governor raviமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை, நான்கு மாதங்களுக்கு மேல் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்துவிட்டு, ஆளுநரே பிறகு அதனைத் திருப்பி அனுப்பி விடுவதென்பது என்ன வகை ஜனநாயகம் என்பது நமக்குப் புரியவில்லை.

நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், அதனை ஏற்காமல் தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ்நாடு மக்களையும் அவமதிக்கும் ஒன்றிய அரசின் போக்கு, கடும் கண்டனத்திற்குரியதாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இப்போது நாம் விவாதிக்க வேண்டிய இரண்டு முதன்மையான வினாக்களைப் பற்றி பேச வேண்டியுள்ளது.

ஒன்று, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் எந்த ஒரு மாநிலத்திற்கும் தேவையா என்பது. இன்னொன்று, அப்படியே தேவை என்றாலும், அதனைத் தீர்மானிக்க வேண்டிய உரிமை யாரிடம் இருக்க வேண்டும் என்பது!

நீட் தேர்வு வேண்டாம் என்றால், உடனே, இவர்கள் எப்போதும் போட்டிக்குத் தயாராக இருப்பது இல்லை, தகுதியும், திறமையும் இல்லாமலேயே எல்லாப் பொறுப்புகளுக்கும் வந்துவிட வேண்டும் என்று கருதுகின்றனர் என்று அவதூறு பேசுகின்றனர். நீட் தேர்வு மட்டும்தான் தகுதி, திறமையை முடிவு செய்யும் என்றால், நம் பிள்ளைகள் 12ஆம் வகுப்பில் எழுதும் தேர்வுகள் எதையும் முடிவு செய்யாதா? அப்படியானால் அந்த 12 ஆண்டுகாலப் படிப்பும், இறுதியில் நடத்தப்படும் தேர்வுகளும் எதற்காக? எல்லாப் பள்ளிக்கூடங்களையும் மூடி விடலாமா? நேரடியாக நீட் தேர்வு மட்டும் எழுதித் தேர்வாகி விட்டால் போதும் என்று ஒன்றிய அரசு கருதுகிறதா?

படிப்பு என்பது படிப்படியான வளர்ச்சி நிலை. அப்படி வளர்ந்து, 12ஆம் வகுப்பில் எழுதும் தேர்வின் முடிவுகளே மாணவர்களின் கல்வி நிலையைக் காட்டும். எனவே நீட் மட்டுமன்று, எல்லாவிதமான நுழைவுத் தேர்வும், எந்த மாநிலத்திலும் தேவையில்லை என்பதே சரியானது!

அப்படியே ஒரு நுழைவுத் தேர்வு கண்டிப்பான தேவை என்று கருதினால், அதனை அந்தந்த மாநிலங்களே நடத்திக் கொள்ளட்டும். இதற்கு எதற்காக ஒரு ஒன்றிய அரசு? மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களைத் தீர்ப்பது, மாசு கட்டுப்பாட்டினை நாடு முழுவதும் ஒழுங்கு செய்வது, வெளிநாடுகளுடனான கொள்கை முடிவுகளை வகுப்பது போன்றவைகளை மட்டும் ஒன்றிய அரசு தன்னிடம் வைத்துக் கொள்வதுதான் சரியானது. பள்ளிக்கூடம் நடத்துவது, தேர்வு வைப்பது எல்லாம் மாநிலங்களின் உரிமைகளும், கடமைகளும் ஆகும்!

இவை எல்லாவற்றிற்குமான ஒரே தீர்வு – கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதாக மட்டுமே இருக்கும்.

- சுப.வீரபாண்டியன்

Pin It