சேரிப் பறையர் என்றும்

தீண்டாதார் என்றும் சொல்லும்

வீரர் நம் உற்றாரடி -சகியே

வீரர் நம் உற்றாரடி!

என்று 1936-இல் பாவேந்தர் குமுறினார்.

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி கோயிலில் கடந்த ஏப்பிரல் 7ஆம் தேதி இரவு தீமிதி விழா நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசல் காரணமாக பட்டியலின இளைஞர்கள் கதிரவனும் அவரது நண்பரும் கோயிலுக்குள் சென்றுள்ளனர்.

தாழ்த்தப்பட்டவர்களான நீங்கள் எங்கள் கோயிலுக்குள் எப்படி வரலாம் என்று ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேல் உள்ளிட்டவர்கள் கடுமையாகத் திட்டியுள்ளனர். வன்னியர்களில் சாதிவெறி பிடித்த சிலரால் அந்த இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். கதிரவனின் நண்பரை மீட்கச் சென்ற நண்பரின் பெற்றோரையும் தாக்கினர்.melpathi templeதாக்கப்பட்ட இளைஞர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவசர ஊர்தியில் மக்கள் ஏற்றிய பின்பும், ஊர்தியைச் செல்ல விடாமல் மறித்து ஊர்தியின் உள்ளே சென்ற சாதி வெறியர்கள் இளைஞர்களை மீண்டும் தாக்கினர்.

இதைத் தடுக்க முடியாமல் தன் பிள்ளையை விட்டுவிடுங்கள் என்று அழுது துடித்த பெற்றோரின் காணொளியும், சாதிவெறியர்கள் இளைஞர்களைத் தாக்கும் காணொளியையும் நாம் அனைவரும் சமூக வலை தளங்களில் கண்டோம்.

இந்த நிகழ்வு தொடர்பாக ஆதிக்க சாதியினர் 18 பேர்மீது வளவனூர் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

2023ஆம் ஆண்டு வரலாற்றில் முக்கியமானது, கேரள மாநிலத்தின் பெரும் பகுதியிலும், தமிழ்நாட்டில் கன்னியா குமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் சாதிக் கொடுமையால் பெண்கள் இடுப்புக்குமேல் தோள் மீது ஆடை அணிவதற்கு இருந்த தடையை எதிர்த்து நடைபெற்ற தோள் சீலை போராட்டத்தின் 200ஆம் ஆண்டு இந்தாண்டு ஆகும்.

தீண்டப்படாத வகுப்பினர் திருவிதாங்கூர் மன்னராட்சி யில் வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டதை எதிர்த்து 1924-ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு இந்தாண்டு ஆகும்.

இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகள் சாதியின் பெயரால் நடத்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த போராட் டங்கள் ஆகும். இது நடந்து 100, 200 ஆண்டுகள் ஆகியும் மானுட உரிமையை-சமத்துவத்தை மறுக்கும் இந்த இழிநிலை இன்றும் மேல்பாதி ஊரைப் போலவே பல ஊர்களில் சாதியின் பெயரில் வெவ்வேறு வடிவில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது வெட்கக் கேடானதாகும்.

மேல்பாதியில் பட்டியலின மக்களும் திரௌபதி கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிப்பது தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் 6 முறையும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழநி அவர்களின் தலைமையில் 2 முறையும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

திரௌபதி கோயில் வன்னியர் சமூக மக்களுக்காக அவர்களின் சொந்தப் பணத்தில் கட்டப்பட்டது. எனவே பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்க முடியாது என்ற நிலைபாட்டில் உறுதியாக சாதிவெறியர்கள் இருந்ததால் அரசு நடத்திய 8 சுற்றுப் பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்து தீர்வு எட்டாத நிலையில் மாவட்ட நிர்வாகம் கோயிலைப் பூட்டி முத்திரையிட்டது.

இந்நிலையில் கோயில் தங்களுக்குத்தான் சொந்தம் என்று வன்னியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கோயில் அமைந்துள்ள இடம் அரசுக்குச் சொந்தமானது என்றும், 1978-ஆம் ஆண்டு முதல் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தற்கான சான்றையும் நீதிமன்றத்தில் அரசு வழங்கியது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி திரௌபதி கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்று சாதி வெறியர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. அதற்குப் பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர்.

பட்டியல் என்கிற சாதியினர் மட்டுமின்றி பார்ப்பனர் அல்லாதார் அனைவருமே கோயில் கருவறைகளில் தீண்டப் படாதாராகவே இன்றுவரை இந்துமத ஆகமங்களின் பெயரால் கருதப்படுகின்றனர். ஆகவேதான் அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்று பெரியார் கோரினார்.

பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கழித்து 2021ஆம் ஆண்டில்தான் பல தடைகளைமீறி திமுக அரசு பார்ப்பனர் அல்லாத சாதியினர் கோயில் கருவறைக்குள் சென்று சிலையைத் தொட்டு அர்ச்சகர் பணிசெய்ய சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது.

திரௌபதி கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுக்கும் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பனல்லாதவர்களும் பார்ப்பனியத்தால் கருவறைகளில் தீண்டப்படாதவர்களாகவே 2023 இலும் கருதப்படுகின்றனர்.

பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். இவர்கள் இந்துச் சட்டப்படியும் சாத்திரப்படியும் சத்திரியர், வைசியர், சூத்திரர் என மூன்று வருணத்தாராக இருக்கிறார்கள். இதற்கு இந்து தாய பாகச் சட்டப்பிரிவு அடிப்படையாகும்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர் சூத்திரர் மட்டுமே உண்டு. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 100க்கு 97 பேர், இவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்ற ஒரே வருணத்தாராக வைக்கப்பட்டுள்ளனர். இது இந்து மிதாட்சரச் சட்டப் பிரிவுப்படி உள்ள ஏற்பாடு.

இந்துச் சாத்திரங்களின்படி சூத்திரர்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள். இது இவர்களுக்குப் பிறவி காரணமாகச் சுமத்தப்பட்ட இழிவு. இதற்கு 2023ஆம் ஆண்டிலும், இந்துச் சட்டத்திலும் இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் பாதுகாப்பு உண்டு. இவற்றை பாதுகாக்கும் மநு ஸ்மிருதியை மகத் மாநாட்டில் 25.12.1927 அன்று மேதை அம்பேத்கர் எரித்தார்.

பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்குதான் சாதிகள். மற்றவை உள்சாதிகள் 82 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பனிய வாழ்க்கை முறைக்கு அடிமையாகி இந்திய அளவில் 6000 உள்சாதியாகவும் தமிழ்நாட்டளவில் 400 உள்சாதியாகவும் பிரிந்து கிடக்கிறார்கள்.

இந்த உள்சாதியில் வன்னியர் சாதியும் ஒன்று. அப்படி இருக்க சமூக அளவில் தாங்கள் உயர்ந்தவர்கள், ஆண்ட பரம்பரை, சத்திரியர்கள் என்று தங்களைத் தாங்களாகவே உயர்வாகக் கருதிக் கொண்டு இந்து தர்மப்படி வன்னியர்கள் சூத்திரராக வைக்கப்பட்டிருக்கும் நிலையை உணராமல் தங்களை இழி சாதியாய் வைத்திருக்கும் இந்துத்துவ பார்ப்பனியத்தின் மீது கோபம் கொள்ளாமல் சமூக அமைப் பில் அடித்தட்டில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகமான பட்டியலினத்தவர்களின்மீது சாதி வெறுப்பைக் காட்டுவது கேடானது. சூத்திரர்களின் பல உள்சாதியினரிடமும் இதே மனப்போக்கு இருக்கிறது. இது சமூக சனநாயக உணர்வு வளர்வதற்குப் பெருந்தடையாக உள்ளது. இதனால் மேல் பாதி ஊரில் உள்ளதுபோலவே ஊரகப் பகுதிகளில் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாதநிலை நீடிக்கிறது.

இவர்களைப் போன்றே சூத்திரர்களாக உள்ள எந்த உள்சாதியினரும் வாழ்வியலில் பார்ப்பனியப் பண்பாடான பிறவி உயர்வு-தாழ்வு என்பதைக் கடைபிடிப்பதிலிருந்து மாறவே இல்லை. பார்ப்பனியச் சடங்கு வாழ்க்கை முறையைக் கைவிடவே இல்லை. தமிழராய் ஒன்று சேரமுடியாமல் பிரிந்து கிடப்பதற்கு இதுவே காரணம்.

“என் மக்களைச் சூத்திரர்களாக, நாலாஞ் சாதிக்காரர்களாக விட்டுச் சாகிறேனே” என்ற தன் கவலையை கடைசி சொற்பொழிவான 19.12.1973-இல் மானிட விடுதலைக் குரலாய் ஓங்கி ஒலித்தார் பெரியார்.

அவர் மறைந்து அய்ம்பது ஆண்டுகள் கடந்தும் இந்நிலை மாற்றப்படாமல் அப்படியே தொடர்வது, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியர்களுக்கு நமக்கும் தலைகுனிவே ஆகும்.

வருண-தீண்டாமை பழக்க வழக்கச் சட்டத்தை காக்கும் அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 25, 26, 372(1) இவற்றை அடியோடு நீக்க வேண்டும் என்று 26.11.1957-இல் பெரியார் விடுத்த ஆணையை ஏற்று 10000 பெரியார் தொண்டர்கள் அரசமைப்புச் சட்ட நகலை எரித்தார்கள். 2997 பேர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். அதில் தண்டனை பெற்றவர்களில் அறிஞர் வே.ஆனைமுத்துவும் ஒருவர். இன்று வரை இந்த இழிவை நம்மால் நீக்க முடியவில்லை. சாதியை, வருண பேதத்தை ஒழிக்க முடியவில்லை.

இத்தன்மையிலிருந்துதான் இந்திய அளவிலும் தமிழ் நாட்டு அளவிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடையிலான மோதலையும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையான சாதிய மோதலையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்தப் புரிதலின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார்-மேதை அம்பேத்கர் காட்டிய வழியில் ஒன்றுபட்டு சமூகம், பண்பாடு, பொருளியல், அரசியல் ஆகிய தளங்களில் இணைந்து தீவிரமாகச் செயல்பட வேண்டியதே நம்முன் உள்ள கடமையாகும்.

- நா.மதனகவி

Pin It