aanai muthu copyதந்தை பெரியார் அவர்கள்தான் இந்திய ஒன்றிய வரலாற்றில் முதன்முதலாக 1.6.1930­இல் சேலத்தில் “இந்தியா ஒரு நேஷனா?” என்கிற ஆழமான ஒரு கேள்வியை எழுப்பி, “மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி, நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள்” என்கிற எச்சரிக்கை மணியை ஒலித்தார்.

இது, இந்தியாவிலுள்ள மொழித் தேசங்களுக்கு விடுதலையோ, தன்னுரிமையோ அல்லது மாநில சுயாட்சி என்கிற பெயரிலோ அரசியல் உரிமைகளைக் கோருகிற எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இன்றும் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய மிகப் நுட்பமான செய்தி.

ஏனெனில், கி.பி. 1801-இல் தான் கன்னியாகுமரி முதல் காசுமீர் வரை உள்ள நிலப்பரப்பு இந்தியா என்னும் ஓர் ஆட்சிப்பரப்பாக ஆக்கப்பட்டது. கி.மு. 320 முதல் இப் பெரிய நிலப்பரப்பில் எண்ணற்ற நகர அரசுகள், சிற்றரசுகள், பேரரசுகள் இருந்தன.

அசோகர் ஆட்சிக்காலம் (கி.மு. 273-232), அக்பர் ஆட்சிக் (கி.பி. 1556-1605) காலப் பேரரசுகளே பெரியவை. கடைசிப் பாண்டியர் அரசு கி.பி.1310-இல் அழிந்தது. அக் காலங்களில்கூடத் தமிழ்நாடு அவர்களின் ஆட்சிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை. அதுவரையில் சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிகளுக்கே தமிழகம் உட்பட்டிருந்தது.

கி.பி. 1600-இல் கிழக்கிந்தியக் குழுமம் என்கிற வணிக நிறுவனத்தின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையர், 1801-இல்தான் ஒரு பெரிய நிலப்பரப்பைக் கைக்கொண்டனர். அப்பெரிய பரப்பில் மூன்றில் இரண்டு பங்கைத் தம் நேரடி ஆட்சியிலும், மூன்றில் ஒரு பங்கைத் தமக்குக் கட்டுப்பட்ட 562 சிற்றரசுகளின் ஆட்சியிலும் வைத்துக்கொண்டு 1801-இல், ‘இந்தியா’ என்னும் ஒற்றை ஆட்சிப் பரப்பை உண்டாக்கினர். கி.பி. 1801 வரையில் இந்தியா என ஒரு நாடு இல்லை.

இந்தியா என்கிற நிலப்பரப்பு 1858-இல் சிலோன் என்கிற இலங்கை, ஆப்கனிஸ்தானம், பர்மா, கிழக்கு வங்கம், சிந்து, வடமேற்கு எல்லை மாகாணம் (பாகிஸ்தான்) என்கிற பகுதிகளையும் கொண்டிருந்தது. 1919-க்குள் சிலோன், ஆப்கனிஸ்தான் இவை பிரிந்தன. 1935-இல் பர்மா (மியான்மர்) பிரிந்தது. மற்ற பகுதிகள் 1947-இல் பாகிஸ்தான் என்கிற ஒரே நாடாகப் பிரிந்தன. பல பகுதிகள் அப்படிப் பிரிந்த பிறகும் 1947-க்குப்பிறகு இருந்த மிச்சப் பகுதியை மட்டும் ‘இந்தியா’ என்றே அழைத்தனர். கோவா, டையூ, டாமன், புதுச்சேரி, மாகி, காரைக்கால் இவை சேர்க்கப்பட்ட பிறகும் ‘இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளையன் உருவாக்கிய இந்தியாவிற்கு -இந்திய மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகத் தான் காங்கிரசுக்கட்சி தோன்றியது. அந்த இந்தியாவில் ஒவ்வொரு மொழிவழி மாநில மக்களிடையேயும் நிலவிய மொழி உணர்வு, தனித்த பண்பாடு, கலை, கலாச்சாரம், வரலாற்றுணர்வு போன்றவை மக்களிடையே இந்தியா -இந்தியர் என்கிற உணர்வெழுச்சி பெற்று வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் தடையாக இருப்பதை நன்குணர்ந்த காங்கிரசுக் கட்சி, ஒவ்வொரு மாகாணத் திலுமிருந்த மொழித்தேசங்களின் அடிப்படையிலேயே காங்கிரசைக் கட்டியமைத்தது.

2.12.1923-இல், திருச்சி தெப்பக்குளம், நகராட்சிக் கட்டடத்தில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற காங்கிரசுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநிலக் காங்கிரசுக் கமிட்டிக்குத்தான் பெரியார் ஈ.வெ.ரா முதலாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“மாநிலங்களுக்குத்தான் அதிகபட்ச அதிகாரங்கள், எஞ்சிய அதிகாரங்கள்தான் இந்திய ஒன்றிய அரசுக்கு இருக்கும்” என்று 1920 முதல் 1947-இல் பாகிஸ்தான் பிரிகிறவரை பேசிவந்த காங்கிரசு, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கும்பொழுது, காங்கிரசுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அதற்கு நேரெதிரான -மொழித்தேசங்களைச் சிதைத்து அழித் தொழித்திடத் தேவையான -முற்றதிகாரம் கொண்ட ஒரு இந்தியாவை அமைப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது.

இந்தியாவுக்கான கொடியை இந்திய விடுதலை அறிவிப்புக்கு முன்பாகவே, இந்தியாவிலிருந்த எந்த ஒரு மாகாண அரசையும் மக்களையும் கருத்துக் கேட்காமலேயே, 22.7.1947-இல், ஜவகர்லால் நேரு அரசமைப்புச் சட்ட அவையில் வெளியிட்டு, “நான் முன்வைக்கிற இந்தக் கொடி பேரரசின் கொடியோ, ஏகாதிபத்தியத்தின் கொடியோ, யாரையும் ஆதிக்கம் செலுத்தும் கொடியோ அல்ல. இது, எல்லா மக்களுக்கும் சுதந்தரம் அளிக்கிற சுதந்திரத்தின் அடையாளமான கொடி” என்று அறிவித்தார்.

அப்போதே மாநிலங்களுக்கான கொடியைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும். நேருவோ, காங்கிரசோ, வேறு எந்தக் கட்சிகளுமோ இது பற்றி அப்போது கவலை கொள்ளவில்லை. மேலும், அந்தக் கொடிதான் இன்றைக்கு இந்திய ஏகாதிபத்தி யத்தின் முகமாக நின்று மாநிலங்களின் உரிமை களைப் பறிக்கிறது. நிற்க.

இந்தியாவில் மொழிவழி மாநிலக் கோரிக்கை தென்னிந்தியாவில்தான் -ஆந்திரத்தில்தான் முதன் முதலாக 1912-இலேயே எழுப்பப்பட்டது. அதே காலத்தில் வங்கத்திலிருந்து பீகாரும் ஒடிசாவும் பிரிக்கப்பட்டு ‘பீகார்-ஒடிசா’ மாகாணம் உருவாக்கப்பட்டது. பஞ்சாபில், ‘பஞ்சாபி சுபா’ கோரிக்கை 1920-களில் தொடங்கியது.

1935-இல் மொழி அடிப்படையில் ஒடிசா தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. தமிழ் நாட்டிலும் இக் கோரிக்கை 1940-களில் எழுந்தது.

பண்டித நேரு தொடக்கம் முதல் இறுதிவரை மொழிவழி மாநிலப் பிரிவினைக்கு எதிர்ப்பாகவே இருந்தார். இது தனி நாடு பிரிவினைக் கோரிக்கை அன்று - அவரவர் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கிற ஒரு கோரிக்கைதான் என்று தெரிந்தும் நேரு இக் கோரிக்கையை எதிர்த்தார்.

ஆயினும் பல மாநிலங்களில் இக் கோரிக்கை வீறிட்டு எழுந்தது. நெருக்கடிக்கு ஆளான நேரு, 1953 -இல் ‘மொழிவாரி மாநில அமைப்புக் குழு’வை அமைத் தார். அதன்படி 1.11.1956-இல் ‘தமிழ்நாடு’ மாநிலம் அமைந்தது; ஆந்திர மாநிலம் அமைந்தது; கருநாடக மாநிலம் அமைந்தது. இவற்றைப்போலவே 1956­இல், மொத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங் கள் உருவாகின. பிறகு புவியியல் கூறுகளைக் கொண்டும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்றைக்கு 29 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் உள்ளன.

1.11.1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைந்த போதும் ஜம்மு-காசுமீர் தவிர்த்த எந்த ஒரு மாநிலமும் தனக்கென ஒரு கொடியை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படவில்லை.

5.8.2019-இல், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 370 மற்றும் 35- A பிரிவுகளை நீக்கியதன் முலம் 26.11.1957 முதல் அமலில் இருந்துவந்த ஜம்மு­காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையையும் பறித்துக் காசுமீரிகளின் இறையாண்மையைச் சிதைத்தது இன்றையப் பாசிச வெறிபிடித்த பாரதிய சனதா கட்சித் தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு.

இந்நிலையில், மொழிவழி மாநிலங்கள் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிடவும், தங்கள் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற் றிடவும், தங்கள் மக்களின் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கல்வி போன்றவற்றைத் தாங்களே முடிவு செய்துகொள்ளுகிற தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கான எழுச்சியை மக்களிடையே உருவாக்கிடவும், அதற்காகப் பாடுபட்ட பெருமக்களின் உழைப்பையும் ஈகத்தையும் அந்தந்த மொழி பேசும் மக்களிடம் விளக்கி நினைவுகூர்ந்திடவும் ஒவ்வொரு மொழித்தேச மாநிலங்களும் தங்கள் மாநிலம் அமைந்த நாளைத் தாயக நாளாகக் கொண்டாடுவதும், அவரரவர் மாநிலத் திற்கென ஒரு கொடியை உருவாக்கி உயர்த்திப் பிடிப் பதும் வரலாற்றுக் கடமையாகிறது.

இந்தியாவைத் தவிர்த்து, உண்மையான கூட் டாட்சியைப் பேணுகிற உலக நாடுகளிலுள்ள எல்லா மாநிலங்களும் தங்களுக்கென ஒரு தனிக் கொடியை வைத்துள்ளன. அந் நாடுகளின் அரசமைப்பும் அப்படியே அமைந்துள்ளது.

அந்த வகையில், கருநாடக மாநில மக்கள், 1.11.1956 தொடங்கி ‘கருநாடக ராஜ்யோத்சவா’ என்கிற பெயரில் ­ஊர்தோறும், பள்ளிதோறும், நடுவண் அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தனியார் பணிமனைகள் தோறும் நவம்பர் முதல் நாளில் கருநாடக மாநிலக் கொடியை ஏற்றி, தெருவெல்லாம் தோரணங்கள் கட்டி ஆண்டு தோறும் ஒரு பெருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந் நாளில் மொழிவழி மாநிலம் அமைக்கப்படப் பாடுபட்ட தம் தலைவர்களின் பெருமையை விதந்து பேசுகிறார்கள்; தம் தாய்மொழி வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள்; தம் மாநில நலன் பற்றிப் பேசுகிறார்கள். இதை நான் நேரில் கண்டு பலமுறை பூரித்தேன்.

கருநாடக அரசு, 31.10.2008-இல் அம் மாநிலத் தொழிலாளர் துறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, கர்நாடக அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் எல்லா வற்றுக்கும் நவம்பர் முதல் நாளைக் கட்டாய விடுமுறை நாளாக அறிவித்தது. இதை மீறுவோறுக்கு உருவா 10,000 தண்டமும் விதிக்கப்படுகிறது.

கருநாடகக் கொடியை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் ஏற்றுவது தொடர்பாக 2012-இல் அம் மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்கள் கொடி வைத்துக் கொள்வதைத் தடுப்பதாகக் குறிப்பிடப்படவில்லை.

கருநாடக அரசே குழு அமைத்து ஒரு கொடியை அறிவிக்கலாம் என்று தான் வழிகாட்டியது. அதன்படி 8.3.2018-இல் அன்றையக் காங்கிரசுக் கட்சிக் கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா ஒரு குழு அமைத்து கருநாடகக் கொடியை அறிவித்து இந்திய அரசுக்கும் தெரிவித்திருக்கிறார். இன்றைய பாரதிய சனதாக் கட்சி தலமையிலான கருநாடக அரசு 2020-இலும் கொரானா சூழலில் கருநாடக நாள் விழா கொண்டாடுவதற்கான-கொடி யேற்றங்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்ட தோடு முதலமைச்சர் எடியூரப்பாவே கொடியும் ஏற்றிக் கொண்டாடியுள்ளார்.

மேலும், 1966 முதல், கருநாடக உரிமைகளுக் காகப் போராடிய - போராடிவருகிற தலைவர்களையும், அறிஞர்களையும் ஊக்குவித்திடும் வகையில் ‘கருநாடக ராஜ்யோத்சவா விருது’ அறிவித்து ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 1.11.2020-இலும் 65 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வரலாற்றில் எப்போதுமே தமிழ்நாட்டுக் கொடி என்று தனித்த ஒரு அரசின் கொடி அடையாளப்படுத்தப்பட்டதாக அறியப்பட முடியவில்லை. சேர, சோழ, பாண்டியர்களும் வில், புலி, கயல் ஆகியவற்றைத் தனித் தனியே அவரவரர் கொடியாக வைத்திருந்தனரே தவிர அவற்றை ஒருசேர இணைத்து ஒரு பேரரசின் -தமிழ்நாட்டு அரசின் கொடியாக அறிவித்திடவில்லை. பின்னர் களப்பிரர்கள் ஆட்சியமைத்திட்டபோது அவர்கள் கொடியாக வில், புலி, கயல் இணைந்த கொடியை அறியமுடிகிறது.

27.8.1970-இல் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஒரு தமிழ்நாட்டுக் கொடியை அறிவித்தார். அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களும் அதை ஏற்கவில்லை. அதனால் அந்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை.

‘தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள் பெருவிழா’ என்கிற பேரால், தமிழ்ச் சான்றோர் பேரவை என்னும் அமைப்பின் சார்பில், தோழர் நா. அருணாசலம் அவர்கள் 1992 முதல் பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் நடத்தினார். எல்லா அமைப்பினரும் அதில் பங்கேற் றனர்; மா.பெ.பொ.க. சார்பில் ஆண்டுதோறும் நான் பங்கேற்றேன்.

இப் பெருவிழாவைத் தனித் தனி அமைப்புகள் நடத்துவதை விடத் தமிழ்நாட்டு அரசே முன்வந்து, ஆண்டுதோறும், ‘தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்’ என அறிவித்து ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் எனவும், அரசு விழா எடுக்கவும் கோரித் தீர்மானமும் அப்போது நிறைவேற்றினோம்.

இந்தியாவில் ஓர் உண்மையான கூட்டாட்சியை அமைக்க வேண்டும் என, 1991 அக்டோபர் முதற் கொண்டு திட்டமிட்டு, அனைத்திந்திய அளவில், முடிந்த முயற்சிகளைச் செய்து வரும் -மா.பெ.பொ.க., 22.7.2012, ஞாயிறு அன்று, வேலூரில் நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில், எடுத்த முடிவின்படி ஆண்டு தோறும் நவம்பர் முதல்நாளைத் தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள் பெருவிழாவை நடத்திடத் தீர்மானித்து அதன்படிக் கொண்டாடி வருகிறோம்.

தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 25.10.2019 அன்று அரசாணை வெளியிட்டு, 1.11.2019-இல் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் 10 இலக்க ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு விழா எடுத்துச் சிறப்பாகக் கொண்டாடிய தமிழ்நாட்டு அரசை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் மனமார வரவேற்றுப் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த ஆண்டு, 31.10.2020-இல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதோடு நிறுத்திக்கொண்ட தமிழ்நாட்டு அரசின் நிலை வருந்தத்தக்கது.

இந்நிலையில், 1.11.2020-இல் பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு “தமிழ்நாடு நம் நாடு! தாயக நாளைக் கொண்டாடு!” என்ற முழக்கத்தோடு தமிழ் நாடு நாளை எல்லா ஊர்களிலும் கொண்டாடுவதைக் கூட்டமைப்பின் உறுப்பியக்கம் என்கிற நிலையில் மா.பெ.பொ.க. வரவேற்று மகிழ்கிறது.

அதைப் போலவே நவம்பர் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவும், தமிழ்நாட்டுக்கென ஒரு பொதுக்கொடியை அறிவிக்கவும் கோரியுள்ளதை மா.பெ.பொ.க.-வும் வழிமொழிகிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாகக் கருநாடக அரசைப்போல் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தமிழ்நாட்டுக் கொடியை அறிவித்திடவும்; நவம்பர் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவித்து அரசு உள்ளிட்ட எல்லா நிறுவனங்களிலும் தமிழ்நாடு விழா கொண்டாடுவதைக் கட்டாயமாக்கிட வேண்டுமெனவும்; தமிழ்நாடு நாளில் தமிழ், தமிழர், தமிழ் நாடு உரிமைகளுக்காக உழைத்திட்ட பெருமக்களை நினைவுகூர்ந்து மதிப்புச்செய்திட ‘தமிழ்நாடு நாள் விருது’ என ஒன்றை அறிவித்து ஆண்டுதோறும் நவம்பர் முதல்நாளில் வழங்கிடவேண்டுமெனவும் மா.பெ.பொ.க. சார்பில் தமிழ்நாட்டு அரசை வேண்டிக் கொள்கிறேன்.

இந்தியா என்பது என்றைக்குத் தேசிய இன வழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டரசாக மாறு கிறதோ அன்றைக்கே உண்மையான சுதந்தரநாள் ­அந்த நாள்தான் இந்திய ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு மொழித் தேசமக்களின் விடுதலைநாள்.

அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இனி நவம்பர் முதல் நாளில் உயர்த்திப்பிடிப்போம் தமிழ்நாட்டுக் கொடியை! (1.11.2020).

- வே. ஆனைமுத்து

Pin It