கடந்த மாதம் உ.பியின் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவனையில் ஆக்ஸிஜன் சப்ளை தீர்ந்ததால் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக மரணித்தன. இந்த எண்ணிக்கையும் கூடுதலாகிக் கொண்டே சென்றது. இதற்காக உ.பியின் முதல்வர்  பாஜகவின்  யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த குழந்தைகளின் இறப்புக்கு காரணம் ஆக்ஸிஜன் சிலண்டர்கள் இல்லை மூளைக்காய்ச்சல் என்று மடைமாற்றி தன்னை தற்காத்துக் கொள்ள எவ்வளவோ முயன்றார். இறுதிவரை குழந்தைகளின் மரணத்திற்கு உ.பி யின் நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

      மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு தேவையான எந்த வசதியையும் செய்து தராமல் மருத்துவர்களே இதற்கெல்லாம் காரணம் எனவும் பேச ஆரம்பித்தார் யோகி.  இந்த இறப்பு நடந்தவுடனே இதற்காக மனம் வருந்தி இச்சம்வத்திற்காக மருத்துவமனையின் முதல்வர் ஆர்.கே.மிஸ்ராவும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கும் போது தன் சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்,கஃபில் கான் அவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். (ஆதாரம்: தி இந்து 16/08/2017)

     இதனை தொடர்ந்து உ.பி நிர்வாகம் நடவடிக்கை எனும் பெயரில் டாக்டர் கஃபில் கானை குற்றவாளியாக முன்னிறுத்தி அவரை இடைநீக்கம் செய்தார்கள். ஆனால் இந்த இடைநீக்கம் ஆணை வருவதற்கு முன்னாலேயே டாக்டர்.கான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். உண்மையில் இந்த கோர சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டியது யோகி ஆதித்யநாத் அவர்களும் அவர் சகாக்களுமே.

      பி.டி.ஆர் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்க ஒப்பந்தம் போட்டிருந்த புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர் மனீஷ் பண்டாரி கடந்த பிப்ரவரி முதலே மருத்துவமனை நிர்வாகம் ரூ.63 லட்சத்தை தராமல் நிலுவைத்தொகையாக வைத்துள்ளது என நினைவூட்டல் கடிதத்தை அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார். ஏப்ரல் 6,2017 அன்று இந்த நினைவூட்டல் கடிதமானது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் உ.பியின் சுகாதார அமைச்சர் சித்தார்த் சிங் அவர்களுக்கும் அனுப்பட்டிருக்கிறது.

      ஜுலை 10 ல் சமாஜ்வாடி கட்சியை  சார்ந்த சட்ட மேலவை உறுப்பினர் சி.பி.சந்த் பி.டி.ஆர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டை எழுப்பி அதற்கு பதில் தர வேண்டும் என்றும் உ.பி அமைச்சர் தாண்டனுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலை பெற்றுத் தரவதாகவும் தாண்டன் குறிப்பிட்டிருந்தார்.

     குழந்தைகளின் இறப்பு சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளின் போதும் உ.பி அமைச்சர்களுக்கு மருத்துவமனை முதல்வர் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்திருக்கிறார்.

     இந்த மருத்துவமனைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு நிர்வாகத்தை புகழ்ந்துவிட்டு சென்றார். உண்மையில் குழந்தைகளின் இறப்புக்கு பதில் சொல்ல வேண்டியதும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதும் உ.பி யின் அரசாங்கம் மட்டுமே!.

        தமிழகத்தில் அனிதாவின் தற்கொலை எப்படி அதிகாரத்தினரால் செய்யப்பட்ட கொலையாக கருதுகிறோமோ அதே தான் உ.பி யில் ஆக்ஸிஜன் இல்லாமல் மரணித்த குழந்தைகளுக்கும் அடக்கம்! அவர்களும் அதிகார வர்க்கத்தின் அலட்சியங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

        தமிழகத்தில் அனிதா'விற்கான போராட்டத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக சம்பந்தம் இல்லாமல் வெறுப்பு பேச்சை உமிழும் தேசிய செயலாளர் எச்.ராஜா, எந்த தவறும் செய்யாமல் உயிர் காத்த டாக்டர் கஃபில் கான் அவர்களுக்கு எதிராக வெளியில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்துள்ள உ.பியின் பாஜக அரசு என இவர்களின் கோர அரசியல் சகிக்க முடியாத ஒன்று.

- அபூ சித்திக்

Pin It