கோவிட்-19 தாக்கத்தால் மோசமாக்கப்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் இந்தியப் பொருளாதாரம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 22.8 சதவீதத்திற்கு வீழ்ந்த போதும் அரசோ தலைமை வங்கியோ மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைப் பணமாக்குவதற்கான எந்த அடியும் முன்வைக்கவில்லை, அதற்குரிய நேரம் வந்தால் செய்வோம் என்றும், கடைசி வாய்ப்பாகத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநரும் அதைத் தள்ளிப் போடுகிறார்.
எதற்காகக் காத்திருக்கிறார்கள்? பொருளாதாரம் மேலும் 50 சதவீதத்திற்கும் மேல் வீழவேண்டும் என்பதற்கா? வருமுன் காக்கத்தான் முடியவில்லை, வந்த பின்னாவது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது பொறுப்பின்மையின் உச்சக்கட்டமே ஆகும்.
நிதியமைச்சருக்கு மட்டும் அரசின் சரியான நடவடிக்கைகளால் பொருளாதாரம் வடிவ மீட்சி அடைவதாகத் தெரிகிறதாம். பிரதமரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் மன்–கி-பாத்தில் சலிக்காமல் கதையளந்து வருகிறார்.
இந்த நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 8-9 சதவீதம் அதிகரிக்கும் என பலதரப்பு நிறுவனங்களாலும் கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரிவருவாய் 30 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை அதிகமாகிறது என்று அரசு செலவினங்களை மேலும் குறைத்தால் பொருளாதார மீட்சி தடைப்படுவதுடன் அரசின் வருவாய் மேலும் குறையும், நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். அது அடுத்தடுத்து வருவாயைக் குறைத்து நிதிப் பற்றாக்குறையை அதிகமாக்கும் சூனிய சுழற்சிக்கே இட்டுச்செல்லும்.
மத்திய அரசு 2018-19ஆம் ஆண்டிற்கான 40% செஸ் வரி வருவாயை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல் இன்னும் இந்தியாவின் ஒருங்கிணைந்த தொகுப்பு நிதியிலே வைத்திருப்பது ஜி.எஸ்.டி சட்ட நெறிகளுக்கு புறம்பானது எனத் தலைமைக் கணக்காயரின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் நிதி அமைச்சகம் அதை மறுத்துள்ளது.
மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய 1.51 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. ’நிவாரண’த் தொகையைத் தலைமை வங்கியிடம் கடன் பெற்று அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசு மாநிலங்களின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் படி இரு வாய்ப்புகளையே திணித்தது.
இப்பொழுது கடன் பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் தேர்வு செய்யாத மாநிலங்களுக்கு 2022 ஜூன் வரை ஜி.எஸ்.டி நிவாரணம் வழங்கப்படாது என வஞ்சித்து பெயரளவுக்கே உள்ள இந்தியக் கூட்டாட்சி அமைப்பை மொத்தமாகத் தகர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களோ இந்தியாவில் பன்மைத்துவத்தை அழித்து விட்டு, ஜனநாயக முகமூடியுடன் ஐநா அவையில் பன்மைத்துவச் சீர்திருத்தம் வேண்டும் எனக் கோருகிறார்.
உலகளவில் கொரோனா நோய்க்கான மருந்துகளின் மொத்த உற்பத்தியில் சரிபாதியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பெற்று விட்டன. அவை வாங்கியது போக எஞ்சியுள்ளதைத்தான் மற்ற நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு கொள்ளை நோய்க்கான தடுப்பு மருந்தானது,
அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் பணத்துக்காக மருந்துகளை வழங்குவது மனித உரிமைகளுக்கு எதிரானதாகும். என ஆக்ஸ்ஃபார்ம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கோவிட்-19ஆல் உலகே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட உலக சுகாதார அமைப்புக்கு நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் தர முடியாது என்று பேரம் பேசுகிறார் ட்ரம்ப்.
இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மாநிலங்கள் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடுகளை 8 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் அதன் மூலம் 2025க்குள் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை மொத்த ஜிடிபியில் 2.5 சதவீதமாக உயர்த்த முடியும் என்றும் கூறியுள்ளார். கோவிட்-19 வந்த பிறகு மருத்துவச் செலவுகளுக்காக வெறும் 7,000 கோடியை மட்டுமே ஒதுக்கியது மத்திய அரசு.
மாநிலங்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்காமல், மாநிலங்களின் வரி பெறும் உரிமைகளையும் பறித்து விட்டு, சுகாதாரத்திற்கான ஒதுக்கீடுகளை 8 சதவீதம் உயர்த்த வேண்டும் என மாநிலங்களைக் கேட்பது அநீதியின் உச்சம் அல்லவா?.
மத்திய அரசு, 11,269 கோடி ஜி.எஸ்.டி நிவாரணத் தொகை உட்பட 23,763.36 கோடி ரூபாயைத் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் உள்ளது. முன்னுரிமைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் கடன் மார்ச் 31, 2024 முதல் 75 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தலைமை வங்கி அறிவித்தது.
கோவிட்-19 தாக்கத்தால் நலிந்த பிரிவினருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உடனடிக் கடன் நிவாரணம் அளிக்காமல் 4 வருடம் காத்திருக்கச் சொல்லுகிறது தலைமை வங்கியின் இந்தப் புதிய விதி.
வங்கிச் சீர்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்தாமல் தள்ளிப் போடுவதற்கான வாய்ப்பாகவே இதைப் பார்க்க வேண்டும். நான்கு வருடங்களுக்கிடையில் அடைய வேண்டிய இடைக்கால இலக்குகளைத் தலைமை வங்கி அறிவிக்காதது ஏன்? பாஜக அரசு ஜனநாயகத்துக்கு முற்றிலும் புறம்பான முறையிலேயே தேசிய அளவில் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துகிறது.
ஜி,எஸ்.டி வரி எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீர் முறையில் அமலாக்கப்பட்டது, பண மதிப்பிழப்பும் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென்று அறிவிக்கப்பட்டது, பொது முடக்கமும் முன்னறிவிப்பின்றி நான்கு மணி நேரத்துக்குள் பிறப்பிக்கப்பட்டது, தேசிய அளவில் திடீர் மாற்றங்களே திணிக்கப்படும் போது வங்கித் துறையில் ஒரு நெறிமுறையை நடைமுறைப்படுத்த 4 வருடங்கள் தேவையா? அது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய என்ன மாற்றுத் திட்டங்கள் உள்ளன?
முன்னுரிமைக் கடன் பிரிவில் புதிய திருத்தங்கள் தொடர்பாக, செப்டம்பர் 4ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் சில பிரிவுகள் தமிழக மாவட்டங்களுக்குக் கடன் வழங்கும் அளவைக் குறைக்கும் விதமாய்ப் பாரபட்சமாக அமைந்துள்ளன. அதில் 1-ஏ உறுப்பின் படி 2022ஆம் ஆண்டு முதல் முன்னுரிமைக் கடன் பிரிவில் குறைந்த கடன் பெறும் (ஒரு நபருக்கு 6,000 ரூபாய்க்குக் குறைவாகக் கடன் பெறும்) மாவட்டங்களுக்கு (184) கடனை 125 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே கடனளவு அதிகரித்து வழங்கப்படும் (ஒரு நபருக்கு 25,000 ரூபாய்க்குக் குறைவாகக் கடன் பெறும்) மாவட்டங்களுக்கு (205) கடன் 90 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் (38 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு) முன்னுரிமைக் கடன் அதிகம் வழங்கப்படும் மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் கடன் வழங்குவது குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் இதர மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒப்பீட்டளவில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு காணப்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்திய அமைப்பில் நீடிப்பதற்கு தமிழ்நாடு மிகப்பெரும் விலை கொடுத்து வருகிறது. கோவிட் தாக்கத்தில் பாதிக்கப்பட்டுப் பொருளாதாரம் சரிவடைந்த நிலையில் கடனளவைக் குறைப்பது பொருளாதார மீட்சியை பாதிக்கும் என்பதால் கடனளவைக் குறுக்கும் நடவடிக்கைகளை மத்திய வங்கி கைவிட வேண்டும்.
மத்திய அரசு எல்பிஜி மானியத்தை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ஏறக்குறைய ரூ.20 ஆயிரம் கோடி மிச்சமாகும். கச்சா எண்ணெய் விலைச் சரிவைச் சாதகமாக்கி ரூ.5,000 கோடியைச் சேமித்தோம் என தர்மேந்திர பிரதான் பெருமிதம் கொள்கிறார். இவற்றை கொரோனா நோய்த் தடுப்புக்குத்தான் பயன்படுத்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
பி.எம் கேர்ஸூக்கு நிதியளித்தவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது மத்திய அரசு. பி.எம் கேர்ஸூக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாத போது, நிதியளித்தவர்கள்தான் வரிவிலக்கு பெறுகிறார்களா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?
பெட்ரோல் டீசல் விலை உயர்வை நிர்ணயிக்கும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெயும் விட்டு வைக்கப்படவில்லை, அக்டோபர் முதல் நியாயவிலைக் கடைகளில், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தப்பட்டு 16.50 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது. பொருட்களின் விலைவாசியும் ஏறி ஏறிச் செல்கிறது..
ஆனால் 500 ரூபாயில் பொருளாதார மீட்சி பெறச் சொல்கிறது பாஜக அரசு. கோவிட்-19 பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவின் செல்வந்தர்களின் சொத்து அதிகரித்துத்தான் வருகிறது. ஐ.ஐ.எஃப்.எல் ஹுருன் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் 161 புதுமுகங்கள் சேர்ந்ததால் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73% அதிகரித்துள்ளது. பொதுமுடக்கத்திற்குப் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திலும் அவர் 90 கோடி சம்பாதித்துள்ளார்.
மலிவு விலை பொதுப் போக்குவரத்துக்கு, இரயில்களையே மக்கள் நம்பியுள்ள நிலையில், அதிலிருந்து எளிய மக்களை விலக்கும் விதமாக விமானக் கட்டணங்களில் வசூலிக்கப்படுவது போல் இரயில்வே கட்டணங்களிலும் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க இருப்பதும், இரயில்வே தடத்தில் தனியார் இரயில்களை அனுமதிக்க இருப்பதும் கடும் கண்டனத்திற்ரியது.
இரயில்வே நிலையங்களில் மறுவளர்ச்சித் திட்டங்களில் அயல் நாட்டு முதலீடுகளை வரவேற்றுள்ளது மத்திய அரசு. தனியார்மய விற்பனையை ஊக்குவிக்க ஏர் இந்தியாவின் பெருமளவுக் கடன்களை வாங்க அரசு தயாராக உள்ளதாம், அப்படியென்றால் ஏர் இந்தியாவை அரசே ஏற்று நடத்த எது தடையாக உள்ளது? பாஜக அரசின் தவறான பொருளாதார அணுகுமுறைதான்!
பாஜக அரசு இந்த நிதி ஆண்டில் 2.1 லட்சம் கோடி அரசுப் பங்குகளை தனியார்மயப்படுத்த இலக்கு நிர்ணயித்தது, எல்.ஐ.சி, ஐடிபிஐ வங்கிகளின் பங்குகளையும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் அரசின் 52.98 சதவீதப் பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. எல்.ஐ.சியின் 25% அரசுப் பங்குகளைத் தனியார்மயப்படுத்தி பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
ஈரலை விற்றுச் சாராயம் வாங்கும் கதையாகத்தான் பாஜக அரசின் தனியார்மயத் திட்டங்களும் நடவடிக்கைகளும் உள்ளன. ரகுராம் ராஜனும், விரல் ஆச்சர்யாவும் வங்கிகளைச் சீரமைக்க அவற்றின் அரசுப் பங்குகளை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைப்பதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கான தங்கள் ஆதரவையே வெளிப்படுத்துகிறார்கள்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் சார்ந்த மசோதாக்கள் விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து விடுவித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்கிறார் மோடி. உண்மையில் இடைத் தரகர் வேலையை மோடி அரசுதான் செய்து வருகிறது.
மக்களுக்கும் பெருமுதலாளிகளுக்கு இடையிலான தரகு ஒப்பந்தங்களையே பெருமளவில் நாடாளுமன்றத்தில் இயற்றி வருகிறது. விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்த போதும் மாநிலங்களின் இசைவில்லாமல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளையும், நுகர்வோர்களையும் பெரிதும் பாதிக்கும் சட்டங்கள் இயற்றி எதேச்சதிகாரத்தில் மன்னராட்சியையும் விஞ்சியுள்ளது பாஜக அரசு.
விவசாயிகள் விளைபொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றும் வசதி) மசோதா அரசு கொள்முதல் செய்வதற்கான எந்த உத்தரவாதமும் அளிக்காமல் விவசாய சந்தையை முற்றிலும் தனியார்மயப்படுத்த வழிவகுக்கிறது. இதனால் அரசு சார்பில் செயல்பட்ட மண்டிகள் மூடப்படும்.
வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச விலையை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்தும், நுகர்வோருக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்தும் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டது பாஜக அரசு. இதனால் சுதந்திரம் பெற்றது விவசாயிகள் அல்ல, தனியார் சந்தைகளே.
இதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடமிருந்து விவசாயிகளுக்குச் செல்லவில்லை, அரசின் கையிலிருந்து முற்றிலும் தனியார் கைக்கே சென்றுள்ளது. அரசின் உதவியுடன் விலைநிர்ணயம் செய்யும் அமைப்புமுறை விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதன் மூலம் தனியார் சந்தைகளின் விலைவீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து வந்தது.
இதனை நீக்கும் விதமாகத் தற்பொழுது விவசாய சந்தைகள் முற்றிலுமாகத் தனியார் மயமாக்கப்படுவதால் விலைநிர்ணயம் செய்யும் முற்றுரிமை தனியார் பெருநிறுவனங்களிடம் சென்று விடும்.
இதனால் ஏற்படும் விலைவீழ்ச்சி விவசாயிகளை மேலும் கடுமையாகப் பாதிக்கும். ஆனால் இது வெறும் விவசாயச் சந்தைப் பிரச்னை மட்டுமன்று, விவசாயச் சந்தைகள் முற்றிலும் தனியார் மயமாக்கப்படுவதால் பொது விநியோக முறையும் முடிவுக்கு வந்து விடும்.
உணவு கார்ப்பரேசன் விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை தந்து விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதன் மூலமே பொது விநியோக முறை செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைகளின் மூலம் மாதம்தோறும் மலிவு விலையில் உணவுப் பொருட்களைப் பெற்று வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் வயிற்றில் மண் வார்க்கவுள்ளது இச்சட்டம்.
விவசாயிகள் (அதிகாரப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகளின் ஒப்பந்த மசோதா, 2020 விவசாயிகள் விற்பனையாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திருக்கிறது.
இதனால் நிலத்தில் என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் விவசாயிகளிடமிருந்து விற்பனையாளர்களிடம் செல்கிறது. இதனால் பணப்பயிர்களை சாகுபடி செய்வதே ஊக்குவிக்கப்படும் என்பதால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலை அழிவதற்கும் காரணமாகலாம்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதாவில், சட்டத் திருத்தத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கும், அவற்றைத் தனியார் பதுக்கி வைப்பதற்கும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.
எனவே பெருமுதலாளிகளும், இடைத் தரகர்களும் பதுக்கி விலையுயர்வை ஏற்படுத்தவும் ஊக வணிகத்தின் மூலம் இடைத்தரகர், பெருவணிகர்களின் இலாபத்தை அதிகப்படுத்தவுமே வழிவகுக்கும்.
இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத் துறையையே சார்ந்துள்ளனர். நிறைவேற்றப்பட்ட இம்மூன்று மசோதாக்களாலும் பாதிக்கப்படப் போவது விவசாயிகள் மட்டும் அல்ல, விலைவாசி உயர்வால் நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர். இதனால் பொது விநியோக முறை மூடப்பட்டு, இந்தியாவின் உணவுத் தன்னிறைவும், உணவுப் பாதுகாப்பும் அழிக்கப்பட்டு மக்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படும் நிலையே ஏற்படும்.
மார்ச்சிலிருந்து ஜூன் வரை ஒரு கோடிக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக வீடுகளுக்குச் சென்றதாக சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே. சிங் சொல்கிறார். ஆனால் எத்தனைப் பேர் இறந்தனர் என்பது குறித்த தரவுகள் அரசிடம் இல்லையாம்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், காலணிகள் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் ஓய்வு எடுப்பதற்காகத் தனி இடங்கள் அமைத்துத் தரப்பட்டதாகவும். அவர்கள் சொந்த மாநிலம் செல்வதற்குப் பேருந்துப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் பெரும் பொய்களை அடுக்கிக் கடுமையாகத் துன்புற்று 900க்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்த உண்மையை மறைத்துள்ளார்.
நூறு நாள் வேலைக்கான வேண்டல் புலம்பெயர் தொழிலாளர்காளின் இடப்பெயர்வால் 38.8% அதிகரித்துள்ளது. ஆனால் இந்தக் குறைந்தபட்ச வேலை உத்தரவாதத்தைக் கூட விரிவுபடுத்துவதில் அக்கறை காட்டவில்லை மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான வேலை நாட்களை அதிகரிக்க வாய்ப்பில்லை எனக் கைவிரித்து விட்டார் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர்.
உழைப்புச் சக்தியின் பங்கேற்பு குறைந்து வேலைச் சந்தை குறுகியதால் வேலையின்மை குறைந்துள்ளதே தவிர புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்ததால் அல்ல என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
முதலாளிகள் செய்யும் குற்றம் குற்றமாகக் கருதப்படாது ஆனால் தொழிலாளிகளோ செய்யாத குற்றத்துக்குத் தண்டிக்கப்படுவார்கள் எனும் விதத்தில்தான் நிறுவனச் சட்டத் திருத்தமும், தொழிலாளர் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொழிலாளர் சார்ந்த நான்கு மசோதாக்களையும் ஒரே நேரத்தில் டிசம்பரில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சார்ந்த மூன்று மசோதாக்கள்: 1. தொழிலக உறவுகள் குறித்த நெறிகள் மசோதா, 2. சமூகப் பாதுகாப்பு நெறிகள் மசோதா, 3. தொழில் பாதுகாப்பு, உடல் நலம், வேலை நிலைமைகள், நெறிகள் குறித்த மசோதா.
தொழிலக உறவுகள் குறித்த நெறிகள் மசோதாவின் படி, 300க்கு குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட தொழிலகங்கள் தொழிலாளர் வேலை நிலைகள் குறித்த எந்த நெறிமுறையையும் கடைபிடிக்கத் தேவையில்லை. இதனால் அத்தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டு, உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் நிலை ஏற்படும்.
300க்கும் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்களை கொண்ட தொழிலகங்கள் வேலைக்கான ஒப்பந்த உத்தரவாதத்தை அளிக்க வேண்டிய அவசியமில்லை. பணியாளர்களை வேலைநீக்கம் செய்யவோ, நிறுவனத்தை மூடவோ அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு, உடல் நலம், வேலை நிலைமைகள் குறித்த நெறி மசோதாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தங்கும் வசதி ஏற்படுத்துவது கட்டாயம் என்ற உத்தரவாதம் நீக்கப்பட்டுள்ளது, அவர்களின் இடப்பெயர்வுக்கான படித்தொகையும் நீக்கப்பட்டுள்ளது.
நிறுவனச் சட்டத்திலும் முதலாளிகள் தொழில் செய்வதை எளிமைப்படுத்தும் விதமாகத் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சட்டத் திருத்தத்தின் படி, சில சட்ட நெறிகளை மீறுவது குற்றச் செயலாகக் கருதப்படாது. உதாரணமாக சட்டத்திற்கு புறம்பான முறையில் பங்குதாரரின் உரிமைகள் மாற்றப்பட்டால் அது குற்றமாகக் கருதப்படாது.
சட்டநெறி மீறலுக்கு முன்னர் அளித்து வந்த சிறைத் தண்டனை நீக்கப்பட்டதுடன் அதற்கான அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருநிறுவனங்கள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் நேரடியாகப் பட்டியலிடப்பட அனுமதி, பெருநிறுவன சமூக பொறுப்பு நடைமுறைகளின் ஒழுங்குமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பணவீக்கம்:
ஆகஸ்டு மாத்த்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 6.73 சதவீதத்திலும், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு 9.27 சதவீதத்திலும் உள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 14.44 சதவீதமும், காய்கறிகளின் விலைவாசி உயர்வு 11.41 சதவீதமும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 7.06 சதவீதத்தில் உள்ளது.
ஆகஸ்டில் உற்பத்தி நிலை:
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, முதன்மைத் தொழில்துறைகளின் உற்பத்தி ஆகஸ்டில் 8.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது; ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான காலத்தில் 17.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
நிலக்கரி மற்றும் உரம் தவிர மற்ற அனைத்துத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது. நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதமும், உரவுற்பத்தி 7.3 சதவீதமும் நேர்நிறை வளர்ச்சி பெற்றுள்ளது.சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 19.1 சதவீதம் வீழ்ந்துள்ளது, அதற்கு அடுத்தபடியாக சிமெண்ட் உற்பத்தி 14.6 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 9.5 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி சதவீதமும் 6.3, எஃகு உற்பத்தி 6.3 சதவீதமும், மின்சாரத்துறை 2.7 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
ஜூலையில் உற்பத்தி நிலை:
புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி முதன்மைத் துறைகளின் உற்பத்தி 10.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் சுரங்கத் துறையில் 13.0 சதவீதமும், செய்பொருளாக்கத் துறையில் 11.1 சதவீதமும், மின்சாரத் துறையில் 2.5 சதவீதமும் வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள், புகையிலை தவிர மற்ற அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது.
பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டில் உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 6.7 சதவீதம் உயர்ந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் எதிர்மறையாக உள்ளது. மூலதனப் பொருட்கள் (22.8 %), முதன்மை பொருட்கள் (10.9%), இடைநிலைப் பொருட்கள் (12.5%), கட்டுமானப் பொருட்கள் (10.6%), நீடித்த நுகர்வுப் பொருட்கள் (23.6%) ஆகியவற்றின் உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
”மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அனைத்தையும் உற்பத்தி செய்யும் விதமாகத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளோம், தற்சார்புப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூவி வருகிறது. ஆனால் தரவுகள் அதைப் பொய்யாக்கியுள்ளன. ஒரு நாட்டின் தற்சார்பையும், பொருளாதார வளர்ச்சியையும் நிர்ணயிப்பதாக செய்பொருளாக்கத்துறை உள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் இந்த உற்பத்தித் துறையின் பங்கு 2007இல் அதிகபட்சமாக 24.30 சதவீதம் இருந்தது 2019ல் 13.72 சதவீதத்திற்குச் சரிந்து குறைந்தபட்சமாக ஏப்ரல் 2020ல் 66.6 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செய்பொருள் உற்பத்தித் துறை கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பதை அறிய முடியும்.
இது கோவிட்-19 தாக்கத்தின் விளைவு மட்டுமல்ல, கோவிட்-19க்கு முன்பே 2019இல் செய்பொருள் உற்பத்தித் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. செய்பொருள் உற்பத்தித் துறையினை மேம்படுத்தவோ அல்லது உள்ள நிலையிலாவது காக்கவோ எந்தச் சிறப்பு திட்டங்களும் பாஜக அரசிடம் இல்லை.
அந்நிய முதலீடுகளும், தனியார்மயமுமே அனைத்துப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குமான சர்வரோக நிவாரணி என பாஜக அரசு கண்மூடித்தனமாக நம்புகிறது. புதுமைகளைப் புகுத்தும் புத்தாக்க நடவடிக்கைகளின் மூலம் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடைமுறைகளை அனைத்து துறைகளிலும், குறிப்பாக முதன்மையான உற்பத்தித் துறைகளில் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.
ஆனால் பாதுகாப்புத் துறையில் மட்டுமே புத்தாக்கத்தையும், ‘தற்சார்பையும்’ ஊக்குவிக்கும் பாஜக அரசின் அணுகுமுறைகளும், நடவடிக்கைகளும், இந்தியா இஸ்ரேலின் பாதையில் பயணிக்கிறதோ என்ற ஐயப்பாட்டை உறுதிசெய்கிறது. தற்போது ராஷ்ட்ரிய ராகாஷ் இராணுவப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட தலைகீழ் திருப்பத்தின் வெளிப்பாடாக இராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
பாஜக அரசு பாதுகாப்புத் துறையில் அரசின் அனுமதி பெறாமல் செய்யக் கூடிய நேரடி அந்நிய முதலீடுகளுக்கான உச்ச வரம்பை 74 சதவீதமாகத் தளர்த்தியுள்ளது. 74 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்யவே அரசின் அனுமதி தேவை என்று நெறிகளை தளர்த்தி அதைத் தற்சார்பென்று கொண்டாடுவதில் துளியேனும் தர்க்கப் பொருத்தம் உள்ளதா?.
- சமந்தா