசுமீரத்தையொட்டி பகைமையைத் தூண்டிவிடுவதற்காக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் சதித்திட்டமிடத் துவங்கினர். இந்தியப் படைகள் ஜம்முவை ஆக்கிரமித்தனர். மகாராஜாவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் சேர்ந்து கொள்வதற்காக, பாக்கிஸ்தானிலிருந்து பழங்குடி மக்கள் காசுமீரத்திற்குள் நுழைந்தனர். பின்னர், இந்தியப் படைகள் சிரிநகரில் நுழைந்தனர். பாகிஸ்தான் படைகள் காசுமீரத்தின் மேற்கு மாவட்டங்களைக் கைப்பற்றினர்.

பின்னர் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டால், தற்காலிகமாக இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாமென மகாராஜா அரி சிங்குக்கு லார்ட் மௌவுண்ட் பேட்டன் அக்டோபர் 25, 1947-இல் எழுதினார். மறு நாளே, அரி சிங் இந்தியாவுடன் இணைவதாக ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்தியப் படைகள் அதிகாரபூர்வமாக ஜம்மு காசுமீரின் ஒரு பகுதியைத் தம் கையிலெடுத்துக் கொண்டனர். இதுவே இந்தியா மேலாண்மை செய்துவரும் ஜம்மு-காசுமீரமாக ஆகியது.

1948 சனவரி 1 அன்று, காசுமீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா முறையிட்டது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 47 ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத் தீர்மானத்தின்படி, பாகிஸ்தான் தன்னுடைய எல்லா துருப்புக்களையும் பின்வாங்கிக் கொள்ள வேண்டும், இந்தியா அதனுடைய பெரும்பான்மையான துருப்புக்களை ஜம்மு-காசுமீரத்திலிருந்து பின்வாங்கிக் கொள்ள வேண்டும், இதன் மூலம் சுதந்திரமான, நடுநிலையான கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஐநா வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, இந்தியாவோடு இணைவதென அரசனோடு கையெழுத்திட்ட உடன்படிக்கை தற்காலிகமானதெனவும், “நிலைமை அமைதியானவுடன்”, ஜம்மு-காசுமீரத்தில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்துவதை இந்தியா உறுதி செய்யுமென பிரதமர் நேரு பலமுறையும் அறிவித்திருக்கிறார். சுயநிர்ணய உரிமையை மக்கள் பயன்படுத்துவார்களென அவர் வாக்குறுதியளித்தார். அதாவது, அவர்கள் இந்திய ஒன்றியத்தின் அங்கமாக இருக்க விரும்புகிறார்களா, அல்லது பாகிஸ்தானில் இணைய விரும்புகிறார்களா அல்லது தனியாக இருக்க விரும்புகிறார்களா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள் என்றார். ஆனால் இந்த வாக்குறுதி, இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

ஒரு கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் வரை, ஜம்மு-காசுமீர் தற்காலிகமாக இந்திய ஒன்றியத்தில் இருக்கும் என்பதை குறிப்பிடும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் உறுப்பு 370 கொண்டு வரப்பட்டது. அதற்கு “ஜம்மு-காசுமீர் மாநிலத்தின் தற்காலிக வழிவகைகள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அது, ஜம்மு-காசுமீர் ஒரு தனி அரசியல் சட்டம் வைத்துக் கொள்ள வழிவகை செய்தது.

ஜம்மு-காசுமீருக்கு ஒரு அரசியல் சட்டத்தை எழுதுவதற்காக ஒரு அரசியல் சட்ட நிர்ணய அவையைத் தேர்ந்தெடுப்பதற்காக 1951-இல் தேர்தல் நடத்தப்பட்டன. ஆனால், அந்த அவைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை. ஏனெனில் அந்த அவையானது, இந்தியா நிர்வகிக்கும் காசுமீரப் பகுதியில் வாழும் மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பாகிஸ்தான் நிர்வகிக்கும் காசுமீர மக்கள் அதில் பங்கேற்கவில்லை. அந்த மாநிலம், இந்தியாவுடன் இணைவதை பிரதிநிதித்துவமற்ற இந்த அரசியல் சட்ட நிர்ணய அவை அங்கீகரித்தது. அது, ஒரு அரசியல் சட்டத்தை ஒப்புக்கொண்டது. அச்சட்டம் சனவரி, 26, 1957-இல் நடைமுறைக்கு வந்தது. அது, “இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக ஜம்மு-காசுமீர்” இருக்குமென அறிவித்தது. அதிலிருந்து, இந்திய ஆட்சியாளர்கள், இது விவாதத்திற்கு உரியதல்ல என்றும், அதைக் கேள்வி கேட்பவர்களும், வாக்குறுதியளிக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பு பற்றிக் குறிப்பிடுபவர்களும், தேச விரோதிகளெனவும், இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒரு அச்சுறுத்தலெனவும் அறிவித்து வருகிறார்கள்.

காசுமீர் பற்றிய மோதலானது இந்த முக்கிய கேள்வியை ஒட்டியதாகும் – ஒரு தேசம் அல்லது மக்களுடைய அரசியல் இலக்கைத் தீர்மானிப்பதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது? இறையாண்மையானது மக்களுக்கு உரியதா, அல்லது ஒரு பகுதி மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு தேர்ந்தெடுத்த அவையிடம் இறையாண்மை இருக்கிறதா? அன்னிய படைகள் பின்வாக்கப்பட்டு, இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் மாநிலப் பகுதிகள் இரண்டிலும் வாக்குறுதி கொடுக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஜம்மு-காசுமீர் மாநிலத்தின் தற்காலிக நிலையைப் பிரதிபலிக்கும் உறுப்பு 370-உடன் இது முரண்படவில்லையா?

தொடரும் மக்கள் பெருந்திரளுடைய அதிருப்தியும், காசுமீரத்தில் கிளர்ச்சியும், சுயநிர்ணய இறையாண்மை உரிமை காசுமீர மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் வரலாற்று அநீதியிலிருந்தும், எதிரெதிரான அண்டை நாடுகள் வலுக்கட்டாயமாக காசுமீரத்தைத் துண்டாடி வைத்திருக்கும் அநீதியிலிருந்தும் எழுகிறது.

உறுப்பு 370 ஒழிக்கப்பட வேண்டுமென பாஜக ஒரு இயக்கம் நடத்தி வருகிறது. அதாவது, காகிதத்தில் கூட ஜம்மு-காசுமீரத்தின் “தற்காலிக நிலையை” அகற்ற வேண்டுமெனவும், அதன் மூலம் ஒரு கருத்து வாக்கெடுப்புக்கான கோரிக்கையானது எல்லா சட்ட நியாயத்தையும் இழந்துவிடும் என்றும் பொருளாகும். காசுமீரப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கு பதிலாக, இது நிலைமையை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும்.

தேசிய உரிமைகள் மறுக்கப்படுவதையும், அதன் விளைவாக எழும் காசுமீர மோதலையும் ஒரு காரணியாக கொண்டு, பல்வேறு அன்னிய நாடுகள் தங்களுடைய சொந்த நலன்களை முன்னேற்றுவதற்கு சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.  இதில் பாகிஸ்தான் மட்டுமின்றி, பனிப்போர் காலத்தில் இரு வல்லரசுகளும் கூட தலையிட்டன. சோவியத் யூனியன் சிதறுண்டதிலிருந்து, காசுமீர பிரச்சனையைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் சதித் திட்ட அச்சுறுத்தல்களை  அதிகரித்திருக்கிறது. இதற்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பதிலானது, இராணுவ ஆட்சியின் மூலம், இந்தியா நிர்வகிக்கும் காசுமீர் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதி செய்வதாகும்.

1989-90 இல், காசுமீரத்திலுள்ள முஸ்லீம்களுக்கும்  இந்துக்களுக்கும் இடையில் வகுப்புவாத பதற்றத்தை இந்திய அரசாங்கத்தின் உளவு நிறுவனங்கள் திட்டமிட்டு தூண்டிவிட்டு நடத்தின. காசுமீரத்திலிருந்து பல பண்டிட்களை துரத்துவதற்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கான பழி “இஸ்லாமிய பயங்கரவாதிகள்” மீது போடப்பட்டது. இதை ஒரு சாக்காகக் காட்டி, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும், அரசு பயங்கரவாதத்தை நிறுவனப்படுத்துவதும் பள்ளத்தாக்கில் வாழ்க்கை முறையாகவே ஆக்கப் பயன்படுத்தப்பட்டது.

அரசு பயங்கரவாதமும், பாசிச இராணுவ ஆட்சித் திணிப்பும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. வரலாற்றிலிருந்து வந்து சேர்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் எல்லா வாய்ப்புகளையும் அது தடுத்திருக்கிறது. அது, அன்னிய சக்திகள் தலையிடும் அபாயத்தை அதிகரித்திருக்கிறது. ஆசியாவின் அரசியல் வரைபடத்தை, தன்னுடைய ஏகாதிபத்திய திட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் அமெரிக்காவின் முயற்சியின் ஒரு அங்கமாக ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் சிரியாவில் நடைபெற்றதைப் போல் ஜம்மு-காசுமீரின் தலைவிதியையும் பாதிக்கக் கூடிய ஒரு மோசமான அபாயம் இன்று உள்ளது.

முடிவுகள்

இன்றுள்ள இந்திய ஒன்றியம் காலனிய ஏகாதிபத்திய குணத்தைக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய கண்ணோட்டம் கொண்டுள்ள நமது நாட்டின் ஆட்சியாளர்கள், காசுமீரைக் கைப்பற்றி கொள்ளையடிக்க வேண்டிய ஒரு நிலப் பரப்பாகப் பார்க்கிறார்கள். மக்களுடைய உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை.

இந்தியத் தொழிலாளி வர்க்கமும், மக்களுமாகிய நாம், இந்தக் கண்ணோட்டத்தை புறக்கணித்து அதை எதிர்க்க வேண்டும். ஜம்மு-காசுமீர மக்கள், இந்தத் துணைக் கண்டத்திலுள்ள மக்களுடைய ஒரு அங்கமாவர். அவர்களுடைய அரிதாக இருக்கும் சில மகிழ்ச்சிகளையும், பெருகி இருக்கும் துயரங்களையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

காசுமீரம் இன்று ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது. இந்த தேக்க நிலைக்கு இராணுவ ஆட்சியின் கீழ் நடத்தப்படும் தேர்தல்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வராது. இந்த நெருக்கடியின் தீர்வுக்கு முதல் நடவடிக்கையானது, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒழித்துவிட்டு, இராணுவப் படைகளை அவர்களுடைய முகாம்களுக்கு திருப்பியழைப்பதாகும். காசுமீரப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு இது ஒரு அவசியமான நிபந்தனையாகும். தேசங்கள் மற்றும் மக்களுடைய சுய நிர்ணய உரிமைகளை மதிக்கும் ஒரு அரசியல் தீர்வு இல்லாமல், தெற்காசியாவில் ஏகாதிபத்திய தலையீடும் போர் அபாயமும் அதிகரித்து, நிலைமை கொந்தளிப்பாக இருக்கவே செய்யும்.

காசுமீர மக்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள வழிவகுப்பது என்பது, ஜம்மு-காசுமீர மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய, பாகிஸ்தானிய மக்களுக்கும் நலம் பயக்கும். இந்தப் பகுதியில் அமைதிக்கு ஆதரவான ஒரு முக்கிய காரணியாக அது இருக்கும். நிலைமையைத் தங்களுடைய சொந்த நலன்களுக்கு ஏற்ப கையாளுவதற்கு அன்னிய சக்திகளுக்கு உள்ள ஒரு பயங்கரமான வழியை அது அகற்றும். காசுமீர மக்களைப் பிளவுபடுத்தியும், பிரச்சனையைத் தீர்க்காமலும் வைத்திருப்பது, இந்திய அல்லது பாகிஸ்தானிய மக்களுடைய நலனுக்கு எவ்விதத்திலும் உதவிடவில்லை. அது, தெற்காசியாவைப் பிளவுபடுத்தியும், ஆங்கில – அமெரிக்க ஏகாதிபத்தியர்களுடைய செல்வாக்கிற்கு பலியாகக் கூடிய வகையிலும், வைத்திருப்பதன் மூலம் ஏகாதிபத்திய நலன்களுக்கு அது சேவை செய்கிறது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக ஒழிக்க வேண்டுமென்றும், இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென்றும் ஜம்மு-காசுமீரத்தில் உள்ள முற்போக்கு சக்திகளுடைய கோரிக்கைகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இந்தியத் தொழிலாளி வர்க்கமும், மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுகிறது. அதன் மூலம் மட்டுமே, இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட வேண்டுமென்ற காசுமீர மக்களுடைய விருப்பத்திற்கு மதிப்பளித்து, அதன் மூலம் அவர்கள் தங்களுடைய விதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள வழிவகுப்பதற்கு ஒரு அரசியல் தீர்வைக் கடைபிடிக்க முடியும்.