ஒரு நாட்டின் வருவாய் பல்வேறு தரப்பினருக்கு பங்கீடு செய்யப்படுகிறது. அத்தகைய வருவாயை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம், அவை (அ) உழைப்பின் வருவாய் (ஆ)மூலதனம், தொழில்முனைவு உரிமையிலிருந்து பெறும் வருவாய். உழைப்பின் வருவாயை கூலியாக தொழிலாளர்கள் பெறுகிறார்கள். தொழில் முனைவு உரிமையிலிருந்து பெறும் வருவாயை லாபமாக முதலாளிகள் பெறுகிறார்கள். இந்த வருவாய் நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது அல்லது சேமிக்கப்படுகிறது. சேமிப்பிலிருந்து முதலீடுகளுக்கு நிதியளிக்கப்படுகிறது. ஒரு பொருளாதாரத்தின் பல்வேறு பரிவர்த்தனையாளர்களின் இறுதிச் செலவுகளின் கூட்டுத்தொகையிலிருந்தும் தேசிய வருவாயையும், மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பையும் கணக்கிடலாம்.
1. ஒரு நாட்டின் செலவுகள் பல்வேறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. தனியார் இறுதி நுகர்வு செலவீடுகள் (Ch - household consumption) எனப்படுகிறது.
2. அரசுத் துறையில் செய்யப்படும் இறுதி நுகர்வு செலவு (Cg- government consumption) எனப்படுகிறது.
3. மொத்த உள்நாட்டு நிலை மூலதன உருவாக்கம் - நிறுவனங்கள் மூலதன பொருட்களை (NDKF) வாங்குவதற்கு செய்யும் செலவு.
4. சரக்கிருப்புகளில் ஏற்படும் மாற்றம் (K)
5. நிகர ஏற்றுமதிகளுக்கு (NE) செய்யப்படும் செலவு.
செலவீட்டு அடிப்படையில் மொத்த உள் நாட்டு பொருளாக்க மதிப்பின் பல்வேறு கூறுகளாவன.
- தனியார் இறுதி நுகர்வு செலவு (Ch)
தனியார் இறுதி நுகர்வு என்பது உள் நாட்டு மக்கள், வெளி நாட்டு வாழ் குடிமக்களின் நடப்புக்கணக்கிலிருந்து செய்யப்படும் செலவீடாக வரையறுக்கப்படுகிறது.இங்கு செலவீடு எனப்படுவது நீடித்த நுகர்வுபொருள் (நிலம் தவிர), உடனடி நுகர்வுப் பொருள்களை பெறுவதற்காக செய்யப்படுவதைக் குறிப்பிடுகிறது. இதில் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களும் அடங்கும். உரிமையாளர்-ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கான வாடகை, சொந்தக் கணக்கு உற்பத்தியின் நுகர்வு, பணம் அல்லாத கொடுப்பனவுகள், பணியாளர்களுக்கான உணவு, தங்குமிடம், ஆடைக்கான செலவுகளும் இதில் அடங்கும்.
தனியார் இறுதி செலவீடுகளை மதிப்பிடுவதற்கு இரண்டு வகையான தரவுகள் தேவை:
(அ) சந்தையில் விற்பனையின் மொத்த அளவு, மற்றும் (ஆ) பொருட்கள், சேவைகளின் சில்லறை விலைகள்.
பொருட்கள்-சேவைகளின் மொத்த அளவை அவற்றின் சில்லறை விலைகளால் பெருக்கவேண்டும். சொந்த நுகர்வுக்கான உற்பத்தி என்பதும் உற்பத்தி, வருவாயின் ஒரு பகுதியாக உள்ளது என்பதால் அதுவும் இறுதி நுகர்வு செலவின் ஒரு பகுதியாகவும் உள்ளது. சொந்த நுகர்வுக்கான பொருட்களின் உற்பத்தி அளவை அருகிலுள்ள அவற்றின் சந்தை விலைகளால் பெருக்க வேண்டும். உரிமையாளரால் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளின் கணக்கிடப்பட்ட வாடகையும் உற்பத்தி, வருவாயின் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தனியார் இறுதி நுகர்வு செலவுகள் சேர்க்கப்படுகிறது.
அரசின் இறுதி நுகர்வு செலவு (Gh):
அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு என்பது அதன் நடப்புக் கணக்கு செலவீடாக வரையறுக்கப்படுகிறது. இதன் மதிப்பு அரசாங்க நிர்வாக சேவைகளை வழங்குவதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவுகளிலிருந்து அவற்றின் விற்பனையைக் கழித்து பெறப்படும் அளவுக்கு சமம்.
அரசின் மத்திய, மாநில, உள்ளூர் அளவிலான பொது அமைப்புகள், அனைத்து துறைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், அரசு முகவர்களாக செயல்படும் அமைப்புகள், அவற்றின் செலவீடுகள் நிதிநிலையறிக்கை அல்லது நிதிநிலையறிக்கைக்கு வெளியிலான நிதிகளின் மூலம் அளிக்கப்படுகிறது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இறுதி நுகர்வுச் செலவின் மதிப்பானது பொதுமக்களின் கூட்டுப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சேவைகளின் (பொது சுகாதாரம், கலாச்சார சேவைகள், பாதுகாப்பு, சட்டம் போன்றவை) மொத்த மதிப்புக்கு சமம். அவற்றின் மதிப்பு அடிப்படைவிலையில் கணக்கிடப்படுகின்றன. ஏனென்றால் இச்சேவைகள் பொதுவாக அரசால் விற்கப்படுவதில்லை.
இந்த சேவைகளின் விலையானது (அ) இடைநிலை நுகர்வு, (b) ஊழியர் இழப்பீடு (ஊதியம், சம்பளம் ரொக்கம் மற்றும் பொருளில், (c) வெளிநாடுகளில் அரசின் தூதரகங்கள், துணைத் தூதரகங்களுக்காக நேரடி கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு இவை அனைத்தின் கூட்டுத்தொகையிலிருந்து (d) அரசால் விற்பனை செய்யப்படும் பொருட்கள், சேவைகளை கழிக்கவேண்டும். உதாரணமாக அரசு மருத்துவமனைகளில் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள தனிநபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் குறைந்தபட்ச பணம், மானிய விலையில் அளிக்கப்படும் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
மொத்த உள்நாட்டு நிலை மூலதன உருவாக்கம் (GFCF- gross fixed capital formation):
மொத்த உள்நாட்டு நிலையான மூலதன உருவாக்கம் என்பது உள்நாட்டுப் பகுதியில் நிகழும் மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தைக் குறிப்பிடுகிறது. இவை கட்டுமானம், இயந்திரம் மற்றும் உபகரணங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. தொழிலகங்கள், அரசு உற்பத்தி அமைப்புகள், இலாப நோக்கற்ற தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலையான சொத்துக்களின் முதலீட்டுச் செலவுகள் இதில் அடங்கும். இரண்டாம் பயன்பாட்டிற்கான விற்பனைப்பொருட்கள், விற்பனை செய்யப்படும் பழுதடைந்த பொருட்களை இதிலிருந்துக் கழித்துவிடவேண்டும். குடிமக்களின் குடியிருப்புக் கட்டுமானங்களுக்கான முதலீட்டு செலவுகளும் இதில் அடங்கும்.இராணுவ சேவைக்கான முதலீடுகள் இதில் சேர்க்கப்படுவதில்லை. மொத்த நிலை மூலதன உருவாக்கத்தில் ஓராண்டில் நுகர்வு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்பும் (தேய்மானம்) அடங்கும். இந்த நுகர்வு மூலதனத்தை/தேய்மானத்தைக் கழிப்பதன் மூலம் நிகர நிலை மூலதன உருவாக்கம் பெறப்படுகிறது.
சரக்கிருப்புகளில் மாற்றம் (NDKF):
சரக்கிறுப்புகளில் ஏற்படும் மாற்றம் என்பது ஆண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் உள்ள சரக்கிறுப்புகளின் சந்தை மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு. ஆண்டின் ஆரம்பத்தில் இருப்பதை விட, ஆண்டின் இறுதியில் இவற்றின் மதிப்பு அதிகமாக இருந்தால் சரக்கிருப்புகளில் மாற்றத்தின் மதிப்பு நேர்நிறையாகவும், குறைவாக இருந்தால் எதிர்மறையாகவும் அமையும்.
உற்பத்தி நிறுவனங்களின் இருப்பில் உள்ள பொருட்கள், தயாரிப்பில் உள்ள பொருட்கள் (கட்டுமானத் திட்டங்களைத் தவிர) தயாரிக்கப்பட்ட பொருட்களும் இதில் உள்ளடக்கம். வெட்டப்படாத மரங்கள், பயிர்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை, ஆனால் இறைச்சிக்கான கால்நடைகள், மரக்கட்டைகள், அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பொருட்கள், சேவைகளின் நிகர ஏற்றுமதி (NE-Net Exports):
சரக்குகள், சேவைகளின் நிகர ஏற்றுமதி என்பது ஒரு வருடத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் மதிப்புக்கும், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். ஏற்றுமதி மதிப்பு இறக்குமதி மதிப்பை விட அதிகமாக இருக்கும் போது நிகர ஏற்றுமதி நேர்நிறையாக இருக்கும். இறக்குமதி மதிப்பு ஏற்றுமதி மதிப்பை விட அதிகமாக இருக்கும் போது நிகர ஏற்றுமதி எதிர்மறையாக இருக்கும்.
செலவு முறை மூலம் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு (சந்தை விலை) , தனியார் இறுதி நுகர்வு செலவு, அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு, மற்றும் மொத்த நிலை மூலதன உருவாக்கம், சரக்கிருப்புகளிலான மாற்றம், பொருட்கள், சேவைகளின் நிகர ஏற்றுமதி இவை அனைத்தின் சந்தை விலையிலான கூட்டுத்தொகைக்குச் சமம்.
மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு = தனியார் செலவு + அரசு செலவு + நிகர மூலதனப் பொருட்களுக்கான செலவு + சரக்கிறுப்புகளில் மாற்றம் + நிகர ஏற்றுமதி செலவு
- சமந்தா