aanaimuthu veகடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முழங்கிய பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார், ராமர் எந்த இன்ஜினீயரிங் காலேஜில் படித்து பாலம் கட்டினார்? என்று நக்கல் அடித்த கலைஞரும் 95 ஆண்டு வாழ்ந்தார், மேடைகள் தோறும் பகுத்தறிவு மணம் கமழ உரையாற்றும் பேராசிரியர் அன்பழகனார் 98 ஆண்டுகள் வாழ்ந்தார்.

சமூக நீதிக்காகப் போராடும் சுயமரியாதைக்காரர்கள் எழுத்து பேச்சு என தங்கள் செயல்பாடுகளின் மூலமாக மட்டும் பகுத்தறிவுக் கருத்தைப் பரப்புவது இல்லை.

அவர்கள் வாழ்ந்த கால அளவே பகுத்தறிவு பேசும். இங்கு கடவுளின் பெயரால் பயமுறுத்தி நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அத்தனை விழுமியங்களையும் அழிக்கத் துணிந்தவர்கள் நூறாண்டு நெருங்கி வாழ முடியும் என நிரூபித்தவர்கள் இவர்கள்.

அவ்வழியிலேயே பெரியாரின் மாணாக்கரும், அவராலேயே பேரறிஞர் என்று அழைக்கப்பட்டவருமான மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் நிறுவனர், தலைவர் வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் காலமானார்.

ஆவணப்படுத்துதல் என்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு விஷயமாக பன்னெடுங் காலமாக இருந்ததால், இன்றளவும் அவர்கள் இவ்விஷயத்தைக் கோட்டை விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று சிந்தனையாளர் காஞ்சா அய்லையா சொல்வார்.

வரலாற்றுத் தெளிவுடன் ஆவணப்படுத்துதல் என்பதன் முக்கியத்துவத்தை முழுதும் உணர்ந்தவராய் பெரியாரின் சிந்தனைகளைத் தேடித் திரிந்து சேகரித்து, அழகாய்த் தொகுத்து பெரியார் ஈவெரா சிந்தனைகள் எனும் 20 தொகுதிகள் அடங்கிய விலைமதிப்பில்லாப் பொக்கிஷத்தைத் தமிழ் மண்ணிற்கு வழங்கியதற்காகவே அய்யா ஆனைமுத்து தமிழர்களால் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவர். ஈவேரா சிந்தனைகள் புத்தகத்தின் பவுண்டட் அட்டையை தீண்டும் போதெல்லாம் இந்தப் பணியை காதலித்து செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணி வியப்பேன்.

அய்யா ஆனைமுத்து மேற்கண்ட பல முக்கிய சமூகப் பணிகளில் ஒன்று பெரியாரைத் தமிழ் நாட்டின் எல்லையை விட்டு இந்தியா முழுக்கக் கொண்டு சென்றது குறிப்பாக வடமாநிலங்களில் பெரியாரின் கருத்துகளைப் பரப்புரை செய்து சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை, வடமாநிலத்தவர்களுக்கு ஏற்படுத்தியது. அவரது அயராத உழைப்பு வட இந்தியத் தலைவர்களிடம் ஏற்படுத்திய எழுச்சி மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பெரும் பக்கபலமாய் அமைந்தது.

பார்ப்பன - பனியா சுரண்டல் கூட்டணியின் பிடியிலிருந்து விடுபட மொழிவழித் தேசிய இன உணர்வையும், பொதுவுடைமைச்  சிந்தனைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பெரிய சீர்திருத்தங்களையும் தீர்வுகளாக முன்வைத்து அதை நோக்கி தன் இறுதிக்காலம் வரை அயராமல் பாடுபட்டவர் அய்யா ஆனைமுத்து அவர்கள்.

சிந்தனையாளன், பெரியார் ஈ.வே.ரா. போன்ற இதழ்களின் மூலமாகவும், தான் வெளியிட்ட பல அரிய நூல்களின் மூலமாகவும், பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய கருத்துகளைப் பரப்புரை செய்வதோடு, சுயமரியாதை வாழ்வியல் பயிற்சி வகுப்புகள் நடத்தி எதிர்காலத் தலைமுறை பெரியாரியலை வாழ்க்கை முறையாக மாற்றிக்கொண்டு பின்பற்றச் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி அளப்பரியது.

அவரது மறைவு திராவிடர் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது நீண்ட வாழ்நாள் நமக்கு உணர்த்திய செய்தி ஒன்றுதான் அது.

‘எல்லைகளை விரிவு செய், புதிய வழிமுறைகளைச் சிந்தி, சமூக மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை இயங்கு'

வீரவணக்கம் அய்யா...

- குண.சந்திரசேகர்

Pin It