anna university 532தேசத்தின் குரல்

தமிழ்நாட்டின் பெருமித அடையாளங்களில் ஒன்று அண்ணா பொறியியல்  பல்கலைக்கழகம். மிகச் சிறந்த அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்களித்து, சமூக நீதியின் சிறப்பை மெய்ப்பித்துக் காட்டிய கல்வி நிறுவனம்.

தமிழ்வழிப் பொறியியல் கற்றுத் தர முடியுமா என்ற அறைகூவலை ஏற்று அதற்கான ஆக்கப் பணிகளை முன்னெடுத்தவர்கள் இப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள். தமிழ்நாட்டு மக்களுக்குச் சொந்தமான அண்ணா பல்கலைக்கழகம் இந்தியப் பேரரசின் கண்களை நெடுநாளாகவே உறுத்திக் கொண்டிருந்தது,

அண்ணா பல்கலைக் கழகத்தைக் கைப்பற்ற தில்லிக்காரர்கள் வகுத்த சூழ்ச்சித் திட்டம்தான் அதனை ’உயராய்வு நிறுவனம்’ ஆக்குவதன் பேரால் நடுவண் கல்வி அமைச்சகம் எடுத்துக் கொள்வது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க ஏவப்பட்ட கருவிதான் துணைவேந்தர் சூரப்பா.

இந்த சூரப்பா தமிழக அரசிடம் இசைவு பெறாமலே அண்ணா பல்கலைக் கழகத்தை ஒப்படைக்க இந்திய அரசின் கல்வித் துறைக்கு உறுதிப் பத்திரம் எழுதி அனுப்புகிறார். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதைதான்! சூரப்பா உடைக்கும் சூரைத் தேங்காய்!

அண்ணா பல்கலைக் கழகத்தை உயராய்வு நிறுவனமாக மாற்ற இந்திய அரசுக்குத் தமிழக அரசு 1,570 கோடி செலுத்த வேண்டுமாம்! அதில் 1,000 கோடி உடனே தர வேண்டுமாம்! அந்தத் தொகையைத் தமிழக அரசிடம் கேட்க வேண்டாம், நானே கொடுக்கிறேன்,

தவணை முறையில் ஆண்டுக்கு 314 கோடியென ஐந்தாண்டுகளில் கொடுத்து விடுகிறேன் என்கிறார் சூரப்பா! எப்படிக் கொடுப்பாராம்? அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உறுப்புக் கல்லூரிகளிலிருந்து கிடைக்கும் இணைப்புக் கட்டணம், மாணவர்களிடமிருந்து தண்டும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றைக் கொண்டு தில்லிக்குக் கப்பம் கட்டுவதுதான் சூரப்பாவின் திட்டம்! இது தன்னுடைய சுடர்மிகு கண்டுபிடிப்பு என்று பீற்றிக் கொண்டு, தமிழ்நாட்டுக்குத் தனது கொடை என்றும் அறிவித்துக் கொள்கிறார்.

எல்லாமே நயவஞ்சக நாடகம் என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். மாநில அரசைக் கேட்காமலே கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை இந்தப் பதவிக்குக் கொண்டுவந்தவர் தில்லியின் ‘வைஸ்ராய்’ பன்வாரிலால் புரோகித். குடியாட்சியத்துக்குப் புறம்பாகத் தமிழ்நாட்டைச் சிதைக்கவும் தமிழர்களைப் பழிவாங்கவும் இந்தப் புரோகிதரை அனுப்பிய மோதி-அமித்ஷா கும்பலின் சூதுப் பகடைதான் சூரப்பா!

தானடித்த மூப்பாக சூரப்பா செயலாக்க முற்பட்டுள்ள இத்திட்டத்தைத் தமிழக அரசு ஏற்கவில்லை. ஆனால் வெறும் சிணுங்கலால் மட்டும் சூழ்ச்சி வலையறுக்க முடியாது. சூரப்பாவையும் அவரை ஏவிய ஆளுநரையும் ஆளுநரின் ஆளுநர்களையும் கடுமையாக எதிர்த்திட வேண்டும்.

அண்ணா பல்கலைக் கழகம் ’உயராய்வு நிறுவனம்’ ஆக அறிவிக்கப்படுவதால் 69 விழுக்காடு இடஒதுக்கீடுவழிச் சமூக நீதி பறிபோய் விடும் என்பதை மட்டும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாகக் காட்டுவது போதாது. கல்வித் துறையில் மிச்சமுள்ள தமிழ்நாட்டுத் தன்னாட்சியும் பறிபோகிறது என்பதே அடிப்படைக் காரணம்.

அண்ணா பல்கலைக் கழகச் சிக்கல் தொடர்பாக ஆராய அமைச்சர் குழு அமைத்திருப்பதாகச் சொல்கிறார் எடப்படியார்! நெளியும் புழுவுக்குள்ள மரியாதை கூட இந்தக் குழுவுக்கு இருக்கப் போவதில்லை. அண்ணா பல்கலைக் கழகத்தை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுத்தர மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

சூரப்பாவையும் புரட்டுப் புரோகிதரையும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அமைச்சரவையிலும் சட்டப் பேரவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியும் கண்டனத் தீர்மானம் இயற்ற வேண்டும். சூரப்பாவின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்ற கருத்தின் அடிப்படையில் அதனை நீக்கம் செய்யுமாறு உயர் நீதிமன்றத்தை நாடுவது பற்றியும் கருதிப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பார்ப்பனிய ஆற்றல்கள் தவிர கிட்டத்தட்ட அனைவருமே சூரப்பாவின் அடாவடி சூரத்தனத்தைக் கண்டித்துள்ளனர். ஆனால், இந்த ஆளுநரும் இவருக்குப் பின்னாலுள்ள இந்தியப் பாசிச ஆட்சியாளர்களும் செய்து வரும் பிற நகர்வுகளையும் இணைத்துப் பார்க்கும் போது அண்ணா  பல்கலைக் கழகத்தை அவ்வளவு எளிதில் பாதுகாத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழர் இறைமை மீட்பு என்பது கல்வித் துறையில் மட்டுமென்றாலும் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்தால் மட்டுமே மெய்ப்படும். இதற்கு மாற்று அடிமைத்தனமும் அழிவுமே தவிர வேறில்லை என்பதைத் தமிழ் மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்வோம்!

- தியாகு

Pin It