மிகுந்த எண்ணிக்கையில் பரவிவரும் நூலாகி விட்டது பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல்! அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் ஓர் இலட்சம் படிகளுக்குமேல் விற்பனையைக் கடந்து விட்டது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ நூலுக்குள்ள வரவேற்பும் இன்றும் குறையாமல் தொடர்கிறது.
“திராவிடர் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் பெரியார் என்றால் தாயாக இருப்பது நான்” - எனப் பெருமையுடன் கூறிக் கொண்டவர் திரு.வி.க.
பெண்ணின் இழிவுக்கான காரணத்தையும் உயர்வுக் கான தேவையையும் வலியுறுத்தி இருவரும் ஒரே நேரத்தில் எழுதிய நூல்களே ‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘பெண்ணின் பெருமை’ இருநூலும்!
இருநூல் பிறப்பிற்கும் காரணமானது, செட்டிநாட்டுப் பகுதியில் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புச் சூழல்தான்!
மறுமலர்ச்சி சிந்தனைகளும் விடுதலை இயக்கங்களும் அச்சுநூல் வருகையும் அறிவுத் துறைகளின் அறிமுகமும் படிப்படியாய்த் தமிழ்நாட்டை விழிப்படைய வைத்தன. திராவிடர் இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் நாட்டு விடுதலை முயற்சிகளும் விழிப்பை விரைவுபடுத்தி வளர்த்தன. பெண்ணுரிமைக் குரல் ஊக்கம் பெறவும் பெண்ணுரிமைப் போராளிகள் உருவாகவும் அவை காரணமாயின.
குடிஅரசு, விடுதலை, புரட்சி, பகுத்தறிவு, ரிவோல்ட் (ஆங்கில இதழ்) முதலியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டுச் சிந்தனை மறுமலர்ச்சிக்குப் பேரூக்கமானார் பெரியார்.
சாதியால் பிரிந்து நிற்போரைத் ‘தமிழர்’ என்னும் ஒரே அடையாளத்தோடு ஒன்றிணைக்க முனைந்தது திராவிடர் இயக்கம். சாதி கடந்த சாதிமறுப்பு (கலப்பு)த் திருமணங்கள் திராவிடர் இயக்க வளர்ச்சியோடு இணைந்து வளர்ந்தன.
தமக்கை, தங்கை எனக் குடும்பமாய் முன்வந்து குடும்பங்களை உருவாக்கிய வியப்பு நிகழ்ச்சிகளும் உண்டு.
குஞ்சிதம், காந்தம் இருவரும் அக்கா, தங்கையர், குஞ்சிதம் குத்தூசி குருசாமியை மணந்தார். காந்தம் நெ.து. சுந்தரவடிவேலை மணந்தார். இரண்டும் சாதி மறுப்புத் திருமணம்.
முத்துலட்சுமி, நல்லமுத்து இருவரும் உடன்பிறந்தோர், சாதி கடந்து திருமணம் புரியும் உறுதியோடிருந்தனர்.
முத்துலட்சுமி சுந்தரரெட்டியை மணந்து முத்துலட்சுமி ரெட்டி ஆனார். நல்லமுத்து இராமமூர்த்தி அய்யரை மணந்து ‘அக்கிரகாரவாசி’ ஆனார்.
சாதி கடந்த திருமணங்கள் எளிதாக நடந்து விடவில்லை; இருவீட்டார் எதிர்ப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் இடையேதான் நடந்தன.
பெரியாரும் நாகம்மையாரும் சாதி மறுப்புத் திருமணங் களை நடத்துவதில் துணிச்சலோடு முன்நின்றனர். திருமண அழைப்பிதழைத் தங்கள் பெயரிலேயே அச்சிட்டனர். மணமக்கள் வீடாகத் தங்கள் வீட்டு முகவரியையே தந்தனர். தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே சாதி மறுப்புத் திருமணங் களைச் சிறப்பாக நடத்தி மனம் மகிழ்ந்தனர் பெரியார்நாகம்மை இருவரும்!
குஞ்சிதம்-குத்தூசி குருசாமி திருமணம் 8.12.1929-இல் ஈரோடு பெரியார் இல்லத்தில் நடந்தது. குஞ்சிதம் இசை வேளாளர் குருசாமி தொண்டை மண்டல முதலியார் ஏற்பாட்டுத் திருமணம்தான்! ஏற்பாடு செய்தவர் மூவலூர் ஆ. இராமாமிர்தம் அம்மையார். தமது பொறுப்பில் நடத்தியவர் தந்தை பெரியார்.
நகரத்தார் குடும்பங்களில் சாதி மறுப்பு தலைநீட்டிய போது, திருமணத்தைத் தடுக்கும் எதிர்ப்பு பல மடங்காய்ப் பெருகியது. அஞ்சாமல் முன்நின்று நடத்திய பெரியாரை அரக்கனாகப் பார்த்துச் சாதிவெறி சீறியது.
நீலாவதி திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்; நாயுடு வகுப்பு. அவரை மணக்க விரும்பிய இராம. சுப்பிரமணியம் காரைக்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர்; நகரத்தார் செட்டியார் வகுப்பு. பெரியாரும் நாகம்மையாரும் அழைப்பது போல் திருமண அழைப்பிதழ் அச்சானது. திருமண முயற்சிக்கு உறுதுணையாய் நின்றவர் காரைக்குடி ‘குமரன்’ இதழாசிரியர் சொ. முருகப்பா (‘வெண்பா போட்டி’ என்ற வடிவத்தை முதன்முதலாக தம் ‘குமரன்’ இதழில் அறிமுகப் படுத்தியவர்).
சுந்தரி-அருணகிரி திருமணம் சாதி மறுப்புத் திருமணமாக நடக்கக் காரணமும் பெரியார் தொண்டரான சொ. முருகப்பாதான்!
சுந்தரி நகரத்தார் செட்டியார் வகுப்பு. திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மாமனார், மாமியார் சுந்தரி-அருணகிரி என இப்போது எளிதாய்ச் சொல்லிவிடலாம்.
அப்போது நிலைமை அவ்வளவு எளிதாக இல்லை. ‘செட்டி நாட்டில் அடுத்தடுத்துச் சாதி மறுப்புத் திருமணமா’ எனக் கொந்தளிப்பான சூழலில் நடந்த திருமணம் அது! ஒரு சாதிக்குள் மட்டுமே திருமணம் எனச் சாதியுணர்வாளர்கள் ஒன்று சேர்ந்தனர். ‘சிவநேசம் திருக்கூட்டம்’ எனத் தங்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டனர். ‘சிவநேசன்’ என இதழ் உருவானது. சாதி மறுப்புத் திருமணம் செய்தோ ரையும் திருமணம் நிகழக் காரணமானோரையும் இழி வாகவும் அருவருப்பாகவும் எழுதுவதே இந்தஇதழின் செயல்பாடானாது. அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தவர் ‘சிவநேசம்’ பலவான்குடி இராமசாமி செட்டியார்! சொ. முருகப்பாவைக் கடுஞ்சொற்களால் வசைபாடுவதைச் ‘சிவநேசர்’ வழக்கமாக வைத்திருந்தார்.
பொறுமை காத்துவந்த பெரியார் பொங்கி எழுந்து, ‘சிவநேசம் சிறுமை’ எனக் குடிஅரசு இதழில் ஆசிரியவுரை எழுதினார். படமெடுத்த சாதிப்பாம்பு பதுங்கத் தொடங்கியது.
சாதிவெறியால் ஒடுக்கப்படும் பெண்களுக்காகப் பரிந்து பேசிய பெரியார் அப்போது எழுதி வெளியிட்ட நூலே ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’
தம் நண்பர் தந்தை பெரியார் கருத்துக்கு அரண் செய்வதுபோல், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள், அதேநேரத்தில் வெளிப்படுத்திய நூல் ‘பெண்ணின் பெருமை’.
இருநூல்களும் பிறக்கக் காரணமானது செட்டிநாட்டுச் சாதிவாதிகள் காட்டிய எதிர்ப்பு.
சாதி மறுப்பு மணமக்களுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற் காகவே ‘சிவநேசம்’ இதழ் நடத்தி வெறுப்பை உமிழ அணிதிரட்டியவர் பலவான்குடி இராமசாமி செட்டியார்! நடந்த வேடிக்கை என்னவென்றால், அதே ‘சிவநேசர்’ இராமசாமி செட்டியார் தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை என்னும் ஊருக்கு வந்து சாதி மறுப்பு (கலப்பு)த் திருமணம் செய்து கொண்டதுதான்!
கலப்பு மணம் ஒன்றே
நல்வழிக்குக் கை காட்டி! - பாவேந்தர்
- செந்தலை ந.கவுதமன்