தந்தை பெரியாரால் ‘தமிழ் மறவர்’ என்ற விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டவரும் பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து, பாவலரேறு பெருஞ்சித்திரனார், சிலம்பொலி சு. செல்லப்பன், கவிஞர் பொன்னடியான், செம்மொழி க.இராமசாமி முதலானோர்க்குத் தமிழாசிரியராக விளங்கியவருமான கீழமாளிகை வை.பொன்னம்பலனாரின் (30.01.1904 02.12.1973) வாழ்க்கை வரலாற்றை, அவரது மகள் செந்தமிழ்க்கொற்றி அவர்கள் எழுதித் தமிழ் மறவர் மறைந்த 50 ஆண்டு நிறைவில் - 2023 திசம்பரில் வெளியிட்டுள்ளார். பொன்னம்பலனார் வாழ்க்கையில் முதன்மை நிகழ்வுகளில் சில :
1926-31 ஆண்டுகளில் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டப் படிப்பின்போது மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் தங்கிப் படித்ததனால் நண்பர்களாயினர். இந்த நட்பின் காரணமாகப் பொன்னம்பலனார் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் மறைமலை அடிகளார் இல்லம் சென்று, அங்கேயே இருந்து மறைமலை அடிகளாரிடம் இலக்கணமும் இலக்கியமும் கற்றார். இத்தொடர்பி னால் விளைந்த தனித்தமிழ்ப் பற்றின் காரணமாக ‘கனகசபை’ என வடமொழியில் இருந்த தம் பெயரை ‘பொன்னம்பலம்’ எனத் தமிழாக்கிக் கொண்டார்.
புலவர் படிப்பு முடிந்து, சேலம் மாவட்டம், வேலூரில் கந்தசாமி கண்டர் அறக்கட்டளை இந்து உயர்நிலைப் பள்ளி யில் 1931 முதல் 1946 வரை தமிழாசிரியராகப் பணியாற்றி னார். அப்போது, இந்து செகண்டரி பாடசாலை என்றிருந்த பெயரை, வை. பொன்னம்பலனாரின் முயற்சியினால் 1936இல் “கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளி” என மாற்றிட ஏற்பாடு செய்தார்.
பாவேந்தரின் மூத்த மருமகன் கண்ணப்பன் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். வேலூரில் உள்ள தம் மகளைப் பார்ப்பதற்காக அவ்வப்போது வரும் பாவேந்தரும் பொன்னம்பலனாரும் கண்டு அளவளாவி நண்பர்களானார்கள். பாவேந்தரை விட 13 அகவை இளையவரான பொன்னம்பலனாரின் நட்பினால் வடமொழிக் கலப்பின்றி பாவேந்தர் எழுதிடலானார்.
1939 வரை சிவனியராக விளங்கி, நெற்றியில் திருநீறுப் பூசிக்கொண்டு, தேவாரம் பாடிக் கொண்டிருந்த பொன்னம்பலனார், 1940இல் பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டும் குடிஅரசு இதழைப் படித்தும் தன்மானப் பகுத்தறிவுக் கொள்கை உரவோரானார்.
வேலூர் கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளியில் 1942-46 ஆண்டுகளில் கல்வி கற்ற பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து, வை. பொன்னம்பலனாரின் நேயம் மிக்க மாணவரானார்.
கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொன்னம்பலனாரை அப்பள்ளி நிர்வாகம் பணிவிலக்கம் செய்துவிட்டது. இதனால் 1947இல் சேலம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். அப்போது ஞா.தேவநேயப் பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
பொன்னம்பலனாரின் கொள்கை உறுதி
1952இல் சேலத்தில் இருந்து மாற்றலாகி முசிறி மாவட்டக்கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். இந்தப் பள்ளியில் காலையில் கடவுள் வாழ்த்துப் பாடுவது வழக்கம். 10.11.1952 அன்று காலையில் ஒரு மாணவர் பாரதியாரின் “வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்”என்ற பாடலைப் பாடினார். அப்பாடலின் அடுத்த அடி, “ஆரியநாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக” என்ற வரியைக் கேட்டவுடன் பொன்னம்பலனார் ‘பாடாதே நிறுத்து’ எனக் குரல் கொடுத்தார். தலைமை ஆசிரியர் குப்புசாமி அய்யர் ‘டேய், ஃபூல்’ என்று சொன்னார். இதற்குத் தலைமை ஆசிரியர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார் பொன்னம்பலனார். மாணவர்கள் ‘தமிழாசிரியர் வாழ்க’ என முழக்கமிட்டனர்.
அடுத்த நாள் 11.11.1952 அன்று தமிழாசிரியருக்கு பணிநீக்க ஆணை வந்தது. இதை அறிந்த மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். இதனால் இச்செய்தி தமிழ்நாடு முழுவதிலும் அறியப்பட்டது. பணிநீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தீர்ப்பு வந்து மீண்டும் தமிழ் மறவர் பணியில் சேர 23 மாதங்கள் கடந்தன. பணியில் சேர்ந்த பின்னரே 23 மாதங்களுக்கு உரிய சம்பளம் கிடைத்தது.
‘தமிழ் மறவர்’ விருது
சேலம் தமிழ்ப் பேரவையினர் 28.07.1957 அன்றுநடத்திய நிகழ்வில் வை. பொன்னம்பலனாருக்கு “தமிழ் மறவர்” என்ற விருதும் ஞா. தேவநேயப் பாவாணருக்கு “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்ற விருதும் தந்தைப் பெரியாரால் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டனர்.
இதுபோல் தமிழ் மறவர் வாழ்வில் நிகழ்ந்த பல செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மறைமலை அடிகளார் மற்றும் பெரியார் தொடர்புடைய நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர், தமிழறிஞர் டாக்டர் பொற்கோ அவர்கள் இந்நூலுக்கு அருமையான அணிந்துரை வழங்கியுள்ளார்.
பக்கங்கள் 112. விலையிடப்படவில்லை.
செந்தமிழ் வெளியீடு
402, ஜெம் குடியிருப்பு, கலெக்டர் நகர்,அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை-600 101. பேசி : 98400 02363
- சா.குப்பன்