தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் சென்னையில் ஜுன் 24, 25 தேதிகளில் குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்றன. குத்தூசியாரின் நெருக்கமான தொண்டர்களுக்கு, கழக சார்பில் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

முதல் நாள் 24.6.2005 அன்று எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் கருணாநிதி நகரில் கரு. அண்ணாமலை தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்பு. தனசேகர், கவிதா, பெரியவர் சிவகுரு, வழக்கறிஞர் குமாரதேவன், விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி, திருவாரூர் தங்கராசு ஆகியோர், குத்தூசி குருசாமி சிறப்புகள் பற்றி உரையாற்றினர். இரவு 10 மணியளவில் கூட்டம் முடிவடைந்தது.

25.5.05 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழா கருத்தரங்கம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். விடுதலை ராஜேந்திரன், கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, பழம் பெரும் சுயமரியாதை வீரர்கள் குருவிக் கரம்பை வேலு, நாத்திகம் இராமசாமி, ம.அருள்முகம் சிவகுரு குத்தூசியாரின் மகள் இரஷ்யா ஆகியோருக்கு திருவாரூர் தங்கராசு கழக சார்பில் ஆடை போர்த்தி பாராட்டினார்.

குருவிக்கரம்பை வேலு, நாத்திகம் இராமசாமி ஆகியோர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, குத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி பற்றிப் பேசினர். ‘சங்கொலி’ பொறுப்பாசிரியர் க. திரு நாவுக்கரசு பத்திரிகையாளர் குத்தூசி எனும் தலைப்பிலும், திருச்சி செல்வேந்திரன் ‘சுயமரியாதை வீரர் குத்தூசி’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர். அரங்கம் நிரும்பி வழிந்தது. நிகழ்ச்சியில் இயக்குனர் சீமான், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இயக்குநர் வேலு பிரபாகரன், எழுத்தாளர் சின்ன குத்தூசி, கோபண்ணா, முன்னாள் மேயர் சா. கணேசன், ஆனூர் செகதீசன், வழக்கறிஞர் துரைசாமி உட்படப் பலரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

எழுத்துகளில் புரட்சி செய்த குத்தூசி குருசாமி 

தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பையில் 23.4.1906-ல் திரு. சாமிநாதன்-திருமதி குப்பம்மாள் அவர்களின் மகனாய்ப் பிறந்த குருசாமி அவர்களுக்கு, சுயமரியாதை இயக்கத்தின் நெடிய வரலாற்றில் உரிய இடம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

உச்சிக்குடுமி, சாம்பல் பட்டை, உருத்திராட்சக் கொட்டை, தேவாரப் பாராயணம் இவற்றை உடைமையாக்கிக் கொண்ட சைவக் குஞ்சாகத்தான் 1924-ல் திருச்சி தேசியக் கல்லூரியில் ‘பி.ஏ.’ பயிலும் வரை குருசாமி இருந்தார். போதாக் குறைக்கு காந்தி பக்தி வேறு. சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் ‘குடி அரசு’ப் படிப்புமே அவரது வழியை மாற்றின. சுதந்திரமா? சுயமரியாதையா? - சிந்தித்தார்.

ஈரோட்டில் 1928-ல் பெரியாரைச் சந்தித்தார். உடனே, பெரியாரையும் நாகம்மையாரையுமே தம் பெற்றோராகக் கொண்ட குருசாமி இயக்கத்திற்குத் தம்மை அப்படியே ஒப்படைத்துவிட்டார்.

எழுதும் திறனிலும் சிறந்து விளங்கினார் குருசாமி அவர்கள். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுங்கூட. ஆங்கிலத்தில் இவருக்கிருந்த புலமை அய்யாவுக்குத் தொடக்கத்திலேயே புரிந்துவிட்டதால் சிறிதும் தயக்கமின்றி ‘Revolt’ இதழின் துணையாசிரியர்ப் பொறுப்பில் அமர்த்தினார். குருசாமி எழுதிய கட்டுரைகளில் ‘The Post-Office’என்பது அருமையும் அழகும் வாய்ந்தது.

‘விடுதலை’ஆசிரியராக பணியாற்றிய நீண்ட காலத்தில் ‘குத்தூசி’ எனும் புனைப்பெயரில் ‘பலசரக்கு மூட்டை’ என்ற பகுதியில் இவரால் எழுதப்பட்ட நையாண்டிக் கட்டுரைகள், ‘குத்தூசி’ காணப்படாத ‘விடுதலை’யைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைந்ததாக பெரியார் அவர்களே குறிப்பிடும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றன.

சாதியொழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கலப்பு மணங்கள் நிறைய நடத்தப்பெற வேண்டுமெனத் தம்மாலும் ஏனைய சுயமரியாதைத் தலைவர்களாலும் மேடைகளில் வலியுறுத்தப்பட்டு வந்ததைத் தம் சொந்த வாழ்க்கையிலேயே செய்து காட்டிவிட வேண்டும் என விரும்பிய குருசாமி, பெரியார் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று மிக இழிவாய்க் கருதியொதுக்கப்பட்ட இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த குஞ்சிதம், பி.ஏ., அவர்களை வாழ்க்கைத் துணைவியாகக்கிக் கொள்ள உவகையோடு ஒப்புக் கொண்டார். தமிழ்நாட்டிலேயே வெளிப்படையாக நடந்த முதல் சுயமரியாதை இயக்கக் கலப்புமணம் இதுதான். ஏற்பட்ட ஏளனங்களையும், அவமதிப்புகளையும் புன்னகையோடு பொறுத்தார்.

காந்தியாரின் தமிழ்நாட்டு வருகையின் போது 21.12.1933 அன்று சுயமரியாதை இயக்கத்தின் ஏனைய தானைத் தலைவர்களுடன் அவரைச் சந்தித்துக் கடுமையாகத் தருக்கம் செய்து, ‘நானும் பார்ப்பனர் கொடுமைக்கு ஆளாகியதுண்டு, இன்னும் ஆளாகி வருகிறேன்’ என்று காந்தியார் வாயிலிருந்தே வெளி வருமாறு குருசாமி செய்தார்.

31.12.1933-ல் சென்னையில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக நாத்திகர் மாநாடு இந்துமத, கிறித்தவ மத அன்பர்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் முறியடித்து நடந்தேறியது. இந்த வெற்றிக்கு மூலமாக இருந்தவர்களில் குருசாமியவர்களும் ஒருவர்.

புரட்சிக் கவிஞர் உருவாக்கிய இரணியன் நாடகம் பெரியார் தலைமையில் அரங்கேற்றமானபோது அதில் இரணியனின் பாத்திரமேற்றுத் தம் நடிப்புத் திறனையும் இயக்கக் கருத்துப் பரப்பலுக்குப் பயன்படுத்தினார்.

1938 ம் ஆண்டில் ‘பாரதிதாசன் கவிதைகள்’ (முதல் தொகுதி) நூலையும், 1939-ல் ‘தமிழர் தலைவர் - (பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு)’ நூலையும் முதன்முதலில் வெளியிட்ட பெருமை குருசாமிக்கும் அவரின் துணைவியாருக்குமே செல்லும்.

அய்யா நடத்திய கிளர்ச்சிகள் அத்தனையிலும் பங்கெடுத்துக் கொண்டு தண்டனைகள் பெற்றார். 1960-ல் நாகையில் இந்தி ஆசிரியர்கள்மீது கல்லெறியத் தூண்டியதாகவும், 1961-ல் திருவையாற்றில் வாகன விழாவில் பார்ப்பானையும் சுமப்பது கூடாது என வற்புறுத்தியமைக்காகவும் அரசினரால் வழக்கு போடப்பட்டார். மொத்தம் 12 தடவைகள் சிறை சென்ற குத்தூசியார், ‘சிறை வாழ்க்கை என்ற தியாகத் தழும்பைக் காட்டி வோட்டுப் பிச்சை கேட்டு விளம்பரம் பெற விரும்பாத இயக்கத்தைச் சேர்ந்தவன் நான்’ எனப் பெருமிதத்துடன் ‘சிறைச்சாலை’ எனும் நூலில் குறிப்பிட்டார்.

1962-லிருந்து தந்தை பெரியாரை விட்டு இவர் விலகியிருக்க நேரிட்ட போதிலும் இறுதிவரை அப்பழுக்கற்ற சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்தார் என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

பெரியாரை விட்டுப் பிரிந்த பிறகும் பெரியார் மீது குத்தூசி குருசாமி வைத்த விமர்சனங்களில் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லை. ஆனாலும், இயக்க வரலாற்றில் அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதே நியாயம்.

Pin It