இன்று மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் பெரும் பகுதியை கல்விக்கும் மருத்துவத்திற்கும் மட்டுமே செலவழிக்கின்றனர். உயிர் வாழ்தலுக்கு அடிப்படையானது மருத்துவம். அதைப் பொருள்ள தாக்குவது கல்வி இவையிரண்டையுமே விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தான் இன்றைய சமூகம் இருக்கிறது. மருத்துவத் துறையாவது ஓரளவு அறிவு மூலதனத்தை எதிர்நோக்குகிறது. ஆனால் கல்வித் துறைக்கு அப்படிப்பட்ட எந்தக் கட்டுப்பாடும் இல்லை. முன்னாளைய சாராய வியாபாரிகளும், மதுக்கடை உரிமையாளர்களும் இன்றைய கல்வித் தந்தைகளாக காட்சியளிப்பதிலிருந்து இதை உணரலாம். உள்ளூர் பெருந்தனக்காரர்கள் முதல் உலக முதலாளிகள் வரை எவர் வேண்டுமானாலும் கடை விரிக்கலாம். இதற்கு கல்வி சார்ந்த எந்த ஒரு அடிப்படைப் புரிதலும் தேவையில்லை. கோடிகளும் கேடிகளும் கொழிக்கும் கொழுக்கும் துறையாக கல்வித்துறை திகழ்கிறது.

“கழிவறைகளை விடவும் அதிகமாக கல்வி நிலையங்கள். குப்பை வண்டிகளை விடவும் அதிகமாக பள்ளிப் பேருந்துகள். பத்து ரூபாய்க்கு மூன்று பொருள் என்று கூவி விற்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் போல மூலை முடுக்கெல்லாம் கல்வி நிலைய விளம்பரப் பலகைகள். மூன்று வயதுக் குழந்தைக்கு கணினி வழியில் கல்வியாம் (?) இடது மூளை, வலது மூளை என்று தனித்தனியாக இயக்கும் செயல் திறன் பெற்ற கல்வி முறை எங்களுடையது'' என்று ஒரு தனியார் பள்ளி விளம்பரப்படுத்துகிறது. (எப்படியும் மூளையை மழுங்கடிக்கத்தான் போகிறார்கள் இதில் பாகப்பிரிவினை வேறா?)

குழந்தைகளின் பன்முக ஆளுமைகளை வளர்த்தெடுக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடல், பாடல், ஓவியம் என்று தனித்தனி வகுப்புகள், தனித்தனி கட்டணங்கள் பாடல் பயிற்சி பெறும் குழந்தைகள் "கொலைவாளினை எடடா..' என்றா பாடுகிறது. "குறை ஒன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா' என்றல்லவா பாடுகிறது. ஆடல் பயிற்சி பெறும் குழந்தை பன்னாட்டளவில் புதுமை செய்கிறதா? ஆடல் கலையில் இல்லை தொலைக் காட்சிகளில் ஓடி விளையாடு பாப்பா, தொடங்கி மானாட மயிலாடலில் முடிகிறது. இவை எல்லா வற்றையும் தாண்டி முதல் மதிப் பெண் மாணவர்கள் வளாகத் தேர்வில் வெற்றிபெற்று பெரு முதலாளி களிடம் முழு நேர அடிமைகளாகச் சேர்ந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட கல்வியைப் பெறுவதற்கு இலட்சங்களில் முன்பதிவு.

இந்திய துணைக் கண்டம் விடுதலை பெற்று அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அடுத்த பத்தாண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி எனும் நிலையினை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நாள் வரையிலும் அந் நிலையை அடைய முடியவில்லை என்பதே உண்மை நிலை.

இந்தியா வல்லரசு நாடு. உலக அரங்கில் தவிர்க்க இயலாத நாடு என்றெல்லாம் பெருமைப்பட்டு கொள்கிறது. கல்வி பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்ற நிலையை அடைவதற்குக் கூட நாடு விடுதலை அடைந்த பின்னர் இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள உலக கண்காணிப்பு (எடூணிஞச்டூ Mணிணடிtணிணூடிணஞ் கீஞுணீணிணூt) அறிக்கையின்படி 2015 ஆம் ஆண்டில் கூட அனைவருக்கும் கல்வி எனும் இலக்øக் அடைய முடியாத நாற்பது நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும் என்று கூறுகிறது. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவில் கல்வி அடிப்படை உரிமை என்ற மனநிலையை ஏற்படுத்த இரண்டாயிரத்து பத்து ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதில் விடுதலை பெற்று அரை நூற்றாண்டிற்கும் மேலாகிலும் இந்திய பார்ப்பனிய அரசாங்கம் கல்வி அடிப்படை உரிமை என்பதை ஏற்று சட்டம் செய்யவில்லை. 1993 ஆம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம், "கல்வி பெறும் உரிமை யானது மக்களின் அடிப்படை உரிமை' என்றும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை வெளியிட்டது. இத்தீர்ப்பு வெளியான பிறகும் பல்வேறு போராட் டங்களின் விளைவாக ஏறக்குறைய 17 ஆண்டு களுக்குப் பிறகு 2009ல் கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2010 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய அதே ஆண்டில் தமிழக அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியுள்ளது. 2010 2011 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்ககும் 2011 12 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு அரசியல் தடைகளுக்கு நடுவே தமிழக அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்திய துணிகரத்தை வரவேற்கும் அதே நேரத்தில் சமச்சர் என்பதன் வரையறை என்ன? எனும் கேள்வியும் நம்மிடையே எழாமல் இல்லை.

சமச்சீர் கல்வி என்பது சமமான கல்வி. அதாவது வேறுபாடற்ற கல்வி என்பது பொருளாகும். இன்னும் ஆழமாகப் பார்த்தோமானால் அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும்இடையே நிலவுகிற வர்க்க வேறுபாட்டை அகற்றி இரண்டையும் சமன் செய்கிற கல்வியே சமச்சீர் கல்வி என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

இதனடிப்படையில் சமச்சீர் கல்விக்கான பாடநூல், கற்பிக்கும் மொழி, கால அளவு, மதிப்பீட்டு முறைகள், நடைமுறைப்படுத்தும் பள்ளிகள், பள்ளிகளின் கட்டமைப்பு முறை, ஆசிரியர் மாணவர் விகிதம் என்று ஒவ் வொரு படியிலும் தமிழக அரசு சொல்லுகிற சமச்சீர் என்ற சொல்லின் பொருள் என்ன?

சமச்சீர் கல்வி முறையில் சமச்சீர் கல்வி என்ற சொல் மட்டும்தான் தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் பொதுவானது. மற்றபிறஅரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பயிற்று மொழி தமிழாகவும், ஆங்கில வழி தனியார் பள்ளிகளுக்கு பயிற்று மொழி ஆங்கிலமாகமே தொடர்கிறது.

தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வி பாடநூலோடு தனியார் நிறுவனங்களின் பாட நூல்களையும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதித்துள்ளது. மேலோட்டமாகப் பார்த்தோமானால் சமச்சீர் கல்வி என்பது போல் தோன்றினாலும் எந்தப் பாடநூலைப் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கி யுள்ளது. வெறுமனே ஒரு துணைப் பாடத்தைப் போலத்தான் சமச்சீர் கல்விப் பாடங்கள் பயன் படுத்தப்படுகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் நடைமுறையிலுள்ளது. சமச்சீர்க் கல்விக்கேற்ப அட்டைகளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க அட்டை களைப் பயன்படுத்தயே செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள் கற்பிக்கப்படுகின்றன. செயல்வழிக் கற்றல் முறை ஏணிப்படியால் பாடநூல் ஒரு குறியீடாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட பாட நூலிற்கான பயன்பாடு குறைவு. மேலும் அப்பாடநூலைப் பயன்படுத்துவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்வதும் மிகவும் கடினம்.

அழகிய தாளில் அழகிய வண்ணங்களில் தரமான கட்டமைப்பில் குழந்தைகளின் மனதைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்ட பாட நூலானது வெறுமனே காட்சிப் பொருளாக மட்டுமே நடைமுறையில் உள்ளது என்ற உண்மை நம் நெஞ்சைப் பதற வைக்கிறது.

சமச்சர் கல்வியில் கண்ணுக்குத் தெரியும் அடிப்படை ஆதாரமான பாட நூலுக்கே இந்த நிலை என்றால் மற்றவைகளுக்கு சொல்லவே தேவை யில்லை.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப் பணிக்குச் செல்வது அரிது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சமச்சர் கல்வி நடைமுறைப்படுத்திய முதல் ஆண்டிலேயே மக்கள் தொகைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கல்வியாண்டின் தொடக்கத்தில் சூன், சூலை மாதத்திலும் கல்வியாண்டின் இறுதியில் பிப்ரவரி மாதத்திலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மக்கள் தொகைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிப்ரவரி மாதத்தில் கணக்கெடுப்பிற்காக ஒவ்வொரு நாளும் பள்ளி வேலை நேரத்தில் அரைநாள் ஒதுக்கப்பட்டது.

ஒரு பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர் என்றால் முற்பகல் இரண்டு பேரும் பிற்பகல் இரண்டு பேரும் கணக்கெடுக்க அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு இரண்டு ஆசிரியர்கள் சென்று விட்ட பின்பு மீதமுள்ள இரண்டு ஆசிரியர்கள் அனைத்து வகுப்பு குழந்தைகளையும் அமர வைத்து கவனிக்க முடியுமே தவிர பாடம் நடத்த இயலாது. இந்த நிலைதான் இரண்டு கட்ட கணக்கெடுப்பின் போதும் நீடித்தது. பிப்ரவரி மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உச்சகட்டமான நேரம். அந்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு களத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம்.

இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்தான். ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இந்நிலையில் மாற்றுப்பணி வேறு. 201112 ஆம் கல்வியாண்டிலும் சூன் முதல் செப்டம்பர் வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூன்றாம் கட்டப் பணிக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தரம் இருக்கிறதோ இல்லையோ முழுக்க முழுக்க ஆசிரியரின் மேற்பார்வையில்தான் தனியார் பள்ளி களின் வகுப்பறைகள் உள்ளன. ஆனால் அரசுப் பள்ளிகளில் நிலைமை அவ்வாறில்லை. இதில் சமச்சீர்க் கல்வி என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?

ஒரு கல்வியாண்டு என்பது ஒரு தலைமுறை சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரம்ப கட்டத் திலேயே அரசுப் பள்ளிகளில் இரண்டு தலைமுறை மாணவர்கள் இழப்பைச் சந்தித்து விட்டனர்.

மக்கள் தொகை கணக்கெடுக்க ஆசிரியர்களைத் தவிர வேறு எவருமே இல்லையா?

“கல்வி உரிமை என்றோ, சமச்சீர் என்றோ எந்தப் பெயரில் வந்தாலும் இந்தியக் கல்வியானது சாதி, மதம், பாலினம், வர்க்கம், மொழி என எல்லா வகையான பிரிவினைகளையும் தலைமுறைக்கும் தொடர வைக்கும் தளமாகவே தொடரும்!

இந்த நேரத்தில் லட்சுமணனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

பள்ளிக்கூடும்
வீடு.....

.....

அதான் தூங்குவமே
ஓ! கூரே

 
தாய்...
ம் அஃகா

 
தந்தை...
அம்மே

தவளை...
ம்கூம்
கப்பே....

சொன்னதை திருப்பிச் சொல்லு
பிரம்பு பிஞ்சிடும்

..........
..........
 
வகுப்பூக்கு வெளியே
முட்டிபோட்டு நின்று கொண்டிருக்கோம்
நானூம்
எத்து மொழியும்

ஏழைப் பழங்குடி மாணவனின் இந்த ஏக்கம் நடைமுறையில் தொடரும் வரை "சமச்சீர்' என்று அழகிய சொல்லில் நீங்கள் விளிப்பது சீவக்கட்டைக் குப் பட்டுக் குஞ்சம் கட்டியதைப் போல வெறும் வார்த்தை ஜாலமும், மேனா மினுக்கித் தனமுமே மிஞ்சும்.

Pin It