சாதி ஒழிப்புக்கு நமக்கு இன்றும் திராவிடர் என்ற அடையாளமே தேவைப்படுகிறது. முல்லைப் பெரியாறு  நீர் உரிமை கிடைத்தும், கீழ்சாதித் தமிழனுக்கு மேல்சாதித் தமிழன் தண்ணீர் தர மறுத்தால், அது எப்படி முழுமையான உரிமையாகும் என்று, விரைவில் வெளிவர இருக்கும் ‘வெங்காயம்’ திரைப்பட இயக்குநர் ராசகுமார்கேட்டார்.

 

21.1.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு வேலூர் மாவட்டம் நெமிலி பேருந்து நிலையம் அருகில், நெமிலி ஒன்றிய கழகம் சார்பாக, தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. ப.திலீபன் தலைமையிலும், சி. செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற இப்பொதுக் கூட்டம், பாண்டி கலைமாமணி சித்தன் செயமூர்த்தியின் தமிழிசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் வேலுபிரபாகரன், இயக்குநர் சங்ககிரி ராசகுமார், மக்கள் சக்தி கட்சி கன். மோகன், திருவள்ளுவர் மன்றம் தலைவர் நா. இளங்கோ ஆகியோர் உரையாற்றினர். தற்போது ‘வெங்காயம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் சங்ககிரி ராசகுமார் தனது உரையில்:

 

நாம் பொங்கல் விழாவும், தமிழ் புத்தாண்டு விழாவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பொங்கல் வைப்பதற்கு நல்ல நாள் எது? அடுப்பு பற்ற வைக்க நல்ல நேரம் எது? என்பது பற்றியெல்லாம் இப்போது பத்திரிகைகள் எழுத ஆரம்பித்துவிட்டன. மூட நம்பிக்கை இல்லாத, ஆபாச கதை இல்லாத ஒரே பண்டிகையான நம் பொங்கல் விழாவிலும் பார்ப்பனர்கள் நுழைந்து விட்டதால், இனி வரும் காலங்களில், நமது வீடுகளிலும், காடுகளிலும் பொங்கல் வைக்கக் கூடாது. கோவில்களில்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்ற நிலை வந்துவிடும். இதை கொண்டு சேர்க்கிற ஊடகங்கள் பகுத்தறிவுக்கும், முற்போக்குக்கும் எப்பொழுதும் முன்னுரிமை கொடுப்பதில்லை. மக்களை சீரழிக்கும் நிகழ்ச்சிகளைத் தான் ஒவ்வொரு தொலைகாட்சியும், பத்திரிகையும் பரப்பி வருகிறது. என்னுடைய தாத்தாவின் ஜாதகம், ஓலைச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது. எனது அப்பாவின் ஜாதகம் குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. எனது ஜாதகம் கணினியில் வடிவமைக்கப்பட்டு, அச்சடிக்கப்பட்ட தாளாக இருக்கிறது. இப்பொழுதெல்லாம் இணைய தளத்தில் பிறந்த தேதியை போட்டு ஜாதகம் பார்த்துக் கொள்கிற நிலை வந்துவிட்டது. ஆனால் நாம், பகுத்தறிவு கருத்துகளை பரப்புவதற்கு, பயன்படுத்தும் அதிகபடியான யுத்தி மேடைகள்தான். அதற்கடுத்து மலிவான காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நமது பத்திரிகை. இதை வைத்து என்ன செய்ய முடியும்? இங்கு இருப்பவர்கள் எல்லாம் சாதி வெறி அற்ற, மதவெறி அற்ற பகுத்தறிவுவாதிகள் மட்டும்தான் கூடியிருக்கிறோம். நமக்கு நாமே பேசிக் கொள்வதற்கா இந்த மேடை?

 

 

அந்த தள்ளாத வயதிலும் பெரியார் அன்றே சொல்லியிருக்கிறார். “இந்த மக்களிடையே மண்டி கிடக்கும் மூடநம்பிக்கைகளும், பிற்போக்குத்தனமும் பெரிய புற்றுநோய் போன்றது. சாதாரணமாக மருந்து பூசுவதோ, பத்து போடுவதோ சரி செய்யாது. மேஜர் ஆபரேசன் செய்தால்தான் அகற்ற முடியும்” என்று. நாம் பெரியார் சொன்ன மேஜர் ஆபரேசனை செய்தாக வேண்டும்.

 

இப்பொழுது இன்னொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், நாம் தமிழரா? திராவிடரா? என்பதுதான். நமது மேடைகளுக்கு கூடும் கூட்டத்தைவிட, தமிழர் என்று சொல்லுகின்ற மேடைகளுக்கு அதிகமாக கூடும் கூட்டத்தைப் பார்த்து நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழர் என்ற உணர்வோடு நாம் அங்கு போய் நிற்கிறபோது, “திராவிடத்தை வீழ்த்துவோம்” என்ற சொல் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ‘திராவிடர்’ என்பது அவ்வளவு மோசமான வார்த்தையா? இந்த திராவிடர் என்ற வார்த்தை, தமிழ் தேசியத்திற்கு என்றுமே எதிராக இருந்ததில்லையே! நமக்குள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் சரி செய்யப்பட வேண்டுமானால், நமக்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஆரியத்திற்கு எதிராக, இன்றைகல்ல, என்றைக்குமே ‘திராவிடர்’ என்ற அடையாளம் அவசியமாகிறது.

 

தமிழராய் ஒன்றிணைவோம் என்று சொல்லிக் கொண்டு, பார்ப்பனர்களை சேர்த்துக் கொண்டு போராடினால் என்ன நிலையை சென்றடையும்? நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலையாமல், காவிரியில் தண்ணீர் தரவில்லை. முல்லை பெரியாறில் தண்ணீர் தரவில்லை. தமிழராய் ஒன்றிணைந்து போராடலாம் என்று அழைப்பு விடுத்தால், கீழ் சாதிகாரன் ஏறும் வாகனத்தில் மேல்சாதிக்காரன் ஏற மறுப்பான். போராடி பெறுகிற தண்ணீரைகூட மேல்சாதிகாரந்தான் உரிமையோடு குடிக்க முடியும். கீழ் சாதிகாரனை கைகளை ஒட்ட சொல்லி தண்ணீர் ஊற்றுகிற நிலைதான் இருக்கும். ஆட்சியில் இருந்துகொண்டு சட்டம் இயற்றினாலும் கூட, சாதி மாற்றி திருமணமும் செய்வதோ, உணவு உட்கொள்வதோ முடியாத காரியம். சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டிய முக்கியமானது. காலங்காலமாக நம் மூலையில் புகுத்தப்பட்டிருக்கும் ஆரிய சிந்தனையால், நமக்குள் மண்டி கிடக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை கலைவதற்கு திராவிடர் என்ற சொல் தான் தேவைப்படுகிறது. திராவிடர் என்ற சொல்தான் நமக்கு உரிமையை பெற்று தந்தது.

 

பெரியார் பேசுகிறபோது, அவர் மீது கற்களையும், சாணியையும், மலத்தையும் வீசுவார்கள். அதுதான் நமது கொள்கைகளுக்கு கிடைத்த பரிசு. இந்த மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய பெரியாரின் கருத்துகள்தான் நமக்கு தேவையாக இருக்கிறது. எவன் ஒருவன் சலசலப்பை ஏற்படுத்துகிறானோ அவன்தான் முதலில் கருப்புச் சட்டை அணிந்து வருவான். நாம் ஒரு வேலை கொள்கையில் இருந்து பின்வாங்கி விட்டோமோ என்ற எண்ணம் வருகிறது. அடுத்த ஆண்டாவது, இங்குள்ள நூறு பேர் ஒரு ஆயிரம் பேராக மாற வேண்டும். பெரியாரின் கருத்துகளை வேகமாக கொண்டு செல்ல வேண்டும் என்று பேசினார். இறுதியாக தோழர் பகலவன் நன்றி கூறினார்.

Pin It