கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள்! சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை பெரியார் 1957 இல் இதே நாளில் எரிக்கச் சொன்னார். இந்த சட்டப் பிரிவுகள் சாதியை மட்டும் பாதுகாக்கவில்லை. பார்ப்பன மேலாண்மையையும் இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை; எப்படி?

• அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) ஆகியவற்றில் ‘பழக்கச் சட்டம்’, ‘வழக்கச் சட்டம்’ (Customs and Usages) என்பதற்கு சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

• மதச் சுதந்திரம் மற்றும் பழக்க வழக்கங்களில் எந்த சட்டமும் தலையிட முடியாது என்ற பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பை அரசியல் சட்டத்தில் இணைப்பதற்கு திரைமறைவில் தனது செல்வாக்கை செலுத்தி செயல்பட்டவர், பார்ப்பனர்களின் தலைவரான, இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியான சந்திரசேகரேந்திர சரசுவதி என்பவர்தான்!

• அரசியலமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவு மதங்களைப் பற்றிப் பேசுகிறது. மதப் பிரச்சினைகள் எதுவானாலும் அது சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றுதான் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அமைப்பு முடிவு செய்திருந்தது. சங்கராச்சாரி தலையீட்டில்தான் இது மாற்றப்பட்டது. மதங்கள் தொடர்பான சொத்துகளை நிர்வகிப்பதில் மட்டுமே சட்டம் கட்டுப்படுத்தும். மற்றபடி ஒவ்வொரு மதப் பிரிவும் ஒரு மதத்துக்குள்ளேயே இருக்கும் பல்வேறு பிரிவுகளும் எவ்வித சட்டக் குறுக்கீடுமின்றி செயல்படலாம் என்ற உரிமையை சட்டம் வழங்கிவிட்டது.

• பிற மதங்களைப்போல் இந்து என்ற பெயரில் ஒரே மதமில்லை. சைவம், வைணவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கலவையாக இருப்பதால் ‘ஒரே மதத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகள்’ என்ற வாசகத்தையும் சங்கராச்சாரியே உருவாக்கி அரசியல் சட்டத்தில் சேர்க்கச் செய்துவிட்டார். இதன் விளைவுகள் என்ன?

• பார்ப்பனரல்லாத மக்கள் “சூத்திரர்கள்” அதாவது “பிராமணர்”களின் வைப்பாட்டி மக்கள், அடிமைகள் என்ற அவலத்துக்கு சட்டத்தின் பாதுகாப்பு தொடருகிறது.

• அனைத்து சாதியினரும் கோயில் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்ய முடியாமல் தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியும் செயல்படுத்த முடியாமல் உச்சநீதிமன்றத்தால் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. “பிராமணன்” என்ற பிறப்பு தகுதி யுள்ளவர்கள் மட்டுமே கர்ப்பகிரகத்தில் நுழைய முடியும். கடவுளுடன் “உரையாட” முடியும். கடவுளுக்கு மந்திரத்தின் மூலம் சக்தியை ஏற்ற முடியும். ஏனைய பார்ப்பனரல்லாதவர்கள் ‘சூத்திரர்கள்’ என்பதால் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது ‘பழக்கவழக்கத்துக்கு’ எதிரானது புனிதம் பறிபோய்விடும் என்ற நிலையே இன்று வரை நீடிக்கிறது.

• மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே பார்ப்பான் பூணூல் போட்டுக் கொண்டு தன்னை உயர் பிறப்பாளராக அறிவித்துக் கொள்கிறான். “என்னைத் தவிர, பிறர் எல்லாம் சூத்திரன்” என்று இதன் மூலம் நெஞ்சு நிமிர்த்தி அறிவித்து பவனி வருகிறான்.

• இத்தகைய தங்குதடையற்ற மதச் சுதந்திரம் சட்டத்தில் வழங்கப்பட்டிருப் பதால்தான் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளே சட்ட ரீதியான நபர்களாகவும், நிரந்தரமான “மைனர் களாகவும்” சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பேசும் சக்தியற்ற இந்த சிலைகள், தனக்காக, தனது காப்பாளர், அறங்காவலர், அல்லது தனது பக்தர்கள் வழியாக நீதிமன்றம் போகும் உரிமைகளைப் பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில் சட்டத்தால் ‘மைனராக’ ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த கடவுள் சிலைக்கு எதிராக சிவில் வழக்குகளையோ, அல்லது கிரிமினல் வழக்குகளையோ எவரும் தொடர முடியாது. இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு மட்டுமே இந்த உரிமைகளை வழங்கியிருக்கிறது. பிற மதக் கடவுளர்களுக்கு இந்த உரிமை கிடையாது.

• இந்த உரிமையின் அடிப்படையில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று கூறி மசூதியை இடித்த வழக்கில் ‘ராமன்’ பெயரிலேயே (ஒரு மைனர் என்ற முறையில்) வழக்கு தொடரப்பட்டு, அந்த மனுவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

• அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று உலகமே எள்ளி நகையாடக் கூடிய ஒரு தீர்ப்பை (செப்.30, 2010) வழங்கியது அல்லவா? அத் தீர்ப்பில் ஒரு பகுதியை சுட்டிக் காட்ட வேண்டும். ஒரு மைனராக நீதிமன்றத்துக்கு வந்துள்ள இராமன், மாற்றார் சொத்துக்குரிய இடத்துக்கு (பாபர் மசூதி) உரிமை கோர முடியுமா என்ற கேள்வி நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதற்கு நீதிபதி தந்த தீர்ப்பில், ‘ராமன்’ பிறந்த அந்த இடத்தை ஒரு அசையாத சொத்தாக பார்ப்பது தவறு. இராமன் பிறந்த இடம் என்பது பகவான் வாயுவைப்போல் பரவி நிற்கும் புனிதப் பூமி. தன்னளவிலே பகவான் அங்கே பிறந்து சக்தியாக விரவி நிற்கிறார். இதற்கான ஆதாரம் ஸ்மிருதிகளிலே (பார்ப்பனர்களின் திமிரைப் போற்றுபவை) இருக்கிறது என்று நீதிமன்றம் பதிலளித்துள்ளது. ஒரு கோயிலை இடித்து விட்டதாலோ அங்கே கடவுள் சிலை இல்லாமல் போய்விடுவதாலோ, அந்த இடம் தெய்வீகத் தன்மையை இழந்து விடவில்லை. கோயில் இருந்த அந்த இடமே, கடவுள் தன்மை பெற்றதுதான். அந்த அடிப்படையில் தனது இருப்பிடத்துக்காக ‘இராமனுக்கு’ வழக்காடும் உரிமை உண்டு என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

எனவே, பாபர் மசூதி ஒரு நிலம் என்ற அடிப்படையில் ‘சொத்து’ என்றாலும் கூட, அந்த நிலமே கடவுளாகவும் இருக்கிறது. அந்த இடத்தை ராமனைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அரசாங்கத்துக்கே அந்த இடத்தில் கை வைக்கும் அதிகாரம்கிடையாது - என்று கூறுகிறது, அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு.

• இப்படி இந்து கடவுள் சிலைகளை மனிதர்களாக்கி, சட்டத்தின் உரிமைகளை வழங்கி, அதே நேரத்தில் சிலைக்கு எதிராக வழக்காடும் உரிமைகளையும் மறுத்து, அரசுக்கே தலையிடக் கூடிய உரிமைகளையும் பறிக்கும் பாதுகாப்புகளை இந்த நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகள் வழங்கியிருக்கின்றன. இங்கே ‘கடவுள் சிலைகள்’ என்ற பெயரில் பதுங்கி நிற்பவர்கள் பார்ப்பனர்கள் தான். ஒவ்வொரு ஆகமக் கோயில் கடவுளும் பார்ப்பான்தான். காரணம், அந்த கடவுள் சிலைகளே பார்ப்பனர்களின் மந்திரத்துக்குத்தான் கட்டுப்பட்டுள்ளது.

- எனவேதான், அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மதப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் ‘பழக்க வழக்கங்களுக்கு’ வழங்கியுள்ள சட்டப் பாதுகாப்புகள் இருக்கும் வரை - பார்ப்பான் “சூத்திரன்” என்ற சட்டப்படியான இழிவு தொடர்ந்து கொண்டே இருக்கும். தீண்டாமை ஏற்றத் தாழ்வுகள் என்ற மனித விரோதக் கோட்பாடுகளை சட்டம் பாதுகாத்துக் கொண்டே இருக்கும்.

கோயில் கர்ப்பகிரகத்துக்குள் இப்போது பார்ப்பனரல்லாதாருக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ள “தீண்டாமை”யை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தாலும் தடுக்க முடியாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பினால், பார்ப்பன கொடுங்கோன்மை சட்டத்தில் புகுந்து கொண்டிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பெரியார் - இந்த சட்டப் பிரிவுகளை எரிக்கச் சொன்னதன் பின்னணி இதுதான்!

‘மதச் சுதந்திரம்’ என்ற சட்டப் பிரிவுகள், பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தி, ‘வர்ணாஸ்ரமம்’ என்ற சமூக விரோதக் கோட்பாடுகளுக்கும் நியாயம் சேர்க்கிறது. “பிராமணனை” அங்கீகரிக்கிறது; சாதியைப் பாதுகாக்கிறது. இன்றும் கோயில் கருவறையில் பார்ப்பனரல்லாதாரை ‘சூத்திரன்’ என்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

சட்ட எரிப்பு நாளில் நாம் இதை ஆழமாக சிந்திக்க வேண்டும்!

- விடுதலை இராசேந்திரன்