தமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே.

தமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் கொண்டு வந்ததில் பாரதிராசாவின் பங்கு முதன்மையானது. இசுலாமியர் விரோத அரசியலையும், உலகமயமாக்கல் பண்பாட்டையும் தமிழ்த்திரையில் கொண்டு வந்தவர் மணிரத்னம். கஞ்சா அடிப்பவர்களையும் உதிரிகளாக இருப்பவர்களையும் கதாநாயகனாக காண்பித்து புதுமை செய்தவர் இயக்குனர் பாலா (சேது, நான் கடவுள், பிதாமகன், அவன்-இவன்) மனநோயாளி கதாநாயகனை காதலித்து அவனை மேம்படுத்துவதை இலட்சியமாக கொள்ளும் படித்த, அழகான காதலிகளை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை செல்வராகவனையே சாரும். இன்றைய கார்ப்பரேட் உலகின் வக்கிகரமான ஆண்மொழியைப் பதிவு செய்து திரையில் சந்தையாக்கி வருபவர் செல்வராகவன் என்றால் அது மிகையல்ல. அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் கழுகுப் பார்வை மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு எதிரானது என்கிற அரசியலை முன் வைத்தவர் இயக்குனர் ஜனநாதன்.

paalai_622

நாம் மேற்கண்ட இயக்குனர்கள் அனைவரும் திரையுலகில் கருத்தியல் ரீதியாக புதுமரபை கட்டமைத்தவர்கள். அந்த வகையில், சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து கதை சொல்லும் முறையை இயக்குனர் செந்தமிழன் தமிழ் திரைஉலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கடவுள், சாதி, மதம் கடந்து உண்மையான தொன்மை வரலாற்றை தமிழன் இன்னும் பதிவு செய்யவில்லை. அந்த வகையில், தொல்குடிகளின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே 'பாலை'.

 தமிழர்களின் வாழ்விடத்தை வந்தேறிகள் ஆக்கிரமித்ததன் விளைவாக வறண்ட நிலத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அங்கு நீர் வற்றி அந்நிலம் முழுமையாக 'பாலை'யாக மாறும் அவலம் ஏற்படுகிறது. அப்போது பாலை மறவனாக மாறி, வந்தேறிகளிடமிருந்து தன் தாய் நிலத்தை மீட்கின்றனர். தமிழன் தன் கண்முன்னால் சந்தித்த ஈழத்தின் கொடுர நிகழ்வுகளையே இத்திரைப்படம் குறிப்பால் உணர்த்துகிறது. சமாதானம் பேசச் சென்ற வீரர்களை கொலை செய்த சிங்கள அரசின் கோழைத்தனம் படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.

 போர் முடிந்த பிறகு, தலைவன் குளக்கரையில் மயங்கி கிடப்பது போலவும், அதன் பிறகு, 'தலைவன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை' என்கிற செய்தியோடு படம் முடிகிறது.

 தலைவன் மரித்தாலும், இருந்தாலும், விடுதலைப் போராட்டம் தொடரும் என்கிற வரலாற்று உண்மையை செந்தமிழன் பதிவு செய்கிறார். நிலமும், பெண்ணுடலும், தனியுடைமையாகாத அந்த காலகட்டத்தில் தலைவனும், தலைவியும் கள்ளுண்டு, கலவி கொள்ளும் காட்சி அழகியலின் உச்சம். நகரமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையினால் மலையாளி, மார்வாடி, தரகுதேசிய முதலாளிகள் சந்தை விரிக்கும் இன்றைய தமிழகத்தில் 'பாலை' காலத்தின் தேவை. அக்காலகட்டத்தில் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பை உணர்ந்திருந்தார்கள். ஆனால் தற்போது வந்தேறிகளின் படையெடுப்பை உணர முடியாத பண்டமாக தமிழ் இளைஞர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அந்த 'பண்ட' நிலையிலிருந்து தமிழனை பகுத்தறிவுள்ள மனிதனாக, இன உணர்வு கொண்ட போராளியாக உருவாக்குவதே 'பாலை' படத்தின் நோக்கம். தமிழனின் நீராதாரத்தையும், வாழ்வாதாரத்தையும், வெளிப்படையாகவே பறித்து கொண்டு இருக்கும் கேரள அரசையும், அதற்கு பக்கபலமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நடுவண் அரசையும் உள்ளடக்கிய (சு)தந்திர இந்தியாவில் நாம் வாழ்ந்து கெர்ணடிருக்கிறோம். அப்படியானால், தமிழன் ஒவ்வொருவரும் 'பாலை' படத்தை பார்ப்பது வரலாற்றுக் கடமை.

யூத தேசிய இன விடுதலையை மையப்படுத்தி வெளிவந்த 'பென்ஹர்' போன்ற திரைப்படங்கள் உலகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்களாக உள்ளன. அந்தப் பட்டியலில் தமிழ்த்தேசிய இன விடுதலையை முன்வைத்த ‘பாலை’ திரைப்படத்தையும் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், அத்திரைப்படங்கள் தன் தேசிய இனம் விடுதலை அடைந்த பின்பு, வரலாற்றை நினைவு கூறுவதற்காக எடுக்கப்பட்ட படைப்புகள். ஆனால், 'பாலை' படம் தேசிய இன விடுதலை உணர்ச்சியை தூண்டுவதற்காக எடுக்கப்பட்ட படம்.

 'காயம்பு' ஓலைச்சுவடிகள் போல மறைந்திருக்கும் வெற்றிக்கான சுதந்திரங்களை திரைப்படங்களின் மூலம் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் திரைத்தொழில் நுட்பமே புரட்சிக்கான ஆயுதம் என்கிற லெனின் கூற்றை நடைமுறைப்படுத்த முடியும். வணிக நோக்கமில்லாமல் வரலாற்றுப் பார்வையுடன் தமிழ்ச் சமூகத்தை அணுகிய செந்தமிழன் போன்ற இயக்குனர்கள் தமிழ்த்திரைக்கு வரவேண்டும், வளர வேண்டும். வாழ்த்துக்கள்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It