கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

periyar 283நான் காங்கிரசில் சேர்ந்து விடப் போகிறேன் என்பதாக பலர் எனக்குப் பரிகாசக் கடிதங்களும், சில துர் எண்ணங்கள் கற்பிக்கிற கடிதங்களும் எழுதி வருகிறார்கள். நான் காங்கிரசில் சேருவதாக வைத்துக் கொண்டு பார்த்தாலும், காங்கிரசுக்கு மகத்தான செல்வாக்கும், பெருமையும் இருக்கின்ற காலத்தில் நான் அதில் சேருவதானால் எனக்கு உள் எண்ணம் ஏதாவது கற்பித்தால் அதற்கு அர்த்தமுண்டு.

இன்று அப்படி ஒன்றும் இல்லை. அது எப்படி இருக்கின்றது என்றால் ஜஸ்டிஸ் கட்சியானது 1926ம் முடிவில் எப்படி கடைசி மூச்சு வாங்கும் நிலையில் ஜீவநாடிகள் எல்லாம் விழுந்து போய் எடுத்துப் புதைப்பதற்கும் ஆளில்லாத ஸ்திதியில் இருந்ததோ, அந்த நிலையில் அதைவிட மோசமான நிலையில் கொள்கையற்று, தலைவர்களற்று, மானமற்று, நாணையமற்று, அழுவாரற்று சாகும் தருவாயில் இருக்கும் காங்கிரசில் நான் போய் சேருவதாய் இருந்தால் அதில் எனக்கு என்ன லாபம் அல்லது உள் எண்ணம் இருக்க முடியும் என்று எனது தோழர்களைக் கேட்கின்றேன்.

ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் போது கூட எனக்குப் பலவித துர் எண்ணம் கற்பித்தார்கள். ஜஸ்டிஸ் கக்ஷி உச்சஸ்தானத்தில் சுயமரியாதையோடு உயர் நிலையில் வாழ்ந்த காலத்திலும் அதன் தலைவர்களும் அரசாங்க (கேப்நிட்) மெம்பர்கள் முதல் மந்திரிகள் வரை என்னிடத்தில் "மரியாதையும், பக்தியும்" இருப்பதாய் காட்டிக் கொண்டிருந்த காலத்திலும் கூட அக்கக்ஷியால் ஒரு காதொடிந்த ஊசி கூட நான் எனது சொந்தத்திற்கு எதிர் பார்க்கவில்லை. பெறவும் இல்லை. அதனால் நான் எவ்வித பெருமையும் அடைந்து விடவுமில்லை என்பது எனது எதிரிகளுக்கும் தெரியும் என்று நினைத்திருக்கிறேன். (டாக்டர் சுப்பராயன் அவர்கள் காலத்திலாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாயும் தீண்டாமை விஷயமாயும் சில காரியங்கள் சாதித்துக் கொள்ள முடிந்தது என்னலாம்) மேலும் நான் என் சொந்த முறையில் அவர்களுக்காக பட்ட கஷ்டமும், நஷ்டமும் எனது நண்பர்களுக்குத் தெரியும் என்றும் நினைக்கிறேன்.

அப்படி இருக்க காங்கிரசில், அதுவும் உயிருக்கு மாத்திரமல்லாமல் அது செத்தால் சுடுவதற்கும் இடமில்லாமல் மயானத்துக்கும் ஊசலாடும் இக்காலத்தில் காங்கிரசினிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்துக் கொண்டு அதனிடம் நேசம் கொள்ள முடியும் என்பது எனக்கே விளங்கவில்லை. மனித சமூக நன்மையை அதிலும் தாழ்த்தப்பட்ட, ஏழ்மைப்பட்ட பாமரமக்களின் நன்மைக்காக காங்கிரசு மாத்திரமல்ல, இன்னும் எக்கட்சியின் நேசம் கொண்டாலும் கொள்வேனே ஒழிய மற்றபடி எனது ஜீவனோபாயத்துக்கோ வாழ்க்கை உபாயத்துக்கோ எக்கட்சியிலும் சேரமாட்டேன் என்றும், சேரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- ஈ.வெ.ரா.

(பகுத்தறிவு அறிக்கை 23.09.1934)