"தேசத் துரோகம்”, “தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு” என்ற இரண்டு மிரட்டல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் கருத்துரிமைகளைக் குழிதோண்டி புதைத்து வருகிறார்கள் ஆட்சியாளர்கள். கடந்த காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி; தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக வந்த பிறகும் சரி; இரண்டு ஆட்சிகளிலும் தமிழின உணர்வாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ‘தடா’ சட்டங்கள் பாய்ந்தன. ‘தடா’ சட்டம் இல்லாத நிலையில் தேசப் பாதுகாப்பு சட்டம் பாய்கிறது!

 

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதே ‘தேச விரோதம்’ என்று தமிழக காவல்துறை மக்களை அச்சுறுத்துகிறது. தடா சட்டப் பிரிவுகளின் கீழ் அப்படித் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்த பிறகும்கூட தமிழ்நாட்டில் இரண்டு ஆட்சிகளிலுமே அடக்குமுறை சட்டங்கள் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கடந்த பிப். 8 ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள மற்றொரு முக்கிய தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அசாம் அய்க்கிய விடுதலை முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்த இந்திரதாசு என்பவர், தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ‘தடா’ நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் ‘தடா’ நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்துள்ளது. நீதிபதிகள் மார்க்கண்டே கட்ஜ் மற்றும் ஜியான் சுதாமிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

 

“தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றமாகிவிடாது. அவர் ஏதேனும் வன்முறை சீர்குலைப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டிருந்தால்தான் குற்றமாகும். சட்ட விரோத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் அடங்கியுள்ள சட்டப் பிரிவுகளை தனியே பிரித்துப் பார்க்காமல், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளோடு இணைத்துத் தான் பார்க்க வேண்டும். நாட்டில் மிக உயர்ந்தது அரசியலமைப்பு சட்டம் தான். அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அப்படி அரசியலமைப்புக்கு எதிரானதாகத் தோன்றும் எந்த சட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் சட்டத்துக்கு எதிரானது என்றே அறிவிக்க வேண்டும். இல்லையேல், அரசியலமைப்புக்கே குழிபறித்து அந்த சட்டத்தை நியாயப்படுத்த வேண்டும். தடா சட்டத்தின் 3(5) பிரிவு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10 போன்றவை தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதே குற்றம் என்று கூறுகிறது. இந்த சட்டப் பிரிவுகள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பிரிவுகள் 19 மற்றும் 21க்கு எதிரானவையாகும். இதேபோல் இந்திய தண்டனைச் சட்டத்தில் சதிச் செயலுக்கு எதிரான பிரிவு 124(ஏ) என்பதையும், அடிப்படை உரிமைகளோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும்” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இதே போன்று கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம், இதே அசாம் விடுதலை அய்க்கிய முன்னணியில் உறுப்பினராக இருந்த அரூப்பியான் என்பவர் மீது ‘தடா’ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி மட்டுமல்ல; பாரதிய ஜனதாவும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதைத் தள்ளுபடி செய்ததோடு, பிப்.8 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், அதை மீண்டும் உறுதி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், அடக்குமுறை சட்டங்களை முறைகேடாக பயன்படுத்தத் துடிப்பதைப் போலவே “தேசிய” கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இதே கருத்துகளையே கொண்டுள்ளதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

 

அன்னிபெசன்ட், திலகர் மீது தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்து, சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசின் “பிரிவி கவுன்சில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு திட்டமிட்டாலே தேச விரோதம்” என்று கூறியது. உச்சநீதிமன்றம் பிரிட்டிஷ் ஆட்சியின் ‘பிரிவி கவுன்சில்’ கருத்தை ஏற்கத் தயாராக இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, பல்லாயிரக் கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததற்கும், தமிழ்ப் பெண்கள் மீது இந்திய ராணுவம் பாலியல் வன்முறைகளை நடத்தியதற்கும், ஈழத் தமிழர்கள் வழங்கிய தண்டனைதான், ராஜீவ் மரணம் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அரசியலமைப்பு வழங்கிய கருத்துரிமையின் அடிப்படையில் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை தி.மு.க. ஆட்சி ஏவியதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

தோழர்கள் சீமான், மணியரசன் போன்றவர்களும் இதே போன்ற அடக்குமுறைக்கு உள்ளானர்கள். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தெளிவான தீர்ப்பை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தடை செய்யப்பட்ட அசாம் விடுதலை இயக்கத்தினரோடு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைநகரில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதே குற்றம் என்று கூறிக் கொண்டு, அதற்கான அடக்குமுறை சட்டங்களை உருவாக்கிக் கொண்டு, பிறகு, அவர்களுடன் பேச்சு வார்த்தையை எப்படி நடத்த முடியும்? இந்த சட்டங்களின்படி “குற்றவாளியுடன்” பேச்சுவார்த்தை நடத்தும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் குற்றவாளியாகி விடுவாரே!

 

நாட்டின் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், சட்டப் புத்தகத்தில் இடம் பெறுவதே அவமானமாகும்!

Pin It