இல்லை என்று எடுத்து சொல்வதற்கு இருக்கின்ற யுக்தியெல்லாம் திரண்டு விடும். இருக்கிறது என்று எடுத்து சொல்ல இருக்கின்ற சக்தி கூட உதவாது. தட்டிக் கொடுத்து மேலே கொண்டு வருவது கடினம். எட்டி உதைத்து கீழே தள்ளுவது சுலபம். மானுடம் சுலபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. மானுட மனவெளி சுலபத்துக்கு விலை போகிறது. கேலி கிண்டல் நையாண்டி பிராண்டல் என முதுகில் குத்துவதற்கு கால நேரம் அவகாசம் தருகிறது. நெஞ்சோடு முட்டிக்கொண்டு நிற்க பலமில்லாத கால்களில் நேர்மை கேள்விக்குறி ஆகிறது.

குறை சொல்வதில் இருக்கும் சுகம் நிறை கொண்டபோது கூட கிடைப்பதில்லை. புறம் பேசுதலைப் போல புளகாங்கிதம் ஒன்றுண்டோ. பேசி பேசி தீர்ந்து போவதில் அப்படி ஒரு தித்திப்பு. திகில் சுரக்கும் இன்பம் அடியாழத்தில் பற்கள் நீண்டு சிரிக்கும். விபத்தில் தப்பித்துக் கொண்டவர்கள் மீது வரும் அதீத கருணை... நினைத்த மாதிரி பெரிதாக ஒன்றும் நடக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் சப்பு கொட்டும். மற்றவர் தோல்வியில் துக்கம் கொண்டாடுதல் கொலை பாதகத்துக்கு சமம். மற்றவர் வேதனையைப் பகிர பகிர உள்ளிருக்கும் படுகுழி விரிவதை உணர முடியும்.

இப்போதெல்லாம் ரகசியம் என்ற ஒன்றே இருப்பதில்லை. எல்லாவற்றையும் அம்மணமாக்கி விட்டு இல்லாதவற்றில் ஏறி அமர்ந்து இந்த பிண்டம் என்ன செய்யப் போகிறது?human face 466குரூரம் இயல்பிலேயே இருக்கிறது. அதன் குறுக்கு நெடுக்கு கோடுகளை உன் துக்க நாளில் சொந்தக்காரன் கண்களில் காண். பக்கத்து வீட்டு மரத்தின் நிழல் விரும்பும் மனம் அதன் இலைகளை வெறுக்கும். மற்றவர் வீட்டு சண்டைக்கு தான் மனம் ஊற்றும் எண்ணெய் எத்தனை எத்தனை டப்பா.

கேள்விகளுக்கு உட்படுத்த விரும்பாத நான் எனும் மனநிலை எந்த கேள்வியும் எதிர் தரப்புக்கே என மனப்பால் குடித்துக் கொள்கிறது. எதிர்மறை அலைகளுக்கே இதயம் அசையும் காலம் இது. எல்லாமும் செய்தி ஆன பிறகு செவி முழுக்க தொற்று. பேசிக்கொண்டே இருக்கும் பிதற்று நிலைக்கு வாயெல்லாம் நச்சு.

எப்போதும் எவரையேனும் முந்திக் கொண்டே இருக்க பழகிய புத்தி கழுத்தை சுற்றிய பாம்பு. வளைவுகளில் வேகம் சரிவை நோக்கியே. அடுத்தவர் தோல்விக்கு காத்திருக்கும் தன்னுடைய வெற்றி. அங்கீகாரத்துக்கு அலையும் அற்பத்தின் வடிவம் போலி புன்னகையை சுருட்டிக் கொண்டு புற்றிலிருந்து சீறிக்கொண்டு இருக்கும்.

முடியாது. தெரியாது என்பதில் இருக்கும் வசதி... ஏன் முடியாது.. ஏன் தெரியாது.. முடியும்.. தெரிந்து கொள்வேன் என்று இறங்குவதில் இருப்பதில்லை. சோம்பேறிகளின் கூடாரமாக குதர்க்கம் இருப்பதால்... நான் அப்படித்தான் என்ற மூட பொருளோடு மூர்க்கத்தில் திரிகிறது. குட்டி சுவரில் குத்த வைத்திருக்கும் நண்பகல் கால்களில் சூனிய விரல்களே மிச்சம். வார்த்தைகளை விடுதல்... மனநிலை திடமில்லாத மானுட சொதப்பல். கெத்து என்ற வெற்றுச் சொல்லில் கட்டுண்ட கலாச்சாரம்... தறிகெட்டு சாகசம் என்ற பெயரில் கோமாளித்தனங்களையே அரங்கேற்றுகின்றன. வேகமாய் சென்று முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டு நிற்பதில் அப்படி ஒரு அலாதி. இருளுக்குள் பிழையாகவே கிடப்பதில் அப்படி ஓர் ஆசுவாசம். சுயபுத்தி அற்ற சொல் புத்தியும் ஏற்காத மமதையில் வீணா போவதன் அத்தனை அறிகுறிகளும். அவஸ்தையை விரும்பி ஏற்கும் குறுக்கு சிந்தனையில் மெழுகுவர்த்தி சொட்டலாய் சாத்தானை சுடர் விடும் கிளர்ச்சி.

அற்ப பார்வைக்கு அளவில்லை. போடா மயிரு தான் முப்போதும் கண் கொள்ளும் யுக்தி. மரியாதை மருந்துக்கும் கிடையாது. தொழில்நுட்ப வாழ்வில் மானுடத்தின் கிளை பாதகம் எனலாம். விலை போன சதுர செவ்வக இதயத்துக்கு சார்ஜ் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும். அமைதிக்கு பாடுபொருள் தெரியாது. ஆனால் அகம் பாவத்துக்கு அட்ரஸ் ஆனார்கள். அன்பின் அடியாழம் புரியாது. ஆனால் அடக்கி ஆள்வதில் ஆசைநாயகம் ஆனார்கள்.

ஈகோவே வழி நடத்தும் என்பது அரைகுறை. ஈகோவை கொல்லும் அரவணைப்பே ஒளி கொடுக்கும் என்பது நடைமுறை.

மரணச் செய்தியை பரப்புவதில் இருக்கும் பரபரப்பு... ஒரு மரணத்தின் வலியைச் சொல்வது போல இல்லை. துக்கப்படுவதிலும் சுகம் உண்டென சொல்லும் உளவியலை யோசிக்க செய்கிறது. வாழும் போது துளி அளவும் கண்டு கொள்ளப்படாத ஒருவனை செத்த பிறகு வீடு வீடாய் வாட்ஸப்பில் கண்ணீர் விட செய்யும் காரியங்கள்... எதை முன்னிறுத்துகின்றன. எனக்குத் தெரிந்து விட்டது. அதை எல்லாருக்கும் சொன்னால் தான் நிம்மதி என்ற சுய நிறைவா. எதை முன்னிறுத்தும் தன்னை முன்னிறுத்திக் கொள்வது.

தனக்கு தெரிந்த நாலே நாலு விஷயத்தை நானூறு முறை நாலாபக்கமும் பேசிக்கொண்டே இருப்போரை விட்டு விலகி விடுதல் நலம். தேங்கிய குட்டை தேகத்துக்கு ஆகாது. தன் சாகசத்தையே வியந்து கொண்டிருக்கும் நோவுக்கு மருந்து இல்லை. ஊரார் வீட்டில் இருந்தே உலக சாதனை வரும் என்று நம்பும் வேடிக்கை மனிதர்களை வெடி வைத்து தகர்த்தால் என்ன.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. ஆனால் அது கற்றுக் கொள்வதற்கு பொருந்தாது. தொடர் கற்றலே கற்றல். வெறுங்கற்றல் வெற்றுக் கத்தல். சிலர் இருக்கிறார்கள். சொன்னது தவறென்று தெரிந்த பிறகும் பின் வாங்க மாட்டார்கள். கெத்து போய் விடும் என்று தவறான கருத்தை சரி செய்ய பொய்யான கருத்தை பூசுவார்கள். ஆபத்து. அகல்வது நலம்.

வேலை முடிந்ததும் உதவியவனை ஒதுக்கி விடுதல் மனிதனின் மிக முக்கியமான தொன்று தொட்ட பழக்கம். வேலை ஆகும் வரை வணக்கம் போட்டுக் கொண்டே... கும்பிடு போட்டுக் கொண்டே.. வாழ்த்திக் கொண்டே அலையும் நாய்வால் மனம் பிறகு சுருண்டு ஒதுங்கிக் கொள்ளும். பயங்கரமான முகமூடியை அது மாட்டிக் கொண்டிருந்தது பிறகு தெரிய வருகையில்... பல் தெரியாமல் அழுது வடியும் உதவி.

தன்னுடைய மனசுக்குள் தானே மாட்டிக் கொள்வது தனிமையின் சீற்றம். தனக்குள் தானே ஒதுங்கிக் கொள்தல் கவலைகளின் தொட்டி. தன்னை மட்டுமே சிந்திப்பது தெறிகெட்ட வேகம். சுற்றி சுற்றி போட்டுக் கொண்ட வளையம் தப்பில்லை. வளையம் முழுக்க முற்கள் முளைக்க வைத்திருப்பது மானுடப் பிழை.

கேமராவுக்காக நல்ல காரியம் செய்யும் காரியவாதிகளை காலம் பிடுங்கி வீசி விடும். என்னை பார்த்து அவர்களும் நல்ல காரியம் செய்யட்டும் என்பதெல்லாம் பூச்சு. நல்ல காரியம் ஒருவரைப் பார்த்து ஒருவர் செய்யக்கூடாது. உள்ளம் பூத்து அவரே செய்ய வேண்டும். மற்றபடி வாரம் ஒரு விருது வாங்கி வீட்டில் குவிப்பதில் நோ யூஸ். மனம் முழுக்க கொம்பு முளைத்திருக்க தரை ரேட்டுக்கு தான் பேச்சும் இருக்கும். தகர டப்பா தரத்துக்கு தான் வாழ்விருக்கும்.

நிஜமான அக்கறை பகிர்தல்கள் தனி. அதுவற்ற பெரும்பான்மை வெற்றுப் பரப்புரை வம்பர்களைப் பற்றி தான் யோசனை. அவர்கள் எல்லா காலத்திலும் அதனதன் வடிவத்தில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். இப்போது அவர்களின் தாக்கம் அதிகம். அச்சுறுத்துகிறது.

- கவிஜி

Pin It