காலனியம்

‘காலனியாதிக்கம்’ மற்றும் அதன் தாக்கம் பற்றிய ஆய்வு, காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய சமுதாயங்களின் வளர்ச்சிக்காகப் பின்பற்றப்பட்ட மூலாதார உத்திகள், கொள்கைகள் என்பனவற்றின் தேர்வுடன் நெருங்கிய தொடர்பும் உறவும் கொண்ட தாகும். ‘காலனியம்’ என்பதற்கு, காலனியச் சமுதாயங்களின் வளர்ச்சியின்மை என்பது, அவை காலனியாவதற்கு முந்தைய காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததையே புலப்படுத்துகின்றது.

காலனியாதிக்கம் என்பது நவீனமயமாக்கலுக்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. காலனிய சமுதாயங்கள் இடைநிலையிலுள்ள சமுதாயங்கள் என்னும் கருத்தாக்கங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ‘காலனியம்’ என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன்மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறை யாகும். காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்று கின்றது. ஒரு புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி” (பிபன் சந்திரா, ‘காலனியம்’, த.அசோகன் முத்துசாமி (மொ.பெ.ஆ.), பாரதி புத்தகாலயம், சென்னை, 2012, பக்.4-5) என பிபன் சந்திரா விளக்கம் தந்துள்ளார்.

காலனியாதிக்கத்தின் கீழ் இயங்கும் காலனிய நாடுகள் அடிப்படையான மாற்றம் அல்லது நவீன மயமாக்கலுக்கு ஆட்பட்டன. ஆயினும், இது ஏகாதி பத்திய நாடுகளில் சமுதாயங்களின் அசல் பிரதிகளாக மாற்றப்படவில்லை. பொதுவாக, உற்பத்திச் சக்திகள் இடை விடாமல் முழுமையாக மாற்றி அமைக்கப்படு வதற்கு இட்டுச் செல்லும்; வளர்ச்சிப் போக்கிற்கு உட்படுத்துவதற்கு மாறாக, காலனிகள் வளர்ச்சி யின்மையையே சந்தித்தன. காலனிகள் நவீனமய மாயின. ஆயினும், அது காலனியாதிக்க நாடுகளில் நிகழ்ந்தது போன்ற முதலாளித்துவ நவீனமயம் அன்று. அவற்றின் எதிர்பிம்பமாக காலனிகள் உருவாக்கப்பட்டன. அதாவது, புதிதாக விடுதலை பெற்ற ஒரு காலனிநாடு, காலனியத்திற்கு முந்தைய நிலைமையிலிருந்து தன்னுடைய வளர்ச்சிப் போக்கைத் தொடங்கவில்லை. அது காலனியாதிக்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைமைகளிலிருந்தே தன்னுடைய வளர்ச்சியைத் தொடங்கியது என்பதே ‘காலனியம்’ என்பதன் பொருளாகும். காலனி யத்தின் கூறுகள் வருமாறு:

* உலக முதலாளித்துவத்திற்குக் கீழ்ப்படிந்த, அதனிடம் உதவியை எதிர்பார்க்கும் நிலையிலுள்ள காலனிய நாடுகள் முற்றிலுமாகச் சிக்கலான முறையில் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

* காலனிக்கும் காலனியாதிக்க நாடுகளுக்கும் பரிவர்த்தனைகளும் உள்நாட்டுப் பொருளாதாரமும் வேறுவேறு எனப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு பிரிக்கப்பட்ட வேறு வேறு பகுதிகள் உலகச் சந்தையின் வாயிலாகவும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தினாலும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

* காலனியாதிக்க நாடுகள் உயர்தொழில் நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம், உயர் மூலதனம் ஆகியனவற்றால் மிகுதியாகத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. காலனி நாடுகளில் இவை மறுக்கப்பட்டு குறைந்த ஊதியம் மற்றும் கடின உழைப்பில் மிகுதியாகத் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* காலனியத்தின் உபரி உற்பத்தியையும், இலாபத்தையும் காலனியாதிக்க நாடுகள் தன்வயப்படுத்திக் கொள்கின்றன.

பின்னைக் காலனியம்

பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் போன்றே ‘பின்னைக் காலனியம்’ என்னும் கலைச் சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகின்றது. அமைப் பியலை மறுத்துப் பின்னை அமைப்பியலும், நவீனத் துவத்தை மறுத்துப் பின்னை நவீனத்துவமும் தோன்றின. இந்த அடிப்படையில் ‘காலனித்துவம்’ என்ற நிலைப்பாட்டினை மறுத்து அதற்கு எதிராகத் தோன்றியதே பின்னைக் காலனித்துவம் ஆகும். பின்னைக் காலனித்துவம், அடிப்படையில் ஒரு படைப்பாக்க முறையாகவே கொள்ளப்படுகின்றது. பின்னைக் காலனித்துவ இலக்கியம் (Post - Colonial(Post - ColonialLiterature) என்ற சொல்வழக்கு இன்று புத்தாக்கம் பெற்றுள்ளது. பின்னைக் காலனித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றின் விளைவாக ஏற்பட்ட ஒரு சிந்தனை வடிவமாகவும், மனப் போக்காகவும் இலக்கிய உலகில் கொள்ளப்படு கின்றது. இது தன்னைச் சார்ந்த ஆய்வு முறையையும் திறனாய்வு முறையையும் முன்வைக்கின்றது.

பின்னைக் காலனியம் - தொடக்கமும் பின்புலமும்

ஒருநாடு மற்றொரு நாட்டை, அதனுடைய சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாடுகளைத் தன்னுடைய ஆட்சியதிகாரத்தின் கீழ்க்கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தும்போதே அதனைக் ‘காலனித் துவம்’ எனக் குறிப்பிடுகின்றனர். இது பழங்கால இந்திய வரலாற்றைப் பொருத்தவரையில் ஆரியர்களின் குடியேற்றத்தில் தொடங்குகின்றது. அவர் களுடைய அதிகாரத்தின் கீழ் பழங்குடியினராகிய திராவிட இனத்தவரின் மேலாண்மை ஒடுக்கப்பட்டது. ஆயினும் பொதுவாக இந்த நவீன காலத்தில் காலனித்துவ ஆதிக்கம் என்பது மூன்று, நான்கு நூற்றாண்டு அளவிலேயே நிலவியுள்ளது. ஐரோப்பியர் களின் பொருள்தேடும் எழுச்சியோடும், அறிவியல் தொழிற்புரட்சியோடும் பல்வேறு நாடுகளின் அரசியல் - புவியியல் வரலாற்றை வீழ்த்தி மாற்றி அமைத்ததோடு இது தொடங்குகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு திசைகளில் மேலைநாட்டவரின் குடியேற்றங்களும் ஆதிக்கமும் தொடங்குகின்றன. போர்ச்சுகல், டச்சு, பிரிட்டன், பிரான்சு முதலிய ஐரோப்பிய நாட்ட வர்கள் தங்களுடைய எல்லைகளைத் தாண்டிப் புதிய ஆயுதங்களோடும் உற்பத்திக் கருவிகளோடும் நோக்கம் மற்றும் சிந்தனைகளோடும் பல்வேறு நாடுகளில் அடியெடுத்து வைத்தனர். பிறகு அந்த நாடுகளைக் கைப்பற்றினர். பதினேழாம் நூற்றாண்டில் இவ்வாறு ஆங்கிலேய, டச்சு, பிரான்சுப் பேரரசுகள் தோன்றின. இவற்றுள் ஆங்கிலேயரின் ஆதிக்கமே மிகுதி. இந்தியா, மலேசியா, இலங்கை, தென்னாப் பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிஜி முதலான நாற்பத் தேழு நாடுகள் 1914இல் ஆங்கிலேயரின் காலனி நாடுகள் ஆயின. பிரான்சு இருபது நாடுகளைக் கைப்பற்றியது. இவ்வாறு அடிமைப்பட்டுக் கிடந்த இந்த நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களினால் அரசியல் விடு தலையைப் பெற்றன. ஆயினும், காலனிய ஆதிக்க வடிவங்களும் அதன் தடயங்களும் அந்நாடுகளை விட்டுச் செல்லவில்லை; காலனியாதிக்கத்திற்குப் பின் நவீனக் காலனியாதிக்கம் தோன்றின.

இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகவே உலகத்தின் முக்கால் பகுதி நாடுகள் நேரடியாகவும், ஓரளவுக்கு முழுமையாகவும் காலனித்துவம் மற்றும் எதேச்சதி காரத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் விடுதலை பெற்றும் அந்நாடுகள் அதன் பின்விளைவுகளிலிருந்து மீளவில்லை. காலனித் துவத்தைத் தொடர்ந்து நவீனக் காலனித்துவம் வந்ததால் முன்னைய காலனிய நாடுகளின் மொழி, இலக்கியம், அரசியல், சமூக விழுமியங்கள்,

கல்விக் கொள்கைகள், தேசியம், பண்பாடு குறித்த கருத்தமைவுகள் ஆகியவற்றில் ஐரோப்பிய மாதிரி வடிவங்கள் போற்றப்பட்டன (தி.சு.நடராசன், திறனாய்வுக்கலை கொள்கைகளும் அணுகுமுறை களும், ப.243). உணர்வு மற்றும் செயல்பாட்டு நிலைகளில் ‘சுயங்கள்’ தாழ்த்தப்பட்டன. மரபுகள் ஒடுக்கப்பட்டன. இந்தச் சூழல்களின் எதிர்வினை களாகவே இவற்றைத் தவிர்ப்பதும், இவற்றிலிருந்து மீண்டு வருவதும் காலத்தின் தேவையாயிற்று. இதுவே பின்னைக் காலனித்துவத்தின் தேவை யாகவும் நோக்கமாகவும் அமைந்தது. ஐரோப்பியச் சிந்தனை வடிவங்களைத் தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் தனக்கானதும் சுயமானதும் ஆன கருத்தியல்களையும் செயல்பாடுகளையும் முன் வைப்பது, அவற்றை மறுசீரமைப்பு செய்வது, இவற்றில் பின்னைக் காலனித்துவம் ஆர்வம் காட்டுகின்றது. தத்தம் நாட்டுச் சூழலமைவுகள் மற்றும் மரபுகளோடு ஏற்கெனவே கலந்து கிடக்கின்ற உண்மைகளைப் புதிய எதார்த்தமாகப் புனரமைப் பதே பின்னைக் காலனித்துவ இலக்கியத்தின் முதன்மைச் செயல்பாடாகும். மறுதலிப்பதும் மாற்றுத் தேடுவதுமே பின்னைக் காலனித்துவத்தின் நோக்கமாகும்.

பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய்வு

ஐரோப்பிய காலனித்துவக் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிரான சிந்தனைகளை முன் வைப்பதே பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய்வுப் போக்காகும். காலனித்துவக் கருத்தாக்கங்களை விவாதித்து மறுதலிப்பதே பின்னைக் காலனித்துவத் திறனாய்வு ஆகும். இலக்கியப் படைப்பு நூல்களின் வடிவமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களும் புத்தாக்கங்களும் உள்ளடக்கப் பொருள்களும் மேலைநாடுகளிலிருந்து இறக்குமதி யானவை என்பதை ஏற்காமல் - இவை நவீன காலனித்துவச் சிந்தனைப்போக்கு என்பதை மனத்தில் கொண்டு, மண்ணின் மரபுகளிலிருந்து தோன்றக்கூடிய படைப்பாக்கப் போக்குகளை இனங்கண்டு முன்னிலைப்படுத்துவதே பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய்வின் உயிர்ப்பான நோக்கமாகும். தமிழ் இலக்கியப் பின்புலத்தில் சொந்த இலக்கியங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப, மேலைநாட்டு இலக்கியங்கள் மற்றும் இலக்கியங்களின் ஒப்புமை மற்றும் ஏற்புடைமை களை நாடுவது, பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. இவற்றைத் தவிர்க்க வேண்டும்; தமிழ் மரபைத் தேடிப் புதுப்பிக்க வேண்டும். இதுவே பின்னைக் காலனித்துவம் வலியுறுத்தும் உடனடித் தேவையாகும்.

தமிழில் ‘அழகியல்’ என்னும் திறனாய்வுக் கோட்பாட்டை, தமிழ் மரபிலிருந்தே காட்டுவதற்குச் சரியான சான்றுகளும் கருத்துக்களும் உள்ளன. அதன் வேர்கள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் உரையாசிரியர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் தி.சு.நடராசன் ‘தமிழ் அழகியல்’ (2013) என்னும் நூலினை எழுதியுள்ளார். தமிழ் அழகியல் கோட்பாட்டை மெய்ப்பிக்க ஆங்கிலம், இலத்தீன் இலக்கியங்களைத் தேடவேண்டிய அவசிய மில்லை. தமிழ் அழகியலுக்கும் மேலைநாட்டின் அழகியல் கோட்பாட்டிற்கும் பெருத்த அளவில் வேறுபாடு உள்ளது.

இந்திய இலக்கியப் பரப்பில் குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் பின்னைக் காலனித்துவ இலக்கியத் திற்கு மகாகவி பாரதியாரின் கவிதைகளும் கட்டுரை களும் கதை வடிவங்களுமே முதன்மையான மாதிரி வடிவங்கள் ஆகும். அவரது எழுத்துக்கள் பின்னைக் காலனித்துவ நிலைப்பாடுகளை அப்பட்டமாகக் காட்டுகின்றன. முதலிலேயே இந்திய நாட்டின் விடுதலை உணர்வுடனேயே கவிஞராக வந்த அவர்,

‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் - ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்’

என்று உலகத்திற்கு அறிவிப்புச் செய்கின்றார். இவ்வாறு பாரத சமுதாயத்திற்கு வாழ்த்துச் சொல்லும் பாரதியார் தொடக்கத்திலிருந்து காலனித்துவ மனப்போக்கை மறுதலிக்கவும், எதிர்க்கவும், தவிர்க்கவும் செய்துள்ளார். அத்துடன் அவர் சரியான மாற்றுக்களையும் முன்வைத்துள்ளார். இவ்வாறு பாரதியாரிடம் பின்னைக் காலனித்துவ எதிர்ப்பு மனப்போக்கும் அணுகுமுறையும் நிறைந்து காணப் பட்டதை ம.பொ.சிவஞானம் ‘பாரதியும் ஆங்கிலமும்’ (இன்ப நிலையம், சென்னை, 1961) என்னும் நூலில் விளக்கிக் கூறியுள்ளார். ஆயினும், பாரதியாரை ‘மகாகவி’ (The Great Poet) எனக் கருதமுடியாது என வாதிட்ட கல்கியும், ராஜாஜியும் நவீன காலனித்துவ மனப்போக்குடையவர்களாகவே திகழ்ந்துள்ளனர். மண்ணின் மரபுடன் உயிர்த்து நிற்கும் நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புற இசைக் கூறுகள், நாட்டுப் புறக் கதைக்கூறுகள், தொன்மங்கள் ஆகியனவற்றைப் பொருத்தமற்றவை எனக் காலனித்துவ கருத்தாடல்கள் நிராகரித்து, அவ்விடத்தில் தத்தம் கொள்கைகளைப் புதுமையானதாக இறக்குமதி செய்தது.

புதுக்கவிதை வரலாற்றின் தொடக்கத்தில் காலனித்துவ மனநிலைகளும் உத்திகளும் மேலாதிக்கம் செலுத்தின. பின்னைக் காலனித்துவம் இப்போக்கினை மறுதலித்தது. அது அவ்விடத்தில் தன்னுடைய கலைக் கொள்கையை மீண்டும் கொண்டு வந்ததை பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய் வாளராகிய பிரான்ட்ஸ் ஃபெனோன் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழில் கதைகளைச் சொல்லும் முறையில் இன்றும் நவீனக் காலனித்துவமே ஆதிக்கம் செலுத்துகின்றது. சாருநிவேதிதா, கோணங்கி, தமிழவன் ஆகியோரின் கதைகள் நவீன காலனித்துவப் பின்னணி கொண்டவையே.

தமிழ் மரபில் சாதியமும் ஆணாதிக்கமும்

சாதியக் கட்டமைப்பிற்கும் ஆணாதிக்க மனப் பான்மைக்கும் அவற்றின் கருத்தியல் தனத்திற்கும் எதிர்ப்பைக் காட்டும் பெரும்பாலான தலித் இலக்கியங்களிலும், பெண்ணியப் படைப்புக் களிலும் பின்னைக் காலனித்துவ மனப்போக்கே காணப்படுகின்றது. இந்த வகையான மனநிலைகளும், எதிர்வினைகளும், கலகக் குரல்களும் ‘மூன்றாம் உலக நாடுகள்’ எனப்படும் முன்னாள் காலனிய நாடுகளில் சர்வ சாதாரணமாகக் காணப் படுகின்றன. எட்வர்டுசைத்தின் ‘கீழைத் தேசியம்’ (Orientalism) என்ற கொள்கைக்கும், காயத்ரி ஸ்பைவக் அடித்தளமக்கள் ஆய்விற்கும் வித்திட்ட பின்னைக் காலனித்துவ முன்னோடிகள் ஆவர். ‘பின்னை நவீனத்துவம்’ என்னும் இயக்க மையம், விளிம்புநிலை என்னும் இருநிலை எதிர்வுகளைக் கூறி, இரண்டிற்கும் இடையிலான மோதலையும் விளக்குகின்றது. இவ்வகையில் காலனித்துவக் கருத்தாடல்களை மையம் என்றால், முன்னைக் காலனிய நாடுகளின் நிகழ்வுகளையும் கருத்தாக்கங் களையும் விளிம்பு நிலையாகக் கொண்டு பின்னைக் காலனித்துவம் பேசுவதாகக் கொள்ளலாம்.

‘பின்னை நவீனத்துவம்’ வரலாற்றை மறுதலிக் கின்றது. பின்னைக் காலனித்துவம் வரலாற்றை ஏற்று விவாதிக்கின்றது. பின்னை நவீனத்துவம் மொழியின் பயன்பாட்டிற்கும், அதிலுள்ள அரசியலுக்கும் முக்கியத் துவம் தருவதில்லை. பின்னைக் காலனித்துவம் மொழிப் பயன்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றது. மொழிப் பயன்பாட்டில் காலனித் துவம் நவீன காலனித்துவமும் எவ்வாறு வெளிப் படுகின்றன? சொந்த நாட்டின் பண்பாட்டின் கூறு களாக மொழியை வென்றெடுப்பது எப்படி? என்பதை உணர்வுடனும் ஆர்வத்துடனும் பின்னைக் காலனித்துவம் பேசுகின்றது.

பின்னை அமைப்பியலுக்கும் பின்னை நவீனத் துவத்திற்கும் மாறாகத் தேசியம், பண்பாடு, மாற்று, மறுதலிப்பு, மறுகட்டமைப்பு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகியன குறித்துப் பின்னைக் காலனித்துவம் விரிவாகப் பேசுகின்றது. பின்னைக் காலனித்துவம், மரபுசார் பண்பாட்டைக் காலனியத்தி லிருந்து மீட்பது உலகிலுள்ள நாடுகள் தங்களுடைய மரபுசார் கருத்தாடல்களை இழந்துவிடாமல் மீட்டெடுப்பதும், நாடு, இனம், மொழி, பண்பாடு சார்ந்த சுயமரியாதைகளைப் பாதுகாப்பதும் பின்னைக் காலனித்துவ இலக்கியப் படைப்புக்களின்  நோக்க மாகும்.

பின்னைக் காலனித்துவம் - விவாதங்களும் விமர்சனங்களும்

பின்னைக் காலனித்துவம் 1990களிலேயே ஓர் இலக்கியக் கொள்கையாகத் தோற்றம் பெற்றது. அப்பொழுதே அதன்மீது எதிர்வினைகளும் கடுமை யான விவாதங்களும் நிகழ்த்தப்பட்டன. மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர்களான ஆரிஃப் திர்லிக், அஜீஸ் அகமது ஆகியோர் பின்னைக் காலனித்துவக் கொள்கைகளின் பல அடிப்படைக் கருத்துக்களையே கேள்விக்கு உரியதாக்கினர். பின்னைக் காலனித் துவம் புலம்பெயர்ந்த அறிஞர்களால் உருவாக்கப் பட்ட கொள்கை என்றும், அது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தோற்றுவிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறினர்.

ஆதலால் இது அமெரிக் காவின் அரசியல், பொருளாதார முன்னேற்றம் சார்ந்த ஒரு கொள்கையாக மையப்படுத்தப் படுகின்றது. ஆரிஃப், பின்னைக் காலனித்துவத்தை அடிப்படையியலுக்கு எதிரானதாக நோக்குகின்றார். (Peter Barry, ‘Polginning Theory – An introduction to(Peter Barry, ‘Polginning Theory – An introduction toLiterary and Cultural Theory’, Manchester UniversityPress, 1995, Pp.88-92) அவர் இக்கொள்கையால் தேசியவாதமும் மார்க்சியமும் உடைக்கப்பட்டு, கூறுபடுத்தப்பட்டு, எந்தப் பெருங்கதையாடலுமற்ற வட்டார அறிவுலகிற்கு படைப்பாளிகளும் திறனாய் வாளர்களும் தடுமாற்றம் கொள்வதாகக் கருது கின்றார். இவரைப் போன்றே அன்னிமெக்கிலின்டாக் காலனியம், பின்னைக் காலனியம் என்னும் கலைச் சொல் ஆக்கத்தையே கேள்விக்குறி ஆக்குகின்றார்.

"இக்கலைச் சொல்லாக்கம் ஐரோப்பா அல்லாத பண்பாடுகளை ஐரோப்பியக் காலவரிசை அடிப் படையில் வரலாற்று மறுஆக்கம் செய்ய முயல்கிறது. இதனால் காலத்துவம் என்பதே வரலாற்றின் தீர்க்கமான குறிப்பானாக வடிவம் பெறுகின்றது. இது அனைத்து நிகழ்வுகளையும் ‘காலத்துவம்’ என்ற ஒன்றுக்குள் முடியச் செய்கின்றது" (BruckKing (Edr.),(BruckKing (Edr.),New National and Post – Colonial Literature – An Introduction,1996, Pp.32-35) என அவர் விமர்சனம் செய்தார்.

மெக்லின்டாக், ஷோகத் ஆகிய இரு திறனாய்வாளர் களும் பொருளாதார அதிகாரம், சமுதாய வர்க்கச் சிக்கல்களை விளக்குவதற்குப் பின்னைக் காலனித்துவம் ஆற்றல் அற்றது என்றும், அது மேற்கட்டுமானம் குறித்தே பேசுவதாகவும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். ‘பின்னைக் காலனித்துவத்தின் அரசியல்’ என்ற கட்டுரையில் அஜீஸ் அகமது வெளிப்படையாகவே பின்னைக் காலனித்துவக் கோட்பாட்டின் உள்நோக்கத்தைச் சாடியுள்ளார். உலகமயமாக்கலுக்கும் பன்னாட்டுக் குழும முதலாளித் துவத்திற்கும் பின்னைக் காலனித்துவக் கொள்கை உடந்தை என்றும், இக்கொள்கை நடப்பு அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான உணர்வினைத் தருவதாகவும் அஜீஸ் அகமது கூறுகின்றார்.

“பின்னைக் காலனித்துவத்தின் பன்மையியம், பல பண்பாட்டியல் போன்ற கருத்தாக்கங்கள் பல மொழிகள், பல பண்பாடுகள் நிலவும் இந்தியச் சூழலுக்கு ஏற்றவைதான். இருப்பினும், இது முன்மொழிகின்ற பண்பாட்டு அடையாளங்களின் இரட்டைத்தன்மை, நிலையற்ற தன்மை, ஒட்டுத் தன்மை என்பன இறுதியில் பண்பாடு அடையாள மற்ற நிலையில், பண்பாட்டு எதிர்ப்புணர்வற்ற நிலையில் எல்லோரையும் உலகமயமாக்கலில் கரைத்துவிடும் அபாயமும் இருக்கின்றது” (பா.ஆனந்த குமார், “பின்னைக் காலனியத்துவம்- ஒரு பொது அறிமுகம்”, தி.சு.நடராசன், க.பஞ்சாங்கம் (மொ.பெ.ஆ.), தமிழில் திறனாய்வுப் பனுவல்கள், 2014, ப.462) எனப் பா.ஆனந்தகுமார் கருதுகின்றார்.

பின்னை நவீனத்துவம் வெளிப்படையாகக் கூறுபடுத்தப்பட்ட இலக்கிய உலகையும் நுண் அரசியலையும் பேசுகின்றது. ஆனால் பின்னைக் காலனித்துவம் அரசியலாகக் கட்டமைக்கப் படாமல் மொழி, இலக்கியம், பண்பாடு சார்ந்த கருத்தாக்கங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரிஃப், அஜீஸ் அகமது ஆகியோர் குறிப்பிடுவதைப் போன்று சமூகத்தின் மேற்கட்டுமான நிகழ்வுகளிலேயே மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தைப் பின்னைக் காலனித்துவம் வேண்டுகின்றது.

சமூக அடித்தளமான பொருளாதாரம் மற்றும் வர்க்கப் பிரச்சினைகளில் மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதித்துவம் குறித்து பின்னைக் காலனித்துவ விமர்சகர்கள் எவரும் பேசவில்லை. அரசியல் அதிகாரத்தால் பணிய வைத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் அதிகார மையப்புள்ளிக்கு எதிரான கருத்தாக்கத்தைப் பின்னைக் காலனித்துவம் முன்னெடுத்துச் செல்லும் போதே, இந்தியாவிற்கும் இன்றைய உலகச் சூழலுக்கும் பொருத்தமான கொள்கையாக அது இருக்கும், இல்லையாயின் காலனியச் சூழலில் தோன்றிய இலக்கியங்களைத் திறனாயும் ஒரு கொள்கையாகவே அது நின்றுவிடும்.

இரட்டைக்காலனி ஆதிக்கமும் பெண்ணிய அடக்குமுறையும்

முதல் உலக - மூன்றாம் உலகப் பெண்களுக் கிடையில் பண்பாட்டு எல்லையைக் கடந்த ‘சகோதரி’ உணர்வைப் பின்னைக் காலனித்துவம் முன் வைக்கின்றது. ஆயினும் மூன்றாம் உலக நாடுகளின் பெண்ணியத்தின் தனித்தன்மைகளைக் கொண்டு அதைக் ‘கறுப்புப் பெண்ணியம்’ என்றும், ‘மூன்றாம் உலகப்பெண்ணியம்’ என்றும், பின்னைக் காலனியப் பெண்ணிய இலக்கியமென்றும் தனித்துவம் பேசப்படுகின்றது. பெண்மீதான ஆணாதிக்கத்தை ஆண்மையம் X பெண்விளிம்பு என்னும் பின்னை நவீனத்துவச் சிந்தனையோடு (ஆண்) காலனியாதிக்கர் X  (பெண்) காலனியாவோர் என்னும் பின்னைக் காலனித்துவக் கருத்தாக்கத்தோடும் பின்னைக் காலனிய ஆய்வாளர்கள் பேசுகின்றனர்.

மூன்றாம் உலகப் பெண்ணடிமைத்தனத்தைக் கிறிஸ்டன் ஹோல்ஸ்ட் பீட்டர்சென், அன்னா ரூதர்ஃபோர்டு ஆகியோர் ‘இரட்டைக் காலனி ஆதிக்கம்’ என்கின்றனர். மூன்றாம் உலகப் பெண் காலனிய நடைமுறை களுக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் முதலில் ஆட்படுகின்றாள். அடுத்ததாக தந்தைவழிக் குடும்ப அமைப்பில் கணவனின் குடும்பத் தலைமைக்கு அடிமையாகின்றாள். இதனைப் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையால் அறியலாம். இக் கதையில் வரும் மருதி என்பவள் பிரிட்டிஷ் கால திருநெல்வேலிச் சீமையிலிருந்து கணவனைப் பிரித்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றாள். அங்குத் தேயிலைத் தோட்ட மேனேஜர் வாயிலாக வெள்ளையதிகாரி பாட்ரிக்ஸன் ஸ்மித்திடம் மருதி கற்பை இழந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகின்றாள். இது முதல்வகைக் காலனியாக்கமாகும். இது காலனிய ஆட்சியின் பின்புலத்தில் நிகழ்வது.

மருதி வேலை செய்யும் தேயிலைத் தோட்டத்தில் அவளைக் காணவந்த மேனேஜர் கணவனான அந்த வெள்ளையனிடம் தன் மகள் வெள்ளச்சியை அனுப்பி விடுகின்றாள். வெள்ளையன் தன் மகளை நல்ல விதமாக வளர்ப்பான் என நம்பி அவளை ஒப்படைத்தாள் மருதி, பின்பு ஒருநாள் தன்மகள் வெள்ளச்சியைக் காண வந்த மருதிக்கு அவ்வெள்ளையன் இன்னொருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றாள். இந்த இரண்டாவது வகை அடக்குமுறை ஆணாதிக்கத்தால் நிகழ்வது.

மூன்றாவது வகையான ஒடுக்குமுறை இந்திய சாதிய அமைப்புச் சார்ந்தது. தாழ்ந்த சாதிப்பெண் மீது உயர்ந்த சாதிக்கார ஆண் வன்முறையில் ஈடுபடுவது அக்கால கிராமத்தின் இயல்பான போக்காகும். மருதி இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிராமத்திலிருந்த மருதியையும் அவளது கணவனையும் (தமிழ்நாட்டில்) அக்கிராமத்தின் உயர் சாதிக்காரன் ஆகிய காட்டயத்தேவன் தலைமுடியைப் பிடித்து அடிப்பது இந்த வகையான சாதிய ஒடுக்கு முறையாகும்.

பின்னைக் காலனியக் கொள்கையின் முக்கியத் திறனாய்வாளராக விளங்கும் காயத்திரி அடித்தள மக்களின் அடிமைத்தனத்தையும் பெண்ணடிமைத் தனத்தையும் ஒப்பிட்டு நோக்குகின்றார். அவர் ‘அடித்தள மக்கள் பேசமுடியுமா?’ (Can the Subaltern(Can the SubalternSpeak?’ என்னும் கட்டுரையில், ‘அடித்தள மக்களுக் கென்று வரலாறு இல்லை. அவர்கள் பேசக்கூடிய அளவு உரிமையுடையவர்கள் அல்லர்; குறிப்பாக, அடித்தள மக்களாகப் பெண் இருந்துவிட்டால் அவளது நிலை ஆழமான நிழலுக்குள் மறைக்கப்படும்’ (John Mc Leod, ‘Beginning Post Colonialism’,(John Mc Leod, ‘Beginning Post Colonialism’,Manchester University Press, 2000, Pp.118-123) எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் குடியிருக்கும் ஸ்பைவக்கைத் தாண்டி, மூன்றாம் உலக நாடுகளிலும் இன்று பெண்ணியம் ஆய்வு செய்யப்படுகின்றது. இவர்கள் மேல்நாட்டுப் பெண்ணியச் சிக்கல்கள், மூன்றாம் உலகப்பெண்கள் பிரச்சினைகளோடு தொடர்பற்றவை என்று அவற்றை ஒதுக்கிவிடு கின்றனர். ‘பாலினம்’ (Gender) என்பது இனம், வர்க்கம், நாடு, நிறம், பண்பாடு இவற்றோடு தொடர் புடையதாக மூன்றாம் உலகப் பெண்ணியத்தில் பார்க்கப்படுகின்றது. மேலும், மூன்றாம் உலகப் பெண்ணியப் படைப்புக்கள் - பின்னைக் காலனியப் பெண்ணியப் படைப்புக்கள் 1980-1990களில் மிகுந்த அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

பின்னைக் காலனியவாதிகளின் ‘மொழி அரசியல்’

பின்னைக் காலனியவாதிகள் மொழியைப் பண்பாட்டு உற்பத்திக் கருவியாகவும், பிரதிநிதித்துவ அரசியலின் வெளிப்பாடாகவும் நோக்குகின்றனர். ‘காமன்வெல்த் இலக்கியம்’, ‘பின்னைக் காலனிய இலக்கியம்’ என்னும் ஆட்சிகள் பெரிதும் ஆங்கில மொழியில் எழுதப்படும் இலக்கியங்களையே குறிக் கின்றன. இங்கு ஆங்கிலம் என்பது ஒரு காலனி யாதிக்க மொழி; காலனிய அதிகாரத்தின் மொழி என்பதை மறந்துவிடக்கூடாது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பின்னைக் Òகாலனியத் திறனாய்வாளராகிய பில் அஷ்க்ராஃப்ட், ‘காலனிய அதிகார மொழியின் சவாலை எதிர்கொள்ளும்போது, அதனது உலகப் பார்வையைக் கருத்தில் கொள்ளாமல், புது வகையான பிரதிநிதித்துவத்தை மொழியில் படைக்க வேண்டும். எனவே ‘புதிய ஆங்கிலத்தைப் பயன் படுத்திப் படையுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இக்கருத்திற்கேற்பவே மூன்றாம் உலக நாட்டு எழுத்தாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நைஜீரியாவைச்சேர்ந்த சினுவா ஆச்பி, வோல் சோயின்கா, டிரினிடாட் நாட்டின் நைபால், இந்திய எழுத்தாளர் அருந்ததிராய் ஆகியோர் தங்களது படைப்புக்களில் புதுவகை ஆங்கிலத்தைப் பயன் படுத்துகின்றனர். அதில் பண்பாடு கலந்த ஆங்கில மொழி வடிவங்கள் காணப்படுகின்றன.

அருந்ததிராய் தம் ‘அற்ப விசயங்களின் கடவுள்கள்’ (Gods of Small Things) என்னும் நூலில் ‘One’ என்னும் ஆங்கிலப் பெயருக்குப் பதிலாக ‘Onnu’ என்னும் மலையாள எண்ணுப்பெயர் வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆர்.கே.நாராயணன் மற்றொரு கோணத்தில் நின்று ‘ஆங்கிலம் எங்களது சுதேசிய மொழி’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் கென்ய நாட்டின் நாவலாசிரியர் என்குகி 1980க்கு முன்னர் தனது படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு, அவருடைய தாய்மொழியான ‘ஜிகுயூ’ (‘Gikuyu’) வில் எழுதி வருகின்றார். ‘ஒரு மொழியைத் தவிர்ப்பது அம்மொழியின் ஒட்டுமொத்தமான பண்பாட்டையே தவிர்ப்பது’ எனக் கூறும் என்குகி, மொழியைச் சமூக வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது; அது தனித்த வடிவமும் பண்பும் கொண்டது; தனித்த வரலாறும் உலகத்துடன் தனித்த உறவும் கொண்டது என்கின்றார். மொழி பண்பாட்டின் கொள்கலம் என்பதை அவர்,

“பண்பாட்டில் ஒழுக்கவியல், அறவியல், அழகியல் மதிப்புக்கள் அடங்கியுள்ளன. இம் மதிப்புக்களே அம்மக்களின் பண்பாட்டின் அடித்தள மாகும். மனித இனத்தின் தனித்தன்மையைக் காட்டும் உணர்வு மொழியில் உள்ளது. மக்களின் வரலாற்று அனுபவங்களின் கூட்டு நினைவு வங்கியாக உள்ளது மொழி; மொழியே பண்பாட்டின் ஊடகம். இத்தகைய தாய்மொழியைப் புறக்கணித்து, காலனிய மொழிகள் என்னும் காலனியக் கண்ணாடிகள் வாயிலாக உலகைக் காணும் காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டோர் அவர்களது சமூகத்தின் அடையாளத்தி லிருந்து விலகி நிற்கின்றனர்” (Elleke Bochmer, (Elleke Bochmer,“Colonial And Post Colonial Literature”, OxfordUniversity Press (1995), Pp.88-90)  எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியைப் பொருத்தவரையில் ஒரு காலத்தில் சுவாமிநாத தேசிகர், சுப்பிரமணிய தீட்சதர், வைத்தியநாத தேசிகர் ஆகிய மூவரும் இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், இலக்கண விளக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர்கள் (கி.பி. பதினேழாம் நூற்றாண்டினர்).  இவர்கள் அனைத்துப் பெருமைகளும் வடமொழிக்கே உண்டு; தமிழ் மொழிக்கு எந்தப்பெருமையும் இல்லையெனக் கூறித் தமிழ்ச் சிந்தனையைச் சிறைப்படுத்தினர். தற்பொழுது ஆங்கிலமொழி என்னும் காலக் கண்ணாடியை அணிந்து கொண்டு பலர் தமிழ்ப் பண்பாட்டை நீக்கம் செய்து வருகின்றனர்.

ஐரோப்பிய மைய உலகப் பார்வை (Eurocentric World Vision)

உலக வரலாறு, உலகப் பண்பாடு குறித்த இன்றைய ஆய்வு நோக்குகளில் ஐரோப்பிய  மையப் பார்வையே தலைமையிடம் பெறுகின்றது. ஐரோப்பி யர்கள் தங்களை உயர்வாகவும், மூன்றாம் உலக நாட்டு மக்களைத் தாழ்வாகவுமே சித்திரித்துள்ளனர். இவ்வகையில் அவர்களது பண்பாட்டு விளக்கங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதாக எட்வர்டு சைத்தன் (Edward Saidhan) ‘கீழ்த்திசையியல்’ (Orientalism) என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். ஐரோப்பியர் களின் காலனி மயமாக்கலை காலனி ஆதிக்கர் X காலனியாவோர் என்னும் பார்வையில் சைத்தும் பின்னைக் காலனியவாதிகளும் விவாதித்துள்ளனர்.

மேற்குலக அறிவும், கற்றலும் உடையதாகவும், கிழக்குலக அறியாமையும் இயற்கைத் தன்மையும் கொண்டதாகவும் காட்டும் ஐரோப்பியர்கள் மேற்கை உயர்தரம் என்றும், கிழக்கை அதிலிருந்து மாறுபட்ட தாகவும் அதற்கு அடிபணிவதாகவும் காட்டி யுள்ளனர். கிழக்கை மற்றதாகவும் (Other),மேற்கிற்கு அடங்கியதாகவும் நோக்கும் பார்வையே ஐரோப்பியர்களிடம் சிறப்பிடம் பெறுகின்றது. மெக்காலேயின் ‘கீழ்த்திசை இலக்கியங்கள்’ குறித்த, “ஒரு சிறந்த ஐரோப்பிய நூலகத்தில் ஓரடுக்கு, இந்தியா மற்றும் அரேபிய நாடுகளின் ஒட்டுமொத்த இலக்கியங் களுக்குச் சமமானது என்னும் கூற்றை மறுக்கக்கூடிய கீழ்த்திசையியலார் எவரையும் யான் கண்டதில்லை. அரபிய, சமசுகிருதக் கவிதைகள் புகழ்வாய்ந்த ஐரோப்பிய நாட்டிலக்கியங்களோடு துணிச்சலோடு ஒப்பிடும் கீழ்த்திசையியலார் எவரையும் யான் கண்டதில்லை” (Susan Bassnett, ‘Comparative Literature – A Critical Introduction, Oxford UniversityLiterature – A Critical Introduction, Oxford UniversityPress, 1998, P.17) என்னும் மதிப்பீடு ஐரோப்பிய மைய உலகப்பார்வைக்குத் தக்க சான்றாகும்.

பின்னைக் காலனித்துவத்தில் பண்பாட்டு வேர்களும் நெருக்கடிகளும்

பின்னைக் காலனித்துவம், ஒற்றைப் பண் பாட்டிற்கும் பண்பாட்டு எதேச்சதிகாரத்திற்கும் எதிராகப் பண்பாட்டு வேறுபாடுகள், பன்மைப் பார்வை, பல பண்பாட்டியல் ஆகிய கருத்தாக்கங் களை முன்வைக்கின்றது. இவ்வாறு பின்னைக் காலனித்துவம், ‘பண்பாடு’ திறவைத்தன்மை கொண்டதாகவும் (Opened Type), பிற பண்பாடுகளை ஏற்பதாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது. ஹோமிபாபர், புலம்பெயர்ந்தோர், அடித்தள மக்கள் சார்பாக நின்று நோக்கும்போது ‘பண்பாடு’ ஒட்டுத் தன்மையுடையதாக இருப்பதாகக் கூறுகின்றார்.

பூர்வகுடிகள், தாயகத்திலிருந்து வெளியேறி யோர், அகதிகள், நாடு கடத்தப்பட்டோர் ஆகியோரது அடையாளங்கள், பண்பாட்டு நெருக்கடிகள் ஆகியன குறித்துப் பின்னைக் காலனியப் படைப்பாளர்களும் திறனாய்வாளர்களும் விரிவாக எழுதுகின்றனர். சாலிமார்கன் என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ‘My‘MyPlace’ என்னும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார். அவர் அந்நூலில் ஆஸ்திரேலியப் பழங்குடி அன்னைக்கும், வெள்ளைத் தந்தைக்கும் பிறந்த ஒரு பெண்ணின் பண்பாட்டு அடையாள நெருக்கடியை நுணுக்கமாக அலசியுள்ளார்.

கென்ய நாட்டு எழுத்தாளர் என்குகி, புலம் பெயர்ந்த இந்திய எழுத்தாளர்களான சல்மான் ருஷ்டி, விக்ரம்சேத், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரினிடாட், எழுத்தாளர் சர்வித்யாதர் சூரஸ் நைபால் ஆகிய பின்னைக் காலனிய எழுத்தாளர்களின் படைப்புகளில் பண்பாட்டு அடையாள நெருக்கடிகளைக் கடந்து பண்பாட்டுவழிகள், பண்பாட்டு வேர்களைப் பற்றிய தேடல்களும், தாயக நாட்டமும் காணப்படுகின்றன. இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் புலம்பெயர்ந் தோர் படைப்புகளிலும் இதனைக் காணலாம்.

தமிழ் எழுத்தாளர்களில் தோப்பில் முஹமது மீரான், சு.வேணுகோபால் ஆகியோர் தாங்கள் வாழும் காலம் மற்றும் வெளி உணர்வு கடந்து மற்றொரு காலம் மற்றும் வெளியில் தங்கள் படைப்புகளில் இயங்குகின்றனர். திருநெல்வேலியில் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோப்பில் முஹம்மது மீரான் ‘சாய்வு நாற்காலி’, ‘துறைமுகம்’ போன்ற தனது படைப்புகளில் 19ஆம் நூற்றாண்டுக் கேரளச் சமூக வெளிக்குள் பயணிக்கின்றார். இவ்வாறே சு.வேணுகோபால் ‘நுண்வெளிக் கிரணங்கள்’ என்னும் தன்னுடைய நாவலில் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் காலம் மற்றும் வெளிகளைக் கடந்து 19ஆம் நூற்றாண்டின் சமூகவெளிக்குள் நுழைந்து தமது இனமக்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பின்னைக் காலனியத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுவதைப் போல தோப்பில் முஹமது மீரான், சு.வேணுகோபால், கி.ரா. ஆகியோரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங் களின் பண்பாட்டு அடையாளங்கள் ஒற்றைத்தன்மை கொண்டவையாகவும், இரட்டைத் தன்மையுடைய வையாகவும் காணப்படுகின்றன.

பின்னைக் காலனித்துவம் முன்வைக்கும் பல் பண்பாட்டியலில், தாயகப் பண்பாட்டு நாட்டம் என்னும் கருத்தாக்கம் எஸ்.டி.ராஜ்குமார், ஹெச்.ஜி.ரசூல் ஆகிய தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளில் பொருந்தி நிற்கின்றன. தமிழகத்திலும், கேரளாவிலும் பூர்வீகப் பழங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்ற ‘கணியான்’ இனமக்களின் சொந்தப் பண்பாட்டை என்.டி.ராஜ் குமார் வாதைகள் (பிசாசுகள்) வாயிலாக ஏவி விடுகின்றார். இவரது கவிதையில் தமிழ் - கேரளப் பண்பாட்டு ஊடாட்டம் மொழியிலும் கருவிலும் வடிவத்திலும் கலந்து காணப்படுகின்றன. ஜெயமோகனின் படைப்புகளிலும் இதனைப் பரவலாகக் காணமுடிகின்றது. பண்பாட்டு ஊடாட்டத்திற்கும் பல்பண்பாட்டியலுக்கும் சான்றளிப்பனவாக ரசூலின் ‘மைலாஞ்சி’ (மருதாணி) என்னும் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், அராபி மொழி வடிவங்களும், பண்பாட்டு வடிவங்களும் இத்தொகுப்பில் ஊடாடி நிற்கின்றன என்பதை அறியமுடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

1) மங்கை, அ., ராபர்ட் ஜே.சி.யங் பின்காலனியம் மிகச் சுருக்கமான அறிமுகம், அடையாளம், சென்னை, 2007.

2) அசோகன் முத்துசாமி,த., பிபன் சந்திராவின் காலனியம் (கட்டுரைத் தொகுப்பு) பாரதி புத்தகாலயம், சென்னை, 2012.

3) ந.முத்துமோகன், பா. ஆனந்தகுமார், ஹெச்.ஜி.ரசூல், எச்.முஜீப் ரஹ்மான், பின்னைக் காலனியம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கன்னியாகுமரி, 2007.

4) நடராசன், தி.சு., திறனாய்வுக்கலை (கொள்கைகளும் அணுகுமுறைகளும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2016.

5) க.பஞ்சாங்கம் (மொ.பெ.ஆ.), தி.சு.நடராசன், தமிழில் திறனாய்வுப் பனுவல்கள், சாகித்திய அகாதமி, புதுதில்லி, 2014.

6) Bruck King (Edr.), New National and Post – Colonial Literature – An Introduction,Bruck King (Edr.), New National and Post – Colonial Literature – An Introduction,Oxford University Press, New York, 1996.

7) Elleke Bochmer, Colonial & Post Colonial Literature, Oxford UniversityPress, New York, 1995.

Pin It