ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக “தி வயர்” இணைய ஊடகத்தில் மே 2-ஆம் தேதி பல்வேறு ஆதாரங்களுடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி, மாவட்ட அலுவலங்கள் கட்டுவதற்காக 2,661 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. மற்ற அலுவலகங்கள் கட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சி செலவிட்ட தொகை 900 கோடி ரூபாய். மாநில தேர்தல்களுக்காக 16,492 கோடி ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தல்களுக்காக 54,000 கோடி ரூபாயில் இருந்து 87,750 கோடி ரூபாய் வரை பாஜக செலவிட்டிருப்பதாக அந்த கட்டுரை கூறுகிறது.

ஒட்டுமொத்தத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை 74,053 கோடி ரூபாயில் இருந்து 107,803 கோடி ரூபாய் வரை இருக்கலாம். இது அந்த கட்சி அறிவித்திருக்கிற மொத்த வருவாயின் மதிப்பை விட 5 முதல் 7 மடங்கு வரை அதிகமாகும். 2014-15 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் பாஜக அறிவித்திருக்கும் மொத்த வருவாயின் மதிப்பு 14,663 கோடி ரூபாய் மட்டுமே. அப்படியானால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை பாஜக எப்படி செலவு செய்தது என்ற கேள்வி எழுகிறது.

bjp expensesஅதுமட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 444. டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கு பாஜக தரப்பில் தலா 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். அதேபோல கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியிருந்தார். கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இப்படி மாற்று கட்சியினரை பாஜகவுக்கு இழுக்க பேரம் பேசப்பட்ட தொகையின் மதிப்பே பல்லாயிரம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம், துவாரகா எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம், பி.எம்.கேர்ஸ், ரஃபேல் ஊழல் என பாஜக தொட்ட திட்டங்களில் எல்லாம் மெகா ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஊழல் பணம்தான் பாஜகவுக்கான அலுவலகங்களாகவும், மாற்று கட்சியினரை இழுக்க கொடுக்கப்பட்ட பேரத் தொகையாகவும் வழங்கப்பட்டவையா என்ற சந்தேகம் தேர்தல் களத்தில் வலுவான எழுந்திருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It