bkreviewசாதியைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. அவ்வரிசையில் அமெரிக்காவின் பிரன்ஸ்டன், பாஸ்டன், ஐரோப்பிய, ஆசியப் பல்கலைக் கழகங்களில் உரையாற்றிய ‘புலிட்சர்’ விருதைப் பெற்ற இசபெல் வில்கர்சன் எழுதிய நூலே இக் கட்டுரையின் தலைப்பாக (‘Caste – The Lies that Divide Us’ by Isabel, 2020) அமைகிறது. ஒரு பெண்மணி சமூக இயல் துறையில் சிறந்த ஆய்வாளராக இருக்கமுடியும் என்பதை இந்நூல் எதிரொலிக்கிறது.

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு பல அறிஞர்கள் இந்தியச் சமூகத் தன்மையை எடுத்துக்காட்டி, ஆய்வுகளை மேற்கொண்டு, நூல்களாகப் படைத்துள்ளனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த, 1973இல் பொருளாதாரத்திற் கான நோபல் பரிசினைப் பெற்ற குன்னர் மிர்தல் எழுதிய “ஆசிய நாடகம்” என்ற நூல் பொருளாதாரத்தைப் பற்றி முதன்மையான கருத்துகளை முன்மொழிந்தாலும், இந்தியச் சமூகக் கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்ட நூலாகும்.

இன்றளவிலும் சங் பரிவாரின் வழித் தோன்றல்களாக மறைமுகமாக இருந்து தங்களை அறிஞர்கள் என அடையாளம் காட்டிக்கொள்ளும் பல ஆய்வாளர்கள் குன்னர் மிர்தலைத் தாக்குவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். குன்னர் மிர்தல் அமெரிக்காவினுடைய கறுப்பர் இனப் பிரச்சனை களையும் ஆய்ந்து பல கருத்துகளை வழங்கியவர். குன்னர் மிர்தலின் துணைவியார் ஆல்வா மிர்தல் 1983இல் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.

ஆல்வா மிர்தல், உலக நாடுகள் மானுடத்தை அழிக்கும் வலிமை மிக்க ஆயுதங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியவர். குன்னர் மிர்தல் ஆல்வா மிர்தல் ஆகியோரின் முயற்சியால்தான் சுவீடனில் இருந்து வரும் ‘ஸடாக்ஹோம் அமைதி ஆய்வு மையம்’ ஆண்டுதோறும் உலக நாடுகளின் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுத உற்பத்திச் செலவுகள் -ஆயுதங் களைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அளவுகளை அறிக்கையாக வெளியிட்டு வருகின்றது.

இவர்களின் மகன் ஜேன் மிர்தல் தற்போது 93 வயதை எட்டியும் ஆதிக்க நாடுகளின் முகமூடிகளைக் கிழித்து, முதலாளித்துவத்திற்கு எதிராகக் கட்டுரை களையும் நூல்களையும் எழுதி வருகிறார். 2010ஆம் ஆண்டு இந்தியாவின் தண்டகருண்யா காட்டிற்குச் சென்று இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோ) உறைவிடங் களில் சில வாரங்கள் தங்கி “இந்தியாவின் மீது சிகப்பு நட்சத்திரம்” என்ற நூலை எழுதினார்.

இதற்கு முன்பு 1970களில் தந்தை பெரியாரைப் பற்றிப் பல ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளனர். நெருக்கடி நிலை காலத்தில் ஜமதக்னி சாந்தி, “பெரியாரின் சமூகப் பொருளாதார சிந்தனைகள்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். 1977ஆம் ஆண்டு இதற்காக அவருக்கு எம்.லிட். பட்டம் சென்னைப் பல்லைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

ஜமதக்னி சாந்தியின் ஆய்வு நெறியாளர், ஒன்றிணைந்த சென்னை மாகாணத்தில் 1930களில் பொருளாதாரத்தில் முதலாவது முனைவர் ஆய்வுப்பட்டம் பெற்ற மறைந்த பேராசிரியர் சாரதா ராஜி ஆவார். “19ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூகப் பொருளாதார நிலைமைகள்” என்ற நூலும் இவரது ஆய்வின் அடிப்படையில் வெளி வந்துள்ளது.

1969ஆம் ஆண்டு யுஜின் இர்ஷிக், “அரசியல் சமுதாய மோதல்கள்” என்ற தலைப்பில் சிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு நூல்களை வெளியிட்டார். இந்நூலில் நிர்வாக, நீதித் துறைகளில் 20ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தரவுகளோடு வெளியிட்டார்.

மீண்டும் 1970ஆம் ஆண்டு “தமிழர் மீட்சி” என்ற நூலை வெளியிட்டார். இக் கட்டுரை யாசிரியர் இந்த ஆய்வாளரைச் சென்னைப் பல்லைக் கழகத்தின் வரலாற்றுத் துறைக்கு வந்தபோது சந்தித்து உரையாடியுள்ளார். அவர் நன்றாகத் தமிழ்ப் பேசுவார்; தமிழிலும் எழுதுவார். இவர்களுக்கெல்லாம் முன்னோடி யாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையைன் முதல் பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டர் முறைப்படித் தமிழைக் கற்றவர். இவர் எழுதிய “இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்” மிகவும் புகழப் பெற்ற நூலாகும். ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூலை பன் மொழிப் புலவர் க.அப்பாதுரையார் தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார்.

1970ஆம் ஆண்டு அனிதா தயல், “தென்னிந்தியா வில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஆளுமையின் செல்வாக்கு” என்ற நூலை வெளியிட்டார்.

இராபர்ட் ஹாட்கிரேவ், 1969இல் “தமிழ்நாட்டின் நாடார்கள்”, “திராவிட இயக்கமும் நாடார்களும்” என்ற இரு நூல்களை எழுதியுள்ளார். இவர்களெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்து ஆய்வுகளை மேற்கொண் டவர்கள். திராவிட இயக்கத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து இருப்பதை இக் கட்டுரையாசிரியர் பேராசிரியர் ஹாட்கிரேவின் நண்பரிடம் எடுத்துக் கூறியுள்ளார். சான்றாக, “இராஜா சர். முத்தையா செட்டியாரின் செல்வாக்கால்தான் கலைஞர், அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதல்வரானார்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால், அறிஞர் அண்ணா முதல்வரான வுடன், இராஜா சர். முத்தையா செட்டியார் சென்னையில் உள்ள தனது மாளிகையில் மிகப் பிரம்மாண்டமான ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். எல்லா அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. இதை அறிஞர் அண்ணா விரும்பவில்லை. எல்லா அமைச்சர்களும் மாலை 6 மணியளிவில் இராஜா அண்ணாமலைபுரம் மாளிகைக்குச் செல்ல முற்பட்ட போது, அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் சென்றுவிட்டார் என்ற செய்தி எட்டியது.

உடனடியாக விருந்துக்குச் சென்ற சில அமைச்சர்களும் எல்லா அதிகாரிகளும் இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டனர். இதைக் கலைஞர் அவர்கள் இக் கட்டுரையாசிரியரிடம் குறிப்பிட் டுள்ளார். இவ்வாறாகச் சில தரவுகள் தவறான முறையில் உயர்ந்த ஆய்வு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

இதனடிப்படையில்தான் இசபெல் வில்கர்சன் எழுதிய “நம்மைப் பிளக்கும் சாதி எனும் பொய்” நூலில் தந்தை பெரியாரைப் பற்றி ஒரு வரிகூட இடம்பெறவில்லை. இந் நூலாசிரியர் இராமச்சந்திர குகா எழுதிய “நவீன இந்தியாவின் சிற்பிகள்” (Makers of Modern India) நூலில், தந்தை பெரியாரைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னாட்டு அளவில் விற்பனை செய்யப்பட்ட குகாவின் இந்த நூலை இந்த அம்மையார் ஏன் காணத் தவறினார் எனத் தெரியவில்லை.

நோபல் பரிசுப் பெற்ற அமர்தியா சென்னும், ஜீன் ட்ரெஸ்சும் 2013இல் வெளியிட்ட “ஒரு நிலையற்ற வெற்றி - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்” (An Uncertain Glory : India and its Contradictions) எனும் நூலில், குறைந்த காலக்கட்டத்தில் விரைந்த வளர்ச்சி யைப் பெற்று கொடுமையான வறுமையும், ஏற்றத் தாழ்வும் இல்லாமல் தமிழ்நாடு உள்ளது எனக் குறித் துள்ளனர். அனைத்துச் சாதிப் பிரிவினரும் பள்ளிக்குச் செல்லும் வண்ணம் சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகிறது. உறுதியான சமூக அடித்தளம் இதற்குக் காரணமாக அமைகிறது.

சமூக உணர்வைத் தூண்டும், பெரியாரின் சமூகச் சீர்திருத்த இயக்கம் ஒரு காரணமாக அமைந்தது (the social reform movement initiated by periyar is responsible for socially engineered economic growth) என்று இந்நூலில் இந்த இரு ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். புகழப் பெற்ற இந்நூலையும் இந்த அம்மையார் காணாதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நூலில் அமெரிக்காவின் கறுப்பின மக்கள் பிரச்சனை பற்றியும், இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகின்ற தீண்டாமை பற்றியும் பல கருத்துகள் உள்ளன. பெங்களுர் நகரில் இருந்து தலித் மக்களுக்காக எழுதி வரும் வீ.டி. ராஜசேகர் கருத்து மட்டும் ஒரே ஒரு இடத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

அறிஞர் அம்பேத்கரின் கருத்துகள் இந்நூலில் சில இடங்களில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. சான்றாக, பக்கம் 184இல், சாதியம் உயர்ந்த வகுப்பினரின் நலனிற்காக இருப்பதால் எப்படியாவது அதைப் பார்ப்பனர்கள் பாதுகாக்க விரும்புகின்றனர் என்ற கருத்தைப் பதிவு செய்து, அறிஞர் அம்பேத்கரின் “சாதி என்பது பார்ப்பனர்களுக்குக் கிடைத்த விலை மதிக்க முடியாத சொத்து; அதை அவர்கள் எப்படியாவது காப்பதற்கு எந்த விலையும் அளிப்பார்கள்” என்ற கருத்து மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

“உயர் சாதிய அதிகாரத்தை ஏற்காமல், சாதிய அமைப்பில் ஒருவர் வாழமுடியாது; காற்றைச் சுவாசிக்க முடியாது” என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார். “தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில், இறந்த ஒரு தலித் இனத்தவரை பொதுச் சாலை வழியே எடுத்துச் செல்ல முடியாமல், சாலையின் பின் வழியில்தான் எடுத்துச் சென்று உடலை எரிக்கமுடியும்” என்ற குறிப்பு இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

சாதியத்தை நிலை நிறுத்துகிற தூண்கள் எவை என்பன பற்றிய கருத்து இந்நூலில் முன்வைக்கப் பட்டுள்ளது. குன்னர் மிர்தலின் கருத்தான “சாதியம் உயர்சாதியினரின் நலனிற்காகவும் மந்தநிலையை உருவாக்குவதற்காகவும் தூக்கிப் பிடிக்கப்படுகிறது” என்ற மேற்கோளை இந்நூலில் ஆசிரியர் இசபெல் குறிப்பிட் டுள்ளார்.

கொரானா நோய்த் தொற்று வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு மானுடத்தைப் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது என்றும் மானுடம் இயற்கை விதிகளுக்கு எதிராகச் செல்வதைச் சிந்திக்க வைக்கிறது என்றும் ஒரு கருத்தைக் கூறுகிறார். உலகில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் இறந்தார்கள். இது இனவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மரணம் நடந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். மானுடத்தை அழித்துவிட்டு ஒரு நாகரிகத்தைக் கட்டமைக்க முடியாது. இதை உணரும் காலம் வந்து விட்டது என்றும் இந்நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நூலின் 13ஆம் பகுதியில் புனித புணூலை அகற்றி விடுவது என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் காலம் காலமாக தாங்கள் உயர்ந்த சாதியினர் என்பதற்காகப் போடப்பட்ட ஒரு கருவிதான் புணூல் என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார். இவ்வாறு சாதியத்தின் பல கூறுகளை ஆய்ந்து, இனவேற்றுமையும் சாதி வேற்றுமையும் மானுடத்தைப் பிளக்கின்றன என்ற கருத்தை இந்நூலில் ஆசிரியர் இசபெல் வில்கர்சன் விளக்கியுள்ளார்.

இந்நூலில் இட ஒதுக்கீடு கொள்கையோ, 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியதைப் பற்றியோ குறிப்பிடவில்லை. இன்றைய சனாதன பாஜக மோடி அரசு, உயர் சாதிகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்ததையும், பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்கு இட ஒதுக்கீடு கொள்கையை ஒன்றிய அரசு ஏற்றப் பிறகும், கடந்த 20 ஆண்டுகளாக இந்தியத் தூதர்களாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ஒரு விழுக்காடுகூட இடம்பெறவில்லை என்பது பற்றி இந் நூலில் எந்தக் கருத்தையும் காணமுடியவில்லை. ஆரியர்களின் இறந்த மொழியான சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு, சனாதனத்தின் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் மோடி அரசின் போக்கு ஆகியன இந்நூலில் இடம்பெறவில்லை.

இந்நூலில் பல குறைகள், தர்க்க ரீதியான தவறுகள் பல இருப்பினும், ஒரு பெண்மணி என்கிற முறையில் “சாதி என்கிற பொய் நம்மைப் பிளக்கிறது” என்று பல வாதங்களை இந்நூலாசிரியர் முன் வைப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, திராவிட இயக்கம், இடஒதுக்கீடு வழியாக சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பில், கல்வியில் முன்னுரிமை அளித்ததை யும், தந்தை பெரியார் சாதிய ஒழிப்பிற்காகச் சனா தனத்தை வேரோடு வெட்டி வீழ்த்திய பணிகளையும், அதைத் தொடர்ந்து திராவிட இயக்கத்தின் ஆட்சி கடந்த 53 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வரு வதையும் இந்நூல் குறிப்பிடவில்லை.

அண்மைக் காலத்தில் பல இந்திய ஆய்வாளர்கள், தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்ற இடஒதுக்கீடு முறையையும், இதன் காரணமாக அனைத்துச் சாதியினரும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடம் பெற்று வருவதையும் ஆய்ந்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக, பொருளாதாரத்தின் வளர்ச்சி, சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்வில் முற்போக்கான மாற்றங்களை உருவாக்கினால்தான் அது உண்மையான ஒன்றிணைந்த வளர்ச்சி என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மானுட மேம்பாட்டு அறிக்கைகள் குறிப்பிட்டு வருகின்றன. இதுவரை 27 அறிக்கைகள் 1990லிருந்து 2020 வரை வெளியிடப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்ற மானுட மேம்பாட்டு அறிக்கை, கொரானா நோய்த்தொற்று சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை எவ்வகைளில் பாதித்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின்படி தமிழ்நாடு, இந்திய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது என்பதையும், அதற்குத் தமிழ்நாட்டில் நடந்த சமுதாயப் புரட்சி, சாதி ஒழிப்புத் திட்டங்கள் ஆகியன காரணங்களாக உள்ளன என்பதை இந்திய அரசு வெளியிட்ட மானுட மேம்பாட்டு அறிக்கை 2001இல் தெளிவாகச் சுட்டியுள்ளது.

அவ்வறிக்கையில், தந்தை பெரியார் பின்பற்றிய பெண்ணுரிமை விடுதலை, சமூகச் சீர்த்திருத்தம் ஆகிய காரணங்கள்தான் அரசியல் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்கிற கருத்தியலை உறுதிப்படுத்தியிருக் கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய கருத்துகளை எல்லாம் இந்நூலாசிரியர் ஏன் காணத் தவறினார் என்பது ஒரு வியப்பிற்குரிய வினாவாக உள்ளது.

இருப்பினும், “சாதியில்லாத உலகம் எல்லோருக்கும் விடுதலை அளிக்கிறது” (A World without caste would set everyone free) என்ற இறுதிக் கருத்தோடு இந் நூலாசிரியர் இந்நூலை முடிக்கிறார்.

- குட்டுவன்

Pin It