பாஜக அரசு இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக்குவோம் என சவால் விட்டது. அதை நிறைவேற்றவில்லை என்பது வேறு விசயம். பெரும்பாலான நாடுகளில் ‘ஜிடிபி’யை அதிகரிப்பதே பொருளாதார வளர்ச்சியின் இலக்காகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும், மக்களின் வாழ்க்கைத்தரமும் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அவற்றை ‘ஜிடிபி’-மொத்த உள் நாட்டுப் பொருளாக்க மதிப்பு எனும் போதாக்குறையான ஒற்றை அளவுகோலைக் கொண்டு மட்டுமே அளவிட முடியாது. ‘ஜிடிபி’ மிகவும் மிகைப்படுத்தப்படும் ஒரு பொருளாதார அளவுகோல். ‘ஜிடிபி’யின் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சியாகவும், அதுவே சமூக முன்னேற்றத்தையும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் ஏற்படுத்தும் என்பது போல் ஒரு முதன்மையான முழுமுதலான குறியீடாகக் கருதப்படுகிறது. ஜிடிபியை அதிகரிப்பதற்கு அளிக்கப்படும் முன்னுரிமை பொருளாதார சமமின்மையைக் குறைப்பதற்கு கொடுக்கப்படுவதில்லை. நாட்டின் ‘ஜிடிபி’க்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும், திட்டங்களையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாக பாதிக்கிறது.
‘ஜிடிபி’ என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவை மட்டுமே குறிப்பிடுகிறது. அந்த ‘ஜிடிபி’யில் எத்தனை விழுக்காடு உழைக்கும் மக்களை சென்றடைந்தது என்பதை ‘ஜிடிபி’ வளர்ச்சி விகிதம் தெரிவிப்பதில்லை. ‘ஜிடிபி’ வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியை பிரதிபலிப்பதில்லை.
முதலாளித்துவ உற்பத்திமுறையால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், வறுமையையும் நேர்த்தியாக மறைக்கவே இத்தகையப் போக்கு உதவுகிறது. நாட்டில் வேலையின்மை அதிகரிப்பதையோ, தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதியம் குறைவதையோ ‘ஜிடிபி’ வெளிக்காட்டுவதில்லை.ஒரு நாட்டின் ‘ஜிடிபி’ மதிப்பு, வளர்ச்சி அதிகமாக இருக்கலாம், ஆனால் ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் பசி, பட்டினி இல்லாமல் மூன்று வேலை உணவு கிடைக்கிறதா, அதற்கான வருவாய் கிடைக்கிறதா, வருவாய் தரும் வேலை கிடைக்கிறதா என்பதை ‘ஜிடிபி’ மதிப்பை மட்டுமே வைத்து கூற முடியாது.
ஒரு நாட்டின் ‘ஜிடிபி’ மதிப்பு அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளின் அளவையே குறிப்பிடுகிறது. ஆனால் ஆக்கப்பூர்வமான பொருட்கள் சேவைகள் உருவாக்கப்பட்டதா, இல்லை அழிவுபூர்வமான பொருட்கள் உருவாக்கப்பட்டதா என்பதை ‘ஜிடிபி’ வளர்ச்சியால் வேறுபடுத்திக் காட்ட இயலாது, ஒரு நாட்டில் அதிகமாக போர்த் தளவாடங்களே உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும் அது வளர்ச்சியாகத் தான் மதிப்பிடப்படும். ஒரு நாட்டின் காடுகள், கனிம வளங்கள், இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தி அழித்தாலும் அதுவும் ‘ஜிடிபி’ வளர்ச்சியாகத் தான் மதிப்பிடப்படும். ஆகவே ‘ஜிடிபி’ வளர்ச்சி என்பது நீடித்த/வளங்குன்றா வளர்ச்சியைக் குறிப்பிடும் அளவுகோல் அல்ல.
ஒரு நாட்டின் தேசிய வருவாய் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதையும் ‘ஜிடிபி’ அளவுகோல் மூலம் தெரிந்து கொள்ளமுடியாது. ‘அ’, ‘உ’ என இரு நாடுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ‘அ’ நாட்டில் முதல் 10 விழுக்காட்டினர் அந்நாட்டின் 90 விழுக்காடு வருவாயை பெறுகின்றனர், மீதமுள்ள 90 விழுக்காட்டினர் வெறும் 10 விழுக்காடு வருவாயையே பெறுகின்றனர். ‘உ’ நாட்டில் முதல் 30 விழுக்காட்டினர் 40 விழுக்காடு வருவாயை பெறுகின்றனர், மீதமுள்ள 70 விழுக்காட்டினர் 60 விழுக்காடு வருவாயை பெறுகின்றனர். ஆனபோதும் இரு நாடுகளும் ஒரே ‘ஜிடிபி’ மதிப்பையேக் கொண்டுள்ளன.’அ’ நாட்டுடன் ஒப்பிடும் போது ‘உ’ நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைவாக உள்ளது. ஆனால் இந்த வேறுபாட்டை ‘ஜிடிபி’ அளவுகோலால் வெளிக்காட்ட முடியாது.
ஒரு நாட்டின் நுகர்வு வருவாயிலிருந்து செய்யப்பட்டதா இல்லை கடன் அட்டையிலிருந்து செய்யப்பட்டதா என்பதையும் ‘ஜிடிபி’யால் வேறுபடுத்திக் காட்டமுடியாது.
சந்தையில் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை மட்டுமே ‘ஜிடிபி’ மதிப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், காலநிலை மாற்றத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை ‘ஜிடிபி’ மதிப்பீட்டில் புறக்கணிக்கப்படுகிறது.
‘ஜிடிபி’ மதிப்பில் ஒரு நாட்டின் நிலை மூலதன நுகர்வு/தேய்மான மதிப்பு நீக்கப்படாமல் இருப்பதால், அதிக தேய்மான மதிப்பைக் கொண்ட பொருளாதாரங்களின் அளவு மிகைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
பண்ட மாற்றப் பரிவர்த்தனைகள் ‘முழுவதும் ‘ஜிடிபி’ கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை.பதிவு செய்யப்படாத தொழிலகங்களைக் கொண்ட அமைப்புசாராத் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் முறையாக அளவிடப்பட்டு ‘ஜிடிபி’ கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. வீடுகளில் நடைபெறும் உற்பத்தி செயல்பாடுகள் ‘ஜிடிபி’ கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. குறிப்பாக பெரும்பாலான பெண்களின் பொருளாதார நடவடிக்கைகள் மதிப்பிடப்பட்டி ‘ஜிடிபி’ கணக்கீட்டில் சேர்க்கப்படுவதில்லை. ‘பெண்களின் வேலை’ எனக் கருதப்படும் உணவு சமைத்தல், வீட்டுப் பராமரிப்பு வேலைகள், குழந்தைகள், முதியோர்களை பராமரிக்கும் பணிகள் போன்ற ஊதியமற்ற வேலைகள், தன்னார்வப் பணிகளின் மதிப்பு ‘ஜிடிபி’யில் சேர்க்கப்படுவதில்லை.
கள்ளச் சந்தை நடவடிக்கைகள், சட்ட விரோதமான பரிவர்த்தனைகளும் ‘ஜிடிபி’ கணக்கீட்டில் வருவதில்லை.
‘ஜிடிபி’-க்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பொருளாதார சமமின்மையை அதிகரித்து சமூக நீதியை புறக்கணிப்பதற்கும், ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தை என்றென்றும் நிலை நிறுத்துவதற்குமே உதவுகிறது.
- சமந்தா