தமிழ்நாடு மார்க்சிய-லெனினியக் கட்சியில் பணியாற்றி வெளியேறிய பின்பு சிறிது காலம் எந்த அமைப்பிலும் இணையாமல் நேரடியான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன்.

நீண்ட காலத்திற்கு அவ்வாறு ஒதுங்கி இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளேன். இந்நிலையில் நீண்ட பரிசீலனைகளுக்குப் பிறகு தோழர் தியாகு தலைமையிலான "தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில்" என்னை இணைத்துக் கொண்டு உள்ளேன்.

எப்போதும் "அரசியலும் அமைப்புமே எனது உலைக்களன்" என்று உறுதியாக நம்புபவன். அந்த வகையில் அமைப்புகள் மேலுள்ள விமர்சனங்களைக் காரணங்காட்டி அமைப்பில் இணைந்து செயல்படாமல் இருப்பதையோ அல்லது அமைப்புகள் நம் சுதந்திரமான கருத்துக்களைத் தடை செய்யும் என்பதையோ ஏற்றுக் கொள்ளாதவன் நான்.

காரணம் அமைப்பு என்பது நமது சுதந்திரமான கருத்துகளைக் கட்டுப்படுத்தும் என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது என்பதை மார்க்சிய ஆசான்கள் தம் வரலாற்று அனுபவங்களிலிருந்து நமக்கு உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

இன்றைய உலகமயக் காலகட்டத்திற்கு பின்பு தனிநபர் வாதம் மேலோங்குவதை நாம் காண முடியும். இது அமைப்புகளுக்கு எதிராகப் பேசி, அமைப்புவழித் திரட்டுவதைத் தடுத்தே வந்துள்ளது. ஆனால் இதற்கு அமைப்புகளே அடிப்படைக் காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். அமைப்புகள் தங்கள் மக்கள்விரோத சிந்தனைகளில் இருந்து மாற்றிக் கொள்ளாததே இதற்குக் காரணமாகும். அமைப்பு சாராது ஒரு கூட்டம் உருவாக இதுவே காரணமாக அமைந்தது.

தமிழ்நாடு மார்க்சிய-லெனினியக் கட்சியில் இருந்த போதும் சரி இன்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்துள்ள போதும் சரி மனிதகுல விடுதலைக்கு மார்க்சியமே இறுதித் தீர்வு என்று நம்புகிறேன். அதேநேரம் மார்க்சியத்தை இந்த மண்ணில் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலின் வழியாகவே எடுத்துச் செல்ல முடியும் என உறுதிபடக் கூறுகிறேன்.

மார்க்சியம் இந்த மண்ணிற்கு வந்து நூற்றாண்டுகள் நிறைவடையும் வேளையில் உள்ளோம். எனினும் இந்த நாளிலும் மார்க்சியத்தை இந்த நாட்டின் குறிப்பான சூழலோடு இணைக்காத நிலையிலேயே கம்யூனிஸ்டுக் கட்சிகள் உள்ளன. அவற்றில் நிகழ்ந்துள்ள தற்போதைய மாற்றங்கள் அனைத்தும் நடைமுறை வகையில் நிகழ்ந்துள்ளனவே தவிர கொள்கை வகையில் அல்ல.

இன்று நான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை தேர்ந்தெடுக்க அதன் மார்க்சிய அடிப்படையும் ஒரு காரணமாகும். மேலும் மிக முக்கியக் காரணம் தோழர் தியாகுவின் ஜனநாயக பூர்வமான அணுகுமுறையாகும். அவர் பணிகளில் சுதந்திரமான செயல்பாடுகளை அனுமதிப்பார். அதேநேரம் கருத்துக்களை அணுகுவதில் அவர் ஒரு மிகச் சிறந்த ஜனநாயகவாதியும் ஆவார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் மாறுபாடுகள் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு நிச்சயம் மாறுபட்ட கருத்துகள் உண்டு அவற்றை விவாதங்களின் மூலம் செயல்பாடுகள் ஊடே தீர்த்துக் கொள்ள முடியும். இன்று பார்ப்பனிய பாசிசம் மிகப் பெரும் சவாலாக உருவெடுக்கும் வேளையில் செயல்பாடே முதன்மையானது.

இங்கு பெரியாரியம்-அம்பேத்கரியம் எமக்குத் தோழமைத் தத்துவங்கள். அந்தத் தத்துவம் சார்ந்த அமைப்புகளும் தோழர்களும் எமக்கு நெருக்கமான நண்பர்கள். உறுதியான கூட்டாளிகள். பெரியாரும் அம்பேத்கரும் தமது சிந்தனை வெளிச்சத்தால், கொள்கை வெளிச்சத்தால் இந்தியத் துணைக்கண்டத்தைப் புரிந்துகொள்ளவும் மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தார்கள்.அவர்கள் விட்டுச் சென்ற பணியை நாம் தொடர வேண்டி உள்ளது.

என் பல்வேறு பணிகளிலும் உடன்பட்டு மாறுபட்டு உள்ள தோழர்கள் பலர் உண்டு. ஆனால் எல்லோருக்கும் ஒரு பொது அடிப்படை உண்டு அது சமுதாய மாற்றம். சாதி ஒழிப்பில் பார்ப்பனிய எதிர்ப்பில் முதலாளிய - ஏகாதிபத்திய எதிர்ப்பில் இன விடுதலையில் ஒன்றுபட்டு பயணம் செய்வோம் வாருங்கள்.

Pin It