அமெரிக்க டாலர்களில் செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனையும், அமெரிக்க சட்ட அதிகார எல்லைக்குள் கொண்டுவரப்படுகிறது. இதையே கருவியாகப் பயன்படுத்தி அமெரிக்கா பொய்க் குற்றச்சாட்டுகளால் பிற நாடுகளைப் பொருளாதாரத் தடைகளுக்குட்படுத்தி அந்நாடுகளின் முக்கிய அலுவலர்கள், தனிநபர்களின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி வருகிறது.

ரஷ்யா, ஈரான், வெனிசுலா, கியூபா, சூடான், ஜிம்பாப்வே, மியான்மர், காங்கோ, வட கொரியா சீனா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி எனப் பல நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இதனால் அந்த நாடுகள் மட்டுமல்லாது அந்நாடுகளுடன் பரிவர்த்தனை செய்து வந்த பிற நாடுகளும், நிறுவனங்களும் கூட பாதிக்கப்படுகின்றன.

இதனால் அமெரிக்காவின் பகை நாடுகள் மட்டுமல்லாது, நட்பு நாடுகளும் கூட டாலர் ராஜ்யத்தை விட்டு வெளியேறி ஒரு மாற்றுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளன. அதுவே பல்முனைத்துவ நாணய முறையை ஏற்பதற்கான காரணமாகவும் உள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும், கிரிப்டோ நாணயங்களின் வளர்ச்சியும், டாலரின் மேலாதிக்கத்திலிருந்து விடுபட ஒரு மாற்று வாய்ப்பை அளித்துள்ளன.

டாலர் மீதான நம்பிக்கையின்மையால் நெதர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பெல்ஜியம், ஆஸ்திரியா, துருக்கி, அஸெர்பைஜன் ஆகிய நாடுகள் அமெரிக்காவில் உள்ள தங்களது தங்கச் சேமிப்புகளை திரும்பப் பெற்றுள்ளன. அமெரிக்காவுக்குக் கடனளித்த நாடுகளான சீனா, ரஷ்யா, ஜப்பான், ஐக்கிய முடியரசு, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க், கனடா, மெக்சிகோ, துருக்கி ஆகியவை அமெரிக்க பத்திரங்களிலான முதலீடுகளைக் குறைத்து டாலர் மதிப்பிலான சொத்துக்களிலிருந்து வெளியேறியுள்ளன. வளரும் நாடுகள், எண்ணெய் உற்பத்தி நாடுகள் அனைத்துமே டாலரின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து 2009இல் உருவாக்கப்பட்ட பிரிக் (BRIC) கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் அரசியல் செல்வாக்கை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டது.

2009 ஜூன் 16இல் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரில் நடைபெற்ற முதல் உச்சி மாநாட்டில் உலக நிதி அமைப்பில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் அதிகரிக்க வேண்டும்.

டாலரின் மேலாதிக்கத்தை குறைத்து, பன்முகப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அறிக்கையிடப்பட்டது. 2010இல் தென் ஆப்பிரிக்காவையும் இணைத்து ஐந்து நாடுகளின் கூட்டமைப்பாக விரிவடைந்த ’பிரிக்ஸ்’ உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தினரைக் கொண்டுள்ளது.  

2020 ஜூனில் ரஷ்ய வர்த்தக அமைச்சர் டெனிஸ் மந்துரோவ், வர்த்தகப் பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டைக் கைவிட பிரிக்ஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

தேசிய நாணயங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவை அதிகரித்து வாஷிங்டனின் கொள்கைகளிலிருந்து விடுபட்டுத் தற்சார்பைக் கடைபிடிக்குமாறும், அதன் மூலம் தமது நாடுகளின் பொருளாதாரங்களின்  நிலைத் தன்மையை அதிகரித்து, அமெரிக்காவின் கொள்கைகள் மீதான சார்பைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதற்காகவே உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியை (என்.டி.பி) மிகவும் முனைப்புடன் பயன்படுத்துமாறும் மந்துரொவ் சக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது பிரிக்ஸ் ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாகும். அதை இலக்காகக் கொண்டே 2014 ஜூலை 15ஆம் நாள் புதிய வளர்ச்சி வங்கி உருவாக்கப்பட்டது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு சவாலாகவும், மாற்றாகவும் இந்த வங்கி ஆசியாவில் நிறுவப்பட்டது.

பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கி, 2015ஆம் ஆண்டிலிருந்து நிதிகளைத் தேசிய நாணயங்களில் அளிக்கிறது. 2020 ஏப்ரலில் பிரிக்ஸ் நிதி அமைச்சர்களுடனான ஆளுநர் குழுவின் ​​ சந்திப்பின் போது, அவ்வங்கியின் தலைவர் கே.வி. காமத் 2019 ஆம் ஆண்டில், 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி உதவி தேசிய நாணயங்களில் வழங்கப்பட்டதாகவும், இவ்வங்கி தன்  நிதித் திட்டங்களில் 50 சதவீத நிதியுதவியைத் தேசிய நாணயங்களிலேயே அளிக்க உள்ளதாகவும், தற்போதுள்ள சர்வதேச வளர்ச்சி வங்கிகளால் கோரப்படும் விரும்பத்தகாத நிபந்தனைகளை விடக்  குறைவாகவே இவ்வங்கி விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடனானது உறுப்பு நாடுகளின் நாணயத்திலே வழங்கப்படும். பொதுவாக்க் கடன் பெறும் போது வட்டி விகிதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வளரும் நாடுகள் வலுவான சர்வதேச நாணயங்களில் நிதிக் கடன் பெறும் போது எதிர்கொள்ளும் ஒரு பெரிய ஆபத்து நாணயத்தின் பரிமாற்ற விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கமாகும்.

இதனால் அந்நாடுகளின் கடனளவானது அதன் உண்மையான மதிப்பைக் காட்டிலும் 15-20% அதிகரித்திருப்பதாகவும் அதற்குப் பதிலாக அந்த நாடுகளின் தேசிய நாணயத்திலே கடன் பெற்றால் கடன் சுமை கணிசமாகக் குறையும் என்றும் கூறுகிறார் காமத்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நாணயங்களைத் தேவைப்படும் போது பரிமாற்றிக் கொள்ள ஒரு  நாணயப் பரிமாற்ற ஒப்பந்தமும், குறுகிய காலப் பணப் புழக்க அழுத்தங்களைத் தடுக்கவும், நிதிச் சமநிலையை ஏற்படுத்தவும் 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஆரம்பத் தொகையில் அவசரகால இருப்பு ஏற்பாட்டிற்கான (சிஆர்ஏ) ஒப்பந்தமும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேசில் மற்றும் இந்தியா இரு நாடுகளின் தலைவர்களான பொல்ஸனாரோவும், நரேந்திர மோடியும் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் என்பதால் பிரிக்ஸ் கொள்கைகளுக்கு ஒத்துழையாது பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே டாலர் ஆதிக்கத்தை குறைப்பதில் உறுதியாய் இருந்தது.

சீனா அமெரிக்காவிற்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்ததாலும், பெரும் முதலீடுகளை அமெரிக்காவில் கொண்டிருந்ததாலும், ஆரம்பத்தில் வெளிப்படையாக டாலரை எதிர்க்கவில்லை. அமெரிக்காவே சீனாவின் மீது பொருளாதாரப் போரை ஆரம்பித்த பிறகுதான் ரஷ்யாவுடன் இணைந்து சீனா டாலரை விலக்கும் நடவடிக்கைகளில் முனைப்பாகச் செயல்படுகிறது.

ரஷ்யாவும் சீனாவும் கடந்த பல ஆண்டுகளாக இருதரப்பு வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. சீனா-ரஷ்யா இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாடு 2015ஆம் ஆண்டில் 90%ஆக இருந்தது தற்போது 46%ஆகக் குறைந்துள்ளது.

சீனாவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் பயன்பாடு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஜூனில் மாஸ்கோவும் பெய்ஜிங்கும் டாலருக்குப் பதிலாக ரூபிள் மற்றும் ரென்மின்பியில் தங்களுக்கு இடையிலான சர்வதேசப் பரிவர்த்தனை செய்வதாக ஒப்பந்தம் மேற்கொண்டன.

2001இலேயே, சீனாவுக்கும் ரஷ்யக் கூட்டமைப்பிற்கும் இடையில் நல்ல அண்டை நாட்டு நட்புக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2010இல் ரஷ்ய நிதி நெருக்கடியின் போது சீனா  நிதியுதவி அளித்தது. 2015ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான நாற்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ரஷ்ய எரிவாயுவை 400 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வாங்கவும், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு ரஷ்யப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் சீனா உதவ முன்வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2018இல் ரஷ்யா வாங்க வேண்டிய ஆயுதங்களுக்கான 20% பரிவர்த்தனைகளை அமெரிக்கா தடுத்தது. அமெரிக்காவால் ரஷ்யாவின் சர்வதேச பரிவர்த்தனைகள் தடுக்கப்படுவதால் ஸ்விஃப்டு முறைக்கு மாறாக எஸ்.எஃப்.பி.எஸ் நிதிச் செய்திகளை அனுப்பும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் 18% பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. இவ்வாறு ரஷ்யாவும் சீனாவும் ஸ்விஃப்ட்டுக்கு இணையான எல்லை தாண்டிய வங்கிக் கட்டண முறைகளைப் பயன்படுத்துகின்றன.

நவம்பர் 2016இல் ரஷ்யா செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பங்குச் சந்தையில் உரால் கச்சா எண்ணெய் வருங்கால ஒப்பந்தங்களை ரூபிளில் அறிமுகம் செய்தது. அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளிலிருந்து விடுபட புதிய தொழில்நுட்பத் தீர்வுகளும் ஆலோசிக்கப்பட்டு பிரிக்ஸ் 2018 உச்சி மாநாட்டில்  பிரிக்ஸ்  நாடுகளுக்கான மின்ம(கிரிப்டோ) நாணயம் உருவாவதற்கான திட்டமும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய மத்திய வங்கி "கிரிப்டோரூபிள்" என்று அழைக்கப்படும் ஒரு தேசிய கிரிப்டோ நாணயத்தை உருவாக்கப் பரிசீலித்து வருகிறது. வெனிசுலா கிரிப்டோகரன்சியான "பெட்ரோ"வை அறிமுகப்படுத்த ரஷ்யா உதவியது. ஐரோப்பிய நாடுகள் இன்ஸ்டெக்ஸ் என்ற கிரிப்டோ நாணயத்தின் மூலம் ஈரானுடன் வர்த்தகம் செய்கிறது. சீன மத்திய வங்கி மின்ம நாணயத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தி அதை நாட்டின் பிற நிதி நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.

2020 மார்ச்சில் சீனா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிதியமைச்சர்களின் மாநாட்டில் இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள், பரிவர்த்தனைகள், கடன் பத்திரங்களை தேசிய நாணயங்களில் செய்வதற்கான ஒரு திட்டத்தை இறுதி செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்ப ஒப்புதல் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நிதி மோதல் வெடித்த பின், வர்த்தகத்தில் டாலரை விலக்குவதாக துருக்கி அறிவித்தது. ரஷ்யா துருக்கியை டாலர் எதிர்ப்பு முகாமில் சேர்க்க ஆதரவளித்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் துருக்கி, ஜமைக்கா, இந்தோனேசியா, அர்ஜெண்டினா மற்றும் எகிப்து போன்ற நாடுகளை டாலர் மேலாதிக்கத்திற்கு எதிராக பிரிக்ஸ் பிளஸில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) எட்டு உலக இருப்பு நாணயங்களை அங்கீகரிக்கிறது: அவை அமெரிக்க டாலர், யூரோ, சீன ரென்மின்பி (சீனாவுக்குள் யுவான் என்றழைக்கப்படுகிறது), ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்டு, ஆஸ்திரேலிய டாலர், கனடிய டாலர் மற்றும் சுவிஸ் பிராங்க். சீன நாணயம் ரென்மின்பி 2016இல் சர்வதேச இருப்பு நாணயமாக அங்கீகரிக்கப்பட்ட்து. ரஷ்யா தன் அந்நிய செலாவணி இருப்புக்களில் ரென்மின்பியின் பங்கை அதிகரித்து வருகிறது.

2019ஆம் ஆண்டின் முற்பகுதியில், ரஷ்யாவின் மத்திய வங்கி அதன் டாலர் பங்குகளைப் பாதிக்கும் மேலாக (101 பில்லியன் டாலர்) குறைத்துள்ளது. ரஷ்ய மத்திய வங்கி சீன ரென்மின்பியில் 44 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்த பின்  ரஷ்யாவின் அந்நிய செலாவணி இருப்புகளில் ரென்மின்பியின் பங்கு 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்ந்தது, உலகின் ரென்மின்பி இருப்புக்களில் கால்வாசியை ரஷ்யா வைத்துள்ளது.

ரென்மின்பியின் சர்வதேசப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களின் பரந்த வலையமைப்பை சீனா உருவாக்கி வருகிறது. தற்போது 1900க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் சீன யுவானைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளன. யுவான் பத்திரங்களிலான அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன. கோவிட்-19 தாக்கத்தால் சீனாவிலிருந்து முதலீடுகள் வெளியேறிய போதும் அந்நாடு ஒப்பீட்டளவில் பொருளாதார நிலைத் தன்மையுடன் உள்ளது.

2009 ஜூலை 10இல் ரஷ்ய அதிபர் மெத்வதெவ் லண்டனில் நடைபெற்ற ஜி-8 மா நாட்டில் டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான பேரவை 2010இல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அமெரிக்க டாலர் ஒரே இருப்பு நாணயமாக, உலகப் பணமாக இருக்கும் நிலையைக் கைவிட வேண்டும் என்றும், ஒரு புதிய இருப்பு நாணயத்தை உருவாக்க வேண்டும்.

ஆனால் அது ஒரு நாட்டினுடைய நாணயம் அல்லது பல நாடுகளுடைய நாணயங்களின் அடிப்படையில் அமையாமல் சர்வதேசப் பணப் புழக்கத்தை அனுமதித்து உலக அளவில் நிதிச் சமநிலையை ஏற்படுத்துமாறு அமைய வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஜி-20 நாடுகளுக்கான சந்திப்பிலும் இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

1997இல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா ஆகிய நாடுகள் நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடின. அதன் நிபந்தனைகளின் படி மேற்கொள்ளப்பட்ட அரசு சிக்கன நடவடிக்கைகள் அந்நாடுகளில் கூலிக் குறைப்பையும், வேலையின்மையையும் அதிகப்படுத்தி அந்நாட்டு மக்களை மேலும் வறுமைக்கு தள்ளின.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகள் அந்நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. நிதியுதவி பெறுவதற்கான மாற்று அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் விவாதிக்கப்பட்டது.

1997 செப்டம்பர் 20-25ல் ஹாங்காங்கில் நடந்த ஜி7-சர்வதேச பண நிதியத்தின் சந்திப்பில் போது ஜப்பானிய அரசு அப்போதைய மற்றும் எதிர்காலப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆசிய நாடுகளால் நிதியளிக்கப்பட்ட பிராந்திய வலையமைப்பை அமைப்பதற்கு ஒரு ஆசியப் பண நிதியம் உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவைக் கொண்டுவந்தது.

ஆனால் அமெரிக்காவின் கடும் எதிர்ப்பின் காரணமாக அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. எங்கே இதன் மூலம் ஜப்பானின் ஆதிக்கம் ஓங்கி விடுமோ என்று ஜப்பானை போட்டியாகக் கருதிய ஆஸ்திரேலியாவும், சீனாவும் அத்திட்டத்தை ஆதரிக்கவில்லை.

ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாகிகளுக்கான வருடாந்திர சந்திப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியனின் பத்து உறுப்பு நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா (ஆசியான் பிளஸ் மூன்று நாடுகள்) பிராந்தியத்தில் குறுகிய காலப் பணப்புழக்க சிக்கல்களை நிர்வகிப்பதற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்த 2000 மே 6  அன்று தாய்லாந்தின் சியாங்மாயில் ஆலோசனை நடத்தின.

அதன் விளைவாக ஆசியான் பிளஸ் மூன்று நாடுகளுக்கிடையே பலதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தங்களுக்கான வலையமைப்பை ஏற்படுத்த சியாங்மாய் முன்முயற்சி உருப்பெற்றது.

2009இல், உலகளாவிய நிதி நெருக்கடியால் ஆசியா மீண்டும் ஒரு முறை தாக்குற்ற  பின்னர், அவசர காலங்களில் அந்நிய செலாவணிப் பரிமாற்றத்திற்கான இருப்பை உருவாக்கி சியாங்மாய் முன்முயற்சி பன்முகப்படுத்தப்பட்டது (சிஎம்ஐஎம்). 2014இல், அதன் அந்நியச் செலவாணி இருப்புகளின் அளவு 240 பில்லியன் டாலராக இரட்டிப்பானது. சர்வதேச நாணய நிதியத்தின் "சாராத" பகுதி, (சர்வதேச நாணய நிதியத்தின் இணை நிதி மற்றும் நிபந்தனை இல்லாமல் உறுப்பினர்கள் பெறக் கூடிய அதிகபட்சத் தொகை) 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 நவீன தாராளமயத்தாலும், சர்வதேச நிதி நிறுவனங்களாலும் கடுமையாக சுரண்டப்பட்டு மீளாத் துயரில் உள்ள ஆப்பிரிக்காவுக்குப் பொருளாதார தற்சார்பே மீட்சி அளிக்கும். அங்கும் தேசிய நாணயங்களில் சர்வதேசப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டால் சுரண்டலின் கடுமை குறையும்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆப்பிரிக்க பண நிதியம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கத் தலைவர்கள் 2014இல் ஆப்பிரிக்கப் பண நிதியம் உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால் இன்னும் இத்திட்டம் கிடப்பில் உள்ளது. இது வரை இந்த ஒப்பந்தத்தில் பதினொன்று ஆப்பிரிக்க ஒன்றிய உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, ஆனால் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆப்பிரிக்க பண நிதியம் செயல்படுவதற்கு பதினைந்து உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுச் சட்டங்களை அங்கீகரித்து ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். ஆப்பிரிக்கப் பண நிதியம் செயல்பாட்டுக்கு வந்தால் உறுப்பு நாடுகளின் 22.64 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான மூலதனப் பங்களிப்புடன் அதற்கு இரண்டு மடங்குக்குச் சமமான கடன்களை வழங்க முடியும்.

உலக அளவில் நாடுகளிடையே நடைபெறும் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தங்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டாலரின் பயன்பாடு குறைந்து வருகிறது. டாலருக்கு பதிலாக அந்தந்தப் பிராந்தியத்தில் வலிமையான  நாணயங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்து வருகிறது.

டாலருக்கு மாற்று ஒற்றை நாணயம் என்றில்லாமல் ஐரோப்பியப் பகுதியில் யூரோ, ஆசியப் பகுதியில் ரென்மின்பி என பலமுனைப்புத் தன்மையுடைய ஒரு நாணய அமைப்பு தற்போது உருவாகி வருவது கண்கூடு.

(தொடரும்)

- சமந்தா

Pin It