6-4-2021 முற்பகல் 11 மணி அளவில் புதுச்சேரியில் ஆனைமுத்து அய்யா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்து முனைவர் முத்தமிழ்ச் செல்வன் அழுதுக்கொண்டே அய்யா மறைந்து விட்டார் என்றத் துயரச் செய்தியை என்னிடம் கூறினார். எதிர்பாராத இந்தத் துயரச் செய்தியால் மீளாத் துயரில் மூழ்கியிருந்தேன். 5 மணித்துளிகள் கழித்து என்னிடம் ஆனை. பன்னீர் செல்வம் அவர்களும் இச்செய்தியை கூறினார் அலைபேசியிலேயே அவரிடம் கதறி அழுதேன்.

ve aanaimuthuஇச்செய்தி மா.பெ.பொ.க.வின் தோழர்கள் அனைவருக்கும் ஊடகங்களுக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நாள். புதுவை யிலிருந்து அன்று மாலையே உடல் தாம்பரம் இரும்புலியூர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. தோழர்கள் சிலர் அன்று மாலையே அங்கு வந்து சேர்ந்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் அவர்கள் டி.ஆர்.பாலு, நா.ம.உ., எஸ்.ஆர். ராஜா, ச.ம.உ. ஆகியோருடன் நேரில் வந்து அன்று இரவு அஞ்சலி செலுத்தினார்.

மா.பெ.பொ.க தோழர்களும் தோழமைக் கட்சியினரும் 7-4-21 காலை முதலே வந்து தங்கள் இறுதி வணக்கத்தைச் செலுத்தினர். அன்றைய நாள் முழுவதும் ஏராளமான பொதுமக்களும், உறவினர்களும் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அவருடைய குடும்பத்தினரும், தோழர்களும் மீளாத்துயரில் ஆழ்ந்திருந்தனர்.

அய்யா அவர்களின் விருப்பப்படி அன்று மாலை 5.30 மணி அளவில் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

மறைந்த நம் தலைவர் அய்யா அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடியில் வேம்பாயி - பூவாயி இணையருக்கு மூத்த மகனாக 21-06-1925 அன்று பிறந்தார். மாணவப் பருவத்திலேயே கணபதி ஆசிரியர் தொடர்பால் பெரியாரைப் பற்றி அறிந்து கொண்டார்.

பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது, தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் தொடர்பால் தனித்தமிழையும் பெரியாரியக் கொள்கைகளிலும் தெளிவு பெற்றார். அங்கு 11-10-1944இல் பெரியாரின் சொற்பொழிவை நேரில் கேட்டார்.

1946 முதல் 1949 வரையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், அந்நூலகத்தில் இருந்த தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும், ஆங்கில நூல்களையும் கற்று தம் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொண்டார்.

பெரியார் அவர்கள் சென்னையில் 14, 15-1-1949-இல் நடத்திய திருக்குறள் மாநாட்டின் விளைவாக திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களை ஆசிரியராக அமர்த்தி, கணபதி ஆசிரியரும் இவரும் சேர்ந்து 14-7-1950-இல் “குறள்மலர் கிழமை” இதழைத் தொடங்கினார். 25 கிழமைகளில், அவ்விதழில் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தீட்டினார். திருக்குறளாரின் பேராசையால் கணபதி ஆசிரியரும் ஆனைமுத்து அய்யாவும் குறள்மலரிலிருந்து வெளியேறினர்.

1952-இல் நடைபெற்ற தேர்தலில் உழைப்பாளர் கட்சிக்காக தீவிரத் தேர்தல் பணியாற்றினார். அக்கட்சியினர் 19 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1952-இல் அரகண்ட நல்லுhர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணியில் சேர்ந்தார்.

விக்கிரவாண்டித் தொகுதியில் உழைப்பாளர் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று, தி.மு.க.வில் சேர்ந்த ஆ. கோவிந்தசாமி அவர்களின் அண்ணன் ஆ. சுப்பிரமணியன் - தையல் நாயகியின் மகள் சுசிலா அம்மையாரை 22-8-1954 அன்று தமிழ் மறவர் வை. பொன்னம்பலானர் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

1956-இல் அரசுப்பணியைத் துறந்து மீண்டும் திருச்சியில் குடியேறினார். 11-1-1957இல் தன்னுடைய சொந்த முயற்சியில் “குறள் முரசு” ஏட்டைத் தொடங்கி னார். அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகளை அவ்விதழில் தீட்டினார். தன்னுடைய துணைவி சுசீலா அம்மையாருக்குத் தாய் வீட்டினர் அணிவித்த பத்து சவரன் தங்க நகைளை, அய்ந்து மாதத்தில் விற்றுதான் இந்த இதழை நடத்தினார்.

அதே ஆண்டில் பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட் டத்தில் ஈடுபடுவதற்காக, 19 வயது மனைவியை 2 வயது மூத்த மகள் தமிழ்ச்செல்வியையும் 7 மாதக் குழந்தை பன்னீர்செல்வத்தையும் தன் சொந்த ஊரான முருக்கன்குடிக்கு அனுப்பி விட்டார்.

26.11.1957-இல் பெரம்பலூரில் அரசியல் சட்டத்தின் நகலை எரித்து, 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். திருச்சி, வேலூர் சிறையில் புத்தகம் கட்டடம் கட்டும் பணியில் உதவி யாளராக பணிபுரிந்ததால், நல்ல நூல்கள் பல வற்றைப் படித்து மேலும் தன் அறிவைப் பெருக்கிக் கொண்டார்.

1960 முதல் திருச்சியில் குடியேறி, திராவிடர் கழகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1963-இல் வருவாய்க்காக, தமிழ்நாடு தனிப்பயிற்சிக் கல்லூரி யை திருச்சியில் தொடங்கினார். 1975 வரை அது இயங்கியது.

பொறியாளர் கு. ம. சுப்பிரமணியம், நோபுள் கோவிந்தராசலு போன்றோர் துணையுடன் 7.3.1970-இல் திருச்சியில் ‘சிந்தனையாளர் கழகத்தை’த் தொடங்கினார். பெரியார் அவர்கள் கலந்து கொண்டு சிந்தனையாளர் கழகத்தை தொடங்கி வைத்தார்.

1971 முதல் 1974 வரைக் கடுமையாக உழைத்து, அரும்பாடுபட்டு, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற மூன்று தொகுதிகளை தொகுத்து அளித்தார். இன்றுவரை அத்தொகுப்புகள்தான் பெரியாரைப் பற்றி அறிந்துகொள்ள ஆவணமாகத் திகழ்கிறது.

1.7.1974-இல் திருச்சியில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அந்த தொகுப்பு நூலை வெளி யிட்டார்.

17-8-1973-இல் திருச்சியில் பாவேந்தர் அச்சகத் தைத் தொடங்கினார்.

17-8-1974 முதல் திருச்சியிலிருந்து சிந்தனை யாளன் கிழமை ஏட்டைத் தம் சொந்தப் பொறுப்பில் வெளியிட்டார்.

சொந்த அச்சகம் இருந்தும் அவர் மூத்த மகள் தமிழ்ச்செல்வி அவர்களே அச்சு இயந்திரத்தை இயக்கியும். ஓராண்டிற்குள் அவ்வேடு 8000 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் மனம்தளராமல் அவ்விதழைத் தொடர்ந்து வெளி யிட்டுவந்தார்.

பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை விரிவான அளவில் எழுதப்போவதாக 11-5-1975 சிந்தனையாளன் ஏட்டில் அறிவிப்பு வெளியிட்டார். பெரியார் மறைவுக்குப்பின் திராவிடர் கழகத்தின் தலைமையின் தவறான போக்குகளை விமர்சித்து, தி.க. மத்திய குழு உறுப்பினர்களுக்கு 13-11-1975-இல் அச்சிட்ட அறிக்கையை அனுப்பியதற்காக, 16-11-1975 இல் நடைபெற்ற தி.க. மத்திய குழுவில், தி.க. மத்திய குழுவில் இருந்தும், தி.க. விலிருந்தும் நீக்கப் பட்டார்.

உற்றத் தோழர்களின் துணையுடன் 8.8.1976-இல் சீர்காழியில் மா. முத்துச்சாமி அவர்களின் இல்லத்தில் ‘பெரியார் சமஉரிமைக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பின்பு 1988-இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி யாகப் பெயர் மாற்றம் பெற்றது.

இயக்கம், ஏடு நடத்துவதை தம் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். பெரியாரின் கொள் கைகளில் ஒன்றான வகுப்புரிமையை ஒன்றிய அரசில் வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில் 1978 முதல் தில்லியிலும் வட மாநிலங்களிலும் பல போராட்டங்களை நடத்தியும் குடிஅரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அன்றைய பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், சரண்சிங் அன்றைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ஆகியோரைச் சந்தித்தார். இவர் இராம் அவதேஷ்சிங் மற்றும் சில தோழர்களுடன் இணைந்து மேற்கொண்ட போராட்ட முயற்சியின் விளைவாகவே இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு பி.பி. மண்டல் தலைமையில் அமைந்தது. அக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்ததில் இவருடைய பங்களிப்பு மிகவும் முதன் மையானது.

1978-இல் இராம் அவதேஷ்சிங் உதவியுடன் பீகாரில் 32 மாவட்டங்களில் 32 நாள்கள் நடத்தப் பெற்ற பெரியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளும், 23-3-1979-இல் லோகியா பிறந்தநாளில் தில்லியில் நடைபெற்ற மிகப்பெரிய அளவிலான, சுமார் 30,000 பேர் கலந்துகொண்ட பெரியார் நூற்றாண்டு விழா பேரணி - மாநாடு ஆகியவைகளும் வட மாநிலங்களில் பெரியாரின் கொள்கைகள் பரவக் காரணமாக அமைந்தன.

பெரியாரின் சுதந்தரத் தமிழ்நாடு என்பதில் இருந்து சற்று வேறுபட்டு உண்மையான கூட்டாட்சி என்ற திட்டத்தை வகுத்து அதற்கான கூட்டமைப்பை உருவாக்க அரும்பாடுபட்டார்.

மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்ததில் தோழர் ஆனைமுத்து அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. மார்க்சியப் பெரியாரியம் என்றால் என்ன என்பதை விளக்கி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கரியத்தையும் உடன் இணைத்துள்ளார். 1978-இல் சென்னையில் நடை பெற்ற வகுப்புரிமை மாநாட்டில் வடமாநிலத் தலை வர்கள் பலரையும் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். 1979 சேலம் மாநாடு 1984 சென்னை மயிலாப்பூர் மாநாடு என்று தொடர்ச்சியாக வடமாநிலத் தலைவர்களை அழைத்து மாநாடுகளை நடத்தினார்.

9.10.1982 வரை சிந்தனையாளன் கிழமை ஏடு திருச்சியிலிருந்து அவருடைய சொந்தப் பொறுப்பில் வெளியிட்டுவந்தார்.

பெரியார் அச்சிடுவோர் வெளியீடுவோர் குழுமம் ஒன்றை சென்னையில் தொடங்கி, அதன் வழியாக சிந்தனையாளன் ஏட்டை 1983 முதல் சென்னையிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்தார். குழுமத்திற்கு இழப்பு ஏற்படவே, 1987 முதல் சிந்தனையாளன் இதழை வெளியிடும் பொறுப்பை பெரியார் சமஉரிமைக் கழகம் ஏற்றுக் கொண்டு, இன்று வரை அது மா.பெ.பொ.க. இயக்க ஏடாக வெளிவருகிறது.

எஸ்.ஏ.டேவிட் அவர்களின் உதவியுடன் 1994 அக்டோபர் முதல் 2012 திசம்பர் வரை 18 ஆண்டு கள் பெரியார் ஊழி (PERIYAR ERA) என்கிற ஆங்கில ஏட்டை நடத்தினார். ஈழத்தமிழர்களின் உரிமைப் போரினை உலகறியச் செய்தது அந்த ஏடு. பெரி யாரின் கொள்கைகளை வடமாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவும் அவ்வேடு பயன்பட்டது. தோழர் ஆனைமுத்து அவர்கள் பலமணிநேரம் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் திறமை பெற்றிருந்தார்.

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கை களை இளைஞர்களுக்கு விளக்கம் அளிக்க ஏராள மான பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக 1993-இல் சென்னை அம்பத்தூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார்.

1989 செப்டம்பர் 17-இல் வேலூரிலும் 1991 அக்டோபர் 19-இல் புதுதில்லியிலும் 1993, 1995 ஆகிய நான்கு மலர்கள் ‘பெரியார் பிறந்தநாள்’ சிந்தனையாளன் சிறப்பு மலராகவும், 1997முதல் ‘சிந்தனையாளன் பொங்கல்’ மலராகவும் வெளியிட்டு பல மாவட்டங்களில் இதற்கான வெளியீட்டு விழாக்களையும் சுயமரியாதை சமதர்ம மாநாடு களையும், தமிழ்வழிக் கல்வி மாநாடுகளையும் உண்மையான கூட்டாட்சி மாநாடுகளையும் ஆண்டுதோறும் நடத்திவந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிந்தனை யாளன் கடைசி சில இதழ்களும் சிந்தனையாளன் பொங்கல் மலர் 2021 அவருடைய மேற்பார்வை இல்லாமல் வெளிவந்தன. தான் இல்லை என்றாலும் சிந்தனையாளன் இதழும், சிந்தனையாளன் பொங்கல் மலரும் வெளிவரும் என்ற நம்பிக்கை யை அவருக்கு ஏற்படுத்தியது, 2021 பொங்கல் மலர் வெளியீட்டு விழாவே ஆகும். அதை அய்யா அவர்களே மனம் திறந்து அம்மாநாட்டில் கூறினார்.

நம்மை எல்லாம் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, நம்மை விட்டு மறைந்துவிட்ட அய்யா அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன், மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடர்ந்து நடத்துவதும், சிந்தனையாளன் இதழை தொடர்ந்து கொண்டுவருவதும். ஆண்டுதோறும் பொங்கல் மலரைச் சிறப்பாக வெளியிடுவதும் ஆகும்.

சிந்தனையாளன் ஏப்ரல் இதழ் அச்சுக்குக் கொடுக்க தயார் நிலையில் இருந்தது. திடுமென அய்யா அவர்கள் 6-4-2021 அன்று மறைந்துவிடவே அவ்விதழ் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது.

சிந்தனையாளன் இதழுக்கு என்னை ஆசிரியர் பொறுப்பேற்றுக்கொள்ளும்படி பணித்த மா.பெ.பொ.க. தலைமைக் குழுத் தோழர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனைமுத்து அய்யாவை இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள மா.பெ.பொ.க. தோழர்களும், ஆதரவாளர்களும் சிந்தனையாளன் இதழைத் தொடர்ந்து கொண்டுவருவதற்கும், மா.பெ.பொ.க.யை வளர்த்தெடுப்பதற்கும் தோழர் ஆனைமுத்து அவர்கள் வழிகாட்டியபடி தேவையானப் பணிகளை மேற்கொள்ளுவோம்.

தோழர் வே.ஆனைமுத்து அவர்கள்

புகழ் ஓங்குக

- வாலாசா வல்லவன், ஆசிரியர், சிந்தனையாளன்

Pin It