இந்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அனைவருக்கும் அரசு வேலை அல்லது பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பது அல்ல.

உழைக்கும் ஏழைமக்கள் கூலிகளாகவே உழைத்து கூனி, குறுகி ஒருவேளை கஞ்சி மட்டுமே குடிக்க வேண்டும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. அரசியல் வாதிகள், அயோக்கியர்கள், சமூக விரோதிகள் இவர்களின் செயல்பாட்டை தட்டிக் கேட்கவோ அல்லது அரசுக்கு கோரிக்கை எழுப்பி போராட்டம் நடத்தவோ அவர்கள் துளி அளவேனும் சிந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே ஏழை எளிய மக்கள் மழையானாலும், வெயிலானாலும் மாடாக உழைக்கவேண்டும். உழைப்புக்கு ஏற்ற கூலி இல்லை. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 80 ரூபாய் கூலி வழங்கி வருகிறது. அதில் 20 ரூபாய் ஊராட்சி மன்றத்தலைவர் தண்டம் (கமிசன்) எடுத்துக் கொண்டு விடுகிறார்.

இப்படி மக்களை நாட்டைப் பற்றி சிந்திக்க விடாமல் அவர்களது சுதந்திரத்தைப் பறிந்து அடிமைத்தனமாக வாழ வைப்பது, அடிமைகளாக நடத்துவது இந்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் என்றால் மிகையல்ல!

இப்படி தமிழகத்தில் அரசின் சாதனைகளாகக் கூறிக் கொண்டு புதிய வணிக யுக்தியை புகுத்தி மக்களை சுரண்டி கொழுப்பதுதான் திமுக அரசின் சாதனை. மக்களை தேர்தலுக்காக காசு கொடுத்து அவர்களைக் கட்டாயப் படுத்தியும் குண்டர்களையும் ஏவி, கையூட்டை மக்களிடம் நியாயப்படுத்தியும் வாக்களிக்க நிர்ப்பந்திக்கின்ற புதிய யுக்தியை இம்முறை திமுக கையாண்டது.

இதுபோல கிராமங்களில் உழைக்கும் மக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அப்பகுதிவாழ் உயர் சாதிகளின் தெருக்களை சுத்தம் செய்தல், மேல் சாதி கோயில் குளங்களைச் சுத்தம்செய்தல், மேல் சாதியினர் மட்டுமே பயன்படுத்தும் பள்ளிகள், மேல் சாதியினர் தெரு சாக்கடை சுத்தம் செய்தல், மேல் சாதியினர் பயன்படுத்தும் மனமகிழ் மன்றங்கள், பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், நீர்வரத்து ஓடைகள், குளங்கள் போன்றவைகளை சுத்தம் செய்வது தாழ்த்தப்பட்ட மக்களின் மீது திணிக்கப்பட்ட புதிய தீண்டாமைக் கொடுமைகள் ஆகும்.

ஆனால் தப்பித் தவறி மேல் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குளங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருக்கள், கோயில்கள், பொது இடங்கள் போன்றவைகளை சுத்தம் செய்து விட்டால் அவர்கள் மீது தீட்டு பட்டு விடும் என்பதனால் இவ்வேலைகளுக்கு பஞ்சாயத்து நிர்வாகமே அழைப்பது கிடையாது. மீறி அழைத்தாலும் மேல் சாதியினர் தவறியும் வேலைக்கு வருவதில்லை.

மேலும் இதுபோல் மேல் சாதியினர் பயன்படுத்தும் இடங்களுக்கான சுத்தம்செய்யும் வேலைகளுக்கு கட்டாயமாக தாழ்த்தப்பட்டவர்கள் வர வேண்டும். தவறினால் சம்பளம் கிடையாது. வேலையும் கிடையாது. இது அரசே மக்கள் மீது திணிக்கின்ற புதிய தீண்டாமை யாகவே கருதப்படுகிறது.

அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம், பழவூர் கிராமத்தில் 25.04.2011 அன்று மேல் தட்டு மக்களாகிய சாதி இந்துக்கள் மட்டுமே பயன்பெறும் அரசு தொடக்கப் பள்ளியை சுற்றிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

இங்குள்ள சாக்கடை கழிவு நீர், குழந்தைகள் பயன்படுத்தும் சிறுநீர் கழிவுகள், பள்ளியைச் சுற்றிலும் மேல் சாதியினர் பயன்படுத்தும் கான்கிரீட் சாலைகள் மற்றும் பள்ளியைச் சுற்றிலும் மேல் தட்டு சாதியினரால் ஏற்படுத்தப்பட்ட குப்பை கூளங்களை பழவூர் தாழ்த்தப் பட்ட (மக்கள்) பெண்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதே இடத்தில் ஒரு மேல் சாதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான நடுகாட்டு இசக்கியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலைச் சுத்தம் செய்யும் பணியில் மேல் சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேல் சாதி பள்ளிக் குழந்தைகளின் கழிவுகளை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே மிக அருகில் சுத்தம் செய்து கொண்டிருக்க, ஒரு பெண்ணோ அல்லது ஆணோ மேல் சாதியினர் அந்தப் பணியில் ஈடுபட வில்லை. ஈடுபடுத்தப்படவும் இல்லை. அதேவேளை மேல் சாதிக்காரர் மட்டுமே வழிபடும் கோயிலினை குப்பைகளை அகற்றி சு“ததம் செய்வதாகக் கூறி பணி செய்த அனைவரும் மேல்சாதியினர் மட்டுமே. தவறிக் கூட தாழ்த்தப் பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இப்படித்தான் புதிய தீண்டாமைக் கொடுமைகளை இந்த 100நாள் வேலைத் திட்டம் எனும் பெயரில் அரசே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணித்து வருகிறது.

அண்மையில் உச்ச நீதிமன்றம் நாட்டில் இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டவர்களை சாதியைக் குறித்து இழிவாக அழைத்தாலோ ஏசினாலோ, வன்கொடுமை தடை சட்டத்தின்படி குற்றமிழைத்ததாக வழக்குப் பதிவு செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் காவல் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மீதுவழக்குப் போடலாம் என்று தீர்ப்பு வழங்கியது நினைவிருக்கலாம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி வெறிக்கு எதிராக ஓரணியாகாமல் திரண்டு ஒரு மாபெரும் புரட்சியை முன்னெடுக்காமல் சாதியை ஒழித்து விட முடியாது. ஆண்டைகளின் அரசையும் இந்தியப் பார்ப்பனியத்தின் வேரையும் கிள்ளி எறியாமல் உழைக்கும் மக்கள் ஒன்றாக இணைய முடியாது.

உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து மக்கள் புரட்சியை முன்னெடுக்கும் போதுதான் இதுபோன்ற புதிய தீண்டாமைக் கொடுமைகளை தடுக்க முடியும். அதுவரையில் எந்தச் சட்டம் போட்டால் என்ன எந்தத்தீர்ப்பு வந்தால் என்ன ஆண்டைகளும் ஆதிக்கச் சாதியினரும் புதுப்புது தீண்டாமைக் கொடுமைகளை புகுத்தி மக்களை பிளவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.

Pin It